“யோவ்… யோவ்வ்வ்வ்” தனக்கு முதுகு காட்டி உறங்கிக்கொண்டிருந்தவனை சுரண்டிக்கொண்டிருந்தாள் நிம்மதி. ‘தூங்கு’ என்றுவிட்டு அவன் படுத்ததும் உறங்கிவிட்டான். அவளுக்கு தான் உறக்கம் ஒரு பொட்டு கூட இல்லை.
‘அவளை அவனுக்கு பிடிக்கும்’ என்பது அவளுக்கு ஸ்திரமாய் தெரிந்த ஒன்று தான். ஆனால் அதை அவன் வாய்மொழியாய் கேட்டுவிட வேண்டும் என்பது தான் அவளது நீண்ட நாள் அவா. இப்போதோ ‘பிடிக்கும்’ என்பதற்கும் ஒருபடி மேலாய் ‘லவ் யூ’ என அவன் முனகிவிட்டு உறங்கியிருக்க, அது கொடுத்த குறுகுறுப்பு அவளை சீண்டிக்கொண்டிருந்தது.
ஏனோ இந்த க்ஷணம் அவனுடன் காதலாய் கதைத்துக்கொண்டே அவன் கையணைவில் கிடக்க வேண்டும் போல ஒரு ஆசை.
“யோவ்…
மலை…
இந்தாய்யா?
அண்ணாமலை…
டேய் அண்ணாமலை….!” சரக்கென திரும்பி பார்த்தவன், “வெளுத்து வுட்ருவேன் தூங்கு டி” என்றான்.
“சரி சரி கோச்சுக்காத… என்னை பாத்த மாறி படு, போதும்” என்று சொன்னதும், முனகிக்கொண்டே திரும்பி அவள் பக்கமாய் படுத்து கண்மூடிக்கொண்டான்.
ஃபேன் காற்றில் அலையும் அவனது முன் சிகை, என்னோடு கொஞ்சம் விளையாடேன் என அவள் விரல்களை துறுதுறுக்க வைத்தது.
“லவ்வ சொல்லிட்டு எப்படி மலமாடு மாறி தூங்குறான் பாரு…” செல்லமாய் திட்டியவள் அவனிடம் நெருங்கிக்கொண்டாள்.
அவள் நெருக்கம் உணர்ந்து, “மூக்க கடிச்சுறாதடி” கரகரப்பாய் முனகியவன், தூக்கத்தை தொடர, “எனக்கு தூக்கமே இல்ல…” என்று சிணுங்கினாள் நிம்மதி.
“கண்ண மூடு, தானா வரும்!” என்றவன் கண்ணை திறக்கவே இல்லை.
“ப்ச்… இப்ப என்ன அவசரம்? கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்ல?” அவன் கன்னத்தை ஒரு விரலால் சுரண்டிக்கொண்டே கேட்க, “விட்ருடி… இவ்ளோ சொன்னதே அதிகம், இதுக்கு மேல வராது. கம்முன்னு தூங்கிடு” என்றவன் குப்புற படுத்து முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டான்.
‘ஹும்’ திரும்பி விட்டத்தை பார்த்து படுத்தவளுக்கு என்ன முயன்றும் உறக்கம் தான் வரவில்லை. மனது நிறைவாக இருந்தது. வயிற்றில் கை வைத்து வருடினாள். மொத்தமாய் நாற்பத்தி ஐந்து நாட்கள் தள்ளிப்போய் இருந்தது. விடிந்ததும் மருத்துவமனை சென்று உறுதி செய்துவிட்டால், மொத்தமாய் நிறைந்துவிடும் என்ற எண்ணத்தோடு, முதன்முதலாய், தங்களுக்கு நடுவே குழந்தை என்று ஒரு குட்டி உருவம் வந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய ஆரம்பித்தாள் நிம்மதி.
இதுவரை குழந்தை பற்றிய எண்ணத்தை அவள் வளரவிடவில்லை. உறுதியாய் நம்பி இல்லை என்று போனால், வருத்தம் தானே என்ற எண்ணம். அப்படி நிறைய அவள் ஊரிலேயே பார்த்திருக்கிறாள்.
குழந்தை என்றதுமே அவள் கற்பனை எல்லை கடந்து விரிய ஆரம்பித்தது. இன் சொப்பனங்கள் வரிசைகட்ட, கனவோடு கண்ணயர்ந்தாள் நிம்மதி.
எல்லாம் சில மணித்துளிகள் தான்!!! கனவு கூட கலைந்தது. ஏதேதோ சத்தம்.
கண்விழிக்கையில் அருகே இருந்த அண்ணாமலையை காணவில்லை. வேகமாய் எழுந்தாள். கதவு வெளிபக்கமாய் தாழிடப்பட்டிருக்க, வேகமாய் தட்டினாள்.
