ஆஸ்ரமத்தின் வெளியே இருந்த தோட்டத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். பன்னிரண்டு குழந்தைகள் உட்பட, அறுபதை கடந்த நான்கு பெரியவர்கள் வாந்தி மயக்கம் என்று மருத்துவனைக்கு சென்று வந்திருந்தனர். அவர்கள் ஓரளவு தெளிய கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆனது. இன்னமும் அவர்கள் பழைய நிலைக்கு மீண்டபாடில்லை. மருந்து மாத்திரை கொடுத்து ஓய்வெடுக்க சொல்லி அனுப்பியிருந்தனர்.
ஆஸ்ரம நிர்வாகியின் அருகே அமர்ந்திருந்த அண்ணா, “ஆஸ்பத்திரி ரிப்போர்ட் எல்லாம் பத்திரமா வையி சித்தப்பா, தேவைப்படும்” என்று சொல்ல, அவர் பதிலே சொல்லவில்லை.
“ஆமா ஆமா, நாளைபின்ன காட்டனும்ல!” என்று தாஸ் சொல்ல, அவரை குறுகுறுவென பார்த்தான் அண்ணாமலை. அவன் பார்வையில் நெளிந்தவர், “என்ன அண்ணா மாப்பிள்ளை தம்பி? வச்ச கண்ணு வாங்காம இந்த மாமனை பாக்குறீங்க?” என்று கேட்டிட, “இல்ல, கொஞ்ச நாளா நீரு மூணு வேளையும் இங்க தான் திங்குறதா கேள்விபட்டேனே?” என்று முடிக்காமல் இழுத்தான் அண்ணாமலை.
“ஆமா மாப்பிள்ளை தம்பி, சும்மாவே வீட்ல இருந்து என்ன செய்றதுன்னு நேரமே இங்க வந்துடுவேன்” என்று சிரித்தார் தாஸ்.
“ஓஹோ… அப்போ எப்படி அன்னைக்கு காலைல மட்டும் சரியா இங்க வந்து சாப்பிடாம எஸ்கேப் ஆனீங்க?” என்று புருவம் இடுக்கி வினவ, “அப்படி கேளு அண்ணா… இவருக்கு ஏதோ தெரிஞ்சுருக்கு, அதான் நைசா நழுவி நம்ம வீட்டுல சோறு தின்னுருக்காரு” என்று ஏத்தி விட்டான் சேகர்.
“எனக்கென்னமோ இந்த மாமன் மேல தான் சந்தேகம். முன்ன மாறி நிம்மதி கிட்ட காசு நவுட்ட முடியலன்னு கை செலவுக்காக இந்த வேலை பாத்துருக்குமோ?” என்று ஐயப்பன் சொல்ல, தாஸுக்கு அதிர்ச்சியில் நாக்கு அசையாமல் அந்தரத்தில் தொங்கியது.
“ச்ச… ச்ச… அப்படி எல்லாம் இருக்காது டா…” என்ற நந்தாவின் சொல்லில் தான் தாஸுக்கு அதிர்ச்சி அளவு சற்றே குறைந்தது.
“அப்டி எதுனா செஞ்சுருந்தா ஏன் ஞாயித்து கிழமை இங்க வந்து மூக்கு முட்ட தின்னுட்டு மறுநாள் வரை வயிறு சரி இல்லாம கடக்க போறாரு?” என்று நியாயம் பேச, “இது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான்” என்றான் ஐயப்பன் நாடக பாணியில்.
