காவியத் தலைவன் – 11

தாரகேஸ்வரிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. நிறைய சஞ்சலங்களும் வருத்தங்களும் மனதை வறுத்த, மிகுந்த சோர்வுடன் கணவனை நாடி சென்றாள்.

வழக்கம் போல அவன் அவனுக்கான பிரத்தியேக உள்ளறையில்!

இதுநாள் வரையிலும்  தாரா அந்த அறைக்குச் சென்றதோ, செல்ல வேண்டும் என்று எண்ணியதோ எதுவும் இல்லை. இன்று ஏனோ அவன் வெளியே வரும் வரை காத்திருக்கும் பொறுமை இல்லாதிருந்தது.

ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றிக் கொண்டாள். அவள் மனம் என்ன எதிர்பார்க்கிறது என்று அவளுக்கே தெரியவில்லை. தன்னிடம் ஏன் எதுவும் சொல்லவில்லை என்கிற ஆதங்கம்! அப்படி எதுவும் இருக்கக் கூடாது என்கிற பரிதவிப்பு! மொத்தத்தில் அவள் இயல்பாக இல்லை.

மெதுவாக அவனின் அறைக்கதவைத் தட்டினாள்.

‘ஒருவேளை இதுதான் தன் இடமோ? அவனை பார்ப்பதற்காகக் கூட அவனின் அனுமதியை எதிர்பார்த்து அவன் அறை வாசலில் நின்று கொண்டு…’ அவனிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காத சில நொடிகளில் கண்டதையும் எண்ணி குழப்பிக் கொண்டிருந்தாள்.

எந்த எதிர்வினையும் இல்லாததால் மீண்டும் கதவைத் தட்டுவதா இல்லை விட்டுவிடுவதா என புரியாமல் சில நொடிகள் தேங்கி நின்றவள், மீண்டுமொருமுறை பெருமூச்சை வெளியேற்றி விட்டு, கதவை தட்டுவதற்காகக் கையை உயர்த்தி விட்டு, தயங்கி நின்று விட்டாள். என்னென்னவோ எண்ணங்கள் அலைக்கழிக்கத் தலையை இடம் வலமாகத் தலையசைத்தவள் அயர்வுடன் திரும்ப அப்பொழுது படாரென்று கதவு திறக்கும் சத்தம்.

திரும்பி நடக்கப் போனவள் நின்று விட்டாள். மனம் படபடத்தது. எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள்.

ஆதீஸ்வரன் எதுவும் பேசாததால் அவளாகவே அவனை நோக்கி மெதுவாகத் திரும்பினாள். கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி கதவில் சாய்ந்து நின்றுகொண்டு இவளையே கூர்மையாகப் பார்த்தபடி நின்றிருந்தான்.

எதுவும் சொல்வானா என்பது போல அவனையே பார்த்திருந்தாள். சத்யாவின் விபத்து பற்றி இந்துஜா சொன்னது நிஜமா பொய்யா என்று அவளுக்குத் தெரிய வேண்டியிருந்தது.

ஆதியோ எதுவும் பேசாமல் அழுத்தமாக நின்றிருந்தான். அவளாக கேட்கவும் தயக்கமாக இருக்க, என்ன பேச என்று புரியாமல் சில நொடிகளைக் கடத்தினாள்.

அவள் மௌனம் தொடர, “என்ன விஷயம்?” என்று ஆதியே கேட்டிருந்தான். சிறு இளக்கம் கூட இல்லாதக் கடினமான குரல்.

ஆக, அவனாக சொல்லப்போவதில்லை! தாராவுக்கு உள்ளே என்னவோ உடைவது போல இருந்தது.

ஒருவேளை இந்துஜா சொன்னது பொய்யாக இருந்தால்… எண்ணமே கொஞ்சம் வலு சேர்க்க, தவிப்புடனும் பரபரப்புடனும், “இந்துஜான்னு ஒருத்தங்க போன் பண்ணியிருந்தாங்க. சத்யாவுக்கு விபத்துன்னு…” சொல்ல வந்ததை முழுதாக சொல்ல முடியாமல் மென்று விழுங்கியவள் அவன் முகத்தையே இதயம் படபடக்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், அவளின் கேள்விக்கு இப்படியொரு எதிர்வினை ஆதியிடமிருந்து வரக்கூடும் என்று தாரா சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டாள்.

