“விக்ரம்” என்று சதாசிவம் கோபமாக, அப்பா..இருங்க என்று சிம்மாவை பார்த்தான் விக்ரம். அவனோ இரத்தம் வழிய நிற்கும் உதிரனை மேலும் அடித்தான். நட்சத்திரா அவனை தடுத்துக் கொண்டிருந்தாள்.
சிம்மா, முதல்ல அவனிடம் இருக்கும் வீடியோவை அழிக்கணும். அப்புறம் என்னை நீ என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கோ என்று உதிரன் கதறினான்.
சிம்மா வேகமாக அவனிடம் செல்ல, பாலா அவனிடம் வந்து “அந்த வீடியோ கிடச்சிருச்சு” என்று பிரணவ்வின் மற்றொரு அலைபேசியை காட்டினான். அதிலிருந்த வீடியோவை பார்த்து உதிரன், சிம்மா மனம் கொதித்தது.
சார், அவனை சும்மா விடக்கூடாது பாலா சீறினான்.
இதை பாருங்க, “எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை நாசமாக்கி இருக்கான் தெரியுமா?” என்ற விக்ரம், பாலா கையிலிருந்த அலைபேசியை பிடுங்கி, பொண்ணுங்க உடலை ரசிக்கவே இவன் தனியா அலைபேசியே வச்சிருக்கான் என்று அதை சதாசிவத்திடம் கொடுத்து, “இதை கோர்ட்டில் கொடுத்து இத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிக்கணும்ன்னு நினைக்கிறீங்க?” கோபமாக சத்தமிட்டான். அவர் அமைதியாகி விட்டான்.
“இவனை இழுத்துட்டு போங்க” என்று ரகசியனை பார்த்து, ரகசியா நீயும் உன் தம்பிகளும் தான் இவர்கள் பொறுப்பு. நீங்க எல்லாரையும் பத்திரமா அழைச்சிட்டு ஹாஸ்பிட்டல் போங்க. நாங்க சீக்கிரமே வந்துருவோம் என்று விக்ரம் சொல்ல, ஏம்மா..”நீங்களும் வாங்க” என்று சதாசிவம் நட்சத்திரா, நிஷாவை அழைக்க, அவர்கள் உதிரன் சிம்மாவை பார்த்தனர்.
அவங்களுக்கு ஏதும் ஆகாது. எங்களுக்கு ஒரு வேலை இருக்கு. நீங்க பத்திரமா போங்க என்று விக்ரம் சொல்ல, ஸ்டார் ரித்து விழிச்சுட்டான்னு பார்த்துக்கோ. சித்தி, சித்தப்பா இல்லைன்னா உடைஞ்சு போயிடுவா என்றான் சிம்மா.
“அவ்வளவு நேரமெல்லாம் ஆகாது சிம்மராஜன் சார்” என்று விக்ரம் புன்னகைத்தான். அனைவரும் கிளம்ப, சுவாதியின் அண்ணனும் நேகனும் விக்ரமை பார்த்துக் கொண்டே சென்றனர்.
“எங்க போகப் போறோம்? நீங்க?” உதிரன் சிம்மாவை பார்த்து விட்டு விக்ரமை பார்த்தான்.
நான் உங்க மச்சானோட..என்று நிறுத்தி சிம்மாவை விக்ரம் பார்த்தான். சிம்மா கோபம் சென்று பதட்டம் மேலோங்கியது.
ரித்துவை பார்க்கணும். தூக்க மாத்திரை ஓரிரண்டு சாப்பிட்டு இருக்கான்னு மகிழ் சொன்னான். அதனால் அதிக பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன். வேகமாக செல்லணும் என்றான் சிம்மா.
“எங்க போனான் கோபக்கார சிம்மா?” விக்ரம் கண்ணடிக்க, “வழிய விடுடா” என்று சிம்மா அவனை நகர்த்தி செல்ல, “நான் உன்னோட ப்ரெண்டுன்னு சொல்லலாமா? இன்னும் என் மீது உனக்கு பகையா? “விக்ரம் கேட்க, “சிம்மா மனம் என்ன சொல்ல?” என்று சிந்தித்தது.
