என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8

அத்தியாயம் -8(1)

திருமணம் முடிந்த அன்றே மதுரைக்கு வந்து விட்டான் அசோக். அதற்கு மேல் விதுரனை திண்டுக்கல்லில் நிறுத்தி வைக்க முடியவில்லை, புகழேந்தியும் ‘எப்போது வருகிறாய்?’ என கேட்டு விட்டார்.

அனன்யாவுடன் தனிமையில் இரண்டு வார்த்தைகளாவது பேச வேண்டும் என ஆவலாக இருந்தும் அப்படி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடனே மதுரை வந்து சேர்ந்தான்.

மறு வீடு, விருந்து என திருமணத்திற்கு பிறகு நடக்கும் சம்பிரதாயங்கள் எல்லாம் அசோக் இல்லாமலே நடந்தன. அவனது நிலையை புரிந்து கொண்டு வா என அழைத்து சங்கடம் செய்யவில்லை பாக்யா. ஆனால் ஸ்ருதி அவர்கள் வீட்டுப் பெண் போல அனைத்துக்கும் சென்றாள். சமரனுக்கு நேரம் கிடைத்தால் அவனையும் வரவைத்தாள்.

தினமும் அத்தைக்கு அழைத்து எல்லாம் நல்ல படியாக முடிந்ததா என விசாரித்து விடுவான் அசோக். ஆமாம் அத்தையிடம் மட்டும்தான் பேசிக் கொண்டிருந்தான். இவனது அழைப்பை அனன்யா ஏற்பதில்லை. ஆகவே இனி அவளுடன் நேரில்தான் பேச வேண்டும் என முடிவு செய்து அவனும் கைப்பேசிக்கு அழைப்பதில்லை.

ஸ்ருதியிடம் மட்டும், “அவள் விரும்புறாதான் ஸ்ருதி, ஆனா பேச மாட்டேங்குறா” என புலம்பல் போல சொல்லியிருந்தான்.

“உனக்கு கல்யாணம் முடிவாகிடுச்சுன்னு சொல்லி வச்சிருந்தேனே, அதனாலயா அசோக். நான் பேசவா அவகிட்ட?” எனக் கேட்டாள் ஸ்ருதி.

“அதுதான் காரணம்னா எனக்கும் விருப்பம்னு தெரிஞ்ச பிறகு மூஞ்சுக்கு நேரா கேட்ருப்பா. என் அப்பா பேசினதை மறக்காம அதையே பிடிச்சிட்டு இருக்கான்னு நினைக்கிறேன். எதுவா இருந்தாலும் நானே நேர்ல பேசிக்கிறேன்” என் சொல்லி விட்டான்.

பத்து நாட்கள் கடந்த நிலையில் பாக்யா மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்.

“அவசரத்துக்கு ஏதோ வேலைன்னு சேராம நிதானமா நல்ல வேலையா பார்த்து சேரலாம், பொறுமையா தேடு” என அறிவுரை சொல்லியிருந்தான் சமரன்.

அன்னயாவும் வேலைக்கு சேர்வதில் அவசரம் காட்டவில்லை. ஆனால் முனைப்பாக வேலை தேடிக் கொண்டிருக்கிறாள். சில இடங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கவும் செய்திருந்தாள்.

அசோக்கை அத்தனை பிடித்தும் அவனும் அவனது பிடித்தத்தை உணர்த்தியும் கூட அவளுக்கு அவனிடம் நெருங்க பயமாக இருந்தது.

அவனது அப்பாவின் குணம் பற்றித்தான் தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டதே. அவரின் சம்மதம் கிடைக்கவே கிடைக்காது என்பதை உறுதியாக நம்பினாள். அவர் பேசியதில் ரோஷம் மிகுந்தது உண்மை என்றாலும் அசோக் வேண்டாம் என்பதற்கு அது மட்டுமே காரணமில்லை.

மனதில் ஆசை யாருக்குத்தான் வராது. ஆனால் அதை நடத்திக் கொள்வதில் சிக்கல் என்றால் மறு பரிசீலனை செய்துதான் ஆக வேண்டும். அவளது அம்மாவின் காதல் கல்யாணம் சொந்தங்களை விலக்கி நிறுத்தி விட்டது. தன்னை மண முடிக்கிறேன் என அசோக் செயல் பட்டு அது அவனையும் அவனது குடும்பத்திலிருந்து விலக்கி நிறுத்தி விடுமோ என்றெல்லாம் யோசித்தாள்.

