அந்த இரவு நேரத்தில் வாசலில் தேன்மொழியை கண்ட அண்ணாமலைக்கு திகைப்பானது. அதிலும் அவள் மூச்சுவாங்க படபடப்புடன் நின்ற தோற்றம் ‘என்னவோ ஏதோ’ என்று அவனை நினைக்க வைக்க, “யாரு வெளில?” என்று நிம்மதி கேட்டதும் தெளிந்தவன், “அது, அந்த பொண்ணு” என்று திணறும்போதே எழுந்து வந்துவிட்டாள் மதி.
அவளும் தேன்மொழியை கண்டு திகைத்து, “என்ன இந்த நேரத்துல வந்து நிக்குற?” என்று கேட்க, “பேசணும் க்கா” என்றாள் அவள். வெளியே மழை ஓய்ந்து சதசதவென இருந்தது. விட்டு விட்டு தூறலும் இருக்க, “உள்ள வா, வெளில நிக்காத” என்ற மதி, அவள் கைப்பிடித்து உள்ளே இழுத்து வந்தாள்.
அண்ணாமலை வெளியே சென்று நின்றுவிட, நனைந்திருந்த அவளுக்கு ஒரு துண்டை எடுத்து நீட்டினாள் மதி. அதை வாங்காமல், “பேசணும் க்கா” என்றாள் மீண்டும்.
“பேசலாம், முதல்ல தலையை துவட்டு” என்று கண்டித்த மதி, அண்ணாமலை வாசலில் நிற்ப்பதைக்கண்டு, “மழை சாரல் அடிக்குது பாரு மாமா, நீ பேக்டரி உள்ள போய் இரேன்” என்று குரல் கொடுக்க, அவனும் உடனே நகரப்போக, “அக்கா, பேசணும் க்கா” என்றாள் தேன்மொழி பதட்டமாய்.
“அவர் போகட்டும், நம்ம பேசுவோம்” என்று மதி சொல்ல, “அண்ணா கிட்ட தான் பேசணும் க்கா” என்று தேன்மொழி சொல்ல, அவன் நின்றுவிட்டான்.
“என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா? பரதன் எதுவும்?” அவளிடம் பேசியதே இல்லை என்பதெல்லாம் மறந்து, அண்ணாமலை கேட்டுக்கொண்டு வீட்டுக்குள் வர, “அவர் குடிச்சுட்டு வந்து மயங்கிட்டாரு அண்ணா” என்றாள் தேன்மொழி மெல்லிய தேம்பலுடன்.
“என்ன குடிச்சுருக்கானா?” அண்ணாமலை அதிகமாய் திகைத்துப்போனான். அவர்கள் ஐவரில் ஒருவருக்கும் இதுவரை எந்த கெட்ட பழக்கமும் இருந்ததே இல்லையே! அதிலும் ‘குடி’!? வாய்ப்பே இல்லையே என்று அவர் திகைத்து நிற்க, “அவர் மேல எந்த தப்பும் இல்ல அண்ணா” என்ற தேன்மொழி கண்ணீர் விட ஆரம்பித்தாள்.
“விடு ம்மா, நான் அவனை என்னன்னு கேட்குறேன்” அண்ணாமலை அப்போதே லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு கிளம்பப்போக, “அண்ணா, நான் சொல்றதை கேளுங்க… அவர் மேல எந்த தப்பும் இல்ல… என்னை காப்பாத்த போய் தான் கல்யாணம் பண்ற அளவு ஆகிடுச்சு” என்று தேன்மொழி சொல்ல, “காப்பாத்தவா?” என்று புரியாமல் நின்றான் அண்ணாமலை.
“ம்ம்ம்” என்றவள், அவள் வாழ்வின் மிக மோசமான கரும்பக்கங்களை திறக்க ஆரம்பித்தாள்.
“மணப்பாறை பக்கத்துல வையம்பட்டி கிராமம் தான் நான் பொறந்து வளர்ந்தது. பத்தாவது முடிச்சதும் ஊருக்குள்ள இருந்த ஒரு சின்ன துணிக்கடைக்கு வேலைக்கு போயிட்டு இருந்தேன். எனக்குன்னு யாருமே கிடையாது. என் அம்மா வழி தாத்தா கூட தான் நான் இருந்தேன். ஆனா அவரும் ஒருநாள்…” என்றவளுக்கு கண்ணீர் பெருகியது.
