ஆனால், ஆதிக்கு கோபம் அடங்க மறுத்தது. “அவ சொன்னா என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?” என்றான் காட்டமாக.
“இல்லைங்க ஐயா, கையில அடி பட்டப்பவும் தாராம்மா நிதானமா என்ன செய்யணும்னு சொன்னாங்க. கொஞ்சமும் பதட்டமே படலை. அப்ப அவங்களே தான் ஹாஸ்பிட்டல் போகணும்ன்னு சொன்னாங்க… இப்ப அவங்களே ஒன்னும் பிரச்சினை இல்லைன்னு சொல்லறப்ப நான் என்ன பண்ணறது? அதுவும் அவங்க டாக்டர் வேற…”
ஆதிக்கு மண்டை காய்ந்தது. யாருக்கு கையில் அடி என்று ஒன்றும் புரியவில்லை. என்னவோ அவள் சம்பந்தமானதாக இருக்கும் என்று புரியவும் ரத்த அழுத்தம் எகிறியது.
பல்லைக் கடித்தபடியே, “அவ என்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்னா நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்க அப்படித்தானே?” என ஒவ்வொரு சொற்களையும் கடித்து துப்ப,
சீதாம்மாவிற்கு குரலே எழும்பவில்லை. “மன்னிச்சிடுங்க ஐயா…” என்றார் இறங்கிய குரலில்.
எதிர்புறம் எந்த பதிலும் இல்லாதது கண்டு, “காய்ச்சல் தானேங்க ஐயா… இதுக்கு ஏன் உங்களை தொந்தரவு செய்யணும்ன்னு தான்… அதோட எப்படியும் தாராம்மா உங்ககிட்ட ராத்திரிக்கு போன் பேசும்போது சொல்லிடுவாங்க…” என சமாதானமாகச் சொல்ல, ஆதிக்கு சுருக்கென்று தைத்தது.
அவள் கைப்பேசியில் அழைப்பதற்கு முழு உரிமையையும் கொடுத்ததோடு சரி… அதன்பிறகு அவளிடம் சண்டையை வளர்த்து ஒதுங்கி அல்லவா இருக்கிறான். இதற்கும் சமாதானத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்தவளை, கொஞ்சமும் மதிக்காமல் உதாசீனம் தானே செய்தான்.
இடையில் இருமுறை கைப்பேசியில் அவளாக அழைத்த போதும், தயவு தாட்சண்யமின்றி நிராகரித்திருக்கிறான்.
இப்பொழுது யோசிக்க தன் மேலே கோபம் தான் வந்தது. அவளை வம்படியாய் திருமணம் செய்தது அவன் தான். அவளுக்கு என்னவொரு வாழ்க்கையை பரிசளித்திருக்கிறான்?
அருகிலும் இல்லாமல், கைப்பேசியில் கூட பேசாமல் அவளைத் தனித்தீவெனத் தானே தவிக்க வைக்கிறோம். இதற்காகத்தான் எதையோ சாதித்தது போல அவளை மணந்தானா? அவளை இந்த நிலையில் நிறுத்துவதற்கு இந்த திருமணம் தான் எதற்கு? என அவன் மனசாட்சியே அவனைக் குத்தியது.
“சீதாம்மா உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது. அவளுக்கு அடி படறதையும் காய்ச்சல் வரதையும் அவ என்கிட்ட சொல்லறது வேற… ஆனா நீங்க என்கிட்ட சொல்லணுமா இல்லையா?” என்று எரிச்சலாக கேட்டான்.
“தப்பு தாங்க ஐயா… இனி இந்த மாதிரி நடக்காது. ரொம்ப கவனமா இருக்கேன்…”
அவரின் எந்த சமாதானமும் அவனிடம் வேளைக்கு ஆகவில்லை. “இப்ப கூட வீட்டுல காவலுக்கு இருக்கிறவங்க இந்த நேரத்துல நீங்க கிளம்பவும் கூப்பிட்டு சொல்லறாங்க… ஆனா உங்களுக்கு என்கிட்ட சொல்லணும்ன்னு தோணலை… நான் சம்பளம் தரேனா இல்லை உங்க டாக்டரம்மா உங்களுக்கு சம்பளம் தராங்களான்னு தெரியலை…” என்று சலிப்பும் கோபமுமாகச் சொன்னவன், அவர் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் இணைப்பைத் துண்டித்தான்.
