மருத்துவமனையில் சேர்ந்து மூன்று நாட்கள் முடிந்திருந்த நிலையில், அன்று காலை போல நிம்மதியை கைத்தாங்கலாய் நடத்தி பழக்கிக்கொண்டிருந்தான் அண்ணா. நந்தா அந்நேரம் உணவு கொண்டு வர, இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

“வலிக்குதா? என்ன பண்ணுது?” மெல்ல அமர்ந்தவள் லேசாக புருவம் சுருக்கியதற்க்கே பதட்டமாய் கேட்டான் அண்ணாமலை. அவனை பதற வைக்க கூடாது என்றே வலித்தால் கூட காட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டியதாய் போயிற்று. ஆனாலும், லேசான புருவச்சுழிப்பை கூட விடாமல் என்னவென்று கேட்டால்!?

“சும்மா இருய்யா” என்றவள், சாப்பிட போக, “நா வேணா டாக்டரை கூட்டி வரவா?” என்றான் அடுத்து.

“சித்த நேரத்துல அவங்களே ரவுண்ட்ஸ்க்கு வருவாங்க” என்றவள், இட்லியை பிட்டு விழுங்க, “அதுவரைக்கும் வலி பொறுக்கணுமா என்ன? நான் வேணுன்னா அந்த நர்சை வர சொல்லவா?” அடுத்து கேட்டதும், எரிச்சலானது அவளுக்கு.

அவள் திட்டும் முன், “சும்மா நொய்நொய்ங்காத அண்ணா! சாப்பிட விடு” என்று அதட்டியிருந்தான் நந்தா. அவனை பலமாய் முறைத்துவிட்டு, முறைப்புடனே இட்லியை வாயில் அடைத்தான் அண்ணா. அந்நேரம் அவர்கள் அறை கதவை திறந்து, “எக்ஸ்க்யூஸ் மீ!” என்று எட்டி பார்த்தாள் அவள்.

பளபளக்கும் விரித்துவிட்ட கூந்தலும், சட்டை பேண்ட்டும், வெளுத்த தோலும், உச்சந்தையில் அமர்ந்திருந்த கருப்பு கண்ணாடியும் வந்திருப்பவள் வெளியூர் என்று சொன்னதோடு, ‘பெரிய இடத்துப்பெண்’ என்ற எண்ணத்தையும் ‘அவர்களுக்கு’ கொடுத்துவிட, குழப்பமாய் பார்த்தனர் அவளை.

“ரூம் மாறி வந்துட்டீங்களா?” நந்தா தான் கேட்டான்.

“உள்ளே வந்து கதவை அடைத்தவள், “நிம்மதி, அண்ணாமலை?” என்று கேள்வியாய் இழுக்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஹோ, அப்போ நான் சரியா தான் வந்துருக்கேன்!” என்ற கௌசல்யா உள்ளே வந்து, காலியாக இருந்த பெட்டில் அமரப்போக, மூவரும் பார்த்தபடி இருக்கவே, “உட்காரலாம் தானே?” என்று கேட்டாள்.

நிம்மதி தலையசைக்க, அதில் அமர்ந்தவள், “நான் கௌசல்யா, ‘டேஸ்ட்பட்ஸ்’ கம்பெனி சி.ஈ.ஓ” என்று அறிமுகமாக, அண்ணாமலையின் முகம் இறுகியது.

அதைக்கண்ட கௌசல்யா, “நான் உங்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ எல்லாம் வரலை. அந்த ‘சைலேஷ்’ செஞ்ச வேலைக்கு சாரி கேட்க தான் வந்தேன்!” என்று பட்டென சொல்ல, மூவரின் முகமும் நம்பமுடியாத்தன்மையை காட்டியது.