“நான் இப்ப சொல்லணுமா?” விக்ரம் உதிரனை பார்த்து, நான் சொல்லும் நேரம் சொல்கிறேன். உங்க சிம்மாவின் பதவியில் தான் நானும் இருக்கிறேன்.
“வாங்க கிளம்பலாம்” என்று அவர்கள் நடக்க, கார் ஒன்று வந்தது. ரவி வந்திருந்தார். “தேங்க்ஸ் ரவி” என்று விக்ரம், அவர்களையும் அழைத்துக் கொண்டு ஊரின் எல்லையில் பூட்டி வைக்கப்பட்ட ஓர் சிறிய வீட்டிற்கு அழைத்து சென்றான்.
“இங்க என்ன இருக்கு?” உதிரன் கேட்க, கதவை திறந்தார் ரவி. உள்ளே பிரணவ்வை தலைகீழாக கட்டிப் போட்டு அடித்து இருந்தனர்.
அவனை பார்த்ததும் சிம்மா சினமுடன் அவன் பலம் கொண்டு அடித்தான். உதிரன் ரித்து அழுததை நினைத்து நினைத்து வெறியுடன் அடித்தான். பிரணவ் சாவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தான்.
“போதும்..போதும்..அவன் செத்திடாமல்” என்ற விக்ரம் அங்கிருந்த அவன் ஆட்களை பார்த்தான். அவர்கள் அவனை இறக்க, நட்சத்திரா கட்டு போட்டு விட்ட தலை உதிரனுக்கு வலித்தது. சிம்மா உதிரனை பார்த்தான்.
சாரி சிம்மா, ரித்து என்னை யாருன்னு தெரியாதது போல் காட்டிக்கிட்டா. இதில் அவள் வேறொருவனை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு சொன்னதில் சினம் மேலிட, அவளை சரியாக கவனிக்க முடியாமல் விட்டுட்டேன்.
திருமணம் பற்றி நிஷாவும் என்னிடம் சொல்லவில்லை என்ற சிம்மாவை உதிரன் அணைத்து சாரிடா, “என்னை மன்னிச்சுட்டேல்ல?” என்று கேட்டான்.
வாங்க போகலாம். அவளை பார்க்கணும் என்று சொல்லி விட்டு “தேங்க்ஸ் விக்ரம்”. இப்ப தான் பாரமே இறங்கியது போல் இருக்கு என்று சிம்மா சொல்ல, விக்ரம் புன்னகைத்தான். மூவரும் ஹாஸ்பிட்டலை நோக்கி சென்றனர்.
அப்பா, “இனி அவன் விசயத்தை நீங்க பார்த்துக்கோங்க” என்று விக்ரம் சதாசிவத்திடம் கூறி அலைபேசியை அணைத்தான்.
ரித்திகாவை அனைவரும் ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர். அவளை பரிசோதித்த மருத்துவர்கள் தூக்க மாத்திரை தான். தூங்கி எழுந்திடுவாங்க. சிகிச்சை செய்திருக்கோம். அதிகமாக சாப்பிடலை. ஆனால் பார்க்க சோர்வா இருக்காங்க. இன்னும் ஒரு மணி நேரத்தில் விழித்திடுவாங்க. எழுந்தவுடன் சாப்பிட ஏதாவது குடுங்க என்று சொல்லி சென்று விட்டு சென்றார்.
நட்சத்திரா மிருளாலினியை அழைத்து விசயத்தை கூறி விட்டு மகிழனுக்கு ஆறுதலாக அவன் கையை பிடித்துக் கொண்டாள். அதே ஹாஸ்பிட்டலில் தான் இறந்த ரித்திகாவின் பெற்றோரையும் வைத்திருந்தனர். அவள் விழிக்க தான் காத்திருந்தனர்.
