வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்த நிம்மதி, இன்னமும் கூடத்தில் தலைகுப்புற படுத்து உறங்கிக்கொண்டிருந்த அண்ணாமலையை சலிப்பாக பார்த்தாள். சூரியனுக்கு முன்னே எழுந்து நொடிக்கூட நிற்காமல் வேலைகளை இழுத்துப்போட்டு செய்பவனை இப்போதெல்லாம் எழுப்பி உட்கார வைப்பதே இவளுக்கு பெரும் வேலையாக தான் இருந்தது. அதைவிட கொடுமை, ‘கடையே கதி’ என இருந்தவன் இப்போது கடை திறப்பதே இல்லை.
“ம்ச்!” என கோபித்தவள், அருகே சென்று அவன் காலை தன் காலால் தட்டிவிட, லேசாக அசைந்தான் அவன்.
“யோவ், எந்துரிங்குறேன்ல?” என்றவள், “உன்னை தினம் கெஞ்சி கொஞ்சி எழுப்புறதெல்லாம் இனி சரிப்படாது! முன்னப்போல எழுந்து ஆம்பளையா லட்சணமா பொழப்ப பாரு! இல்லன்னா இன்னைக்கு மாறி பேசிட்டு இருக்க மாட்டேன். நாளைல இருந்து சுடுதண்ணி அபிஷேகம் தான் பாத்துக்க!” என்று திட்டிக்கொண்டு அடுக்களைக்குள் சென்றாள்.
முனகிக்கொண்டே சலிப்புடன் எழுந்தவன் படுத்த பாயை எடுத்துவைத்துவிட்டு வெளியே சென்றான். சில நிமிடம் சென்றதும் தடுப்புசுவர் தாண்டி எட்டிப்பார்த்த நிம்மதிக்கு அண்ணாமலை எழுந்துவிட்டது தெரிந்ததும் சற்று நிம்மதியாய் இருந்தது. அவனை அவன் போக்கில் இத்தனை நாள் விட்டது தவறு, இனி அவனை விரட்டி விரட்டியாவது பழைய ஆளாய் மாற்ற வேண்டும் என எண்ணிக்கொண்டே குழம்புக்கு தாளித்துக்கொண்டிருந்தாள்.
வியர்த்து வடிய வேலை செய்துக்கொண்டிருந்தவள் கழுத்து வளைவில் திடீரென விழுந்த சூடான மூச்சு அவன் நெருக்கத்தை அவளுக்கு உணர்த்த, பக்கத்து அடுப்பில் சூடாக இருந்த டீயை அவனை திரும்பியும் பார்க்காமல் ஒரு டம்ளரில் ஊற்றி தள்ளி வைத்தாள், ‘எடுத்துக்கொள்’ என்பதை போல.
“என்னடி நாய்க்கு வைக்குற மாறி வைக்கிற?” என்று கேட்டாலும், அதை எடுத்து அங்கேயே சாய்ந்து நின்று பருக ஆரம்பித்தான் அண்ணாமலை. அவன் தன் அருகே தான் நிற்கிறான் என்றாலும் அதை அவள் கண்டுக்கொள்ளாமல் இருக்க, “இதான் சொல்லுவாங்க, சம்பாதிக்காத புருஷனை சலவை கல்லா கூட மதிக்க மாட்டாங்க பொண்டாட்டிங்கன்னு” என்றான் அவளை பார்த்துக்கொண்டே.
அவள் மறுத்துக்கூட பேசவில்லை. குழம்பை இறக்கி வைத்துவிட்டு இட்டலி அவிக்கும் வேலையை ஆரம்பித்தாள்.
அவள் செய்கை எல்லாம் பார்த்துக்கொண்டே டீயை பருகியவன், “ஒப்புக்காது இல்லன்னு சொல்றாளா பாரு!” என சத்தமாய் முணுமுணுக்க, “இல்லன்னு எதுக்கு பொய் சொல்லணும்? ஆம்பளன்னா சம்பாதிக்கணும்! நல்லா ஓடிட்டு இருந்த கடையை இப்படி நாள் கணக்கா மூடி போட்டு வச்சுருக்க நீ!” என அடுப்பை பார்த்தபடி திட்டியவள், “எப்படி தான் மனசு வருதோ?” என்றாள் முனகலாய்.
