9

அன்று காலையில் இருந்து மட்டுமே ஒரு ஐம்பது முறையாவது அந்த ஐவரின் போனில் இருந்தும் ஆழியூர் அய்யாக்கண்ணுவுக்கு அழைப்பு போயிருக்கும். ஒருமுறை கூட தவறாது அழைப்பை எடுப்பவன், “இதோ வந்துட்டேன்… கிட்ட வந்துட்டேன்!  காசெல்லாம் முன்னூறு ரூவா நோட்டா இருக்கு, அதை ஆயரூவா நோட்டா மாத்திட்டு நிக்குறேன்…  நீ பத்து எண்ணிட்டு திரும்பிப்பாரு, உன் பொடனிக்கு பின்னாடி நான் நிக்கலைன்னா என்னை செருப்ப கொண்டி அடி” என இன்னும் எக்கச்சக்க உருட்டுகள்!

மதியம் மூன்று மணிக்கு ஏலம் தொடங்கிவிடும்!

மணி இப்போது காலை எட்டு முப்பது.  பத்து மணிக்குள் ஏலம் எடுக்க விரும்புபவர்கள் பெயர் கொடுக்க வேண்டும்! கையில் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு ஏலத்திற்கு போகலாம் என்றாலும், எப்படியும் வீரப்பன் தொகையை கூட்டி விடத்தான் பார்ப்பான். அப்போது மேற்கொண்டு தொகையை அதிகமாய் சொல்லிவிட்டு குளம் தனக்கு என முடிவான பிறகு, அவர்களிடம் கையோடு கொடுக்க பணம் இல்லை என்றால், இரண்டாவதாய் கேட்டவர்களுக்கு ஏலம் கைவிட்டு போய்விடும்.

எல்லாம் யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தவனுக்கு அத்தனை கதவும் அடைப்பட்டது போல தான் இருந்தது. அவனை திருதிருவென பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர் நால்வரும்.

நால்வரும் தங்களுக்குள்ளேயே, ‘நீ சொல்லு, நீயே சொல்லு’ என ஜாடை வேறு பேசிக்கொள்ள, எதையும் உணராதவனாய் தலை குனிந்து அமர்ந்திருந்தான் அண்ணாமலை.

“இன்னும் ஒருக்க போன் போடேன்டா அவனுக்கு, எப்போ வரான்னு கேப்போம்” அண்ணா சொல்ல, “இன்னுமா அந்த கம்முனாட்டி காசோட வருவான்னு நம்பிக்கிட்டு இருக்க நீயி?” என்றான் பரத் எரிச்சலுடன்.

அண்ணாமலைக்குமே அந்த நம்பிக்கை போய்விட்டது என்றாலும், ஏதோ கடைசி வாய்ப்பாய் அவன் வந்து நின்றுவிட்டால்? என்ற நப்பாசை!

“ஹும், ஏலம் எடுக்க முடியாதுல அப்போ?” அவன் அயர்ந்து சொல்ல, “ஏலம் கைவிட்டு போகாம இருக்க ஒரு வழி இருக்கு” என்றான் நந்தா.

“என்னடா அது?”  அண்ணா ஆர்வமாய் கேட்க, “வேணாம், சொன்னா திட்டுவ” என்றான் அவன்.

“திட்ட மாட்டேன் டா, சொல்லு” அண்ணா ஊக்க, “அது… அது.. அது என்னன்னு ஐயப்பன் சொல்லுவான்” என்று பக்கத்தில் இருந்தவனை கை நீட்டிவிட்டான். அதிர்ந்து விழித்தவன், “என்னை ஏன்டா பரதேசி கோர்த்துவிட்ட?” என்று பல்லைக்கடித்து முனக, “சொல்லுடா” என்றான் அண்ணாமலை.

“அது வந்து… அது எனக்கே தெரியாது! சேகர் தான் எனக்கே சொன்னான்” என்று அந்த பக்கம் இருந்த சேகரை ஐயப்பன் கோர்த்துவிட, எதிர்ப்பாராத பேச்சில் தடுமாறினான் சேகர்.

“சொல்லுடா என்னன்னு?” அண்ணா வினவ, “எனக்கு கொஞ்சம் தான் தெரியும், பரதனுக்கு தான் முழுக்க தெரியும்” என்றுவிட்டான். அண்ணாவுக்கு இல்லாத பொறுமை இல்லாமல் போயே விட்டது.

