18

இப்போதெல்லாம் லோடு வண்டிக்கு தாஸ் அலைவதில்லை.  மொத்தமாய் வெளி வேலையை அண்ணாமலையே பார்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தான். அவன் பொறுப்பெடுத்தப்பின் நிம்மதிக்கு நிம்மதி கூடினாலும், மனதின் ஓரம் அரித்துக்கொண்டு தான் இருந்தது.

‘எங்கே இவன் இப்படியே தேங்கிவிடுவானோ?’ என்று!

கேட்டால் பதில் சொல்வது ஒரு ரகம். பதில் சொல்லாமல் விடுவது இன்னொரு ரகம். இவன் தான் புது ரகமாயிற்றே! தேய்ந்த ரெகார்ட் போல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘உன் காசுக்கு தானே உன்னை கட்டிருக்கேன். அப்போ அதை நான் தானே பாத்துக்கணும்’ என்று எடக்குமொழி பேசும் ஆளிடம் மனுஷன் பேச முடியுமா என அமைதியாகிவிட்டாள் நிம்மதி.

இவன் இல்லாமல் கறிக்கடையை திறக்க மாட்டோம் என நால்வரும் முடிவாய் இருக்க, கறிக்கோழிகள் வெகு நாட்கள் தாங்காது என்பதால்  இரவு நேர தள்ளுவண்டி சில்லி சிக்கன் கடை மட்டுமே நடந்துக்கொண்டிருந்தது.

அப்போது லோடு முடிந்து வந்தவன், நேரே கம்பெனிக்குள் வந்து, ரசீது நோட்டை நிம்மதியின் தலையில் நங்கென வைத்துவிட்டு, மேசை மீது ஒரு காலை போட்டு அமர்ந்தான்.

முறைத்தபடி நோட்டை மேசை ட்ராயரில் வைத்தவள், ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த வரவு செலவை பார்க்க, வேலை செய்துக்கொண்டிருந்த பெண்கள் அண்ணாவிடம் பேச்சு கொடுத்தனர்.

“நீ என்னைக்கு தான் கடை திறக்கலாம்ன்னு இருக்க?”  பிஸ்கட்டை நேர்த்தியாய் அடுக்கிக்கொண்டே வேலைப்பெண் விஜயா கேட்க, “நான் என் பொண்டாட்டியை விட்டு எங்கயும் நகர மாட்டேன் க்கா” என்றான் அவன் வேகமாய். நிம்மதி அனல் தெறிக்க அவனை முறைத்துவிட்டு வேலையை தொடர்ந்தாள்.

‘பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இருக்காது’ என்று முணுமுணுப்பு அவளிடம்.

“மூணு மாசம் தாண்டி கூட புது பொண்டாட்டி மவுசு குறையல பாரேன்!” சீதா கிண்டலடிக்க, “ஸ்ஸ்… அக்கா, டீ வருது, குடிச்சுட்டு வேலையை பாருங்க” என்றாள் நிம்மதி சலிப்பாய்.

“ம்கும். நாங்க ஒன்னும் உங்களை கண்ணு வச்சுடலம்மா. பயந்துக்காத” என்ற சீதாவின் பேச்சுக்கு சிரிப்பு அங்கே.

“அண்ணாத்தம்பி, சீக்கிரம் கடை திறப்பா! வெளில கறி வாங்கி ஒன்னும் சரிப்படல. என் புள்ள வேற ஈரல் வறுத்து குடுன்னு கொலையா கொல்றா ரெண்டு வாரமா! அவனுங்களை கேட்டா, ‘அண்ணாமலை வந்தா தான் கடை திறப்போம்ன்னு சொல்றானுவ’… உன்னை கேட்டா நீ பதிலே நறுக்குன்னு சொல்ல மாட்டற!” என்று விஜயா சலிக்க,

“ஆடுங்க இப்போவே கொழுத்து நிக்குது. இன்னும் விட்டா எல்லாம் கெழட்டு கறியா தான் போகும்! உங்க சடப்புக்கு எங்களை கறிசோறு திங்க விட மாட்றீங்களே ண்ணே” என்றாள் சீதா. அத்தனைக்கும் சிரிப்பு மட்டுமே அண்ணா’விடம்.

‘வாயே திறக்க மாட்டானே, அமுக்குனி மூட்ட’ பொருமினாள் மதி.

“அக்கா, டீ!” என்ற தேன்மொழி மேசையில் ஒரு கப்பை வைத்துவிட்டு, மிக மெல்லிய குரலில்,  “அண்ணா, உங்களுக்கு” என்று அவனிடம் தட்டை நீட்ட, அவன் அசையவில்லை. முகத்தை கூட அவள்புறம் திருப்பவில்லை. ‘வேண்டும்’ ‘வேண்டாம்’ என்ற எந்த சமிங்கையும் இல்லை.