“நம்ம இத்தனை பேசுறோமே? நான் அப்படி இல்லப்பான்னு ஒரு வார்த்தை மறுத்து சொல்றாரா பாரேன்!?” சேகர் மீண்டும் ஏத்தி விட, அவசரமாய் வாய் திறக்க போன தாசை முந்தி, “அவர் எப்படி டா சொல்லுவாரு. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமா இல்லியா?” என்று மீண்டும் ஐயப்பன் சொல்ல,
“டேய்…டேய்…டேய்… மனசாட்சி இல்லாம இப்படி அடுக்கிக்கிட்டே போறீங்களேடா … இது நியாயமா? அடுக்குமா? போறது புள்ளப்பூச்சின்னு தெரிஞ்சுகூட எப்படி டா புலியை கண்ட மாறியே நடிக்குறீங்க?” என்று நாலு பக்கமும் இருந்த நால்வரையும் பார்த்து கையேந்தி பரிதாபமாய் அவர் கேட்க, அண்ணாமலை உதடை அழுந்த மூடி சிரிப்பை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“ஹான், புலியை கூட நம்பிறலாம் மாமா, புள்ளப்பூச்சியை தான் நம்பவே கூடாது” என்று சேகர் சொல்ல, “டேய், போன வாரம் உன்னை கேட்காம அந்த ஓட்டை சைக்கிளை ஓட்டிட்டு போயிட்டேன்னு தானே இப்போ என்னை வம்புக்கு இழுக்குற நீ!?” என்று முறைத்தார் தாஸ்.
“ஓட்டிட்டு போனதும் இல்லாம ஓட்டைன்னு வேற நொட்டை சொல்றியா நீ!?” சேகருக்கும் தாஸுக்கும் வாய்ப்போர் ஆரம்பமானது. அண்ணாமலை குறுக்கிடாமல் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தான். கடந்து சென்ற மூன்று நாள் பரபரப்பிற்கும் பதட்டத்திற்கும் இது சற்று இளைப்பாறுதலாய் இருந்தது.
உள்ளே இருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த நிம்மதியும் தேன்மொழியும் இவர்கள் போட்ட சத்தத்தில் வெளியே வந்துவிட்டனர். மகளை கண்டதும் வேகமாய் அவளிடம் சென்ற தாஸ், “யம்மா, பாரும்மா இந்த பயலுவள… சும்மா இருக்குற என்னை வில்லன் ரேஞ்சுக்கு பேசிக்கிட்டு இருக்கானுவ” என்று சொல்ல, “என்னவாம்?” என்றாள் நிம்மதி பொதுவாய் ஒரு பார்வை பார்த்து.
“இதப்பாரும்மா… முறைக்குறான் இவன்…” சின்னப்பிள்ளை போல மகளிடம் அவர் பிராது சொல்ல, “நான் கவனிச்சுக்குறேன்… நீங்க போய் கொஞ்சம் தூங்கி எழும்புங்கப்பா, போங்க” என்றாள் நிம்மதி.
‘சரிம்மா’ என உடனே கேட்டுக்கொண்டவர், தோளில் இருந்த துண்டை உதறி மீண்டும் மேலே போட்டுக்கொண்டு மிடுக்குடன் உள்ளே சென்றார்.
அண்ணாவின் அருகே இருந்த சேரில் அமர்ந்த நிம்மதி, “பரதன் இன்னுமா வரல?” என்றாள் வாசலை பார்த்தபடி.
“வந்துடுவான்!” என்ற அண்ணாவும் அவனுக்காக தான் காத்திருந்தான்.
“ஹாஸ்பிடல் ரிபோர்ட்ஸ் எல்லாம் ரெண்டு மூணு காப்பி செராக்ஸ் எடுத்து வச்சுக்கணும்” நிம்மதி சொல்ல, “சித்தப்பா கிட்ட நானும் அதான் சொன்னேன்!” என்ற அண்ணா, “என்ன சித்தப்பா?” என்று அருகே இருந்தவரிடம் கேட்க, அவர் பதில் சொல்லவே இல்லை. அவர் முகத்தை பார்த்தபடி எல்லோரும் இருக்க, “உங்கிட்ட தான் பேசுறேன் சித்தப்பா?” என்ற அண்ணா அவர் தோளில் கையை போட, “எடுறா கைய” என தட்டிவிட்டார் அவர்.