ஆதி தன் முகத்தில் எரிச்சலை அப்பட்டமாகக் காட்டி, “ச்சே! இப்படியே இன்னும் எத்தனை பேருக்குத் தான் விஷயம் பரவுமோ?” என்று ஆதங்கத்தில் அவன் புலம்பியதை கேட்க, தான் மூன்றாவது மனுஷி என அதிகாரப்பூர்வமாகச் சொல்வதைப் போல உணர்ந்தவள், மனைவியாய் அவ்விடத்தில் தோற்று நின்றாள். தலை தன்போல கவிழ்ந்து விட்டது. இதழ்களைக் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டாள். மனதில் ஆழமான காயத்தை உண்டாக்கியது அவனது தடித்த வார்த்தைகள்.

மனம் அலைகடலென ஆர்ப்பரித்தது. அவளா இந்த திருமணம் வேண்டும் என்றாள். அவளை இந்த பந்தத்திற்குள் இழுத்து விட்டுவிட்டு, இந்த மாதிரி மரியாதை தந்தால் அதற்கென்ன அர்த்தம்? பதவியும் பணமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போல என கோபமாக வந்தது.

தோல்வியும் அவமானமும் தந்த கோபத்தில் அவள் முகமெல்லாம் சிவந்து விட்டது.

அவனை ஆத்திரத்துடன் ஏறிட்டுப் பார்த்து, “எனக்கு தெரிஞ்சிருக்கக் கூடாதுன்னு நினைக்கறீங்களா?” என ஆவேசமும் ஆதங்கமுமாகக் கேட்டாள்.

புருவம் சுருக்கி அவளைப் பார்த்தவனுக்குப் பயங்கர கோபம். ஏனோ அவளின் இந்த கோபமான தோற்றம், சிறு வயதில் அவனிடம் கோபமாக மல்லுக்கட்டி சண்டை வளர்த்தவளின் பிம்பத்தை நினைவு படுத்தியது. என்ன அன்று சத்யாவிற்காக இவள் சண்டையிட்டாள். இன்று அவனுக்காக இவன் அவளிடம் சண்டையிடுகிறான். அதுதான் வித்தியாசம்!

கோபம் குறையாமல், “ஏன் தெரிஞ்சு மட்டும் என்ன கிழிக்கப்போற?” என்று கண்டபடி வார்த்தைகளை விட்டான். உடலெங்கும் கட்டுடன் நினைவின்றி படுத்திருந்த தம்பி அவனை வெகுவாக அசைத்திருந்தான். அவனுக்கு ஒன்று என்றதும் மொத்தமாக நொறுங்கி விட்டான். ஆனால், அந்த கோபத்தை சம்பந்தமே இல்லாமல் மனைவியிடம் கொட்டினால் அவளின் நிலை?

அவளது கல்விக்கும் தகுதிக்கும் இது போன்ற அவமரியாதையான சொற்களை அவளிடம் பேச யாருமே யோசிப்பார்கள். அப்படியிருக்க, தாலி கட்டிய உரிமை கொண்டவன் என்ற ஒரே காரணத்திற்காக இவள் முன் அவன் என்னவும் பேசலாம் போல… கணவனின் செய்கையே தாராவிற்கு கசந்தது. முகத்தை அசூயையாகச் சுருக்கிக்கொண்டு நின்றாள்.

அவனுக்கு அந்த வார்த்தையின் வீரியம் புரியவில்லை போல… கோபம் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.

“சொல்லு… தெரிஞ்சு மட்டும்? அனுதாப படப்போறியா? உன் அனுதாபத்தால அவன் இப்படி படுத்திருக்கிறது இல்லைன்னு ஆயிடுமா?” என்று நிறுத்தி நிதானமாக அவன் கேட்க, என்ன பேசுகிறான் இவன் என அவனையே வெறித்தாள்.