கடைசி மிடறு வரை ருசித்து குடித்தவன், “சூப்பர் டீ!” என்றதோடு டம்ளரை வைத்துவிட்டு நகர, ‘பதிலே பேச மாட்டேனே, அமுக்கான்!’ என உள்ளுக்குள் திட்டிக்கொண்டவள், “குளிச்சுட்டு சாப்டு!” என்றாள்.
“ஏண்டி இப்போ தான் டீயே குடிச்சேன், அதுக்குள்ள திங்க சொல்ற?”
“வேலை இருக்கதால தான் சொல்றேன்!”
“எனக்கு அப்படி ஒன்னும் வேலை இல்ல” என்றவன், அலட்சியமாய் நகர்ந்துப்போக, பொறுமையை இழுத்துப்பிடித்தவள், “அப்பா இன்னைக்கு ஸ்கூல் லோடு அடிக்க போறாரு! பேக்கரி லோடுக்கு கூட போக ஆள் இல்ல! நான் போகணும்!” என்றவள் சொல்ல, “அதுக்கேன் நீ போற? டிரைவர் போதாதா?” என்றான்.
“இல்லய்யா! டப்பா கணக்கு சரியா இருக்கான்னு கூட நின்னு பாக்கணும். இல்லன்னா அங்கிருந்து ஃபோன் போடுவானுவ, ரெண்டை காணோம், நாலு குறையுதுன்னு! அதுமில்லாம, கையோட காசையும் வாங்கிட்டு வரணும். எப்பவும் அப்பா போவாரு. இன்னைக்கு ரெண்டு இடமும் காலிலேயே குடுத்தாவனும். ரெண்டும் ரெண்டு திசை. அதான் நானும் போனும்! அரை மணி’ல வண்டி வந்துடும், நீ குளிச்சுட்டு சாப்டுடு” என்றாள் விளக்கமாய்.
கறிக்கடையை தாண்டி ஒன்றும் தெரியாது அவனுக்கு. அவள் சொல்வதெல்லாம் கேட்க அவனுக்கு புதுமையாய் சுவாரஸ்யமாய் தோன்றியது. ஆனாலும், அசையாமல் இருந்தான்.
“சொல்ல சொல்ல உட்காந்தே கடக்க? எழுந்துரி!” அவள் பறக்கடிக்கவும், “போகப்போறது நீ, அதுக்கு நான் ஏன் கிளம்பனும்?” என்றான் புரியாமல்.
“அது…” என்று கொஞ்சமாய் இழுத்தவள், “உன் வீட்டை அளக்க சர்வையர் வரேன்னு சொன்னாரு இன்னைக்கு!” என்றாள்.
“என் வீடு’ன்னா? இதுவா?” அவன் தரையை தட்டி புரியாதவன் போல கேட்க, “இது நம்ம வீடு! நான் சொல்றது உன் பாட்டான் உனக்கு விட்டுட்டு போன வீட்ட” என்றாள் அவள்.
“ஓ” என்றவன், “அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அங்க தங்கி இருக்கவனுங்களை பாத்துக்க சொல்லிக்கோ” என்றான் அசிரத்தையாய்.
“ப்ச், ஸ்ஸ்! முடியல” என்றவள், அவன் அருகே அமர்ந்து, “யார் இருந்தாலும் இல்லன்னாலும் உடையவன் இருந்து பாக்குற மாறி வராது மாமா!” என்றாள்.
அதுவரை யாருக்கு வந்த விருந்தோ? என முகத்தை எங்கோ வைத்துக்கொண்டு அசட்டையாய் இருந்தவன், கண்கள் மின்ன விருட்டென நெருங்கினான் அவளை. அவன் வந்த வேகத்தில் இவள் ஓரடி பின்னே நகர்ந்துபோனாள் தன்னியல்பாய்.
“எ…என்ன?” அவள் கேட்க, “என்ன சொன்ன?” என்றான்.
“இல்ல… அது… உன் நல்லதுக்கு…” அவள் சற்றே திணற, “ப்ச் அதில்ல… கடைசியா… என்னை என்னன்னு சொன்ன?” என்றான் ஆர்வமாய்.
சில வினாடிகள் யோசனையில், அவள் தன்னை மீறி ‘மாமா’ என சொல்லிவிட்டது உரைக்க, “வாய் தவறி வந்துடுச்சு” என்றாள் உர்ரென்ற முகத்தோடு.
