காவியத் தலைவன் – 12

நாட்கள் கடக்க, ஆதீஸ்வரன் தான் எடுத்திருந்த சவாலான பொறுப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிய நிலையிலேயே இருந்தான். அவனுக்கு அதற்கான அழுத்தம் கூடிக்கொண்டே இருந்தது.

கொடுத்த பொறுப்பை கச்சிதமாக முடிப்பவன் என்ற பெயரைப் பெற்றிருந்ததாலேயே கட்சியின் தலைமையிலிருந்து இந்த பொறுப்பை அவனுக்கு நியமித்திருந்தனர். ஆதியும் பல்வேறு வழியில் அந்த குற்றச்சம்பவத்தைக் கண்டறிய முயல இன்னும் சரியான பிடி கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தான். எந்த வழியில் சென்றாலும் அணுக முடியாத பின்னணியாகப் பறந்து விரிந்து கிடக்கும் சட்டவிரோத செயலை நிரூபணம் செய்தாக வேண்டிய பெரும் பொறுப்பு அவனிடம்.

அவன் தன் வேலையின் அழுத்தத்தில் இருந்தபொழுது தான் அவன் திருமணம் தொடங்கி, தம்பியின் விபத்து வரை தொடர்ச்சியாக அவனை அலைக்கழிக்கத் தொடங்கியிருக்கிறது.

சத்யேந்திரன் உடலளவில் நன்கு தேறியிருந்தாலும் மனதளவில் பெரும் பாதிப்பில் இருக்கிறான் என்று மருத்துவர்கள் கூறினார்கள். கனிகாவைப் பற்றிய உண்மையை விளக்கி விட்டோம் இன்னும் என்ன எதிர்பார்க்கிறான் என ஆதியால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதுவும் சுத்தமாகத் தன்னை அவன் தவிப்பதற்கான காரணம் என்ன யோசித்தும் அவனுக்கு விளங்கவே இல்லை.

வேறு வழியில்லாமல் தென்னரசுவிடம் தான் தம்பியிடம் பேசும் பொறுப்பை தந்திருந்தான். இதற்காகக் கூட அவன் மனம் தாரகேஸ்வரியை நாடவில்லை. அவளும் அதை எதிர்பார்க்கும் நிலையில் எல்லாம் இல்லை. ஒரு மாதிரி மரத்துப் போன உணர்வுகளுடன் கணவன் என்பவன் அதே வீட்டில் தான் வசிக்கிறான் என்பதைக் கூட முற்றிலும் மறந்தவள் போல வாழ்ந்து வருகிறாள். முன்பு போல சீதாம்மாவிடமும் அதிகம் பேசுவதில்லை. அதிகம் தனிமையைத் தான் நாடினாள்.

நிறைய நிறைய யோசித்து எதிலும் மனம் தெளிவடையாமல் மேலும் மேலும் குழம்பிக் கொண்டே செல்வதால், ஒரு கட்டத்தில் தன்னை நினைத்தே கொஞ்சம் பயந்து தான் போனாள்.

அவள் வாழ்க்கையில் கணவன் என்கிற அத்தியாயம் தொடங்கியதே வெகு சில வாரங்களுக்கு முன்பிருந்து தான். அப்படியிருக்க அவன் தன்னை இத்தனை தூரம் பாதிப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கும் அவன் ஆருயிர் கணவன் என்றால் கூட பரவாயில்லை. அன்பு, அக்கறை என எதுவுமே இருவரும் பரிமாறிக் கொண்டது இல்லை. மற்றவர் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று சிறு செய்கை கூட இருவரிடத்திலும் இல்லை. திருமணம் முடிந்த பிறகும் இருவரும் அவரவர் வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்படியிருக்க அவன் ஒன்றை செய்கிறான் என்று இவள் பாதித்து மட்டும் என்ன பிரயோஜனம் என்று புரியவில்லை.

