அத்தியாயம் 5

பாரதி தன்னை ஒதுக்குவதை கூறி விக்ரம் போதையில் புலம்பியவாறே இருக்க, “நீ அவ கூட ப்ரேன்ட்லியா பேசு. வாங்க, போங்க என்று நீ தான் அவள ஒதுக்குற” என்றான் ரகுராம்.

“ஐடியா கொடுக்கிறான் விளங்காதவன். அவளுக்கு நான் யாரென்றே தெரியாதே. ஒருமையில் பேசினா அவ என்ன வெறுக்க மாட்டாளா?” ரகுராமை திட்டியவாறே தூங்கிப் போனான் விக்ரம்.

“போதைலையும் தெளிவாத்தான் இருக்கான்” கவலையாக விக்ரமை பார்த்த ரகுராமோ பாரதியுடனான உரையாடலை யோசித்துப் பார்கலானான்,

“என்ன மேடம் அப்பொறம் பேசலாம் என்று சொன்னீங்க. அப்படியே போய்ட்டீங்க. மறந்துட்டீங்களா?”

“இப்போ நான் ப்ரீ தான். இப்போவே பேசலாமே” என்று சிரித்தாள்.

இதை பார்த்து பொறாமை கொண்டு தான் விக்ரம் ரகுராமை அழைத்திருந்தான்.

விக்ரம் அழைப்பது தெரிந்தும் ரகுராம் அழைப்பை ஏற்காது பாரதியை அழைத்துக் கொண்டு வெளியேறினான். 

இருவரும் வந்தது ஒரு உணவகத்துக்கு.

“எங்க தங்கி இருக்க?” விக்ரம் மீது கோபமாக இருக்கிறவள் அவனிடமே வேலைக்கு வந்த காரணத்தை பேசத்தானே உணவகத்துக்கு வந்தார்கள். அவளிடம் கடுமையாகவோ, கிண்டல் செய்யவோ ரகுராம் எண்ணவில்லை. அதனாலயே பேச்சை ஆரம்பிக்க அவள் எங்கே தங்கி இருக்கிறாள் என்று அறிந்தும் கேட்டான்.

பாரதி தான் எங்கே தங்கி இருக்கிறேன் என்று கூறியதும் “ஓஹ்… நானும் அதே ஏரியாதான். செலப்பிரடீஸ் அண்ட் பிஸ்னஸ் பீர்பல் மட்டும் தான் அங்க இருக்காங்க. சமூகம் பெரிய இடம் தான்” என்று சிரித்தவன் தன்னோடுதான் விக்ரமும் தங்கியிருக்கின்றான் என்பதை கூறாமல் மறைத்தான்.

விக்ரம் மீது கோபத்தில் இருப்பதால் பாரதியும், பேசினால் விக்ரமை பற்றிய உண்மைகளை சொல்ல நேரிடும் என்று ரகுராமும் அவர்களின் கடந்த கால வாழ்க்கையை பற்றி பேச விரும்பவில்லை.

தாங்கள் பார்க்கும் வேலையை பற்றியும், கஷ்டநஷ்டங்களை பற்றியும் மட்டுமே பேசலாயினர்.

பாரதி தான் எவ்வாறு முயற்சி செய்து முன்னேறினாள். தனக்கு கார்த்திகேயன் எவ்வாறெல்லாம் உதவி செய்தான் என்று கூற, ரகுராமுக்கு உதவியது விக்ரம் என்பதை அவனது பெயரை கூறாமல் “என் பிரெண்டு, என் பிரெண்டு” என்றே கூறினான்.

எவ்வளவு தான் விக்ரமை பற்றி பேசக் கூடாது என்று இருவரும் நினைத்தாலும் தவிர்க்க முடியாது.

ரகுராமை பற்றி பேசும் பொழுது விக்ரமை பற்றி பேசாமல் இருக்க முடியாது என்று பாரதிக்கும் தெரியும்.