கண்களை துடைத்தவள், “அவருக்கும் ரொம்ப வயசு. எனக்காக தான் உசுரை புடிச்சுக்கிட்டு இருந்தாரு. ஒரு நாள் தூக்கத்துலயே….” என்றவள் மீண்டும் எழும்பிய கேவலை அடக்கிக்கொண்டு, “அப்புறம்… நான் மட்டும் தான் அந்த குடிசைல” என்றாள்.
“காலைல எட்டுக்கு போய் கடை திறந்தா, ராத்திரி ஒன்பது தாண்டிடும் வீட்டுக்கு வர. ராத்திரி எல்லாம் தூக்கமே இருக்காது. யாரோ என்னை பாக்குற மாதிரியே தோணும். ரொம்ப பயமா இருக்கும். கைல கத்தியை வச்சுக்கிட்டு சுவத்துல சாய்ஞ்சு உட்காந்து கடப்பேன்” என்று சொல்ல,
“என்ன அவசியம் அதுக்கு? பொறந்து வளர்ந்த ஊருல ஒருத்தன் இல்லையா ஆதரிக்க?” என்று இடைப்புகுந்தான் அண்ணாமலை.
பாவமாய் ‘இல்லையே’ என்பதை போல கைவிரித்த தேன்மொழி, “தாத்தா இருந்த வரை மாமா, சித்தப்பா’ன்னு பேசிட்டு இருந்தவங்க கூட நான் தனியாளா ஆன பிறகு வேற மாறி, எப்டி சொல்றது? அசிங்கமா… என்னை வேற மாறி பாத்தாங்க” என்றவள், “எங்க நான் அவங்களுக்கு பாரமா வந்துடுவேனோன்னு இருந்த கொஞ்சநஞ்ச உறவும் மொத்தமா விலகிட்டாங்க” என்றாள்.
வாய்க்குள்ளேயே ஏதோ சொல்லிக்கொண்டான் அண்ணாமலை. சத்தியமாய் அது நல்ல வார்த்தையாய் இருந்திருக்காது.
“பரதனை எப்டி தெரியும் உனக்கு?” நிம்மதி கேட்க, “இங்க வர வரைக்கும் அவர் பேர் கூட தெரியாது க்கா எனக்கு” என்றாள் அவள்.
“அவர் யாருன்னு கூட தெரியாது எனக்கு. நான் கண்ணு திறந்தப்போ என் முன்னாடி ரத்தம் கொட்ட நின்னுட்டு இருந்தாரு. சுத்தி நின்ன ஆளுங்க எல்லாம் என்னவோ சத்தம் போட, எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே அப்போ புரியல. திடீர்ன்னு ஒருத்தர் என்னை எழுப்பி அவர் கைல பிடிச்சு குடுத்து, ‘மரியாதையா வச்சு காப்பாத்து, இல்லன்னா போலிஸ்ல புடிச்சு குடுத்துடுவேன்’னு மிரட்டிட்டு இருந்தாரு. அதுக்கு பிறகு தான் என் கழுத்துல இருந்த தாலியே எனக்கு தெரிஞ்சுது” என்று சொல்ல,
“பரதன்… உன்னை…” தயங்கிய மதி, “என்ன ஆச்சுன்னு சொல்லு” என்றாள் சிறு பதட்டமாய்.
“அன்னைக்கு ராத்திரி கடை அடைச்சுட்டு எப்பவும் வர வழில தான் வந்துட்டு இருந்தேன். கொஞ்சம் அவசியமா பொருள் வாங்க மெடிக்கல் போய்ட்டு வந்ததுல, வழக்கத்தை விட இன்னும் லேட் ஆகி இருந்துச்சு. பாதி வழில திடீர்ன்னு யாரோ என் வாயை பொத்தி எங்கேயோ இழுத்துட்டு போனாங்க. என்னால தலையை கூட அசைக்க முடில. கொஞ்சம் கூட சத்தமும் போட முடில. அங்க ஒருத்தர் மட்டும் இல்ல, இன்னும் சிலர் இருந்தாங்க. ஊருக்கு ஓரமா இருந்த கோவில் வரைக்கும் இழுத்துட்டு போய் என்ன வேகமா கீழ தள்ளுனப்போ, எதுலயோ என் தலை மோதுச்சு. இருட்டுல ஒன்னும் தெரில. ரத்தம் வர ஆரம்பிக்கவும், உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது எனக்கு. எவனோ என் மேல விழுந்தான்” உதட்டை கடித்து அழுகையை அடக்கிக்கொண்டே, “என்னால ஒண்ணுமே…. ஒன்…ஒண்ணுமே பண்ண முடில” என்றாள்.