“அண்ணா…” அவள் மீண்டும் அழைக்க, மேசையை விட்டு இறங்கிவிட்டான். அவன் திடீரென நகரவும், நோட்டை விடுத்து அவனை நிம்மதி நிமிர்ந்துப்பார்க்க, “புருஷனுக்கு டீ குடுக்கக்கூட உனக்கு  முடியாது’ல?” என்றவன் கடுகடுப்புடன் பின்பக்க வீட்டிற்கு சென்றுவிட்டான்.

திணறி நின்றிருந்த தேன்மொழி, “அக்கா…” என பாவமாய் விளிக்க, “ப்ச், விடு… நீ மத்தவங்களுக்கு குடு” என்றாள் வேலையை தொடர்ந்தபடி.

தேன்மொழி இங்கே வேலைக்கு சேர்ந்ததில் அண்ணாமலைக்கு ஏனோ விருப்பமே இல்லை. அதை நேரிடையாய் சொல்லாமல் இப்படி தான் சிறுபிள்ளைத்தனமாய் அவ்வப்போது கோபித்துக்கொள்வான்.  நிம்மதியும் அதை கண்டும் காணாமல் கடந்துவிடுவாள்.

வெகு நேரமாய் அமர்ந்திருப்பதால் கால் மரமரத்துப்போக, மெதுவாய் எழுந்து நடக்க ஆரம்பித்தாள் நிம்மதி. வீட்டுப்பக்கம் போனால், அவனிடம் எதாவது பேச்சுவார்த்தை வரும் என வெளிவாசல் பக்கமாய் போனாள். அவள் போட்டிருந்த தோட்டத்தை பார்த்தபடி சற்று நடக்க நடக்க, காலின் விறுவிறுப்பு குறைந்து இலகுவானது.

அப்போது அந்த பெரிய கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே யாரோ வர, பார்த்தவள் முகத்தில் அலட்சியமும் கோவமும் தான் இருந்தது.

“இன்னா மதி? தனிஈஈ…யா நிக்குற?” சீண்டலாய் கேட்டுக்கொண்டே வந்தான் வீரப்பன்.

‘அவனும், அவன் பார்வையும்’ என  உள்ளுக்குள் கடிந்தவள், “கொஞ்ச நாளா கண்ணுல படலையே, உருப்டுட்டியோன்னு தப்பா நினைச்சுட்டேன்” என்றாள் நிம்மதி.

‘ஹும்’ அலட்சியமாய் சிரித்தவன், “விஜயா அக்காவ கூப்டு” என்றான்.

“நான் என்ன நீ வச்ச ஆளா? வாய் இருக்குல? நீயே கூப்டுக்கோ” அவனை விட அலட்சியமாய் அவள் சொல்ல, அவளை முறைத்துக்கொண்டே உள்ளே சத்தம் கொடுத்தான். விஜயா வெளியே வரவும், “உங்க பொண்ணு ‘டேஸ்ட்பட்ஸ்’ ஆப்’ல கறி ஆடர் போட்டா. பணத்தை உங்ககிட்ட வாங்கிக்க சொன்னா!” என்றான் வீரப்பன்.

“என் புள்ளையா?” என்று திகைத்தவர், உடனே ஆன்லைன் கிளாசுக்காக அவளுக்கென வாங்கிக்கொண்டுத்த மொபைலுக்கு அழைத்து ‘அப்படியா?’ என்று கேட்க, அவள் ‘ஆம்’ என்றதும் “உன்னை வீட்டுக்கு வந்து வச்சுக்குறேன் இரு’ என திட்டிவிட்டு, “எவ்ளோ ப்பா?” என்றார் வீரப்பனிடம்.

“இரநூறு”

முந்தானையில் இருந்த முடிச்சை அவிழ்த்து இருந்த இருநூறையும் அப்படியே அவனிடம் கொடுத்துவிட்டு மகளை வாய்க்குள் பொருமிக்கொண்டே உள்ளே சென்றார் விஜயா.

அவர் போனதும், “என்ன உன் புருஷன் தொழில் படுத்துருச்சு போல?” என்றான் நக்கலாய்.

“ஆமான்னு சொன்னா நீ வந்து எழுப்ப போறியா? போடா” என்றாள்.

“ம்ம்… தண்டசோறு திங்குற புருஷனை வச்சுக்கிட்டே உனக்கு இந்த அளவு ஏத்தம்?” என்றவன், “இனி அவ்ளோதான். எட்டாங்கிளாஸ் புள்ளக்கூட ஆன்லைன்ல கறி வாங்குது. இனி நீங்க கடை திறந்தாலும், ஈ தான் ஓட்டனும்!” என்றான்.

