அத்தியாயம் -6(2)
“சரியான அடவாடி குடும்பம்! வெளில வந்து கார்ல இருக்க உன் பொண்டாட்டி சாமானை அள்ளிக்க, நான் என் அத்தை வீட்டுக்கு போறேன்” என முறுக்கிக் கொண்டே எழுந்தான் அசோக்.
“சாப்பிட்டுட்டு போ” என்றான் சமரன்.
“சைவ சாப்பாடுதானே? வியாழக் கிழமை லதா அத்தை விரதம்னு தெரியும்டா, இந்த இலை தழை எல்லாம் நீங்களே தின்னுங்க. என் அத்தை நான்வெஜ் சமைச்சிருப்பாங்க. நான் அங்க போய் வெட்டு வெட்டுன்னு வெட்டிக்கிறேன்” என விளையாட்டாக சொல்லிக் கொண்டே வெளியில் சென்று விட்டான் அசோக்.
“நீ போ, உன் அப்பாக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்புறேன்” என கிண்டல் செய்து கொண்டே சமரனும் வெளியில் சென்றான்.
கல்யாண வேலைகள் அதிகம் இருப்பதால் இப்போதெல்லாம் அனன்யாவின் வீட்டில் எளிமையாகத்தான் சமையல். அதுவும் அன்று வெறும் ரசமும் வாழைக்காய் வறுவலும்தான். அசோக்கின் விளையாட்டு பேச்சு புரியாமல் உடனே அம்மாவுக்கு அழைத்த அனன்யா, அவன் அங்கு சாப்பிட வருகிறான் என அறிவிப்பு கொடுத்து விட்டாள்.
பாக்யாவும் ‘வேறு ஏதாவது அசைவம் சமைக்கிறேன், வரும் போது அவனையும் அழைத்து வந்து விடு’ என சொல்லி விட்டார்.
ஹால் மற்றும் படுக்கை அறையில் தொட்டில் கட்ட வேண்டியிருந்ததால் அசோக்கின் உதவியோடு செய்து முடித்தான் சமர். குழந்தை உறங்கிப் போயிருந்தது. செல்வராஜும் எழுந்து வந்து விட்டார்.
மதிய உணவு தயாராகியிருக்க சாப்பிடலாம் என்றார் லதா. அசோக் முதல் ஆளாக உணவு மேசைக்கு சென்று விட்டான். அனன்யாவுக்கு கோவம் வந்து விட்டது.
“அங்கதானே வர்றேன்னு சொன்னீங்க, அம்மாகிட்ட சொல்லிட்டேன், அவங்க காத்திட்டு இருப்பாங்க” என அவனுக்கு மட்டும் கேட்கும் படி சத்தமில்லாமல் ஆனால் கோவம் வெளிப்படும் படி சொன்னாள்.
“நீதான் சரியா பேச மாட்டேங்குறியே, நான் வர மாட்டேன்” என்றான் அசோக்.
அவனை இன்னும் கோவமாக பார்த்தவள், “நான் கிளம்பறேன் ஸார்” என தள்ளி நின்றிருந்த சமரனிடம் சொல்லிக் கொண்டு, “இரு, சாப்பிட்டுட்டு போகலாம்மா” என அவன் சொன்னதை காதில் வாங்காமலேயே வெளியேறி விட்டாள்.
லதா, ஸ்ருதி இருவரும் அங்கு இல்லை. செல்வராஜின் கவனம் இவர்களிடம் இல்லை.
அனன்யா சென்ற திசையை சலிப்பாக அசோக் பார்த்திருக்க, “என்னடா நடக்குது உங்களுக்குள்ள?” எனக் கேட்டான் சமரன்.
மாமாவின் காதில் விழுந்து விட்டதா என அவரை பார்த்த அசோக், நண்பனை கண்டனமாக பார்த்தான்.
அவன் காதருகில் சென்று, “அப்படி மாமாக்கு தெரிஞ்சிட கூடாத அளவுக்கு என்னடா நடக்குது? மரியாதையா உண்மையை சொல்லு” என்றான் சமரன்.
“நீ வேற ஏன் டா? அப்பா பேசினதுல கோவமா இருக்கா, இல்லாதது எதையாவது சொல்லி அது மட்டும் அவளுக்கு தெரிஞ்சது… அதுக்கும் என்கிட்டதான் வந்து சாமியாடுவா. நான் அங்க போய் சாப்பிட்டுக்கிறேன், இங்க சமாளிச்சுக்க” என சொல்லி அத்தை வீட்டுக்கு புறப்பட்டு விட்டான்.
அறைக்கு வந்த சமர் குழந்தையோடு படுத்திருந்த ஸ்ருதியை சாப்பிட செல்லுமாறு கூறினான்.