“எவனோ ஒருத்தன் சொல்லித்தொலைங்கடா” அண்ணாமலை எரிந்து இரைந்த பின்பே வாயை திறந்தான் பரத்.

“நீ கல்யாணம் பண்ணிக்கணும்! சரி ன்னு சொல்லிட்டா அஞ்சு லட்சமும் கடனில்லாத காசாகிடும்” என்றுவிட்டான் தைரியமாய்.

பரத் சொல்லிவிட, நால்வரும் அண்ணாவை நேர்க்கொண்டு பார்க்காது திருதிருவென முழிக்க, அமர்ந்திருந்த அண்ணா எழுந்து நின்றான். நேர்கோடாய் நின்ற நால்வரையும் நெருங்கி சில நிமிடங்கள் முறைக்க, ஒருவன் கூட நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்கவே இல்லை. காது பொத்தல் போடும் அளவு திட்டி தீர்க்கப்போகிறான் என அவர்கள் நினைக்க அதற்கு நேர்மாறாய் ஒன்றும் சொல்லாமல் அமைதியுடன் அங்கிருந்து நகர்ந்து எங்கோ போனான் அண்ணாமலை.

“என்னடா கம்முன்னு போய்ட்டான்?”

“வருத்தமோ உனக்கு? நான் வேணா கூப்புடவா?” நால்வரும் அண்ணாமலையின் அமைதியில் அதிசயித்து அளவளாவிக்கொண்டிருந்தனர்.

***

பிசைந்த மாவை ஒரு நீண்ட தட்டில் கொட்டி அழுத்தி விரவி, இதய வடிவ அச்சைக்கொண்டு அதில் அழுத்தி வெண்ணெய் பிஸ்கட்டாக மாற்றிக்கொண்டிருந்தாள் நிம்மதி.  அவள் செய்வதை வாயை பிளந்து பார்த்துக்கொண்டு சுற்றியும் அமர்ந்துக்கொண்டிருந்தனர் ஊர் பிள்ளைகள். அன்றைக்கு பள்ளி விடுமுறை என்பதால், வேலை செய்யும் பெண்கள் குழந்தைகளோடு வந்துவிட்டிருக்க,  அவர்களை ஓரிடமாய் அமர வைக்கவென இதை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாள் அவள்.

அவளிடம் வந்து தாஸ் நிற்க, நிமிர்ந்து ஒரு கணம் பார்த்தவள், பின் வேலையை செய்துக்கொண்டே, “என்னப்பா? இட்லி வச்சேனே, சாப்பிட்டியா?” என்றாள்.

“ஆச்சும்மா!” என்றவர், “இன்னைக்கு ஏலம்” என்றார், கொக்கி போட்டு நிறுத்தி.

“அதுக்கென்னப்பா?” அவள் ஆர்வமின்றி கேட்க, “என்னம்மா நீ? என்னவோ சொன்னியே? அண்ணா தம்பி காசுக்கு வந்து நிக்கும், கல்யாண வேலை பாக்க ரெடியா இருன்னு சொன்னியே” என்றார் அவர்.

“ஏலம் மதியம் தானே… இப்போவே என்ன உனக்கு? போய் டப்பால எல்லாம் நம்ம லேபிள் ஒட்டிருக்கான்னு செக் பண்ணு, போ” என்றாள்.

மகளை எப்போதும் போல எதிர்த்து பேசாதவர், “சரிம்மா” என்ற சொல்லோடு நகர்ந்துவிட, “இதே மாறி பண்ணுங்கடா! திருட்டுத்தனமா செய்யும்போதே தின்னுடக்கூடாது, அளவு குறையாம இருக்கணும் சொல்லிட்டேன்” என்று கண்டிப்பு போல சொல்லிவிட்டு மற்ற வேலைகளை பார்க்க சென்றுவிட்டாள்.

***

“ண்ணே… ஒரு டீ போடு” என்று சொல்லிவிட்டு அந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்தான் அண்ணாமலை. ஆழியூர் அய்யாக்கண்ணுவுக்கு அழைத்த வண்ணம் தான் இருந்தான். முன்பாவது எடுத்து தாக்கல் சொன்னவன் இப்போது எடுக்கவே அலுப்புப்பட்டான்.  கடையில் இருந்தாளாவது நேரில் போய் பிடிக்கலாம் என்றால், அவன் தான் டிஜிட்டல் இந்தியாவில் ஆயிரம் ரூபாய் நோட்டை தேடி அலைந்துக்கொண்டிருக்கிறானாமே!

