“ப்ச், போடி” என்று சலித்தபடி கதவை சாத்தியவன், அப்படியே உள்ளே வந்து படுத்தான்.
“ஒரு வேலை நான் சொல்லி நீ செய்யக்கூடாதுல?” முறைத்துக்கொண்டே அந்த உரிப்பானை ஓரம்கட்ட வெளியே போக போனவளை, அவள் அலைபேசி சத்தம் போட்டு நிறுத்தியது.
அவள் தோழி திவ்யா அழைத்திருக்க, “என்னடி புடிக்கவே முடியல உன்ன?” என்று சிரித்தபடி பேச ஆரம்பித்தாள் நிம்மதி.
“பின்ன? எவ்ளோ போன் கால்ஸ், எவ்ளோ மெசேஜஸ்! அந்த ஆர்டிகிள போட்டாலும் போட்டேன், அப்பப்பா… ‘குற்றம்… நடந்தது என்ன?’ன்னு வளைச்சு வளைச்சு கேட்டுட்டே இருக்காங்க” திவ்யா விளையாட்டாய் அலுத்துக்கொள்ள, “உனக்கு தான்டி நான் தேங்க்ஸ் சொல்லணும். நான் சொன்னதும் மறுக்காம உங்க ஆபிஸ்ல பேசி ஆர்டிகிள் போட்டியே!” என்றாள் நிம்மதி நன்றியாய்.
“அவன் அவன் என்ன போடுறதுன்னு தெரியாம சுத்திட்டு இருக்கான். நீ அல்வா மாறி எவிடென்சோட நியூஸ் குடுக்குற… வேண்டாம்ன்னா சொல்லுவேன்!” என்றதோடு, “அப்புறம், நீ நியூஸ் குடுத்தப்போ நானும் ஒருக்க க்ராஸ் வெரிஃபை செஞ்சேன். அந்த மேனேஜர் கொஞ்சம் ஒரு மாதிரி…” என்று நிறுத்தினாள் திவ்யா.
“ஒரு மாதிரின்னா…?” நிம்மதி கேட்க, “மாதிரின்னா… எப்டி சொல்றது? பணக்காரனுங்களுக்கே சில குணம் எழுதி வச்ச மாதிரி இருக்கும் தெரியுமா? நம்ம தான் பெரிய ‘இது’ன்னு… அந்த ஆளும் அப்டி தான். மரியாதை, கௌரவம்… அவனுக்கு கீழ இருக்கவங்க எல்லாம் அவனுக்கு ஒரு ஆளே இல்ல… இப்போ நீங்க அவனை இப்படி போட்டு குடுத்ததுல கண்டிப்பா ஹெட் ஆபிஸ்ல வச்சு செய்வானுங்க… அந்த கோவத்தை அவமானத்தை எங்க கொட்டன்னு தெரியாம உங்ககிட்ட காட்ட வருவான்னு தோணுது” என்றாள்.
“இது பணக்காரங்க குணம் இல்ல, சாதாரண மனுஷ குணம் தான். ஒரு எலி வந்து பூனையை அடிச்சா, அது என்ன சும்மாவா நிக்கும்? நீ எல்லாம் என் மேல கை வைப்பியான்னு கடிச்சு தின்ன வரும்ல? அது மாறி தான். அந்த ஆளு கண்ணுக்கு நாங்க எலி, அவரு பெத்த பூனை…” என்றவள் சிரிக்க, மறுபக்கம் நிம்மதியின் உவமையில் திவ்யாவுமே சிரித்தாள்.
அதே சிரிப்போடு போனை வைத்தவள், அண்ணாமலையின் அருகே படுத்துக்கொள்ள, “ஹ்ம்ம்… படிச்ச பிள்ளைங்க கூட இதுக்கு தான் சேருறது இல்ல” என்றான் அண்ணாமலை.
“ஏன் சேர்ந்ததால என்ன கெட்டுப்போச்சாம்?” அவள், அவன் விலாவில் இடிக்க, “நம்ம முக்கியத்துவம் குறையுதுல?” என்றவனை விளங்கா பார்வை பார்த்தாள்.
அதை புரிந்து, “இப்ப நீ டம்மியா இருந்தீன்னு வையேன், உன்னை அரெஸ்ட் பண்ணப்போ, ஓடி வந்து என்னை கட்டிப்புடிச்சு கதறிருப்ப, நான் உன் அழுகை பொறுக்காம அவனை அடிக்க கிளம்பிருப்பேன். சீனு வேற மாறி போயிருக்கும்.