மிருளாலினி தமிழினியனிடம் பேருக்கென புன்னகையை உதிர்த்து விட்டு அர்சுவுடன் அறைக்கு நகர, அவள் கையை பிடித்த தமிழினியன்..”அந்த பொண்ணை உனக்கு தெரியுமா?” எனக் கேட்டான்.
ம்ம்..என்றான் சுரம் இல்லாமல்.
அவன் அனைவரையும் பார்க்க, ஆளுக்கு ஓர் இடத்தில் அமர்ந்திருந்தனர். சுவாதியை அழைத்து “அர்சுவை பார்த்துக்கோ” என்று கொடுத்து விட்டு, “நாங்க தனியா பேசணும். யாரும் வராமல் பார்த்துக்கிறியா?” தமிழினியன் கேட்டான்.
“என்ன அண்ணா பேசப் போற?” தேவையில்லாமல் எதையும் பேசி அண்ணியை கஷ்டப்படுத்திடாத என்றாள்.
இல்ல, இப்ப இவங்க போன விசயத்தை தான் பேசணும் என்றான்.
“எதுக்கு?”
ஷ்..நான் பேசிட்டு வாரேன் என்று அங்கிருந்த ஓர் அறைக்கு மிருளாலினியை அழைத்து சென்றான்.
“என்ன பண்றீங்க?” அவள் கேட்க, வா..என்று அறையை தாழிட்டு அவளருகே வர அவள் உடலோ நடுங்கியது.
நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். “அந்த பொண்ணு சிம்மா தங்கையா? அவனுக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லைன்னு தான கேள்விப்பட்டேன்?” அவள் நடுக்கம் குறைந்தாலும் அவனை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மிருளாலினி.
“மிருளா” என்று அவன் நெருங்க அவள் கண்ணீருடன் கண்களை மூடினாள். அவளது தோள்களை பற்றி கண்ணை திற. “நான் அடுத்தவன் இல்லை” என்று அவள் தாலியை எடுத்து மேலே போட்டான்.
அவள் இதழ்கள் நடுங்க, நீ என்னிடம் பேசலைன்னா..இந்த நடுங்கும் இதழ்களை என்று அவன் கைகளால் அவளது இதழை பிடித்தான். அவள் கண்ணீர் வழிய, அவன் விடாமல் பிடித்து அவள் கண்களையே பார்த்தான்.
ஆஸ்வாசமான பின் மிருளாலினி நடுக்கம் அனைத்தும் குறைந்து கையை எடுங்களேன். வலிக்குது என்றாள்.
“இதுவா வலிக்குது?” என இதழை விட்டு மீண்டும் பிடித்து கேட்டான்.
ம்ம்..என்றாள்.
சரி, “முதல்ல இங்க உட்காரு” என்று அவளை படுக்கையில் அமர்த்தி அவனும் அமர்ந்து மிருளாலினி கையை கோர்த்துக் கொண்டான்.
அவ அப்பாவோட ஊர்ல அவளோட அப்பாவிடம் எல்லாருமே பேச பயப்படுவாங்க. சிம்மா சாதாரணமா பேசுவான். இவ அதுக்கு மேல நட்சுவோட அண்ணாவை அவங்க அப்பா அடிச்சிட்டாருன்னு சண்டைக்கு போகாத குறை தான். அவள் பேச்சை கேட்டு எல்லாருமே ஆடிப் போயிட்டாங்க.
“என்னம்மா பேசுனா?” ரொம்ப நல்ல பொண்ணு. நட்சுவை இவள் தான் நம்பினாள். “ஆனால் இப்ப” என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டு மிருளாலினி அழ ஆரம்பிக்கும் முன் அவள் கன்னத்தில் தமிழினியன் அவன் இதழ்களை பதித்து விட்டான்.
அவள் வேகமாக நகர, நோ..என்று அவளிடம் கையசைத்தவன். அவளது இடையில் கையை போட்டு தன் பக்கம் நெருக்கமாக வைத்து, நீ ரொம்ப அமைதின்னு நினைச்சேன். “ஹப்பா..எப்படி பேசுற?” க்யூட்டா கூட இருந்தது என்றான்.
