“அவன் எவ்ளோ பதட்டமா வந்து சொல்றான். நீ என்னன்னா நாயை கண்ட மாறி விரட்டுற?” அவள் மெல்லிய குரலில் அழுத்தமாய் பேச, அண்ணாவின் கண்கள் அவளை முறைத்துப்பார்த்தன.
“என்னை எதுக்கு முறைக்குற?” என்றவள், “உடன்பொறப்பு, கூட்டாளிங்கன்னு அவனுங்களோட தானே இத்தனை வருஷமா கடந்த? இப்போ அதுல ஒருத்தனை காணோம்ன்னு சொன்னா பதறலியா உனக்கு?” என்று கேட்க, ‘எனக்கா பதறலை?’ என்ற கேள்வி கொண்ட பார்வையோடு பார்த்தான் அவளை.
“சும்மா பார்வையிலேயே சமாளிக்காத! என்ன கோவம் உனக்கு அவனுங்க மேல? நம்ம கல்யாணத்துல இருந்து நீ சரியா பேசுறதே இல்ல… அவனுங்க எவ்ளோ வருத்தப்படுறானுங்க தெரியுமா? நானும், நீ இன்னைக்கு சரி ஆவ, நாளைக்கு சரி ஆவன்னு பாத்துட்டே இருக்கேன். என் விஷயம் தான் ஏதோ ஒரு மாறி போய்க்கிட்டு இருக்குன்னா, அவனுங்க கிட்ட கூட என்ன உனக்கு சடப்பு?” என்று மூச்சு வாங்க பேசினாள்.
அவன் கல்லை போல அமர்ந்திருக்க, “கேக்குறதுக்கு பதில் சொன்னா என்னைய்யா உனக்கு? தலைல இருக்க கிரீடம் இறங்கிடுமோ?” என்று குரல் உயர்த்த, “இங்க பாரு, எனக்கு பிடிச்சவங்களோ, என்னை சேர்ந்தவங்களோ, அவங்களுக்கு நான் தான் முக்கியமா இருக்கணும். எனக்கு மீறி தான் அவங்களுக்கு மத்தவங்க!” என்று சொன்னான் அண்ணாமலை.
“நான் என்ன கேக்குறேன், நீ என்ன சொல்லிட்டு இருக்க?” அவள் புரியாமல் கேட்க, “நான் சரியா தான் சொல்றேன்” என்றான் அவன் கடுப்பாய்.
“புரியுற மாறி சொல்லுய்யா!” அவள் முகம் கடுக்க, “எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா என்ன? நான் ஏலம் எடுக்க காசு வேணுன்னு ஒவ்வொருத்தனையா போய் பாத்தப்போ, ஒருத்தன் விடாம எவனுமே தர மாட்டேன்னு சொன்னான். எப்படி?” என்றான் இறுகிய முகத்தோடு.
அவள் பார்வை தடுமாறியது.
“நான் யார்க்கிட்ட கேட்க போறேனோ அவன்கிட்ட முன்னமே பேசி காசு குடுக்க வேண்டாம்ன்னு நீ சொல்லிருக்க… இல்லையா?” அவன் கேட்டதும், “ம்ம்ம்!” என தலையை மெல்ல மேலும் கீழுமாய் ஆட்டினாள் நிம்மதி.
“நீயே சொல்லு, நான் யாரை பாக்க போறேன்னு உனக்கு எப்படி முன்னமே தெரிஞ்சுது?” அவன் கேட்க, அவள் அழுத்தமாய் தன் கீழுதட்டை கடித்துக்கொண்டு தலை குனிந்திருந்தாள்.
“சொல்லுடி?” அவன் அதட்ட, அவள் வாய் திறக்கவில்லை.
“அழுத்தம்…!” பல்லைக்கடித்தவன், “இப்போ புரியுதா? நான் ஏன் அந்த அஞ்சு பயலுவ கிட்டயும் ஒட்டுறது இல்லன்னு!” என்றவன் எழுந்துக்கொண்டான்.
ஒரு முடிவோடு எழுந்தவளும், “ஆமா, அவனுங்க தான் எனக்கு நீ பண்றதெல்லாம் சொன்னானுங்க! இப்ப என்ன குடிமுழுகி போச்சு அதனால? நல்லா தானே இருக்கோம்!?” அவள் கேட்டிட, துண்டை உதறி தோளில் போட்டவன், “என்ன நல்லா இருக்கோம்?” என்றான் பதிலுக்கு.
“ஏன் நாம நல்லா இல்லையா?” அவள் கேட்க, “நல்லா’ன்னா எதை சொல்ற? இதையா?” என்றவன் சுருட்டி வைத்த பாயை காட்டினான்.
“இங்கேரு, மறுக்க மறுக்க சொல்றேன், நீ இல்லாம வேற எவளை கட்டிருந்தாலும் நான் இப்படி தான் இருந்துருப்பேன்! கல்யாணம் கட்டிட்டு கற்ப்பை காவ காக்குற வேலை எல்லாம் நடைமுறைக்கு உதவாது, தெரிஞ்சுக்க!” என்றுவிட்டு கதவருகே சென்றான்.