“நம்பமாட்டீங்க தான். என்ன பண்ண? காலாகாலமா முதலாளிங்க எல்லாம் மோசம்ன்னு ஒரு சேயிங் இருக்கே!” என்று சலிப்பது போல சொன்னவள், “எங்களுக்கு நிறைய பிஸ்னஸ் இருக்கு. முன்னாடி எல்லாம் அப்பா தான் பார்த்துக்கிட்டாரு. பட், ஹி இஸ் சிக் நவ், ஸோ, நான் தான் எல்லாம் பாத்துக்குறேன்” என்றவள்,

“அந்த சைலேஷ் மேல நிறைய ஹோப் இருந்துச்சு, ரொம்ப வருஷமா இருக்காருன்னு தான் நம்பி குடுத்தேன். இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல. அதுவும் இப்படி ரௌடி மாறி உங்களை அட்டாக் எல்லாம் பண்ண ஆள் அனுப்புவாருன்னு ஐ நெவர் ட்ரேம்ட்!” என்றவள், “பட் டோன்ட் யூ வொர்ரி… இந்த த்ரீ டேஸ்ல அவர் மொத்தமா முடிஞ்சாரு…” என்றதும் நிம்மதி முகம் லேசாக பதற,

“முடிஞ்சாரு இந்த சென்ஸ்… அவர் இதுவரை எங்களை ஏமாத்தி கையாடல் செஞ்சததெல்லாம் ப்ரூப் செஞ்சு உள்ளே போட்டாச்சு! அதோட, உங்களை அட்டாக் செஞ்சதும் சேர்த்து தான்…  அவர் பேமிலிக்கு ஒரு செட்டில்மென்ட் குடுத்து முடிச்சுட்டேன்! இனி நம்ம வழில அவர் வர எந்தவித வாய்ப்புமில்லை” என்றவள், எழுந்து நிம்மதி அருகே வந்து, அவள் இடக்கரத்தை பற்றி,

“ரொம்ப கஷ்டப்பட்டுருக்கீங்க… ஐம் ரியல்லி வொர்ரிட், இட்ஸ் மை பேட்!” என்று வருத்தமாய் சொல்ல, ஏனோ அவளிடம் ஒட்டவே முடியவில்லை. அவள்மீது நம்பிக்கையும் வரவில்லை.

மூவரும் அவளையே பார்ப்பதை கண்டவளோ, “என்னங்க, என்னை வில்லி மாறியே பாக்குறீங்க?” என்று கேட்டுவிட, தங்கள் பார்வையை மாற்றிக்கொண்டனர். அதோடு, “பரவாலங்க… நாங்க பாத்துக்குறோம்… நீங்க கிளம்புங்க” என்று வணக்கம் வைத்தான் அண்ணாமலை.

“அதெப்படி போக முடியும்? நான் முக்கியமா பேச வந்ததையே இன்னும் பேசலையே!?” என்று சொல்ல, மீண்டும் மூவருக்குள் சந்தேகமான பார்வை பரிமாற்றம் தான்.

அலுப்பாக தலையை உலுக்கிய கௌசல்யா, கையில் கொண்டு வந்த ஃபைலை நின்றுக்கொண்டிருந்த நந்தாவிடம் நீட்டினாள். வாங்கியவன், திறந்துப்பார்த்துவிட்டு திகைக்க, “என்னடா?” என்ற அண்ணாவிடம், அதை நீட்ட, வாங்கி பார்த்த அண்ணாவுக்கும் திகைப்பு!

இருவரும் திகைத்து விழிப்பதை கண்ட கௌசல்யா, “என்ன ஓகே வா உங்களுக்கு?” என்று ஆர்வமாய் கேட்க, நிம்மதி, “என்னது?” என்றாள் இருவரிடமும்.

அண்ணா அந்த ஃபைலை அவளிடம் நீட்டியதும் வாங்கி பார்த்தவள், அடுத்த நொடி இருவரையும் முறைக்க, ஆண்கள் இருவருமே அசடு வழிந்தனர். ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த அந்த தாள்கள் அடங்கிய தொகுப்பை மேலோட்டமாய் வாசித்த நிம்மதி, தீர்மானமான முகத்துடன்,  “இல்லங்க, இது சரி வராது” என்று சொல்லிட, கௌசல்யாவின் முகம் பொலிவிழந்தது.

“ஏன் அப்டி சொல்றீங்க? உங்களுக்கு இதுல என்ன ப்ராப்ளம்’ன்னு சொல்லுங்க, சேன்ஜ் பண்ணிக்கலாம்” என்று பேரத்தில் இறங்க, “இல்லங்க… ஒத்துவராது” என்றாள் நிம்மதி மொட்டையாக.

மீண்டும் மீண்டும் கௌசல்யா ‘ஏன்?’ என்றே விடாது கேட்க, நிம்மதியும் பிடிக்கொடுக்காமல் பேச, “என்னன்னு சொல்லு மதி” என்றான் அண்ணா.

