12

மறுநாள் பொழுது விடிந்து சில மணி நேரங்கள் கடந்தே கண் விழித்தாள் நிம்மதி. உறங்கியதே அதிகாலையில் தான் என்பதால் கண்ணெல்லாம் உறக்கம் பத்தாமல் எரிந்தது. அதோடு, உடல் வேறு அடித்து போட்டதை போல எல்லா பக்கமும் வலி எடுக்க, சுனக்கமாய் எழுந்து அமர்ந்தவள் முகத்தில் மட்டும் கூடுதல் பொலிவு.

இன்னமும் வெட்கங்கள் மிச்சம் இருக்க, மூலையில் கிடந்த புடவையை மேலே சுற்றிக்கொண்டு அருகே பார்க்க, கொண்டவனை காணவில்லை.

‘கடைக்கு போயிருப்பானோ?’ அவள் எண்ணும்போதே தடுப்புக்கு பின்னே சத்தம் கேட்க, மெல்ல எழுந்து எட்டிப்பார்த்தாள். வெறும் லுங்கி மட்டுமே அணிந்துக்கொண்டு எதையோ உருட்டிக்கொண்டிருந்தான் அண்ணாமலை. கவனித்து பார்க்கையில் டீ போடுவதற்கான அறிகுறிகள் தென்பட்டது.

அவன் வெற்றுடலை கண்டபடி, கண்ட கண்ட நினைவுகளோடு அவள் சொக்கி நிற்க, “நீ கிடந்த கோலத்துல கதவை திறந்து வச்சுட்டு போவ முடியாதேன்னு தான் இங்கேயே நிக்குறேன்! சீக்கிரம் புடவையை கட்டு, நான் ஒரெட்டு வீடு வரை போயிட்டு வரணும்” என்றான் அவன் திரும்பிக்கூட பாராமலே!

அவன் சொன்னதும், வேகமாய் ஆங்காங்கே கிடந்த ஆடைகளை எல்லாம் பொறுக்கி தன் மேல் அணிந்துக்கொண்டவள், அடுக்களை பக்கமாய் வர, அங்கே நின்று டீ குடித்துக்கொண்டிருந்தவன், குவளையை திட்டில் வைத்துவிட்டு அவளை நிமிர்ந்தும் பாராது அங்கிருந்து வெளியே சென்றான்.

‘மாப்பிள்ளைக்கு என்னை விட வெட்கமோ?’ என்று தோன்றினாலும், ‘ம்கும்… வெட்கம் தான்’ என்று அவள் மனமே எள்ளி நகையாடியது.

***

நந்தாவும் சேகரும் கொட்டகையை சுத்தம் செய்துக்கொண்டிருக்க, ஐயப்பன் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தான். தாஸ் அப்போது தான் எழுந்து பல்ப்பொடி கொண்டு வாயில் குதப்பிக்கொண்டிருக்க, அவருக்கு சுட சுட காப்பியோடு வந்து சேர்ந்தான் பரத்.

வாயில் இருந்ததை துப்பியவர், “ஒரே அலைச்சலு ப்பா ஒரு வாரமா, அதான் நல்லா தூங்கிட்டேன்! இல்லனா வெள்ளன எழுந்து கூட மாட நின்னுருப்பேன் உங்களோட” என்றார் உண்மையான சங்கடத்தோடு.

“அட புடிங்க மாமா! எங்க அப்பான்னா செய்ய மாட்டோமா? நீங்க ஒரு வேலையும் செய்ய தேவையில்ல இங்க… சொல்லிட்டேன்” உரிமையாய் சொல்லிவிட்டு அங்கிருந்து அவன் போக, சரியாய் உள்ளே நுழைந்தான் அண்ணாமலை.

அத்தனை பேரும் அவனை ‘ஆ’வென பார்க்க, வந்தவனோ, யாரையும் பார்க்காமல் நேராக குளியல் அறைக்குள் நுழைந்தான்.

***

புது புடவைக்கட்டி தலையில் கட்டிய துண்டோடு இரண்டு கையிலும் குடத்தை தூக்கிக்கொண்டு வேகமாய் அந்த தெரு நடுவில் இருக்கும் நல்ல தண்ணீர் பைப்பை நோக்கி முடிந்த மட்டும் வேகமாய் நடந்தாள் நிம்மதி.