“ஏன் சமர், நான் இங்க இல்லாத இவ்ளோ நாள்ல இவங்களுக்குள்ள… அதான் அசோக் அனன்யாக்கு நடுவுல பழக்கம் எப்படி இருக்கு? எதையும் மறைக்கிறாங்களா ரெண்டு பேரும்?” எனக் கேட்டாள் ஸ்ருதி.
“ஷ்ஷ்… ஸ்ருதி! அவன்கிட்ட கேட்டுட்டேன் நான், அப்படிலாம் இல்லைனு சொல்றான் அவன். மாமா அத்தை இருக்கிறப்ப பேசாத இதை பத்தி” என சமர் கூற, குழந்தையிடம் அவனை இருக்க சொல்லி விட்டு சாப்பிட சென்று விட்டாள்.
அசோக் வரவில்லையா என மகளிடம் பாக்யா கேட்டுக் கொண்டிருக்க, “போம்மா!” என அலுப்பாக சொல்லி அறைக்கு சென்று விட்டாள் அனன்யா.
“என்னடி கேட்டுகிட்டு இருக்கேன், இப்படி போனா என்ன அர்த்தம்?” என சத்தம் போட்டார் பாக்யா.
“உன் அண்ணன் மகனுக்கு இங்க வர பிடிக்கலியாம், உன் சமையல் பிடிக்கலியாம், வகை வகையா ஆக்கி வச்சிருக்காங்களாம் அங்க, அங்கேயே சாப்பிட்டுப்பாராம்” என கோவத்தில் பொரிந்த அனன்யாவின் காதில் “வாப்பா வா” என்ற அம்மாவின் வரவேற்பு கேட்கவும் பட் என எழுந்து வேகமாக வெளியில் வந்தாள்.
“என் அத்தை சாப்பாடுதான் எனக்கு பிடிக்கும்னு அங்க சொல்லுங்க அத்தை” என்றான் அசோக்.
தான் பேசியதை காதில் வாங்கி விட்டான் என்பதில் நாக்கை கடித்து சங்கடமாக பார்த்தாள் அனன்யா.
“நீ பேசுற பேச்சுக்கு இன்னும் நல்லா கடிச்சு வை அந்த நாக்கை” என அசோக் சொல்லவும், “பேசுறது நடக்கிறது எதிலேயும் அடக்கம் இல்லை, நல்லா சொல்லுப்பா இவகிட்ட” என சொல்லி உள்ளே சென்றார் பாக்யா.
அனன்யா சொன்ன பிறகுதான் மீன் வாங்கி வந்து சமைக்க ஆரம்பித்திருந்தார் பாக்யா. சமையல் முடியும் தருவாயில் இருந்தது.
சமரனின் வீட்டில் அசோக் உணவு மேசைக்கு சென்ற வேகமே நல்ல பசியில் இருக்கிறான் என்பதை அனன்யாவுக்கு உணர்த்தியிருந்தது. ஆனால் இங்கு ஒன்றும் சொல்லாமல் டிவி போட்டுக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அம்மாவிடம் சென்ற அனன்யா, “அழைச்சிட்டு வான்னு சொன்னா போதுமா? இன்னும் சமைக்காம என்ன செய்ற நீ?” என கடிந்து கொண்டாள்.
“ஆச்சுடி, ஒரு பத்து நிமிஷம்” என அவந்திகா சொல்லிக் கொண்டிருக்கையில் அவளுக்கு மணிகண்டனிடமிருந்து அழைப்பு வர, கைப்பேசியோடு சென்று விட்டாள் அவள்.
மகளை முறைத்துக் கொண்டே பாக்யா குழம்புக்கு ருசி பார்க்க, வறுத்த மீன்களில் இரண்டை ஒரு தட்டில் எடுத்து வைத்து அசோக்கிடம் சென்று நீட்டினாள் அனன்யா.
“கோவம் போச்சா உனக்கு?” என கேட்டுக் கொண்டே தட்டை வாங்கினான்.
“எனக்கு எதுவும் கோவமில்ல” என்றாள்.
“ப்ச்… அப்போ இனிமே என்னை கண்டா தொத்து வியாதி வந்தவனை கண்டது மாதிரி ஓடி ஒளிய மாட்டியே” மீன் சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்.
அதெப்படி அவளால் முடியும்? பாராமல் பேசாமல் இருக்கும் போதே இவனது நினைவு பாடாய் படுத்துகிறது. பழகினால் தன்னை அறியாமல் மனம் வெளிப்பட்டு விடாதா? கட்டுக்குள் இருந்து தொலைக்கிறதா இவன் மீது மிகுந்து கொண்டே போகும் பாழாய் போன இந்த நேசம்? இவனது அப்பா சொன்னது போல இவனும் தன்னை தவறாக நினைத்து விட்டால்… என யோசிக்கையில் அவளது கண்கள் கரித்துக் கொண்டு வந்தன.