அவரை ‘என்ன?’ என்பது போல எல்லோரும் பார்க்க, “எதுக்கு இப்ப சிலுத்துக்குற நீ?” என்றான் அண்ணா. அப்போதுமே அவர் பேசாமல் இருக்க, “என்ன அண்ணே கோவம் உங்களுக்கு?” என்றாள் நிம்மதி அவரிடம்.
அவள் கேட்டதும் நிமிர்ந்து அண்ணாவை முறைத்தவர், “யார் இவன்?” என்றார் அண்ணாவை காட்டி.
“இவனா வருவான், பேசுவான், சிரிப்பான், ஒருநாள் முறைச்சுக்கிட்டு மாசக்கணக்கா பேசாம போவான். மறுபடி அவனே வந்து ஒன்னும் நடக்காத மாறி பேசுவான். நானும் சரின்னு சொரனக்கெட்டு பேசிடனுமா?” என்று நிம்மதியிடம் பார்வை வைத்து கேட்டிட, “இப்ப என்ன பண்ணனும் நான் இவருக்கு?” என்று நிம்மதியிடமே கேட்டான் அண்ணாமலை.
இவன் மலையிறங்கி வந்ததே போதும் என இருக்க, இவர் இப்போது தான் இதை பேச வேண்டுமா? என்று எல்லோருக்குமே தோன்றியது.
“அண்ணே, விடுங்களேன்” அவள் நயமாய் சொல்ல, “எதுக்கு விடனும் மதி? எல்லாரும் இவனை தாங்கப்போய் தான் இவன் தலை மேல ஏறி உக்காந்துருக்கான். கோச்சுட்டு போக மட்டும் உரிமை இருக்கவனுக்கு, தழைஞ்சு வந்து மன்னிப்பு கேட்க கிரீடம் இடிக்குதோ?” என்று திட்ட ஆரம்பித்தார்.
அண்ணாமலை கண்டுக்கொள்ளவே இல்லை. அவன் அசட்டையாய் இருந்தான். நிம்மதி தவிர யாருமே பேசக்கூட முயலவில்லை. ஏதாவது பேசப்போய் அண்ணாவின் கோபத்தை சம்பாதிக்க அவர்களுக்கு விருப்பமில்லை.
சற்று நேரம் அமைதியாய் இருக்க, பரதனின் சைக்கிள் அங்கே வந்து சேர்ந்தது. சட்டைக்குள் வைத்திருந்த காகிதத்தை எடுத்துகொண்டு நிம்மதியிடம் விரைந்தான் அவன். அவனை கண்டதும், “இவன் உன்கிட்ட பேசிட்டானா டா?” என்று அண்ணாவை காட்டி கேட்டார் சித்தப்பா.
அவனோ முகமெல்லாம் விகாசிக்க, “ஹான்… பேசிட்டான்” என்று சந்தோசமாய் சொல்ல, “கோச்சுக்கிட்டு பேசாம இருந்ததுக்கு காரணமோ வருத்தமோ எதாவது சொன்னானா?” என்று அடுத்து கேட்க, அவனோ, “அது எதுக்கு?” என்றுவிட்டான்.
“அதான் டா… இப்படியே விட்டு விட்டு தான் அவனை நாசமாக்கிட்டீங்கடா” என்று தலையில் அடித்துக்கொண்டார் அவர். நிம்மதி அவன் கொடுத்த காகிதத்தை அவசரமாய் பிரித்து படித்தாள். படிக்க படிக்க அவள் முகம் மாறியது.
“கறி நாள்பட்டதுன்னு ரிப்போர்ட் வந்துருச்சு” என்று அவள் சொன்னதும், “நான் சொன்னேன்ல? கறியை பார்த்தாலே தெரியாதா எனக்கு? நீ தான் ஆதாரம் இல்லாம பேசக்கூடாதுன்னு என்னை அடக்கி வச்ச?!” என்று கத்தினான் அண்ணாமலை.
