கீர்த்தனா வெளியே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். சுருதி அவளை முறைக்க, சிம்மா அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
அண்ணா, “யார் இந்த பொண்ணு?” கேட்டுக் கொண்டே மகிழனும் அவனுடன் திலீப்பும் அவர்களிடம் வந்தனர்.
சுருதி அவன் முன் வந்து, இந்த பொண்ணை நீங்க தான புகைப்படத்துல காட்டலை. அதான நான் அவளுக்கு ஆடை எடுக்கலை. “இதுக்கெல்லாம் பிரச்சனை பண்றா? ஊர்ல வச்சி வாங்கித் தாரேன்னு சொன்னா..இப்பவே வேணும்ன்னு நிக்கிறா?” கோபமாக மகிழனிடம் பேசினாள்.
எனக்கு இந்த பொண்ணை யாருன்னே தெரியாது. இப்ப தான் பார்க்கவே செய்கிறேன் என்று மகிழன் சிம்மாவை பார்த்து, அண்ணா “யார் இந்த பொண்ணு?” எனக் கேட்டான். அவன் விவரத்தை சொல்ல..அவள் மேலும் அழுதாள்.
அய்யோ, அழுகையை நிறுத்து. என்னுடையதை நீ எடுத்துக்கோ என்றாள் சுருதி.
நீ வேணும்ன்னா ரித்துவுக்கு எடுத்ததை வச்சுக்கோ. நான் அவளுக்கு தனியா வாங்கினேன் என்றான் மகிழன்.
“என்னது? எப்ப எடுத்தீங்க?” சுருதி கேட்க, அது வந்து..என அவன் சிம்மாவை பார்த்தான்.
அதை எடுத்துட்டு வா பார்க்கலாம் என சிம்மா சொல்ல, ஆசையாக மகிழன் உள்ளே சென்று எடுத்து வந்தான். அவன் காட்டவும் சுருதி அவனை முறைத்தாள்.
“என்னது இது? கல்யாணப் பொண்ணு உடுத்தும் ஆடையா இது?” வொய்ர்க் கம்மியா இருக்கு என சுருதி குறைபட, என்னோட தம்பி எடுத்ததையே நான் போட்டுக்கிறேன் என்றாள் ரித்திகா.
“இதுக்கு தான் நான் பார்த்து பார்த்து உங்களுக்கு எடுத்தேனா?” சுருதி கோபித்துக் கொண்டு தள்ளி அமர்ந்தாள்.
“என்ன சுருதி? இதுக்கெல்லாமா கோபப்படுவ?” அவங்களுக்கு எடுத்ததை நீ போட்டுக்கோ திலீப் சொல்ல, மக்கு மாமா..அது பிரைடு போட வேண்டியது. “அதை போட எனக்கா கல்யாணம் நடக்கப் போகுது?” என்று திலீப் கையில் குத்தினாள்.
மாமா..இவள பாருங்க திலீப் சுருதி அப்பாவை அழைக்க, ஆமா “என் பொண்ணு சொல்றதுல என்ன தப்பு இருக்கு?” கல்யாணம் திரும்ப செய்ய முடியாது. அதுக்கான உடை அணிந்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவர் சொல்ல, ரித்திகா மகிழனை பார்த்தாள்.
மகிழ், “இதை ரித்து மற்றொரு நாள் போட்டுப்பா” என்று உதிரன் சொல்ல, அவன் முகம் சுருங்கியது.
சுருதி, மகிழ் வாங்கியதை நீ வச்சுக்கோ. அவன் வேற புடவை நாளை கூட வாங்கித் தருவான் என்றாள் ரித்திகா.
“அக்கா” மகிழன் அழைக்க, “ப்ளீஸ்” என கெஞ்சினாள் ரித்திகா.
இந்தா, நீயே வச்சுக்கோ என்று மகிழன் அவன் வாங்கிய புடவையை சுருதியிடம் நீட்ட, எனக்கு வேண்டாம். “விருப்பமில்லாமல் கொடுப்பதை நான் எப்படி வாங்குவது?” எனக்கு நான் அணிந்திருக்கும் ஆடையே போதும் என்றாள் சுருதி.
பல்லை காட்டிக் கொண்டு, “இப்ப வாங்கிக்கிறீயா?” என மகிழன் கேட்க, பக்கென சிரித்து விட்டாள் சுருதி.
ம்ம்..என அவனிடம் வாங்கிக் கொள்ள, திலீப்பின் பாக்கெட்டில் கையை விட்டு வாலெட்டை எடுத்து அதிலிருந்த புடவை மதிப்பிற்கான பணத்தை மகிழனை அழைத்து கொடுத்தாள்.
“பணமா?” வேண்டாம் என்றான் அவன்.
வாங்கிக்கோங்க. நாளைக்கு நானும் உங்க அக்காவுக்கு வேற புடவை எடுக்க, உங்களுக்கு விருப்பமிருந்தால் வாங்க என்றாள் சுருதி.
ம்ம்..என்று மகிழன் அவளை பார்த்து புன்னகைத்தான். எல்லாரும் இருவரையும் பார்த்தனர்.
பிளைட் வந்து விட எல்லாரும் அதில் ஏறினர். என்னோட தோழன் பெரிய ஏர்கிராப்டே வச்சிருக்கான் திலீப் சொல்ல, ம்ம்..சீக்கிரம் கிளம்பணும். சீட் பெல்ட் போடுங்க என்று ஒருவர் குரல் கொடுக்க, அனைவரும் அணிந்தனர்.
