“இன்னும் என்னந்த அங்க உருட்டிட்டு இருக்க? விரைசா வந்து சோத்தை போடு. இருக்குற பசில வாசம் புடுச்சே எங்க வாய்ல வாய்க்கால் ஓடுது” முன்னே இருந்த தலைவாழை இலையில் நான்காம் முறையாய் தண்ணீர் தெளித்துக்கொண்டே சத்தம் போட்டான் சேகர். நால்வரோடு சேர்ந்து மதியின் தந்தை தாஸுக்கும் பசியில் உமிழ்நீர் ஆறாய் சுரந்தது.
அன்று இரவு உணவு நிம்மதியின் வீட்டில் தான் அனைவருக்கும். அண்ணா பிடித்துக்கொடுத்த மீனோடு மற்ற நால்வரும் சேர்ந்து பிடித்த மொத்த மீன்களையும் இவளிடம் ஒப்படைத்திருக்க, கமகமவென நடந்துக்கொண்டிருந்தது சமையல்.
ஒரு பெரிய தேக்சா ஒன்றை கரித்துணி கொண்டு தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள் நிம்மதி. அவள் சிறு வீட்டின் வெளிப்பக்கம் நீண்டிருந்த பந்தலுக்கு கீழே அமர்ந்திருந்தவர்களில் வேகமாய் எழுந்து வந்து அவளிடம் இருந்து சோற்றுப்பானையை வாங்கிக்கொண்டான் ஐயப்பன்.
“எல்லாருக்கும் சோறு போடு ஐயப்பா” என்றவள், “அப்பா, அந்த விறகடுப்பை பத்தவை, கல்லு கொண்டாறேன்” என்றவள் வேகமாய் உள்ளே சென்று, ஒரு சட்டியோடு வர, பாய்ந்து வந்து கவனமாய் வாங்கிக்கொண்டான் பரத்.
சுடசுட கையில் இருந்த குழம்பு பாத்திரத்தை வாங்கி கீழே வைப்பதற்க்குள்ளேயே முகர்ந்துப்பார்த்தவன், “ப்பா… மணத்து கடக்கு புள்ள” என்றான் ரசித்து.
அடுத்தடுத்த சிறுசிறு பாத்திரங்களும் அங்கே வந்து சேர்ந்திருக்க, விறகடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் ஊற்றி, மசாலா தடவி ஊற வைத்திருந்த மீன்களை எடுத்து பொரிக்க ஆரம்பித்தாள் நிம்மதி. அந்த வாசனையை முகர்ந்துக்கொண்டு மீன்குழம்பை அள்ளி வாயில் அடைத்தனர். மீனின் தலையும் வாலும் மட்டுமே குழம்பில் இருக்க, அதுவே ஏக ருசியாய் இருந்தது.
அடுப்பின் முன்னே அமர்ந்து வெந்துக்கொண்டிருந்த மீனை ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்த நிம்மதியை, “மதி” என்று அழைத்தான் நந்தா.
அவள் பதில் சொல்லாமல் போக மீண்டும் சத்தமாய் அழைத்தான். அதிலும் அவள் திரும்பாமல் இருக்க, மற்றவர்கள் தான், அவனிடம் ‘என்னடா?’ என்றனர்.
“மீன் வெந்துருச்சுடா! அது தெரியாம பிராக்கு பாத்துட்டு இருக்கு” என்று சொல்ல, தாஸ் அவள் முதுகிலேயே மெலிதாக தட்டினார்.
அந்த அடியில் களைந்தவள், “ஸ்… ஆஆ! என்னப்பா?” என்று கடுப்புடன் விளிக்க, “மீனை கருவாடாக்காம ஆளுக்கு ரெண்டா போடு” என்று தாஸ் சொன்னதும் தான், ‘ஐயோ’ என தன்னையே நொந்துக்கொண்டு வேக வேகமாய் எடுத்து பரிமாறிவிட்டு, மீண்டும் கல்லை நிரப்பி எண்ணெய் விட்டாள் மதி.
அவனிடம் பதிலுக்கு வாயாடாமல் ஒருமாதிரி சிரித்துக்கொண்டே இருந்தவளை அதிசயம் போல பார்த்துவைத்தனர் ஐவரும்.
