“டேய் சேகரு, பின்னால கடலை போருக்கிட்ட இவளை கட்டிப்போடு! நான் கோழிய சுத்தம் பண்றேன்” என்ற அண்ணா மாட்டை அவனிடம் விட்டு, கிணற்றடியில் அமர்ந்து கோழியின் ரோமங்களை பொசுக்கிக்கொண்டிருந்த நந்தாவிடம் சென்றான்.

இரவு கடைக்காக இப்போதே கோழியை சுத்தம் செய்து துண்டாக்கி வேண்டிய மசாலாக்களை போட்டு ஊற வைத்துவிட்டால் தான், ஆறு மணிக்கு மேல் வரும் கூட்டத்திற்கு ருசியாக செய்துக்கொடுக்க முடியும். நந்தா தனியாளாக எல்லாம் செய்துக்கொண்டிருக்க, அண்ணாமலை உதவ ஆரம்பித்ததும், வேலை இன்னும் வேகமாய் ஆனது.

“ஐயப்பன் எப்போ வருவான்?” அண்ணா கேட்க, “வந்துடுவான், இலை அறுக்க எந்நேரம் ஆவப்போது!?” என்றான் நந்தா அசட்டையாய்.

ஒரு பெரிய தட்டில் சில டம்பளர்களை அடுக்கிக்கொண்டு அங்கே சிறுது தயக்கத்துடன் வந்தாள் தேன்மொழி.

அவள் அரவம் உணர்ந்து, “என்னம்மா?” என்றான் திரும்பாமல்.

“டீ கொண்டு வந்தேன்” என்றதும், திரும்பி பார்த்தவன், கையை கழுவிக்கொண்டு ஒரு டம்ப்ளரை எடுத்துக்கொண்டான். அடுத்து நந்தாவும் எடுத்துக்கொள்ள, பின்னிருந்து வந்த சேகரும், “நன்றி ம்மா” என்று எடுத்துக்கொண்டான்.

மீதம் இரண்டு டம்பளர்கள் இருக்க, “மாமோய்…” என கத்தினான் அண்ணா. அவன் சத்தத்தில், வேகமாய் வீட்டுக்குள் இருந்து, “தம்பி, அண்ணா… மாப்…பி…மாப்பிளை” என்று வந்து நின்றார் தாஸ்.

கொஞ்சமே கொஞ்சம் முறைத்தவன், “டீ எடுங்க” என்று சொல்ல, “சந்தோஷம் அண்ணா தம்பி”என்றவர் ஒன்றை எடுத்துக்கொண்டு திண்ணையில் சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்டார். அவரை காணும்போதெல்லாம் அண்ணா ஏதேனும் குதர்க்கமாய் பேச, முறைக்க என்று இருப்பதால், அவன் இங்கே வந்தது தொடக்கம், இவர் வீட்டிற்குள்ளேயே அடைக்காத்துகொண்டிருந்தார். அவனே அழைத்து பேசவும் அப்படி ஒரு நிம்மதி அவருக்கு.

இன்னும் ஒன்று இருக்க, தேன்மொழியின் கண்கள் அவர்கள் குடிசை பக்கம் போனது.  இதுநாள் வரை இப்படி எல்லாம் ஒரு சூழ்நிலை அமைந்ததே இல்லையே. டீ போட்டாலும் கொண்டு வந்து ஒருவரிடம் நீட்டினால், அவர்களே மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு, குடித்து, அதை கழுவிக்கொண்டு வந்து அடுப்படியில் வைத்துவிட்டு சென்றுவிடுவர்.

இப்போது அவரிடம் சென்று நானே குடுக்க வேண்டுமா? என்று அவள் தயங்கி நிற்க, “ஏன்டா குறுக்க எதுனா உலக்கை கிலக்கை கடக்கா? வயசுக்கு வந்த புள்ள மாறி குச்சுக்குள்ளையே குடுத்தனம் இருக்க?”   என்று சத்தம் போட்ட அண்ணா, “வந்து டீ எடு பரதா” என்று இன்னும் சத்தமாய் அதட்ட, அவன் குரலை கேட்டு வேகமாய் வெளியே வந்து, கண நேரத்தில் அந்த டீயை மொத்தமாய் வாயில் கவிழ்த்திருந்தான் பரதன்.

