இரு நாட்கள் கழிய, அன்று காலையில் பொழுது புலர்ந்தும் புலராத நேரத்தில் மூச்சு வாங்க நிம்மதியின் வீட்டுக்கதவை தட்டினான் ஐயப்பன்.
அவன் தன் இல்லற யுத்தத்தை முடித்துக்கொண்டு கண்ணயர்ந்தே சில மணி நேரங்கள் தான் கடந்திருக்கும். அதற்குள் சத்தம் கேட்க, அவனால் கண்களை பிரிக்கவே முடியவில்லை. அப்படியே அவனை இருக்க விடாமல் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, கடினப்பட்டு கண்ணை திறந்தவனுக்கு கண்ணெல்லாம் உறக்கம் பத்தாமல் எரிச்சல்.
இன்னும் சூரிய வெளிச்சம் கூட வந்திருக்கவில்லை. எட்டி தலைக்கு மேல் இருந்த சுவர் கடிகாரத்தை பார்க்க, நான்காகி சில நிமிடங்கள் நகர்ந்துவிட்டதாக காட்டியது. மீண்டும் கதவு தட்டும் சத்தத்தில், அவன் அசைய, அவன் முதுகோடு கட்டிக்கொண்டு நெருங்கி கிடந்தவள் சிணுங்கினாள்.
“எவனோ கதவை தட்டுறான்டி, கையை எடு போய் பாக்குறேன்” அவன் சொல்ல, அழுத்தமாய் அவன் முதுகோடு ஒட்டி முகத்தை தேய்த்தவள், அவனை உசுப்பினாள்.
“ப்ச்…ஏய்…” அவன் மிரட்ட நினைத்தாலும் குரல் வேறு மாதிரியாக வர, “சும்மா படுய்யா!” என்றாள் அவள் இன்னமும் அவனோடு ஒட்டிக்கொண்டு.
கதவு வேறு விட்டு விட்டு தட்டப்பட, “தட்டிட்டே இருக்கானுவ, என்னன்னு கேட்டுட்டு வரேன் இரு, அவசரமா இருக்க போது எதுவும்” என்றான் அவன்.
“இங்கிருந்தே கேளு!” என்றவளுக்கு அவனை விட்டு நகரும் எண்ணமே இல்லை. அவன் இவளோடு ஒட்டி உறவாடுவதே இரவில் மட்டும் தானே. சூரியன் உதித்து விட்டால், முகத்தை முறுக்கிக்கொண்டு அலைவானே!
“இம்சை டி நீ!” என்றவனும், அவளை விலக்கிவிட்டு போக மனமில்லாது, “யாரு?” என்றான் சத்தமாக.
“அண்ணா… நான் ஐயப்பே!” என்று வெளியில் இருந்து குரல் வர, “என்ன?” என்றான் இவன்.
இன்னமும் முன்பு போல நெருக்கமாய் பேசுவதில்லை அவன். அவசிய பேச்சுக்கள் மட்டும் தான் நால்வரிடமும்.
“பரதனை ரெண்டு நாளா காணோம்” அவன் சொல்ல, மதி பட்டென கண்களை திறந்துக்கொண்டாள். அவள் கரங்கள் தன்னைப்போல அவனை விடுவிக்க, சுருண்டுக்கிடந்த வேட்டியை அள்ளி இடுப்பில் முடிந்தவன், வேகமாய் வாசலுக்கு விரைந்தான். கதவை திறக்கும் முன் ஒருமுறை அவன் பின்னால் திரும்பி பார்க்க, மதி தன் உடைகளை சரிசெய்துக்கொண்டிருந்தாள்.
“ஆச்சா?” மெலிதாய் அவன் கேட்டதும், அவள் தலையசைக்க, வேகமாய் கதவை திறந்தவன், “ஆடு புடிக்க மணப்பாறை சந்தைக்கு போறான்னு தானே சொன்ன நீ?” என்றான் அண்ணா புருவம் இடுங்க.