“கல்யாணம் ஆனதும் ஆச்சு, மதிக்கு வாய் தேஞ்சுடுச்சு போலயே!” என்று சேகர் சிரிக்க, “பின்ன, கல்யாணம் ஆனாலே ஒரு அடக்கவொடுக்கம் வந்துடும் ல” என்று சிரித்தான் ஐயப்பன்.
“அப்ப இதுக்கு முன்ன அடங்காபிடாரியா திரிஞ்சேன்னு சொல்ல வரியா?” கையில் தோசைக்கரண்டியுடன் கோவமாய் மதி கேட்க, நால்வரும் சத்தமாய் சிரித்தனர். இளையர்கள் பேசி சிரிக்கட்டும் என்று உண்டு முடித்ததும் எழுந்துக்கொண்ட தாஸ், “நான் சித்த காலாற நடந்துட்டு அப்டியே வீட்டுக்கு போய் தூங்கிக்குறேன், நீங்க சட்டுபுட்டுன்னு சாப்பிட்டு எழுந்துரிங்க” என்று சென்றுவிட்டார்.
“அண்ணாக்கு என் மேல எவ்ளோ இஷ்டம் தெரியுமா?” திடுமென அவள் பேச, ‘இது என்ன புது கதை?’ என்பது போல கண்ணை விரித்தனர் நால்வரும்.
“நான் எப்ப மீனு திங்க ஆசைப்பட்டேன்னு எனக்கே கூட நினைவில்ல. ஆனா, அது அண்ணாக்கு தெரிஞ்சுருக்குடா! இன்னைக்கு பார்த்தியா? மீனை புடிச்சு என் கைல தான் கொண்டு வந்து குடுத்துச்சு” என்று சிலாகிப்பாய் சொல்ல, ‘வேற யார்ட்டடா குடுப்பான்?’ என்று தான் பார்த்தனர் நால்வரும்.
“எனக்கென்னவோ… எனக்காக தான் குளத்தையே குத்தகைக்கு எடுக்க நினைச்சுருக்குமோன்னு தோணுது தெரியுமா?” என்று அவள் கல்லில் இருந்த மீனை கரண்டியால் கீறிக்கொண்டு காதலில் கரைந்து பேச, “மதி, மதி… அந்த மீன இங்கன நவுத்திட்டு அப்புறம் பேசேன்!” என்றான் சேகர்.
முறைத்தாலும், மீனை கொடுத்துவிட்டு, “நீங்க சொல்லுங்க… மீன் வியாவாரம் பார்க்கனும்ன்னு இத்தனை வருஷத்துல என்னைக்காச்சும் அண்ணா சொல்லிருக்குமா? ஆனா, நான் மீன்க்காரன் கிட்ட சண்டை போட்ட பிறகு தான், அதுக்கு குளத்தை குத்தகைக்கு எடுக்குற ஐடியாவே வந்துருக்கு” என்று சொல்ல,
“நீ சண்டை போட்டது அவனுக்கு எப்படி தெரியுமாம்?” என்றான் பரத்.
“ஆமா, தெரியாம போகப்போது பாரு! நான் போட்ட சத்தம் காத்துல கலந்தே அவன் காதுக்கு போய்டும்! நம்ம ஊரு ஓட்ட வாய்களை வச்சுக்கிட்டு இதெல்லாம் ஒரு விஷயம் பாரு!” என்றாள். அதுவும் சரிதான் என்பதால், அவன் கேள்வி கேட்காமல் உணவை தொடர,
“சொல்லுங்கடா… அண்ணாக்கு என்னை புடிக்கும் தானே?” அவள் ஆசையாய் வினவ, ஒரு பெரிய ஏப்பத்துடன், “இதை நீ அவன்கிட்ட கேட்கணும் லூசு, கொஞ்சம் சோறை வையு” என்றான் ஐயப்பன்.
‘ம்கும்… கேட்டா மட்டும், கிளுகிளுன்னு பதில் சொல்லிட்டு தான் மறுவேலை. சரியான கல்லூளிமங்கன்’ என்று மனதில் அவனை வறுத்துக்கொண்டே அவர்களுக்கு மறுசோறு போட்டாள்.