அதனால் அவளே ஆரம்பித்தாள். “என்ன உன் ப்ரெண்டுக்கு பெயர் இல்லையா?” என்று பாரதி கிண்டல் செய்ய,

“அவன் பெயரக் கேட்டா உன் பி.பி எகிறி உன் முகம் சிவக்குதே அதான்….” என்று சிரித்தான்.

“எனக்கு அவனை தான் பிடிக்காது. அவன் பெயர் எந்த பாவமும் செய்யலையே. இந்த உலகத்துல எத்தனை விக்ரம் இருக்காங்க. அவங்க எல்லாரையும் நான் வெறுக்கலையே” விக்ரமை பிடிக்காது. கோபமாக இருக்கிறேன் என்று கூறுபவளின் ஆழ்மனம் அவனை பற்றி மட்டுமே சிந்திப்பதால் தான் இவ்வாறான வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வருகிறது என்று அவளே அறியாள்.

“ஓஹ்.. ஓஹ்.. ஆனா விக்ரம் உன்ன வெறுக்கிறது போல தெரியலையே” நண்பன் தான் பாரதியின் மேல் அன்று போல் இன்றும் பித்துப் பிடித்து அலைகிறானே. நீண்ட நாட்களுக்கு பின் இருவரும் சந்தித்துக் கொண்டதன் விளைவாக இவளின் கோபம் தணிந்திருக்குமா என்று கூர்நது அவள் என்ன சொல்வாள் என்று பார்த்தான்.

“ஆமா… ஆமா… நடந்த எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, அவன் நல்லா தான் இருக்கான். வாங்க, போங்க என்று என்னமா உபசரிப்பு. பக்கா பிசினஸ்மேன்” வெறுமையாக புன்னகைத்தாள்.

அவர்கள் என்று சந்தித்துக் கொண்டார்களோ அன்றே ஒருமையில் பேசலாயினர். இன்று விக்ரம் பன்மையில் பேசுவதை வைத்தே அவன் அவளை அன்றும், இன்றும், என்றும் காதலிக்கவுமில்லை. காதலிக்கவும் மாட்டான். மீண்டும் அவளோடு விளையாட நினைக்கிறான் என்று தான் எண்ணினாள். 

உண்மையை கூற முடியாமல் “அவன் தூக்கிப் போடல. உன்ன மட்டும் தான் நினைச்சுகிட்டு இருக்கான்” என்று நினைத்தவன் “நீ அவன்கிட்ட வேலைக்கு வந்தது அவனை பழிவாங்க இல்லையே. நீ அவனை என்னவேனாலும் பண்ணிக்க. ஆனா கம்பனியை ஏதும் பண்ணிடாத. அத நம்பித் தான் என் வாழ்க்கையே அடங்கி இருக்கு” பயந்தவன் கவலை கொண்டால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு நெஞ்சில் அடித்தவாறு கூற,

“நீ நடிகன் தான்…” என்று சிரித்த பாரதி “என்ன பார்த்தா வில்லி போல தெரியுதா? நான் அவனையே பழிவாங்க நினைக்கல. இதுல கம்பனிய என்ன பண்ண போறேன்” தான் விக்ரமிடம் வேலை பார்க்கவே எண்ணவில்லை. ஆனால் வேலையில் சேர்ந்து விட்டேன். ஏன்? எதற்காக என்ற குழப்பம் அவளுக்குமே இருக்கத்தான் செய்தது. ஆனால் அவனை பழிவாங்க நினைக்கவில்லை என்பதில் உறுதியாக இருந்தாள்.

“நீ மாறவே இல்ல…” கல்லூரி நாட்களிலும் அவள் மற்றவர்களின் நலனை பற்றித்தான் யோசிப்பாள். செய்த உதவியை கூட சொல்லிக்காட்ட மாட்டாள். அவள் செய்த உதவியை தான் தான் செய்தேன் என்று வேறு யார் கூறினாலும் சண்டை கூட போடாதவள். அவ்வளவு இளகிய மனம் படைத்தவள் விக்ரமை பழிவாங்க நிச்சயமாக நினைக்க மாட்டாள். இப்பொழுது அதை அவள் வாயாலையே கூறியும் விட்டாள். அவளுக்கு அவன் மேல் இருப்பது கோபம் மட்டும் தான். “இருவரையும் மீண்டும் எவ்வாறு சேர்த்து வைப்பது?” என்று சிந்திக்கலானான் ரகுராம்.