பள்ளியிலும் சரி, இப்ப இந்த இரு நாட்களிலும் சரி..நீ யாருடனும் அதிகமா பேசவில்லை. எனக்கு கஷ்டமா இருந்தது. இப்ப தான் நிம்மதியா இருக்கு என்று அவளது இடையில் சென்ற தமிழினியனின் கரங்களை தட்டி விட்டு மிருளாலினி எழ, வந்த தம்பிகளோ..ஓ…என ஆர்ப்பரித்தனர்.
“சுவா” தமிழினியன் கோபமாக, மிருளாலினி அவனை முறைத்தாள்.
அனைவரும் உள்ளே வந்தனர்.
அய்யோ அண்ணி, “நாங்க தொந்தரவு பண்ணீட்டோமோ?” ஒருவன் கேட்க, “என்னடா கேட்குற? தொந்தரவு செய்துட்டு பேச்ச பாரு” சுவாதி கூறிக் கொண்டே சிரித்தான்.
“கரடிகளா வெளிய போங்க” என்றான் தமிழினியன்.
“வெளிய போகணுமா?” நாங்க போக மாட்டோம் என்று அவனை சுற்றி எல்லாரும் நிற்க, மிருளாலினி மெதுவாக நகர்ந்தாள்.
ஒருவன் அவள் பாதையின் இடையே காலை விட, தட்டி கீழே விழ இருந்தவளை ஒருவன் தமிழினியன் பக்கமாக தள்ளினான். மிருளாலினி தமிழினியனையும் தள்ளிக் கொண்டு இருவரும் படுக்கையில் விழுந்தனர். அவளது மாங்கல்யம் தமிழினியனின் சட்டை பொத்தானில் சிக்கியது. தமிழினியனோ சுற்றி இருப்பவர்களை கூட கண்டுகொள்ளாமல் மிருளாலினியின் வெண்பஞ்சு தேகத்தில் குடி புகுந்து அவளை கண்களால் சிறையெடுக்க பார்த்தான்.
அவளோ, “இதை எடுக்கலைன்னா மானம் போயிடும்” என்று பயத்துடன் நிமிர கூட இல்லாமல் கண்களும் கரங்களும் படபடக்க அதை பிரிக்க முயன்றாள்.
வாவ், “என்னவொரு ரொமான்ஸ்?” நேகன் அங்கலாய்க்க, மிருளாலினியின் அம்மா உள்ளே வந்தார். அவரை பார்த்து எல்லாரும் ஓடினர்.
மிருளாலினி மெதுவாக நிமிர்ந்து பார்த்து, “அம்மா” என்று எழ, தமிழினியனின் பொத்தான் பிய்ந்து அவனது மார்பு தெரிய, அம்மா..நான்..இது..என அவள் தயங்க, அதுவரை காதல் பொங்க அவளை பார்த்துக் கொண்டிருந்த தமிழினியன் உணர்வு மீண்டு “அம்மாவா?” என்று தலையை சாய்த்து பார்த்து, “அத்தை” என்றான். அவர் வெட்கத்துடன் திரும்பி நிற்க, மிருளாலினி அவனிடமிருந்து வேகமாக எழுந்து, “அம்மா..இந்த பசங்க தான்” என்று விளக்க வந்தாள். தமிழினியன் எழுந்து நின்று, “சாரி அத்தை” என்றான்.
“அதனால என்ன மாப்பிள்ள?” என்று அவர் தன் மகளை பார்த்துக் கொண்டு வெளியேற, அம்மா..மிருளாலினி அழைத்தாள்.
“அப்புறம் வாரேன்ம்மா” என்றார். தமிழினியன் அவளருகே வந்து “கண்டினியூ பண்ணலாமா?” எனக் கேட்டான்.