“சொல்லுடி…” அவள் பார்வையைப் பொருட்படுத்தாமல் அவன் அதட்ட, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சத்யாவின் விபத்திற்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? இவன் என்மேல் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? அவளுக்கு வலியையும் மீறிய ஆயாசம்.

“உன் கண்ணு முழியை விரிக்கிறதைக் கொஞ்சம் நிறுத்து! என்னை எரிச்சல் படுத்தாம போ இங்கிருந்து…” என எரிந்து விழுந்தான்.

என்ன மாதிரியான வார்த்தைகள்! எவ்வளவு தூரம் மட்டம் தட்டி விட்டான். அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

“உங்களை எல்லாம் மதிச்சு பேச வந்ததுக்கு நல்ல மரியாதை…” பொதுவாகப் பொறுமையாகக் கடந்து போய்விடும் தாராவிற்கு கோபம் கட்டுக்குள் அடங்க மறுக்க, மொத்த வலிகளுக்கும் ஆதங்கத்திற்கும் வார்த்தைகளை இகழ்ந்த குரலில் கொட்டினாள்.

அவன் புசுபுசுவென்று மூச்சு விட இவள் முறைப்பதை நிறுத்தும் எண்ணத்தில் இல்லை.

“நீ மட்டும் என்ன செஞ்ச? உன்னைக்கூட தான் மதிச்சு அந்த கனிகா செஞ்ச போர்ஜரி வேலையை சத்யாகிட்ட சொல்ல சொன்னேன். நீ நான் பேச வந்தப்ப மதிச்சியாடி. அப்பறம் என்ன பெரிய இவ மாதிரி பேசற. நீ நான் சொன்னப்பவே அவளைப் பத்தி சத்யாகிட்ட சொல்லியிருந்தா அவனுக்குத் தேற நேரம் கிடைச்சிருக்கும். இப்ப பாரு ஏமாற்றம்,  அதைத் தாங்க முடியாத வலின்னு கடைசியில இப்படி படுத்திருக்கான். அவன் உயிர் பிழைச்சதே அதிசயம். ஆனா உனக்கெதுக்கு அதெல்லாம்… நீ உன்னோட தொழில் தர்மத்தை பாரு… எவளும் எந்த கேவலமான வேலை செஞ்சாலும் துணைக்கு நில்லு… ஆனா ஒன்னு மட்டும் சொல்லறேன் நியாபகம் வெச்சுக்கோ அவனுக்கு மட்டும் எதுவும் ஆகியிருந்தது உன்னை என்ன பண்ணியிருப்பேன்னு எனக்கே தெரியாது” என்ற ஆக்ரோஷமான பேச்சில் அவள் அதிர்ந்து நின்றாள்.

நான் பேசியிருந்தால் சத்யாவிற்கு இந்த நிலை வந்திருக்காதா என்ன? என்ற குன்றல் அவளிடம். ஆனால், அது எப்படி விபத்தை தடுத்திருக்கும் எனவும் புரிய மறுத்தது. கணவனின் தொடர் உதாசீனம் வேறு அவளுக்கு மிகுந்த அவமானத்தைத் தந்தது.

“சத்யாவுக்கு அடி பட்டதுல எனக்கும் கவலை தான். ஆனா அவன் விபத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஏன் என்கிட்ட இப்படி எல்லாம் பேசறீங்க…” என கணவனிடம் பதிலுக்கு கத்தினாள். “உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இருக்காதா? நிதானமா பேசவே தெரியாதா? இதுல பெரிய அரசியல் தலைவர் வேற…” என அவள் சீற,

“ச்சீ… போதும்… இப்ப நிறுத்த போறியா இல்லையா?” என அவன் கத்திய கத்தலில் இவள் வாயடைத்து நின்றாள்.

