உள்ளே அயர்ந்த உருவில் கழுத்து வரை போர்வையுடன் தளர கிடந்தாள் நிம்மதி. கண்களில் அந்த ‘ஒளி’ மட்டும் அப்படியே! மருத்துவரிடம் ஏதோ மெல்ல பேசிக்கொண்டிருந்தாள்.
அவளை கண்டதும் அப்படியே நின்றுவிட்டான் அண்ணாமலை. அவள் கண்களும் அவன் நிற்கும் திசையில் நகர,
அவள் கண்களுக்கு, கண்ணீரை கொட்டவா? நிறுத்தவா? என்று நின்றிருந்த அண்ணா தான் தெரிந்தான் முதலில். அவள் மெல்ல கை உயர்த்தி அவனை அழைத்ததும், சிறு குழந்தை என அவள் ஒற்றை கையை தன் இரு கைகளால் தாங்கிக்கொண்டு மண்டியிட்டு தரையில் அமர்ந்தான் அண்ணாமலை.
“என்னந்த இப்படி துவண்டு கடக்குற?” நந்தாவின் கூவலில் எரிச்சலாய் திரும்பிய மருத்துவர், திட்ட வாயை திறக்கும்முன், “இத்தனை பேரு எதுக்கு வந்தீங்க, வெளிய போங்கடா” என்றிருந்தாள் நிம்மதி.
குரலில் அத்தனை அயர்வு. நாம் கத்தியே கேட்காதவர்கள் இந்த மெல்லிய குரலுக்கா பணிவார்கள் என்று நினைத்த டாக்டருக்கு அடுத்த நொடி அதிசயமாய் அத்தனை பேரும் அங்கிருந்து மறுபேச்சின்றி வெளியேறியிருக்க, மெலிதாய் வாயை பிளந்தார்.
அந்த வியப்போடே, “நேத்து ராத்திரில இருந்து ஆளாளுக்கு படுத்தி எடுத்துட்டாங்கம்மா! உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணக்கூட விடலை என்னை!” நிம்மதியிடம் குறை சொன்னார் மருத்துவர்.
‘என்ன இது?’ என்பது போல புருவம் சுருக்கி அவள் அண்ணாவை முறைக்க, “அந்தம்மா உன்னை பாக்கவே விடாம, சும்மா தஸ்ஸு புஸ்ஸுன்னு சொல்லி பயம் காட்டிட்டு இருந்துச்சு, அதான்!” அவளுக்கு மட்டுமே கேட்கும்படி சொன்னவனை கொஞ்சமாய் முறைத்துவிட்டு, டாக்டரிடம் “சாரி டாக்டர்” என்றாள் அவள்.
“இப்ப எப்படி ஃபீல் பண்றீங்க நிம்மதி? இன்னும் மயக்கம் இருக்கா? வலி இருக்கா?” என்று டாக்டர் அவளை பரிசோதித்தபடி கேட்க, “வலி தெரியல டாக்டர், ஆனா தாகமா இருக்கு” என்றாள்.
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, சாப்பாடே சாப்டலாம்!” என்றவர், “உங்களுக்கு என்ன மாதிரி ஆப்பரேஷன் செஞ்சுருக்கு என்னன்னு இங்க யாருக்கும் சொன்னாலும் தெளிவா புரியல. மோர் ஓவர் உங்களுக்கு வயசு இருக்கு, உடம்பு ரெடி ஆனதும் எத்தனை குழந்தைங்க வேணாலும் பெத்துக்கலாம்… அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா…” அவர் நேரடியாய் பேச தயங்க,
அவர் தயக்கம் கண்டு சில நொடிகள் சுருங்கிய நிம்மதியின் புருவம், விஷயத்தை யூகித்து, என்னவாய் இருக்கும் என்று உணர்ந்து கசப்பில் ஆழ்ந்தது.