நந்தா இன்னமும் ஊதி ஊதி உறிஞ்சிக்கொண்டிருக்க, பரதன் குடித்த வேகம் கண்டு, ‘அடப்பாவி’ என வாயை பிளந்தான்.

பரதன் கண்கள் தனக்கு முதுகுக்காட்டி அமர்ந்து கோழியை வெட்டிக்கொண்டிருந்த அண்ணாவை மட்டும் தான் பார்த்தது தவிப்புடன்.

கைகள் அப்படியே வேலையை நிறுத்த, “அடுத்து வேலை செய்ன்னு சொன்னா தான் செய்வியோ?” என்று அண்ணா பக்கவாட்டாய் திரும்பி கேள்வி கேட்டதும், டீச்சரிடம் பயந்துக்கொண்டு சொன்ன வேலையை செய்யும் மாணவன் போல அவசர குளியல் போட்டுவிட்டு என்ன வேலை செய்வதென தெரியாமல் இங்கிருப்பதை அங்கு வைப்பதும், அங்கிருப்பதை இங்கு வைப்பதும், நடுநடுவே அண்ணாவை ஓரக்கண்ணால் நோட்டம் விடுவதும் என தடுமாறிக்கொண்டிருந்தான் பரதன்.

தேன்மொழிக்கு அவனை இப்படி பார்க்க சிரிப்பாக இருந்தது.

கோழிக்கு மசாலா தடவி தனி தனி பாத்திரங்களில் எடுத்து ஒதுக்கி வைத்தவர்கள், அடுத்து வெங்காயம் வெட்ட அமர்ந்துவிட, “சாப்பாடு செஞ்சுட்டேன், நேரமாச்சு” என்றிருந்தாள் தேன்மொழி.

உடனே எழுந்துக்கொண்ட ஐயப்பன், “சாப்பிட்டு செய்யலாம் டா, பசிக்குது” என்று பாவமாய் சொல்ல, சின்ன சிரிப்போடு தலையை உலுக்கிய அண்ணா, அப்படியே நகர்ந்து திரும்ப, எல்லோரும் வட்டமடித்து அமர்ந்ததும் உணவை கொண்டு வந்து அடுக்கினாள் தேன்மொழி.

உலகிலேயே புளிக்குழம்புக்கு எச்சில் சுரக்கும் ஆண்மக்கள் கூட்டம் அவர்களாக தான் இருக்க முடியும். கறிசோறும், பழைய குழம்பும்  தின்று தின்று மரத்துப்போயிருந்த நாக்குக்கு, சில நாட்களாய் ருசியாய் கிடைக்கும் தேன்மொழி சமையல் மீது அதீத நாட்டம்.

அண்ணாமலைக்கு பெரிதாய் நாட்டம் வரவில்லை. நிம்மதியின் சமையலில் ஒரு சுற்று பெருத்தவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாய் படவில்லை.  காலையில் எழுந்ததும் ஆசிரமத்திற்கு சென்று அங்கேயே மூன்று வேளை உணவையும் முடித்துக்கொண்டு உறங்க மட்டும் வீட்டுக்கு வரும் ‘தாஸ்’ கூட, மருமகன் வந்ததால், அன்று அங்கேயே உண்ண அமர, அவருக்கும் தட்டு வைத்தாள்.

தாஸோ, “வயிறு கொஞ்சம் சரியில்ல… ரசம் இருந்தா போடு ம்மா” என்றவர்,

“உன் புருஷன் வெளில நிக்குறான் பாரு… போய் கூப்பிடு” என்று சொல்லிவிட்டு உண்ண ஆரம்பித்து விட்டார்.

அவள் அண்ணாமலையை பார்க்க அவன் நிமிரவே இல்லை. சில நொடிகள் இருந்தவள், பின் எழுந்து சென்று “சாப்பிட வாங்க” என்று சொல்ல, அவனோ அவளை பார்க்காமல், “இருக்கட்டும்… பசிக்கல” என்றான்.

“பத்து மணிக்கு மேல எப்போ சாப்பிடலாம்ன்னு எண்ணம் உனக்கு?” உள்ளிருந்த வந்த அண்ணாவின் குரலுக்கு பின் ஒரு நொடி கூட நிற்காமல் உள்ளே ஓடியவனை கண்டு சிரிப்பு தான் வந்தது அவளுக்கு. அண்ணாவின் அருகே அமர்ந்திருந்தவனுக்கும் பரிமாறினாள்.

