ரகுராம் பாரதியோடு பேசிடக் கூடாதென்று அவனிடம் வண்டிச் சாவியை கொடுத்த விக்ரம் நேராக சென்றது பாரதியை காணத்தான்.
“குட் மார்னிங் பாரதி…”
தன் முன்னால் இன்முகமாக வந்து நின்றவனை கண்கள் மின்னப் பார்த்தவள் “குட் மார்னிங்….” என்று புன்னகைத்தாள்.
விக்ரமை பிடிக்கவில்லை. வெறுக்கிறேன் என்று பாரதி சொல்லிக் கொண்டாலும், அவளால் வெறுப்பை முகத்தில் காட்டவும் முடியவில்லை. வார்த்தைகளாக கொட்டவும் இயலவில்லை. இப்பொழுதெல்லாம் பாரதிக்கு அவனை பார்த்தால் கோபம் வருவதில்லை. காரணமும் தெரியவில்லை. ஆராயவும் அவள் எண்ணவில்லை. அவன் மீது கோபம் கொண்டு, பகையை வளர்த்துக் கொண்டு, பழி தீர்ப்பதால் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது என்ற மனநிலைக்கு வந்து விட்டதால், தன்னுடைய வேலையில் தான் எவ்வளவு சாதித்திரிக்கிறேன் என்று அவனிடம் நிரூபித்து, அவன் பேசியதற்கு மட்டும் பதில் கொடுத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.
அவள் புன்னகை முகத்தை விக்ரம் கண் இமைக்காமல் பார்த்திருக்க,
“என்ன இவன் நாளுக்கு நாள் ஜொலிக்கிறான். வர வர புன்னகைமன்னனாகவே மாறிட்டான். இவன் நடிக்கிறானா இல்ல இவன் மாறிட்டானா? புரியல”
உன் அழகை பருக
என் கண்கள் போதாதடி என்
நிலையை எழுத வானங்கள்
போதாதடி நேர முள்ளை பின்
இழுத்தும் வாரம் எட்டு நாள்
கொடுத்தும் சுற்றும் பூமியை
தடுத்துமே ஹே
நாள் முழுக்க
உன்னை கண்கள் தின்ற
பின்னும் உந்தன் சொற்கள்
மீது நான் நனைந்த பின்னும்
இன்னும் இன்னும் பக்கம்
வந்தும் கிட்ட தட்ட ஒட்டி
கொண்டும் மூச்சில் தீயும்
பற்றி கொண்டும்
போதவில்லையே
போதவில்லையே உன்னைப்போல
போதை ஏதும் இல்லையே
தினமும் விக்ரம் வந்து காலை வாழ்த்து சொல்வதும், அவன் அழகில் மயங்கி இவள் பதில் சொல்வதும். அவன் காலை உணவை ஒன்றாக சாப்பிடலாமா? என்று அழைப்பதும். இவள் மறுப்பதுமாக நாட்கள் கடக்க, இன்றும் விக்ரம் ஒன்றாக சாப்பிடலாமா? என்று கேட்டிருக்க, பாரதி தன்னையறியாமலே தலையசைத்திருந்தாள்.
தினமும் மறுப்பவள் இன்றும் மறுப்பாளென்று எண்ணும் பொழுதே அவள் சம்மதம் தெரிவித்ததில் ஆச்சரியத்தில் கண்கள் விரித்தவன் எதுவும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு உணவுண்ண அமர்ந்தான்.
ஏதோ ஒரு சிந்தனையில் விக்ரம் அழைத்தானென்று பாரதி அவனோடு வந்தாலும், அவள் தொண்டைக் குழியில் உணவு தான் இறங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கலானது.
பழைய ஞாபகங்கள் வந்து அவள் கண்களில் நீர் நிரம்ப, வாந்தி வருவதாக குளியலறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
“பாரதிக்கு உணவு பிடிக்கவில்லையா? பிடிக்காதை சாப்பிட்டதால் ஒவ்வாமையா?” விக்ரமுக்கு புரியவில்லை. “தினமும் அழைப்பதால் இன்று மறுக்க முடியாமல் வந்தாளா? பிடிக்கவில்லையென்றால் சொல்ல கூட மாட்டாளா?” குளியலறை கதவை தட்டக் கூட முடியாமல் கதவில் சாய்ந்தவாறு நின்றான்.
