“ஏன்டா யோசிச்சு தான் பேசுறியா நீ!?” பரத் தன் முன்னே ஒரு முடிவுடன் அமர்ந்திருந்தவனை பார்த்து திகைப்பாய் கேட்க, மற்ற மூவரின் விழி மொழிகளும் அதே கேள்வியை தான் கேட்டது.
“யோசிக்காம தான் முடிவா சொல்றேனா நான்?” என்று திருப்பி கேட்டான் அண்ணாமலை.
“அதெல்லாம் முடியும்… எதையும் யோசிக்காம நான் சொல்லல… பத்து நாளா எல்லாத்தையும் யோசிச்சு தான் இதை சொல்றேன்! இந்த முறை குளம் ஏலம் எடுக்க நம்ம போறோம்” என்றான் அண்ணாமலை முடிவாக.
அவன் சொன்னதில் நால்வருக்கும் கொஞ்சமும் விருப்பமில்லை. ஏற்கனவே இருக்கும் வேலைகளுக்கு நடுவே புதியதாய் மீன் வியாபாரம் எல்லாம் வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றியது. ஆனால், அண்ணாமலையோ மறுயோசனையே இன்றி முடிவாய் நிற்க, இந்நால்வருக்கும் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எப்போதுமே அவன் யோசனை சோடை போகாது என்ற நம்பிக்கை இருந்தாலும் யானைக்கும் அடி சறுக்கும் தானே!?
“ஏலத்துல குளம் நமக்கு கிடைக்கும்ன்னு தோணுதா?” நந்தா அடுத்த கட்ட பேச்சிற்கு தாவினான்.
“கிடைக்கும்ன்னு தான் நினைக்குறேன். பாண்டியனுக்கு திரும்ப குளத்தை ஏலம் எடுக்குற எண்ணம் இல்ல போல. வெளிநாடு போக போறதா பேசிக்கிட்டாங்க! அவனை விட்டா புதுசா யாரும் வரப்போறதில்லை. அதனால நமக்கு பிரச்சனை இருக்காதுன்னு தான் நினைக்குறேன்” அண்ணாமலை எல்லாம் யோசித்தவனாய் சொன்னான்.
“காசு… காசு வேணாமா? எப்படியும் ரெண்டு மூணு லட்சம் ஆகும்” சேகர் சொல்லிப்பார்த்தான்.
“நம்மக்கிட்ட கையிருப்பு எவ்ளோ இருக்கு?” அண்ணா கேட்டதும், ஐயப்பன் சாமி மாடத்தில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். சற்று நேரத்தில் ஒரு மஞ்சள் பையுடன் அவன் வெளிவர, திண்ணையில் அமர்ந்து உள்ளிருந்த கசங்கிய நோட்டுகளை எல்லாம் விரித்து அடுக்க ஆரம்பித்தனர். அண்ணாவும் பரத்தும் எதிரெதிராய் கையை கட்டிக்கொண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.
எண்ணி முடித்த மூவரும் பணத்தை கட்டி பையில் போட்டு, “இரண்டு லட்சத்தி மூவாயிரம் இருக்கு!” என்றான் நந்தா.
அண்ணாமலை யோசனையாய் நிற்க, “குறைஞ்சது மூணு தேவைப்படும் டா” என்றான் சேகர். அவனுக்குமே அது புரிந்தது. என்னதான் உழைத்தாலும் பெரிதாய் சேர்த்து வைத்திராத அந்த ஐவரிடம் இத்தனை மிஞ்சியதே உண்மையில் பெரிது தான்! வருவதை எல்லாம் ஆதரவற்றோர் இல்லத்தை செம்மைப்படுத்தவே செலவிட்டிருந்தனர்.
சற்று நேரம் ஏதோ சிந்தித்துக்கொண்டே நின்ற அண்ணாமலை, “சரி நீங்க பணத்தை காவுந்து பண்ணுங்க… நான் ஒரெட்டு தலைவரை பார்த்து பேசிட்டு வரேன்” என்றவன் செருப்பை மாட்ட, இத்தனை நேரம் அமைதியாய் இருந்த பரத்தும் செருப்பை மாட்ட, “ஒய், எங்க கிளம்புற?” என்றான் அண்ணாமலை.