ஆனால், என்னவோ அண்ணாமலையின் மனது அடித்து சொல்லியது, இன்றைக்கு பிறகு அவன் மொத்த வாழ்க்கையே வேறாக போகிறது என்று! அது என்னவோ உண்மை தான்.

வீரப்பன், பாண்டியன் மற்றும் மற்ற சகாக்களோடு பயங்கர அலப்பறையுடன் வந்துக்கொண்டிருந்தான். கண்டிப்பாக தன்னிடம் வம்பு வளர்க்க தான் வருகிறான் என்று தெரிந்தது. எழுந்துப்போனால் ரொம்பவே சீண்டுவான் என்பதால் மீதமிருந்த டீயை உறிஞ்சுக்கொண்டிருந்தான்.

அண்ணா எதிர்ப்பார்த்ததை போலவே அவனுக்கு எதிரே இருந்த பெஞ்சில் ஆர்ப்பாட்டமாய் அவர்கள் அமர்ந்துவிட, “எத்தனை டீ?” என்றார் கடைக்காரார்.

“தலைக்கு ஒண்ணுன்னு போடு” என்ற வீரப்பன், “சேதி தெரியுமா பாண்டி?” என்று அண்ணாவை பார்த்துக்கொண்டே ஆரம்பித்தான்.

“என்னது பாண்டி?”  அவனும் ஒன்றும் தெரியாதவன் போல கதை கேட்க ஆரம்பிக்க, “ஒருத்தனுக்கு கு** அழுவவே தண்ணி இல்லையாம், கொப்புளிக்க பன்னீரு கேட்குதாம்!” என்று ராகம் போட்டு வீரப்பன் சொன்னதற்கு கூட்டமே ஆரவாரமாய் சிரித்தது.

சிரிப்பினூடே, “ஏன்டா இப்டி சொல்ற?” என்று ஒருவன் கேட்க, “பின்ன என்ன டா? எலி பொந்துக்கு ஆசைப்படலாம், கோபுரத்துக்கு ஆசைப்படலாமா?” என்றான் வீரப்பன், அண்ணாமலையை பார்த்துக்கொண்டே.

டீயை குடித்து முடித்த அண்ணாமலை ஒன்றுமே சொல்லாமல் எழுந்து கிளாசையும், காசையும் நீட்டிவிட்டு அங்கிருந்து லுங்கியை மடித்துக்கட்டியபடி நகர, சண்டையை எதிர்ப்பார்த்த கும்பலுக்கு சப்பென்று போனது. ஆனாலும் விடாமல், “யோவ், கடைக்காரா… இன்னைக்கு மதியம், நம்மூரு குளத்தை நாங்க ஏலத்துக்கு எடுக்கப்போறோம்… மறக்காம வந்து பாரு” என்றான் வீரப்பன், அண்ணாவுக்கு கேட்கும்படியே.

“நீ குளத்தை எடுத்தா எனக்கென்ன? குப்பையை எடுத்தா எனக்கென்ன? டீக்காசை குடுத்துட்டு இடத்தை காலி பண்ணு” என்றுவிட்டான் அந்த டீக்கடைக்காரன்.

உடனே சுற்றி முற்றி தான் அத்தனை பேரும் நோட்டமிட்டனர். நல்லவேளையாக ஒருவரும் அங்கே இல்லை. கடைக்காரனை முறைத்துக்கொண்டே அடங்காத ஆர்ப்பாட்டத்துடன் அங்கிருந்து கிளம்பியது அந்த கூட்டம்.

***

ஊருக்கு நடுவே இருந்த தெப்பக்குளத்தை சுற்றி இருந்த நிழலில் மேஜை நாற்காலிகள் எல்லாம் போடப்பட்டு ஏலம் துவங்க தயாராக இருந்தது. ஊராட்சி தலைவர் முருகேசனுடன் அதிகாரிகள் மூவரும் இருக்க, அங்கே வேடிக்கை பார்க்கவென கூட்டம் வந்து சேர்ந்துக்கொண்டிருந்தது. இருப்பக்கமாய் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒரு பக்கத்தை மொத்தமாய் வீரப்பனின் கோஷ்டி அடைத்திருக்க, மறுபக்கத்தில் ஏலம் எடுக்கும் எண்ணத்தில் சிலரும், அவர்களோடு அண்ணாமலையின் நாலு நண்பர்களும் விருப்பமேயின்றி அமர்ந்திருந்தனர்.

