ஒரு கட்டத்தில், அந்த விஷயம் ஆதிக்கு தெரிய வந்தபோதும் சரி, கனிகா பிரிந்த போதும் சரி… காரணமே இல்லாமல் பூஜிதா மீது கோபம் கொண்டான். இதற்கும் அவள் இதில் இம்மியும் சம்பந்தப்படவில்லை. ஆதி, திருமணம் குறித்து கேட்டுப் பார்த்தது கூட தம்பியிடம் மட்டும் தான், அது குறித்து வீரராகவனிடமோ, பூஜிதாவிடவோ ஒரு வார்த்தை பேசியதில்லை. இது எல்லாம் சத்யாவிற்கும் தெரியும் தான்! இருந்தும் அவள் மீது கோபம் கொண்டான் காரணமே இல்லாமல்…

இப்பொழுது தான் கனிகா குறித்து உண்மை தெரியுமே! ஆக, இவள் மீது கோபம் கொள்வதில் அர்த்தம் இல்லை என்று புரிந்திருந்தது.

ஆனால், பூஜிதா இவனை முற்றிலும் தவிர்க்க அவனிடம் ஒருவித அழுத்தம். ‘பார்க்காத… பேசாத… எனக்கென்ன?’ என்றொரு வீம்பு. ஆனால், துளியும் லஜ்ஜையேயின்றி வைத்த கண் வாங்காமல் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில், பூஜிதா சொல்ல வேண்டிய மொத்த விளக்கங்களையும் சொன்ன பிறகு இவன் நண்பர்கள் கூட்டத்திடமிருந்து விலக நினைக்க, அவர்கள் விட்டால் தானே! வேண்டுமென்றே சந்தேகங்களைக் கேட்டு இழுத்துப் பிடித்தார்கள்.

ஒருவித சங்கடத்துடன் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு விட்டால் போதும் என்கிற மனநிலை தான்.

நிதானமாக எழுந்தவன் தன் மீதிருந்த மண் துகள்களை எல்லாம் தட்டி விட்டபடியே அவளையே பார்த்தான்.

‘நீ உதவி கேள்… நான் செய்கிறேன்…’ என்கிற சவால் அவன் விழிகளில்.

அவனை ஏறிட்டுப் பார்க்கா விட்டாலும் அவன் எண்ணவோட்டம் புரிந்து தான் இருந்தது. போடா என்கிற அலட்சியம் தான் அவளிடம்! ‘உன்கிட்ட நான் கெஞ்சணுமா? நெவர்!’ என்று சுய மரியாதையுடன் சிலிர்த்து கொண்டாள்.

ஆனால், அவளாக என்ன முயன்றும் அந்த கூட்டத்தினரிடம் இருந்து விடுபட முடியவில்லை. ஆவலாக, “சந்தேகம் வந்தா உங்க கிட்டயே கேட்போம்… உங்க நம்பர் தந்துட்டு போங்களேன்…” என்று ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதமாய் ஆர்ப்பாட்டம் செய்ய,

சற்று அவர்களை நெருங்கி நின்று கொண்ட சத்யாவுக்கு மிகவும் சுவாரஸ்யம். இப்ப என்ன செய்ய போற? என்பது போல அவளையே குறுகுறுவென பார்த்திருந்தான்.

இந்த வானரங்கள் படுத்துவதை விட, சத்யாவின் பார்வை தான் மங்கைக்கு பெரும் எரிச்சலைக் கொடுத்தது. வாயிற்குள் என்னவோ வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள். அது கண்டிப்பாகத் தன்னை குறித்துத் தான் என்பது புரிந்து போக சத்யாவிற்கு அப்படியொரு சிரிப்பு. அவன் சிரிப்பை ஓர விழியால் கண்டு கொண்டவளுக்கும் உள்ளுக்குள் அப்படியொரு எரிச்சல்.