தாங்கள் சொல்வதை கேட்காமல் அவன் பிடிவாதமாய் இருக்கும் கோபத்தில் தன் முறைப்பை காட்டியவனோ, மற்ற மூவரிடம், “டேய் எனக்கும் வேலை கடக்கு… வெளில போயிட்டு வரேன், மாட்டுக்கு தண்ணி காட்டுங்க!” என்றுவிட்டு ஒரு கனைப்புடன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
நந்தா, “இவன் எங்கடா வேலை நேரத்துல கிளம்பிப்போறான்?” என்றான் கடுப்பாக. இலையருக்க, வெங்காயம் வெட்ட என மாலை நேர கடைக்கான வேலை தலைக்கு மேல் கிடக்க, ஆளாளுக்கு கிளம்பினால் எப்படி? என்ற கடுப்பு அவனுக்கு.
செருப்பை மாட்டிக்கொண்டு, கால் வரை புரண்ட லுங்கியை தூக்கி உதறி கட்டிய அண்ணாவோ, “நாய் எங்க போவும்? பிஸ்கட் கடைக்கு தான்” என்றுவிட்டு அந்த தெரு முடிவில் இருந்த ஊர் தலைவர் வீட்டுக்கு நடையை போட்டான்.
அவன் சொன்னது போலவே பரத்தின் சைக்கிள் ‘நிம்மதி பிஸ்கட்ஸ்’ முன்னே தான் நின்றது. நேரே பெரிய வீட்டை சுற்றிக்கொண்டு பின்னே சென்றவனோ, பின்னே இருந்த சிறிய வீட்டின் வெளியே நின்று, “இந்தாப்புள்ள மதி…” என்று குரல் கொடுத்தான்.
உணவை உண்டுக்கொண்டிருந்தவள், அவன் குரலில் கையை கூட கழுவாது அப்படியே எழுந்து வெளியே வந்து, வியப்பாய், “அட, என்ன கறிக்கடை வாசம் இங்க வரை அடிக்குது? என்ன சேதி?” என்றாள்.
புருவம் சுருக்கியவளோ, “என்னாலயா? என்ன பண்ணனும்?” என்றாள் புரியாமல்.
“இந்த அண்ணாப்பய இருக்கான்’ல? புதுசா மீனு புடிக்குறேன், குளத்தை ஏலம் எடுக்குறேன்னு ஏழரையை கூட்டிக்கிட்டு நிக்குறான்” என்று சொல்ல, “மீனா? மீன் வியாவாரம் வேற பண்ணப்போறீங்களா?” என்றாள் முகம் மலர்ந்து.
“சும்மா இரு’ந்த..! எவன் வேலை பாக்குறதாம்? அவன் என்னவோ கிறுக்கனாட்டம் பெனாத்திட்டு இருக்கான்!” பரத் கடுப்படிக்க, “தொழிலை பெருக்கிறது நல்லது தானே… அதை ஏன் தடுக்குற?” என்றாள் அவள்.
“இப்போ இருக்குற தொழிலை விரிவுப்படுத்து. எவன் வேண்டான்னான்? அதைவிட்டுட்டு அனுபவமே இல்லாத வேலையை இழுத்துப்போட்டுப்பேன்னா என்ன அர்த்தம் சொல்லு? எல்லாத்தையும் விட, மீன் புடிச்சு, அதை வித்து காசு எடுக்குறது எல்லாம் சுலுவுன்னு நினைச்சியா?” அவன் கேட்க, அதுவும் நியாயமாக தெரிந்தாலும், “சரி இப்போ நான் என்ன பண்ணனும்ன்னு வந்து என்கிட்ட புகார் வாசிக்குற?” என்றாள் விளங்காமல்.