“இவனுங்க ஓவரா சலம்புறானுவளே! அடிச்சு வெளுக்கலாமான்னு வருது” என்று நந்தா சேகரிடம் புலம்ப, அதே தான் மற்ற மூவருக்கும்.

“எங்கடா போய் தொலஞ்சான் இந்த அண்ணாப்பய?” ஐயப்பன் கேட்டபோது, ஆற்றங்கரை தூங்குமூஞ்சி மரத்துக்கு கீழே பேச வேண்டிய வார்த்தைகளை மனதுக்குள் கோர்த்துக்கொண்டு தடுமாற்றத்தை வெளியே காட்டாது விறைப்பாக நின்றிருந்தான் அண்ணாமலை.

அவன் எதிரே நின்றவளோ, “வா, பேசனுன்ன… வந்தா பேசாம நிக்குற? என்னன்னு சொல்லு” என்றாள் நிம்மதி, உள்ளுக்குள் குதிக்கும் மனதை அடக்கிக்கொண்டு, இயல்பு போல.

குரலை செருமியவன், “ஏலம் ஆரம்பிக்க போகுது!” என்று சொல்ல, “தெரியுமே… நானும் அங்க தான் போவேன் இப்ப” என்றாள்.

“அது… அதுக்கு… அதுக்கு எனக்கு” அவன் எப்படி கேட்பது என தடுமாற, அவனே சொல்லட்டும் என சில நிமிடங்கள் பொறுத்தவள், அவன் பேசவே வெகுவாக தயங்குவதை கண்டு, மென்மையாய் சிரித்தபடி, தன் வண்டி சீட்டுக்குள் இருந்து ஒரு மஞ்சள் பையை நீட்டினாள் அவனிடம்.

அதை கையில் வாங்காமல் அவன் கேள்வியாய் அவளை பார்க்க, “நீ கேட்ட பணம்! எடுத்துட்டு போ” என்றாள்.

அப்போதும் அதை வாங்காமல் அவன் அவளையே புருவம் சுருக்கிப்பார்க்க, நீட்டிய கையை மடக்கியவள், “என்னைய்யா உனக்கு? இதை கேட்க தானே இத்தனை தடுமாறுன? புடி!” என்று மீண்டும் நீட்ட, “பணம் மட்டும் தானா?” என்றான் அவன்.

“வேறென்ன? வெத்தலை பாக்கு தாம்பூலம் எல்லாம் வேணுங்குறியா?” அவள் கேட்க,  “ப்ச்” என கடுப்பாய் சலித்தவன், இடுப்பில் கைவைத்தபடி எங்கோ முறைத்துக்கொண்டு நின்றான்.

“யோவ், என்னைய்யா பிரச்சனை உனக்கு? பணம் கேட்டு தானே வந்த? அதான் தரேனே” அவள் சொல்ல, “பணம் மட்டும் தான் தருவியா?” என்றான்.

“வேறென்ன வேணும்?”

“அன்னைக்கு என்னவோ வசனம் பேசுன? இந்த கைல பணத்தை புடி, அந்த கைல என்னைப்புடின்னு” அவன் கடுப்பாய் சொல்ல, எழுந்த சிரிப்பை அடக்கியவள், “அது சும்மா சொன்னேன்… உனக்கு இஷ்டம் இல்லாதப்போ கட்டாய கல்யாணம் எல்லாம் பண்ண முடியுமா என்ன?” சோகம் போல சொன்னாள்.

“அப்போ என்னை கட்டியே தீருவேன்னு சொன்னது?”

“சொன்னேன் தான்! நம்ம வாயிட்டு கேக்காமயே இருக்கனால தான் உனக்கு என் மனசு புரியலயோன்னு நினைச்சு சொன்னேன்!”

“சொன்னதுக்கு என்ன வந்துச்சு இப்போ?”

“நீதான் என்னை புடிக்கலங்குறியே”

“இத்தனை வருஷமும் அதையே தானே சொன்னேன்?” அவன் கோவம் ஏறிக்கொண்டே போனது. அதை உணர்ந்து ரசித்தவள், “ஆமா… விருப்பம் இல்லாதவனை கட்டிக்க முடியுமா?” என்றாள் அவள்.