“சும்மா குத்துமதிப்பா பேச முடியாதுய்யா. நம்ம பேச்சை காதுல கூட வாங்க மாட்டாங்க! அன்னைக்கு போய் பேசுனியே என்ன ஆச்சு?” என்று திரும்பி கேட்டாள் நிம்மதி.
அண்ணா கொஞ்சம் அமைதியானான். அவனும் அன்றே குதித்தானே. நிம்மதி சொல்ல சொல்ல கேட்க்காமல் நேரே கிளம்பி ‘டேஸ்ட் பட்ஸ்’ கடைக்கு சென்றிருந்தான். அவன் இருந்த கோவத்தில் யார் இருக்கிறார் இல்லை என்றுக்கூட பார்க்காமல் உள்ளே நுழையும்போதிருந்தே கத்த ஆரம்பித்திருந்தான்.
அவன் போட்ட சத்தத்தில் அங்கே நேரே வந்து கறி வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் சற்று அரண்டுப்போயினர்.
நேரே கறிவெட்டும் இடத்திற்கு சென்றவன், கறியை பார்த்தான். மிகவும் மோசமில்லாத கறி தான் என்றதும், “ஆஸ்ரமம் தானேன்னு இருந்த பழசு பட்ட அனுப்பி காசு பாத்துட்டீங்களோ? எவன் கேட்ப்பாங்குற தைரியம் தானே உங்களுக்கு? எங்க உன் மேனேஜர்? வர சொல்லு அவனை” என்று மேஜையில் தட்டினான். அவன் கோவத்தையும் வேகத்தையும் பார்த்து வேலையாட்கள் செயலற்று தான் நின்றனர்.
“அவர் இல்ல சார், வெளில போயிருக்காரு” ஒருவன் சொல்ல, “ஓ… அங்க பலபேர் சுயநினைவு இல்லாம கடக்குறாங்க. இவன் ஜாலியா ஊர் சுத்துறானா?” என்றவன், “அன்னைக்கே சொன்னேன் அவன்கிட்ட, இங்க எதுவும் சரி இல்ல கவனின்னு. இப்போ தான் தெரியுது, எல்லாமே அவன் கவனத்துல தான் நடக்குதுன்னு” என்றான்.
“சார், பிசினஸ் நடக்குற இடத்துல வந்து தேவை இல்லாம சத்தம் போடாதீங்க. எதுவா இருந்தா மேனேஜர் வந்ததும் பேசிக்கோங்க. இப்போ கிளம்புங்க” ஒருவன் சொல்ல, “பிஸினசே பண்ணக்கூடாதுன்னு தான் டா பேசிக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னவன் சட்டென மக்கள் புறம் திரும்பி, “இவனுங்க வித்த பழைய கறியை சாப்பிட்டு அங்கே பலபேர் ஆஸ்பத்திரில கடக்குறாங்க. தயவுசெஞ்சு ஆடம்பர அழகையும், ஆஃபர் ரேட்டையும் பார்த்து நம்பி ஏமாறாதீங்க” என்று சொல்லிவிட, யாருக்காய் இருந்தாலும் சிறு பயம் வர தானே செய்யும். வாங்க வந்திருந்த ஆட்கள் பின்வாங்கினர். அவர்கள் தயங்குவதை பார்த்ததும் வேலையாட்கள் சுதாரித்தனர். கடையின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உண்டானால் வியாபாரம் படுத்துவிடுமே? பிறகு அவர்களுக்கு அங்கென்ன வேலை இருக்கும்!?
“இங்கப்பாருங்க சார், எங்க கடைல எந்த தவறும் இல்ல. இந்த மாறி வந்து கத்துறதால எங்க வியாபாரத்தை கெடுத்துடலாம்ன்னு யார்க்கிட்டயாவது காசு வாங்கிட்டு வந்து அசிங்கமா பண்ணாதீங்க!” தூரமாய் நின்ற ஒருவன் தைரியமாய் குரல் கொடுத்தான்.
