தந்தையின் இழப்பிற்குப் பிறகுத் தன் மொத்த தைரியமும் வடிந்தது போல உணர்ந்தவன், ஆதீஸ்வரனை பார்த்தபிறகு மொத்தமாக மாறி போனான். அவன் இழந்த தைரியம் அவனுக்கு மீண்டது போல உணர்வு. நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற உறுதி.
ஏன் என்று காரணம் கேட்டால் அவனுக்கு தெரியாது. ஆதீஸ்வரனை பார்த்ததிலிருந்து ஒரு பிரமிப்பு. அவனுக்கு நெருக்கமானவனாக இருக்க வேண்டும், அவனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். அவன் மதிப்பில் உயர வேண்டும் என்றெல்லாம் ஆசை வந்தது.
என்னவோ உள்ளிருந்து ஒரு உத்வேகம் அவனை பார்த்த நாளிலிருந்து. இதுவரை அனுபவிக்காத, கையாளாத ஒரு உணர்வு.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் சத்யேந்திரனை பார்த்தபோது அவன் என்ன மாதிரியாக உணர்ந்தான் என்று வார்த்தைகளால் வரிக்க முடியாது. அவன் உயரமும், தோற்றமும் ஏதோ ஒரு வகையில் அவன் தந்தை மதிமாறனை நினைவு படுத்த… இதே உயரத்தில் இதையொற்ற தோற்றத்தில் எத்தனையோ பேரை கண்ட போதும் எழாத ஓர் உணர்வு இவன்மேல் மற்றும் ஏன் தோன்றுகிறது எனப் புரியாமல் தோற்றான்.
ஆதீஸ்வரனும் சத்யேந்திரனும் ஒவ்வொரு வகையில் அவனை மிகவும் பாதித்தார்கள். இந்த உணர்வுகளை அவனுக்குக் கையாள தெரியவில்லை. அடுத்த சில நாட்கள் என்ன முயன்றும் இந்த உணர்வுகளை ஒதுக்க முடியவில்லை.
அதன் விளைவாகத் தான், எப்பொழுதும் சர்ச்சையான, பெரிய இடத்து விஷயங்களில் எல்லாம் ஒதுங்கி ஒதுங்கிப் போபவன், இப்பொழுது ஆதிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற உந்துதலில், தானாகவே பிரதாபன் குறித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டான். அதை ஆதிக்கும் தெரியப்படுத்தும் பொருட்டே, அவனைத் தொடர்பு கொண்டிருந்தான்.
அவர்கள் திட்டமிட்டபடி அன்றிரவே அவர்களின் சந்திப்பு நடந்தது. முதல்முறை பார்த்த போது காவலர் உடை, உடன் பல ஆட்கள் என்று இருந்த கட்டுப்பாடு இப்பொழுது விவேக்கிற்குச் சுத்தமாக இல்லை. ஆதியை அவன் பார்க்கும் பார்வையிலேயே பரவசம் அப்பட்டமாகத் தெரிந்தது.
ஆதிக்கு இந்த பார்வை குழப்பத்தைத் தான் தந்தது. அதோடு விவேக்கின் முகம் வேறு மிகவும் பரிட்சயப்பட்டது போலத் தோன்றும் உணர்வையும், மனதளவில் அவனிடம் ஒருவித நெருக்கம் தோன்றுவதையும் அவனால் தடுக்க முடியவில்லை. ஆனால், விவேக் போல உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தான்.
“சொல்லுங்க விவேக் சார்… ரொம்ப முக்கியமான விஷயம்ன்னு தென்னரசு கிட்ட சொன்னீங்க போலவே…” என்று ஆதியே தொடங்க,
“சார் எல்லாம் வேண்டாம்ண்ணா…” என்றான் வெகுநாட்கள் பழகியவன் போல உரிமையோடு.
என்னதான் இன்ஸ்பெக்டர் பதவி என்றாலும் மிகவும் சிறிய வயதினனான விவேக் அண்ணா என்று அழைப்பதில் அவனுக்கு எந்த உறுத்தலும் இல்லை. ஆனால், இப்படி உரிமை எடுத்து கொள்கிறானே அதுவும் இவ்வளவு எளிதாக என்று காரணம் தான் புரிய மறுத்தது.