“ஆஹான்?” அவன் நம்பாமல் புருவம் உயர்த்த, “இப்போ என்ன? மறுபடி கல்லை கொண்டு அடிக்கப்போறியோ?” என்றவள் விரல்கள் தன்னை மறந்து இடப்புற புருவத்தை அவனறியாத வண்ணம் வருடிக்கொடுத்தது. சிறு வயதில் அவனது பாட்டி சொல்லை கேட்டு அவனை அப்படி அழைத்தவளை ஒருமுறை அவன் அடித்துவிட அதன் வடு சிறிதாய் இருந்தாலும், மனதுக்குள் அழியாமல் தான் இருந்தது. அப்போதிருந்து அவனை மரியாதைகுறைவாய் கூட பேசினாலும் பேசுவாள் அன்றி ‘மாமா’ என்றதில்லை.
இப்போதோ தன்னை மீறி வாயில் வந்ததை அவள் மறுக்கவுமில்லை.
புருவம் வருடும் அவள் விரலை மெல்ல விலக்கியவள், “வாய் தவருனது கூட கேட்க நல்லா தான் இருக்கு” என்றான் அவள் இரவு மட்டுமே கேட்டு அறிந்திருந்த அவனது பிரத்யேக குரலில்.
அதன் பின்னான அமைதி அவளுக்கு அவஸ்தையாய் தான் இருந்தது. அவன் தன்னையே பார்ப்பதை அவளால் உணர்ந்துக்கொள்ளவும் முடிந்தது. அவனாக நெருங்கினால் பரவாயில்லையே என அவள் நினைக்க, அவனுக்கு அந்த நினைப்பே இல்லை. அது என்னவோ பகலில் பக்கமே வர மாட்டேன் என பிடிவாதமாய் இருக்கிறானே!
பொறுத்துப்பார்த்தவள் எழுந்துவிட்டாள்.
“நீ… சீக்கிரம் குளிச்சுடு! நான் இல்லன்னா கம்பெனில வேலை நடக்காது!” என்றவள் வேகமாய் சென்றாள். மணி எட்டை தாண்டியிருக்க, கம்பெனிக்கு ஆட்கள் சிறிது சிறிதாய் வர ஆரம்பித்தார்கள். அவர்கள் வரும் நேரத்தில் இருந்து எட்டு மணி நேரம் கணக்கு என்பதால், வேலையை சீக்கிரம் முடித்துக்கொண்டு காலையிலேயே வந்துவிடுவர். அப்போது தானே பொழுது சாய வீட்டில் பிள்ளைகளோடு இளைப்பாற முடியும்!
வந்த ஆட்களை கொண்டு அவள் அன்றைய வேலையை ஆரம்பித்திருக்க, சற்று நேரத்தில் அங்கே வந்தான் அண்ணாமலை, அவள் எதிர்ப்பார்த்ததை போல குளித்து முடித்து அம்சமாய்.
அவனை அங்கே கண்டதும், “என்ன அண்ணா நீ, எப்போ தான் கடையை திறப்ப?” என்று ஆரம்பித்தனர் பெண்கள்.
அவன் சிரித்தே நிற்க, “ரெண்டு வாராமாச்சு, நல்ல கறிசோறு தின்னு. உன் கடைய விட்டு வேற கடை போயும் பழக்கம் இல்ல. வேற இடத்துல வாங்குனாலும் நிறக்கவே மாட்டேங்குது” என்று சொல்ல அதற்கும் சிரித்து வைத்தான்.
“வேலையை பாருங்கக்கா!” என்ற நிம்மதி அவனிடம் வந்து, “சாப்பாடு ஆச்சா?” என்றாள்.
“ம்ம்… நீ போய் சாப்டு” என்றான் அவன்.
“இல்ல நேரமாச்சு, வந்து பாத்துக்குறேன். நீ போய் சர்வேயர் வந்ததும் கூடவே நின்னு அளவு சரியா வருதான்னு பார்த்து வை” என்றவள் தன் கைப்பையை தூக்கிக்கொள்ள, அதை பறித்தவன், “பேக்கரி லோடுக்கு கிளம்புறேன். ஒழுங்கா தின்னுட்டு இங்கேயே என்ன என்ன வேலை இருக்கோ எல்லாம் நீயே பாரு” என்றான்.
“ப்ச் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன பேசுற?” என்றவளுக்கு அவன் போக்கே கடுப்பை தான் கொடுத்தது.