அடுத்து சில நிமிடங்கள் தான் கடந்திருக்கும். நால்வருக்கும் வறுத்த மீனை எடுத்து வைத்த மதி, “டேய், எப்போதுவாது அண்ணா என்னைப்பத்தி பேசிருக்காடா” என்றாள் மெதுவாய்.
மீனை வெங்காயத்தோடு வைத்து ருசித்துக்கொண்டிருந்தவர்களும், “ஏன் பேசாம? பொண்ணா அவ, பிசாசு! ராட்சசி, என் உயிர் எடுக்க வந்தவ… ஹான்? அப்புறம்… கால் வச்ச காட்டேரி, மதி கெட்ட மண்ணாந்த…” என்று அடுக்க, மீனை அவசரமாய் முழுங்கிய பரத், “எருமைமாட்டு முண்ட’த்த விட்டுட்ட பாரு!” என்று எடுத்துக்கொடுக்க, இங்கே அடுப்பை விட அனல் பறந்தது மதியின் முகம்.
நால்வரும் ஒருவரைஒருவர் பார்த்து நமட்டு சிரிப்போடு உணவை தொடர, அங்கே தன் சைக்கிளை கொண்டு வந்து நிறுத்தினான் அண்ணாமலை. ஐவரும் அவன் புறம் திரும்ப, இவன் யாரையும் பாராமல் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வேகமாய் வந்து அமர்ந்தான். அதுவே அவன் பசியின் அளவை சொல்லியது.
மதியும் பேச்சை தொடங்காமல் அவனுக்கு பரிமாற, வேக வேகமாய் எடுத்து வாயில் அடைத்தவனிடம், “எல்லாம் சுத்தப்படுத்தி குடுத்துட்டியா அண்ணா?” என்றான் பரத். உண்டுக்கொண்டே ‘ம்ம்’ என்றான்.
ஆசிரமத்துக்கு கொடுத்த மீன்களை சுத்தப்படுத்திக்கொடுத்துவிட்டு அவர்கள் சமைக்கும் வரை உடன் இருந்து உதவிவிட்டு வந்தான் அண்ணாமலை. உடன் வருவதாக சொன்னவர்களை மறுத்துவிட்டு அவன் மட்டுமே போனதால், திரும்பி வர தாமதமாகியிருந்தது.
இவன் பாதி சாப்பாட்டில் இருக்கும்போது மற்றவர்கள் கழுத்து வரை உண்டுவிட்டு நிமிரக்கூட முடியாமல், ஆடி அசைந்து நகர்ந்தனர்.
“அண்ணா கிளம்புறோம்… செம்ம சாப்பாடு இன்னைக்கு…!” சொல்லிவிட்டு நால்வரும் சிரித்து பேசிக்கொண்டு கிளம்ப, அந்த இருட்டிய நேரத்தில் அவனும் அவளும் மட்டுமே!
உண்ண ஆரம்பித்தபோது இருந்த வேகம் அவனிடம் மெல்ல மெல்ல குறைந்தது.
“ஏன் நல்லா இல்லையா?” என்றாள் அவன் முகம் பார்த்து. நிமிர்ந்து அவளை பார்த்தவன், “பசி அடங்குனா போதும்” என்றிட, “அட, வயிறு முட்ட தின்னுய்யா” என்று மீனை எடுத்து வைக்கப்போக, அவள் கரம் பிடித்து தடுத்தவன், “தின்னுட்டு உருள முடியாது!” என்றுவிட்டு ஒருவித அர்த்த பார்வையுடன் எழுந்துக்கொள்ள, இவளுக்கு தான் ஜிவ்வென்று ஏறியது.
அவன் இலையிலேயே கொஞ்சமாக போட்டு உண்டவள், மீதத்தை மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று பத்திரப்படுத்தினாள். மீன் குழம்பு எப்போதும் மறுநாள் தானே ருசிக்கும்!?
அவள் வந்தபோது அவன் பாயில் சரிந்து செய்தி சேனலை பார்த்துக்கொண்டிருந்தான். கூச்சத்தை மறைத்துக்கொண்டு இயல்பாய் அமர்வது போல அவன் அருகே அமர்ந்து அவளும் தொலைகாட்சியில் கண்ணை வைக்க, சற்று நிமிடத்தில் அவள் இடை பக்கம் அரவம் தெரிந்தது.