நெற்றியை அழுத்தித் தேய்த்து விட்டுக் கொண்டவன், “இங்க பாரு சத்யா நிதானமில்லாம இருந்ததுக்கும், இந்த விபத்து நடந்ததுக்கும் அவனோட காதல் தோல்வியும், அது தந்த வலியும் தான் காரணம். அந்த பொண்ணு தப்பானவன்னு தெரிஞ்சிருந்தா இந்தளவுக்கு பாதிப்பு வந்திருக்காது. அதை நிரூபிக்கத் தான் உன் உதவியை நாடி வந்தேன். ஆனா நீ எங்கே?” என்றவன் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு,

“இப்ப அவனோட நிலைமை ரொம்ப ரொம்ப மோசம். அவனை அப்படி என்னால பார்க்கவே முடியலை. அதுக்கு காரணமானவங்க மேல எல்லாம் கொலைவெறியில இருக்கேன். என்னை என் பாட்டுக்கு விட்டுடு. இப்ப வந்து நீ என்னை சீண்ட சீண்ட என் ஆத்திரம் மொத்தமும் உன் மேல தான் திரும்பும். சோ ப்ளீஸ் கெட் லாஸ்ட்… ஐ டோன்ட் வாண்ட் டு சீ யூ அன்ட்டில் ஐ ரிகவர்ட்…”

அதிகமான வார்த்தைகளை விட்டு விட்டது அவனுக்கும் உறுத்தியதோ என்னவோ… கொஞ்சம் இழுத்துப் பிடித்த நிதானத்துடன் தான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டான். அவளை மேலும் மேலும் காயப்படுத்துவது அவனுக்கும் வலித்துத் தொலைத்தது. அவளின் அதிர்ந்த தோற்றமும், கலங்கிச் சிவந்திருந்த கண்களும் அவனை வெகுவாக இம்சிக்கிறது.

ஆனால், அவனின் சொற்களினால் ஆழமாகக் காயப்பட்டவள் அவன் இப்பொழுது சொன்னதைக் கேட்டு இன்னும் துடித்துப் போனாள்.

ஏனென்றால் கணவன் இத்தனை வலியிலும் அவளிடம் ஆறுதலைத் தேட துளியும் நினைக்கவில்லை. மாறாக அவளைத் தள்ளி நிற்கச் சொல்கிறான். அப்படியென்றால் அவள் அவனுக்கு யார்? வெறும் பெயரளவு மனைவியா? அந்த நினைவே நெஞ்சை அறுத்தது. இந்த பந்தத்தின் பிணைப்பு இறுகவே இறுகாதா?

அவன் இத்தனை தூரம் மட்டம் தட்டியும், அவமானப் படுத்தியும் அவன் உன்னை மனைவியாக மதிக்கவில்லை என்று கவலை கொள்கிறாயே உனக்கு கொஞ்சமும் வெட்கமே இல்லையா என்று அவளின் மனசாட்சியே அவளை ஏசினாலும் அவளால் தன் எண்ணத்தின் போக்கைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவன் சொற்களிலும் செய்கையிலும் நிறையவே காயப்பட்டாள்.

மேற்கொண்டு என்ன பேசவும் அவளிடம் தெம்பு இல்லை. ஆக, இவனைப் பொறுத்த வரையிலும் இவனின் தம்பியின் நிலைக்குத் தான் தான் காரணம். சத்யாவின் நிதானமற்ற செய்கையோ, எதையும் எதிர்கொள்ளும் வலு இல்லாமல் இருக்கும் நிலையோ காரணம் இல்லை… நான் உண்மையைச் சொல்லாமல் விட்டது தான் இப்பொழுது பூதாகரமாகத் தெரிகிறது. நல்ல அண்ணனாக இருக்கிறவன், நல்ல கணவனாக இருக்க முயற்சி எடுக்காததை எண்ணி தாராவிற்கு உள்ளே கசந்து வழிந்தது.

தளர்ந்து போன நடையுடன் அதே அறையிலிருந்த பால்கனியில் சென்று நின்று கொண்டாள். மனம் வெறுத்துப் போயிருந்தது.

அவர்களின் வாழ்க்கைக்கோ, நேசத்திற்கோ பிள்ளையார் சுழி கூட போடாத நிலையில்… இருவரும் எதிர் எதிர் துருவங்களில், மனம் நிறைய வலிகளுடனும், வேதனையுடனும், ஆதங்கத்துடனும், கோபத்துடனும் இருந்தனர்.

இந்த விரிசல் எப்பொழுது சரியாகுமோ… இல்லை சரி செய்யும் வாய்ப்பு அமையும் முன்பே அந்த விரிசல் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறதோ தெரியவில்லை.