இது போன்ற இக்கட்டான சூழல்கள் பலவற்றை அவள் கடந்து வந்தவள் தான், அப்பொழுது எல்லாம் கோர்த்துச் சொல்ல ஒரு பொய்யான தகவல் அவளிடம் கைவசம் இருக்கும். இப்பொழுது சத்யாவை எதிரில் வைத்துக் கொண்டு அதனைச் சொல்ல முடியாது! எதையாவது உளறாமல் இங்கிருந்து நகரவும் முடியாது.

“என்ன வெண்ணிலா? ஜஸ்ட் நம்பர்… அதை வெச்சு நாங்க என்ன செய்வோம்?” என்று ஒருவன் கேட்க,

“வெண்ணிலா…???” என்றான் போலி வியப்புடன் சத்யேந்திரன்.

“ஆமாம்டா… இவங்க பேரு தான்… நெக்ஸ்ட் சண்டே இங்கே ஒரு ஸ்ட்ரீட் (street) டே ஈவண்ட் வைக்கிறாங்களாம். அதுக்கான இன்விடேஷன் கொடுத்தாங்க. பண்ட்ஸ் இந்த அக்கவுண்ட்க்கு அனுப்பணுமாம்” என நோட்டிஸீல் இருந்த வங்கி விவரங்களைக் காட்டினான்.

“ஓ…” என சத்யா கதை கேட்டுக்கொள்ள, “சந்தேகம் எதுவும் இருந்தா என்குயரிக்கு நம்பர் கேட்டுட்டு இருக்கோம்” என்றும் சேர்த்துச் சொல்ல, “ஓஹோ…” என்றான் இன்னும் ஆர்வமாக.

அந்த நேரம் எங்கிருந்து தான் வந்தார்களோ பூஜிதாவின் தோழிகள் இருவரும். அவளை காக்க வந்தவர்கள் போல நெருங்கியவர்கள், உண்மையில் அவளைப் படுகுழியில் தான் தள்ளினார்கள்.

வழக்கம் போல நழுவ முடியாமல் மாட்டிக் கொண்டாள் போல என நெருங்கியவர்களுக்கு, இவள் தான் எல்லாம் சமாளிப்பாளே இன்று என்ன என்கிற எண்ணம் தான். அவர்கள் அருகில் நெருங்கும் போது, கைப்பேசி எண்ணைக் கேட்டுக்கொண்டிருக்க, இவள் தான் கைவசம் ஒரு எண்ணை எப்பொழுதும் வைத்திருப்பாளே அப்பறம் என்ன என்கிற யோசனை தான் தோழிகள் இருவருக்கும்!

“என்னடி கிளம்பலாமா?” என்றபடி வந்தவர்கள், அவளைத் தள்ளிக்கொண்டு போகப் பார்க்க,

“பார்த்தீங்களா? நம்பர் கூட தராம போக பாக்கறீங்க?” என மீண்டும் சுற்றிக் கொண்டனர். மூவரும் அவர்களுக்கு நடுவில்!

ஒருத்தி நம்பரைச் சொல்லப் போக, அவசரமாக பாய்ந்து அவளின் வாயைப் பொத்தினாள் பூஜிதா.

இன்னொருத்தி அவளைக் குழப்பமாகப் பார்த்தபடியே ஒப்பித்த நம்பர் சாட்சாத் சத்யேந்திரனுடையது. அவன் விழிகள் தெறித்து விழும் அளவிற்கு விரிந்தது.

அதிர்ச்சியோடு பூஜிதாவைப் பார்க்க அவளால் தலையை நிமிர்த்த முடியவில்லை. ‘கடன்காரி! இப்ப இவளை நான் கூப்பிட்டேனா?’ என மனதிற்குள் நொந்து கொண்டவளுக்கு விட்டால் போதும் என்ற நிலை தான். கீழுதட்டைக் கடித்துக் கொண்டு அவஸ்தையுடன் நின்றிருந்தாள்.

மற்றவர்கள் அவளின் எண்ணைக் கைப்பேசியில் பதியும் அவசரத்தில் இருக்க, வேகமாகத் தோழிகளை அங்கிருந்து இழுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்றாள்.