சுருதி நட்சத்திரா அருகே வந்து சிம்மாவை பார்த்துக் கொண்டே நின்றாள்.
என்ன? அவன் கேட்க, மெஹந்தி வைக்கணும்.
வேண்டாம் சுருதி. காய நேரமாகுமே நட்சத்திரா சொல்ல, இது கோன் இல்லை என்று ஒரு பொடியை காட்டினாள்.
ரித்திகா எதிரே இருந்து அதை பார்த்து, இதில் எண்ணெய் சேர்த்து..கையில் இட்டு உடனே கழுவினால் சிவப்பாகி விடும். இப்பொழுது தான மார்க்கெட்டில் அறிமுகமானது என கேட்டாள்.
ம்ம்..என்ற சுருதி டிசைனை ஒருமுறை பார்த்து விட்டு மளமளவென போட்டு முடித்தாள். நட்சத்திரா, ரித்திகா, கீர்த்தி, அன்னத்திற்கும் போட்டு விட்டாள்.
அன்னம் வேண்டாம் என்று வெட்கப்பட, ஆன்ட்டி..உங்க ரெண்டு பிள்ளைகளுக்கு திருமணம் அவங்கள விட நீங்க தான் அழகா இருக்கணும் என்று மேலும் வெட்கப்பட வைத்து போட்டு முடித்தாள்.
“உனக்கு போடலையா?” ரித்திகா கேட்க, அப்பாடா முடியலை என்று தனிக்காட்டில் அமர்ந்த ராஜா போல் உறங்கிக் கொண்டிருந்த திலீப் அருகே வந்து, “என்னோட மாமா எனக்கு போட்டு விடுவார்” என்றாள்.
நட்சத்திரா புன்னகையுடன், “நடத்து…நடத்து..” என புன்னகைத்தாள்.
அச்சோ, நீங்க நினைப்பது போல் இல்லை. நாங்க எல்லாரும் ஒன்றா வளர்ந்தவங்க. எனக்கு எங்க மாமாவும் அண்ணாவும் ஒன்று தான். என்ன மாமா? என்று அவன் தோளில் கையை போட.
சுருதிம்மா. முதல்ல திலீப்பை எழுப்பு என்றார் அவள் அப்பா.
“மாமா” என்று அவனை உலுக்கினாள்.
“என்ன சுருதி?” டிஸ்டர்ப் பண்ணாத என்றான் அவன்.
“மெஹந்தி போட்டு விடு மாமா” என்று கையை நீட்டினாள்.
சரி..சரி..என்று அவள் கையை பிடித்து அதில் ஆர்வமானான். எப்படி? நட்சத்திராவை பார்த்து கண்ணை காட்டினாள்.
ம்ம்..சூப்பர்ம்மா..என்று புருவத்தை ஏற்றினாள் நட்சத்திரா. மகிழனுக்கு சுருதி காரில் வைத்து அவள் அப்பாவிடம் கூறியது தன்னை தானா? என சிந்தனையுடன் இருந்தான்.
சுருதி திலீப்பையே பார்க்க, “என்ன?” எனக் கேட்டான். இவர்கள் முன் தான் பரிதியும் மகிழனும் அமர்ந்திருந்தனர்.
மாமா, “எனக்கு உதவி செய்றீங்களா?” எனக் கேட்டாள்.
நான் முடிச்சிட்டேன். “என்ன உதவி?” என திலீப் சுருதியை பார்த்தான்.
நம்ம சுவா விசயம் தான். விக்ரம் சார் அவ மேல கோபமா இருப்பாங்கல்ல. அவளுக்கு கஷ்டமா இருக்கும்ல்ல என சுருதி கேட்டாள்.
“என்ன விசயம்?” சிம்மா கேட்க, விசயத்தை சொன்னார்கள். கீர்த்தி அன்னத்தின் தோளில் தான் சாய்ந்திருந்தாள். அன்னம் அவளை பார்த்தார்.
“சுவா தான் அவரை காதலிக்கிறால்ல அப்படி இருக்கும் போது நம்பாமல் இருக்கலாமா?” திலீப் கேட்க, “சரியான கேள்வி” என்று நட்சத்திரா புன்னகைத்தாள். சிம்மா அவளை முறைத்தான்.
மாமா..திட்டீறாதீங்க. அர்சு குட்டி தூங்குறான்.
“திடீர்ன்னு ஒரு பொண்ணு அவளோட காதலனை கட்டிப் பிடித்து அவரும் கட்டிப் பிடித்தால் தப்பா தான யோசிக்க தோணும்?” என சுருதி கூற, மகிழன் எழுந்து, “மேடம் என்ன சொன்னீங்க?” எனக் கேட்டான்.
“என்ன?” சுருதி கேட்க, எல்லாரும் அவனை பார்த்தனர்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது மறந்து போச்சா என மகிழன் கேட்க, “நீ என்னடா இவ்வளவு எமோஸ்னல் ஆகுற?” ரித்திகா கேட்டாள்.
“யார் என்ன செய்தால் எனக்கென்ன?” ஆனால் நாம சரியா இருந்துட்டு பேசணும்ல்ல என்றான்.
“என்ன ரித்து? உன்னோட தம்பி பேச்சே சரியில்லையே! காதல்ல விழுந்துட்டானோ!” என உதிரன் ரித்திகா காதில் கிசுகிசுக்க, “சும்மா இருங்க மாமா” என அவனை இடித்தாள் அவள்.
“அது நான் மாமாவுக்கு ஆறுதலுக்காக தான்” என சுருதி சொல்ல, “அது போல் இந்த பொண்ணும் விக்ரமை அணைத்திருக்கலாமே! அப்படி என்ன?” அதான உண்மை.