அதிகம் காக்க வைக்காமல் சத்யேந்திரன் மறுநாளே கண்விழித்து இருந்தான். அபாய கட்டத்தை முற்றிலும் தாண்டிவிட்டதாக மருத்துவர் சொன்னது ஆதீஸ்வரனுக்கு பெரும் ஆறுதல்.

தென்னரசுவுக்கு இட்ட கட்டளையின்படி கனிகா அவர்களின் முழு கண்காணிப்பில் தான் இருந்தாள். சத்யாவிற்கு முழு நினைவு வரட்டும், பிறகு அவள் விஷயத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆதி இப்போதைக்கு அவள் விஷயத்தை ஒத்திப் போட்டான்.

சத்யா பெரும்பாலும் மருந்தின் உதவியால் உறக்கத்தில் தான் இருந்தான். விழித்திருக்கும் நேரங்களிலும் யாரையும் பார்க்கவோ பேசவோ மறுத்தான். வெகுவாக இறுகி காணப்பட்டவனை யாராலும் நெருங்க முடியவில்லை.

சத்யா இருக்கும் மனநிலையில் வலுக்கட்டாயமாக அவனிடம் நெருங்கவும் ஆதீஸ்வரனுக்கு தயக்கமாக இருந்தது. மருத்துவர்களிடம் மட்டும் அவனைக் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டிருந்தான்.

மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் அவனுக்கு கவுன்சிலிங் தர தேவை இருக்கும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். வேறு என்ன வழி இருக்கிறது, பெருமூச்சுடன் ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி விட்டான்.

அவனாக கனிகாவைப் பற்றித் தெரிந்து கொண்டு அவளில் இருந்து வெளியே வரட்டும் என யோசித்த தன் மடத்தனத்தை ஆதி இப்பொழுது நொந்து கொண்டான். தென்னரசுவை அழைத்து அவனிடம் சில கட்டளைகளை இட, அவனும் அதற்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினான்.

ஆதியின் யோசனைப்படி, கனிகா செய்து கொண்டிருப்பவர்களை விடீயோ பதிவுகளாகப் பதிவு செய்து சத்யேந்திரன் இருக்கும் அறையில் ஒளிபரப்பு செய்தார்கள். தன்னுடைய காதலி இன்னொருவனின் காதலியாய் வளைய வரும் காட்சிகளை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவன், மனதளவில் மொத்தமாக நொறுங்கிப் போனான்.

அதுவும் கனிகா பிரதாபனின் மகள் என்பதற்கான புகைப்படங்கள் வரும்பொழுதுதான், அவன் ஏமாந்த காரணமே விளங்கியது. இப்படி என் மூலம் அண்ணனை நெருங்க அணுகியிருக்கிறாளே… அதைக் கூட புரிந்து கொள்ள முடியாதளவிற்கு முட்டாளாக இருந்திருக்கிறோமே என்று வெட்கினான்.

கனிகா அறிமுகமானதிலிருந்து அண்ணன் மீது தான் ஆர்வம் காட்டி வந்திருந்தாள் என்பது இப்பொழுது யோசிக்கையில் தெளிவாக விளங்கியது. அண்ணனை நெருங்கவே முடியாது என்று புரிந்திருப்பாள், அதனால் தான் அடுத்த பலியாடாக என்னை எண்ணியிருக்கிறாள். எப்படி அவளால் முடிந்தது? இந்த திட்டத்தை யோசித்துப் பார்க்கவே அத்தனை அருவருப்பாக இருக்க, இதையெப்படி அவள் எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் செயல்படுத்தினாள். இப்படியும் ஒருத்தியால் செய்ய முடியுமா என்ன?