அதே சிந்தனையில் கம்பனிக்கு வந்த ரகுராம் பாரதியை பார்த்ததும் ஆனந்தமாக அவளிடம் உரையாடலானான்.

“என் கூடத்தானே வந்தான். டயடா இருக்கு. நீயே ட்ரைவ் பண்ணு என்று சொல்லும் போதே உஷாரா இருக்கணும். நான் வண்டிய பார்க் பண்ணிட்டு வர்றதுக்குள்ள பாரதிகிட்ட கடல போட ஆரம்பிச்சுட்டான். ரகுராமை முறைத்தவாறே உள்ளே வந்தான் விக்ரம்.

அவனை முறைத்த இன்னொரு ஜீவன் மோகனா. வீட்டுக்கும் போகாமல் விமானநிலையத்தில் இருந்து நேராக வந்தது அண்ணனின் கம்பனிக்கு. காரணம் ரகுராம். இந்த நேரத்தில் அவன் இங்குதான் இருப்பானென்று அவனை காண வந்தால் அவனோ சுற்றி யார் இருக்கிறார்கள் என்று கூட கவலை படாமல் ஒரு பெண்ணோடு சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றான்.

எரிமலையாக வெடிக்கக் போனவளை தடுத்தது விக்ரமின் குரல் தான்.

“ஏய் குட்டிமா எப்படா வந்த?” நண்பனை முறைத்துக் கொண்டிருந்தவன் தற்செயலாக திரும்பியிருக்க மோகனாவை பார்த்திருந்தான்.

“அண்ணா…” என்றவாறே மோகனா ஓடிவர, அவர்களின் சத்தத்தில் ரகுராமும், பாரதியும் அவர்களை பார்களாயினர்.

 “ஓஹ்… இவதான் விக்ரமின் தங்கையா?” என்று பாரதி பார்க்க, அவளை கண்கொட்டாமல் பார்த்திருந்தான் ரகுராம்.

ஆளவந்தான் ரகுராமன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் பெயரில்  அவனை ஆஸ்டலில் தங்க வைத்து படிக்க வைக்க, ஆளவந்தாரின் மகன் என்று அறியாமளையே ரகுராமும் விக்ரமும் நண்பர்களாயினர்.

விடுமுறைக்கு கூட ரகுராம் வீட்டுக்கு செல்லாததை பார்த்து, அவனுக்கு யாருமில்லை என்று அறிந்து கொண்ட விக்ரம் ரகுராமை அவனோடு வீட்டுக்கு அழைத்து வந்த போது தான் விக்ரம் ஆளவந்தாரின் மகன் என்றே அறிந்து கொண்டான் ரகுராம். விக்ரமின் வீட்டுக்கு வந்த பொழுதுதான் ரகுராம் முதன் முதலாக மோகனாவை பார்த்தான்.

பத்தே வயது குட்டிப் பொண்ணான மோகனா இவர்களையே சுற்றிக் கொண்டிருக்க, அவளை விக்ரம் சீண்டும் பொழுதெல்லாம் காப்பாற்றி விடுவது ரகுராம் தான்.

இவளும் அவனை பிடித்துக் கொண்டு ப்ராஜெக்ட், ஹோம் வார்க்க செய்வது என்று வேலைகள் வாங்கியதோடு, விக்ரமை கூட கவனிக்காமல் அவன் உன்ன அமர்ந்தாள் தண்ணீர் கொடுப்பது, சாப்பிட்ட பின் கை துடைக்க கொடுப்பது, தூங்கப்போனால் விரிப்பை சரி செய்வது என்று அவனுக்கு அடிமையாக வேலை பார்கலானாள்.

விக்ரம் அலைபேசியில் உரையாடும் பொழுது சில நேரம் ரகுராமுடன் நன்றாகப் பேசுவாள்.

கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு விக்ரமோடு ரகுராம் வந்த பொழுது வயதுக்கு வந்திருந்தாலும் நன்றாகத்தான் பேசினாள். ஆனால் ரகுராம் அவள் குழந்தையல்லவே என்று கொஞ்சம் ஒதுக்கம் காட்டலானான். அதற்கு காரணம் ஆளவந்தான் தான்.

ரகுராமின் தந்தை ஆதியப்பன் ஆளவந்தானின் கம்பனியில் தான் மேனேஜராக வேலை பார்த்தார். ஒரு பகுதியில் இருந்த இயந்திரங்களை பழுது பார்க்க வேண்டிய காலம் தாண்டிச்சென்றுக் கொண்டிருக்க, ஆதியப்பன் பல தடவை ஆளவந்தானிடம் கூறியிருந்தான்.

புதுக் கம்பனி ஆரம்பித்த பதட்டத்தில் இருந்த ஆளவந்தான் அப்பொறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி, அதை பற்றி மறந்தும் போய் இருந்தான்.

பழுது பார்க்காத இயந்திரத்தில் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அதில் ஒருவன் பாரதியின் தந்தையாகிப் போனது விதி.

இயந்திரம் சூடாகி வெடித்ததினால் அனைவரும் காயமுற்றனர். ஒரு தடித்த இரும்பு பாரதியின் தந்தையின் தலையிலையே மோதியதால் சம்பவ இடத்திலையே உயிர்நீர்த்திருக்க, பாதிக்கப்பட்டோரின் குடும்பம் போராட்டம் செய்யலாயினர்.

பிரச்சினை பெரிதானதும் தொழிலில் கைதேர்ந்த ஆளவந்தான் அவர்களை பணத்தால் அடக்க நினைத்தான். பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியானாலும், பாரதியின் அன்னை சுப்பு லட்சமி மட்டும் பணம் வாங்காமல் ஐந்தே வயதான பாரதியை அழைத்துக் கொண்டு தனியாக போராட்டம் செய்யலானாள்.

எந்த வழக்கும் பதிவாகாமல் யார், யாருக்கு பணம் கொடுக்க வேண்டுமோ அனைவரையும் சரிகட்டியிருக்க, சுப்பு லட்சுமியை அடக்குவது எப்படியென்று ஆளவந்தானுக்கு புரியவில்லை.

நடந்த சம்பவத்திற்கு யாராவது பொறுப்பேற்றுக் கொண்டு சிறை சென்றால் மட்டும் தான் சுப்பு லட்சுமி அடங்குவாளென்று இன்ஸ்பெக்டர் கூறியிருக்க, பலியானது ரகுராமின் தந்தை ஆதியப்பன்.

ரகுராமை படிக்க வைப்பதாக சத்தியம் செய்துக்க கொடுத்து ஆதியப்பனின் கவனக்குறைவால் தான் இயந்திரம் கோளாறானது என்று ஆதியப்பனை சிறைக்கு அனுப்பிய ஆளவந்தான் சொன்னது போல் ரகுராமை படிக்க வைத்தது உண்மைதான். “விக்ரம் என் மகன் என்று அறிந்து தான் ப்ரெண்ட்டானியா?” என்று கேட்டது மட்டுமல்லாது, பார்க்கும் பொழுதெல்லாம் தரம்தாழ்த்திப் பேசுவதும், மட்டம் தட்டவும் மறக்கவில்லை.

ரகுராமுக்கு உறுதுணையாக நின்றது விக்ரம் மட்டும் தான். விக்ரமோடு பழகுவது போல் மோகனாவிடம் பழகினாலும் ஒரு வயது வரும் வரைதான். அவளோடு பேசிப்பழகுவதால் கூட ஆளவந்தான் பிரச்சினை செய்யக் கூடும் என்று தான் அவளை தவிர்கலானான்.