“அவங்களோட கடையை இனி நம்ம பொறுப்பெடுத்து பாத்துக்கனும்ன்னு சொல்றாங்க!” என்றதும், “எதை? அந்த கறிக்கடையவா?” என்றான் நந்தா.

நிம்மதியை முந்திக்கொண்டு, “எஸ்… சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாதிரி பெரிய சிட்டீஸ்’ல எங்க கடை ரொம்ப நல்லா போகுது. அதோட கம்பேர் பண்ணா இங்க சேல்ஸ் கம்மி தான். ஆனாலும், இந்த ஊர் பிரான்ச் எங்க அப்பாக்கு ரொம்ப முக்கியம். ஏன்னா? இது அவர் ஊரு!” என்றவளை, சற்று ஆர்வமாய் அவர்கள் பார்க்க,

“அப்பாக்கு இங்க ‘அம்மையப்பன்’ தான் சொந்த ஊரு. வெளிநாடு எல்லாம் போய் வியாபாரம் செஞ்சாலும், அவர் ஊருக்குள்ள அவரோட அடையாளம் ஒண்ணுமே இல்லன்னு அவருக்கு வருத்தம். அவருக்காக தான் நான் இங்க ஒரு ‘பிரான்ச்’ ஆரம்பிச்சேன். ஆனா, ஏர்போர்ட் கூட இல்லாத ஊருக்கு அடிக்கடி வந்து போறது எனக்கு ரொம்ப கஷ்டம். அதான் ‘சைலேஷை’ இங்க லட்சத்துல சாலரி குடுத்து பாத்துக்க வச்சேன்… பட், ஹி சீடட் ஆன் அஸ்” என்றபோது அவள் முகம் கோபசாயம் பூசியது.

நொடியில் முகத்தை மாற்றியவள், “இந்த மூணு நாள்ல உங்களை பத்தியும் விசாரிச்சேன். நம்ம ரெண்டு பேருமே ஒரே தொழில் தான் பண்றோம். உங்ககிட்ட நான் எதிர்ப்பார்க்குற நேர்மையும் இருக்கு, திறமையும் இருக்கு. அதான் பொறுப்பை இனி உங்கக்கிட்ட குடுக்கலாம்ன்னு முடிவு செஞ்சேன்!” என்றாள்.

“அது…” அண்ணா, நிம்மதியை பார்க்க, அவள், ‘நீயே பேசு’ என்பதை போல மௌனம் காக்க, “சரி வராதுங்க” என்றான் அவன்.

“எதனால அப்படி சொல்றீங்க?” என்ற கௌசல்யா, “பேரு மட்டும் தான் எங்களுது… மத்தபடி அது முழுக்க முழுக்க உங்க பொறுப்பு தான். உங்களுக்கு என்ன என்ன சப்போர்ட் வேணுமோ அதை நாங்க பண்றோம். வர லாபத்துல இருந்து பர்சன்டேஜ் போட்டு பிரிச்சுப்போம். கண்டிப்பா உங்களுக்கு இந்த டீல் லாபகரமா தான் இருக்கும்… தின்க் டுவைஸ்” என்றாள்.

அது அவனுக்கே தெரியும். கடையின் வரவு செலவுகள் ஓரளவிற்கு தெரிந்த வரையில் அதை தான் கையில் எடுத்து நடத்தினால் நல்ல லாபம் வரும் என்று உணர்ந்து தான் இருந்தான். ஆனாலும் மனம் ஒப்பவில்லை.

கௌசல்யாவும் விடவில்லை.  அத்தனை தொழில் செய்பவளுக்கு பேச்சுக்கா சொல்லித்தர வேண்டும்!?

“உங்களுக்கு… தரமான கறி குடுக்கணும்! சரியான காசுக்கு குடுக்கணும்!

எனக்கு… எங்க பிரான்ட் பேருக்கு எந்த களங்கமும் வந்துடக்கூடாது! இவ்ளோதான் நம்ம மோட்டோ! இதுல காசு கூட இரண்டாம் பட்சம் தான். இல்லையா?” என்று கேட்டதும், ‘ஆம்’ என்றான் அண்ணா.