வேறு ஒரு பெண்ணை அசோக் மணந்து கொள்ள போகிறான் என்ற நினைவு கசப்பை அள்ளிக் குடித்தது போன்ற உணர்வை கொடுத்தது.

வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருந்தால் அவன் வேறு வாழ்க்கை வாழட்டும் என இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்தானே? ஆனால் தன்னால் அவனை விட்டுத் தர முடியவில்லையே? பல விதமாக யோசித்து யோசித்து அவளது மூளை அயர்ந்து போனது.

வீட்டில் சும்மா இருக்க போய்தான் இப்படி தவிக்கிறேன், வேலைக்கு சென்று விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விடுவேன் என தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.

மதிய நேரத்தில் சமரனால் வீட்டிற்கு வர முடியவில்லை என்றால் அனன்யாவை அழைப்பாள் ஸ்ருதி. அவளிடம் குழந்தையை கொடுத்து விட்டு குளித்து, சாப்பிட்டு என அவளது வேலைகளை கவனித்துக் கொள்வாள்.

முன்னர் லதா இவளுடன் வந்து தங்குவது எனதான் ஏற்பாடு. உறவுகளில் அதிக விஷேஷங்கள் இருந்தன. குழந்தைக்காக சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தாள் நிரஞ்சனா. அதிகமாக உறக்கம் வருகிறது என்கிறாள், சோர்ந்தும் போய் விடுகிறாள். ஆகவே அவளால் அதிகம் எதுவும் செய்ய முடிவதில்லை.

“நான் சமாளித்துக் கொள்வேன் அம்மா” என சொல்லி அம்மாவை மதுரையிலேயே இருக்க சொல்லி விட்டாள் ஸ்ருதி.

அன்று அனன்யா வந்திருக்க, தன் வேலைகளை பார்த்து முடித்துக் கொண்டாள் ஸ்ருதி. அதன் பின்னரும் ஏதோ பேசிக் கொண்டு நேரத்தை கடத்தினார்கள்.

ஏதாவது ஸ்நாக்ஸ் செய்கிறேன் என ஏதோ செய்ய ஆரம்பித்த ஸ்ருதி உணவு மேசையில் வைத்து காய்கள் நறுக்க ஆரம்பித்தாள்.

ஜிவின் கொட்டாவி விட அவனை தொட்டிலில் கிடத்தி ஆட்டிக் கொண்டிருந்தாள் அனன்யா.

“கல்யாணத்தன்னிக்கு உன் கழுத்துல ஒரு மாலை போட்டு விட்டேனே, நாளைக்கு தர்றியா அனன்யா? மண்டே ஒரு பர்த்டே ஃபங்ஷன் வருது, அதை போட்டுக்கலாம் இருக்கேன்” என்றாள் ஸ்ருதி.

மண்டபத்தை காலி செய்யும் சமயம்தான் அது பற்றிய நினைவு வர மொட்டை மாடிக்கு சென்று தேடிப் பார்த்திருந்தாள் அனன்யா. அங்கு இல்லை எனவும் அசோக்கிடம் இருக்கலாம் என்ற கணிப்பு இருந்தாலும், அவனுடன் பேச தயங்கி கேட்காமலேயே விட்டு விட்டாள்.

இப்போது என்ன பதில் சொல்வது என அனன்யா விழிக்க, மனதிற்குள் சிரித்துக் கொண்ட ஸ்ருதி, “என்ன அனன்யா, நாளைக்கு வேற வேலை இருக்கா? பொறுமையா சண்டே அன்னிக்கே தா” என்றாள்.

தங்கம் இல்லை என்றாலும் அடுத்தவர் பொருளை திருப்பித் தருவதுதானே முறை? காணாமல் போய் விட்டது என சொன்னாலும் ஸ்ருதி கோவம் கொள்ள போவதில்லை, ஆனால் அது பொறுப்பில்லாதது போலாகி விடும் என எண்ணியவளுக்கு அப்படி சொல்ல பிடிக்கவில்லை.

அசோக்கிடம் இருந்தால் வாங்கி கொடுத்து விடலாம், அவனிடமும் இல்லை என்றால் பின்னர் காணவில்லை என சொல்லிக் கொள்ளலாம் என முடிவு செய்தவள், “சரிக்கா” என்றாள்.