அவனை பார்த்த உடனே அவளுக்கு பிடித்திருந்ததோ, பேச ஆரம்பித்த பின் பிடித்திருந்தது தெரியவில்லை. அவன் ஒதுக்கம் அவள் மனதில் அவன் மீது அன்பையும், ஆசையையும் விதைத்ததோ அவள் அறியாள். தந்தை அவனை “அண்ணா” என்று அழைக்க கூறிய பின் தான் அவள் மனம் அவளுக்கு புரிய ஆரம்பித்தது.

அவன் காட்டிய ஒதுக்கத்தால் “அண்ணா” என்று அழைப்பதை கடுமையாக எதிர்த்தவள் அவனிடம் சாதாரணமாகத்தான் பேசினாள்.

என்று அவன் நடு வீதியில் வைத்து ஒரு பெண்ணை முத்தமிடுவதை கண்டாளோ அன்று அவன் மீது சினம் கொண்டவள் தான். பாடசாலை படிப்பை முடித்த கையேடு வெளிநாட்டிற்கு சென்றவள் இதோ இப்பொழுதுதான் ஊர் திரும்பியிருக்கின்றாள்.

என்னதான் ரகுராம் அவளை ஒதுக்க நினைத்தாலும், அவனறியாமையே அவன் மனம் அவளின் பால் ஈர்த்துக் கொண்டிருப்பதை அவன் உணரவில்லை. உயிர் நண்பனின் தங்கை. தனக்கும் தங்கை போன்றவள் என்று தான் அவளோடு மல்லுக்கட்டுவான். ஆனால் இன்று அவள் முழுப்பெண்ணாக அவன் முன் வந்து நின்றிருக்க, அவனது காதல் ஹார்மோன்கள் தட்டியெழுப்பட்டு, இதயத்தில் காதல் மொட்டுவிரிக்க ஆரம்பித்திருந்தன. பாவம் அவன், மோகனா அந்த மலர்களை அடிக்கடி கொய்து அவனுக்கே மலர்வளையம் வைப்பாள் என்று கிஞ்சத்திற்கும் நினைத்துப் பார்க்க மாட்டான்.

“ஆறு வருஷம் வெளிநாட்டில் இருந்தவள் எவ்வளவு மாறிட்டா” என்று முணுமுத்தவாறே அவர்களை நெருங்கி “ஆளே அடையாளம் தெரியல” என்றான்.

“அவர்களை பார்த்திருந்த பாரதி விக்ரம் தங்கையை பற்றி பேசியிருந்தாலும் இதுவரை சந்தித்திராததால் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

ரகுராமை கண்டு கொள்ளாது அண்ணனை கொஞ்சியவள் “இனிமேல் நான் உன் கூடத்தான் இருக்கப் போறேன். உன் கூடத்தான் வேல பார்க்கப் போறேன்” விக்ரமிடம் கூறினாலும் “டேய் மாடலு உன்ன வச்சி செய்யிறேண்டா” என்று கருவிக் கொண்டாள். 

“ஒன்னு கூடிட்டாங்கய்யா, ஒன்னு கூடிட்டாங்க” ரகுராம் தொண்டையை கனைக்க அண்ணனும், தங்கையும் ஒரேநேரத்தில் அவனை முறைத்தனர்.

“என்ன முறைப்பு. ரெண்டு பேரும் சேர்ந்து என்ன ரவுண்டு கட்டி அடிக்கலாமென்ற எண்ணமா? எனக்கு ஷூட்டிங் இருக்குப்பா…” என்று நழுவ முயன்றான்.

அவனை பின்னாலிருந்து இழுத்த மோகனா “எங்க ஓடுற? நீதான் கம்பனியை சுத்திக்காட்டணும்” என்று அவனை இழுத்துச் சென்றாள்.

“நான் எதுக்கு உனக்கு சுத்திக்காட்டணும்? நீ உன் அண்ணன் கூட போ…” வாய் தான் அவ்வாறு கூறியதே ஒழிய அவள் இழுத்த இழுப்புக்கு அவளோடு சென்றான்.

கம்பனியை சுற்றிப் பார்த்தவாறே அங்கு வேலை செய்பவர்களை அறிந்து கொண்டவள், குறிப்பாக அங்கிருக்கும் பெண்களோடு ரகுராம் எவ்வாறு பேசுகிறான். அவர்கள் அவனோடு எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று கூர்ந்து கவனிக்கலானாள். 