ஆதியின் முகத்திலிருந்த சிந்தனை ரேகைகளைப் பார்த்துவிட்டு, “நான் உங்களை அப்படி கூப்பிடலாம் தானே?” என்றான் வெள்ளந்தியாக.
ஆசையாகக் கேட்கும் அவனிடம் மறுப்பு சொல்ல ஆதிக்கு மனம் வரவில்லை. அதேசமயம் அவனின் இந்த அழைப்பு ஏனோ ஆதிக்கும் வெகுவாக பிடித்திருந்தது.
“தாராளமா…” என்று ஒப்புக் கொடுத்தவனை இப்பொழுது தென்னரசு வியப்பாகப் பார்த்தான். அவன் ஏற்கனவே விவேக் குறித்துத் தீர விசாரித்து விட்டான்1. எந்த வம்பு தும்புக்கும் போகாமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன் என்றும், அந்த ஸ்டேஷனுக்கு போகும் மாமூல் பணத்தில் விவேக் பங்கு கேட்பது இல்லை என்பது வரையும் தெரிந்து வைத்திருந்தான்.
விவேக்கின் குடும்பம், நண்பர்கள், வேலை விஷயத்தில் அவன் எப்படி என அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து வைத்திருந்ததாலேயே அவன் ஆதியை சந்திக்க வேண்டும் என்று கேட்டதும் தென்னரசு உடனடியாக ஏற்பாடு செய்திருந்தான்.
இப்பொழுது விவேக்கின் நெருக்கமான பேச்சும் அதற்கு ஆதி மறுப்பு சொல்லாததும், ‘என்னடா இது?’ என்ற எண்ணம் தான் தென்னரசுவுக்கு.
“அண்ணா… இது பிரதாபனோட இன்னொரு பேமிலி டீடெயில்ஸ்…” என விவேக் சில தகவல்களை ஆதியிடம் நீட்டினான். அதில் பிரதாபனும், அவனது மூன்றாம் மனைவியும், கனிகாவும் இருந்தார்கள். ஆதி அதிர்ந்து போனான்.
தென்னரசு கேள்வியாக நோக்க, ஆதி அவனிடம் நீட்டினான். அந்த விவரங்களையும், புகைப்படங்களையும் பார்த்த அவனுக்கும் பயங்கர அதிர்ச்சி தான்.
இத்தனை நாட்களும் கனிகா ஏதோ பணத்திற்காக சத்யாவுடன் சுற்றி வருகிறாள் போலும், அவனை மயக்கி, மடக்கி தன் பிடியிலேயே வைத்திருக்கத் தான் ஹைமனோபிளாஸ்டி சர்ஜரி செய்துவிட்டு, அதன்பிறகு அவனுடன் இருந்து… தன் கற்பை அவனிடம் இழந்தது போல மாய தோற்றத்தை உருவாக்கி, அவனை தன் கைப்பிடியிலேயே வைத்திருக்கிறாள் என்று எண்ணி இருந்தவர்களுக்கு அவள் பிரதாபனின் மகள் என்பதில் பயங்கர அதிர்ச்சி.
எந்த தந்தையும் இத்தனை கீழான விஷயத்தைச் செய்யத் துணிய மாட்டாரே! இது என்ன கொடுமை என்று இருந்தது.