பின், “அபார்ட் ஆகிடுச்சா டாக்டர்?” என்றாள் அவள். அவளது நேரடி கேள்வியில் ஒரு நொடி தயங்கியவர், “எஸ்! ஆனா இது பெரிய விஷயம் இல்ல. நிறைய பேருக்கு, ஆறு வாரம், ரெண்டு மாசம் வரை இருந்து கூட இல்லாம போயிருக்கு. அடுத்து உடனே அவங்களுக்கு இன்னொரு கருவும் தங்கிடும்!” என்றார் நம்பிக்கையாய்.
“என்னவாம் ந்த?” நிம்மதியின் முக வாட்டத்தை படித்து பதட்டமாய் அவன் கேட்டிட, அவளுக்கு சடுதியில் அழுகை கிளம்பியது. அவன் முன்னே அழ வேண்டாம் என பிரயத்தனப்பட்டு அதையவள் அடக்க, இன்னும் பதறியவன், “என்ன… என்ன டாக்டரு?” என்றான் அவரிடம்.
“அது, இவங்களுக்கு பலமா அடிபட்டதுல கரு கலைஞ்சுருச்சு!” என்றார்.
அண்ணாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குழந்தை பற்றிய ஆசை எல்லாம் அதுவரை அவனிடம் இல்லை. இப்போது ‘இல்லை’ என்றதும் கொஞ்சமாய் வருத்தம் இருந்தாலும், ‘அவள்’ வருந்துவாளே என்று தான் கலங்கினான்.
அவனை பொறுத்தவரை ‘அவள்’ தான். அவள் தேறி தெளிந்து வந்துவிட்டால் போதும். மற்றதெல்லாம் அனாவசியம்! அதற்காக பிள்ளைப்பாசம் இல்லை என்று கிடையாது. எந்த எண்ணமும் வளர்த்திராத, வரப்போகும் உயிரை காட்டிலும், தன் கண்முன்னே கிடப்பவள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் அவனது அப்போதைய வேண்டுதல்.
“ஏய், இங்கேரு! உனக்கு எத்தனை புள்ள வேணுமோ சொல்லு, நம்ம பெத்துக்கலாம். நீ தேறி தெளிஞ்சு வா, போதும். சும்மா குழந்த கணக்கா கண்ணை கசக்காத சொல்லிட்டேன்!” மிரட்டல் போல சமாதானம் சொன்னான்.
அடக்கிய அழுகையை அப்படியே விழுங்கினாள் அவள். கண்ணை தாண்டி கண்ணீர் இறங்கவில்லை. ‘நமக்கு ஒட்டுறது தான் ஒட்டும்’ என்ற யதார்த்த எண்ணம் அவளுக்கு எப்போதும் உண்டு என்றாலும், இதை அத்தனை எதார்த்தமாய் கடக்க முடியவில்லை என்றாலும், கடந்தாக வேண்டிய கட்டாயம்!
தன் முகம் கசங்கியதற்க்கே இங்கொருவன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தவிப்புடன் அமர்ந்திருக்க, அவனுக்காக வேண்டியாவது தன்னை உடனே சமாளித்துக்கொள்ள வேண்டிய அவசியம்!
தெளிந்ததாய் காட்டிக்கொண்டாள். உண்மையில் மீள சில நாட்களாவது வேண்டுமே!
பேச்சை மாற்றும் பொருட்டு, “எனக்கு என்ன ஆபரேஷன் நடந்துருக்கு டாக்டர்?” என்று விவரம் கேட்டாள்.
“உங்களோட கருமுட்டைப்பைல அடி பலமா விழுந்ததால இடது பக்க ஓவரி அப்ஃபக்ட் ஆகிடுச்சு, அதை ஆப்பரேட் செஞ்சு ரிமூவ் பண்ணிருக்கோம்” என்றார்.