அழுது அழுது ஓய்ந்த பாரதி விக்ரமை சந்தித்த நாளை எண்ணிப் பார்த்தாள்.
பாரதியை முதன், முதலாக கனவில் கண்டு காதலில் விழுந்ததை விக்ரமும் எண்ணிப்பார்க்கலானான்.
பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் சித்திர போட்டி விக்ரமின் பாடசாலையில் நடந்து கொண்டிருக்க, அதில் கலந்துகொள்ள வந்த பாடசாலைகளில் ஒன்று பாரதியின் பாடசாலை. வெளியூரிலிருந்து வந்த மாணவர்கள் தங்க இரண்டு பாடசாலை கட்டிடங்களை ஏற்பாடு செய்திருக்க, பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்டிடத்தின் மொட்டைமாடியில் அமர்ந்து சித்திரம் வரையலானாள் பாரதி.
மழை வரும் போல் இருக்க, சீக்கிரம் இறுதி சித்திரத்தை வரைந்து முடித்தே செல்லலாமென்று அவசர அவசரமாக வரைந்துக் கொண்டிருந்தவள், தான் வரைந்து வைத்த தாள்கள் காற்றில் பறப்பதை கவனிக்கத் தவறினாள். அங்கிருந்த அமைதியை குழைத்து பட படவென காகிதங்களின் சத்தம் கேட்டு எல்லாவற்றையும் போராடி அள்ளிக் கொண்டு அறைக்கு ஓடியவள் ஒரு சித்திரம் மட்டும் மொட்டைமாடியிலிருந்து கீழே பறந்து சென்றதை கவனிக்கவில்லை.
விக்ரமும், ரகுராமும் டெனிஸ் விளையாட்டை முடித்து விட்டு பேசியவாறே வர பறந்து வந்த காகிதம் விக்ரமின் முகத்தை மூடி நிற்க, அதை எடுத்துக் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னடா இது பென்சில் ஸ்கெட்ச் போல தெரியுது? ஆனா என்னன்னுதான் தெரியல” எட்டிப் பார்த்தவாறே கூறினான் ரகுராம்.
சித்திரத்தை உற்றுப்பார்த்தவாறே நடந்த விக்ரம் “இது ஒரு கிரியேட்டிவ் ட்ராயிங். ஒரு படத்துல பல எமோஷன்ஸ் உள்ளடங்கி இருக்கு”
“எனக்கு புரியல ஆர்ட்டிஸ்ட்…” ரகுராம் கிண்டல் செய்ய, பதில் சொல்லாது சித்திரத்தை பார்த்தவன் கண்களை விரித்தவாறே அங்கேயே நின்றிருந்தான்.
“என்னடா….”
“டேய்… இது நான்டா….”
“என்னடா… உளறுற?”
“நேத்து ஈவ்னிங் மழை வந்தப்போ ஒதுங்க லைப்ரரி பக்கம் நின்னேன். லைப்ரரில இருந்த யாரோ தான் இத வரைஞ்சிருக்காங்க”
“அட ஆமா… நீ வருவான்னு வைட் பண்ணி வரைஞ்சதுமில்லாம, உனக்கு டோர் டெலிவரி கூட பண்ணியிருக்காங்க பாரேன்” சத்தமாக சிரித்து நக்கல் செய்யலானான் ரகுராம்.
“கற்பூர வாசம் தெரியாத கழுதை. அதுவும் கண்முன் இருக்குறத கண்டுகொள்ள தெரியாத குருட்டு கழுகு”
“இருந்துட்டு போகட்டும்… புரியாத இந்த படத்துல அப்படி உங்களுக்கு என்ன தெரிகிறது? மங்குனி அமைச்சரே”
“இங்க பாரு… இது லைப்ரரி நோட்டீஸ் போர்ட். பக்கத்துல இருக்குற விண்டோலா மழை பெய்யிறது நல்லாவே வரைஞ்சிருக்காங்க. கூடவே நனையாம ஒதுங்கி நிக்கிற நான்”
“எதோ ஒரு உருவம் நிக்கிறது தெரியுது. அது ஒரு பையன் என்றும் தெரியுது. ஆனா அது நீயென்று எப்படி சொல்லுற?”