“அண்ணா அவனுக்கு ஊரறிஞ்சு ரெண்டு பொண்டாட்டி. அதுபோக ரெண்டு, மூணு கீப் இருப்பாங்க போல… அதுல இவங்களும் ஒருத்தங்க… என்ன ஊர், உலகத்துல ஒருத்தருக்கும் தெரியாது. இவங்களும் நிலையா ஒரே இடத்துல இருக்காம அப்பப்ப ஊரை மாத்திட்டே இருப்பாங்க. கேட்டா வீட்டுக்காரர் பிசினஸ் செய்யறாரு. அடிக்கடி வீட்டுக்கு வர மாட்டாரு, நாங்க பிள்ளை படிப்புக்குத் தகுந்த இடம் மாறிப்போம்ன்னு இவங்களே கதை கட்டி விட்டுடுவாங்க. இப்ப பீகார்ல இருக்காங்க…” என்று சொல்ல,
அனைத்தையும் உள்வாங்கி, “ஆமா நீ எப்படி கண்டுபிடிச்ச?” என்றான் சிறு வியப்புடன். ஏனென்றால், டிடெக்ட்டிவ் வைத்து இவன் உதவியாள் ரஞ்சித் விசாரித்தபோது, கனிகா செய்த திருட்டு வேலை தான் தெரியவந்தது. அவள் தாராவை இங்கு அழைத்து வந்து தங்கவைத்தது கூட எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றும், அதை மோப்பம் பிடித்து பிரதாபன் தான் ஏதோ விளையாட முயற்சி செய்திருக்கிறான் என்றும் எண்ணிக் கொண்டிருக்க இப்பொழுது கிடைக்கும் தகவல்கள் முற்றிலும் வேறாக இருந்தது.
“என்னவோ அந்த பிரதாபன் அப்ப எங்க எல்லாரையும் ரொம்ப விரட்டினான் அண்ணா… அவன் குரல்ல அப்படி ஒரு பழிவெறி. கண்டிப்பா அவன் நினைச்சதை சாதிச்சுடலாம்ன்னு எண்ணம். எல்லாம் சேர்ந்து எனக்கு சந்தேகத்தை தந்து இருந்துச்சு. அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்ச நாள்ல உங்களுக்கு கல்யாணம். அதுவும் அன்னைக்கு உங்க வீட்டுல இருந்த பொண்ணோட… அப்பறம் அங்கே இருந்த சத்யா சாரோட கேர்ள் பிரண்டை எங்கேயோ பார்த்த மாதிரி ஞாபகம்… என்னவோ உறுத்திட்டே இருக்க அவங்க ரெண்டு பேரு பத்தியும் விசாரிச்சேன்…” என்று சொன்னபோது ஆதிக்குக் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம்.
கழுத்து நரம்புகள் புடைத்து, கண்கள் சிவந்து போனது. முகம் இறுக அவன் அமர்ந்திருந்த தோற்றம் கிலியைக் கொடுக்க, “அவங்க உங்க மனைவி… நான் விசாரிச்சு இருக்க கூடாதுன்னு புரியுது… ஆனா உங்களுக்கு ஒரு ஆபத்து வந்துட கூடாதேன்னு தான்…” என்றவன் இன்னும் சில தகவல்களைப் பயந்தபடியே நீட்ட, அதை வெடுக்கென்று பிடுங்கி கண்டபடி கிழித்துப் போட்டுவிட்டு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க உக்கிரமாக அமர்ந்திருந்தான் ஆதி.
தென்னரசு, விவேக் இருவருமே அந்த தோற்றத்தில் பயந்து போயினர்.
விவேக் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு, “ஆனா அந்த தாரா மேடம்…” என்று தொடங்கி யாரின் மகள் அவள் என அவன் சொல்ல வருவதற்குள்,
“அவ ஊர், பேர், அப்பா, அம்மா தெரியாம தான் என் மனைவியா இருக்கிறதா நினைக்கறியா?” என்றான் சீறிய குரலில்.
சிங்கம் போல ஆக்ரோஷ படுபவனைக் கண்டு விவேக்கின் உடல் உதறியது. தென்னரசுவிற்கு ஒன்றும் புரியவில்லை. விவேக் ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல வருவதையும், அதை ஆதி சொல்ல விடாமல் தடுப்பதையும் குழப்பமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அப்பொழுது ஆதி விருட்டென்று திரும்பி அவன்புறம் பார்க்க, பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டவன், “இதோ சார்…” என்றுவிட்டு வேகமாக காரிலிருந்து இறங்கிக் கொண்டான். தென்னரசுவிற்கு புரிந்து விட்டது தாரா குறித்த உண்மையை ஆதி இப்பொழுது யாருக்கும் தெரிய வருவதை விரும்பவில்லை என்று. தானும் தலையிடவே கூடாது என்ற கட்டளையைத் தான் தன்னை காரை விட்டு வெளியேற்றியதன் மூலம் ஆதி சொல்ல வருகிறான் என்பது புரிந்து, இனி அந்த விஷயம் குறித்து எதுவும் பேசக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டான்.