நடுங்கிக்கொண்டிருந்த அவள் விரல்களை ஆதரவாய் கோர்த்துக்கொண்டாள் நிம்மதி. “ஒன்னும் இல்ல… எல்லாம் முடிஞ்சுது. நீ பத்திரமா இருக்க இப்போ… பயப்படாம சொல்லு” என்று ஆதரவாய் பேச, சற்று தெளிந்த தேன்மொழி, “எனக்கு நினைவு தப்பிடுச்சு க்கா, அப்பறம் கண்ணு முழிச்சப்போ அவர் தான் என் முன்ன இருந்தாரு” என்று சொல்ல,
அண்ணாமலைக்கும் நிம்மதிக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“நீ என்ன நினைக்குற? பரதன் தான்… உன்ன?” முழுதாய் கேட்க முடியாமல் நிம்மதி திணறும்போதே, “ஐயோ இல்ல க்கா” என்று பதறி மறுத்தாள் தேன்மொழி.
அப்போது தான் அண்ணாமலைக்கும் சரி, நிம்மதிக்கும் சரி, நிம்மதியே வந்தது.
பரதன் அந்த தவறை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று இவர்களுக்கு திடமாய் தெரிந்திருந்தாலும், எங்கே இந்த பெண் அவனை மோசமாக நினைத்திருக்க கூடுமோ என்று பயந்திருக்க, அவள் ‘இல்லை’ என்றதும் தான் நிம்மதியே வந்தது.
“என்னை அவனுங்க கிட்ட இருந்து இவர் தான் காப்பாத்திருக்காரு அக்கா. அது புரியாத ஊராளுங்க, யாரு என்னன்னு தெரியாத இவரை குற்றவாளியாக்கி போதாததுக்கு அடிச்சு… வலுக்கட்டாயமா தாலி கட்டவும் வச்சுட்டாங்க. எனக்கும் அப்போ என்ன பண்றதுன்னு புரியாம தான் இருந்துச்சு. அந்த ஊருக்கே என்னால அசிங்கம்ன்னு வேற சில பேர் பேசவும், என்னால அங்க நிக்கக்கூட முடியல.
இவர் தான், ‘உனக்கு முக்கியமா எதாவது எடுக்கணும்ன்னா மட்டும் எடுத்துட்டு வா, போலாம்’ன்னு சொன்னாரு. அதான் அவர் என்கிட்ட பேசுன முதல் பேச்சு. உடனே கிளம்பி இங்க வந்துட்டோம்” என்றாள்.
அண்ணாமலையும் நிம்மதியும் பேசாமல் இருக்க, “அவர் மேல தப்பு இல்லண்ணா! அவரை ஒதுக்காதீங்க!” என்று வேண்டியவள், “நடந்த உண்மை யாருக்கும் தெரியக்கூடாது. முடிஞ்சுது நம்மளோடவே போகட்டும்ன்னு அவர் சொன்னதால தான் வேற வழி இல்லாம நானும் இத்தனை நாள் உங்ககிட்ட சொல்லாம இருந்தேன். ஆனா, அவர் இப்போ இருக்க நிலைமையை பாத்ததும்… என்னால முடில” என்றாள் முகம் கசங்க.
“குடிச்சுட்டு வந்துட்டு, ஒரே பொலம்பல். அழுகை வேற. நீங்க அவரை ஒதுக்கிட்டீங்க, தள்ளி வச்சுட்டீங்க. என் உடம்பொறப்பு என்னை விட்டுட்டுடான்னு ஒரே சலம்பல். மயக்கத்துல கூட உங்களை பத்தி தான் பேசுறாரு” என்றவள்,
“வாழவந்த ஊருக்குள்ள என் பேரு கெட கூடாதுன்னு நினைச்சு உண்மையை மறைச்சவருக்காக, அவர் வார்த்தையை மீறி உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டேன். கொஞ்சம் மனசு இறங்கி வாங்கண்ணா!” என்று கரம் கூப்ப,
“ச்ச… என்னமா நீ!? கையை இறக்கு” என்றவன், “நீ கண்ணை தொட, அவனை நான் பாத்துக்குறேன்” என்றான். இருபெண்களுக்கும் அவன் வார்த்தையில் மென்னகை விரவியது நிம்மதியாய்.
