அன்று காலை வழக்கமான நேரத்திற்கு பவித்ரா தனது கல்லூரியை அடைய, அவளுக்கும் முன்பாக அங்கு காத்திருந்தான் பரணிச்செல்வன். முதலில் பவித்ரா அவனை கவனிக்கவே இல்லை. எப்போதுமே சுற்றுப்புறத்தை பெரிதாக கவனிக்கும் வழக்கம் கொண்டவள் இல்லையே.
இன்றும் அதேபோல் அவள் போக்கிற்கு அவள் பரணியைக் கடந்து செல்ல முற்பட, “பவித்ரா” என்று அழைத்து அவளை நிறுத்தினான் பரணி.
யாரோ பெயர் சொல்லி அழைத்ததில் தான் திரும்பி பார்த்தாள் அவளும். அவனது குரல் கூட பரிச்சயமில்லாத ஒன்றுதான் பவித்ராவுக்கு. எங்கோ தூரத்தில் வைத்து ஒன்றிரண்டு முறை அவனை பார்த்திருக்கிறாள் அவ்வளவே.
இன்றும் சட்டென அவனை எதிர்பாராததால் குழம்பியவள், “என்னையா கூப்பிட்டிங்க” என,
“உன் பேர் பவித்ரா தானே” என்றான் அவனும். கூடவே, ஒரு முறைப்பு வேறு.
‘அட முறைப்பெல்லாம் பலமா இருக்கே’ என்று உள்ளுக்குள் நக்கலடித்தாலும், “நானே தான் பவித்ரா. சொல்லுங்க என்ன விஷயம்” என்று வெகு பவ்யமாக வினவினாள் அவள்.
அவளது செயலில் இங்கே வந்தது தவறோ என்று நினைக்க தோன்றியது பரணிக்கு. அவனுக்கு யோசிக்கும் அவகாசத்தைக் கூட கொடுக்காமல், “சொல்லுங்க சார்” என்று மீண்டும் பவி குரல் கொடுக்க,
“என்ன நக்கலா?” என்றான் பரணி.
“இல்லையே. நீங்க யார் எனக்கு? நான் ஏன் உங்களை நக்கல் பண்ணனும். என்னை பார்க்க வந்ததா சொன்னிங்க. என்ன விஷயம்னு கேட்கிறேன். சொல்ல விருப்பம் இருந்தா சொல்லிட்டு போங்க.” என்று தோளை குலுக்கினாள் பவித்ரா.
பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தனது பொறுமையை இழுத்துப் பிடித்தபடியே, “நீ கூட சேர்ந்து சுத்திட்டு இருக்க ஆள் சரியில்ல. அவனுக்கும், அப்பாவுக்கும் தொழில் விஷயமா கொஞ்சம் பிரச்சனை போயிட்டு இருக்கு. அவனும் சாதாரண ஆள் கிடையாது. அவனை நம்பாத” என்றான் பரணி.
“முடிஞ்சதா” என்று பவித்ரா அலட்சியமாக கேட்க,
“உன்மேல இருக்க அக்கறையால உங்கிட்ட பேச வரல. எனக்கு என் அப்பாவோட மரியாதை ரொம்ப முக்கியம். உனக்கு ஏதாவது நடந்தாலும், அமைச்சர் பொண்ணுன்னு தான் பேசுவாங்க. அதற்காக சொல்றேன். உன்னைவச்சு அவன் அப்பாவை கார்னர் பண்ணக்கூட சான்சஸ் இருக்கு. நீ அவனை விட்டு விலகியே இரு” என்று மீண்டும் பரணி வலியுறுத்த,
“நல்லா யோசிக்கிறீங்க பரணிச்செல்வன். ஆனா, உங்களையும், உங்க அப்பாவையும் வச்சே மத்தவங்களை எடை போடறீங்க. அங்கேதான் பிரச்சனை. உங்க அப்பாவுக்கு எல்லாம் மரியாதை ஒன்னுதான் குறைச்சலா இருக்கு. உன் அப்பாவுக்கும், வருணுக்கும் என்ன பிரச்சனை இருந்தாலும் சரி. என்னால வருணை விட்டு விலக முடியாது. நீங்க கிளம்புங்க” என்றாள் பவித்ரா.