மனதை அடக்க, படிப்பில் கவனம் செலுத்தினாள். கணவன் மீதான எதிர்பார்ப்பு முற்றிலும் தொலைந்து போயிருந்தது. அவன் வருகிறானா தெரியாது. வீட்டில் இருக்கிறானா தெரியாது. சத்யாவின் உடல்நிலை தேறி விட்டதா தெரியாது. இந்துஜா தெரிந்து சொன்னாளோ தெரியாமல் சொன்னாளோ… ஆனால், தாரா தன்னை பெயரளவு மனைவியாகத் தான் இப்பொழுது உணர்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கும் அந்த உறவுக்குமான பிணைப்பு அழகாண்டாள் மட்டுமே! அவர் மட்டுமே தினமும் மறக்காமல் அவளிடம் அக்கறையாகப் பேசிடும் ஒரே ஜீவன். இப்பொழுதெல்லாம் இது எத்தனை நாட்களுக்கோ என்ற விரக்தி அவளுள் எழுவதை அவளால் தடுக்க முடிந்ததில்லை.

அதுவும் ஒருவகையில் உண்மை தான்! தாரா ஆதியின் மனைவி என்பதனால் பாசம் காட்டுபவருக்கு அவள் ஏழுமலையின் மகள் என்று தெரிந்த பின்னால் இந்த பாசம் எங்கனம் நிலைக்கும்? தன் மகனையும் மருமகளையும் கொன்று, தனது இரண்டு பேரப்பிள்ளைகளையும் பெற்றவர்கள் பாசமும் அரவணைப்பும் இல்லாமல் வளர காரணமானவன் மீது இருக்கும் எல்லையில்லா கோபமும் வெறுப்பும் நிச்சயம் அவன் மகளிடமும் பிரதிபலிக்கும். அந்த நாளுக்கும் நீண்ட தொலைவு இல்லை. ஏனென்றால் ஏழுமலையின் தண்டனைக் காலம் முடிய இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே மீதம் இருந்தன.

இது எதையும் அறியாமல், மனைவி ஒருத்தி இருக்கிறாளே என்ற எண்ணம் கூட இல்லாமல் தன் வேலை, தம்பியின் மருத்துவம் என்று அலைந்து கொண்டிருந்தான் ஆதீஸ்வரன்.

சத்யா தன்னை நெருங்க அனுமதிக்காததால் தென்னரசுவை அனுப்பி, ‘என்ன செய்தால் உன் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்?’ என விசாரித்துப் பார்த்தான். இளையவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

‘கனிகாவை பார்க்க வேண்டுமா? அவளிடம் ஏதாவது பேச வேண்டுமா? உன் கோபத்தை கொட்டித் தீர்க்க வேண்டுமா?’ என்று மீண்டும் கேட்டு விட்டான். சத்யா முகத்தைச் சுருக்கினானே தவிர அதற்கும் பதில் சொல்லவில்லை. அவனது கோபத்தை காட்டுவதற்காகக் கூட அவளைச் சந்திக்க அவனுக்கு மனமில்லை. அவளை நினைத்தாலே ஒரு மாதிரி அருவருத்து வந்தது.

மனம் பொறுக்காமல் தென்னரசுவே, “அண்ணனை ஏன் தவிர்க்கிறாய்?” என்று கேட்டுப்பார்க்க, எதுவும் பதில் சொல்லாமல் கண்ணை மூடிக்கொண்டான். மூடிய அவன் விழிகளிலிருந்து கண்ணீர் துளிகள் வழிந்தது.

தென்னரசுவிற்கு ஒன்றும் புரியவில்லை. அதிலும் அவன் முகத்தில் மண்டிக்கிடக்கும் வேதனை… அனாதரவான தோற்றம்… அவனை ரொம்பவும் அசைத்துப் பார்த்தது. ஆறுதலாக அவனது தோளைத் தட்டிக்கொடுத்து வந்தவனுக்கு, இளையவனுக்கு குற்றவுணர்வு போல என்ற எண்ணம் தான்.