ஹப்பா, “நான் எதுவுமே பேசலை” என சுருதி மகிழனை முறைத்தாள்.
எங்க திருமணம் முடியும் வரை யாரும் விக்ரம் இருக்கும் இடத்தில் உள்ள யாரிடமும் பேசவே கூடாது என்றான் சிம்மா.
“ஏன் சார்?” சுருதி கேட்க, “ஆமா காரணம் தெரியாமல் சொன்னதை செய்ய மாட்டாங்க” என மகிழன் மீண்டும் அவளை வம்புக்கு இழுத்தான்.
இங்க பாருங்க..விக்ரம் சார் சுவா மேல கோபமா இருக்கார். அதே போல சுவாதி பெற்றோருக்கு விக்ரம் சாரை பிடிக்கலை. அப்ப அவ அவருக்கு எவ்வளவு சப்போர்ட்டா பேசுனா தெரியுமா? என சொல்ல, சுருதி..என திலீப் அவள் வாயை மூடினான்.
ரகா, “இந்த விசயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்ல்ல மறந்துட்டீயா?” திலீப் கேட்க, என்ன சுருதிம்மா..அமைதியா இரு என்று அவள் அப்பா சொன்னார்.
“என்ன நடந்தது? விக்ரம் அப்படி அவங்கள என்ன செய்தானாம்?” சிம்மா கோபமாக கேட்க, திலீப் கையை எடுத்து விட்டு சுருதி, மாமா நீ சும்மா இரு. சார் முடிந்தால் உதவுவாங்கல்ல என்று அவனை அநாதை என கூறியதையும் வனஜாவிற்கு அவனை பிடிக்காது என்றும் அவன் போலீஸ் என்றும் அவர்கள் அடுக்கிய காரணத்தை கூற, அன்னம் பதறி, மாமா..என பரிதியை கண்கலங்க பார்த்தார்.
ஆமா, “எனக்கும் தெரியும்” என்று ரித்திகா சொல்ல, “என்ன ரித்திம்மா அமைதியாகவா வந்த?” அன்னம் கோபமாக கேட்டார்.
இல்ல, “எல்லாருமே செத்து போயிட்டாங்க” என்று கதறி அழுதாள் கீர்த்தி.
“எல்லாருமா?” இல்லை. “ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க” என சிம்மா சிந்தனையுடன் அவளை பார்த்தான்.
இல்ல அண்ணா, நானும் லட்சுமி அம்மாவும் சில பொருட்கள் வாங்க தான் வெளிய போனோம். பள்ளி முடிந்து வந்தவுடனே வெளியே கிளம்பிட்டோம். நாங்க வரும் போது உள்ள அந்த ரௌடி ஆளுங்க பிரச்சனை பண்ணிட்டு இருந்தாங்க. அதுல பாட்டியை கீழே தள்ளி விட்டு இரத்தம் வந்தது. அதனால என்னை மறைந்து இருக்க வைத்து விட்டு விக்ரமை அழைக்க சொல்லி அலைபேசியை கொடுத்திட்டு போனாங்க.
ஆனால் லட்சுமி அம்மாவுடனும் பிரச்சனை முற்றி கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து விட்டு வெளியே வந்துட்டாங்க. அவனுக வந்தவுடனே சிலிண்டர் வெடிக்கும் ஒலியுடன் எல்லாருமே செத்து போயிட்டாங்க. நான்..விக்ரமை அழைத்து அவன் எடுக்கவில்லை. எல்லாம் முடிந்த பின் தான் ரவி சார் வந்தார்.
“யாருமே இல்லை” என வேதனையுடன் கதறி அழுது கொண்டே சிம்மாவை அணைத்தாள். அன்னம் எழுந்து, “போடா அந்த பக்கம்” என அவளை மார்போடு இழுத்து அணைத்துக் கொண்டார்.
சிம்மா அதிர்வுடன் இருக்க, சட்டென அமைதியாகிய கீர்த்தி, அண்ணா.. விக்ரமிற்கு ஒன்றுமாகாதுல்ல. குடும்பமாக வேற இருக்காங்க. எனக்கு விக்ரமை தவிர இப்ப யாருமே இல்லை என அழுதாள்.
“என்னம்மா பேசுற?” நாங்க எல்லாரும் இருக்கோம்ல்ல என்று அன்னம் சொல்ல, அவரை அணைத்துக் கொண்டாள் கீர்த்தி.
இல்ல அங்கிள், பயப்படாதீங்க. அங்க யாருக்கும் ஏதும் ஆகாது. விக்ரம் பார்த்துப்பான்.
“எதனால இப்படி பண்ணாங்க?” திலீப் கேட்க, ஆசிரம இடத்தை ஆக்கிரமித்து மால் கட்ட தான் செய்றாங்க. விக்ரம் தான் யாரும் உள்ளே நுழையாமல் பார்த்துட்டு இருந்திருக்கான். ஆனால் அவன் மிருளா ஊருக்கு போன சமயம் இப்படி செஞ்சுட்டாங்க. என்னிடமாவது முன்னதாகவே அவன் சொல்லி இருக்கலாம்.
சார், “அப்ப பெரிய ஆளுங்க எல்லாரும் இதுல இருப்பாங்கல்ல?” திலீப் கேட்க, இருக்காங்க. ஆனால் இப்ப பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன். ஆனால் அவனுக கீர்த்தியையும், விக்ரமையும் உயிரோட விட மாட்டானுக என்றான் சிம்மா.