“நீ ரொம்ப பெரிய தப்பு பண்ற பவித்ரா. அவர் மேல இருக்க கோபத்துல கண்ணை கட்டிட்டு கிணத்துல விழுந்துடாத. பெரிய படிப்பெல்லாம் படிக்கிற இல்ல, கொஞ்சமாவது அறிவோட யோசி.” என்று பரணி மீண்டும் கூற,
“உங்க அட்வைசுக்கு நன்றி.” என்று கையெடுத்து கும்பிட்டாள் பவித்ரா.
“ஏய்…” என்று விரல் நீட்டி அதட்டியவன், “ஏதோ என் அப்பனுக்கு பிறந்தவளாச்சேன்னு உன்கிட்ட பேச வந்தேன் பாரு. என்னை அடிக்கணும். நீ உன் அம்மாவை மாதிரி… இல்ல, உன் அம்மாவுக்காவது என் அப்பா இருக்கார். நீ யாருமே இல்லாம அனாதையா நிற்க போற பாரு” என்று கத்திவிட,
“என்ன சாபமா. உன் அப்பனை மாதிரி ஒரு ஆள் கூட இல்லாம இருக்கறதே நல்லது தான். ஆனா, வருண் உன் அப்பனைப் போல கிடையாது. அப்படியே நீ சொல்றபடி நடந்தாலும், நான் மயூரி இல்ல. கிளம்புடா” என்றவள் அவனை கண்டுகொள்ளாமல் தனது வகுப்பறைக்குச் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவன் பேசிவிட்ட வார்த்தைகள் தகித்துக்கொண்டே இருக்க, கையில் இருந்த அலைபேசியை அழுத்தமாக பிடித்தபடி அவள் அமர்ந்திருந்த நேரம் அந்த பாடவேளைக்கான ஆசிரியர் வகுப்பிற்கு வந்துவிட, அனிச்சையாக அவள் கவனம் பாடத்தில் திரும்பியது.
கல்லூரிநேரம் முடியும் வரை தனது கவனத்தை சிதறவிடாமல் காத்துக் கொண்டிருந்தவள் கல்லூரி முடியவும், நேரே கிளம்பி விடுதிக்கு வந்துவிட்டாள். அலைபேசியில் இருந்து சுஜாதாவிற்கு அழைத்து மருத்துவமனைக்கு விடுப்பு கூறியவள், அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு கண்மூடி படுத்துவிட்டாள்.
அவளுக்கு யோசிக்க வேண்டி இருந்தது. ஏனோ, பரணிச்செல்வன் கூறிய விஷயங்களை அப்படியே ஒதுக்கிவிட முடியவில்லை அவளால். பரணியிடம் பேச்சு வார்த்தை இல்லாது போனாலும், அவனைப் பற்றி ஓரளவு தெரியும் அவளுக்கு. தேவையில்லாமல் இப்படி பதறிச் சிதறுபவன் இல்லை அவன்.
வில்வநாதன் அளவுக்கு தரம் தாழ்ந்தவனும் இல்லை என்று இதுவரை ஒரு எண்ணமிருந்தது அவளுக்கு. கண்மூடித்தனமாக வில்வநாதனின் மீது பாசம் வைத்து இவனும் சேர்ந்து வீணாகிறானோ என்று தான் இப்போதும் தோன்றியது.
ஆனால், இப்போது யோசிக்க வேண்டியது இதைப்பற்றி அல்ல என்று அவள் சிந்தனைகளுக்கு கடிவாளம் இட்டவள், மனதை முயன்று ஒருநிலைப்படுத்த, வருணை சந்தித்த நொடிமுதல் நேற்றைய அவர்களின் சந்திப்பு வரை ஒவ்வொன்றாக மனதில் ஓட்டிப் பார்த்தாள்.
எங்குமே, வருணை சந்தேகிக்கும் வாய்ப்பே அமையவில்லை அவளுக்கு. மாறாக, நெஞ்சில் இருந்த நினைவுகள் முகத்திலும் புன்னகையை தோற்றுவிக்க, பரணியிடம் கூறியது போலவே, “என் வருண் அப்படியில்ல” என்று தனக்குத்தானே கூறியபடி அமர்ந்துவிட்டாள் அவள்.
என்னவோ, வருண் மீது கொண்ட நம்பிக்கையோ, அன்றி அவள் காதலின் மீது அவள் கொண்ட நம்பிக்கையோ எதுவோ ஒன்று அவளை அமைதியடையச் செய்தது. ஆனாலும், வில்வநாதனைப் பற்றியும், தன் பிறப்பைக் குறித்தும் சீக்கிரமே வருணிடம் கூறிவிட வேண்டும் என்ற எண்ணமும் முன்பைவிட பன்மடங்கு உறுதியானது இப்போது.