“ஆமாடா… உனக்காக உன் அப்பா வெளிநாட்டுல இருந்து கொண்டு வந்ததில்ல”
“புரிஞ்சா சரி… ஆனா இத வரஞ்சவங்களுக்கு சரியான ரசனை. மழைல முடி, டிரஸ் நனைஞ்சதுல இருந்து ஜன்னல்ல மழை துளி பட்டு வழியிறத வரைக்கும் பக்காவா வரைஞ்சிருக்காங்க”
“ஓஹ்… ஓஹ்… நீ ஆர்ட்ஸ்ல பி.எச்.டி பண்ணவன் போல பேசுற” எதோ விக்ரம் குத்துமதிப்பாக சொல்வதாக மீண்டும் கிண்டல் செய்ய ஆரம்பித்தான் ரகுராம்.
அன்று அவன் மழைக்கு ஒதுங்கியதால். அன்றைய சூழ்நிலையை அனுபவித்ததால் அவனால இலகுவாக அந்த படத்தோட இணைய முடிந்திருந்தது.
“ஆனா இத வரைஞ்சது யாரென்று தெரியாதே. எப்படி கண்டு பிடிக்கப் போற?” தாளம் போட்டவாறே விக்ரமை இழுத்துக் கொண்டு நடந்தான் ரகுராம்.
“அவ ஒரு பொண்ணு. அதுவும் வேற ஸ்கூல்ல இருந்து வந்திருக்கா”
“தாள் அந்த மொட்டைமாடியிலிருந்து பறந்து வந்ததால இதையெல்லாம் சொல்லுற. பொண்ணு எங்குறதுல சந்தோசம். பையன் என்றா தாள் வந்த வழியே பரந்திருக்கும்” நண்பனை விடாது கிண்டல் செய்தான் ரகுராம்.
“மழை சத்தத்துல உள்ள இருந்தவளோட சத்தம் எனக்கு கேட்கவே இல்லையே. அரவம் இல்லாமல் இப்படி வரஞ்சி வச்சிருக்கா. அவளுக்கு என்ன தெரியுமா?” புலம்பியவாறே தூங்கலானான் விக்ரம்.
அடுத்த நாள் போட்டி நடக்கும் இடத்துக்கு ரகுராமை இழுத்துச் சென்ற விக்ரம் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவிகளில் யார் தன்னுடைய புகைப்படத்தை வரைந்திருப்பார்கள் என்று ஆராயலானான்.
“என்ன பார்க்காமலையே லவ்வா? இதுக்குத்தான் கண்ட கண்ட சினிமாவை பார்க்கக் கூடாதெங்குறது”
“லவ்வா? உளறாத. அருமையா என்ன வரைஞ்சிருக்கா. யாரது என்று பார்த்து நன்றி சொல்லி. அவ வரஞ்சத நானே வாங்கிக்கத்தான்” என்றான் விக்ரம்.
“அது சரி…” நம்பமுடியாமல் நண்பனை பார்த்து வைத்தான் ரகுராம்.
அவனை கண்டு கொள்ளாமல் கையில் கிடைத்த சித்திரத்தை தூக்கிப் பிடித்தவாறு போட்டியை முடித்து விட்டு வருபவர்களுக்கு காட்டி யார் இதை வரைந்திருப்பார்கள் என்று கண்டு பிடிக்க முயன்றான்.
போட்டியை முடித்து விட்டு எழுந்த பாரதி விக்ரமை பார்த்து விட்டாள். “இவனா?… இவன் இங்க என்ன பண்ணுறான்?”
நேற்று முன் தினம் நூலகத்தில் பாரதி தனக்கு தேவையான புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் பொழுது மழை பெய்யவே அந்த காட்ச்சியை வரையலாமென்று ஆயத்தமாக அங்கே மழைக்கு ஒதுங்கினான் விக்ரம். அதையே காட்ச்சிப் படுத்தியவளுக்கு, அவன் நீர் சொட்ட சொட்ட நின்றது, தலையை கையாலையே துவட்டியது, கொட்டும் மழைத்துளிகளை கையால் தட்டி தட்டி விளையாடியது என்று எல்லாமே சுவாரஸ்யத்தைக் கொடுத்தது.