ஆனால், இதற்காக அவள் தன்னையே என்னிடம் இழந்தாளே! அது எப்படி பொய்த்துப் போனது? தான் ஏமாந்ததின் அடிப்படைக் காரணம் அதுவல்லவா? அந்த நிகழ்வு நடந்திராவிட்டால் அவளை இவ்வளவு ஆழமாக காதலித்திருக்க மாட்டானே! அவள் வேண்டுமானால் பொய்யாகக் காதலித்திருக்கலாம். ஆனால், இவனின் நேசம் உண்மை ஆயிற்றே! அந்த நேசம் பொய்த்துப் போனதை ஏற்குமளவு மனது திடமாக இல்லை. அவனுள்ளே ஒவ்வொரு அணுவும் வலித்தது. கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. சிறு பிள்ளை போலத் தேம்பித் தேம்பி அழ வேண்டும் போல மனம் ஏங்கியது.

தன் ஏமாற்றத்தை நினைத்து, தன் நேசம் தனக்கு இனி இல்லை என்பதை நினைத்து, அண்ணனை நம்பாமல் போனோமோ என்பதை நினைத்து மனபாரம் தாங்க மாட்டாமல் அழுதான். துடைக்கக் துடைக்க கண்ணீர் பெருகியது. மனதின் பாரம் குறைய மறுத்தது. ஒரு கட்டத்தில் தலை அதிகம் வலிக்கவே தொடங்கியிருக்கத் தன்னை மறந்து உறங்கிப் போயிருந்தான்.

இப்பொழுது முழுக்க முழுக்க அண்ணனை மட்டும் குற்றம் சொல்லும் மனநிலை அவனிடம் சுத்தமாக இல்லை. அண்ணனின் மிரட்டலுக்கு அடிபணிந்து கனிகா விலகி விட்டாள் என்று வைத்துக் கொண்டாலும் இத்தனை எளிதாக இன்னொரு காதலில் விழ முடியுமா என்ன? அவன் மனம் காதல் விஷயத்தில் ஏமாந்து போய்விட்டோம் என்று புரிந்து கொண்டாலும் என்னவோ அதிலிருந்து அத்தனை எளிதாக மீண்டு வர முடியவில்லை.

இது போதாதென்று அவன் மனதில் வெகு ஆழத்தில் புதைந்து போன வலிகள் இப்பொழுது மேலெழுந்து வந்து அவனை அலைக்கழிக்கத் தொடங்கியிருந்தது.

தந்தையின் ஸ்தானத்திலிருந்து தன்னை தாங்கும் அண்ணனைச் சந்தேகித்தோமே என்று வெட்கினான். அவனை இழந்து விடுவோமோ என்றொரு பேரச்சம் அவனுள்! தேற்ற ஆளில்லை. தேறுமளவு மனதைரியமும் அவனிடம் இல்லை.

சத்யாவிற்கு கனிகா பற்றிய உண்மை விளங்கியிருக்கும் என்று புரிந்து அவனைக் காண ஆதி வந்தபொழுது, இளையவன் உறங்குவது போல நடித்தான்.

என்னவோ அண்ணனை எதிர்கொள்ள முடியாமல் தவித்தான். அவனை நேரில் காணும் திடம் சுத்தமாக இல்லை.

தம்பி உறங்கவில்லை என்று ஆதிக்குப் புரிந்தது. ஆனால், இன்னமும் அவன் தன்னை நிராகரிக்கும் காரணம் தான் புரியவில்லை. கடும் வலிகளைத் தாங்கிப் பழக்கம் கொண்டவனுக்குத் தம்பியின் ஒதுக்கம் அதிக மன வலியைத் தந்தது. இளையவனைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் அமைதியாக வெளியே வந்துவிட்டான்.

இதே வலியைத் தான் தன் மனையாளுக்குத் தந்து கொண்டிருக்கிறான் என்று இன்னும் ஆதீஸ்வரன் புரிந்துகொள்ளவில்லை! இவனது கோபத்தைத் தாங்கி ஒதுங்கி நின்றிருப்பவளின் ஒதுக்கம் கூட அவனுக்கு இருந்த மனநிலையில் புரிய மறுத்திருந்தது. ஒருவேளை தன் மனைவி தானே என்கிற அலட்சியம் கூட காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இவனை நம்பி மனைவி என்ற ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டவளுக்குத் தர வேண்டிய மரியாதையைத் தர மறந்திருந்தான். அதை ஆதி உணரும் காலம் எப்பொழுது?