அவன் நிற்கவே இல்லை. விறுவிறுவென வாசலுக்கு வந்துவிட்டான். வெளியே தயாராய் நின்றிருந்த வண்டியின் முன்பக்க கதவை திறந்து ஏறிக்கொண்டவன், “கிளம்பலாம் தானே?” என்று டிரைவரிடம் கேட்டிட, “போலாமுண்ணே” என்றான் அவன். அவன் பின்னாடியே கோபமாக வந்தவள் ஓட்டுனரை கண்டு பேச்சை எடுக்காது ஒரு நொடி தயங்கினாள்.
பின், “தம்பி, ரசீது நோட்டு கம்பெனில இருக்கு, கேட்டு எடுத்தாரியா?” என்றதும் அவனும் சரியென அங்கிருந்து போக, “இப்போ எதுக்கு என் வேலைல நீ குறுக்க வர?” என்று காட்டமாய் கேட்டாள் நிம்மதி.
“நீ தானே நான் சும்மா இருக்க வேண்டாம்ன்னு சொன்ன!? அதான்” அவன் அலுங்காமல் சொல்ல, “உனக்குன்னு பொழப்பு இல்லையா என்ன?” என்றிட, “இருந்துச்சு… இனி எனக்கு இல்ல அது. யாருக்கு சம்பாதிக்கணும்? எதுக்கு உழைக்கணும்!?” என்றான்.
“என்ன பேச்சு இது?” அவள் புருவம் சுருக்க, “காசுக்காக உன்னை கட்டிக்கிட்டு உன் வீட்டோட வந்துட்டேன். இப்போ என்ன உட்காத்தி வச்சு நீ சோறு போடுற, அப்புறம் எதுக்கு நான் சம்பாதிக்கணும்?” என்று கேட்டதும், எரிச்சல் ஏறியது அவளுக்கு.
“இன்னும் எத்தனை காலத்துக்கு இதே பேச்சு பேசுவ நீ!?” என்றாள்.
“உண்மையை சொல்ல கூடாதா என்ன?” என்றவனோ, “இத்தனை காலமும் என் ஒருத்தனால கறிக்கடை கல்லா கட்டல. எங்க அஞ்சு பேரோட உழைப்பு அது. நான் ஒருத்தன் இல்லாததால பெரும் கஷ்டம் ஒன்னும் இல்ல. அவனுங்களால சமாளிக்க முடியும்!” என்றான்.
“நீ இப்படி சொல்ற! ஆனா அவனுங்க, நீ இல்லாம எங்களுக்கு எதுவும் வேண்டாம்ன்னு கடையை திறக்க மாட்றானுங்க!” என்றாள்.
“அது என் பிரச்சனை இல்ல” விட்டேத்தியாய் சொன்னான்.
சலித்தது அவளுக்கு. ஆனாலும், “இப்போ அவனுங்களோட முன்ன மாறி சேர்ந்து கடை திறந்தா தான் என்னவாம் உனக்கு” என்று கேட்க, “சரிவராது” என்றுவிட்டான்.
நிம்மதியுடன் திருமணம் முடிந்த பின் நால்வரிடமும் பேச்சை குறைத்தவன், என்று பரதன் ஒரு பெண்ணை கொண்டு வந்து தன் மனைவி என்று சொல்லி இவன் முன்னே நிறுத்தினானோ அப்போதிருந்து பரதனை மட்டுமல்ல, மொத்தமாய் நால்வரையுமே ஒதுக்கிவிட்டான்.
“உனக்கு நான் உன் தொழில்ல குறுக்க வரது பிடிக்கலன்னா சொல்லு, கூலி வேலைக்கு கூட போறேன், ஆனா அவனுங்க பக்கமே தலை வச்சும் படுக்க மாட்டேன்!” என்றவன் பார்வை எங்கோ இருந்தாலும், குரல் திண்ணமாய் வந்தது.
அதற்குள் நிம்மதி கேட்ட ரசீது நோட்டுடன் டிரைவர் வர, அதை வாங்கிக்கொண்டவள், அண்ணாமலையின் மடியில் வைத்தாள் அதை.
“கணக்கு பார்த்து இறக்கிட்டு இந்த நோட்டுல கையெழுத்து வாங்கிடு! காசு அப்புறம் தரேன்னு சொல்லுவான், விடாம கேட்டு வாங்கிடுங்க” என்றாள். அவன் சிரத்தையாய் கேட்டுக்கொண்டு, “ம்ம்ம்” என்றான்.
