சொற்ப ஆயிரங்கள் அடங்கிய கவரை அந்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியிடம் நீட்டினாள் நிம்மதி. அவள் வாடிக்கையாய் கொடுத்துக்கொண்டிருக்கும் பிஸ்கட்களை அந்த மாதத்துக்கும் கொண்டு வந்திருந்தவள் எப்போதும் இல்லாததாய் பணத்தை நீட்ட, அதை வாங்க தயங்கினார் அவர்.
“செய்யுற உதவியே போதும்மா, பணம் இப்போதைக்கு தேவைப்படல” என்றவர் சொல்ல, “ஏன் அண்ணே, நான் குடுத்தா வாங்க மாட்டீங்களா? இதே என் புருஷன் வந்து, ‘புடி சித்தப்பா’ன்னு கைல திணிச்சுருந்தா ஒன்னும் சொல்லிருக்க மாட்டீங்க தானே!?” உரிமையாய் கோவம் போல அவள் பேச, “அவன் வந்து இப்போ குடுத்துருந்தாலும் ‘எடுத்துட்டு போடா’ன்னு துரத்தி தான்ம்மா விட்டுருப்பேன்” என்று சொன்னவர் முகத்தில் கொஞ்சமாய் கோபமிருந்தது.
அதை ஆச்சர்யமாய் பார்த்தவர், “ஏன் அண்ணே?” என்று வினவ, “அவன் யாரும்மா எங்களுக்கு? நான் யாரு அவனுக்கு? இல்ல அவன் கூடவே இருக்கானுங்களே அந்த நாலு பேரு… அவங்க தான் யாரு அவனுக்கு?” என ஆதங்கமாய் கேட்டவர்,
“நான் பார்த்து வளர்ந்த பசங்க’ம்மா அவங்க எல்லாரும். தலைக்கு உசந்ததும் இங்கிருந்த நாலு பேரையும் கூட்டிட்டு போய் தன்னோட, தான் தம்பிங்க மாறி வச்சு பாத்துக்கிட்டான். சம்பாதிக்க ஆரம்பிச்சதும் தனக்குன்னு சேர்த்துக்காம எங்களுக்கே கொண்டு வந்து நீட்டுனான். வேண்டாம்டா’ன்னு எதாவது சொல்லிட்டா, ‘நீங்க என் குடும்பம் இல்லையா’ன்னு மூஞ்ச திருப்பிப்பான்.
அவன் குடுக்குறது எல்லாம் நாங்க வாங்கிக்கணும். அது அன்போ, கோவமோ, திட்டோ, உதவியோ இல்ல பணமோ… தயங்காம வாங்கணும். ஆனா அதே நாங்க அவனுக்கு இதுல எதையாது குடுத்தா அவனால வாங்கிக்க முடியாது. என்ன?!” என்று கோவமாய் பேச, எப்போதும் நிதானமாய் பார்த்தே பழகிய மனிதர் இப்படி பேசுவது கண்டு திகைத்து விழித்தாள் நிம்மதி.
“நீங்க இவ்ளோ பேசுற அளவுக்கு என்ன நடந்து போச்சு அண்ணே?” அவள் புரியாமல் பேச, “ஏன் அவன் சொல்லலையா உங்கிட்ட?” என்றார் அவர்.
‘ம்கும், அவன் சொல்லிட்டாலும்’ என மனதுக்குள் நொடித்தவள், “நீங்க சொல்லுங்க” என்றதும், “போன மாசம் இங்க வந்தவன் கிட்ட நான் கொஞ்சம் கேள்வி கேட்டுட்டேன், அதுல திருப்பிக்கிட்டு போனவன் இன்னவரை இங்க எட்டிக்கூட பாக்கல” என்றார் வருத்தமாய்.
இது அவளுக்கு முற்றிலுமே புதிய செய்தி. கடை திறக்காமல் இருப்பதால், எப்படியும் இல்லத்துக்கு கொடுக்க அவனிடம் பணம் இருக்காது என்று எண்ணி தான் அவனிடம் கூட கேட்காமல் அவளே கொண்டு வந்தது. வந்த இடத்தில் வேறு செய்தி காதில் விழ, “என்ன கேள்வி கேட்டீங்க அப்டி?” என்றாள்.