ஆனா இப்ப, உட்காந்த இடத்துல இருந்தே அவனை எப்படி ஆட்டி வைக்குறதுன்னு ப்ளான் போட்டு செஞ்சுட்ட… இதுனால இங்க என்னோட ‘கெத்து’ கம்மியாகிடுச்சு” என்றவன் சீரியசாகவே அதை சொல்ல,
“ஓஹோ!” என்றாள் அவனையே பார்த்து.
“நீ பத்தாவது படிச்சதும் அதோட நிக்காம ஏன் மேல மேல போன? நீ காலேஜுக்கு போனதுமே, நான் முடிவு பண்ணிட்டேன், ‘சீ சீ இந்த பழம் புளிக்கும்’ன்னு. அதோடவாது விட்டியா? சொந்தமா தொழில் வேற… அதுவும் என் கண்ணு முன்னவே!
உன் பக்கத்துல நான் இருந்தா, என் பாலிசு கொஞ்சம் மங்கி தான் போகுது. என்னவோ உன்னைய கட்டிக்க நான் புண்ணியம் பண்ணிருக்கணும் கணக்கா, ஊருல எல்லாரும் ஒரு பார்வை! போதாக்குறைக்கு உங்கொப்பன் வேற காசுக்கு கட்டுனேன்னு பேர் வாங்கி குடுத்துட்டான்.
இது நமக்கு ஆகுற கழுதை இல்லன்னு விலகி போனாலும் விட்டு தொலைஞ்சியா நீ!?” விட்டத்தை பார்த்தே அவன் பேசிக்கொண்டிருக்க அவளிடம் பேச்சே இல்லை.
பதில் இல்லை என்றதும், அவன் திரும்ப, அவள் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஏண்டி…? நீ ஏன் நான் தான் வேணுன்னு நின்ன? என்கிட்ட விருப்பத்தை சொல்லிட்டு வேற ஒருத்தனை எப்படி கட்ட முடியும்ன்னு தயங்குனியோ?” என்றான் வெகு ஆர்வமாய் பதிலை எதிர்ப்பார்த்து.
சலிப்பாக பார்த்தவள், “உனக்கு இந்த காதல் எல்லாம் புரியவே புரியாதா?” என்றாள்.
“கா..த…ல்லா?” அதை சொல்லும்போதே முகத்தை சுளித்தான் அவன்.
“ஓ…. அப்ப ஐயாவுக்கு என்னை பிடிக்காது?” அவள் கேட்க, “பிடிக்குறதெல்லாம் காதலா என்ன?” மறுகேள்வி கேட்டான் அவன்.
“அப்போ என்னை பிடிக்குமா?!” அவள் கேட்க, “ஷப்ப்பா… எங்க சுத்துனாலும் அதுலயே வந்து நில்லுடி நீ!?” என்றவன் நேராக திரும்பி விட்டான்.
“நீ மட்டும் என்னவாம்? இத்தனை வாட்டி கேக்குறாளேன்னு வாயை திறந்து சொல்றியா என்ன?” அவள் கேட்க அவன் கண் மூடி படுத்திருந்தான்.
“காது கேக்கலல? வீம்பு… வேற ஒன்னும் இல்ல… என்னை அலைய விடுறதுல அவ்ளோ ஆனந்தம்… அப்போவும் சரி இப்போவும் சரி!” என்றபோது அவன் இதழ்கள் மெலிதாக விரிந்தாலும் கண்களை திறக்கவில்லை.
“உனக்கு எப்படியோ? எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னை மாறி வீம்பெல்லாம் எனக்கு கிடையாது. பிடிச்சவன் கிட்ட இறங்கி போறது தப்பும் இல்ல… நீ என்னை எவ்ளோ விரட்டுனாலும் அலட்சியப்படுத்துனாலும் உன்னை தவிர வேற எண்ணமே இல்ல எனக்கு…” என்று சொல்ல, அடக்க முடியாத வெட்க புன்னகை அவனிடம். அதை காட்ட வெட்கி அவன் மறுபக்கம் திரும்பிக்கொள்ள, எழுந்து அமர்ந்தவள் அவனை நேரே புரட்டினாள்.
“உனக்கு மட்டும் நான் மேலே படிச்சதோ, தொழில் தொடங்குனதோ புடிக்கலன்னு தெரிஞ்சுருந்துச்சுன்னு வையேன்! கண்டிப்பா நிறுத்திருப்பேன்” என்றவள் சும்மா சொல்லவில்லை என்று அவள் முகத்தை பார்த்தாலே தெரிந்தது.