சட்டென பதறியவள், “இதனால எதுவும்…” என்று கேட்க வர, “ஒன்னும் பிரச்சனை இல்ல. ரெண்டு ஓவரில ஒரு ஓவரி மட்டும் தான் ரிமூவ் பண்ணிருக்கு. அதனால உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல. குழந்தை உருவாகிறது, அதை பெத்துக்குறது இது எதை நினைச்சும் நீங்க வொர்ரி பண்ண வேணாம்” என்று சொன்னவர்,
“கடவுள் புண்ணியம், கர்பப்பைலையோ இல்ல பாலோபியன் டியுப் கிட்டயோ அடி இல்லாம இதோட போய்டுச்சு!” என்றார்.
அண்ணாவுக்கு ஒன்றும் புரியவில்லை, அவள் கரத்தை கெட்டியாய், என்னவோ அவள் உயிரே தான் அவளை பிடித்திருக்கும் பிடியில் தான் இருக்கிறது என்பதை போல அத்தனை பத்திரமாய் தனக்குள் பொத்தித்திருந்தான் அவள் கரத்தை.
அவளுக்கு கலக்கம் தான். ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. தன் உடல் தேறியப்பின் வந்து இன்னும் தெளிவாய் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள். அந்த சிந்தையோடு அவள் அமைதி காக்க,
அவன் உடனே மறுப்பாக நிம்மதியை பார்க்க, அவன் பார்வை உணர்ந்தவள், “டாக்டர் ஒரு அஞ்சு நிமிஷம்” என்றிட, மறுப்பு சொல்ல தோன்றினாலும் சொல்லவில்லை அவர்.
“சீக்கிரம்” என்றதோடு சென்றுவிட்டார்.
அறைக்குள் இருவர் மட்டுமே!
“அவனுங்கள ஏதாவது செய்றேன்னு கிளம்பல தானே!?” சந்தேகமாய் கேட்டாள் நிம்மதி.
“தெரியும் நீ திட்டுவன்னு, அதான் செய்யல. போலீஸ் கிட்ட விட்டாச்சு” அவன் அவள் விரல்களை பார்த்து சொல்ல, “ஓ, நான் என்ன சொல்லுவேன்னு எல்லாம் தெரியுமா?” என்றாள் மெல்லிய குரலில். தன் உடலா இது என்பது போல, அத்தனை கனத்து தெரிந்தது அவளுக்கு. இடுப்பை கொஞ்சமும் அசைக்கக்கூட முடியவில்லை. ஏதோ மரக்கட்டை போல கிடப்பதாய் தோன்ற, அதை காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.
அவன் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் மௌனம் தான். அவளாலும் தொடர்ந்து பேச முடியவில்லை. இளைபாறினாள். திடீரென அவள் விரல்களில் ஈரம் படுவதை போல தெரிய, தன் முன்னே குனிந்திருந்தவனை பார்த்தால், சத்தமின்றி அழுகையில் குலுங்கிக்கொண்டிருந்தான் அவன்.
“யோவ்!” மெலிதாய் அலறியவளுக்கு அவன் கண்ணீர் அத்தனை அதிர்ச்சி! அதுவும் இப்படி குலுங்கி குலுங்கி அழுவதெல்லாம் அவன் டிசைனிலேயே கிடையாதே!!!
“என்னைய்யா இப்ப?” அவள் அசைய முடியாது தவிப்போடு கேட்க, “உசுரே போச்சு டி!” என்றான் அழுகையோடு.
“பிடிக்குமா பிடிக்குமான்னு கேட்டுட்டே இருப்பீள்ள? நல்லா கேட்டுக்கோ!” என்றவன், “நீ இல்லன்னா, உன்கூடவே சேர்ந்து செத்துப்போற அளவுக்கு உன்னை புடிக்கும். என் உசுரளவு பிடிக்கும் உன்னை!” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
இமைக்கா கண்கள் நிறைந்துப்போனது பெண்ணுக்கு.