யூ..யூ..யூ..எல்லாம் உங்களால தான். அம்மா தப்பா நினைச்சுக்கப் போறாங்க என்று அவள் புலம்ப, மிருளா நீ என்னோட பொண்டாட்டி. உன்னை யாரும் ஏதும் தப்பா நினைக்கமாட்டாங்க என்றான் தமிழினியன்.
டேய் பேரான்டி, “பொண்ணோட என்ன பண்ணீட்டு இருக்க?” எல்லாத்தையும் நாளைக்கு பார்த்துக்கோ என்று பாட்டி சொல்ல, “பேச தான் வந்தோம் பாட்டி” என்றான்.
உன்னோட தாத்தாவும் என்னிடம் பேச கல்யாணத்து முத நாள் தெரியாம வந்தாரு. ஆனால் நீ இங்க இருக்குறத ஊருக்கே சொல்லீட்டு இருக்கானுக உன்னோட தம்பிகள்.
“சரித்திரம் முக்கியமில்லையா பாட்டி?” என்று மிருளாலினியை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தான் அவன்.
“சரியா போச்சுடா” என்றார் பாட்டி.
மிருளாலினி கோபமாக கதவை பட்டென சாத்தினாள். அவன் புன்னகையுடன், ஏன் பாட்டி..”அவள வீட்டுக்கு போக சொல்லி இருக்கலாம்ல்ல?”
இல்லய்யா, பொண்ணு கழுத்துல ஏற்கனவே தாலி கட்டியாச்சுல்ல. அதை விடியற்காலையில் சடங்காக செய்து அதை கழற்றணுமாம். பின் தான் உங்க திருமணத்துல நீ புள்ள கழுத்துல தாலியை கட்டணும் என்றார்.
மிருளாலினி மனநிலை மாறினாலும் ரித்துவின் பெற்றோர் இறந்துட்டாங்களே! என்று தூங்க முடியாமல் தவித்தாள்.
அவள் அம்மா அறைக்கு வர, நடந்ததை விளக்கமாக கூறி மன்னிப்பு கேட்டிட, இனி நீ என்னோட பொண்ணு என்பதை விட அவரோட பொண்டாட்டியா தான் இருக்கணும்.
உன்னுடைய பழைய வாழ்க்கையை நினைத்து இப்பொழுது கிடைத்த வாழ்க்கையை தொலைத்து உன் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிடாதம்மா. பையனும் குடும்பமும் நல்லவங்களா இருக்காங்க. உன்னோட அப்பா இப்ப தான் நிம்மதியா இருக்காருடா.
சுபியை நினைச்சுக்கிட்டே மாப்பிள்ளை வாழ்க்கையையும் உன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துக்காத. நேற்று அந்த புகைப்படத்தில் மாப்பிள்ளை கண்ணில் இருந்த ஏக்கமும் வலியும் இப்ப பார்க்கும் போது இல்லாமல் இருக்கு. அவர் உன் மீது வைத்திருக்கும் காதலை பார்த்த பின் தான் எங்களுக்கு நிம்மதி. சொல்லப் போனால் உயிரே வந்தது.
அந்த கடவுள் உனக்காக கொடுத்த வரமாக அவரை பாரும்மா. தயவு செய்து உன்னை பழைய நிலையில் பார்த்தால் கண்டிப்பா நாங்க உயிரோட இருக்க மாட்டோம் என்று அவர் அழ, மிருளாலினியும் அவரை கட்டிக் கொண்டு அழுதாள்.
அவளை விலக்கி விட்டு, மிரும்மா இந்த ஆறு வருசமா உன்னுடன் நாங்கள் நேரம் செலவழிக்கவேயில்லை. உன்னை தனியே விட்டுட்டுட்டோம். நீயும் எங்களை போல கஷ்டப்பட்டிருப்பேல்ல. அதனால தம்பிக்கிட்ட சொல்லி இருநாள் மட்டும் விடுப்பு எடுத்துட்டு ஊருக்கு வாங்கம்மா. விருந்தும் கொடுத்தது போல் ஆகும். ஆனால் தம்பி வீட்ல சம்மதிப்பாங்கல்லான்னு தான் தெரியல என்று கண்ணீர் வடித்தார்.