அவள் சொல்லி விட்டுச் சென்ற இலக்கத்தை தங்கள் மொபைலில் பதிந்தவர்கள் அதிர்ச்சியாக சத்யேந்திரனை நோக்க, “என்னடா?” என்றவனின் பார்வை செல்லும் அவள் மீதே தான். ‘திரும்பிப் பார்க்கிறாளா பார்’ சரியான அழுத்தம் என அவளைத் தான் மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான்.

இத்தனை நாட்களாக வரும் ராங் கால்ஸ்க்கு எல்லாம் காரணம் இப்பொழுது அல்லவா விளங்குகிறது. நம்பர் கேட்பவர்களிடம் எல்லாம் பொய்யாய் ஒரு பெயரையும் என்னுடைய நம்பரையும் தந்துவிட்டு வந்து விடுகிறாள். அந்த ஜொள்ளர்களும் எனக்கு போன் செய்து இம்சை செய்கிறார்கள். அதுவும் ஒன்றிரண்டு அரை லூசுகள் ராங் கால் என்று சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் திரும்பித் திரும்பி அழைத்து அவனை என்ன பாடு படுத்தியிருக்கிறார்கள். எல்லாம் இவளால்? என்ற கடுப்பில் அவன் இருக்க,

“டேய் மச்சான்… அவ ஏன் டா உன் நம்பர் சொல்லிட்டு போறா?” என்று ஆளாளுக்கு அவனைப் பிடித்து உலுக்கினார்கள்.

“அரை லூசுங்களா… சும்மா ஒரு பொண்ணு வந்து நோட்டீஸ் கொடுத்தா இப்டியாடா அவளை கார்னர் செய்வீங்க… உங்களை சமாளிக்க போயி பொய்யா ஒரு நம்பரை உளறிட்டு போறா… அது என் நம்பரா வந்து தொலைஞ்சு இருக்கு…”

“இல்லையே யோசிக்காம… பிசிரே இல்லாம சொன்னாளுகளே…”

“அதுக்கு என்னை என்ன பண்ண சொல்லற?” என எரிந்து விழுந்தான்.

“டேய்… உண்மையை சொல்லு அந்த பொண்ணு யாரு?”

“தெரியாது…” என்றவனின் முகத்தில் ரகசிய சிரிப்பு.

“டேய்… டேய்… வெண்ணிலாவா? அப்படின்னு நீ ஷாக் ரியாக்ஷன் கொடுத்தது எதுக்காக அவ உண்மையான பேரு உனக்குத் தெரியும் அதனால தான?” என அவனை மடக்கினார்கள்.

“டேய் தெரிஞ்ச பொண்ணா இருந்தா என்கிட்ட பேசி இருக்க மாட்டாளா?” என சத்யா சாதிக்க,

“ஹான் இது ஒரு நல்ல கேள்வி மச்சான். ஆனா, எங்க எல்லார்கிட்டயும் பேசினவ… குறிப்பா உன்கிட்ட மட்டும் பேசலை… உன்னை மட்டும் பார்க்கவே இல்லை… அப்படின்னா அதுக்கு என்ன அர்த்தம்?” என அவனை மொய்க்க,

“உங்க கிட்ட மாட்டிட்டு முழிக்கிறது போதாதுன்னு என்கூடவும் மாட்டிக்கிட்டு முழிக்கணுமான்னு பேசாம விட்டிருப்பா…” என்று சொன்னவன் முகத்தில் இப்பொழுது ரசனையான சிரிப்பு.

அவன் சொன்னதை யார் நம்பினார்களாம்? அவனை அடித்து, துரத்தி, மண்ணில் பிரட்டி என அவ்விடத்தையே கொஞ்ச நேரம் ரணகளம் செய்து கொண்டிருந்தனர்.

பூஜிதாவோ சத்யாவை சில ஆண்டுகள் கழித்துப் பார்க்க நேரிட்ட படபடப்பை அடக்க முடியாமல், அவனிடம் தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே என்ன செய்வது என்கிற தர்மசங்கடத்துடன் வேகமாக அங்கிருந்து சென்று கொண்டிருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் ஓர் இதம்!

அந்த இதம் அவள் வாழ்வில் தொடருமா? இல்லை வலி தொடருமா? காலம் தான் பதில் சொல்லும்.