கால்கள் இரண்டையும் எட்டிப்போடவே பெரும்பாடாக இருந்தது. ஆனாலும், போக தானே வேண்டும்!

அலுங்கிய ஆடையுடன், காலை நேர பரபரப்பில், புரளி பேசிக்கொண்டு தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வந்தவளை கண்டு, விழி விரித்தனர். ஏற்கனவே நின்ற வரிசையில் கடைசியாய் போய் நின்றுக்கொண்டாள் நிம்மதி.

“என்னடி புதுப்பொண்ணு? நேத்து தான் கல்யாணம் ஆச்சு, அதுக்குள்ள குடத்தை தூக்கிட்டு வெடுக்கு வெடுக்குன்னு நடந்து வர?” ஒருத்தி கேட்க, அவள் கேட்பது புரிந்த ஓரிருவர் நமட்டு சிரிப்பு சிரிக்க, அவள் கேட்பதன் அர்த்தம் புரிந்தும், ஒரு சிரிப்போடு அமைதியாய் நின்றாள் நிம்மதி.

“அண்ணா அலுப்புல தூங்கிருக்கும் க்கா!” நக்கலடித்தாள் இன்னொருத்தி.

அதில் மற்றவரும் சேர்ந்து நகைக்க, “சீக்கிரம் தண்ணி புடிச்சுட்டு நகருங்களேன், எனக்கு வேலை கடக்கு” என்றாள் மதி.

“ஏ… புதுப்பொண்ணுக்கு வீட்டுல வேலை இருக்காம்டி” ஒருத்தி சொல்ல, அதற்கும் அங்கே சிரிப்பு தான்.

“அப்படி என்னம்மா வேலை? இன்னைக்கே கடை திறக்கனுமா என்ன?” ஒருத்தி மதியின் வாயை பிடுங்க, “அவருக்கு குளிக்க தண்ணி கொண்டுப்போய் ஊத்தணும். சீக்கிரம் புடிங்க நீங்க எல்லாம்” என்றாள்.

“ஏன் உன் புருஷன் உப்புத்தண்ணில குளிக்க மாட்டானா?”

“ம்ம்… அவருக்கு உப்புத்தண்ணி சேராது” என்றவள், “என் கதை எல்லாம் உனக்கெதுக்கு?” என்றாள் வெடுக்கென.

“ஹேய்  புருஷன் பேச்சை இழுக்கவும் பொண்ணுக்கு கோவம் வரத பாரேன்” என்ற ஒருத்தி, “நகருங்க டி, புதுப்பொண்ணு சீக்கிரம் புடிச்சுட்டு போகட்டும்… அவளுக்கு வீட்ல ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். புருஷன் வேற குளிக்கனுமாம். சொல்லவா வேணும்?” என்று சிரித்துக்கொண்டே வழி விட, மற்றவர்களும் நகர, இவர்கள் வேகமாக தன் இரு குடங்களையும் நிரப்பினாள்.

மீண்டும் வந்தால் இவர்கள் வாயில் விழ வேண்டுமே என்று இடுப்பில் ஒன்றும், கரத்தில் ஒன்றுமாய் சுமந்துக்கொண்டு அவள் அங்கிருந்து நகர, “ஏய், குடு இங்க” என்றபடி பின்னே வந்தான் அண்ணாமலை.

பெண்கள் பக்கம் சத்தமான சிரிப்பலை. அவன் என்னவென்று கேள்வியாய் திரும்பிப்பார்க்க, “நீ வாய்யா… அதுங்க கடக்குங்க” என்றவள், கையில் இருந்த குடத்தை நீட்ட, அவனோ வலுக்கட்டாயமாக இரண்டையும் வாங்கிக்கொண்டவன், சற்றும் சிரமப்படாமல் அதை கொண்டு வந்து வீட்டில் வைத்தான்.

“குளிச்சுட்டியா நீ?” அவள் கேட்க, “ஆச்சு” என்றான் ஒரு வார்த்தையாய்.

“உனக்காவ தான் தண்ணி புடிக்க போனேன்” என்றவள் குரலில் சுருதி சற்று இறங்கி இருந்தது. அவன் ஒன்றுமே சொல்லவில்லை அதற்கு.