சீருக்கு நம்ம வழக்கப்படி செய்திடலாம். ஆனால் மாப்பிள்ள விடுப்பு அதிகமா எடுக்க மாட்டார்ன்னு ஏற்கனவே சொன்னாங்க. அதான் கேட்க யோசனையா இருக்கும்மா என்றார்.
“நான் முயற்சி செய்கிறேன்ம்மா” என்றாள் மிருளாலினி.
அம்மா, “கண்டிப்பா சீர் செய்யணுமா? சுபி வீட்ல ஏற்கனவே அவங்க கேட்டதை எல்லாமே செஞ்சீங்க? இப்பவும் செய்யணுமா? அதை வேணும்ன்னா சிம்மா உதவியோட எடுத்துக்கலாமா?” மிருளாலினி கேட்க, அந்த பொருள் உனக்கு அவனை நினைவுபடுத்தும்மா. வேண்டாம்மா, என்னோட பொண்ணு அவ வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கணும் என்று கலங்கினார்.
இல்லம்மா, நான் அவனை மறந்துடுவேன். நீ கஷ்டப்படாத. என்னால நீயும் அப்பாவும் ரொம்ப அழுதுட்டீங்க. இதுக்கு மேல நீங்களும் அழக் கூடாதும்மா. நான் சந்தோசமா தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்ம்மா. சுபிக்காக இல்லை. இனி அவன் என் வாழ்க்கையில் இல்லை. நான் கண்டிப்பாக டாக்டர் சாருடன் சந்தோசமாக வாழ்வேன். நீயும் அப்பாவும் பார்த்து சந்தோசப்பட தான் போறீங்க என்றாள்.
வெளியே நின்று கொண்டிருந்த தமிழினியன் புன்னகைத்தான்.
“அது என்னடி டாக்டர் சார்? மரியாதையா அழைக்கணும்ல்ல?”
“எப்படி? உன்னை மாதிரி வாய்யா போயான்னா..” என்னோட அப்பா ரொம்ப பாவம். படித்த என் அப்பாவின் மனைவியின் பேச்சு அவருக்கு மட்டுமல்ல எனக்கும் அடிக்கடி சிரிப்பை வர வைக்குது.
“என்னடி?” உன் அப்பா படிச்சவரு. “வாத்தியாருன்னு சொல்லி காட்டுறியா?”
அம்மா, “உனக்கு உன்னோட அம்மாவை பார்க்க தோணவேயில்லையா?”
ஆமாம்மா, “ஆனால் இப்ப ரித்து தான் அவ தம்பியோட என்ன செய்யப் போறாளோ!”
போதும்டி. அவங்களுக்கு அவங்க குடும்பம் இருக்கு. சிம்மா பார்த்துப்பான்.
பாருடா, “சிம்மா மேல அதிக நம்பிக்கையா?”
ஆமாடி, பிள்ள மட்டும் உதவிக்கு வரலைன்னா எங்களால நேரத்துக்கு இங்க வந்திருக்க முடியாது. உன்னோட சித்தி பேசியதெல்லாம் பெருசா எடுத்துக்காதம்மா..
சொந்தங்கள் பற்றி தெரிந்தது தானம்மா. பரவாயில்லை. நீ வருத்தப்படாதம்மா..
அச்சோ, நாளைக்கு கல்யாணம். மணியை பாரு பன்னிரண்டாகப் போகுது. நல்லா தூங்கும்மா, அந்த பொண்ணை நட்சத்திரா அவ வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டா.
“ரித்து நல்லா இருக்கலாம்மா?”
அவ நல்லா தான்டி இருப்பா. நீ என்னை கொல்லாம விட மாட்ட போல.
ஆமா ஆமா, உன்னை நான் விட மாட்டேன். கடித்து முழுங்கப் போறேன் என்று அவள் ஆக்சன் செய்ய, அவர் புன்னகையுடன் “நீ தூங்கும்மா” என்றார்.