வருணைக் குறித்து ஒரு தெளிவு பிறந்துவிட்டாலும், பரணிச்செல்வன் பேச்சை அப்படியே ஒதுக்கிவிட முடியவில்லை அவளால். “என்னவெல்லாம் சொல்லிவிட்டான்” என்று மனம் வாடுவதையும் தடுக்க முடியவில்லை.
மயூரி என்று ஒருவர் சரியாக இருந்திருந்தால் தான் இப்படியெல்லாம் பேச்சு வாங்க நேர்ந்திராதே என்று நொந்து கொண்டபடியே வெகுநேரம் அமர்ந்திருந்தவளுக்கு பசி என்ற ஒன்றும் மறந்து போயிருந்தது. யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்ததில் தலைவலியும் தொடங்கிவிட்டிருக்க, வலி நிவாரணி ஒன்றை விழுங்கியவள் கண்களை மூடி படுத்துவிட்டாள்.
அவள் உறங்கியெழும் போது நேரம் இரவு எட்டை தாண்டியிருக்க, அதன்பிறகே நிதானமாக தனது அலைபேசியை உயிர்ப்பித்தாள். வருண் ஆதித்யனிடம் இருந்து முப்பது முறைக்கும் மேலாக அழைப்பு வந்திருப்பதாக சுட்டியது அலைபேசி.
வாட்ஸப்பிலும், ‘எங்கே இருக்க, என்ன பண்ற பவி..’ என்று அடுக்கடுக்காக அவன் குறுஞ்செய்தி அனுப்பியிருக்க, இவள் அழைக்க நினைப்பதற்குள் மீண்டும் ஒருமுறை அவனே அழைத்துவிட, இவள் அழைப்பை ஏற்கவும், “பவி” என்று உயிரை ஊடுருவியது அவன் குரல்.
“வருண்…” என்றவளை பேசவே விடாமல், “என்ன பண்ற பவி. எங்கே இருக்க நீ. போன் ஏன்டா ஆப் பண்ணியிருக்க” என்று பதட்டம் சுமந்து வந்தது அவன் குரல்.
“உன் ஹாஸ்டல் வாசல்ல தான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரம் நீ போன் எடுக்காம போயிருந்தா, உள்ளே வந்திருப்பேன்.” என்றான் பாரமிறங்கியவனாக.
“சார்… அங்கேயே இருங்க. நானே வரேன்” என்றவள் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, விடுதி வாசலுக்கு வர, காரில் சாய்ந்தபடி நின்றிருந்தான் வருண் ஆதித்யன். இவளை பார்த்த கணம் எதுவும் பேசாமல் அவன் காருக்குள் அமர்ந்துவிட, அமைதியாக அவன் அருகில் வந்து அமர்ந்தாள் பவித்ரா.
அவள் என்ன ஏதென்று யோசிக்கும் முன்னரே மூச்சுகாற்றுகூட வெளியேறாதபடி இறுக்கமாக அவளை அணைத்திருந்தான் வருண் ஆதித்யன்.
“வருண்” என்று அவள் திணற,
“ரெண்டே நிமிஷம் பவிம்மா.” என்றவன் மூச்சுவிடும் ஓசை மட்டுமே ஒலித்தது அந்த காரில்.
இரண்டு நிமிடங்கள் கழித்து தானே விலகி அமர்ந்தவன், “கொன்னுட்ட பவி.” என்றான் பெருமூச்சை வெளியேற்றியவனாக.
“சாரி” என்று பவித்ரா மீண்டும் மன்னிப்பை வேண்ட, அவள் இதழ்களின் மீது கையை வைத்து தடுத்து விட்டான் வருண்.
“என்கிட்ட எப்பவும் சாரி சொல்லாத.” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட, அவனின் இந்த அதிரடியில் ஒன்றும் பேச தோன்றாமல் மௌனமாகிவிட்டாள் பவித்ரா. அவளின் நிலை கண்டு சிரித்துக் கொண்டவனாக வருண் காரை எடுக்க, “எங்கே கூட்டிட்டு போறீங்க என்னை” என்று பதறினாள் அவள்.