“ந்த… புடிக்கலன்னு எல்லாம் இல்ல… எனக்கு பெருமையா தான் இருந்துச்சு… ஆனாலும் ஒரு எண்ணம்… பொண்டாட்டியை விட நம்ம மேலா இருக்கனும்ன்னு! அதை சொல்ல தெரியல எனக்கு” என்றவனுக்கு உண்மையாகவே வார்த்தை வடிவம் வரவில்லை.
“சரி இப்போ சொல்லு… நான் தொழிலை விட்டுடவா?” அவள் சீரியசாக கேட்க, இவன் பதறி எழுந்துவிட்டான்.
“அடியே பைத்தியக்காரி! வண்டி லோனு கட்டனும்… வீட்டு வேலை போய்க்கிட்டு இருக்கு… தொழில விட்டா எவன் ஈ.எம்.ஐ கட்டுவான்?” அவன் பதட்டமாய் கேட்க, பதறாமல் அவனை பார்த்தவள், “நான் நிஜமாவே கேக்குறேன்” என்றாள்.
அவள் கண்ணை பார்த்தவனுக்கு அவள் விளையாடவில்லை என்று புரிய, தன் விளையாட்டை கை விட்டான் அவன்.
“விடுன்னா விட்டுடுவியா?” அவன் கேட்க, வருத்தமாய் தலைகுனிந்தவள், திடமாய் ‘ஆம்’ என தலையசைத்தாள்.
அவனுக்கு அத்தனை வியப்பு!
“ஏன்டி?” அவன் எழும்பாத குரலில் அவளையே பார்த்தபடி கேட்க, நிமிர்ந்து அவன் கண்ணை பார்த்தவள், “உன்னை என்கிட்ட இருந்து தள்ளி வைக்குற எதுவுமே… எது…வுமே… எனக்கு வேண்டாம்!” அவள் சொன்ன நொடியில்லாமல் அவளை தாவி கட்டி அணைத்தான் அண்ணாமலை.
அத்தனை இறுக்கம் அவனிடம். அவள் கசங்கினாலும் தடுக்கவில்லை.
“நான் ஒண்ணுமே பண்ணல டி உனக்கு… ஆனாலும்…” அவன் உணர்ச்சிகள் சமநிலையில் இல்லாமல் தடுமாறியது.
அவனை தன்னிடம் இருந்து பிரித்து முகம் பார்த்தவள், “ஒண்ணுமே பண்ணலையா?” என்றாள்.
“ம்ம்ம்”
“எவன் கிட்டயும் இறங்க மாட்டேன்னு வீம்பா திரிஞ்ச ஆளு, ஒவ்வொருத்தன்ட்டயா போய் காசுக்கு கை கட்டி நின்னியே! அவமானப்பட்டாலும் பரவாலன்னு எத்தனை பேருகிட்ட கையேந்துன? காசு போடக்கூட பேங்க் பக்கம் போகாத ஆளு, கடன் வாங்க போய் நின்ன…! இதெல்லாம் உனக்காக கூட நீ செஞ்சது இல்ல… எனக்காக … என் ஒருத்தி நாக்கு ருசிக்கனும்ன்னு செஞ்ச… எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா?” அவள் மிடுக்காய் கேட்க, “ம்ஹும்!” என்று உதடு பிதுக்கியவனுக்கு அப்போதும் புரியவில்லை.
“ஏதோ, செய்யணும்ன்னு தோனுச்சு… ஆனாலும் பண்ண முடியாம போச்சுல்ல” என்றான்.
“சரி… அன்னைக்கு ஸ்டேஷன்’ல நான் அழுதுருந்தா உடைஞ்சுருப்பேன்னு சொன்னியே? ஏன்?” அவள் கேட்க, அதற்கும் அவனிடம் பதில் இல்லை. பாவமாய் உதடு பிதுக்கினான்.
“யோவ் லூசு மாமா… நீ என்னை லவ் பண்ற…” அவள் நெற்றி முட்ட, ‘அய்ய’ என்றான் அவன்.
“என்ன நொய்ய? உண்மையை சொன்னா கசக்குதா?” என்றவள் செல்லமாய் அவன் இடுப்பில் கிள்ளினாள்.
லேசாக துள்ளியவன், “எனக்கு அதெல்லாம் தெரியாது… பொண்டாட்டின்னா நீ தான். நீ இல்லன்னா எவளும் இல்ல… அது மட்டும் தான் என் எண்ணம் பல வருஷமா… உன்னை கட்டணும்ன்னு எல்லாம் கனா கண்டதே இல்லை. உனக்கு ஏத்தவன் நான் இல்லன்னு வலுவா ஒரு எண்ணம்” என்றவன்,
“எப்பவுமே நம்மளை ஒருத்தர் விலக்கும்போது வலிக்கும். அதே அவங்களுக்கு முன்ன நம்ம விலகிட்ட வலி கம்மியா இருக்கும். நான் அதான் பண்ணுவேன் எப்பவும்” என்றான்.