விவேக்கிற்கு இப்பொழுது நன்றாகவே உதறல் எடுத்தது. ஒரே பார்வையில் தூரப் போய் நிற்கும் தென்னரசுவை அச்சத்தோடு திரும்பிப் பார்த்தான்.
அப்பொழுது ஆதி அவன் முகத்தின் முன் சொடக்கிட, அதிர்ந்து போய் பயத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்தான்.
“நீ கனிகாவை பத்தி விசாரிச்சது வரை சரி… தாராவை பத்தி விசாரிச்சிருக்க கூடாது…” என கடுமையான குரலில் சொல்ல, “ரொம்ப சாரிண்ணா…” என்றான் அடங்கிவிட்ட குரலில். கண்களை அச்சத்தில் மூடியவாறு…
ஆதி அதிர்ந்தான். இவன் கண்கள் ஏன் தன் அன்னை தெய்வானையின் கண்களை நினைவு படுத்துகிறது?
தலையை வேகமாக உலுக்கி தன்னை சமன் செய்தான்.
விவேக் வேகமாகக் கண்களைத் திறந்து, “தப்பு தான் அண்ணா… என்னை எதுவும் செஞ்சுடாதீங்க. எங்க அம்மா, தங்கச்சிக்கு என்னை விட்டா யாரும் இல்லை…” என தன் அடிமனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் அச்சத்தைச் சொல்லிப் புலம்ப… ஆதியின் மனம் பிசைந்தது.
அவன் குரலும் பார்வையும் வெகுவாக அவனை அசைத்து பார்க்க, “டேய் என்னை பார்க்க கொலைகாரன் மாதிரியா தெரியுது உனக்கு…” என இறங்கி வந்து பேசினான்.
இத்தனை நேரமும் கோபத்தில் தகித்தவன், சட்டென்று இப்படி பேசவும், விவேக் புரியாமல் பார்த்தான்.
“இங்கே பாரு தாரா பத்தி வேற யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாது…” என்றான் எச்சரிக்கையாக. முன்பு இருந்த ஆக்ரோஷம் அவன் குரலில் இல்லாமல் இருந்ததே விவேக்கிற்குப் பெரிய ஆசுவாசமாக இருந்தது.
“கண்டிப்பா சொல்ல மாட்டேன் அண்ணா. உங்ககிட்ட சொல்லத்தான் நினைச்சேன். உங்களுக்கே தெரிஞ்சிருக்கப்ப வேற யார் கிட்ட சொல்ல போறேன்” என எச்சில் விழுங்கி கொண்டான்.
“ஹ்ம்ம்…” என்ற ஆதி, ஏதோ யோசித்தவனாக, “இந்த பயத்துக்காகத் தான் எந்த வம்பு தும்புக்கும் போகாம கடமையை சரியா செய்யாம இருக்கியா?” என்று திடீரென கேட்கவும், விவேக் திருதிருவென விழித்தான்.
“நீ ஆசைப்பட்ட மாதிரி யூ.பி.எஸ்.ஸி., எழுது. உனக்குத் தகுந்த பதவியும் உயரமும் கிடைக்கும்போது உன்னோட தைரியம் பல மடங்காயிடும்… எப்ப என்ன உதவி தேவைன்னாலும் மறக்காம கேளு…” என்றும் சொல்ல, சற்று முன்பு அத்தனை கோபப்பட்டவன், இப்பொழுது இப்படிப் பேசுவதை ஆச்சரியத்தோடு பார்த்தபடி தலையை உருட்டினான்