நடந்ததை அப்படியே ஆதியிடம் வந்து சொல்ல, அவனுக்கும் பெரும் குழப்பம். தென்னரசுவை போல சத்யா குற்றவுணர்வில் தவிர்க்கிறான் என்று ஆதியால் எண்ண முடியவில்லை. வேறு என்னவோ என்று மனம் அடித்துச் சொன்னது. அவனாக அவன் மனதில் இருப்பதைச் சொல்லாமல் எதை ஊகிப்பது?

தம்பியின் உடலும் மனதும் தேறும் வரை அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் அவன் போக்கில் விட்டு விடலாம் என்று எண்ணியவனாய் ஆதீஸ்வரன் அதன்பிறகு அவனை அணுகவில்லை. அவனுக்கான சிகிச்சைகள் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.

உடலளவில் பூரண குணமடைந்து சத்யா மீண்டும் விடுதிக்குச் சென்றான். கல்லூரிக்கும் சென்று வந்து கொண்டிருந்தான். மனதளவில் முன்னேற்றம் வர வேண்டும் என்று தொடர்ந்து அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மனதில் புதைந்திருக்கும் உண்மையை மட்டும் சொல்ல மறுத்தான். மருத்துவர்கள் என்ன முயன்றும் அதன் பலன் பூஜ்ஜியமாகத் தான் இருந்து வருகிறது. உண்மையை வெளியில் சொல்லுமளவு தைரியம் அவனிடம் இல்லை. அதற்கு எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற பேரச்சம் அவனை ஆட்கொண்டது.

ஒரு நாள் அதிகாலை பொழுதில் சத்யா நண்பர்களுடன் பீச் சென்றிருந்தான். சும்மா சைட் சீயிங்… என்று தான் நண்பர்கள் எல்லாருமாகச் சேர்ந்து கிளம்பி இருந்தனர். அவர்கள் எல்லாம் அதிகாலை எழுந்து புறப்பட்டு வருவது உலக அதிசயமாகத் தான் இருந்தது.

வந்தவர்களுக்கு பெரும் உற்சாகம். அந்த அமைதியும், குளுமையும், கூட்டம் குறைவான… இரைச்சல் குறைவான இடமும் அப்படியொரு சந்தோசம். நெட்டை கட்டி வாலி பால் விளையாடத் தொடங்கி விட்டார்கள்.

“ம்ப்ச் போங்கடா…” என்று சொன்ன சத்யா அவர்களோடு இணையாமல் அலுப்புடன் கடற்கரை மணலில் படுத்துக் கொண்டு வலது கையை முகத்தின் மேல் மடித்து வைத்துப் படுத்துக் கொண்டான்.

“இவன் இங்க வந்து தூங்கறதுக்கு ரூமிலேயே தூங்கி இருக்க வேண்டியது தானே?” என்ற நண்பர்கள் தலையில் அடித்து விட்டு விளையாட்டைத் தொடர, அவர்கள் வீசிய பந்து வேகமாகப் பறந்து சென்று அங்கு வந்திருந்த பெண்ணை தாக்கி அவளை வீழ்த்தியிருந்தது.

“ஆ…” என்கிற அலறலுடன் கீழே விழுந்திருந்தவளின் கையிலிருந்த நோட்டீஸ் பேப்பர்கள் எல்லாம் பறக்க, “அச்சோ…” என்று பதறி அவளருகே ஓடியவர்கள், “சாரிங்க… சாரிங்க…” என சொல்லிக் கொண்டே ஒருவன் அவளுக்கு கை கொடுக்க, மற்றவர்கள் அந்த நோட்டீஸை வேகமாகப் பொறுக்கி எடுக்கத் தொடங்கினார்கள்.