முதல் நாள் இரவு அவன் சட்டையை கழட்டியபோது அதில் வைத்திருந்த காசை எடுத்து ஓரிடத்தில் வைத்திருக்க, அதை எண்ணி எடுத்து தன் பாக்கெட்டில் வைத்தவன், வெளியே போக சென்றான்.

“வெளில கெளம்பிட்டியா?” அவள் அவசரமாய் கேட்டதும், “ம்ம்!” என்றவன் செருப்பை மாட்டினான்.

“எங்கன்னு கேட்கக்கூடாது, நீயே சொல்லிடேன்!” அவள் இன்னும் வேகமாய் கேட்க, நின்றவன், “கடைக்கு போறேன்… என்ன இப்ப?” என்றான்.

“இன்னைக்கே கடை திறக்கனுமா என்ன? நாளை கழிச்சு திறந்துக்கக்கூடாதா?”

“வியாவாரம் கெட வேண்டாம்ன்னு தான்” அவன் எங்கோ பார்த்து பதில் சொன்னான்.

“ம்கும், பெரிய வியாபாரம்! நான் ஒரு வாரத்துக்கு லீவு விட்டுருக்கேன்! நீ என்னமோ ரெண்டு நாளுக்கு பிகு பண்ணிக்குற?” உரிமையான சிணுங்கலுடன் அவள் கேட்க, அவளை திரும்பி முறைத்தவன், “உன் அளவுக்கு இல்லன்னாலும் நானும் தொழில் பண்றவன் தான்” என்றான் கடுமையாய்.

அவன் பேச்சில் பதறியவள், “ஐயோ, நான் அப்படி சொல்ல வரல” என்று சொல்ல, மேலும் பேச விடாது கை நீட்டி தடுத்தவன், “உன்னை காசுக்காக கட்டுனேன்னு ஊரே நினைக்குது, நினைச்சுட்டு போகட்டும்! ஆனா, உன்னை விட ஒரு படி மேலே நின்னா தான் எனக்கு, என் மனசுக்கு திருப்தியா இருக்கும்!” என்றவன், விறுவிறுவென வெளியே சென்றான்.

போனவனை புரியாத பார்வையோடு பார்த்தபடி நின்றாள் நிம்மதி. இவனா தன்னிடம் இரவு முழுக்க அத்தனை குழைந்தது? என்ற ஐயமே எழ, உடலின் வலியும், ஆங்காங்கே தென்படும் சன்னமான கன்றல்களும் மட்டும் இல்லை என்றால், நடந்த திருமணமே கூட தன் பகல் கனவு என்று எண்ணியிருந்திருப்பாள் அப்பேதை.

***

லஞ்சம் பெறுபவர்களை விட கொடுப்பவர்களுக்கு அதிக தண்டனை உண்டு என்று வீரப்பனுக்கு அப்போது தான் தெரியும். ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிந்ததும் நடுநடுங்கிப்போனான். எப்படியோ ஆள் வைத்து அவனையும் அவனோடு சேர்ந்தவர்களையும் அவர்கள் வீட்டாட்கள் வெளியே கொண்டு வர இரு வாரங்களுக்கு மேல் போனது.

இவன் சகவாசத்தால் கிடைக்க இருந்த வெளிநாடு வாய்ப்பு கைவிட்டு போக, பாண்டியன் இனி ‘என் முகத்தில் முழிக்காதே’ என்று சண்டையிட்டு சென்றுவிட்டான். அவனோடே அவனது ஆதரவாளர்களும் சென்றுவிட்டிருக்க, இப்போது வீரப்பனுக்கு துடுப்பாய் இருவர் மட்டுமே இருந்தனர்.

ஊரின் கோடியில் இருக்கும் பாரில் அமர்ந்து மூக்கு முட்ட குடித்துக்கொண்டிருந்தான் வீரப்பன். கூடவே அவன் அல்லக்கைகள் தினகரன் மற்றும் வேந்தன் இருந்தனர்.

“என்ன மச்சி இப்படி ஆகிட்டு?” மிச்சரை அள்ளி வாயில் கொட்டிக்கொண்டே கேட்டான் வேந்தன்.