வண்டி ஸ்டார்ட் ஆக, “இத்தனை வெட்டி வீம்பை வச்சுக்கிட்டு என்ன தான் பண்ணப்போறியோ நீ!?” என்றாள் மனம் கேளாமல். திரும்பி அவளை பார்த்தவன் கொஞ்சமே கொஞ்சமாய் சிரிக்க, வண்டி நகர்ந்தது. கேட்டை தாண்டி வண்டி செல்லும் வரை நின்றவளுக்கு பெரும் ஆயாசமாய் வர, சலிப்பாக தலையை இருபுறமும் ஆட்டிவிட்டு திரும்பும்போது, “அக்கா!” என்ற குரல்.
நிம்மதி திரும்பினாள். திறந்திருந்த கேட்டின் ஓரமாய் ஒடிசலான தேகத்தில், அதீத தயக்கத்தோடு சற்று படபடப்புடன் நின்றிருந்தாள் தேன்மொழி.
அவளை கண்டதும் நிம்மதியின் புருவங்கள் உயர, “வாம்மா… பரதன் பொண்டாட்டி!” என்றாள் சிறு சிரிப்போடு கேலி கலந்து.
அவள் விளிப்பில் புதியவளுக்கு தான் பதட்டமும் தயக்கமும் கூடிப்போனது.
“இன்னைக்கு தான் வீட்டுப்படி தாண்டி எப்படி வரதுன்னு கத்துக்கிட்டியோ?” என்று இன்னமும் கிண்டலாய் நிம்மதி பேச, கையை பிசைந்துக்கொண்டு தலைகுனிந்து நின்றிருந்தாள் அவள்.
அன்றைய இரவில் பரதனுடன் வீட்டுக்குள் சென்றவள், உண்மையில் இன்று தான் வீட்டை விட்டே வெளியே வருகிறாள்.
“வாங்குறேன்… அங்கேயே நிக்குற? ஓ… ஆரத்தி சுத்தனுமோ?” நிம்மதி பேசிக்கொண்டே போக, “ஐயோ இல்ல அக்கா” என்று பதறினாள் அவள்.
“பின்ன என்ன? உள்ள வா” என்றவள், கம்பெனிக்குள் செல்லாது, சுற்றிக்கொண்டு பின்பக்க வீட்டிற்கு சென்றாள். தயங்கிக்கொண்டே உள்ளே வந்தவளிடம், தண்ணீர் சொம்பை நீட்டினாள் நிம்மதி.
“ம்ம்ம்… வீடு ஊரு எல்லாம் பிடிச்சுருக்கா? பசங்க இருக்க வீட்டுல இருக்க சங்கடமா இருக்கு தானே!?” நிம்மதி இப்படி கேட்க, வெகு அவசரமாய் மறுத்தாள் தேன்மொழி.
“ஐயோ இல்ல அக்கா… உங்க அப்பா என்னை பொண்ணு மாறி தான் பாக்குறாரு. மத்தவங்க எல்லாம் என்னை தங்கச்சியா தான் நினைக்குறாங்க. நிறைய பேசி சிரிக்கலன்னாலும், சின்ன சின்ன அனுசரணை கூட அவங்க அன்பை காட்டுதுக்கா!” என்றவள், “நானும் அவங்க எல்லாரையும் என் அண்ணனா தான் நினைக்குறேன். அதனால எனக்கு ஒரு சங்கடமும் இல்ல. சொல்லப்போனா ரொம்ப பாதுகாப்பா இருக்கேன்!” என்றாள் உள்ளார்ந்து.
“பார்த்துப்பா! எல்லாரையும் அண்ணனா நினைக்குறேன்னு சொல்லி பரதனை காவி வேட்டி கட்ட வச்சுடாத” என்றாள் நிம்மதி கேலியாய்.
அதற்கு தேன்மொழி முகத்தில் எந்தவித எதிரொளிப்பும் இல்லை. ஒருவித தயக்கமாய் அவள் பார்வை தரை பார்க்க, “சொல்லு, எதுக்கு என்ன தேடி வந்துருக்க?” என்றாள் நிம்மதி.
“எனக்கு இங்க உங்களை விட்டா வேறு யாரும் தெரியாது!” தேன்மொழி தயங்கியே பேச, “சரி….!” என்று கேள்வியாய் இழுத்தாள் நிம்மதி.
“உங்க மேல நிறைய மரியாத இருக்கு அவங்களுக்கு” என்றவள், “அவருக்கும் தான்” என்றாள் மெல்லிய குரலில்.