முகம் வெளிற நின்றவன், “ஆமா அண்ணா… அங்க மலிவு விலைல புடிக்கலாம். நான் முன்னாடி போய் தேறுதான்னு பாக்குறேன். ஒத்து வந்தா உனக்கு ஃபோன் பண்றேன், நீ வண்டி புடிச்சுட்டு வந்துடுன்னு சொன்னான்” என்று சொல்ல,
“இப்போ என்ன வந்துச்சு அவனுக்கு?” அண்ணா கடுப்பாய் கேட்க, “ஃபோன் போட்டா போகல அவனுக்கு” என்று மென்று முழுங்கினான் ஐயப்பன்.
ஐயப்பன் சொல்ல, “ஏலம் நேத்திக்கு தானே?” அண்ணா கேட்டதும், “நேத்தி தான். காலைல நேரமே போய்ட்டா விலை மடியும்ன்னு சொல்லி முதல் நாள் ராத்திரிக்கே அங்க போய் தங்கிக்குறமாறி கிளம்பினான்!” என்றவன்,
அவனை முடிந்தமட்டும் முறைத்தான் அண்ணாமலை. ஐயப்பனால் அவன் முகத்தை நேர்க்கொண்டு பார்க்கவே முடியவில்லை.
“இந்த நூதன வேலை எல்லாம் பண்ண வேண்டாம், சரி வராதுன்னு சொன்னா கேட்டீங்களா? இத்தனை வருஷமா இப்படி தான் நம்ம ஆடு வாங்குறோமா என்ன?” என்றவன், “போ, இன்னைக்கு வந்துடுவான்” என்றான் கோவமாய்.
“இ.. இல்ல…அது” அவன் போகாமல் தயங்கி தடுமாற, “இன்னும் என்ன?” என்றான் அண்ணா.
“அது… சோமு நேத்து நைட்டே வந்துட்டானாம்! அவனை போய் இப்போ பாத்தேன்! அவன்… அவன்…” என்று சொல்ல பயந்து இழுத்தான்.
அதே ஊரில் வசிக்கும் சோமு, சில ஆடுகளை குட்டியில் வாங்கி, வளர்த்து பின்பு நல்ல விலைக்கு விற்பதை வேலையாக கொண்டிருக்க, அவன் சொன்னதை கேட்டு தான் திருச்சி சந்தைக்கு அண்ணாமலை ‘இது சரி வராது’ என்று பட்டும் படாமல் சொல்லியும் கேளாமல், அவனிடம் நல்ல பெயர் எடுக்க கிளம்பி சென்றிருந்தான் பரத்.
சென்றவன் சோமுவுடன் போகாமல், ஒரு நாள் முன்பே கிளம்பி தனியே சென்றிருந்தான்.
“அவனுக்கு என்னடா இப்போ?” என்ற அண்ணாவுக்கு டென்ஷன் ஏறியது.
“சோமு சொல்றான், அவன் பரதனை சந்தையில பாக்கவே இல்லையாம்” என்று சொல்ல, “என்னடா சொல்ற?” என்ற அண்ணாவுக்கு இதுவரை இல்லாத அளவு ரத்தவோட்டம் உச்சிக்கு ஏறியது.
“ஆமா அண்ணா… அவன் சந்தைக்கு போனதுமே பரதனை தான் தேடுனானாம். அப்போவே ஃபோன் போட்டுக்கூட ரிங் போச்சாம். அவன் எடுக்கலையாம். இங்க திரும்பிருப்பான்னு அவன் நினைச்சானாம்!” என்று சொன்னவன்,
“சந்தைக்கு போறேன்னு போனவன் அங்கயும் போகல. இங்கயும் இன்னும் திரும்பி வரல. பயமா இருக்கு அண்ணா!” என்ற ஐயப்பன் முகத்திலும் உடலிலும் பயம் அப்பட்டமாய் தெரிந்தது.
