என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -1

அத்தியாயம் -1(1)

திண்டுக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஏதோ போராட்டம் செய்து கொண்டிருந்தனர். இன்று விடுமுறை தினம் ஆகிற்றே என்ற யோசனையோடு பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு கூட்டம் கலைவதற்காக காத்துக் கொண்டிருந்தான் அசோக்.

அவர்கள் கல்லூரி விடுதியில் நடந்த ஏதோ பிரச்சனைக்காக நடக்கும் போராட்டம் போல. மைக் பிடித்து உணர்ச்சிகரமாக கழுத்து நரம்புகள் புடைக்க பேசிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

‘என்னடா இது பக்கம் பக்கமா பேசுது இந்த புள்ள!’ என அசோக் எண்ணிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு அவனது மாமாவின் மகள் ஸ்ருதியிடமிருந்து அழைப்பு வந்தது.

“இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்கணுமே, என்னாச்சு அசோக்?” என விசாரித்தாள் ஸ்ருதி.

“எப்பவோ திண்டுக்கல் வந்திட்டேன், வழில ஏதோ காலேஜ் ஸ்டூடண்டஸ் ஸ்ட்ரைக் ஸ்ருதி, வந்திடுறேன்” என அசோக் சொன்னது ஸ்ருதியின் காதில் சரியாக விழவில்லை.

“என்ன அசோக் ஏன் ஒரே சத்தமா இருக்கு? எங்க இருக்க நீ, ஏன் லேட்?” எனக் கேட்டாள்.

அலைபேசியின் ஸ்பீக்கர் பகுதியில் வெளி சத்தம் கேட்காதவாறு கை வைத்து மறைத்துக் கொண்டே, “உங்க ஊர் பொண்ணு ஒன்னு வழி வுடாம மறிச்சுகிட்டு நிக்குது” என்றான்.

ஸ்ருதி புரியாமல் விழித்துக் கொண்டே, “நீ ஓகேதானே?” எனக் கேட்டாள்.

“ஓகேதான், கொஞ்ச நேரத்துல வந்திடுறேன், வை” என சொல்லி அழைப்பை துண்டித்தவனின் கவனம் அவனை அறியாமலேயே அந்த பெண்ணிடம் குவிந்தது.

அமைதியான மென்மையான சுபாவம் உடைய அசோக்கிற்கு இது போல போராட்டம், சத்தம் எல்லாம் மிகவும் அலர்ஜி. போக போக அந்தப் பெண் அவனுள் கொஞ்சம் மிரட்சியை ஏற்படுத்தினாள்.

ட்ராஃபிக் போலீஸ் வழி ஏற்படுத்திக் கொடுக்கவும் தலையை உலுக்கிக் கொண்டவன் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு பைக்கில் ஏறி சென்று விட்டான். வழியெங்கும் அவள் பேசுவது போலவே பிரம்மை ஏற்பட வலிந்து அவளை ஒதுக்கி வைத்து ஸ்ருதியின் வீட்டை அடைந்தான்.

அத்தை மகனை உபசரித்து முடித்த ஸ்ருதி, நேரம் கடத்தாமல் எதற்காக அசோக்கை அழைத்திருந்தாளோ அந்த விஷயத்தை சொன்னாள். அவள் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்திருந்தான் அசோக்.

“ஏன் சந்தேகமா பார்க்கிற? நான் நல்லா தெரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன் அசோக்” என்றாள் ஸ்ருதி.

“மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் அவ்ளோ தூரமில்லை ஸ்ருதி, இங்கதான் இருக்காங்கன்னா எங்கப்பாவுக்கு தெரியாம இருந்திருக்குமா? வேற யாராவதா இருக்க போறாங்க” என்றான் அசோக்.

 “அவங்கதான் உன் அத்தை. இங்க முன்னாடி சமையல் வேலை செய்திட்டு இருந்தாரே கண்ணப்பன், அவரோட தம்பியைத்தான் கல்யாணம் செய்திருக்காங்க. ஹஸ்பண்ட் இறந்து போகவும்தான் இந்த ஊருக்கே திரும்ப வந்திருக்காங்க, இதுக்கு முன்னாடி நாகர்கோயில்ல இருந்திருக்காங்க. மாமாவுக்கு தெரியுமா தெரியாதான்னு எனக்கு தெரியலை. அப்படியே தெரிஞ்சிருந்தாலும் பல வருஷம் முன்னாலேயே ஒதுக்கி வச்சவர் இப்ப வந்து உறவு கொண்டாடவா போறார்?” என ஸ்ருதி கேட்கவும் அசோக்கிடம் குழப்பமும் யோசனையும்.

அசோக்கின் தந்தை புகழேந்தி மதுரையில் டிராவல்ஸ் வைத்து நடத்துகிறார். தந்தையோடு சேர்ந்து அசோக்கும் கவனித்துக் கொள்கிறான். அசோக்கின் ஒரே தங்கை நிரஞ்சனாவை ஸ்ருதியின் அண்ணன் விதுரனுக்குத்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

திண்டுக்கல்லில் ஏ எஸ் பி யாக பணி செய்யும் சமரனை வீட்டினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டாள் ஸ்ருதி. அசோக், சமரன், விதுரன் மூவரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள்.