சில பெண்கள் அவனை தொட்டுத் தொட்டுப் பேசுவதும், சிலர் அவனை கட்டியணைத்து பேசுவதையும் பார்த்து வயிறெரிந்தவள் “பொண்ணுங்க உன் மேல விழுறத பார்த்தா, உன் கிட்ட சேப்பா பழகலாம் என்று நினைக்கிறாங்க போல” வந்த சிரிப்பை வாய்க்குள்ளையே அடக்கினாள் மோகனா. 

“இல்ல புரியல” மோகனா காரணமில்லாமல் எதையும் சொல்லமாட்டாளே என்ற சந்தேகத்தில் கேட்டான்.

“உனக்குத்தான் பொண்ணுங்கள பிடிக்காதே. பசங்களைத்தானே பிடிக்கும். அதான் உன் கூட நெருக்கமா….” என்றவள் அவனை சுவரோடு தள்ளி அவனை நெருங்கி நின்றாள்.

அவளை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும் அவன் இதயம் பட படவென துடிக்கனானது.

அவன் கன்னத்தை ஒரு விரலால் தடவியவாறே “பேசாம உன்ன என் பாடிக்காட்டா வச்சிக்கலாமென்று நினைக்கிறன். உனக்குத்தான் பொண்ணுங்கள பார்த்தா எதுவும் தோணாதே. அதுவும் என்ன பொண்ணா கூட பார்க்க மாட்டியே” அவன் உதடுகளை தன் உதடுகளால் உரசுவது போல் நின்று கூறியவள், தனது கைப்பையை அவனிடம் கொடுத்து “ப்ளோமீ” என்று நகர்ந்தாள்.

அவளது அருகாமையில் உறைந்து நின்றவன், அவள் நகர்ந்ததும் “ஆமா…. இப்போ இங்க என்ன நடந்தது?” தன்னிடமே கேட்டுக் கொண்டு மந்திரிச்சு விட்ட கோழி போல் அவள் பின்னால் சென்றான்.

என்ன இவள் இப்படி நடந்துக்க கொள்கிறாள் என்ற யோசனையோடு அவளை பார்த்தவனின் கண்கள் அவள் பின்னழகை ரசித்தவாறு புன்னகைத்தான்.

ஒருநொடி தெளிந்தவன் அவன் கன்னத்தில் அவனே அடித்துக் கொண்டு “என்னடா பண்ணுற? இது நம்ம மோகனா” என்று அதிர்ந்தான்.

கன்னத்தில் அறையும் சத்தம் கேட்டு மோகனா திரும்ப, ரகுராமன் மேல் மோதி நின்றாள்.

அவள் விழுந்து விடுவாளோ என்று இவன் அணைத்துகொள்ள மோகனாவின் இதயம் பட படக்கலானது. நிமிர்ந்து அவனை பார்க்க,

அவள் கண்களை பார்த்த ரகுராமின் இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் துடிக்க, மெதுவாக அவளை தள்ளி நிறுத்தி “பார்த்து நடக்க மாட்டியா? இப்படித்தான் சொல்லாம திரும்புவியா? அவளை கடிந்து கொண்டாலும் எங்கே அவன் இதயத்துடிப்பை அவள் கேட்டு விடுவாளோ என்று தன் நெஞ்சின் மீது கைவைத்தவாறே பேசினான். 

“எத்தனை பொண்ணுங்க கைய புடிச்சிகிட்டு நடிச்சிருக்கேன். என்ன இவ பக்கத்துல வந்தா மட்டும் ஹார்ட் டப்பு, டப்புனு துடிக்குது” புரியாமல் முழித்தவன் இந்த உணர்வுக்கு என்ன அர்த்தம் என்று யோசிக்க, அதை செய்யவிடுவாளா மோகனா?