“விக்ரமிற்கு உதவ யாருமில்லையா?” நட்சத்திரா கேட்க, அவனுக்கு உதவிக்கு செக்யூரி ஆளுங்கல்ல அனுப்பிட்டேன். அதான் அந்த அஜய் அப்பாவின் செக்யூரிட்டீஸ் என்றான் சிம்மா.
அதே நேரம் விக்ரம் அமர்ந்திருக்க, “மாம்ஸ் ரசி எங்க?” என்று ஆகாஷ் அங்கே வந்தான். ரசிகா பின் சுவாதியும் வர, “ஹாய் செல்லம்” என்று ஆகாஷ் ரசிகா கன்னத்தை தட்டினான்.
மாமா, “நீ எதுக்கு வந்த?” ரசிகா ஆகாஷிடம் கேட்டுக் கொண்டே அவள் அண்ணன் அருகே வந்து அமர்ந்தாள்.
“உன்னை பார்க்க தான் செல்லம்” என்று அவளருகே அமர்ந்தான் அவன்.
அண்ணா, “சுவா அந்த நிலையில என்ன நினைப்பா? நீ அவள் இடத்தில் இருந்தால் கோபப்பட மாட்டாயா?” ரசிகா கேட்க, சுவாதி ஒரு முறை சிம்மாவை கல்யாணம் செய்வதாக நட்சத்திராவை வம்பு செய்யும் போது சிம்மாவுடனான சுவாதி நெருக்கம் நினைவிற்கு வந்தாள்.
ரசிம்மா, அதை விடு. நீ ஆகாஷோட இப்பவே கிளம்பு என்றான் விக்ரம்.
“அண்ணா” என ரசிகா அழைக்க சுவாதி அவர்கள் முன் வந்து நின்றாள். அவன் அமைதியாக அவளை பார்க்க, அவள் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள்.
மாமா, வா என ஆகாஷை ரசிகா இழுத்து சென்றாள். அந்நேரம் ரகசியனும் விகாஸூம் வெளியே வந்தனர்.
“யாருடா அண்ணா இவன்?” உன் ஆளோட போறான். கையை வேற பிடிச்சிட்டு போறான் என்று விகாஸ் சொல்ல, ரகசியன் அவர்கள் பின் சென்றான்.
சுவாதி விக்ரம் முன் குற்றவாளி போல் நிற்க, விகாஸிற்கு சீற்றம் வந்தது. அவன் நகர, எழுந்த விக்ரம் சுவாதியை அணைத்தான். விகாஸ் சட்டென நின்று விட்டான்.
சாரி விக்ரம், “நீங்க என்ன செய்தாலும் நம்பி இருக்கணும்” என்றாள் சுவாதி.
முதல்ல கோபம் வந்தது பேபி. அப்புறம் உன் நிலையில் நானிருந்தாலும் உன்னை போல் தான் தவித்து நின்றிருப்பேன் என்று சொல்ல, தேங்க்ஸ் விக்ரம். ரொம்ப பயந்துட்டேன். அம்மா, அப்பா உங்களை ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை. “நாம வெயிட் பண்ணலாம்ல்ல?” என சுவாதி கேட்க, கண்டிப்பா பேபி.
“அந்த பொண்ணு இப்ப சிம்மா மாமா கூட தான் இருக்காலா? அவளோட ப்ரெண்ட்ஸூம் அவரோட இருக்காங்களா?” சுவாதி கேட்க, விக்ரம் அவளை விலக்கி நிறுத்தி, நீ எதை பற்றியும் யோசிக்காத. அதை நான் பார்த்துக்கிறேன். “எனக்கு ஒன்று மட்டும் சொல்லு? எப்போதும் என்னை விட்டு போக மாட்டேல்ல?” விக்ரம் கேட்க, போகவே மாட்டேன் விக்ரம். யாரும் என்னிடம் பேசலைன்னாலும் பரவாயில்லை. என்னால உங்களை விட்டு இருக்க முடியாது.
“ஒரே ஒரு கிஸ் மட்டும் பேபி. எனக்கு எனர்ஜியே இல்லை” என்று விக்ரம் பார்வை சுவாதி இதழ்களை வருட, அவள் புன்னகையுடன் அவன் இதழ் கோர்க்க, தலையை அழுந்த கோதிய விகாஸ் உள்ளே செல்ல குடும்பமே அங்கே நின்றது. இருவரின் மென்முத்தமும் வன்முத்தமாக மாறியது.
அய்யோ..ச்சீ..என ஹரிணி ராஜா பின் மறைய, “என்ன டியர் உனக்கும் கிஸ் வேணுமா?” என விகாஸ் கேட்டுக் கொண்டே அவன் அப்பாவை பார்த்தான். அவர் கோபமாக நின்றிருந்தார். அம்மா, ”எங்க?” அவன் கேட்க, “அங்க பாரு” என ராஜா கூறினான்.
சுவாதியை இழுத்து அடிக்க வந்த அவள் அம்மா கையை பிடித்து தடுத்த விக்ரம், இதுக்கு முன்னாடி அவ உங்க பொண்ணு அடிச்சிருக்கலாம்.
ஆனால் இப்ப விக்ரமோட காதலி. அவளை அடிக்கிறது. வீட்டுக்குள்ள பூட்டி வைக்கிறதெல்லாம் வேண்டாம். இதுக்கு முன் என்னோட குடும்பத்தையும் என்னையும் நீங்க பேசிய போது அமைதியா இருந்தேன். ஆனா அவ மேல கையை வைக்கக்கூடாது என அழுத்தி கூறிய விக்ரம், சுவாதி கன்னத்தில் முத்தமிட்டான். விக்ரமை அடிக்க அவள் அம்மா கையை ஓங்க, இம்முறை அவரை தடுத்தது சுவாதி.