அவன் சொன்னதை கேட்ட அண்ணாமலைக்கும் அதே அளவு பதட்டம் உள்ளுக்குள் எழுந்தாலும், முகத்தை கடுமையாய் வைத்திருந்தவன், “நான் சொல்லியும் கேட்காம போயாச்சு. இப்போ அவனை காணோம்ன்னு வந்து என்கிட்ட நின்னா? நான் என்ன போலீசா இல்ல மந்திரவாதியா உடனே கண்டுபிடிச்சு சொல்ல?” என்று கோபமாய் கேட்டவன்,
“போனவன் குழந்தையும் இல்ல, வயசு புள்ளையும் இல்ல. போன மாறியே வந்து சேருவான். வரலன்னா போய் போலீசை பாரு, என்னை வந்து இழுக்காத!” என்றவன் முகத்தில் அடித்தார் போல கதவை சாற்றிவிட்டு உள்ளே நுழைந்தான்.
ஐயப்பன் கண்ணை மூடி நின்றவன் பின் வேகமாய் அங்கிருந்து சென்றான்.
உள்ளே நுழைந்த அண்ணாமலை கொடியில் கிடந்த துணிகளை பரபரவென கலைத்தான்.
“இங்க கடந்த என் சட்டை எங்க?” என்று கத்தியவன், துணிகளை எல்லாம் பிடித்து இழுத்துப்போட்டு, “இந்த வீட்ல ஒன்னு உருப்படியா இருக்குதா? ச்சை!” என்று திட்டிக்கொண்டே பீரோ பக்கம் சென்றான்.
அதன் கைப்பிடியை பிடித்து கீழிறக்க, அது திறப்பேனா என்றது. வலுக்கொண்டு, ‘டடக், டடக்’ என்று அவன் போட்டு உருட்ட, அதுவரை பாயில் அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்த நிம்மதி, எழுந்து அவிழ்ந்து கிடந்த முடியை கொண்டையாக்கி கொண்டே அவனை நெருங்கினாள்.
இன்னமும் அவன் பீரோவின் கைப்பிடியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, அவனை முறைத்துக்கொண்டே நெருங்கியவள், கொஞ்சமாய் எக்கி, பீரோவின் மேலிருக்கும் சாவியை எடுத்து அவன் கையில் பொத்தென வைத்தவள், ஒன்றுமே பேசாமல் அடுக்களைக்குள் நுழைந்தாள்.
உள்ளங்கையில் இருந்த சாவியையும் அவளையும் ஒரு பெருமூச்சோடு பார்த்தவன், சாவியை அப்படியே கீழே வீசிவிட்டு தரையில் சுவரில் சாய்ந்தபடி கண்ணை மூடி அமர்ந்துவிட்டான்.
சில நிமிடங்களில் அவன் நாசி நல்ல மணத்தை உணர்ந்தது. அடுத்த நிமிடம் அவன் அருகே ‘டொக்’கென சத்தம் கேட்டு கண்ணை திறந்தான். ஆவி பறக்க கருப்பட்டி காப்பி காத்திருந்தது. அவன் எதிரே இன்னொரு குவளையுடன் அமர்ந்தவள், “குடி முதல்ல” என்றாள்.
“பல்லு விலக்கல” அவன் எங்கோ பார்த்து சொல்ல, “இத குடிச்சாலே பல்லு விலக்குன மாறி ஆகிடும்!” அவள் சொன்னதும், சில நொடிகள் பொறுத்தவன், பின்பு அதை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான். சில மிடறுகள் உள்ளே சென்றதும் அவனுக்கு மனநிலையே சற்று மாறி இதமானது.
அவன் குடித்து முடிக்கட்டும் என காத்திருந்தவள் போல, “என்ன ஆச்சு?” என்று ஆரம்பித்தாள் நிம்மதி.