போதும் என்றும் சொல்லவில்லை, வேண்டும் என்றும் சொல்லவில்லை. தட்டில் வைத்ததை விழுங்கிக்கொண்டிருந்தான். அவ்வப்போது அண்ணாவின் மீது பார்வை வேறு.

முதலில் கண்டுக்கொள்ளாது விட்ட அண்ணாவுக்கு, ஏதோ வயது பெண்ணை சைட் அடிப்பது போல அவன் திருட்டுத்தனமாய் பார்ப்பது எரிச்சலை கொடுக்க, “ஏய் என்னடா?” என்றான் பரதனின் முகம் பார்த்து.

திடீரென்ற அவன் பேச்சில் திடுக்கிட்டு அவன் முகம் பார்த்த பரதனுக்கு பேச்சே வரவில்லை. கண்கள் தான் கலங்கும் போல இருந்தது. விவரம் தெரிந்தது முதல் கொஞ்சமும் பிரியாமல் இருந்தவர்களுக்கு இத்தனை நாள் தெரியாது, தங்களுக்குள் இத்தனை பிணைப்பும் அன்பும் இருக்கும் என்று.    அண்ணா மீண்டும் தன்னிடம் பேசியதும் அவனுக்கு பேச்சே வரவில்லை. எங்கே மீண்டும் கோபித்துக்கொண்டு சென்றுவிடுவானோ என்று பயந்துக்கொண்டிருந்தான் பரதன்.

அண்ணாமலைக்கும் பரதனின் எண்ணம், தயக்கம் எல்லாம் புரிந்தது. ஆனாலும், கட்டிப்பிடித்து சமாதானம் ஆகும் ரகம் எல்லாம் இல்லை அவன். ‘அதான்  வந்துட்டேன்ல? பேசிட்டேன்ல? அப்புறம் என்னவாம்!?’ என்ற வரை தான் அவன் சமாதானம் எல்லாம்.

பக்கம் பக்கமாய் பாச வசனம். ‘நீ என் தம்பி டா, நான் உன் நொண்ணன் டா’ என்ற செண்டிமெண்ட் ஸீன் எல்லாம் வரவே வராது.

காமத்தை கூட கனிந்து குழையாமல் காட்டுபவனுக்கு, நண்பனுக்கு மேலானவனிடம் இதற்குமேல் தன் இணைவை காட்ட வரவில்லை.

பரதன் இன்னமும் பார்த்துக்கொண்டே இருக்க,  “நீ இப்படி பாக்குறதை என் பொண்டாட்டி பார்த்தா, உன் கண்ணு முழியை நோன்டிருவா பாத்துக்க” என்று இயல்பு போல மிரட்டிவிட்டு உண்ண, “கண்ணோட விட்டா தேவலாமே… குடலு குந்தாணியை கூட பேசியே உருவிடும்” என்று ஐயப்பன் சொல்ல, “பொண்ண பெக்க சொன்னா பொறுக்கிய பெத்து வுட்டுருக்காய்ங்க” என்று சேகர் தெளிவாய் முனகியதற்கு அவசரமாய் ஒரு சிரிப்பு சத்தம் கிளம்ப,

“க்கும்…க்கும்…க்கும்….” என பலமாய் உறுமினார் தாஸ்.

“அச்சச்சோ ரவுடி டேடி” என்ற சேகர் குனிந்துக்கொள்ள, “பொண்ண பெக்க சொன்னா தேவதையை பெத்து வச்சுருக்கீங்கன்னு சொன்னான் மாமோய்” என்றான் நந்தா சமாளிப்பாய். ஆனால், இதற்கு தான் முன்பை விட அதிகமாய் சிரிப்பு சத்தம் வந்தது.

அண்ணாமலை சிரிப்புடனே தான் இருந்தான். மதியை பற்றிய பேச்சுக்கு இவன் சிரித்துக்கொண்டு இருந்ததை மட்டும் அவள் கண்டிருந்தால் கதகளி ஆடிருப்பாளே என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓட, சிரிப்பு மறையவே இல்லை அவனுக்கு.