அவனது செய்கைகள் ஒவ்வொன்றையும் சித்திரமாக தீட்டியவள் அவன் முகத்தை பார்க்க நினைக்க, அவனே திரும்பிப் பார்த்திருந்தான்.
நான்காவது படமாக அவன் திரும்பிப் பார்த்ததையும் வரைந்துக் கொண்டு அறைக்கு சென்றவள் அதை மறந்தும் போயிருந்தாள்.
திடிரென்று அவன் நின்றது அதிர்ச்சியென்றால், அவன் கையில் தான் வரைந்த படத்தைக் கண்டு பேரதிர்ச்சிக்குள்ளானாள்.
போய் பேசலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தவள் சித்திரத்தை அவனிடமிருந்து வாங்க வேண்டும். இல்லையென்றால் அவன் தன்னை தேடி அலைவான் என்று மெதுவாக அவனை நெருங்கலானாள்.
தன்னை வரைந்தவள் பாரதி தான் என்று அவள் கையை பிசையும் பொழுதே கண்டு கொண்ட விக்ரம் “இங்க இல்ல போல” என்று ரகுராமை அழைத்துக் கொண்டு மெதுவாக நடக்கலானான்.
“ஐயையோ போறானே” என்று பாரதியும் அவர்களை பின் தொடரலானாள்.
அவள் வருகிறாளா? என்று கவனித்தவாறே நடந்தவன் ஒரு சந்தில் மறைய, எங்கே அவன் மறைந்து விடுவானோ என்று ஓடி வந்தவள் அவனிடம் வசமாக சிக்கிக் கொண்டாள்.
“எதுக்கு என்ன பாலோ பண்ணுற?”
“ஏன்டா சும்மா போற பொண்ண வம்புக்கு இழுக்கிற?” ரகுராம் புரியாமல் பேச, அவனை விக்ரமும் கண்டு கொள்ளவில்லை. பாரதியும் கண்டு கொள்ளவில்லை.
“இது நான் வரைஞ்சது” விக்ரமின் கையில் இருக்கும் சித்திரத்தை காட்டினாள் பாரதி.
“இதுல இருக்குறது நான். என்ன கேட்காம என்னையே வரைஞ்சிருக்க. அனுமதி இல்லாம வரையிறது குற்றம் என்று தெரியாதா? இதுக்கு என்ன தண்டனை என்று தெரியாதா?” பாரதியை மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் விக்ரம் பேசவில்லை. அவளோடு விளையாட எண்ணியே பேசலானான்.
“ஐயையோ எனக்குத் தெரியல. நீ ஸ்கூல் கமிட்டில கம்பிளைன் கொடுக்கப் போறியா? இன்னும் மூணு வரைஞ்சிருக்கேன். இத பார்த்தா அவங்க இனிமேல் என்ன போட்டில கலந்துக்க விடமாட்டாங்களா?” அப்பாவியாக அன்று வரைந்த மற்ற மூன்று படங்களையும் எடுத்து அவன் கையில் கொடுத்திருந்தாள் பாரதி.
இது நான் எதிர்பார்த்த பதிலில்லையே என்று அவளை பார்த்தவன் அவளின் கைவண்ணத்தைக் கண்டு வியந்து “நிஜமாகவே நீதான் வரஞ்சியா?” என்று கேட்க,
அவளோ அஞ்சியவளாக “எல்லாத்தையும் நீயே வச்சிக்க. கம்பிளைன் மட்டும் பண்ணாத” கண்களில் நீர் ததும்ப விம்மியவள் அடுத்து என்ன பேசுவது என்று அவனையே பார்த்தாள்.
“ஏய்… இப்போ நீ எதுக்கு கண்ண கசக்குற? நான் உன்கிட்ட சும்மா விளையாடினேன்” என்ன இந்த பொண்ணு வாயாடியா இருப்பா, என்று பார்த்தால், இப்படி டேம தொறக்குறாளே யாராவது பார்த்தால் தனக்கு பிரச்சினையாகிடுமே என்று பதறினான் விக்ரம்.