அவன் தான்… இதோ அவன் கரம் மெல்ல மேலேறி அவள் இடையை பிடிக்கப்போகிறது என்று அவள் எண்ணிக்கொண்டிருக்கவே, “படுக்குறப்போ டிவிய நிறுத்திடு” என்றான் அவன் கொட்டாவினூடே!
“என்ன தூங்கிட்டான்?” என அவள் நினைக்கும்போதே, “சித்த கால் அமுக்கேன்!” என்று கண்ணை திறவாமலேயே அவள் மடி மீது காலை வைத்தான் அண்ணாமலை.
அவள் மெல்ல பிடித்துவிட ஆரம்பிக்க, “ஹா… அங்கதான்.. ஹப்பா, பண்ணிட்டே இரு!” என்று அவன் பாட்டாய் பாட, ‘இதெல்லாம் என் வசனம் டா’ என்று நினைத்தவள், கடுப்பில் வேகமாய் ஒரு அழுத்து அழுத்த, ‘அம்மாஆஆ’ என்று அலறி எழுந்தான் அவன்.
“ஏன்டி இப்டி பண்ண?” அவன் காலை பிடித்துக்கொண்டு கேட்க, ஒன்றுமே சொல்லாமல் வெடுக்கென படுத்துக்கொண்டாள் மதி.
நாள்முழுக்க ஓட்டமும் ஆட்டமுமாய் இருந்ததில் கால் குடைச்சல் அவனுக்கு. கைகள் இரண்டையும் தலைக்கு குடுத்து அமைதியாய் படுத்தான்.
சில நிமிடங்கள் தான் பொறுத்திருப்பாள். “இப்டி படுத்து தூங்க தான் கோழி மாறி கொறிச்சியா சோத்த?” என்று கேட்டுவிட, “ஆமா, தின்னுட்டு உடனே படுத்தா நெஞ்சு கரிக்கும்ல?” அவன் எசக்கேள்வி கேட்க, வாய்க்குள்ளேயே ஏதோ திட்டிக்கொண்டாள். கண்டிப்பாக அது நல்லவார்த்தை இல்லை என்று புரிய, இலகுவான சிரிப்போடு திரும்பி படுத்தவன் நிமிடமில்லாமல் உறங்கிப்போனான். முனகிக்கொண்டே இருந்தவளும் சற்று நேரத்தில் தூங்கிப்போக, மறுநாள் அண்ணா கண்விழித்ததோ அவளது அரைகுறை தரிசனத்தில் தான்.
கண்ணை திறந்ததுமே உள்பாவாடையும் ஜாக்கெட்டும் மட்டும் அணிந்துக்கொண்டு இரண்டு கைகளையும் பின்னால் வைத்து அவள் என்னவோ செய்துக்கொண்டிருக்க, “ப்பாஆஆ… போரை கொஞ்சம் ஒத்தி வைக்கலாம் போலயே!” என்றபடியே சோம்பல் முறித்தபடி எழுந்தான் அவன்.
முறைத்தவள் மறுப்பக்கம் திரும்பி என்னவோ செய்ய, “என்னடி பண்ற?” என்றான் அவளை நெருங்கி.
“ப்ச், இந்த ஜாக்கெட்டு பின்னாடி கட்டுற கயிறு கட்டவே வர மாட்டுது. நானே கட்டிட்டு கையை இறக்குனா கழுத்தை இழுக்குது!” என்று புலம்பியவள், “நீ சித்த கட்டிவிடேன்” என்றாள் முதுகை காட்டி.
அவள் நின்ற தோரணையையும், அவளது முதுகையும் பார்த்தவன், ஒரு உஷ்ணமூச்சுடன், “நீயே கட்டு, எனக்கு வேலை இருக்கு” என்றான் தன் பிரஷை எடுத்துக்கொண்டு.
அவளுக்கோ சுர்ரென கோபம் எகிறியது.