“சாப்பிடுங்க” என கர கரத்த குரலில் சொன்னவள் வேகமாக பின் பக்கம் சென்று விட்டாள்.
அசோக்கால் சாப்பிட முடியவில்லை. அவளிடம் வித்தியாசமாக எதையோ உணர்கிறான், ஆனால் இன்னதென இனம் பிரித்துக் காண முடியவில்லை.
சில நிமிடங்களில் தெளிவான முகத்தோடு வந்து நின்றாள் அனன்யா. உணவுகளை கூடத்தில் எடுத்து வைத்தவள் அக்காவையும் சாப்பிட அழைத்தாள்.
நால்வரும் சேர்ந்து சாப்பிட்டாலும் அனன்யாவிடம் மட்டும் எந்த பேச்சுக்களும் இல்லை. தான் திட்டியதால் இப்படி இருக்கிறாள் என நினைத்துக் கொண்டார் பாக்யா. ஆனால் அசோக்கிற்கு அவளது அமைதி நெருடலை தந்தது. வெளிப்படையாக இதை பற்றி அவளிடம் கேட்கவும் தயங்கினான்.
சாப்பிட்டு முடித்ததும் ஓய்வெடுக்கும் படி பாக்யா வற்புறுத்த ஹாலில் ஒரு ஓரமாக படுத்து விட்டான். வசதியில் வாழ்பவன் இப்படி எளிமையான தங்கள் சூழலில் அழகாக பொருந்திக் கொள்வதை நினைத்து அனன்யாவின் மனம் கனிந்து போனது. இன்னும் இன்னும் அவன் பக்கமாக சாய்ந்தாள்.
சற்று நேரமானதும் ஸ்ருதியின் குழந்தையை காண செல்வதற்கு உடைகள் மற்றும் பொம்மைகள் வாங்கி வரலாம் என கிளம்பினார் பாக்யா. தானே அழைத்து செல்வதாக சொல்லி அசோக்கும் அவரோடு சென்றான்.
விரைவாகவே வாங்க வேண்டியதை வாங்கி விட்டார் பாக்யா. அம்மா சொன்னதாக சொல்லி அவந்திகாவுக்கு பட்டுப் புடவை எடுத்தான் அசோக். மறுக்கத்தான் செய்தார் பாக்யா.
“தாய்மாமா வீட்டுல செய்றது முறைதானே அத்தை. அப்பா சொன்னதையே நினைப்பீங்களா, என் சந்தோஷத்தை பார்க்க மாட்டீங்களா?” என கேட்டவனிடம் ஓரளவுக்கு மேல் அவரது மறுப்பு செல்லு படியாகவில்லை.
அவந்திகாவுக்கு எடுத்ததோடு விடாமல் அனன்யா, அத்தை இருவருக்கும் கூட எடுத்தான். அவர் சங்கடமாக பார்க்க, “எது நல்லா இருக்கும்னு செலக்ட் பண்ணுங்க” என அதிகாரமாக சொல்லி, அத்தையை அவனுக்கு பணிய வைத்து விட்டான்.
அவருக்கு எடுத்துக் கொண்டவர், சின்ன மகளுக்கு எடுக்கும் போது குழம்பினார். “பெரியவ எது எடுத்து கொடுத்தாலும் பேசாம வாங்கிக்குவா. சின்னதுதான் நொட்டம் சொல்லும், என்ன எடுக்கன்னு எனக்கே தெரியலை” என்றார்.
அவனுக்கும் புடவை பற்றியெல்லாம் பெரிதாக விவரம் இல்லை. வெள்ளியின் நிறத்தில் பார்டர் கொண்ட இளஞ்சிவப்பு வண்ண புடவையை தேர்வு செய்து அத்தையிடம் காண்பித்து அபிப்ராயம் கேட்டான்.
அவருக்கு பிடித்திருந்தாலும் அதிகமான விலையை மலைப்பாக பார்த்து விட்டு வேண்டாம் என்றார்.
முறைத்த அசோக், “கோவக்காரிக்கு கண்டிப்பா பிடிக்கும், என் கூட சரியா பேசாம இருக்கா அத்தை, இதை கொடுத்து சமாதானம் செய்திடலாம். அவந்திகாவுக்கு விலை கம்மின்னு ஃபீல் ஆனா அவங்களுக்கும் வேற எடுக்கலாம்” என்றான்.
“ஐயையோ நீ வேற, அவ அதெல்லாம் நினைச்சுக்க மாட்டா. அவளுக்கு எடுத்ததே நல்லாதான் இருக்கு” என்றவர் அவனுக்கு திருமணத்தில் அணிய என சட்டையும் வேஷ்டியும் எடுத்துக் கொடுத்தார். அவன் மறுக்கவில்லை.