“ஏம்மா… நீ போம்மா… போ… போ…” நண்பன் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று என்று புரிய, பாரதியை துரத்தலானான் ரகுராம்.
விட்டால் போதும் என்று பாரதி சிட்டாக பறந்து விட்டாள்.
“சரியான லூசா இருப்பா. அவ பேர் தெரியாது. எந்த ஸ்கூல் என்று தெரியாது. இதுல நான் போய் கம்பளைண்ட் பண்ணுவேன்னு பயந்து நடுங்குது. எண்டடைன்மெண்ட்டா இருக்கும் என்று நினச்சா, வட போச்சே”
“எல்லாரும் உன் தங்கச்சி மாதிரி அடாவடியா இருப்பாங்களா?” நண்பனை கலாய்த்தான் ரகுராம்.
அடுத்து இவர்கள் டெனிஸ் விளையாடிவிட்டு வரும் பொழுது அவர்களிடம் ஓடி வந்த பாரதி கம்பளைண்ட் பண்ணாததற்கு நன்றி என்று இரண்டு குச்சி ஐஸை கொடுத்து விட்டு ஓடலானாள்.
“என்னடா… இந்த பொண்ணு இப்படி பண்ணுறா?” ரகுராம் புரியாமல் முழிக்க,
“அட இது கூட இண்ட்ரஸ்ட்டிங்கா தான் இருக்கு” சிரித்தான் விக்ரம்.
அடுத்தநாள் பாரதி ஒரு மரத்தடியில் அமர்ந்து வரைந்துக் கொண்டிருப்பதை பார்த்து “என்ன வரையிற?” என்று கேட்டவாறே அவளை விட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்தான்.
அவன் பேசவும் தலையை உயர்த்திப் பார்த்தவள் “எங்க உன் பிரென்டக் காணோம்” விக்ரம் தன்னை மன்னித்து விட்டான் என்ற நிம்மதியில் சாதாரணமாகி கேட்டாள்.
என்ன இவள் ரகுராமை கேட்கின்றாலே என்று விக்ரமுக்குள் கொஞ்சம் பொறாமை தீ எட்டிப்பார்க்க, “அவன் எந்த பொண்ணு கூட கடல போடுறானோ தெரியல” என்றான்.
“வழக்கமா ரெண்டு பேரும் ஒன்னாத்தானே சுத்துவீங்க” என்று விட்டு நாக்கை கடிக்கலானாள். எங்கே விக்ரம் கம்பளைண்ட் கொடுத்து விடுவானோ என்று அஞ்சி இவள் தான் அவனை பின் தொடர்ந்து வேவு பார்த்திருந்தாளே.
“ஓஹ்… இவள் சாதாரணமாகத்தான் கேட்டாளா?” தான் எதற்காக நிம்மதியடைந்தோம் என்று புரியாமலே தன்னிடமிருந்த சாக்லட்டை அவளிடம் நீட்ட, நன்றி கூறி அதை பெற்றுக் கொண்டாள் பாரதி.
அவள் பெயரைக் கூட கேட்காமல் “ஆமா நீ எப்பவும் இப்படித்தானா?”
“எப்படி?”
“எல்லாத்துக்கும் நன்றி சொல்லிக்கிட்டு” சிரித்தான் விக்ரம்.
“நல்லது செய்றவங்க இந்த உலகத்துல கொஞ்சம் பேர்தான் இருக்காங்க என்று அம்மா அடிக்கடி சொல்வாங்க. சொல்ல முடியாம போனா, வாழ்க பூரா, மனவேதனையா இருக்கும் என்று புலம்புவாங்க” ஏதோ சிந்தனையில் கூறியிருந்தாள்.
அவள் சூழ்நிலை தெரியாததால் “ஏய் என்ன நீ கிழவி போல பேசுற?” அவள் ஜடையை பிடித்து இழுத்தான்.
பாரதி கொஞ்சம் அதிர்ந்தாலும், புன்னகைத்தாள்.
போட்டியை முடித்துக் கொண்டு செல்லும் வரையில் விக்ரமை கண்டால் பாரதி நன்றி சொல்ல, அவனும் இவளை பார்த்தால் புன்னகைத்து, சாப்பிட ஏதாவது வாங்கிக், கொடுப்பது, அவள் கொடுத்தால் சாப்பிடுவது என்று இருந்தவன் கடைசிவரை அவள் பெயரை கேட்கவும் இல்லை. எந்த பாடசாலையில் படிக்கிறாள் என்றும் கேட்கவுமில்லை.