“இன்னமும் நீ விஷயத்துக்கு வரல. எதுக்கு இப்படி போட்டு சுத்துற?” நிம்மதி என்னவோ சாதரணமாய் கேட்க, அது தேன்மொழிக்கு அதட்டல் போல ஒலிக்கவும், திணறியவள், “இல்லங் க்கா… எனக்கு இங்க எதாவது வேலை குடுத்தீங்கன்னா, ரொம்ப நல்லா இருக்கும்!” என்று வேகமாய் சொல்லிவிட்டாள்.
“ஆமா க்கா… நான் நல்லா வேலை செய்வேன் க்கா… ஒரு வாட்டி குடுத்து பாருங்களேன். நீங்க சொல்ற மாறி திருப்தியா செஞ்சுடுவேன்” தேன்மொழி பேசும் வேகமே அவளுக்கு இந்த வேலை கண்டிப்பா வேண்டும் என்று உணர்த்த, அதற்க்கான காரணம் தான் விளங்காது போனது நிம்மதிக்கு.
“இந்த ஊருக்கே இப்போதான் வந்துருக்க. புதுசா கல்யாணம் ஆகிருக்கு. வீட்டுல அந்த எருமைங்களுக்கு சமைச்சு போட்டாலே பொழுது ஓஞ்சுடும். இத்தனை அவசரமா வேலைக்கு சேரணுமா என்ன?” நிம்மதி புரியாமல் கேட்க,
“அக்கா… அது… எனக்கு கொஞ்சம் வாங்கணும். வரப்போ ஒன்னும் எடுத்துட்டு வரல. ரெண்டு புடவை வாங்கிக்குடுத்தாரு அவரு. ஆனா, அதுக்கு மேல அது இதுன்னு பொம்பளை தேவை இருக்கே. அதுக்கு கொஞ்சம்…” தயங்கி தயங்கி சொன்னவள், “பணம் வேணும்!” என்றாள் குரல் தேய.
நிம்மதிக்கு அடுத்த பேசக்கூட வரவில்லை திகைப்பில்.
திடீரென ஒருநாள் காணாமல் போகும் பரதன் இரு தினங்கள் சென்று ஒரு பெண்ணை மனைவி என கொண்டு வந்து நிறுத்துகிறான். அதன் முன்கதை என்ன என்பது பற்று இன்னமும் ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாது. குறைந்தபட்சமாய் பிடித்து தான் திருமணம் நடந்திருக்கும் என அவள் நினைத்திருக்க, அவனிடம் தன் தேவையை சொல்லி பூர்த்தி செய்துக்கொள்ளக்கூட தயங்கும் அளவுக்கு அவர்கள் உறவு இருக்கிறதென்றால்…!?
என்ன நடந்தது என்பதை அன்றைய இரவுக்கு பின்னே பலமுறை பரதனிடமும் தேன்மொழியிடமும் கேட்டே ஓய்ந்து விட்டாள் அவள். அவன் வாயை திறப்பேனா என்று அடமாய் இருக்க, இவள் அழுபவள் போல முகத்தை வைத்துக்கொண்டு பரதனை அவஸ்தையாய் பார்க்க, அதன்பின்னே அவர்கள் வீட்டிற்கு சென்று அதைப்பற்றி கேட்பதையே நிறுத்திவிட்டாள் நிம்மதி.
“அக்கா…!?” யோசனையாய் நின்றவளை திரும்ப அழைத்தாள் தேன்மொழி.
“ஹான்?! ம்ம்ம்… சரி, நாளைல இருந்து வேலைக்கு வா!” என்றவள், ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அவளிடம் நீட்ட, பதறி மறுத்தாள் அவள்.
“ஐயோ அக்கா, காசு கேட்டு வரல க்கா நான்!” அவள் கலக்கமாய் சொல்லவும், “உன் சம்பளத்துல இருந்து அட்வான்ஸா தான் தரேன். இந்த வாரம் சம்பளம் வாங்கும்போது இதை கழிச்சுக்கலாம்…” என்ற நிம்மதி, அவள் மறுக்க மறுக்க, விடாமல் அவள் கரத்தில் திணித்தாள்.
“இப்போ வீட்டுக்கு தான் வரேன்! என்னோடவே வா” என்றவள் தன் ஸ்கூட்டியில் அவளை ஏற்றிக்கொண்டு அண்ணாமலையின் வீட்டை நோக்கி சென்றாள்.