“யோவ்… என்ன சத்தம்? என்ன செய்ற நீ!?” அவள் கேட்டுக்கொண்டே தட்ட அவன் மறுமொழி இல்லை.
நிறைய ஆட்கள் நடமாட்டம் இருப்பதை போல தோன்றியது. யாருமே பெரிதாய் சத்தம் போடவில்லை. ஆனால், ஏதோ நடக்கிறது என்பதை உணர முடிந்தது. வேகமாய் சென்று ஜன்னலை திறந்து எட்டிப்பார்த்தாள். பார்த்தவளுக்கு நெஞ்சுக்கூடு வேகமாய் துடித்தது.
ஐந்தாறு ஆட்கள் பக்கம் அண்ணாமலையை சுற்றிவளைத்திருந்தனர். அவர்கள் எல்லாம் நின்ற தோரணையே அடி வாங்கி நொந்துப்போய், பதிலுக்கு அவனை ஒரு அடியேனும் அடித்துவிட வேண்டும் என்ற வெறியை கண்ணில் தேக்கியதாய் தெரிந்தது அவளுக்கு. அண்ணாமலை அசராமல் நின்றிருந்தான்.
“என் வீட்டுக்கே அடிக்க ஆள் அனுப்பிருக்கானா அவன்? உங்களை நான் அடிக்குற அடில அந்தாளுக்கு ஈரக்கொலை நடுங்கப்போகுது பாரு” என்ற அண்ணா, பின்னால் இருந்து எத்த வந்தவனை இழுத்துப்போட்டு நெஞ்ஜெலும்பிலேயே ஒரு மிதி மிதிக்க, நிம்மதிக்கு தொண்டைக்குழியில், ‘ஹக்’ என்ற சத்தம். அனிச்சையாய் வாயை இறுக பொத்திக்கொண்டாள். கண்கள் இயல்பை விட முன்மடங்காய் விரிந்திருந்தது.
அண்ணா சண்டையிட்டு பார்த்திருக்கிறாள். ஆனால், இப்படி! பார்த்ததே இல்லை.
கையில் இருந்து நழுவிய அருவாளை எதிராளி இறுக்கிபிடிக்க, அவன் உள்ளங்கை வியர்வையில் நிற்காமல் வழுக்கிக்கொண்டிருந்தது அது.
நிம்மதி அதிர்ந்தது எல்லாம் சில நிமிடங்கள் தான். பின் மூளை சுறுசுறுப்பானது.
வந்தவர்கள் எத்தனை அடி வாங்கினாலும் சிறு சத்தம் கூட போடவில்லை. அண்ணாவுக்கும் அக்கம் பக்கத்தினரை அழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இவள் பேக்டரிக்கு பின்னே உள்ள வீட்டில் உள்ளதால், அங்கிருந்து கத்தி அழைப்பது பெரிதாய் எந்த சத்தமும் வெளியே போகாது. மற்றவர்களை அழைப்பது வீண் என்று புரிய, வேகமாய் சென்று தனது அலைபேசியை இயக்கி ஜன்னலில் சாய்த்து வைத்து, நடப்பவை தெரியும்படி வீடியோ ரெக்காடரை ஆன் செய்தாள்.
பின்னே தரையில் கிடந்த அண்ணாவின் பட்டன் போனை எடுத்து பரதனின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
பல ரிங்குக்கு பிறகு எடுத்தவன், “என்ன இந்த நேரத்துல?” என்று கேட்க, “சீக்கிரம் எல்லாரையும் கூட்டிட்டு வாங்கடா, இங்க பெரிய பிரச்சனை… அண்ணாவை அடிக்க ஆள் இறங்கிருக்கு” என்றிட, வாரி சுருட்டி எழுந்தவன், துரிதமாய் செயல்பட்டான்.
அதற்குமேல் நிம்மதியால் உள்ளே நிற்க முடியவில்லை. ஜன்னல் அருகே சென்று பார்க்க, அண்ணா இன்னமும் சண்டையிட்டுக்கொண்டு தான் இருந்தான். சில நொடிகளில் அவள் கவனம் வேறிடம் பெயர, அங்கே ஒருவன் எதையோ அந்த நீண்ட கத்தியில் ஊற்றி வன்மத்துடன் திரும்பி அண்ணாமலையை பார்த்துக்கொண்டிருந்தான்.
அது என்ன ஏது என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவில்லை நிம்மதி. அவன் பார்வை சொன்னது, அவன் கையில் இருப்பது பொல்லாதது என்று!