“நீதான் மதி அவன்கிட்ட பேசணும்! நீ பேசுனா அவன் கேட்பான்” அவன் சொன்னதும், “ப்ச், சரி வராது பரதா. அவரு ஆசைப்பட்டு ஒன்னு பண்றப்போ, நான் குறுக்கால போய் முட்டுக்கட்டை போடுறது சரி வராது. எனக்கே பிடிக்காத காரியமா இருந்தாலும், அது அவருக்கு பிடிச்சுருந்தா நான் என்னைக்குமே அவரை தடுக்க மாட்டேன்… தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோ… அவர் ஆசைக்கு மறுப்பு சொல்ற நிலைமையை எனக்கு உருவாக்காத!” என்றாள் வெகு தீவிரமான குரலில். அவள் மனதில் உள்ள எண்ணமும் அதுதான்.
ஆனால் அதை கேட்ட பரத்தோ, “அய்ய… உன்ன எவன் அவன்கிட்ட போய் இதை செய்யாத வுட்டுடு’ன்னு சொல்ல சொன்னது?” என்று முகத்தை சுளித்து வினவ, குழம்பியவள், “நீ தானே சொன்ன இப்போ?” என்றாள்.
“சொன்னேன்… இந்த தொழில் வேண்டாம், விட்டுடுன்னு சொல்ல சொல்லல… இது ரொம்ப நல்ல வேலை அண்ணா… நீ மீன் பிடிக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு… நீ கண்டிப்பா மீன் வியாவாரம் பண்ணனும்’ன்னு அவன்கிட்ட சொல்ல சொல்லி தான் உன்கிட்ட கேட்க வந்தேன்…” என்றதும், அவள் முகம் இறுகி பார்வை சூடு பறக்க, “ஏன்?” என்றாள் பதிலை தெரிந்தே!
“அப்போதானே அவன் இந்த ஏலம், பட்டை, கிராம்பு’ன்னு உளராம கம்முன்னு இருப்பான்! நீ சொல்லி எதை கேட்டுருக்கான் அவன்? நீ சொல்றதுக்கு எதிரா பண்றது தானே அவன் பொழப்பே!” என்றவனோ சிரித்துக்கொண்டே, “இதுக்கூடவா புரியல, என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?” என்று கேட்டுவைக்க, உண்ட எச்சில் கையோடு அருகே கிடந்த சீவக்கட்டையை தூக்கியவளோ, “ஊரான் வூட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையேனானான்…” என்று கத்திக்கொண்டே துடைப்பத்தின் பின்பக்கத்தை அவள் தட்ட, பரத்தின் கால்கள் வேகவேகமாய் பின்னே நகர்ந்தது.
“இங்க என்ன கேனச்சி வீடுன்னு எழுதி போட்டுருக்கா? நான் ஒன்னு சொல்லுவேனாம்… அதை கேட்டு அந்த ‘நொண்ணா’ மாத்தி பண்ணுவானாம்! அதை இந்த துரை கண்டுப்பிடிச்சு வந்து என்கிட்டயே சொல்லி உதவி கேப்பாராம்!” என்றவள்,
“இப்ப உன்னை ஓடவிட்டு பொறட்டுற பொறட்டுல, என்னைய வச்சு புரளி பேசி சிரிக்குற அத்தனை வாயும் மூடப்போவுது பாரு!” என்றவள், நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்துவிட்டு, கையில் துடைப்பத்துடன் ஓரெட்டு எடுத்து வைக்க, பரத்தோ தன் சைக்கிள் அங்கிருப்பதை கூட மறந்தவனாய், குதிகால் குமட்டில் குத்த திரும்பிக்கூட பாராது ஓட்டம் எடுத்தான்.
வாசல் வரை அவனை துரத்தி வந்தவள், தறிக்கெட்டு ஓடும் அவனை மூச்சு வாங்க பார்த்துக்கொண்டு நின்றாள். பின் துடைப்பத்தை அப்படியே தூக்கி வீசியவளுக்கு, அந்த ‘அண்ணா’வின் மீது தான் அத்தனை எரிச்சல் வந்தது. அவனால் தானே இந்த அசிங்கம் எல்லாம்!