“வேற என்ன? மதி பொண்ணுக்கு என்ன குறைச்சல்ன்னு அவளை கட்டுனதுக்கு முகத்தை திருப்பிக்கிட்டு இருக்க? அந்த நாலு பேருக்கிட்டையும் நீ பேசாம போக என்ன காரணம் இருக்கு இப்ப? நீ முன்னப்போல பேசனும்ன்னு அவனுங்க அத்தனை பிரயாசை படுறது உனக்கு ஏன் புரியல? மதியை நீ கட்டணும்ன்னு அவனுங்க நினைச்சது என்ன அவ்ளோ மோசமான விசயமா இல்ல நீ அவளை கட்டிதான் வீணா போயிட்டியா இப்ப? அப்டின்னு அவன்கிட்ட கொஞ்சம் வேகமா பேசிட்டேன்”
“ஓ” என்றவளுக்கு மேலே பேச்சு வரவில்லை. இதற்க்கெல்லாம் இவளுக்கே கூட பதில் தெரியாதே! அவனே தன் வாய்ப்பூட்டை அவிழ்த்தால் தான் உண்டு.
“வீம்பும்மா அவனுக்கு. சரியான வீம்புப்புடிச்சவன்! தப்பே செஞ்சாலும் ஒத்துக்க மாட்டான், இறங்கி வர மாட்டான். அவனை யாரும் ஒன்னும் சொல்லிட கூடாது. மீறி சொல்லிட்டா மூஞ்சை திருப்பிப்பான். நீயே பாரு… பரதன் அவனுக்கு ஏதோ ஒரு பொண்ணை புடிச்சு போய் கட்டிக்கிட்டு வந்துட்டான். அவனுக்கு என்ன பிரச்சனையோ, அடி கிடி எல்லாம் வாங்கி எப்படியோ வந்து சேர்ந்தான். அவன் கல்யாணம் கட்டுனதுக்கும் இவன் கடையை திறக்க மாட்டேன்னு தவம் கெடக்குறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு சொல்லு?” என்று கேட்க,
“அது… அவர் யாருக்காக உழைச்சாரோ அவங்க யாரும் அவரை நெருக்கமா நினைக்கலன்னு அவருக்கு தோணிடுச்சோ என்னவோ” என்றாள் நிம்மதி அவள் மனதில் இருந்த யூகத்தை மறையாது சொல்லி.
“ஏன் அவன் நம்புன யாராது அவனுக்கு கெடுதல் செஞ்சுட்டாங்களா என்ன? எல்லாம் சும்மா… வெறும் வார்த்தைக்கு அப்பா, அண்ணன், தம்பின்னு… உண்மையா அப்டி நினைக்குறவன் தான் இப்படி ஒரேடியா ஒதுக்கி வச்சுட்டு உலாத்துவானா?” என்றார் ஆதங்கத்துடன்.
“இல்ல அண்ணே. உள்ளுக்குள்ள பாசம் எல்லாம் வச்சுருக்கு. வெளில காட்ட தான் தெரியல. நேத்து நான் எடுத்து சொன்னதுல இன்னைக்கு அவனுங்க வீட்டுக்கு போறேன்னு சொல்லுச்சு. இதோ நான் இங்க வர முன்ன தான் அவரும் கிளம்பி வீட்டுப்பக்கம் போறேன்னு போனாப்ல!” என்றாள்.
“ம்கும். என்ன இருந்தாலும் புருஷனாச்சே. விட்டுக்குடுப்பியா?” என்றவர், “நல்லா பாத்துக்குறானா?” என்றார்.
“ம்ம்ம்… பாத்துக்குறார்… அப்டியே போகுது” என்றவள், சட்டென பின்னே பார்த்து, “ப்பா, நீ இங்க என்ன பண்ற?” என்றாள் வியப்பாய்.
தோட்டத்தில் போட்டிருந்த பயிர்களில் இருந்து அன்றைக்கு தேவையான காய்களை பறிக்க பிரம்புகூடையுடன் அங்கே வந்த தாஸ், மகளை கண்டதும், “வாம்மா” என்றவர், வந்த வேலையை செய்துக்கொண்டே, “முன்னாடி எனக்குன்னு ஒரு வேலை இருந்துச்சு, இப்போதான் அதையும் என் மாப்பிள்ளை பாக்குறாரே. அந்த பயலுவளும் ஒருவேலை செய்ய விட மாற்றானுவோ. சும்மா வீட்லயே எந்நேரம் உட்காந்து பொழுதை போக்க? சொல்லு? அதான் இங்க வந்து அப்டியே பேசி சிரிச்சு ஏதோ சின்ன சின்ன வேலை செஞ்சுன்னு இப்போ ஜாலியா போயிட்டு இருக்கு” என்றார்.