சமரன் வீட்டுக்கு அழைத்து சென்று அவரை குழந்தையை பார்க்க வைத்தான். அவர் கிளம்பும் போதே அவனும் கிளம்பி விட்டான்.
அத்தையை வீட்டில் இறக்கி விட்டவன் ஒரு ஜவுளி பையில் அவருக்கு தெரியாமல் நகைப் பெட்டியை வைத்து விட்டான்.
வீட்டுக்கு வந்த பின் மகள்களிடம் அசோக் எடுத்து கொடுத்தது என சொல்லி அவரவர்களுக்கான புடவை இருந்த பைகளை கொடுத்தார் பாக்யா.
புடவையை பிரித்து பார்த்த அனன்யா என்ன சொல்வதென தெரியாமல் அதை தடவி பார்த்தாள். மனக் கண்ணில் அசோக் சிரித்தான்.
“இந்த பாரு… சும்மா என் அண்ணன் பேசினதையே நினைச்சிட்டு இருக்க கூடாது. எவ்ளோ தங்கமான புள்ள தெரியுமா அசோக், அவன் முகம் கோணுற மாதிரி நடக்காத, பழைய படி பேசிக் கொண்டு இரு” என பாக்யா சொல்லிக் கொண்டிருக்க, எதுவும் அவளது கவனத்தில் பதிந்தால்தானே?
அவந்திகா நகைப் பெட்டியை கண்டு எடுத்து திறந்து பார்க்கவும்தான் நிகழ்வுக்கு வந்தாள் அனன்யா. மோதிரம், பிரேஸ்லெட், செயின் என இருந்தது.
யாருடையதும் தவறி வந்து விட்டதோ என பயந்து விட்டார் பாக்யா. அப்படி இல்லை என அனன்யாவின் உள்ளுணர்வு சொல்ல, உடனே அசோக்கிற்கு அழைத்து விட்டாள்.
“என்ன அத்தை பொண்ணே… சமாதானம் ஆகிட்டீங்களா? புடவை புடிச்சிருக்கா? கல்யாணத்துக்கு அதையே கட்டிக்கோ” என உற்சாகமாக பேசினான் அசோக்.
“பைல நகையெல்லாம் இருக்கு” என கோவமாக சொன்னாள் அனன்யா.
“மாப்பிள்ளைக்கு செய்ய அத்தை கடன் வாங்க போறதா இருக்காங்கதானே? கடன் வாங்க வேணாம், அந்த நகை மாப்பிள்ளைக்கு வாங்கினதுதான்” என்றான்.
“விளையாடுறீங்களா? உங்ககிட்ட கேட்டோமா? உங்க அப்பா சொன்னதை உண்மை ஆக்க பார்க்குறீங்களா? இதுக்காக எல்லாம் உங்க கூட பழகல நாங்க, ஒழுங்கா வந்து எல்லாத்தையும் வாங்கிட்டு போங்க” என்றவளின் குரல் என்ன சமாளித்தும் கலங்கிப் போயிருந்தது.
“ஹேய் ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற? அப்பா பேசினதை விடவே மாட்டியா? நீ அத்தைகிட்ட கொடு ஃபோனை”
“அவங்ககிட்ட என்ன பேச போறீங்க? இது வேணாம்னா வேணாம்தான். வாங்க உடனே வந்து எடுத்திட்டு போங்க, இல்லைனா உங்க வீடு தேடி வந்து கொடுப்பேன். வந்து… ஹான்… உங்கப்பா முன்னாடி வந்து உங்க பையன் கொடுத்தது வச்சுக்கோங்கன்னு சொல்லி அவர் கைல கொடுப்பேன். உங்களுக்குத்தான் கஷ்டம், சீரியஸா சொல்றேன்” என்றாள்.
“அப்படியா… என் வீட்டுக்கு வர வழி மறந்து போயிடலையே? வா, வந்து அவர்கிட்டேயே கொடுத்திட்டு போ” என கோவமாக சொன்னவன் அழைப்பை துண்டித்து விட்டான்.
“ஹலோ ஹலோ…” என அனன்யா கத்திக் கொண்டிருக்க, “அமைதியா எடுத்து சொல்லாம ஏன்டி இப்படி பேசுற? அறிவு கெட்டவளே எந்திரிச்சு போடி!” என சத்தம் போட்டார் பாக்யா.
“இந்த நகை புடவை எல்லாத்தையும் எடுத்திட்டு போக சொல்லு உன் அண்ணன் பையனை, இல்லைனா நடக்கிறதே வேற” என அம்மாவிடம் கோவமாக சொல்லி அறைக்குள் சென்றவளுக்கு ஏனோ அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.