“சரி வா, நான் கொண்டு போய் விடுறேன். இருட்டுல போவாத” என்று அண்ணாமலை சொல்லும்போதே, “அண்ணா” என்று வெளியே குரல் கேட்டது.
ஐயப்பன் தான் கையில் குடையுடன், தலைக்கு சாக்கை போட்டுக்கொண்டு நின்றிருந்தான்.
“நீ என்னடா பண்ற இங்க!?” அண்ணா கேட்க, “மழை வருதேன்னு வெளில கிடந்த சிமெண்டு மூட்டையை நவுத்திட்டு இருந்தேன். பார்த்தா இந்த பொண்ணு வெக்கு வெக்குன்னு வெளியே ஓடுச்சு, என்னவோ ஏதோன்னு பின்னயே ஓடியாந்தேன். உன் வூட்டுக்கு வரவும் சரின்னு நின்னுட்டேன். நேரமாகியும் வரலையே எதுவும் பிரச்சனையோன்னு….” அவன் சந்தேகமாய் இழுக்கவும், “பிரச்சனை தான்” என்றான் அண்ணாமலை.
ஐயப்பன் முகம் கலவரம் பூச, தேன்மொழிக்கு தான் சொன்ன சங்கதி பகிரப்பட போகிறதோ என்ற சங்கடம்.
“பரதன் குடிச்சுட்டு வந்து சலம்பிட்டு இருக்கானாம்” என்று அண்ணா சொல்ல, ஐயப்பன் முகம் கடுகடுத்தது.
“இவங்க குடிசைல கொஞ்சம் சத்தமா தான் இருந்துச்சு. மழை சத்தத்துல இது தெளிவா கேட்டுதொலைக்கல. இவங்களுக்குள்ள ஏதோன்னு தான் இருந்தோம்” என்றவன், நேரே தேன்மொழியிடம், “ஏன்ம்மா, இதான் சேதின்னு சொல்லிருந்தா, அங்கவே அவன் அல்லை எலும்பை மிதிச்சு முறிச்சுருப்பேன்ல?” என்று ஐயப்பன் கேட்டிட, அவன் முகம் இயல்பு போல தெரிந்தாலும், அந்த குரலின் தீவிரம் ‘கண்டிப்பாய் செய்வேன்’ என்று சொல்ல, திக்கித்து போனாள்.
அதையும் விட இவர்கள் யாரிடமும் அவள் பேசியதே இல்லையே. முதன் முதலில் பேசுவது கூட பயங்கர பேச்சாய் இருக்க லேசாக உதறியது அவளுக்கு.
“ஐயோ வேண்டாம் ண்ணா” என்றாள் பதறி.
“பொழுது விடியட்டும், பேசிக்கலாம்” என்ற ஐயப்பன், “பாரு, நீ ஒருத்தன் கண்டிக்க இல்லன்னு என்ன பழக்கம் எல்லாம் பழகிட்டு இருக்கான்னு” என்று அண்ணாவையும் முறைத்து வைக்க, “கூட்டிட்டு போடா பத்திரமா” என்றான் அண்ணாமலை.
கையில் இருந்த குடையை தேன்மொழிக்கு கொடுத்தவன், “முன்ன போ ம்மா… பயப்படாத” என்றுவிட்டு ஒரு சிறு தலையசைப்போடு அவள் பின்னே சென்றான். இருவரும் அவர்கள் காம்பவுண்ட் தாண்டிய பின்னும் அண்ணாவும் நிம்மதியும் தூறல் சிந்தும் வாசலை பார்த்துக்கொண்டே மௌனமாய் நின்றிருந்தனர்.
“யோவ்” அவன் தோள் வளைவில் சாய்ந்துக்கொண்டே அழைத்தாள் நிம்மதி.
“ம்ம்” ஒரு பெருமூச்சோடு வந்தது.
“ஒருவேளை… எனக்கு இப்படி எதாவது… தப்பா… “ சொல்லும்போதே, “ப்ச்” என அவன் முறைக்க, “முறைக்காத… இப்படி ஏதாவதுன்னா, அதை இந்த நாலு பேருக்கும் சொல்லுவியா? சொல்ல மாட்டியா?” என்றாள்.
“அதை எப்படி டி வெளில சொல்லிட்டு இருப்பேன்?” அவன் முறைக்க, “அதே தான் பரதனும் பண்ணிருக்கான்” என்றவள் அப்படியே உள்ளே சென்று படுத்துவிட்டாள். அவன் தான் வெகு நேரம் கால் கடுக்க நின்றிருந்தான்.