“உள்ள போயிட்டு வெளில வரதுக்குள்ள கல்யாணம் முடிச்சு குஜாலா இருக்கான்டா அந்த அண்ணாமலை” தினகரன் வேறு சொல்ல, வீரப்பனின் கையில் இருந்த பிளாஸ்டிக் கப் நசுங்கியது.

“அவனுக்கு மட்டும் பாரேன், எல்லா நல்லதா நடக்குது. ஆனா நமக்கு?” தினகரன் தலையில் அடித்துக்கொள்ள, “இனி அவனுக்கு கெட்டது தான்டா நடக்கும்! இந்த வீரப்பன் நடக்க வைப்பான்” என்றான் அவன் ஆக்ரோஷமாய்.

“சும்மா இரு வீரா! அவனை எல்லாம் நம்ம சீண்டக்கூட முடியாது. ஒரே அறைல சாச்சுப்புடுவான்” வேந்தன் சொல்ல, அவனை திரும்பி தீர்க்கமாய் பார்த்தவன், “என்னைக்கும் ஒருத்தன் கை மட்டுமே ஓங்கி நிலைக்காதுடா வெண்ண! நம்ம கையும் ஓங்கும்! ஓங்க வேண்டிய நேரமும் வந்துடுச்சு” என்றவன்,

“இனி எப்படி அவனை திருப்பி அடிக்குறேன்னு மட்டும் பொறுத்துப்பாரு நீ!” என்ற வீரப்பனின் குரலில் அளவுக்கதிகமான வன்மம் தெறித்தது. அது அண்ணாமலையின் மீதிருந்த கோவத்தினால் மட்டுமா, அல்லது நிம்மதியை அடைய முடியாத ஏமாற்றத்தின் தாக்கமா என்பது அவன் ஒருவனுக்கு தான் வெளிச்சம்!

***

மணி இரவு ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. காலையில் போன அண்ணாமலை இன்னமும் வீடு வந்து சேரவில்லை. எங்கே போனான் என்றே கண்டுப்பிடிக்க முடியாத நிலை எல்லாம் இல்லை.  தம்கட்டி ஓடினால் இருபதே நிமிடத்தில் அந்த ஊரையே ஒரு சுற்று சுற்றி விடலாம் எனும்போது அதற்குள் ஒரு மனிதன் எத்தனை நேரம் கண்ணாமூச்சி ஆட முடியும்!?

மதிய உணவை கடைக்கே கொண்டு போய் நீட்டினாள் மதி. அவளை ஏறெடுத்தும் பாராமல் அதை வாங்கிக்கொண்டு கடைக்குள் போய் அவன் அமர்ந்துவிட, இருவரையும் பார்த்த ஐயப்பன், ‘நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு வரேன் அண்ணா’ என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவனும் போனதும் அந்த ஆளில்லாத கடையில்  அவனும் அவளும் மட்டுமே இருக்க, அவனே அவள் கொண்டு வந்ததை எடுத்து போட்டு உண்ண ஆரம்பித்தான். மெல்ல அவன் அருகே சென்று அமர்ந்தவள், “குழம்பு நல்லாருக்கா?” என்றாள்.

“ம்ம்” என்றவன், வேகவேகமாய் உணவை உருட்டி வாயில் அடைத்தான்.  காதை அடைக்கும் அளவுக்கு பசி இருந்தும், எங்கு போய் உண்பது? அவளிடமா அல்லது தன் சகாக்களிடமா? என்ற குழப்பத்திலேயே அவன் நேரத்தை ஓட்டியிருக்க, எப்படியோ அவனை காக்க அவள் உணவோடு வந்துவிட்டாள்.

“பொரியல் வைக்கவா கொஞ்சம்?” அவள் ஆர்வமாய் கேட்க, தலையை கூட நிமிர்த்தாது, கையை மட்டும் தட்டுக்கு குறுக்காய் காட்டி மறுத்தான் அண்ணாமலை.

மதிக்கு மனமெல்லாம் தவிப்பு.  இரவு அத்தனை நெருக்கமாய் கூடி களித்துவிட்டு அதன் எதிர்வினை கொஞ்சம் கூட இல்லாமல் முன்பை விட மோசமாய் முகம் திருப்பிக்கொண்டிருக்கிறானே! காரணம் புரிந்தாலும் கூட பரவாயில்லை. என்னவென்றே தெரியாமல் அவள் என்னவென்று நினைப்பால்!?