அவளை சில கணங்கள் ஒன்றுமே சொல்லாமல் பார்த்தான். வார்த்தை வெளியே தான் வரவில்லையே ஒழிய, கடிந்துக்கிடந்த பற்களைத்தாண்டி கொட்டத்துடித்தது ஆனாலும் அடக்கியவன், அவளைத்தாண்டி வேகமாய் போக, “பணத்தை வாங்கிட்டு போயா” என்றாள் அவள்.

திரும்பி முறைத்தவன், “பிச்சை போடுறியா?” என்றான்.

“லூசு மாறி பேசுற? உதவியா தானே…” அவள் கேட்கும்போதே, “நீ போட்ட டீலிங் என்ன? காசு குடுத்தா கல்யாணம் கட்டிக்கனுன்னு தானே?” என்று கேட்க, “அதான் வேண்டாம்ன்னு சொல்றேனே” என்றாள் அவள்.

“ஓசி காசு ஒன்னும் எனக்கு தேவ இல்ல” அவன் வீம்புப்புடிக்க, ‘ஏய் உனக்கு என்னடா பிரச்சனை?’ என்று கத்த வேண்டும் போல இருந்தது. அவனை சீண்டத்தான் நினைத்தாள். அவனிடம் சலனத்தையும், கல்யாணம் எண்ணத்தையும் விதைத்தால், இன்னும் சிறிது நாட்களில் அவன் மனம் மாறி திருமணத்துக்கு ஒப்புக்கொள்வான் என அவள் நினைக்க, இவன் என்னவோ இப்போதே கல்யாணம் செய்வோம் வா! என்பது போல பேசிக்கொண்டு நிற்க, அத்தனை வியப்பு அவளுக்கு.

“என்ன சொல்ல வர நீ? கட்டிக்குறேங்குரியா?”

“அதானே டீலிங்கு” அவன் மிதப்பாய் கேட்க, “காசுக்காக கல்யாணம் பண்றதெல்லாம் சரி வராது மலை” என்றுவிட்டாள், ஒருவித திண்ணமான குரலில்.

“அப்ப காசுக்கு கட்டுறேன்னு சொல்றியா?” அவனும் எகிற, ‘ஷப்பா!!!’ என்று தான் ஆனது அவளுக்கு.

‘உன்னை பிடிச்சுருக்கு’ என்ற ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவளுக்கு.

அந்த ஒருவார்த்தையை சொல்ல அவனது ‘வீம்பு’ அவனை விடவில்லை.

“நீ முதல்ல ஏலத்தை முடி, நம்ம பொறுமையா பேசுவோம், இந்தா!” என்றவள், அவன் கைப்பிடித்து பையை வைத்தவள், வண்டியை எடுத்தாள். அவன் அங்கிருந்து நடக்க, “வாயேன்… அங்க தான் போறேன்” என்றாள், அவனருகே வண்டியை நிறுத்தி.

அவன் ஒன்றும் சொல்லவில்லை. மௌனமாய் வந்து அவள் பின்னே கால்போட்டு அமர்ந்துக்கொள்ள, ‘இவனுக்கு என்ன ஆச்சு? காத்து கருப்பு எதுவும் அடிச்சுருச்சா?’ என்ற ஐயம் தான் அவளுக்கு.

இடத்தை நெருங்கும்போது, “இங்கேயே நிறுத்து! இறங்கிக்குறேன்” என்றவனை மேற்கொண்டு பேசவைக்காமல் வண்டியை நிறுத்தினாள் நிம்மதி. அவன் அங்கிருந்துப்போக, “யோவ்…” என்றாள்.

அவன் திரும்ப, “அவசரப்பட்டு பணத்தை குடுத்துடாத! ஏலம் எடுத்தே ஆகனும்ன்னு வீம்புக்கு நிக்காத! கொஞ்சம் நிதானமா பண்ணு” என்றாள். புருவம் சுருக்கினான் யோசனையாய்.

அவன் பார்வை கண்டு, “மனசுக்கு பட்டுச்சு… சும்மா சொன்னேன்” என்றாள் அவள். அவள் சும்மா எதையும் சொல்பவளல்ல என்று அவனறிவான்.  அவன் புருவ முடிச்சுகள் விலகவே இல்லை. அதனுடனே ஏலம் நடக்கும் இடத்தை அடைந்து பரத்தின் அருகே அமர்ந்துக்கொண்டான் அண்ணாமலை.

ஏலமும் ஆரம்பமானது.