“இப்போ நீங்க மாட்டேன்னு சொல்லவும், நான் வேற ஒருத்தர் கிட்ட இந்த பொறுப்பை குடுத்துட்டேன்னு வச்சுக்கோங்க… அவங்க சரியா செஞ்சா ஓகே… ஒருவேளை சைலேஷ் மாறி இருந்துட்டா?” என்று நிறுத்தியவள், “மறுபடியும் போராடுவீங்களா?” என்று கேட்க, அண்ணாவின் புருவம் சுருங்கியது.

அவன் யோசிக்கிறான் என்றதும், “தொழில் தெரியாத ஆளுன்னா நான் இப்படி இறங்கி வந்து பேசவே மாட்டேன். உங்க தொழில் சுத்தம் எப்படின்னு நல்லா தெரிஞ்சதால தான் இவ்ளோ சொல்றேன். அதோட, நீங்க எடுத்து நடத்துனா நானும் கவலைப்படாம ப்ரீயா இருப்பேன்!” என்று சொல்ல,

“நல்ல ஆளா தேடி பொறுப்பை குடுக்கலாமே!?” என்றான் அண்ணா.

“அதை தானே பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று சிரித்தபடி கௌசல்யா சொல்ல, சற்று நேரம் தயங்கியவன், பின் திடமாய், “எனக்கு கறி வெட்ட தான் தெரியும். கடையை எடுத்து நடத்துற அளவு படிப்பறிவு கிடையாது. நீங்க நீட்டுன பேப்பரை படிச்சு புரிஞ்சுக்கக்கூட அறிவு பத்தாது எனக்கு. இதுல நான் ஆன்லைன் வியாபாரம் பாக்குறதெல்லாம் நடக்குற பொழப்பு இல்ல… நீங்க கோச்சுக்காம வேற நல்ல ஆளா பாருங்க” என்றுவிட்டான்.

“அச்சச்சோ… அப்புறம் என்னாச்சு?” திவ்யா கதை கேட்க, சிரித்த நந்தா, “சுமாரான வியாபாரம் நடந்துட்டு இருந்த கடைல இப்போ ஓஹோன்னு வியாபாரம் நடக்குது! பேன்க் போகக்கூட பயந்துட்டு இருந்த எங்க அண்ணா, போன்ல நெட் பேங்கிங் வச்சு பணம் மாத்துறான். சண்டை போட்டு சுத்திட்டு இருந்த வீரப்பனும் எங்க அண்ணாவும் சேர்ந்துக்கிட்டு அந்த கடையை இவ்ளோ தூரம் உசத்தி விட்ருக்காங்க…!” என்றவன்,

“ரெண்டு முறை கௌசல்யா மேடமும் அவங்க அப்பாவும் நேருலையே வந்து பேசி சந்தோசப்பட்டுட்டு போனாங்க…” என்று சொல்ல,  “சூப்பரு… அப்போ உங்க கறிக்கடை?” என்றாள் கேள்வியாய்.

“எல்லாம் ஒன்னாகிடுச்சு!” என்றதும், “ம்ம்ம்… பெரிய விஷயம் தான்…!” என்றாள் திவ்யா.

 எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எடுத்துவிட்டு திவ்யாவின் உடன் வந்த ஆட்களும் வந்துவிட, “இதெல்லாம் எப்போ போடுவீங்க?” என்று கேட்டான் நந்தா.

“ஒன்னு ஒண்ணா தான் போடணும்… போன வாரம் உங்க எல்லாரையும் உட்கார வச்சு பேட்டி எடுத்தோம்ல… அதோட நடுல நடுல நீங்க பேசும்போது இந்த கிளிப்பிங் எல்லாம் ஆட் பண்ணுவோம்!” என்றபோது, வாசலில் வண்டி சத்தம் கேட்க, சேகர் உள்ளே வந்தான்.

“வாங்க… வாங்க!!!” சிரித்த முகமாய் வந்தவர்களை உபசரித்தவன், அவர்கள் விடைபெறுவதாக சொல்லவும், “சாப்பிட்டுட்டு போலாம்… வாங்க… ஊருக்கே எங்க விருந்து தான், வாங்க” என்று அங்கிருந்து சற்றே நடைப்போடும் தூரத்தில் இருக்கும் ஆஸ்ரமத்திற்கு அழைத்து சென்றான்.