அவன் எண்ணத்தின் நாயகியே சரியாக அங்கே வந்து நின்றாள்.

“ஏய் நாங்க சும்மா தான் பேசிட்டு இருந்தோம்” அவள் கேட்கும்முன்பே வாயை விட்டான் சேகர்.

அவளோ “ஆசுரமத்துல ஏதோ பிரச்சனை. ஒரே கூட்டமா இருக்கு” என்றாள் பதட்டமாய்.

விருட்டென எழுந்துவிட்டனர் எல்லாரும்.

“என்னாச்சு?” என்று கேட்கும்போதே தன் கையை கழுவிவிட்டு செருப்பை போட்டுவிட்டான் அண்ணாமலை. அத்தனை வேகம் அவனிடம்.

“சரியா தெரியல. நிறைய பேரை வண்டில ஏத்தி ஆஸ்பத்திரி கொண்டு போயிட்டு இருக்காங்க, சித்தப்பாவும் கூட போயிட்டாராம்” என்றாள் அவள்.

அதற்குமேல் அவன் நிற்கவில்லை. வேகமாய் ஓடினான் அங்கே. ஊராட்கள் அங்கே வாசலில் நிற்க, உள்ளே சென்றவன், “என்ன ஆச்சு?” என்று கேட்க, அங்கே மீதம் இருந்த முதியவர்களில் சிலர், “தெரியலய்யா… நல்லா தான் காலை சாப்பாடு உண்ணாங்க… சித்த நேரத்துல வாந்தி மயக்கம்ன்னு ஒன்னுக்கு அடுத்து ஒன்னுன்னு கீழ விழுந்துடுச்சுங்க” என்று கலக்கமாய் சொல்ல,

“என்ன சாப்பாடு?” என்று கேட்டான் அவன்.

“எங்களுக்கு செரிமான கோளாறு உண்டுன்னு இட்ல்லியும் சாம்பாரும்.   அவங்களுக்கு நேத்து செஞ்ச குழம்பு வச்சு சோறு பொங்கிருந்தாங்க” என்றார்.

அங்கே கீழே இருந்த பாத்திரங்களை பார்த்தான். குழம்பு இருந்த பாத்திரத்தை திறந்து அருகே சென்று முகர்ந்தவன், முகம் சுளித்தான்.

“இது எப்போ செஞ்சது?” அவன் கேட்க, “நேத்து மதியத்துக்கு தம்பி” என்றார் அவர். ஆனால் குழம்பின் வாசம் வேறாக இருந்தது. பரதனும் அருகே சென்று முகர்ந்து பார்க்க வாசம் வேறாக இருக்கவே, “கெட்டுடுச்சா?” என்றான் சந்தேகமாய்.

கொஞ்சமாய் குழம்பை ருசி பார்க்க, அது கெட்டுப்போனதாக தெரியவில்லை.  முதல் நாள் செய்த குழம்பை மறுநாள் காலைக்கு சூடு செய்து உண்பதெல்லாம் அவர்களுக்கு சாதாரண ஒன்று தான். ஏன் இவர்களே ஒரு நாள் வைத்த குழம்பை மூன்று நாள்கள் கூட வைத்து உண்ட ஆட்கள் தானே!

சந்தேகத்துடன் ஒரு கரண்டியில் கறியை அரித்து எடுத்து முகர்ந்து பார்க்க, மூக்கும் முகமும் சுளித்தது அவனுக்கு. பரதன் அதை பார்த்ததுமே, “பழைய கறி’ந்த” என்று நிம்மதியிடம் சொல்ல, அண்ணா அதை கொஞ்சமாய் எடுத்து வாயில் போட்டான். ஒருமுறை மென்றதுமே துப்பிவிட்டான். கறியில் கசப்புத்தட்ட ஆரம்பித்திருந்தது.

“நாள்ப்பட்ட கறி இது!” சத்தமாய் சொன்னவன், “எங்க வாங்குனது?” என்று கத்த, “ஏதோ ஃபோன்ல வாங்குனாங்க… நம்ம வீரப்பன் தான் கொண்டாந்து குடுத்தான்” என்றுவிட, அண்ணாமலையின் கை முஷ்டிகள் கோவத்தில் முறுக்கேறியது.