போதும்மா. உன்னோட வேலைய பாரு. சும்மா சும்மா கையை ஓங்குற. நீ பேசும் போது அமைதியா தான இருந்தாரு. அதுக்காக அவரையே கையை ஓங்குற. அப்பாவை யாராவது ஏதாவது சொன்னால் மட்டும் மல்லுக்கு நிக்கிறேல்ல. அது போல இனி விக்ரமை பத்தி யாராவது பேசுனீங்கன்னா நடக்கிறதே வேற.
போலீஸ்காரன் எல்லாரும் தப்பானவன் இல்லை. இந்த போலீஸ்காரன் தான் நம்ம உயிரை காப்பாற்ற அவர் வேலையை விட்டு நம்முடன் இருக்கார் என்று கத்திய சுவாதி, “சாரி விக்ரம்” என அவனிடம் சொல்லி விட்டு, கண்ணீருடன் தாத்தா, பாட்டி நீங்க சொல்லுங்க. எங்க காதல் உங்களுக்கு பிடிக்கலையா? எனக் கேட்டாள்.
அனைவரும் அவர்களிடம் வந்தனர். எனக்கு முன்னிருந்தே விக்ரம் சிம்மாவை ரொம்ப பிடிக்கும் என்றார் தாத்தா.
சுவாதி அம்மா முறைக்க, அம்மாடி எங்களை உன்னோட அம்மா இதுவரை பிரித்து பேசியதே இல்லை. ஆனால் உன் காதல் விசயத்துல்ல. அதான் உன் திருமணத்துல தலையிடக் கூடாதுன்னு சொல்லீட்டா. உன்னோட பாட்டியா எனக்கு விக்ரமை பிடிக்கும் என்று அவர் சொல்ல, சூப்பர் ஹீரோ விக்ரம் என்றாள் ஹரிணி. சுவாதி பெற்றோரை தவிர அனைவரும் விக்ரமை ஏற்றுக் கொண்டனர்.
விகாஸ் அவனை நெருங்கி, இந்த குட்டிபிசாசை சமாளிக்கிறது. ரொம்ப கஷ்டம் மாமா..பார்த்து என்று அவனை அணைத்தான்.
“அண்ணா” என்று சுவாதி அவனை அணைக்க, “ஹப்பியா இரு”. அது போதும் என்றான் அவன்.
வீ..என அவன் அம்மா சத்தமிட, மாம் “யூ ஆர் டூ லேட்” என்றான் அவன்.
திடீரென ரசிகா அலரும் சத்தம் கேட்டது. தலையில் காயத்துடன் ரகசியன் தள்ளாடியவாறு நின்றான்.
அவன் கையை பிடித்து ரசிகா அழுது கொண்டிருந்தாள். ரகசியன் தலையிலிருந்து இரத்தம் வழிய அனைவரும் பதறி அவனருகே செல்ல, யாரும் நகராதீங்க. உள்ள போங்க விக்ரம் கத்தினான். யாரும் கேட்காமல் அவனிடம் செல்ல விக்ரமும் அவர்களிடம் சென்றான். அவனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை பார்த்தான்.
வாங்க விக்ரம் சார், “உங்க தங்கை இந்த பையனை காதலிக்கிறாங்களே!” என்ற குரலில் அனைவரும் பயந்து நின்றனர்.
ஹே, “நீங்க தங்கராசு அமைச்சரின் பீ.ஏ தான?” ஹரிணியின் அப்பா கேட்க, ஆமா நான் தான். “இப்ப அதுக்கென்ன?” என்றவன் ரசிகாவின் முடியை பிடித்து தூக்க, ரகசியன் அவள் கையை இறுக பற்றி இருந்தான்.
அய்யோ பாஸ், “எங்கள விட்டுருங்க. ரசிக்கு வலிக்கப் போகுது” என ஆகாஷ் அவர்களின் பிடி யுடன் வந்தான்.
டேய், “நம்ம விக்ரம் சாருக்கு வலிக்குதாம்” என்று அவன் கண்ணசைக்க அனைவர் கழுத்திலும் அவன் ஆட்கள் கத்தியை வைத்தனர். முப்பது பேர் வந்திருந்தனர்.
ஏன்டா, “நாங்க என்ன சாப்பாடா போடப் போறோம். இத்தனை பேர் வந்துருக்கீங்க” ஆகாஷ் கேட்க, “இவன போட்டுத் தள்ளுங்கடா” என அவன் கூற, நம்ம பிரச்சனையில் இங்கிருக்கும் யார் மீதும் சின்ன கீறல் கூட விழக் கூடாது. விழுந்துச்சு. “எல்லாரையும் சாவடிச்சிருவேன்” என்று கத்தினான் விக்ரம்.
“அப்படியா?” என அவன் கேட்டுக் கொண்டே ரசிகாவை ரகசியனிடமிருந்து பிரித்தெடுத்து அவளை ஓங்கி அறைந்தான். அவள் கீழே விழுந்தாள்.
கத்தி வைத்திருந்தவன் காலை மிதித்த சுவாதி, ரசி..என ரசிகாவிடம் ஓடி வந்தாள்.
“பாருடா பாசத்தை” அமைச்சரின் பீ.ஏ ஆறுமுகம் கூற, சுவாதியை பிடித்திருந்தவன் கத்தியோடு அவளை நோக்கி வந்தான்.