“காசு வாங்கிட்டு பேசுறேனா?” பல்லிடுக்கில் கேட்டவன், அங்கிருந்த பிளாஸ்டிக் சேரை ஓங்கி அடிக்க, அது மிக மோசமாய் நொறுங்கிப்போனது.
“தப்பை உங்க பக்கம் வச்சுக்கிட்டு எப்படி டா உங்களால பேச முடியுது?” என்றவன் கோவத்தில் அந்த கண்ணாடி தடுப்புகளை உடைக்க பொருள் தேட, “டேய், போலீஸ்க்கு கூப்புடுடா” என்றிருந்தான் ஒருவன். அதைக்கேட்டதும் அவன் கோவம் இன்னும் கூடியது. பல்லிடுக்கில் மோசமாய் திட்டியவன், செய்தித்தாள் வைத்திருந்த டீப்பையை தூக்கி வீச எத்தனிக்க, வேகமாய் வந்து அவனை பிடித்துகொண்டான் பரதன்.
“விடுறா என்னை!” திமிறிய அண்ணாவை பிடிக்கவே பெரும்பாடாய் இருந்தது. அண்ணா கிளம்பி சென்ற சற்று நேரத்தில் தான் நிம்மதிக்கு அவன் போனதே உரைக்க, பரதனை இழுத்துக்கொண்டு பதைபதைப்புடன் அவள் வர, அவள் நினைத்ததை போல துள்ளிக்கொண்டிருந்தான் அவன்.
ஒருவன் போலீசுக்கு அழைப்பு விடுக்க, “கூப்புடுறா… போலீஸ் கிட்ட நான் பேசுறேன். இன்னையோட இந்த கடையை இழுத்து மூடுறேனா இல்லையான்னு பாரு… வியாபாரமாடா பண்றீங்க?” என்று திமிர, “நம்ம போய்டலாம் மாமா, வா” என அவனை இழுத்தாள் நிம்மதி.
“நம்ம ஏண்டி போனும்? தப்பு எல்லாம் அவனுங்க மேல” அண்ணா குதிக்க, “சொன்னா கேளு வா” என்றவள், “நாங்க போயிடுறோம் விடுங்க” என்றாள் அவர்களிடம்.
அவள் பேச்சில் இன்னும் குதித்தவனை சரிக்கட்டி வெளியே இழுத்து வரவே போதும் போதும் என்றானது. முறையான ஆதாரம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று பேசி பேசி அவனை அமைதிப்படுத்தியவள், திருச்சியில் இருக்கும் தன் நண்பனின் உதவியோடு ‘உணவு தரபரிசோதனை அறிக்கைக்கு’க்கு அன்று சமைத்த உணவுகளை அனுப்பினாள்.
அறிக்கையை கொரியரில் அவன் அனுப்பிவைக்க, கொரியர் ஆபீஸுக்கே சென்று வாங்கி வந்திருந்தான் பரதன்.
இப்போது முடிவுகள் வந்த பிறகு கையில் இருக்கும் ஆதாரத்தோடு யோசனையாய் அமர்ந்திருந்தவளை, ‘அடுத்து என்ன?’ என்று உலுக்கினான் அண்ணாமலை.
யோசனை கலைந்தவள், “FSSAI ஆபிஸ்” என்று சொல்ல, “அப்படின்னா?” என்றான் பரதன். அதே கேள்வி தான் அங்கிருந்த அனைவர் முகத்திலும். மெலிதாய் சிரித்தவள், திருவாரூரில் இருந்த உணவு தர கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அன்று மதியமே சென்றிருந்தாள். உடன் அண்ணாமலை மற்றும் ஆஸ்ரம நிர்வாகி சித்தப்பா.