அருகில் இருந்த கைப்பேசியை எடுத்த ஸ்ருதி, ‘உன் ஆள் கால் பண்ணுவா, மீட்டிங்லாம் தானா அமையாது, இருக்கிற கொஞ்சோண்டு புத்தியையாவது யூஸ் பண்ணி அவ கூட மிங்கிள் ஆகுடா வான்கோழி!’ என அசோக்கிற்கு செய்தி அனுப்பி வைத்தாள்.

கோழி ஒன்று நன்றி சொல்வது போன்ற படத்தை அனுப்பி வைத்த அசோக், ‘இந்த கோழிக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கு, வாத்துக்குத்தான் சுத்தமா இல்லையாம். சேதி தெரியுமா… என் வாத்து மடையன் ஃபிரெண்ட் ஒருத்தன் போலீசா இருக்கான்’ என பதில் செய்தி அனுப்பி வைத்தான்.

கோவ எமோஜிக்களை இவள் அனுப்பி வைக்க, பதிலுக்கு அவன் வேறு எமோஜி அனுப்ப இப்படியாக எமோஜிக்கள் வைத்தே வம்பு செய்து கொண்டிருந்தனர்.

கவனித்த அனன்யா, “என்னக்கா தனியா சிரிக்கிறீங்க? அப்படி என்ன ஜோக்?” எனக் கேட்டாள்.

“அசோக்தான் அனன்யா. அவனுக்கு பார்த்த பொண்ணு ஃபோட்டோ அனுப்பிருக்கான் பார்க்கிறியா?” எனக் கேட்டாள்.

உடனே அனன்யாவின் முகம் மாறினாலும் ஸ்ருதியின் பேச்சில் தெரிந்த கேலியில் சுதாரித்து, “காட்டுங்க க்கா” என்றாள்.

கோவப்படுவாள் என நினைத்திருந்த ஸ்ருதி, வேறு வழி இல்லாமல் கைப்பேசியை காட்டினாள்.

அவர்களின் உரையாடலை காட்டாமல் அவன் அனுப்பி வைத்திருந்த ‘ஆபத்தானது’ என்ற பொருள் படும் எலும்புகளும் எலும்பு முகமும் இருக்கும் எமோஜியை காட்டி, “அவன் கட்டிக்க போற பொண்ணு டேஞ்சரான ஆள் போல, அதைத்தான் இப்படி சொல்றானோ?” எனக் கேட்டாள்.

அசோக் எதுவும் இவளிடம் சொல்லியிருப்பானோ? அவனுக்கு பெண் அமைந்த கதையெல்லாம் பொய்யோ என அனன்யாவுக்கு சந்தேகம் எழுந்தது.

“அக்கா நிஜத்தை சொல்லுங்க, எதையும் மறைமுகமாக சொல்றீங்களா நீங்க? என்ன விளையாட்டுக்கா இது?” என வெளிப் படையாக கேட்டு விட்டாள் அனன்யா.

அசராத ஸ்ருதி, “என்ன அனன்யா ஏதோ போல பேசுற, நீ சொல்லு, எதையும் மறைக்குறியா என்கிட்ட? என்ன இருந்தாலும் என்கிட்ட சொல்லும்மா” என தேனொழுக பேசினாள்.

போட்டு வாங்குகிறாளோ என குழம்பிப் போனாள் அனன்யா.

“அக்காகிட்ட சொன்னா நானே சரி செஞ்சு தருவேன், லாஸ்ட் சான்ஸ் உனக்கு, சொல்லு” என அவளை பேச ஊக்கினாள் ஸ்ருதி.

“அப்படிலாம் எதுவும் இல்லைக்கா, என்ன ஸ்னாக்ஸ் செய்ய போறீங்க? காய் நான் நறுக்குறேன், உள்ள வேற வேலை இருந்தா பாருங்கக்கா, போங்க” என சொல்லி காய் நறுக்கும் கத்தியை தன் வசப் படுத்திக் கொண்டாள் அனன்யா.

 ‘சரியான எமகாதகி!’ என அவளை மனதில் வசை பாடி, ‘இவகிட்ட மாட்டிகிட்டு நல்லா முழிக்க போறடா அசோக்’ என அவனையும் செல்லமாக தாளித்துக் கொண்டே சமையலறை சென்றாள் ஸ்ருதி.

காய்கறி கட்லட் செய்து முடித்தாள் ஸ்ருதி. தேநீரோடு சேர்த்து இருவரும் அதை சாப்பிட்டு முடிக்கவும் குழந்தை எழவும் சரியாக இருந்தது. மகனுக்கு பசியாற்ற அறைக்கு சென்று விட்டாள் ஸ்ருதி.