பள்ளிப் பருவம், எந்த கபடமும் இல்லாத வயது. மீண்டும் சந்தித்துக் கொள்வார்களா? என்றும் தெரியாது. சந்தித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. பிரியும் பொழுதிலும் வலி இல்லை. இருவரும் புன்னகை முகமாகத்தான் விடைப்பெற்றனர்.
அக்கணம் காதல் என்ற ஒன்று இருவருக்குள்ளும் அறியாமலே புகுந்ததை இருவருமே உணரவில்லை.
பாரதி விக்ரமை மீண்டும் சந்தித்த பொழுது உணர்ந்த காதலை, விக்ரம் முதல் சந்திப்பை மீண்டும் கனவில் கண்ட பொழுது உணர்ந்து கொண்டது தான் விதி.
“அன்னைக்கி நான் உன்ன பார்த்திருக்கவே கூடாது” பாடசாலை வாழ்க்கை முடிந்த பின்னும் பாரதிக்கு விக்ரமின் ஞாபகங்கள் அலைக்கழித்துக் கொண்டுதான் இருந்தன. அர்த்தம் தான் புரியவில்லை. புதிதாக சேர்ந்த கல்லூரியில் அவனை பார்ப்பாளென்றும் எண்ணவில்லை. பார்த்த உடனே குளத்தில் விழுந்த அவனை காப்பாறுவாளென்றும் எண்ணவில்லை.
அவனை பார்த்தாலே இதயம் பட படப்பதால் அவனை சந்திக்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தவளின் முன்னால் அவனே வந்து நின்று பேசிய பொழுது மூச்சு விடவும் மறந்து தான் போனாள்.
தான் சாதாரணமாகப் பேசியிருந்தால், அவனும் சாதாரணமாக பேசி கடந்து போய் இருப்பானோ, என்னவோ. யாரென்றே தெரியாது என்று மனமறிந்து பொய் கூறியதால், இவள் கவனத்தை ஈர்க்க, அவன் அடிக்கடி இவள் கண்முன்னால் வந்து நின்று தரிசனம் கொடுக்க, இறுதியில் பெண் மனம் தோல்வியை ஒத்துக்கொள்ளலானது.
பூக்கள் பூக்கும்
தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலை
பொழுதை முழு மதியும்
பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம்
போகவில்லையே உனது
அருகே நேரம்
போதவில்லையே
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும்
தோன்றவில்லையே
இது எதுவோ
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே
பூந்தளிரே…..
எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல்
பேர் கூட தெரியாமல் இவளோடு
ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே
பாதை முடிந்த
பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
இது எதுவோ…
பாரதி குளியலறைக்கு கதவை திறந்து கொண்டு வெளியே வந்ததும் “ஆர் யு ஓகே நவ்?” என்று விக்ரம் பேச ஆரம்பிக்க,
“என்னது வந்துட்டீங்களா? என்ன திடிரென்று?” கார்த்திகேயன் அழைத்திருக்க, அலைபேசியில் உரையாடியவாறே பாரதி வெளியே வந்தவள் விக்ரம் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது “எனக்கு இன்னைக்கு லீவ் வேணும்” அவனது பதிலையும் எதிர்பார்க்காமல் மின்தூக்கியை நோக்கி ஓடலானாள்.
விக்ரம் மின்தூக்கியிலிருந்து இறங்கிய பொழுது கார்த்தியேயனின் கையிலிருந்த கவி “அம்மா” என்று அழைத்தவாறே பாரதியின் மேல் தாவி இருக்க, அவளோ கவியை முத்தமிட்டவாறே, கார்திகேயனிடம் ஏதோ பேசியவாறே வெளியே நடக்கலானாள்.
அதிர்ந்து நின்றது விக்ரம் தான். “இவன்… இவன்… இவன நான் எங்கயோ பார்த்திருக்கேன். எங்க? எங்க?” தலை வலியால் துடித்தவன் அங்கேயே மயங்கிச் சரிந்தான்.