***
மறுநாள் பொழுது விடிந்து, சூரிய வெளிச்சம் சுள்ளென ஓலை இடுக்குகள் வழியே தன் முகத்தில் விழுந்தும் கூட அசையாமல் கிடந்தான் பரதன். குளித்துவிட்டு தன் மேனியில் அள்ளி போட்டிருந்த புடவையோடு அவசர அவசரமாய் உள்ளே நுழைந்தாள் தேன்மொழி. இவர்களுக்கென இருவர் உறங்கும் அளவில் மட்டுமே அவசரமாய் அமைக்கப்பட்ட குடில். இரவு இவளுக்கு பின்னே வந்து உறங்குபவன், இவளுக்கு முன்னே எழுந்து சென்று விடுவான். அதனால் இத்தனை நாளும் இப்படி ஒரு சூழல் இருந்ததே இல்லை.
இப்போது புதியதாய் உள்ளே சென்ற மது, அவனை மணிக்கணக்காய் படுக்கையில் கட்டி வைத்திருக்க, எழும் அறிகுறியே இன்றி கிடந்தவனை, சில வினாடிகள் நின்று தயக்கமாய் பார்த்தவள், பின்பு, ‘சரி முழிக்குறதுக்குள்ள கட்டிடலாம்’ என்ற எண்ணத்தோடு அவனுக்கு முதுகு காட்டி நின்று வேகவேகமாய் மடிப்புகள் எடுக்க ஆரம்பித்தாள்.
முழுதாய் முடிக்க சில வினாடிகளே மீதமிருந்த நிலையில், ‘ஆஆஆ’ என கொட்டாவியுடன், நெட்டி முறித்தபடி அவன் திரும்ப, திடீரென்ற சத்தத்தில் தனிச்சையாய், ‘அம்மே…’ என கத்தியிருந்தாள் தேன்மொழி. அவள் கத்தியதில் அவனும் விருட்டென எழுந்துவிட்டான். எழுந்தவன் கண்ணுக்கு நேரே, முன் கொசுவத்தை கையில் தூக்கி பிடித்துக்கொண்டு நின்ற தேன்மொழி பட, புதிதான காட்சியில் தன்னைமறந்து இமைக்காமல் பார்த்தவன், பின் வேகமாய், தலையை குனிந்துக்கொண்டு, “மன்னிச்சுரும்மா” என்றான் சங்கடமாய்.
அவளுக்கு பதட்டதில் பேச்சுக்கூட வரவில்லை. அவசரமாய் கொசுவத்தை உள்ளே சொருகி பின்னை சொருகிவிட்டு ‘விட்டால் போதும்’ என ஓடிவிட்டாள் வெளியே.
இவன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். மண்டைவலி பிளந்தது. எங்கோ கொண்டு தள்ளியது. ‘கருமம்… எப்டி தான் குடிக்குறானுவளோ!’ என்ற சலிப்போடு எழவே திராணி இன்றி சாணி போல கிடந்தான்.
“என்ன உன் புருஷன் எழுந்து வருவானா? இல்ல மேளதாளம் தாரைதப்பட்டை எல்லாம் வச்சு எழுப்பனுமா?” வெளியே சத்தமாக கேட்ட குரலில், கொஞ்சநஞ்சம் மிச்சம் இருந்த போதை கூட தெறித்து ஓடியது பரதனுக்கு.
‘அண்ணா குரல் கேக்குது’ வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து நின்றான்.
“முழிச்சுட்டாங்க ண்ணா, இப்ப வந்துடுவாங்க” தேன்மொழியின் குரலும் கேட்டிட, “என்ன இந்த பொண்ணு பேசுது அவன்கிட்ட?” என்று வியந்தவன், கொஞ்சமாய் வெளியே தலையை நீட்டி எட்டி பார்த்தான்.
மாட்டிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டு கழனி தொட்டி அருகே அண்ணாமலை நின்றிருக்க, ஆளுக்கு ஒரு வேலையை செய்துக்கொண்டு அங்கும் இங்குமாய் நடமாடிக்கொண்டிருந்தனர் மற்றவர்கள். அவர்கள் வீடு முன்பு போலவே சுறுசுறுப்பாக உயிரோட்டமாக தெரிந்தது அவனுக்கு.