அவன் பேச்சில் சமைந்து நின்றாள் அவள். நெஞ்சமெல்லாம் வெம்பியது.
“அப்போ?” என்று ஆரம்பித்தவள் குரல் பிசிறு தட்டியது.
குரலை செருமியவள், “அப்போ, கடைசி வரை இப்படி தான் இருப்பியா? மூஞ்சை திருப்பிக்கிட்டு…” கேட்க, கதவை திறந்தவன், “தெரியாது!” என்றுவிட்டு போக, பின்னாடியே சென்றவள், “உனக்கு நீ பண்றது ‘வெட்டி வீம்பு’ன்னு தெரியல?” என்று கேட்டிட, “நான் வீம்புபுடிச்சவன்னு உனக்கு தெரியாதா என்ன?” என்றவனோ குளியலறை கதவை சாற்றிவிட்டான்.
“யோவ்… உனக்கு என்னை… பிடிக்கவே பிடிக்காதா?” நொந்துப்போனவளாய் அவள் கேட்க, தண்ணீரை வாறி வாறி ஊற்றிக்கொண்டிருந்தவன், சில நொடிகள் சத்தமின்றி நின்றான். இவளும் பதில் வரும் என வெளியே காத்து நிற்க, அவளை ஏங்க வைத்தவன், பின்பு ஒன்றுமே சொல்லாமல், முன்பை விட வேகமாய் தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொண்டான்.
மனம் கசந்துப்போனது அவளுக்கு. அவனுக்கும் தன்னை பிடிக்கும் என்று நினைத்து தான் இப்படி வம்படியாய் அவள் திருமணம் செய்துக்கொண்டதே! ஆனால், நாள் போக போக, அவனை கட்டாயப்படுத்தியிருக்க கூடாதோ? தவறாகிப்போனதோ என்ற ஐயம் கிளம்பியது.
அன்று தன்னிடம் பணம் கேட்டு வந்தபோது கூட அவனாகவே ‘திருமணம்’ பற்றி பேசினானே!? அதெல்லாம் அடுத்தடுத்து நடந்த சிறு சிறு விஷயங்களில் மொத்தமாக மாறிப்போனது. நடந்ததை எல்லாம் விளையாட்டாய் அவள் எண்ணி விட்டாள்.
ஊரார் முன்பு தந்தை ‘காசு குடுத்தா தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றான்’ என்று பேசியபோது அவள் மறுத்தோ, தடுத்தோ இராததற்கு அது தான் காரணம். சன்னமாய் சிரித்துக்கொண்டு வேறு இருந்தாள். விளையாட்டு போல அவளுக்கு இருந்தது, அவனுக்கு அப்படி இருக்கவில்லை போல. திருமனமானால் சரியாகிடும், கூடல் முடிந்தால் சரியாகிவிடும் என்ற எந்த எண்ணமும் இப்போது அவனிடத்தில் பலிக்கவில்லை.
‘வாழ்க்கை இப்படியே போய்விடுமோ?’ என்ற பயம் மெல்ல தலை தூக்கியது.
அவனுக்கு இறுதிவரை தன்னை பிடிக்காமலே போய்விடுமோ!? என்ற பெரும் அச்சம் நெஞ்சை கவ்வியது. அவனை அவளுக்கு தன் உயிரளவு பிடிக்குமே! அவனிடம் ‘காதல்’ இல்லை என அவன் சொன்னாலும், அவனுடனான இரவு பொழுதுகள் எப்போதுமே அவளுக்கு வேறு கதைகள் தான் சொல்லும். அவன் அவளிடம் குழையும் தருணங்கள் எல்லாம் ஒரு பெண்ணாய் அவளை கர்வம் கொள்ள செய்யும்!
‘இதே மாறி தான் நீ வேற பொண்ணுக்கிட்டையும் இருப்பியா? நான் இல்லன்னா கடைசி வரை நீ மொட்டைப்பயலா தான் டா இருந்துருப்ப!’ கதவை பார்த்து கோபமாய் முணுமுணுத்தாள்.
“நான் வேற உன் பேச்சுல ஃபீல் ஆகி கண்ணெல்லாம் வேற கலங்கிட்டேன்!” தலையில் அடித்துக்கொண்டவள், “நீ வெட்டி வீம்பு புடிச்சு பேசிக்கிட்டே இரு, உன் வீம்பும் ஒரு நாள் உடையும். அன்னைக்கு இருக்கு கச்சேரி! என்னையா கண்கலங்க வைக்குற? ஒரு நாள் உன்னை கதிகலங்க வைப்பா இந்த நிம்மதி! பாரு நீ!” அவள் விரலை நீட்டி ஆவேசமாய் பேசி முணுமுணுத்து முடிக்கவும், கதவு திறக்கவும் சரியாய் இருந்தது.