வருண் அவளை ஒரே பார்வை பார்க்க, “எப்பவும் சொல்லாம கொள்ளாம எங்கயாச்சும் கூட்டிட்டு போறதே வேலையா போச்சு…” என்று முனகிக் கொண்டாள் பவித்ரா.
“என் பொண்டாட்டியை நான் கூட்டிட்டு போறேன். உங்கிட்ட ஏன் சொல்லணும்” என்று அவன் கேள்வி கேட்க,
“ஹான் நல்லாருக்கே…” என்று சிரித்தாள் பவித்ரா.
பேசியபடியே இருவரும் மெரீனா கடற்கரையை வந்தடைய, “வா” என்று அவளை அழைத்தபடி காரில் இருந்து இறங்கி நடந்தான் வருண். இருவரும் கைகோர்த்தபடி அலையில் நிற்க, சில நிமிடங்கள் கடந்து போன வேளையில், தானாகவே அவனது தோளில் சாய்ந்துகொண்டாள் பவித்ரா.
“என்னடா” என்றவனிடம் பதில் எதுவும் கூறுவதாக இல்லை அவள். என்னவோ, அந்த நிமிடம் தோன்றியது அவளுக்கு. வருண் இல்லாத ஒரு வாழ்வு தன்னால் முடியாது என்று அவள் ஐயம் திரிபற உணர்ந்து கொண்டது அந்த நொடியில் தான்.
எதிரே தெரிந்த நீலக்கடலை கண்களில் நிரப்பியபடியே, “என்னை ஏமாற்றிவிடாதே பிரபஞ்சமே” என்று எதையோ மனதில் போட்டு உழப்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா.
அவள் தன்னில் மூழ்கியிருந்த நேரம், “கல்யாணம் பண்ணிப்போமா பவி” என்றான் வருண்.
அவனிடம் இருந்து அந்த நேரத்தில் அந்த வார்த்தையை எதிர்பார்க்கவே இல்லை பவித்ரா. அதிர்ந்து போனவளாக அவள் வருணின் முகம் பார்க்க, அவள் நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் ஒருமுறை, “கல்யாணம் பண்ணிப்போம் பவிம்மா” என்றான் அவன்.
“வருண்…” என்று பெண் திணற,
“என்னவோ தோணுது பவி. உடனே கல்யாணம் பண்ணி குடும்பஸ்தனாக சொல்லுது மனசு” என்று அவன் நிறுத்த,
“விளையாடாதீங்க… என் ஸ்டடிஸ் முடியட்டும்.” என்றவள் அந்த பேச்சை தவிர்க்க நினைக்க,
“அப்போ ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். நீ உன் படிப்பை முடிச்சுட்டு என்கிட்டே வா. ஆனா, இனி நீ என் பொண்டாட்டியா மட்டும்தான் இருக்கணும்” என்றான் அவன்.
“இப்போ மட்டும் என்ன? இப்பவும் நான் உங்க மனைவி தானே”
“இது இந்த ஒருநாள் தவிப்பு இனி முடியாது பவிம்மா. எனக்கு இந்த தடைகள் எதுவும் வேண்டாம். என் பவிம்மா என்ன பண்றாளோன்னு என்னால தவிக்க முடியாது. நான் நினைச்ச நேரம் நான் உன்னை பார்க்கிற சுதந்திரம் வேணும் பவி. இப்படி யாரோ போல என்னால தள்ளி நிற்க முடியல” என்று தீவிரமாக அவன் பேசவும் தான், அவன் விளையாட்டுக்கு கூறவில்லை என்று புரிந்தது பவித்ராவிற்கு.
“வருண்.” என்று அவள் தடுமாற,
“எப்போ இருந்தாலும் இதுதான் நடக்கபோகுது பவி. அது இப்போ நடக்கட்டுமே.”
“என்னைப்பத்தி எதுவும் தெரியாது உங்களுக்கு”
“என்னைப்பத்தி மட்டும் உனக்கு என்ன தெரியும்? நான் சொன்னதுதானே எல்லாம். ஏன் நான் பொய் சொல்லி இருக்கக்கூடாது. நீ என்னை நம்புற இல்ல.”
“வருண்”
“உன்னோட கடந்தகாலம் எனக்கு வேண்டாம் பவி. என் கண்முன்னாடி நிற்கிற இந்த பவித்ரா போதும். கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவனை மறுத்துப்பேச முடியவில்லை அவளால்.