‘டேஸ்ட் பட்ஸ்’ ஆப்’பில் கறி ஆர்டர் செய்து வாங்கியதில் இருந்து அந்த கறி பழையது என்பதுக்காக ரசீது முதல், அதற்கொண்டு சீர்க்கெட்ட உடல்நிலை ரிபோர்ட்டை சேர்த்து ஒரு புகார் எழுதிக்கொடுத்தாள்.
அதற்கொண்டு அடுத்த இரண்டு நாளில் ‘டேஸ்ட் பட்ஸ்’ கடையில் திடீர் ரெய்டு நடந்தது. ஆனால், ரெய்டின் முடிவு அவர்களுக்கு எதிர்ப்பதமாய் அமைந்தது தான் அவர்களுக்கு அதிர்ச்சியானது. நாள்பட்ட மாமிசம் என்று அங்கே எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்பதோடு சுத்தமான முறையில் வியாபாரம் நடைபெறுவதாக அறிக்கை முடிவு வந்தது.
***
“அன்னைக்கு என் கடைக்கு வந்து நீ சவுன்ட் உட்டன்னு தெரிஞ்சதுமே உன் மூஞ்ச பேக்குறேன்னு தான் கிளம்புனேன். கூட்டாளிங்க தான் விசயத்தை பெருசுப்படுத்தாத, வியாபாரத்துக்கு கெடுதின்னு நிறுத்தி வச்சானுவோ. என்னவோ பெரிய லாடு மாறி போய் கம்ப்ளைன்ட் குடுத்த, என்ன ஆச்சு? நக்கினு போச்சா?” பிஸ்கட் கம்பெனி வாசலில் நின்று திமிரும் எகத்தாளமுமாக தன் வண்டியில் அமர்ந்த வாக்கில் பேசிக்கொண்டிருந்தான் வீரப்பன்.
திண்ணையில் அமர்ந்திருந்த அண்ணாமலை ஒன்றுமே பேசவில்லை. மண்ணில் வரிசைக்கட்டி போகும் எறும்பு கூட்டம் ஒன்றை தான் இமைக்காமல் பார்த்திருந்தான்.
“எங்கே எல்லாரும் ஆன்லைனுக்கு மாறிட்டா உன் வியாபாரம் தலைதூக்க முடியாதோன்னு பயந்து என்னென்னவோ பண்ற போல? வீணா அசிங்கப்படாத. மிச்சம் மீதி இருக்க ஆட்டையும் எங்ககிட்டயே போனி பண்ணிடு, கூட நூறோ அம்பதோ நான் போட்டு தர சொல்றேன், என்ன?” என்றவன், “இன்னொருக்கா வந்து பிரச்சனை செஞ்சு அசிங்கப்படாத! அடுத்தமுறை உன்மேல கையை வைக்க நான் கொஞ்சமும் யோசிக்க மாட்டேன்” என்று வீரப்பன் சொன்ன கணம், அண்ணாமலை சரக்கென அவனை நிமிர்ந்துப்பார்க்க, அவன் திடீர் பார்வையில் வண்டியோடு ஒரு கணம் தடுமாறினான் வீரப்பன்.
இதயம் சற்று வேகமாய் துடித்தது. ஆனாலும் முறைப்புடன், “தெப்பகுளம் பக்கத்துல டெலிவரி ஒன்னு இருக்கு. குடுக்க தான் போய்க்கிட்டு இருக்கேன், வரட்டா?” என்றவன் வேகமாய் சென்றுவிட்டான்.
அவன் போனதும் அண்ணாவின் அருகே வந்து அமர்ந்தாள் மதி.
“ரொம்ப பேசுறான்” அவள் முகம் சுளிக்க, “இதை சும்மா விட கூடாது மதி” என்றான் அண்ணா.