முதலில் கோவம் கொண்டிருந்தாலும் இப்போது ஸ்ருதியின் வீட்டினர் அவளோடு சுமூகமாகி விட்டனர். தன் மகனை கல்யாணம் செய்து கொள்ளாமல் வேறு ஒருவனை மணந்து கொண்டதில் புகழேந்திக்குத்தான் பயங்கர கோவம். ஆதலால் அவர் மட்டும் இவளோடு பேச மாட்டார்.

ஸ்ருதியை விரும்பியிருந்தாலும் நண்பனை மணந்து கொண்டவளை ஒதுக்கி தள்ளாமல் அவர்களின் நிலையை உணர்ந்து பழைய படி நல்ல முறையில்தான் பழகி வருகிறான் அசோக்.

ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறாள் ஸ்ருதி. சந்தர்ப்பம் கிடைக்கும் போது இங்கு வந்து பார்த்து செல்வான்தான் அசோக், ஆனால் இந்த முறை ஸ்ருதியே அவனை இங்கு வரவழைத்திருந்தாள்.

புகழேந்தியின் தங்கை பாக்யலக்ஷ்மி காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரை அப்போதே வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. அவரை பற்றிய விவரங்கள் எதுவும் வீட்டின் சிறியவர்களுக்கு தெரியாது.

அந்த பாக்யலஷ்மியைதான் இப்போது தனக்கு தெரியும் என்பதையும், அவர் பற்றிய விவரங்களை சொல்லவும்தான் அசோக்கை வர சொல்லியிருந்தாள் ஸ்ருதி.

“என்ன யோசனை அசோக்? இன்னும் அவங்ககிட்ட நான் யாரு என்ன எதுவும் சொல்லிக்கல. ரொம்ப கஷ்ட படுறாங்க அசோக், சமர்கிட்ட சொன்னேன், நம்மால முடிஞ்சத செய்யலாம்னு சொன்னான், ஆனா உனக்கு தெரியணும்னு நினைச்சேன்” என்றாள்.

ஸ்ருதி சொல்லிக் கொண்டிருக்கும் தன் அத்தையை பற்றி இதுவரை எதுவும் அவனுக்கு தெரியாது, அவரது முகத்தை புகைப்படமாக கூட கண்டதில்லை. அத்தை காதல் திருமணம் முடித்த சமயத்திலேயே அவரது ஆடைகள் அவர் பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தையும் அசோக்கின் தாத்தா தீ வைத்து எரித்து விட்டதாக எப்போதோ அம்மா சொன்ன நினைவுண்டு.

பாக்யலக்ஷ்மி என்ற பெயரை கூட அப்பா உச்சரித்ததாக நினைவில்லை. புகழேந்தி அப்படித்தான், இன்று வரை அவர் மாறவே இல்லை. ஸ்ருதியை ஒதுக்கி வைத்திருப்பதே அதற்கு சாட்சி.

நன்றாக இருந்தால் வேறு, கணவன் இல்லாமல் வயதுப் பெண்கள் இருவரோடு சிரமத்தில் இருக்கிறார் என்றதும் முகம் தெரியாத தன் அத்தையை நினைத்து அவனுக்கு கவலையாகிப் போனது. அவரது விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக இப்படியா தனியாக தவிக்க விட வேண்டும் என நினைத்து அப்பா மீதும் இப்போது உயிருடன் இல்லாத தன் தாத்தா மீதும் கோவமாக வந்தது.

நேரத்தை பார்த்தான். மதிய உணவு நேரம் நெருங்கியிருந்தது. இன்று விட்டால் மீண்டும் எப்போது நேரம் ஒதுக்கி இங்கு வர முடியும் என அவனுக்கு தெரியவில்லை.

“சமர் எப்போ வருவான் ஸ்ருதி?” என விசாரித்தான்.

“இன்னிக்கு ஈவ்னிங்தான் வீட்டுக்கு வருவான், நாம லஞ்ச் முடிச்சிட்டு போலாம்” என்றாள் ஸ்ருதி.

“அவங்க ஸ்கூல்ல வேலை பார்க்கிறதா சொன்னியே”

“இன்னிக்கு கவர்ன்மெண்ட் ஹாலிடே” என அவள் சொல்லவும் அனிச்சையாக வழியில் பார்த்த பெண் நினைவுக்கு வந்தாள்.

“என்ன அசோக்?” வேறு யோசனைக்கு சென்று விட்டவனின் தோள் தொட்டு வினவினாள்.

“ம்ம்… அது… குரங்கை நினைக்காதன்னு முடிவு பண்ணினா அதுதான் நினைப்பு வந்திட்டே இருக்குமாம்” என்றவன் விவரம் சொல்லவும் சிரித்தாள் ஸ்ருதி.