அந்த நங்கையோ தன் மேல் ஒட்டியிருந்த மண் துகள்களைத் தட்டி விட்டபடியே, “இட்ஸ் ஓகே… நானும் கொஞ்சம் கவனமா வந்திருக்கணும்” என்று சொன்னவள், அவர்கள் சேகரித்து வைத்திருந்த நோட்டீஸ் பேப்பர்களை வாங்கினாள். சில கடல் நீரில் நனைந்து விட்டதாகச் சொன்னார்கள். அதைப் பார்த்துச் சலிப்புடன் பெரு மூச்சை வெளியிட்டவளைப் பார்த்து, மீண்டும், “சாரிங்க எல்லாம் எங்களால தான்…” என விளக்கம் சொன்னார்கள்.

“இவனுங்க வேற… கடலை போட ஆள் கிடைச்சிட்டா அங்கேயே டேரா போட்டுடுவானுங்க…” என புலம்பியபடி தன் கையை விளக்கி விட்டு நண்பர்கள் யாரிடம் இப்படி குழைந்து கொண்டிருக்கிறார்கள் என்று சத்யா பார்க்க, அதிர்ந்து எழுந்தமர்ந்து விட்டான். அவன் கண்கள் விரிந்திருந்தது. அங்கே பூஜிதா நின்றிருந்தாள். வீரராகவன் மாமாவின் இரண்டாம் புதல்வி.

அவனிடம் காதலைச் சொல்லியவள். உதடு பிதுக்கி அவளை நிராகரித்து விட்டு, அலட்சிய தோள் குலுக்களோடு கடந்து சென்றிருக்கிறான்.

அன்று சுருங்கி நின்றிருந்த அவளின் வதனம் அவனைத் துளியும் பாதித்ததில்லை. பள்ளிப்படிப்பின் இறுதியில் இருப்பவள் இது போல வந்து சொன்னதில் அவனுக்கு கடுங்கோபம் தான்… நன்கு திட்டியிருந்திருப்பான், கூட்டத்தில் எதற்கு வீணாக அவளின் பெயரைக் கெடுத்துக் கொண்டு என்று விலகி வந்து விட்டிருந்தான்.

அன்றைய நினைவுகள் அனைத்தும் அவனுள் உலா போக அவளையே அசையாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

இந்நேரம் அவள் இவனைக் கவனித்திருக்க வேண்டும். ஆனாலும் கண்டுகொள்ளவில்லை. கையிலிருந்த அறிக்கையைக் காட்டி அவன் நண்பர்களிடம் என்னவோ சொல்லிக்கொண்டு இருந்தாள்.

அழகான பெண்ணுடன் பேச சந்தர்ப்பம் அமைந்தால் அவர்களும் தவற விடுவார்களா என்ன? ஆர்வமாக அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

அவள் அழகி என்கிற உண்மையை ஒத்துக் கொள்ளத்தானே வேண்டும்!

உண்மையில் சத்யாவிற்கு ஆதி பூஜிதாவை மணக்கச் சொல்லிக் கேட்டபோது ஏனோ மறுக்கத் தோன்றவில்லை. அண்ணனிடம் மறுத்து பழக்கமில்லாதவன் என்பதால் அப்போதைக்கு முழு மனதாக இல்லை என்றாலும் சரி என்று தான் அண்ணனிடம் தலையாட்டி இருந்தான்.

கனிகா என்ற ஒருத்தி அவன் வாழ்வில் நுழைந்து குழப்பங்களை ஏற்படுத்திராவிட்டால் அவன் எண்ணத்தில் எந்த மாற்றமும் இருந்திருக்காது. அண்ணா சொன்னார் என்ற ஒரு காரணமே அவனது வாழ்வைத் தீர்மானிக்க போதுமானதாக இருந்திருக்கும்.

ஆனால், கனிகா அவன் வாழ்வில் நுழைந்த பொழுது தடுமாற்றம் எழுந்தது என்றால், பூஜிதா மீது பிடிப்பில்லை என்று தானே அர்த்தம். அப்படியானால் அவள் எப்படி எனக்கு பொருந்துவாள்? என்று எண்ணியபடி தான், பூஜிதா அவன் வாழ்வில் வேண்டாம் என்கிற முடிவை உறுதியாக எடுத்து விட்டு கனிகாவிடம் காதலில் விழுந்தான்.