“ப்ச் யோவ், அவன் கடக்குறான் லூசுப்பய” அவள் சொல்ல, “அவனை இல்ல. இந்த பிரச்சனையை” என்றவன் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவோடு பார்த்தான் அவளை.
“என்ன பண்றது?” அவள் கேட்க, “தெரியல, ஆனா பண்ணனும். இப்படியே விட்டுட்டா அவனுங்களுக்கு குளிர்விட்டுடும். அவனுங்க பண்ற விஞ்யான வியாபாரம் எனக்கு பிரச்சனை இல்ல, தரமான பொருளை விக்கணும். அதான் முக்கியம்.
ஒன்னு அவன் மாறனும்… இல்லன்னா கடையை மூடனும்! அவ்ளோதான்” என்றான் முடிவாக.
அவன் பேச்சை உள்வாங்கியவள், “ஹ்ம்ம்… செஞ்சுடலாம்” என்று எழுந்துக்கொள்ள, சட்டென தடுக்கியது. அவள் தடுமாறும்போதே “ஏய்” என்று பிடித்துவிட்டான் அவளை.
“புடவை தடுக்கிடுச்சு” அவள் சொல்ல, இன்னமும் அவள் கரத்தை அவன் விடவில்லை.
“பாத்துடி… இருக்கு, இல்லன்னு வேற என்னவோ சொல்லிட்டு இருக்க” என்றவன் பார்வை சட்டென மாறிப்போனது. முறைப்பதை போல நடித்தவள், “இல்லாம எங்க போகும்?” என்றாள்.
“ஓ… அப்ப எல்லாம் சரியா போயிடுச்சா?” அவன் கேட்க, “வாய மூடுய்யா” என்றவள் வேகமாய் சுற்றிலும் பார்த்தாள்.
சிரித்தவனோ, “எங்கயாது கூட்டிட்டு போகணும்ன்னா சொல்லு” என்று சொல்ல, “போனும் தான்… இப்ப வேணாம்… இன்னும் பத்து நாள் போகட்டும்” என்றாள்.
“அதுவரைக்கும் என்ன பண்றது?” அவன் கேட்க, “இந்த வாரம் என்ன பண்ணீங்க?” என்றாள்.
சிரித்துக்கொண்டே, “ஒன்னும் பண்ணல” என்று சொல்ல, “அதே தான் இனியும்” என்றாள் அவள்.
“ஒரு வாரம் டென்ஷன்ல தான் ஒன்னும் பண்ணல. இப்ப டென்ஷன் கொஞ்சம் கம்மியாகிடுச்சு”
அவன் கையில் இருந்து நழுவி நகர்ந்தவள், “பத்திரமா இருக்கணும்ன்னா உன் பக்கத்துல வராம இருக்கணும்” என்று சொல்ல, “அப்படி ஒன்னும் நீங்க பத்திரமா இருக்கனும்ன்னு அவசியம் இல்ல” என்று கொஞ்சமாய் முறைத்தான் அவன்.
அவனையே கண்ணெடுக்காமல் பார்த்தவள், “ஏன்யா? புள்ளை பெத்த பிறகாவது உனக்கு என்னை பிடிக்கும்ன்னு சொல்லுவியா?” என்று கேட்டாள். எப்போதும் கேட்பது போல இல்லாது, இம்முறை அவள் முகத்தில் ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது. அதையெல்லாம் அவன் எங்கே கண்டுக்கொண்டான்!?
ஒன்றும் சொல்லாமல் அவன் முகத்தையே பார்த்திருந்தவள், மௌனமாய் அங்கிருந்து உள்ளே சென்றாள்.
‘ஆம்பளை கண்ண பார்த்தா தெரியாது? பிடிக்குதா இல்லையான்னு… இதை ஒரு கேள்வியா கேட்டுன்னே இருக்கா, கிறுக்கி’ வாய்விட்டே சொன்னவன், அவளை மறந்து தன் கடையை மீண்டும் திறக்கும் வேலைகளில் இறங்கினான்.