“உன் விஷயமும் சரி, பசங்க விஷயமும் சரி… நானா விலகி தள்ளி நின்னதுக்கு இதான் காரணம், என்னால பிரிவு எல்லாம் தாங்கிக்க முடியாது” என்றான் வேகமாய் தலையை உலுக்கி.
அவனை வாகாக அணைத்துக்கொண்டாள் நிம்மதி.
“பயமா இருக்கும் நிம்மதி, நமக்குன்னு யாருமே இல்லையே… யாருமே இல்லாமலே போய்டுவோமோன்னு பயமாவே இருக்கும். நீ பிடிச்சுருக்குன்னு வந்து நின்னப்போ எவ்ளோ சந்தோஷம் தெரியுமா எனக்கு… ஆனா அதைவிட பயம். என்னைக்காது பாசம் காட்டி என்னை வுட்டு போய்டீன்னா?” என்றவன் அந்த பயம் இப்போதும் இருப்பதை போல லேசாக நடுங்க, இன்னும் நெருக்கிக்கொண்டாள் தன்னோடு.
“பெரிய ஆம்பளைன்னு பந்தா தான்… நைட்ல தனியா தூங்கக்கூட பயப்படுவேன்” சொல்லிவிட்டு அவன் புன்னகைக்க, அவளுக்குமே சிரிப்பாக தான் இருந்தது.
“ஏன்டி சீரியஸா பேசுறேன், சிரிக்குற?” அவன் முறைக்க, “எல்லாம் பண்ற, ஆனா லவ் இல்லன்னு சொல்ற… ஆளும் மூஞ்சியும்” என்றவள் இன்னும் சிரிக்க, “சரி… என்ன இப்ப… இதெல்லாம் தான் லவ்வுன்னா… வச்சுக்கோ… நானும் லவ் யூ” என்றுவிட்டான் போறப்போக்கில்.
சிரித்தவள் நொடியில் சிலையானாள்.
“என்ன சொன்ன?” கண்கள் விரிய அவள் கேட்க, “எல்லாம் உனக்கு கேட்டுச்சு” என்றுவிட்டான்.
“யோவ்… பத்து வருஷமா வெயிட் பன்றேன்ய்யா… நீ பத்து செகண்டு கூட பெறாம போறபோக்குல சொல்லிட்டு போற?”
வீரப்பனுக்கு மயக்கம் தெளிந்தது. கண்ணை சுருக்கி விரித்து அவன் விழி திறக்க, தலை பலமாய் கனத்தது. கூடவே இருட்டில் ஒன்றுமே புரியவில்லை. தட்டுத்தடுமாறி அவன் எழுந்து நின்று சில நொடிகள் நிதானித்தபோது தான், தான் இன்னமும் அந்த மேனேஜர் அறையிலேயே இருப்பதை உணர்ந்தான். குத்துமதிப்பாக சென்று லைட்டை போட்டதும் தான் கொஞ்சம் உணர்வே வந்தது.
அங்கிருந்த தண்ணீரை வயிறு முட்ட குடித்துவிட்டு நேரத்தை பார்த்தான். நள்ளிரவை காட்ட, கதவை திறக்க முயன்றான். வெளிப்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.
அவனை முழு பலத்தோடு செயல்படவிடாமல் தலை வேறு பயங்கரமாய் வலிக்க, அப்படியே அமர்ந்துவிட்டான். திடீரென அவன் அலைபேசி நினைவு வந்ததும் தன் பேக்கெட்டில் இருந்து வேகமாய் அதை எடுத்தவன், பல வருடங்கள் முன்பு பதிந்து வைத்திருந்த நிம்மதியின் எண்ணுக்கு அழைத்தான்.
ரிங் போய்க்கொண்டிருந்த ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு படபடப்பு ஏறியது. அந்த சைலேஷ் ஏதோ செய்யப்போவதாக சொன்னது அவனுக்கு பயத்தை கொடுக்க, ஒன்றும் நடந்திருக்க கூடாதுன்னு என்ற வேண்டுதலோடு காத்திருந்தான்.
முழு ரிங் போய் முடிந்தாலும் அவன் அழைப்பை யாரும் ஏற்கவில்லை. ஏற்கும் நிலையிலும் அவர்கள் இல்லை.
தன் வீட்டு வாசலில் ரத்தம் கொட்ட மயங்கி விழுந்திருந்தாள் நிம்மதி.