வண்டியில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய அண்ணாமலைக்கு மனமெல்லாம் ஏதோ போல இருந்தது. ஒருவித பாரமாய், ஏதோ தன்னை அழுத்துவதாய்… நிம்மதியின் அருகே அமைதியாய் சிறுது நேரம் இருக்க வேண்டும் போல கூட தோன்ற, தன்னை எண்ணி தானே சிரித்துக்கொண்டான்.
அவளை கண்டாலே காத தூரம் ஓடும் அவனுக்கு, இப்போது நிம்மதி தான் அவன் ‘நிம்மதி’ என்றால், நினைக்கவே வியப்பாகவும் சிரிப்பாகவும் தான் இருந்தது.
அப்படி என்ன தான் தன்னிடம் இருந்தது? தன்னேயே சுற்றி சுற்றி வந்து விடாப்பிடியாய் பிடித்து வைத்துக்கொள்ளும் அளவு? ஒருவேளை தான் அத்தனை அழகனோ!?
இந்த எண்ணம் வந்ததுமே சென்றுக்கொண்டிருந்த வண்டியின் பக்கவாட்டு கண்ணாடியில் தன்னை தலைசாய்த்து பார்த்தான். காற்றில் முன்சிகை அலைபாய்ந்துக்கொண்டிருந்தது. இடக்கையால் அதை சரிசெய்தபடி மீசையை கொஞ்சமே நீவியவனுக்கு, அவன் அழகனாக தான் தோன்றியது.
ஆனால், அந்த பேரழகியை கவரும் அளவுக்கு தான் அழகா என்ன!? என்ற கேள்வி தோன்றாமல் இல்லை.
ஆம், நிம்மதி பேரழகி தான். அவன் கண்களுக்கு என்றுமே அவள் பேரழகி. அவள் பாவாடை தாவணி போட்ட பருவத்தில் இருந்தே அவனது ரகசிய பார்வைகள் ரகசியமாய் நடந்துக்கொண்டுதான் இருந்தன. ஒருநாள் அவளே வந்து காதலை சொல்ல, தலையில் தட்டி அனுப்பி வைத்திருந்தான். ஆனாலும், தான் வெளிப்படுத்தாமலே தன் மீது அவளுக்கு பிரியம் வந்தது சற்று கர்வமாக தான் இருந்தது அந்த வயதில்.
அவள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தபோதே அவள் பின்னே சுற்ற அத்தனை விடலைகள் இருக்க, அவள் கண்கள் வெளிப்படையாய் ‘அண்ணாமலையை’ மட்டும் தான் நோக்கும். அவன் அப்போது தான் வியாபாரம் தொடங்கி சற்று காலூன்ற ஆரம்பித்த நேரம். இன்னும் சில நாட்கள் போகட்டும், பிறகு பேசிக்கொள்ளலாம் என அவன் இருக்க, அவள் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்துவிட்டாள்.
கல்லூரிக்கு சென்ற பின்பு அவள் நடை, உடை, பேச்சில் எல்லாம் ஒரு நாசுக்கு வந்திருக்க, அது அண்ணாமலைக்கு ஏனோ தான் அவளுக்கு பொருத்தம் இல்லை என்ற எண்ணத்தை உண்டுபண்ணிவிட்டது.
அதிலும் அவள் தொழில் தொடங்கி முன்னேறிய சமயம், ‘அவள் தனக்கு வேண்டவே வேண்டாம்’ என்று ஸ்திரமாக நின்றுவிட்டான். அவள் அழகுக்கும் படிக்கும் சம்பாத்தியத்துக்கும் இந்த ‘படிக்காத கறிக்கடைக்காரன்’ தேவையில்லை என்று அவனே முடிவெடுத்துவிட்டான்.
ஆனாலும் அவன் முடிவில் இருந்து தடுமாறும் அவன் மனதை சமாளிக்கவே அவளை தவிர்க்க ஆரம்பித்தான். ஒதுக்கி வைத்தான். வெறுத்து பேசினான்.
என்ன விரட்டினாலும் அவள் அவனையே பார்ப்பது பிடித்தாலும் பிடிக்காதது போல நடித்தான். அவளுக்கு அவன் பொருத்தமில்லை என்பதை சொல்லக்கூட அவன் வீம்பு தடுக்க, தனக்கு அவள் பொருத்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்தான். அதையும் விட, அவளோடு தான் ஒன்றிவிட்டால், நண்பர்களிடம் இருந்து விலக நேரிடுமோ? தான் விலகினால் அவர்கள் எப்படி தாங்குவார்கள் என எடுத்த முடிவுக்கு பல சப்பைக்கட்டுகள் கட்டி நியாயப்படுத்தினான்.