“இங்கேயே தங்கிட்டியா ப்பா?” திகைப்பாய் அவள் கேட்டிட, “நைட்டுக்கு தம்பிங்க கூட தான் மாப்பிள்ளை வீட்ல தூங்குறேன் டா, பொழுது விடிஞ்சதும் இங்க ஓடி வந்துருவேன்” என்றார். ஒரே ஊரில் அடுத்தடுத்த தெருவில் இருந்துக்கூட தன் தந்தை என்ன செய்கிறார் என தெரியாத அளவு அவர் மீது அக்கறையாய் இருக்கும் தன்னை எண்ணி உள்ளுக்குள் வெட்கினாள் அவள்.
“மாப்பிள்ளை எங்கடா? தனியா வந்துருக்க?” தாஸ் கேட்டதும், “நான் அண்ணனை நேர்ல பார்த்து பேசிட்டு அப்படியே வீட்டு வேலையை மேற்ப்பார்வை பாக்க போலாம்ன்னு நேரமே வந்துட்டேன் ப்பா!” என்றதும், “ரொம்ப நேரம் வெயில்ல நிக்காம பேக்டரிக்கு போடா, எதாவது வேலை இருந்தா சொல்லு அப்பாக்கு, பாக்குறேன்” என்றார்.
கொண்டு வந்த பிஸ்கட்டுகளை உள்ளே கொண்டு சென்று வைத்துவிட்டு வந்த ஓட்டுனர் பையன் மொபைலுக்கு அண்ணாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“அக்கோவ், அண்ணே தான் கூப்புடுது” என்று சொல்லிவிட்டு அழைப்பை ஏற்று பேசினான் அவன்.
“அக்காவ கூட்டிக்கிட்டு அங்கிட்டு தாண்ணே வரேன்…
இல்லண்ணே… எந்த வேலையும் இல்ல,
சரிண்ணே… இதோ வந்துடுறேன்” என்றவன் வைத்துவிட்டு, “அண்ணே அது வீட்டுக்கு வண்டியை எடுத்துக்கிட்டு உடனே வர சொல்லுது” என்று அவன் சொல்லவும், மதியின் எண்ணுக்கு ஐயப்பன் அழைத்து, “அண்ணா வந்து நிக்குது மதி” என்று பரபரப்பாய் சொல்லவும் சரியாய் இருந்தது.
தான் சொன்னதை அவன் மதித்து நடப்பதை நினைத்து பூரித்த மதி, அதே பூரிப்புடன், “நான் சொன்னேன்ல? அவரை எப்படி வளைக்கனும்ன்னு எனக்கு தெரியும். அவர் வீம்பெல்லாம் விறகா வெட்டி அடுப்பெரிச்சு உங்களுக்கு ஒரு நாள் விருந்தே போடுறேன், அப்போ தெரியும், இந்த நிம்மதியோட திறமை” என்றவள், வண்டியில் ஏறி பக்கத்து தெருவில் இருக்கும் அவன் வீட்டுக்கு சென்றாள்.
அந்த முள் வேலியில் தென்னை ஓலை சொருகி அமைத்திருந்த காம்பவுண்ட் தாண்டி அவள் உள்ளே போக, நான்கு ஆண்களும் ஆளுக்கு ஒரு திக்காய், நட்ட நடுவே நின்று ஆட்டுக்குட்டிகளை அழகுபார்த்துக்கொண்டிருக்கும் அண்ணாவை தான் விழியெடுக்காமல் பார்க்க, தனியே ஓரமாய் தற்காலிகமாக அமைத்திருந்த ஓலை குடிசை வாசலில் கையை பிசைந்துக்கொண்டு நின்றிருந்தாள் தேன்மொழி.
“அண்ணே வண்டி வெளிய நிப்பாட்டிருக்கேன்” ஓட்டுனர் வெளியே நின்றே குரல் கொடுத்தான்.
ஆடுகளை தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தவன், “சரிடா” என நிமிர, நிம்மதியை கண்டுக்கொண்டான்.
“நான் தான் போறேன்னு சொன்னேன்ல… பிறகும் பின்னாடியே வால் புடிச்சுக்கிட்டு வந்தா என்ன அர்த்தம்?” கோவமில்லாமல் இயல்பாய் பேசினான்.
“நான் தினமும் தான் வந்து போறேன்” என்றவள், சமைந்து நின்றிருந்தவர்களை பார்த்து, “ஏ டா, அண்ணா பேச மாட்டுக்கான், வர மாட்டுக்கான்னு பொலம்பி செத்தீங்க. இப்போ வந்து நிக்குறவனை தாங்காம, தயங்கி நின்னா என்னங்குறேன்?” மதி கேட்டுக்கொண்டே ஆடுகளை நெருங்க,
“அவன் வீடு இது, அவனையே வரவேற்குறதான்னு தான்…” சேகர் மெலிதாய் இழுக்க, ஆடுகளை தடவிக்கொண்டிருந்த அண்ணாவின் கரங்கள் ஒரு நொடி நின்று பின் மீண்டும் இயங்கியது.