“யோவ்… என்னவோ கொண்டாரான்… குத்த வரான்… அங்கன பாரு” அவள் கத்தியதெல்லாம் அவனை சென்று சேரவில்லை. கதவை வேகமாய் போட்டு உலுக்கினாள். உள்பக்க மேல் தாழை கழட்டிவிட்டு மீண்டும் கதவை அவள் உலுக்க, அவள் ஆட்டிய வேகத்தில் கொஞ்சகொஞ்சமாய் முன்பக்க தாழ்பாள் விலக ஆரம்பித்தது. சில நொடிகளில் அது மொத்தமாய் கழண்டுவிட, வெளியே வந்தவளுக்கு, அண்ணாவை இருபுறமும் பற்றிக்கொண்டு நின்றவர்களும், அவனை குத்த கத்தியோடு நெருங்கியவனும் மட்டுமே தெரிய, யோசிக்கவே இல்லை அவள்.
கைக்கெட்டும் இடத்தில் இருந்த வாளியை எடுத்தவள், கத்தி வைத்திருந்தவனின் புறமண்டையில் ஓங்கி அடித்துவிட்டாள். எதிர்ப்பாராத அடியில் நிலை தடுமாறினான் அவன். அதற்குள் அண்ணா, தன்னை பிடித்திருந்தவர்களின் பிடியில் இருந்து விலகியிருக்க, இன்னும் வலுவாய் தாக்க ஆரம்பித்தான்.
அடிக்கும் வேகத்தில் அணங்கை கவனிக்க தவறிப்போனான் ஆடவன்.
பெண்ணிடம் அடிவாங்கி நிலை தடுமாறி நின்ற அந்த அடியாள், இருந்த கோவத்தை எல்லாம் திரட்டி அவளை எட்டி மிதித்திருக்க, எங்கோ சென்று விழுந்தாள் அவள். பரதன் ஆட்களோடு அங்கே விரைந்து வந்தான். ஆட்கள் வரும் அரவம் கேட்கவுமே அடியாட்கள் அங்கிருந்து தெறித்து ஓடப்பார்த்தனர். அதற்குள் ஊராட்கள் அவர்களை சுற்றிவளைத்திருக்க, யாரோ போலீசுக்கும் சொல்லியிருந்தனர்.
“உனக்கு ஒன்னும் இல்லல?” பரதன் கேட்க, “இல்லடா…” என்ற அண்ணா, “மதி தான் பயந்திருப்பா!” என்று சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கி திரும்ப, அவன் மூச்சே நின்றுப்போனது.
‘நட்ட நடுல கிடக்கு பாரு… அதை ஓரமாய் எடுத்து வையேன்!’ சில மணிநேரம் முன்பு நிம்மதி அவனிடம் சொன்னது காதில் ஒலித்தது.
நிம்மதியை கண்ட பரதன் துடித்துப்போனான்.
அங்கே வாசல் நடுவே இருந்த தேங்காய் உரிக்கும் கருவியில் வயிறு சொருக, ரத்தம் தரையை நிறைக்க, மயங்கி கிடந்தாள் நிம்மதி.
அதன் பின்னான நிமிடங்கள் எல்லாம் அண்ணாமலைக்கு எப்படி கடந்தது என்றே தெரியாது எனலாம். மூளை மரத்தவன் போல செயலற்று நின்றான். பரதன் போட்ட சத்தம் அவனை நிகழ்வுக்கு கொண்டு வந்தாலும் கூட அவனால் நிம்மதியை கண்க்கொண்டு பார்க்க முடியவில்லை.
“ஐயோஓஓ… எம்புள்ள…” அவனை இடித்துக்கொண்டு ஓடிய தாஸும் அவரை தொடர்ந்த தேன்மொழியும் நடப்பவை நிஜமென உணர்த்தினர் அவனுக்கு.
அவளுக்காக அவன் வாங்கிய டாட்டா ஏசிஈ வண்டியில் பின்னால் கிடத்தப்பட்டாள் நிம்மதி. பரதன் முன்னிருக்கையில் அமர்ந்து வண்டியை கிளப்ப, நந்தா, “வாடா” என்று இழுத்து வண்டியில் ஏற்றினான் அண்ணாவை.
வண்டியில் ஏற்றிய சிறிது நேரத்திற்க்கெல்லாம் ரத்த நெடி வீச தொடங்கியது. தேன்மொழி கனமான துணியொன்றை நிம்மதியின் வயிற்றில் வைத்து அழுத்திப்பிடித்திருந்தாள். இரவு நேர காலியான சாலையில் சீறிப்பாய்ந்த வண்டி சில நிமிடங்களில் திருவாரூரில் உள்ள பிரபல மருத்துவமனையை அடைந்தது.