அவள் பதிலே சொல்லாமல் கன்னம் சுருங்குமளவு உதட்டை இழுத்து சிரிப்பதை போல நின்றிருந்தாள்.  உன் பேச்சை நான் மதிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லியது அவள் சிரிப்பு.

“பேசாம ஆடு கோழி எல்லாம் எங்க ‘ஆப்’புக்கே வித்துட சொல்லேன் உன் புருஷனை! கை செலவுக்கு ஆவும் ல?” அவளை சீண்டிவிடும் எண்ணத்திலேயே அவன் பேச, “வாசல் அந்தப்பக்கம்” என்று வெளியே கைகாட்டினாள் நிம்மதி.

முகம் கடுகடுக்க, வாசல் வரை போனவன், “வந்தது வந்துட்டேன், ரெண்டு டப்பா குடு, உனக்கு போனி ஆன மாறி இருக்கும்ல!?” என்றான். அவளை சீண்டிவிட்டு கத்த விட வேண்டும் போன்ற ஆவல் அவனுக்கு.

“ ‘சில்லறைக்கு’ எல்லாம் இங்க விக்குறதில்லை” என்றாள் அவள், ‘சில்லறையை’ மட்டும் வெகுவாய் அழுத்தி. அவனுக்கு முகமே சூடானது.

“யாரை பார்த்து என்ன சொன்ன?” எகிறலாய் அவன் வர,  “என்ன சத்தம் இங்கே?” என்று வந்தான் அண்ணாமலை. அவனை கண்டதும் வீரப்பனின் எகிறல் தணிந்துப்போனது. அவன் இந்த சமயத்தில் வீட்டில் இருப்பான் என இவன் எண்ணவில்லை போல.

“ஒன்னும் இல்ல, ரெண்டு டப்பா பிஸ்கட் கேட்டாரு! நம்ம மொத்த வியாபாரம் தானே? சில்லறைக்கு இல்லன்னு சொன்னேன்!”

நிம்மதி சொல்ல, “இங்க நாய் பிஸ்கட் விக்குறோமா என்ன?” என்றான் அண்ணாமலை, வீரப்பனை பார்த்துக்கொண்டே.

அதற்கு மேல் நிற்காமல் லேசான முறைப்புடன் வேகமாய் வெளியேறியவன், முதுகில் தன் பையை மாட்டிக்கொண்டு பைக்கில் வேகமாய் சென்றுவிட்டான்.

“எதுக்கு வந்தான்!?” அவன் போனதும் கேட்டான் அண்ணாமலை.

“ஆன்லைன்’ல கறி விக்குற கடைல டெலிவரி பாயா இருக்கான் போல. விஜயா அக்கா பொண்ணு ஆர்டர் போட்டுதுன்னு காசு வாங்க வந்தான்” என்றவள் கூடவே அவன் பேசிய எள்ளல்களையும் சொல்ல, அதையெல்லாம் அவன் பெரிதாக கண்டுக்கொண்டானில்லை..

அவள் சொன்ன முன்னதை கேட்ட அண்ணாமலைக்கு ஆச்சர்யம்.

“அந்த பாப்பா ஆர்டர் போடுதா?” அவன் கேட்க, “ம்ம்… உன்னமாறியே எல்லாரும் இருப்பாங்களா? உலகம் எவ்ளவோ முன்னாடி ஓடிக்கிட்டு இருக்கு!” என்றபடி உள்ளே போனவள், “நீ கடை திறந்துருந்தா இவங்க எல்லாம் ஏன் வெளில வாங்கப்போறாங்க” என்றாள் போறபோக்கில்.

அண்ணாமலையின் புருவங்கள் யோசனையாய் சுருங்கியது.

***

அண்ணாமலையின் வீட்டு வேலை ஆரம்பித்த பின்பு நிம்மதிக்கு அலைச்சலும் பொறுப்பும் கூடித்தான் இருந்தது. பத்து சென்ட் இடத்தில் இரண்டு செண்டிற்கு அனாமத்தாக ஒரு வீட்டை கட்டிவிட்டு மீதமிருந்த இடத்தை மாட்டுதொழுவமாய் மாற்றிவைத்திருக்க, இனியும் அதை அப்படியே விட முடியாது என்று தான் அவளே முன்னெடுத்து வீட்டை சீரமைக்க ஆரம்பித்தது.

எப்படியும் மீதமிருக்கும் மூவரும் திருமணம் செய்கையில் வீடு வேண்டுமே! என்னதான் அது முழுக்கமுழுக்க அண்ணாமலையின் சொத்து என்றாலும், அந்த எண்ணம் அவனுக்கே கூட கிடையாது.