சீதாம்மாவிற்கு ரொம்பவும் கஷ்டமாக போனது. தனக்குத் தந்த பொறுப்பைச் சரியாகச் செய்யவில்லை என்ற கவலை ஒருபுறம், கெட்ட பெயர் வாங்கி, ஆதியின் கோபத்திற்கு ஆளாகி விட்டோமே என்ற தவிப்பு மறுபுறம். இனி கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். எங்கே பொறுப்பைச் சரியாக கவனிக்காத வாட்ச்மேனை வேலையை விட்டு அனுப்பியது போலத் தன்னையும் ஆதி ஐயா அனுப்பி விடுவாரோ என்று பயம் வேறு உள்ளுக்குள் அரிக்கத் தொடங்கியது.
ஆதீஸ்வரனுக்கு மிகவும் குற்றவுணர்வாய் இருந்தது. தாராவை அவன் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் போனதால் தான் இத்தனை அலட்சியம் என புரிய தன்மீதே அத்தனை வெறுப்பாக இருந்தது.
இன்று சத்யா யாரைச் சந்தித்தான் என்பது வரை தெரிந்து வைத்திருப்பவனுக்கு தன் மனைவிக்கு என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை.
அவளுடைய கையில் அடி என்றால், எப்பொழுது அடி பட்டது? எப்படி ஆனது? அவளின் தற்போதைய உடல்நிலை என்ன? என ஒன்றும் தெரியவில்லை. இப்பொழுது யாரிடமும் வெளிப்படையாக கேட்கவும் முடியாது.
ஏன் இத்தனை அலட்சியம்? அவளை விரும்பி மணந்தவன் செய்யும் வேலையா இது?
திரிபுராவிலிருந்து சென்னை வரும்வரை அவன் மனது நிம்மதியாகவே இல்லை. அவளுக்கு என்னவோ என்கிற பதற்றம். இத்தனை நாட்களாய் மனைவி மீது அக்கறை இல்லாமல் இருந்து விட்டோமே என்கிற தவிப்பு. அவளைத் தனியே தவிக்க விட்டோமே என்கிற குற்றவுணர்வு என தவிப்பான மனநிலையில் தான் சென்னை வந்து சேர்ந்தான்.
கையில் என்ன அடி பட்டிருக்கும்? என மனம் வேறு ஓயாது அரற்றிக் கொண்டே இருந்தது.
நேராக மருத்துவமனைக்குத் தான் வந்து சேர்ந்தான். தாராவை அட்மிட் செய்திருந்த அறைக்குள் லேசாகத் தட்டிவிட்டு பதற்றமும் தவிப்புமாக உள்ளே செல்ல, அவன் வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
ஓய்ந்து படுத்திருந்தவளின் விழிகள் அதிர்ந்து விரிய, “வாங்க ஐயா…” என்று சொல்லிவிட்டு சீதாம்மா நாசூக்காக அறைக்கு வெளியே சென்று விட்டார். காரில் வந்தபோது கிட்டத்தட்ட மயக்க நிலையில் இருந்ததால் சீதாம்மாவும் ஆதியும் கைப்பேசியில் உரையாடிக் கொண்டது அவளுக்குத் தெரியவில்லை.
தாராவிற்கு டிரிப்ஸ் இறங்கிக் கொண்டிருக்க, அவளின் ஒரு கையில் முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை நீளமான கட்டு. அறைக்குள் நுழைந்ததிலிருந்து ஆதி அவளைத் தான் ஆராய்ந்து கொண்டு இருந்தான்.
தாராவோ அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். வருகிறாயா வா… போக வேண்டுமா போய்க்கொள்… எனும் கோப மனநிலை அவளுக்கு.
ஆனால், கணவனின் மனம் பிசைந்தது. அவளை இந்த கோலத்தில் அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அவள் நன்றாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு தன் பிழைப்பில் அவன் கவனமாய் இருக்க… அவளைக் குறித்து எதுவுமே தெரியாமல் இப்படி விலகி நிற்க உனக்கெல்லாம் எதற்குத் திருமணம் என்று அவனின் மனமே அவனிடம் சூடாகக் கேட்டது.
மெல்ல தாராவின் அருகில் வந்தவன், மனம் கேட்காமல், “என்கிட்ட ஏன் சொல்லலை?” என்றான். சொல்வதற்கு அவன் வாய்ப்பு தந்ததில்லை என்று புரிந்தாலும், இவளும் தெரியப்படுத்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லையே… அந்தளவிற்குத் தான் வேண்டாதவனா என ஏமாற்றம் உள்ளுக்குள்.
“எல்லார்கிட்டயும் சொல்லி என்ன பண்ண போறேன்?” வெகு சாதாரணமாக அவள் கேட்க, அவன் நொறுங்கி போனான். இவளுக்கு என்ன ஆனாலும் நான் கவலைப் படமாட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறாள்… ஆதங்கமாகவும் இருந்தது. கோபமும் வந்தது.