“சுவா” என நேகன் கத்த, அவள் அவனை பார்த்து விட்டு, ரசி “வா. எழுந்திரு” என்று அவளை இழுத்தாள். அவன் சுவாதி அருகே வந்து கத்தியை ஓங்க, விக்ரமின் சீற்றமான ஒரே அடியில் தள்ளிச் சென்று நின்று பின்னோக்கி விழுந்தான். விக்ரமை அமைதியாக பார்த்த சுவாதியின் குடும்பம் அவன் அதிரடியை பார்த்து அதிர்ந்தது. விக்ரமை சுற்றி ஆறுமுகத்தின் ஆட்கள் நின்றனர்.
“விக்ரம் சார்ன்னா சும்மாவா?” என்ற ஆறுமுகம், இதற்கு மேல் நம்ம விக்ரம் சார் உங்களில் யாரையாவது அடிச்சா எல்லார் கழுத்திலும் சரேரென கத்தி இறங்கணும் என்று அவன் ஆட்களுக்கு ஆணையிட்டான்.
விக்ரம் “நீங்க சுவாதி, ரசியை கூட்டிட்டு போங்க” என ரகசியன் சொல்ல, “அதெப்படி உங்க மச்சான் போவாரு?” விக்ரம் உன்னோட விளையாட்டை ஏற்கனவே நிறுத்த சொன்னேன். நீ செய்யாததால் அநியாயமாக அந்த ஆசிரமத்து குழந்தைகள் ”பூம்..பூம்..பூம்..” வெடித்து செத்துட்டாங்க. இப்ப உன்னோட விளையாட்டை காட்டின, உன்னோட தங்கையின் குடும்பம் மொத்தமும் காலி தான் என்றான் அவன்.
யோவ், ஆம்பளையா இருந்தா நேர்ல மோதணும். “அதை விட்டு எல்லாரையும் பிடிச்சு வச்சு மிரட்டுற?” ஆகாஷ் தோரணை மாற, “இவனை போடலையாடா?” பேச்ச பாரு. “ஓவரா பேசுறான்” என்ற ஆறுமுகம். முதல்ல நம்ம விக்ரமை அடிங்கடா. அவன் உங்களை ஓர் அடி அடித்தாலும் இந்த குடும்பம் மொத்தத்தையும் போட்ருங்க என்று அங்கிருந்த இருக்கையில் ஆறுமுகம் அமர்ந்தான்.
“வேண்டாம்” என்று அனைவரும் கத்த, “என்ன விக்ரம்?” உன்னோட அம்மாவுக்கு நீ என்றாலே பிடிக்காது. ஆனால் உனக்காக இந்த குடும்பமே பதறுது. “என்ன செஞ்சு இவங்கள மயக்கின?” அவன் கேட்க,
ஏப்பா, வாழ வேண்டிய பிள்ளைங்க. இப்படி செய்யாதீங்கய்யா பாட்டி கெஞ்சினார்.
ஏய் கிழவி, “வாய மூடு”. அன்றே அந்த ஆசிரமத்தை எழுதி வைத்திருந்தால் இவ்வளவு பிரச்சனை தேவையில்லை என்று அவன் “ம்ம்..ஆரம்பிங்க” என்று அவன் சொல்ல, விக்ரமை அடிக்க ஆரம்பித்தனர். கையை இறுக மடித்து அடி வாங்கிக் கொண்டிருந்தான். விக்ரம் நிற்க முடியாமல் கீழே மடிய அவன் தலை, வாயிலிருந்து இரத்தம் வந்தது.
“வேண்டாம். அவரை விட்ருங்க” என சுவாதி அவனிடம் ஓடி வந்தாள். “அவரை விட்ருங்க” என அனைவரும் பதற, தாத்தா மட்டும் அமைதியாக இருந்தார்.
“விக்ரம்..விக்ரம்..” என இடையில் வந்தாள் சுவாதி. ரசிகா மயங்கி கீழே விழுந்தாள். “ரசி” என ரகசியன் காலை இழுத்துக் கொண்டு நகர, அவன் முன் வந்தவன் அவன் கழுத்திலும் கத்தியை வைத்து நகர விடாமல் தடுத்தான்.
யாருடா, “இந்த பொண்ணு? விக்ரமுக்காக இப்படி அழுது?” நிறுத்துங்கடா என ஆறுமுகம் சொல்ல, அடிப்பதை நிறுத்தினார்கள்.
சுவாதி “போ..”என விக்ரம் சொல்ல, இல்ல விக்ரம் “என்னால உங்களை விட்டு போக முடியாது” என அவனது வாயில் வடிந்த இரத்தத்தை அழுது கொண்டே கைகள் நடுங்க துடைத்தாள்.
டேய், லவ்வு டா. “விக்ரம் நீ லவ் பண்றீயா? இந்த பொண்ணா?” ம்ம்..பார்க்க சிக்குன்னு அழகா தான் இருக்கு. சுவாதி “போ” விக்ரம் கத்தினான்.
“இல்ல விக்ரம்” என்று கொஞ்சமும் அசராது அவனை அணைத்தாள் சுவாதி.
டேய், அந்த பொண்ண இழுத்துட்டு வாங்கடா. நாமலும் கொஞ்சம் அணைச்சு பார்க்கலாம் என ஆறுமுகம் சொல்ல, சுவாதியின் அண்ணன்கள், மாமாக்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அய்யோ, “என்னோட பிள்ளைய விட்ருங்க” சுவாதி அம்மா அங்கேயே அமர, உங்களுக்கு பணம் வேண்டுமானாலும் தாரோம். எங்க பிள்ளைய ஏதும் செஞ்சுறாதீங்க என அவள் அப்பா கதறினார்.