“நிஜமா ஸ்ருதி… பழைய படம் எதிலேயோ ஒரு ஹீரோயின் கண்ணகி மாதிரி ஆக்ட் பண்ணியிருப்பாங்களே…”

“தெரியலை அசோக், நான் பார்த்தது இல்லை”

“அம்மா டிவி பார்க்கும் போது பார்த்திருக்கேன், லிட்ரலி அப்படித்தான் பேசினா அவ. நாலு பேர் வாய்ஸ் சேர்த்து வச்சு அவளுக்கு கொடுத்திட்டார் போல கடவுள். என் காது சவ்வு கிழியாததுதான் குறை, அவளுக்கு மைக் எதுக்குன்னுதான் தெரியலை” என்றான்.

“ஒரு பொண்ணு போல்டா இருந்தா நல்லதுதானே அசோக்?”

“போல்ட்னெஸ் பத்தி பேசலை ஸ்ருதி, அவ ஆட்டிடியூட் அது என்னவோ… எனக்கு பிடிக்கல” என்றான்.

“விடு, உனக்கு சம்பந்தம் இல்லாத யாரோ எப்படி இருந்தா என்ன?”

“அதான் ஸ்ருதி, அப்படி என் நினைப்ப விட்டு போகாம மூளைல சுத்தி சுத்தி வர்றா. கோவ படுத்துறா என்னை” என்றவனை கிண்டலாக பார்த்தாள் ஸ்ருதி.

குரலை செருமிக் கொண்டவன், “சரி சரி விடு. சமர் இன்னும் காணோம்? அவன் கவர்ன்மெண்ட் வேலை பார்க்கலையா?” என கிண்டலாக கேட்டான்.

“உனக்கு தெரியாது, சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமா அவன் ஷர்ட் பாக்கெட்லதான் இருக்கு, லீவ் எல்லாம் கணக்குலேயே எடுக்கிறது இல்லை நான்” என எப்போதும் சமரனிடம் சொல்வதை அசோக்கிடம் சொல்லி சிரித்தவள் சாப்பிட அழைத்தாள்.

வேகமாக உணவை முடித்துக் கொண்டு ஸ்ருதியையும் அழைத்துக் கொண்டு தன் அத்தையை பார்க்க புறப்பட்டான் அசோக்.

சில மாதங்களுக்கு முன் பாக்யலக்ஷ்மி வீட்டில் நகை திருடு போய் விட்டது. போலீசார் திருடனை பிடித்து விட்டாலும் நகையை திருப்பித் தர பணம் கேட்டனர். ஸ்ருதிதான் சமரனிடம் அழைத்து சென்று நகை கிடைக்க வழி செய்தாள்.

அதற்கு பிறகு அவரை பார்க்கவே இல்லை. எஸ் பி மனைவியோடு சேர்ந்து சமூக சேவை செய்யும் தன்னார்வலராக செயல் படுகிறாள் ஸ்ருதி. சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்க, ஸ்ருதியும் அதில் கலந்து கொண்டிருந்தாள்.

அன்றுதான் பாக்யலஷ்மியை மீண்டும் சந்தித்தாள். காய்கறி கூடையோடு சாலையில் மயங்கி விழுந்தவருக்கு முதலுதவி செய்து அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு ஸ்ருதிதான் அழைத்து சென்றாள்.

குறைந்த இரத்த அழுத்தம் என கூறி அதற்கான சிகிச்சை மேற் கொள்ளும் படி கூறினார்கள். பின் அவரை அவளே வீட்டிலும் விட, உள்ளே வர சொல்லி உபசரித்தார் பாக்யா. அன்றும் அவரை பற்றி அதாவது அவரது திருமணம், கணவர் எப்படி இறந்தார் இது போன்ற விஷயங்களைதான் கேட்டறிந்திருந்தாள்.

பாக்யாவின் கணவரின் அண்ணன் கண்ணப்பன் முன்னர் ஸ்ருதி வீட்டில் சமையல் வேலை செய்தவர். அவரை அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமையும், அப்போதெல்லாம் பாக்யாவை பற்றி விசாரிப்பாள்.

பாக்யாவின் பிறந்த வீட்டினர் மதுரையில்தான் இருக்கிறார்கள், அவர்கள் பெரிய வசதி படைத்தவர்கள், அவர்கள் நினைத்தால் பாக்யாவின் சிரமங்கள் குறையும் என கண்ணப்பன்தான் பேச்சு வாக்கில் சொல்லியிருந்தார்.

ஸ்ருதி மேலும் விவரங்கள் சேகரிக்க, புகழேந்தி மாமாதான் பாக்யாவின் அண்ணனாக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது.

உடனே சமரனிடம் சொல்லி, “இது உண்மையான்னு கண்டுபிடிச்சு சொல்லு சமர்” என கேட்டுக் கொண்டாள்.

இரண்டு நாட்களில் அது உண்மைதான் என்பதை உறுதி படுத்தியிருந்தான் சமரன்.