அவளை முறைத்தவாறு இவன் பேசவும் எரிமலையானவள் “நான் ஒழுங்காதானே போய்கிட்டு இருந்தேன். அறையிற சத்தம் கேட்டு திரும்பினேன். நீ என்ன கொசுக்கூட விளையாடுறியா? இது விளையாடுற நேரமா?  கம்பனில என்ன விளையாட்டு? வேலை பார்க்க மாட்டியா? ஓஹ்… எங்கண்ணன் தலையில எல்லா வேலையையும் கட்டிட்டு நீ ஜாலியா பொண்….” என்று நிறுத்தி… “பசங்க கூட கடலை போடுறியா?” சரவெடியாக வெடித்தாள்.

அவள் சொன்னவைகள் அத்தனையும் காதில் விழுந்தாலும் கடைசியாக சொன்னது மட்டும் நாராசமாக விழுந்தது.

அவளை இடையோடு அணைத்து அவள் அதிர்ந்து நின்ற வேளை அவளை முத்தமிடலானான்.

ஒரு நொடி உறைந்த மோகனா அவனை, தடுக்கவுமில்லை. விட்டு விலகவுமில்லை. அவன் கொடுத்த முத்தத்தை ரசிக்கலானாள். 

எத்தனை வருட காதல்? சொல்லலாமா? வேண்டாமா? என்ற குழப்பம். ஒருவழியாக தைரியம் வரவழைத்துக் கொண்டு காதலை சொல்லப் போனவளுக்கு அவன் வேறொரு பெண்ணை முத்தமிடுவதை கண்டதும் இதயம் சுக்குநூறாகி அவனை விட்டு விலகி தூரமாக சென்றிருந்தாள்.

தூர தேசம் சென்றாலும் ரகுராம் என்ன செய்கிறான் என்று சமூக ஊடகங்களின் வழியாக அறிந்துக் கொண்டுதான் இருந்தாள்.

ஒரு ஊடகத்துக்கு அவன் கொடுத்த பேட்டியில் அவனுக்கு காதலி என்று ஒருத்தி இல்லவே இல்லையென்று கூறியிருந்தான். அவள் மனம் ஆனத்தில் குதித்தாலும் அண்ணனிடம் “என்னமா உன் நண்பன் புளுகுறான். இந்நேரத்துக்கு எல்லா மாடலையும் கரெக்ட் பண்ணி இருப்பான்” என்று வசைபாட,

“குட்டிமா நீயே புரளியை கிளப்பாத. அவன் ராமன்மா…  அவன் ஒரு அக்மார்க் தங்கம்” என்றிருந்தான்.

“உரசிப்பார்த்துடா வேண்டியது தான்” என்று சிரித்தவள் வந்த உடனே அவனை சீண்ட ஆரம்பித்திருந்தாள். அவனே முத்தமிடும் பொழுது அவள் தடுக்க நினைப்பாளா? அனுபவிக்கலானாள்.

என்ன செய்கிறோம் என்று உணர்ந்தவன் “விக்ரம் பார்த்தா தொலைச்சிடுவான்” அதிர்ச்சியாக விட்டு விலகி “என்ன பத்தி என்ன நினைக்கிற? உங்கண்ணன் புரளியை கெளப்பினா நம்பிடுவியா? அமைதியா வந்தா கம்பனியை சுத்திக்கு காட்டுறேன். இல்லனா அப்படியே கிளம்பு” கடுமையாக பேச முயற்ச்சி செய்து தோற்றவன் அங்கிருந்து ஓடாத குறையாக நகர்ந்து விட்டான்.

“டேய் என் பெர்ச கொடுத்துட்டு போடா…” என்று மோகனா கத்தியது காற்றோடு தான் கலந்து மறைந்தது.

ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்

உறவொன்று  கேட்கிறேன்

வரை மீறும் இவளின் ஆசை

நிறைவேறப் பார்க்கிறேன்.

நதி சேரும் கடலின்மீது

மழை நீராய் சேருவேன்.

அமுதே பேரமுதே

பெண் மனதின் கனவின்

ஏக்கம் தீர்க்குமா ஏறக்குமா ?

மதியை தன் மதியை

இவன் அழகின் பிம்பம்

கண்கள் பார்க்குமா

தோற்குமா…