‘சிக்குடி மவனே… புழிஞ்சுடுறேன்’ என்று கருவிக்கொண்டு மீதி உணவை உண்ண உள்ளே சென்றாள்.
***
ஊர் தலைவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தான் அண்ணாமலை. அவன் முகம் மலர்ந்திருந்தது. அவன் நினைத்த காரியம் நல்லவிதமாய் கைக்கூட போவதற்கான அறிகுறி தென்பட, சின்ன சிரிப்புடனே சாலையில் நடந்தான்.
அவன் போவதை ஒருவித யோசனையுடன் பார்த்த வீரப்பன், மெல்ல அந்த தலைவர் வீட்டுக்குள் சென்றான். எல்லாம் அவனுக்கு அங்காளி பங்காளி தான் என்பதால், அவன் வந்ததை வேறாக யாரும் எண்ணவில்லை. இயல்பாகவே வரவேற்று உண்ண அழைக்க, தண்ணீரோடு நிறுத்திக்கொண்டவன், ‘எதற்காக அவன் வந்தான்?’ என எப்படி கேட்பது என்று தெரியாமல் தடுமாறினான்.
ஆனால், அவனுக்கு சிரமம் கொடுக்காமல் தலைவர் முருகேசனே ஆரம்பித்தார்.
“பாண்டியன் வெளிநாட்டு பிரயாணத்துக்கு ஆக வேண்டியது எல்லாம் எடுத்துக்கிட்டானா?” என்று கேட்க, “ஆச்சு சித்தப்பா… இன்னும் ஒரு மாசம் கடக்குல? ஒன்னும் அவுதி இல்ல” என்றான்.
“சரி தான்… நாளு கடக்கு பாரு!”
“ம்ம்… குளம் குட்டை மீனு’ன்னு இருந்துட்டு இப்போ வெளிநாட்டு வேலைன்னதும் அவனுக்கு போவ மொடையா இருக்கு… அனத்திக்கிட்டே கடக்கான்” என்று வீரப்பன் சொல்ல, “நானும் நினச்சேன், அவனுக்கு பிறவு யாருக்கு குளத்தை ஏலம் குடுக்குறது? எவன் நல்லா கவனிப்பான்னு? இப்போ தான் அண்ணா வந்து அந்த கவலையை இறக்கி வச்சுட்டு போறான்!” என்று சொல்ல, திகைத்தவன், “புரியல சித்தப்பா” என்றான்.
இங்கே என்ன தான் ‘ஏலம்’ என்று சொல்லிக்கொண்டாலும், எதுவும் முறைப்படி நடக்காது! சிபாரிசு, சொல்லி வைப்பது தான் எப்போதும்!
“இரண்டு வருஷ ஏலம் முடியபோகுதுல? அடுத்து ஏலம் விடுறப்போ குளத்தை நானே எடுத்துக்குறேன்னு கேட்டுட்டு போறான்!” என்று சொல்ல, வீரப்பனின் முகமே கோபத்தில் துடித்தது. காரணம் தான் தெரியவில்லை. ஏனோ அண்ணாவின் வளர்ச்சி அத்தனை உவப்பானதாக இருப்பதே இல்லை அவனுக்கு அப்போதுமே.
இப்போதும் அதேபோல மனம் கசக்க, அங்கிருந்து பேசிவிட்டு கிளம்பியவன், மனதில் செய்ய வேண்டியதை திட்டமிட்டுக்கொண்டே பாண்டியனை தேடி சென்றான். அவன் பேசிய சிறிது நேரத்தில், பாண்டியனே மீண்டும் குளத்தை ஏலம் எடுப்பது என முடிவானது. பாண்டியன் போட்டிக்கு இல்லாமல் இருந்தால் தானே அண்ணாவுக்கு ஏலம் கிடைக்கும். அதனால் வேண்டுமென்றே மீண்டும் அவனை இழுத்துவிட்டான்.