“வரவேற்கவா சொன்னேன்? வந்து பேசுறதுக்கு என்னன்னு தான் கேட்டேன்” என்றவளும் விடவில்லை.
உண்மையில் இத்தனை நாள் சென்று அண்ணாமலை வந்து தங்கள் முன்னே நின்றபோது மெய் மறந்தது தான் அவர்களுக்கு. அவனை ஆரத்தழுவி உரிமையாய் சண்டையிட்டு பேச அத்தனை அவா இருந்தும், அண்ணாவின் முகத்தில் இருந்த இறுக்கமும், ஒட்டாத்தன்மையும் அவர்களை அப்படியே விலக்கி நிறுத்தியது. வந்தவனும் யாரையும் காணாமல் ஆடுகளை தான் கொஞ்சிக்கொண்டிருந்தான்.
அந்த நால்வரில் அண்ணாமலையை சற்று பயமின்று எளிதாய் நெருங்குவது பரதன் மட்டும் தான். என்னதான் ஐவரும் ஒட்டி திரிந்திருந்தாலும் அண்ணாமலை பரதனை விட மற்றவர் வயதில் சற்று குறைவு தான். நண்பன் என்று சொல்லிக்கொண்டாலும் ‘டா’ சொல்லி பேசிக்கொண்டாலும், அவர்களுக்கு அண்ணாமலை மூத்த அண்ணனை போன்று தான். பாசம் இருக்கும் அளவு பயமும் உண்டு.
பரதன் மற்ற நேரமாய் இருந்தால் இத்தனை நாள் கூட விலகி நின்றிருக்க விட்டிருக்க மாட்டான் அவனை. ஆனால் அவனால் எதுவுமே பேச இயலாத நேரம் இது. அண்ணாவை கண்ணார பார்த்தாலும் நெருங்கவில்லை அவன். நெருங்கினால் என்ன நடக்கும் என அவனுக்கு தெரியும்!
“வேலைக்கு ஆள் வரலையாடா இன்னும்?” அதுவரை நடந்திருந்த வேலைகளை தள்ளி நின்று மேம்போக்காய் பார்த்தபடி கேட்டாள் நிம்மதி.
“இன்னும் அரை மணி கடக்கு. ஒன்பதுக்கு தான் வருவானுவோ” என்றான் ஐயப்பன், ஒரு கண்ணால் அண்ணாவை பார்த்துக்கொண்டே.
படபடப்புடன் கைகளை பிசைந்துக்கொண்டு நின்ற தேன்மொழியை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தபடி, “இவ என்னத்துக்கு வெறும் கைல மாவு பிசையுறா?” என்று மெலிதாய் சொல்லி சிரித்தாள் மதி. தேன்மொழியை பார்த்த மூன்று ஆண்களுக்கும் லேசாக சிரிப்பு வர, “அது கோழி கூவுனா கூட வெடவெடன்னு நடுங்குது, எங்கிருந்து தான் தேடி புடிச்சானோ பரதன், இப்படி ஒரு ஜான்சி ராணிய…” என்று நந்தா கேலியாய் சொல்ல, “ஏய்…” என முறைத்தாள் மதி.
“சும்மா சும்மா…” என்ற நந்தாவும், “என்னவோ சரியில்லந்த…” என்று சொல்ல, “என்ன?” என்றாள் மதி.
“என்னவோ… ஏதோ இடிக்குது. பரதன், இந்த பொண்ணு… ப்ச்… என்னவோ சரியில்ல” அவன் தெளிவாய் இல்லாமல் விட்டேத்தியாய் சொல்ல, “அண்ணா ஒட்டு உறவா இருந்தா எல்லாம் சரியா வரும்” என்றான் சேகர்.
“எங்க? நல்லா இருந்தான். இதோ! இவளை கட்டிக்கிட்டு தான் இப்படி ஆகிட்டான், மை மந்திரிச்சு வச்சுட்டா போல” ஐயப்பன் அசால்ட்டாய் சொல்ல, நறுக்கென அவன் தலையில் விழுந்தது கொட்டு. சத்தமாய் கத்தக்கூட முடியாமல் அடித்தவளை அவன் முறைக்க, அவளோ அவனுக்கு மேலாய் முறைத்தாள்.