யாரும் பேசக் கூடாது. வாயை மூடுங்க என அவன் கத்த, அய்யோ..என்னோட பிள்ள என அவள் அம்மா அழுதார்.
டேய், “இழுத்துட்டு வாங்கடா” என உதட்டை ஈரமாக்கினான் அவன். சீக்கிரம்டா அவன் அவசரப்படுத்த, இதுவரை சுவாதி விக்ரமை அணைத்திருக்க, இப்பொழுது தரையில் அமர்ந்து காலை விரித்து சுவாதியை அமர வைத்து கால்கள் இரண்டையும் மடக்கி அவளை முழுதாக மறைத்து விக்ரம் குனிந்து அமர்ந்திருந்தான். அவளும் ஈரமான ரோஜாவாக அவனுள் புதைந்து கொண்டாள். அனைவரும் அவனை அதிர்ந்து பார்க்க,..சுவாதி அம்மா, அப்பா நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சார், “இங்க பாருங்க” என ஒருவன் சொல்ல, விக்ரமின் செயலை பார்த்து கைதட்டி சிரித்தான் அவன்.
விக்ரம் வேண்டாம், ரகசியன் சொல்ல, “யாரும் ஏதும் பேசாதீங்க” என்றான் விக்ரம். விக்ரம் கையில் இருந்த அலைபேசி இப்பொழுது சுவாதி கையில் இருந்தது.
விக்ரமை பார்த்து, “சர்க்கஸ் ஏதும் நடத்துறீங்களா?” அடிங்கடா அவனை.. அவர் கத்த, அனைவரும் விக்ரமை மேலும் அடிக்க, அவனது இறுக்கத்தை உணர்ந்த சுவாதிக்கு அவன் வலிகள் தெளிவாக தெரிய மேலும் அவனுள் புதைந்து கதறி அழுதாள்.
“பாரேன்டா. என்ன அடிச்சாலும் அந்த பொண்ணை விட மாட்டேங்கிறான்” என தங்கராசு “குடுங்கடா” என்று பெரிய கத்தியை எடுத்து விக்ரமை நோக்கி வர, விகாஸ், ராஜா, நேகன் ஒரே போல் அவர்களை பிடித்திருந்தவர்களின் காலை இடறி விட்டு தங்கராசுவை பிடிக்க வந்தனர். ஆனால் அவனின் ஆட்கள் அவர்களை பிடிக்க அந்நேரம் விக்ரமின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அவன் அமைதியாக இருக்க, தங்கராசு அக்கத்தியால் விக்ரமை தாக்க சுவாதியையும் இழுத்துக் கொண்டு அவன் லாவகமாக நகர்ந்து சென்று “எழுந்திரு சுவாதி” என்று அவளிடம் கையை நீட்டினான். பின் தான் கவனித்தான்.
விக்ரம் நகர்ந்த போது தங்கராசு ஓங்கிய கத்தி விக்ரம் கையில் ஆழமாக பதம் பார்க்க இரத்தம் பீறிட்டு வந்தது. அனைவரும் மிரண்டு அவனை பார்த்தனர்.
தங்கராசு கத்தியில் விக்ரமின் இரத்தம் சொட்டியது. சுவாதி அதை பார்த்து விக்ரம் என ஓடி வர, “சுவாதி நில்லு” என்று ஆளுமையான குரலில் விக்ரம் அவளை நித்தி விட்டு அவனது சட்டைய கிழித்து கையில் கட்டி விட்டு கம்பீரமாக ராஜா போல் தரையில் அமர்ந்தான்.
பின் கையில் இருந்த அலைபேசியை எடுத்து காதில் வைத்து ,ம்ம்..ஓ.கே என தங்கராசுவை பார்த்து பயங்கரமாக சிரித்தான் விக்ரம்.
விக்ரம்..ரகசியன் அழைக்க, ஷ்..அமைதியா இருங்க.
“அது எப்படி? உன்னை யாராலும் அசைக்க முடியாதுன்னு திமிருல தான அந்த பச்சப்பிள்ளைகளை கொன்ன? அவங்க உன்னை என்ன பண்ணாங்க?”
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள் இருந்தது. ஆனால் கட்டடத்திற்காக சின்ன பிள்ளைகள்ன்னு பார்க்காம கொன்னுட்டேல்ல.” உன்னை சாதாரணமாக விட்டு வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சியா?”
“என்னடா உன்னால செய்ய முடியும்?” நான் தான் ஆள் வைத்து ஆசிரமத்து குழந்தைகளை மொத்தமாக வெடிக்க வைத்தேன். சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டாங்க. காட்டுக்கே ராஜான்னு சொல்லீட்டு இப்படி பாவமா இரத்தம் வழிய உட்கார்ந்திருக்க. எல்லாத்தையும் விடு. உன்னோட காதலி ரொம்ப அழகா இருக்கா என்று தங்கராசு சுவாதியை பார்க்க, “பாஸ்” என்று ஆறுமுகம் அழைத்தான்.
ம்ம்..எஞ்சாய் என்றார் அவர்.
சுவாதி அருகே வந்த ஆறுமுகம் சுவாதியை தொட்டான். விக்ரம் ஆகாஷை பார்த்தான்.