அத்தனையும் தாண்டி ஏதேதோ வழிகளில் அவனே மனம் மாறி அவளிடம் வந்து நின்றபோது, ‘பணம் வாங்கி ஏமாற்றிவிட்டான்’ என மதியின் அப்பா சொன்னது அவனை வெகுவாய் சீண்டிவிட்டது. அதோடு அவன் பணத்திற்கு அத்தனை இடம் அலைய, அவன் போகும் இடம் பற்றி எல்லாம் மதிக்கு தகவல் சொன்ன நண்பர்கள் மீது கோபம்.
அவர்களுக்கு ஆதரவாக பேசும் அத்தனை பேரின் மீதும் கோபம்! அந்த கோபம் எல்லாம் நிம்மதியிடம் சேர்த்து வைத்து கொட்டி அவளை ‘ஏண்டா கட்டுனோம்’ என்று நோக வைக்க வேண்டும் என்று தான் வில்லத்தனமாய் அவன் நினைத்தது. ஆனால், அவனே நினைக்காதது, முதல் இரவிலேயே அவள் மடியில் விழுந்துவிடுவோம் என்று தான்.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல’ கதையாக பகலில் போர், கோபம், அருகே வராதே என்றெல்லாம் விரட்டிவிட்டு இரவில் வெட்கமின்றி போய் ஒட்டிகொள்வான்.
அவனுக்கே தெரிந்தது, தான் செய்வது அதிகப்படி என்று! நண்பர்கள் அவனை தேடி வந்து வலிய வலிய பேசும்போதும், நிம்மதியுடனான நிம்மதியான வாழ்க்கையும் அவன் கோபத்தை அதிகளவு குறைத்திருந்தது. ஆனாலும், வெறுமனே இழுத்துப்பிடித்துக்கொண்டிருந்தான்.
பரதன் செய்த வேலையில் அண்ணாமலையின் வெட்டி வீம்பிற்கு கொம்பு முளைத்துவிட்டது. தான் பேசவில்லை என்றால் விட்டுவிடுவானா? ஒதுக்கி விடுவானா? என்ன நடந்தது என்று கூட சொல்ல மாட்டானா? என்ற பெரும் கோபமும் ஆதங்கமும்.
இத்தனை தூரம் தான் பேசியும் தன்னிடம் வந்து பரதன் பேசவில்லையே என்ற எண்ணம் அவன் மனதில் இன்னுமே பாரமேற்ற அப்படியே கண்மூடி சாய்ந்துவிட்டான்.
சில நிமிடங்களில் அவனை உலுக்கினான் வண்டியை ஓட்டியவன்.
“கடை வந்துருச்சுண்ணே… ஆடுங்களை இறக்கவா?” என்று கேட்டான் அவன்.
“இரு, நான் சொல்லும்போது இறக்கு” என்றவன், இறங்கி அந்த கடையின் போர்ட்டை நிமிர்ந்து பார்த்தான்.
‘டேஸ்ட் பட்ஸ் இறைச்சி கடை’ என்று பளபளத்தது.
பச்சை நிற டீஷர்ட் போட்ட ஆட்கள் கடையில் வேலைக்கு நின்றிருந்தனர். கண்ணாடி தடுப்பின் வழியே அவர்கள் நிற்பது வெளியில் இருந்து பார்க்கும்போதே தெரிந்தது. தலையில் நீளமான தொப்பி, உடலில் ஏஃரான், கைகளில் க்ளவுஸ் என்று மிக நேர்த்தியாக நின்று கறி வெட்டிக்கொண்டிருந்தனர். ஒருநொடி அவன் மனக்கண்ணில் தான் வேலை செய்யும் தோற்றம் வந்துப்போனது. தலையை உலுக்கிக்கொண்டான்.
அங்கே ஆன்லைன் டெலிவரிக்கு கொண்டு செல்வதற்காக பச்சை நிற உடையில் சிலர் நிற்க, நேரிடையாக வாங்கி செல்வதற்கும் ஆட்கள் இருந்தனர். அவர்களுக்காக அங்கே வெய்டிங் ஹால் வசதி கூட இருந்தது. அவர்களுக்கு நேரம் போக்க, அங்கே டிவி வேறு ஓடிக்கொண்டிருக்க, அண்ணாமலையால் தன் கடை வியாபார தோற்றத்தை இங்கே ஒப்புமைப்படுத்தி பார்க்காமல் இருக்கவே முடியவில்லை.