கீழே மூன்று மேலே இரண்டு என தனி தனி வாசல் வைத்த ஐந்து தொடர் வீடுகளை அவள் கேட்டிருக்க, ஆறு மாத கெடுவில் முடித்து தருவதாக எஞ்சினியர் சொல்லி வேலையும் நடந்துக்கொண்டிருக்கிறது. பணம் முழுக்க அவள் பொறுப்பு. கூட இருந்து கவனிப்பது, பொருட்கள் வாங்கித்தருவது இதெல்லாம் ஆண்கள் நால்வரும் பார்த்துக்கொண்டனர்.

யாருக்கோ என்னவோ நடக்கிறது என அண்ணாமலை இதுவரை ஒரு வார்த்தை கூட அவளிடம் இதுபற்றி பேசவில்லை. அவன் குணநலனை கண்டு நிம்மதிக்கு இப்போதெல்லாம் ஆயாசமாய் இருந்தது.

என்ன இவன் இப்படி இருக்கிறான்!? என தோன்றாத நாளே இல்லை.

ஆளே இல்லாத கடையில் கூட ஈயோட்டிக்கொண்டு நகராமல் கிடப்பவன், இப்போது வீம்பு தான் முக்கியம் என அதை பற்றிய கவலை சிறிது கூட இன்றி அவளுக்கு உதவிக்கொண்டு அவளோடே இருப்பது நிம்மதிக்கு உண்மையில் கவலையை தான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போனது.

அதே யோசனையில் அமர்ந்திருந்தவளை பார்த்தவன், “மணி ஒன்பது தாண்டிடுச்சு, சோறு போடுற எண்ணம் இருக்கா இல்லையா?” என்றான் டிவியை பார்த்துக்கொண்டே.

அவன் குரலில் திரும்பியவள், “ஏன் நான் போட்டு குடுத்தா தான் உன் வயிறு நிறையுமா? இல்ல ஒவ்வொரு நடையும் நான் போட்டு குடுத்து தான் நீ கொட்டிக்குரியா?” என்றாள் சுள்ளென. பின்னே, பகலில் அவனுக்கு சாப்பாடு போட என வீட்டிற்குள் அவள் வந்தால் கூட, “ஏன் எனக்கு கை கால் விளங்காம கடக்கா? நான் போட்டுப்பேன் நகரு” என முகத்தில் அடித்தார் போல பேசி விரட்டுவானே!

அவள் பேச்சில் அவன் அமைதியாக எழுந்து சென்று தனக்கு வேண்டியதை போட்டுக்கொண்டு வந்து உண்ண ஆரம்பிக்க, “ஹும், ராத்திரிக்கு மட்டும் தான் பொண்டாட்டி கண்ணுக்கு தெரிவா” என்றாள் அவன் காதுப்படவே முனகல் போல.

“ஏன் பகலுக்கும் வேணுங்குதா?” உண்டுக்கொண்டே அதக்கிய குறும்போடு அவன் கேட்க, ‘ஹும்?’ என விழித்தாள். சில நொடிகள் தான். அவள் சொன்ன அர்த்தம் என்ன? அவன் புரிந்துக்கொண்டு கேட்கும் அர்த்தம் என்ன? என்று கோவம் வர, வாய்க்குள் அவனை மோசமாய் திட்ட, கேட்டும் கேளாதவன் போல செய்தியை பார்த்துக்கொண்டே உண்டுக்கொண்டிருந்தான்.

அவளும் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு வந்து அமைதியாய் உண்டாள்.

மணி ஒன்பதரையை நெருங்கும் நேரம்,  நிம்மதியின் எண்ணுக்கு அழைப்பு வர, “சொல்லுங்க இஞ்சினியர் சார்” என பேச ஆரம்பித்தாள் நிம்மதி.

மறுபக்கம் அவர் சொன்ன தகவலை கேட்டு ‘ம்ம்’ போட்டவள், “சார், ஆறு மாசத்துல முடிக்கணும்ன்னு அவுதி அவுதியா எதுவும் பண்ணிடாதீங்க. நல்லா தரமா காலத்துக்கும் நிலைக்குற மாறி கட்டித்தாங்க” என்றதோடு, “சிமென்ட் கம்பி எல்லாம் நான் சொல்ற பிரான்ட் வாங்கிக்கோங்க சார். விலை கம்மில என்னத்தையும் வாங்கி போட்டுடாதீங்க” என்றாள்.

அவர் அடுத்து பேசியதற்கு, “சரிங்க சார். காலைல வந்து பாக்குறேன், நீங்க ஸ்டாக் இருக்கான்னு மட்டும் விசாரிச்சுட்டு எனக்கு உடனே சொல்லுங்க” என்று சொல்லி வைத்தவள் கண்கள் அண்ணாமலையை தான் பார்த்தன.

‘என்ன சேதி?’ என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டானா என அவள் பார்க்க, அவன் செய்தியையே வைத்தகண் வாங்காமல் பார்த்திருந்தான்.