ஆகாஷ் விக்ரம் பின் வந்து, அவனது அலைபேசியை காட்டினான். அதில் இப்பொழுது நடந்த அனைத்து வைரலாக்கப்பட்டிருந்தது. சுவாதியை ஆறுமுகம் நெருங்க, அப்படியே நின்றது வைரலான வீடியோ. அங்கே வந்தனர் அஜய் அப்பாவின் செக்யூரிட்டிகள்.
கருப்பு உடையணிந்து அனைவரையும் சுத்து போட, சுவாதி குடும்பத்தை விட்டு அமைச்சரின் ஆட்கள் நகர்ந்தனர்.
“தாத்தா” எல்லாரையும் உள்ளே அழைச்சிட்டு போங்க விக்ரம் கத்த, ஆகாஷை பார்த்துக் கொண்டே ரகசியன் மெதுவாக எழுந்தான். ஆகாஷ் அவனை பார்த்து கண்ணடித்தான்.
சுவாதி ரசிகாவை எழுப்ப, அவள் விக்ரம், ஆகாஷை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
“மாமா” ஆகாஷ் விக்ரமிற்கு உதவ, “நல்ல வேலை செஞ்சடா” என்ற விக்ரம் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு, தங்கராசை பார்த்து “அநாதைகள் எப்போதும் அநாதையாக இருக்க மாட்டாங்க”. அவங்க எல்லாருக்கும் நான் இருந்தேன். நான் அசந்த நேரத்துல எல்லாம் முடிந்திருக்கலாம். ஆனால் “இது முடிவல்ல..புரியுதா?” என்று விக்ரம் பேசினான்.
ம்ம், “அந்த பொண்ணு கீர்த்தனா சாகப் போறா? சிம்மா இங்க இருக்கான்னு நினைச்சிட்டு இருக்கியா?” இல்ல அவன் ஊருக்கு குடும்பத்தோட கிளம்பிட்டான். தேனீ சேர்ந்தவுடன் எல்லாரும் மொத்தமாக சாகப் போறாங்க. இந்த குறிய நான் கீர்த்தனாவுக்கு தான் வச்சேன். ஆனால் செய்யப் போறது நானில்லை. வேறோருவன், “மதுவந்தினி நினைவிருக்கா விக்ரம்?” என அவன் பெரிய குண்டாய் போட..அசருவானா விக்ரம்,
முதலில் அதிர்ந்தாலும் பயங்கரமாக சிரித்தான். “தேனீ அவனோட கோட்டைடா புரியலையா?” அவன் சொந்த ஊரு என்பதை தாண்டி அவனோட மாமா, அவன் சொந்தபந்தங்கள் தான் அனைவரும். உன்னால ஒன்றும் புடுங்க முடியாது.
அதை விட, “அவனுக்கு இப்ப உங்க ஸ்கெச் தெரியாம இருக்கும்ன்னு நினைக்கிறியா?” அவன் என்னை விட புத்திசாலி. பலசாலி. இப்ப நீ போக வேண்டிய இடத்துக்கு போ..
நீ சொன்ன அவனை ஏற்கனவே அவன் கண்டுபிடிச்சிட்டான் பட் என்னிடம் தான் ஆளை சொல்லலை. அவனையும் அவன் உடன் இருப்பவர்களையும் உன்னால…முடியாது விக்ரம் சொல்ல, அவன் அப்பா அங்கே வந்தார். தங்கராஜ், ஆறுமுகம் இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். பெரிய போலீஸ் போர்ஸே வந்தனர்.
ராஸ்கல், “என்ன வேல பார்த்து வச்சுட்ட? உயிரே போச்சு” என அவர் சொல்லிக் கொண்டிருக்க, அப்பொழுது தான் தமிழினியனும் மிருளாலினியும் வெளியே வந்தனர். மிருளாலினி கண்ணில் முதலில் பட்டது கட்டையும் மீறி வந்த விக்ரமின் கை இரத்தம்..
அய்யோ..விக்ரம், “என்னாச்சு?” என்று மிருளாலினி பதற, ரசிகா அவள் அப்பாவை பார்த்து ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள்.
ரசி, ஓடி வா..”மாமாவையும் கட்டிக்கோ” என ஆகாஷ் கையை விரிக்க, “ஓடிப் போயிரு” என்று அவனை எத்தினாள் ரசிகா.
மிருளா, ஒன்றுமில்லை. சும்மா சின்ன அடி தான் என்றான் விக்ரம்.
தமிழ், “இங்க வாங்க” என அவள் அழைக்க, அவன் விக்ரமை பார்த்து விட்டு எதிரே இருந்த வீட்டில் ரகசியனை பார்த்து, ரகா..”என்னாச்சு?” என அவனிடம் ஓடினான்.
ஏய்..என ஆகாஷ் அவளை பிடிக்க, அக்கா “என்னாச்சு?” என ரசிகாவும் பதறினாள்.
“தண்ணீரை எடுத்து தெளிம்மா” சதாசிவம் சொல்லி விட்டு மருத்துவரை அழைத்தார். அடிபட்டவர்களுக்கு அவ்விடத்திலே சிகிச்சை நடைபெற, விக்ரமிற்கு வெட்டு ஆழமாக பட்டிருக்கும். அவன் பல்லை கடித்துக் கொண்டு சமாளிக்க அவன் கண்ணீர் வெளியே வந்தது.
எல்லாரும் ஒவ்வொருவரையும் பார்த்து பதற, சுவாதி மட்டும் கதவின் பின் நின்று மறைந்து மறைந்து விக்ரமை பார்த்துக் கொண்டிருந்தாள்.