வலியில் கூட நிறையாத அவள் கண்கள்,
வாரிசு இல்லை என்ற போது கூட நிறையாத அவள் கண்கள்,
அவன் வார்த்தையில் நிறைந்தது.
அவன் தன் கண் பார்த்து நேருக்கு நேராய் உதிர்த்த வார்த்தைகள்…
அதில் தெறித்த உண்மை…
அவன் பார்வையில் கொட்டிய காதல்…
அவள் விரல் பிடித்திருந்த தொடுகையில் தெரிந்த நேசம்…
இது போதும்… இது போதும் அவளுக்கு…
அவள் வாழ்நாள் முழுமைக்கு எதிர்பாரா அன்பை அவன் மீது கொட்ட இது மட்டும் போதும் அவளுக்கு.
அவள் பலநாள் கேட்க ஏங்கி நின்ற வார்த்தை இப்படி நெஞ்சில் சென்று அடிஆழம் வரை தித்திக்கும்படி கிடைக்கும் என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் ரத்தம் கொட்ட இப்படி படுக்கையில் வீழ அவள் தயார் என்ற மனநிலை அவளுக்கு.
தான் சொன்ன வார்த்தைக்கு அவளிடம் இப்படி ஒரு பூரிப்பும், மகிழ்வும் தென்படும் என்றால், இந்த அழகு வதனம் சிலிரிக்க, எத்தனை முறை வேண்டுமானாலும் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாய் சொல்லிக்கொண்டே இருப்பேனே, என்ற நிலை அவனுக்கு.
கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக தான் தோன்றும். ஆனால், என்ன செய்ய? காதலே பைத்தியக்காரத்தனத்தின் மேல்தட்டு பெயர் தானே!!!
என்றோ ஓர் நாள் ‘அவன் வீம்பை வெட்டி விறகாக்கி அதில் அடுப்பெரிப்பேன்’ என இவள் சொன்னதை இதோ செய்தே விட்டாளே! பார்வையால் கூட தன் நேசத்தை காட்ட வீம்பு பிடிப்பவன் இப்போது வார்த்தையில் உரைத்துவிட்டான்.
அவள் கண்கள் காட்டிய பாவனையில் சொக்கி நின்ற அண்ணாவுக்கு, அவள் விரல்களை விடுவிப்பது கூட மரண வலி போல தோன்றியது அப்போது. இவள் சரியாகி வந்தாள் போதும், உடனே பத்திரமாய் தூக்கிக்கொண்டு எங்கேனும் போய்விட வேண்டும் என்பது போல ஒரு உந்துதல்.
செவிலியர் உள்ளே வந்துவிட்டார்.
பிடித்திருந்த விரல்களை அழுத்தமாய் பற்றி, “சீக்கிரம் வந்துடுறி!” என்றான். அத்தனை தவிப்பையும் காதலையும் தாங்கி நின்றது அந்த ஒரு வார்த்தை.
ஏனோ அவன் சிந்தும் கண்ணீர் தனக்கானது என்பதால் பெண்ணுக்கு கர்வம் தான் கூடியது. அடுத்து வந்த சில நாட்களில் வாடா புன்னகையுடன் உடல் தேறி வீடும் சென்று சேர்ந்தாள். அண்ணாமலை அவளை இடுப்பில் தூக்கி வைத்துக்கொள்ளவில்லை, அவ்வளவு தான்! மற்றபடி அவளை ‘தாங்கி…தாங்கி…தாங்கி…தாங்கி…’ ஒரு கட்டத்தில் அவளே அவன் காட்டிய கரிசனத்தில் கடுப்பாகும் அளவுக்கு கொண்டு போய் விட்டுவிட்டான். ஆனாலும் அவன் நிறுத்தவில்லை.
‘நீதானே என்னை மாத்துன? அனுபவி!’ என்பது போல தான் இருந்தது. இருந்தாலும், பிடித்தது அவளுக்கு. தேன்மொழி அவளை நன்றாக பார்த்துக்கொண்டாள்.