“தாரா…” என்றான் அதட்டலாக. அவள் அலட்டிக்கொள்ளவே இல்லை.
ஆதி கொஞ்சம் நிதானித்தான். லேசாக இட வலமாகத் தலையசைத்துக் கொண்டவன், டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த அவளின் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் மிருதுவாக பொத்தி வைத்துக் கொண்டான்.
“என் மேல கோபமா இருக்கியா?” என அவளையே ஆழப்பார்த்துக் கேட்க, அந்த ஒரு கேள்வி போதுமாக இருந்தது அவளை உடைக்க. விழிகள் சட்டென்று நிறையத் தொடங்க, வேகமாகப் பார்வையை அவனுக்கு எதிர்புறம் திருப்பிக் கொண்டாள்.
ஆழ்ந்த மூச்சுக்களும், கண் சிமிட்டலுமாகத் தேங்கிய கண்ணீரை கண்ணுக்குள்ளேயே கரைய வைக்க முயற்சி செய்து கொண்டாள்.
ஆதி அவளின் கரத்தினில் அழுத்தம் தந்தான். “நிறைய கோபம் தான் இல்லையா?” என்று கேட்டவனின் குரலில் குற்றவுணர்வு.
அவள் தன் கையை உருவப் பார்க்க, இறுகப் பிடித்துக் கொண்டவன், “ஐம் சாரி…” என்று சொல்லி அவளின் கரத்தினில் முத்தம் கொடுக்க,
அவனின் குரலின் கரகரப்பிற்கா, மன்னிப்பிற்கா, முத்தத்திற்கா என்று தெரியா வண்ணம் அவளின் உடல் சிலிர்த்தது.
அவனாகவே அவள் கையை விட்டவன், “ரொம்ப பேட் ஹஸ்பண்ட் மெட்டீரியல் என்ன?” என்று கேட்க, இன்னமும் அவன் முகம் நோக்கி திரும்பாதவள், “இல்லைன்னு சொல்ல மாட்டேன்…” என்று மட்டும் எரிச்சலாகச் சொன்னாள்.
“என்னை பாருடி…” என்றான் ஏக்கமாக. டி என்று சொல்லும்போது குரலில் அவ்வளவு அழுத்தம். அவள் வீம்பு பிடிக்க, “ம்பச்… எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும் சொல்லு…” என்றான் ஆதங்கமாக.
“இப்ப கூட உன்கிட்ட விசாரிக்க எனக்கு விஷயம் இருக்கு. எங்கே உன்னைப் பார்த்தா… உன்கிட்ட எதுவும் விவரம் கிடைக்குமான்னு கேட்டுடுவேனோ… அதனால மறுபடி நமக்குள்ள ஒரு சண்டை வந்துடுமோன்னு பயத்துல உன்னைத் தவிர்க்க ஆரம்பிச்சா… ம்ப்ச்…” என்று தளர்ந்த குரலில் சொல்ல,
அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள், “நீங்க போலீஸ் வேலை பார்க்கறீங்களா? இல்லை அரசியல்வாதியா? உண்மையை சொல்லுங்க…” என்றாள் காட்டமாக.
சிரிப்பு வந்துவிட்டது அந்த அரசியல்காரனுக்கு… “நீயே சொல்லேன். நான் போலீஸ் ஆகவா? அரசியல் பார்க்கவா?” என்று கண்சிமிட்டிக் கேட்டான்.
அவள் முறைப்புடன் திரும்பிக்கொள்ள, “யூ க்னோ ஒன்திங் எனக்கு டிடெக்டிவ் ஆகணும்ன்னு தான் ஆசை. என்னோட டிகிரி மேஜர் கூட கிரிமினாலஜி தான் தெரியுமா… அதுபோக டிப்ளமோ இன் பிரைவேட் இன்வெஸ்டிகேஷன் வேற படிச்சிருக்கேன்…” என்று சொல்ல, அவள் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.
“சீரியஸ்லி பேபி… ஆனா என் கிரகம் இந்த கரக கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேன்…” என்று சோகம் போல சொல்லிவிட்டு, முத்துப்பற்கள் பளீரிட புன்னகைக்க, அவன் மேல் கோபமாக இருக்கிறோம் என்பதையே அவளது மூளை மறந்துவிட, மெய் மறந்து அவனின் புன்னகை சிந்தும் முகத்தினை ஆச்சரியமாகப் பார்த்து கொண்டிருந்தவள், அவன் முக வசீகரத்தில் மொத்தமாகத் தன்னிலை மறந்து போயிருந்தாள்.