“கட்டி விட்டா என்னவாம்?” அவள் கேட்க, “கட்ட தெரியாது டி” என்றவன், பல்லை விலக்க ஆரம்பிக்க, “அதானே, உனக்கு அவுக்க தானே தெரியும்” என்று சத்தமாகவே அவள் முனக, அவளுக்கு முகுது காட்டி நின்னவனுக்கு, முகமெல்லாம் புன்னகை தான்!
எப்படியோ அவள் கட்டி முடித்து புடவையும் கட்டிவிட்டு வெளியே வர, “அது என்னத்துக்கு அந்த கயிறு?” என்றான் அவன். அவன் மீதிருந்த கடுப்பில், “ம்ம்… உன்ன மாறி புருஷன் கிடைச்ச சந்தோஷத்த கொண்டாட, அதை அப்டியே முன்ன இழுத்து நாங்களே எங்க கழுத்த இறுக்கிப்போம்! அதுக்கு தான் அது” என்றுவிட்டு போக, “நீ இன்னும் சந்தோசமாகல போலயே” என்றான் அவன் சத்தமாய். முகத்தில் குறும்பு வழிந்தது.
தன் ஸ்கூட்டியை எடுத்தவள், “ரொம்ப தாய்யா திமிரு உனக்கு” என்றதோடு, “குழம்பு, வறுவல் எல்லாம் இருக்கு, எடுத்து போட்டு சாப்பிடு! நான் தேவூர் வரை போறேன், ஒரு பிசினஸ்” என்று சொல்ல, “பார்த்து போ” என்றான்.
அந்த ஒற்றை வார்த்தைக்கே அவள் முகம் ‘ஈஈ’ என ஆக, அவனை பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.
தேவூரில் புதியதாய் ஆரம்பித்திருந்த பேக்கரியில் தன் தயாரிப்புகளை வைக்க டீல் பேசிவிட்டு திருவாரூர் வரை சென்று சில பொருட்கள் வாங்க மதி அலைய, அவள் கேட்டதை எல்லாம் சிறுது நேரத்தில் தருவதாக சொல்லி கடையிலேயே அமர வைத்தார் முதலாளி.
அங்கே அவளிடம் ஒரு நோட்டீசை கொண்டு வந்து நீட்டினான் ஒரு சிறுவன்.
ஏதோ விளம்பரம் என்று யூகித்து அதை மெதுவாய் படிக்க ஆரம்பித்தாள்.
“TASTE BUDS ஆப்’க்கு வாங்க…
இருந்த இடத்தில் இருந்தே எல்லாம் வாங்குங்க!”
என்று பெரிய எழுத்துக்களில் இருந்ததற்கு கீழே, மட்டன், சிக்கன், மீன், இறால், நண்டு, காடை இன்னும் அவள் உண்டே இராத என்னென்னவோ படங்களாக பளபளவென இருந்தது. அடியில் பத்து இலக்க தொலைபேசி எண்கள் இரண்டு கொடுக்கப்பட்டிருக்க, அதற்கு தொடர்புக்கொண்டு தமக்கு தேவையான அளவை சொன்னால், அடுத்த அரைமணி நேரத்தில் ‘இறைச்சி இல்லம் தேடி வரும்’ என்று போடப்பட்டிருந்தது.
அதையும் விட, ‘ஆப்’ மூலமாக முதன்முறை இறைச்சி வாங்கும் நபருக்கு, நூறு ரூபாய் தள்ளுபடியோடு, மசாலா பாக்கெட்டுகள் இலவசம்’ என்பதை போல இன்னும் சில சலுகைகள் போட்டு கவர்ச்சிகரமாய் இருந்தது அந்த விளம்பர சீட்டு. பார்ப்பவர் யாராயினும் ஒருமுறையாவது இதில் வாங்கி பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்க, வெறுமையாய் வாசித்தவள், ‘எப்படி எல்லாம் முன்னேறிட்டாங்க’ என்ற எண்ணத்தோடு அந்த சீட்டை அசட்டையாய் தன் பைக்குள் திணித்தாள்.
அந்த கணம், அவளுக்கு கொஞ்சமும் தோன்றவில்லை, இந்த ஒற்றை சீட்டின் உள்ளடக்கம் அவளது உயிருக்கு உயிரான ஒன்றை காவு வாங்க போகிறதென்று!
அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கையில், என்ன நடக்கும் என எவர் அறிவார்!