சிறிது நேரம் அவன் நிற்க, “டோக்கன் வாங்கிட்டீங்களா சார்?” என்றான் ஒருவன்.
“ஹான்… இல்ல… நான் மேனேஜர பாக்கணும்” அண்ணாமலை சொல்ல, “ஓ… வெயிட் பண்ணுங்க சார், இன்போர்ம் பண்றேன்” என்றவன் உள்ளே ஒரு அறைக்கு சென்றான். அதுவரை சும்மா உட்காராமல் அந்த இடத்தை சுற்றிப்பார்த்தான் அண்ணா.
கண்ணாடி தடுப்பின் அருகே சென்று கறி வெட்டும் நேர்த்தியை அவன் பார்க்க, சில நொடிகளிலேயே அவன் மூக்கு சுருங்கியது. மூக்கை தேய்த்துவிட்டுக்கொண்டான்.
கறி வெட்டி முடித்து பேக் செய்தவன், “டோக்கன் நம்பர் செவண்டி எய்ட்” என்று அழைக்க, ஆள் வந்து வாங்கிக்கொண்டு சென்றான். அடுத்த டோக்கனுக்கு அவன் கறி வெட்ட ஆரம்பிக்க, “தம்பி… ஆடு என்னைக்கு வெட்டுனது?” என்றான் அண்ணாமலை.
“இன்னைக்கு தான்” வெட்டிக்கொண்டே பதில் சொன்னான் அவன்.
“இல்லையே தம்பி, வாசனை ஒரு மாதிரி இருக்கு, கறிக்கூட நிறம் வேறயா தெரியுது… நீர்பசையே இல்லாம ஜவ்வாட்டம் இருக்கும் போலயே” என்று சொல்லிக்கொண்டே போக,
“உங்க டோக்கன் நம்பர் என்ன?” என்றான் அவன்.
“இல்ல, நான் கறி வாங்க வரல…” அண்ணா சொல்லி முடிக்கும் முன், “அப்போ வெளில போங்க சார்” என்றுவிட்டான் அவன்.
அண்ணாமலைக்கு கோபம் வர, “ஏய்…” என ஆரம்பித்தபோது, “என்னை பாக்கணும்ன்னு சொன்னீங்களா?” என்று வந்தார் மேனேஜர் சைலேஷ்.
அவரை கண்டதும் தணிந்தவன், “ஆமா சார், ஆடுங்க கொண்டு வந்துருக்கேன், வியாபாரம் பேசணும்” என்றவனை தன் அறைக்கு அழைத்து சென்றார் அவர்.
ஆடுகளை நேரில் சென்று பார்த்துவிட்டு ஏதேதோ கணக்கு போட்டவர், “ஒரு ஆடுக்கு பதினைஞ்சாயிரம் தரலாம்” என்றார்.
“சார், இருவதாயிரம் போகும் சார் கண்டிப்பா” அவன் சொல்ல,
“லாபம் மொத்தமும் உங்களுக்கே குடுத்துட்டா எங்களுக்கு என்ன நிக்கும்?” அவர் பேச, அவனும் அப்படி இப்படி என பேசி இறுதியாய் பதினேழாயிரத்துக்கு முடித்தான். ஆனாலும் அந்த ஆடுகள் இருபதாயிரத்துக்கு வாங்கினாலும் லாபம் கணிசமாய் நிற்கும் என்பது அவனுக்கு தெரியும். இருந்தாலும் ‘போகிறது’ என முடித்துக்கொண்டான். மொத்தம் ஆறு ஆடுகளுக்கு கணக்கு போட்டு அவர் காசோலையை நீட்டினார் சைலேஷ்.
வாங்கிக்கொண்டவன், “சார், வெட்டுற கறி கொஞ்சம் பழசு மாறி தெரியுது, நீங்க என்னன்னு கவனிச்சா தேவலாம்” என்று சொன்னதும், எதிரில் இருந்தவர் முகம் மாறியது.
“ம்ம்… நீங்க போலாம்” என்றார். அவனும் அடுத்த வேலையை கவனிக்க கிளம்பிவிட்டான்.
***
நேரம் மதியத்தை கடந்துவிட்டது. உணவு வேளை நடந்துக்கொண்டிருக்க, நிம்மதியும் தன் உணவை முடித்துக்கொண்டு வந்து பேக்டரியில் அமர்ந்தாள்.
“அக்கா…” தேன்மொழி மெல்ல அழைக்க, “சொல்லு தேனு” என்று நிமிர்ந்தாள் நிம்மதி.
“அண்ணே எங்க க்கா? ஆளே காணல இன்னும்” தயக்கமாக தான் கேட்டாள் அவள்.