சட்டென அவள் தன் முகத்தை சாதாரணமாய் மாற்றிக்கொள்ள, புருவம் சுருக்கி சந்தேகமாய் பார்த்துக்கொண்டே துண்டால் தலையை துவட்டிக்கொண்டு வந்தவன், “எதுக்கு இங்கயே நிக்குற?” என்றான்.
“ஹான், புருஷன் குளிச்சுட்டு வருவானே, உடம்பு துடைச்சு விடுவோம்ன்னு தான்!” என்று சொல்ல, சட்டென திரும்பி முறைத்தவன், “ஆனாலும் செம்ம அழுத்தம் டி நீ!” என்றான் உண்மையாய்.
“ம்ம், இல்லன்னா உன்னோட எல்லாம் வாழ முடியுமா? நீ பேசுனதும் மூலைல உட்காந்து ஓஓஒ’ன்னு அழுவேன்னு நினைச்சியாக்கும்!” என்று கழுத்தை நொடிக்க, “நீயா அழுவ, மத்தவனை தான் அழ வைப்ப!” என்றவன், “சோறாக்கிட்டு கூப்பிடு, வெளில போயிட்டு வரேன்” என்று கிளம்பினான், சூரியன் கூட எட்டிப்பார்க்காத வேளையில்.
நேரே அந்த சோமு வீட்டிற்கு சென்றவன், மீண்டும் ஒருமுறை அவனிடம் அத்தனையும் கேட்டுக்கொண்டான். அடுத்து அவன் பொழுது இயல்பு போல கடந்தாலும், மனதுக்குள் பரதன் நினைவு தான் முழுக்க முழுக்க.
மதியம் வரை பொறுத்தவன், கடையை சாற்றிவிட்டு காவல் நிலையம் நோக்கி சென்றுவிட்டான். அவனுக்கு பழக்கமான ஏட்டிடம் அத்தனையும் சொல்லி விட, “திருச்சில தான் என் மச்சான் போலீசா இருக்கான். நான் அவன் கிட்ட சொல்றேன் அண்ணா… நாளை வர பாப்போம். அப்பறமும் தகவல் இல்லன்னா நீ கம்ப்ளைன்ட் குடுத்துடு!” என்றுவிட்டார். அவனும் அரைமனதுடன் திரும்பினான்.
மனம் முழுக்க ஒரே சஞ்சலம் தான். அந்த மூவருக்குமே என்ன செய்து பரதனை தேடுவது என்று தெரியவே இல்லை. இரவு கவிழ தொடங்கியது. அண்ணாமலை தன் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தான். மதியும் அங்கே இருக்க, தாஸ் மற்ற மூவருக்கும் பொதுவாய் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.
பரதன் காணாமல் போன சேதி அறிந்து ஊருக்குள் சிலரும் அவன் வீட்டின் முன்னே கூடிவிட்டனர் விவரம் கேட்க. அத்தனை பேருக்கும் மதி மட்டுமே பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
கொஞ்சமாய் வந்த கூட்டம் அப்படியே பெருகியது. ஊரின் பாதி தலைகள் அண்ணாமலையின் வீட்டு வாசலில் தான் கூடியிருக்க, கூட்டத்தை வேகவேகமாய் தள்ளிக்கொண்டு ஓடி வந்தான் ஒரு விடலை பையன்.
“அண்ணே அண்ணே!” அவன் கத்தி அழைக்க, அதில் அத்தனை ஆண்களும் அவனிடம் திரும்ப, அவனோ அண்ணா’விடம், “பரத் அண்ணே வந்துட்டு இருக்குண்ணே!” என்றான்.
வந்துவிட்டான் என்றதும் ‘சுர்ரென கோவம் ஏற, ‘எங்கடா போய் தொலைஞ்ச’ என அவனை விலாசும் எண்ணத்தில் வேகமாய் வெளியே சென்றவன் கோபமெல்லாம் நொடிப்பொழுதில் இறங்கியது.
உதடு கிழிந்து, கன்னம் வீங்கி, நெற்றியில் ரத்தம் காய்ந்து, சட்டை வேட்டி எல்லாம் அழுக்குப்படிய, ஒரு காலை விந்தி விந்தி குனிந்த தலையோடு அங்கே வந்து நின்றான் பரத். அவனை இந்த கோலத்தில் கண்டதே அனைவருக்கும் பேரதிர்ச்சி என்றால், அவன் அருகே தலை கலைந்து, அழுது வீங்கிய முகத்தோடு, கசங்கிய ஆடையோடு, ஆங்காங்கே சில காயங்களோடு… அது எல்லாவற்றையும் விட, கழுத்தில் மஞ்சள் கிழங்கு தாலியோடு நின்ற பெண்ணைக்கண்டு ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.
பரதனோ, “இது என் பொண்டாட்டி!” என்று சொல்லிவிட்டு, அவளிடம், “உள்ளப்போ!” என்றான்.