அம்மா, “கொஞ்ச நேரம் உன்னோட மடியில படுத்துக்கவாம்மா?”
“படுத்துக்கோடா” என்று மிருளாலினியை அவள் அம்மா மடியில் வைத்த ஐந்தாவது நிமிடம் நிம்மதியாக தூங்கிப் போனாள் நம் பொற்கொடி.
பாரு. படுத்தவுடன் தூங்கிட்டா. என் பிள்ளை இப்படி அசந்து தூங்கி எத்தனை வருடங்களானதோ தெரியல. நானாவது அவளை அடித்தாவது வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கணும் என்று புலம்பிக் கொண்டே அவள் தலையை படுக்கையில் போட்டு அவளது கூந்தலை ஒதுக்கி முத்தமிட்டு வெளியே சென்றார்.
தமிழினியன் கதவை மெதுவாக திறந்து அவளை பார்த்து விட்டு அவனறைக்கு சென்றான்.
சிம்மா, விக்ரம், உதிரன் ஹாஸ்பிட்டலுக்கு வந்த சற்று நேரத்திலே ரித்திகா கண் விழித்தாள். அவளருகே நிஷா, நட்சத்திரா, பாலா, உதிரன், சிம்மா, சித்ரா, மாறன் இருந்தனர்.
எல்லாரையும் பார்த்த ரித்திகா “அண்ணி” என்று நட்சத்திராவை அழைத்துக் கொண்டே கீழே இறங்கினாள். “மெதுவா ரித்து” என்று நட்சத்திரா அவளிடம் வந்து ரித்திகா கரங்களை தாங்கினாள்.
நட்சத்திரா கண்கள் அழுது சிவப்பேறி இருந்தது. மேம்..நீங்க என்று நிஷா, பாலாவை பார்த்ததும், அண்ணா..அவன்..அந்த பிரணவ் என்று அவள் இருக்கும் இடத்தை பார்த்து, “அவனை எங்க?” அவனிடம் எனக்கு தேவையான ஒன்று உள்ளது என்று வெளியே வர இருந்தவள் முன் உதிரன் பிரணவ்வின் அலைபேசியை வைத்தான்.
இது..இது..என்று நட்சத்திராவை விட்டு அங்கிருந்த மேசையில் சாய்ந்து நின்று அலைபேசியை எடுத்து பார்த்தாள். அது முழுவதும் பொண்ணுங்களை உடையில்லாமல் எடுத்து வைத்திருந்தான். “என்னுடைய வீடியோவை காணோம்” என்று பதட்டமாக மேலும் அவள் அலைபேசி திரையை சுழற்ற, “அது இருக்காது ரித்தி” என்றான் உதிரன்.
“ஏன்? அவன் நெட்ல போட்டுட்டானா?” என்று குரல் உடைந்து கண்ணீர் வர கேட்டாள்.
இல்லடா, உன்னோட வீடியோ யாரிடமும் இல்லை. நாங்க அதை அழித்து விட்டோம் என்று சிம்மா ரித்திகாவை அணைத்தான்.
அண்ணா, “நான் தப்பு செஞ்சுட்டேன்”. நான்..என்று கதறிக் கொண்டே வயிற்றை பிடித்து அமர்ந்தாள்.
“நான் என் குழந்தையை கொன்னுட்டேன்” என்று அழுதாள் ரித்திகா. மகிழன் அவள் சத்தம் கேட்டு உள்ளே வந்து கேட்ட நிமிடம் கதறி அழுதான்.
ரித்து, “குழந்தையா?” நட்சத்திரா அவளிடம் வந்தாள்.
அண்ணி, அவன் என்னை வீடியோ வைத்து மிரட்டி..என்று பேச முடியாமல் அழுதாள். எல்லாரும் உதிரனை பார்க்க, வலியுடன் தலை கவிழ்ந்து மடிந்து அமர்ந்தான் உதிரன். அவன் சட்டை வியர்வையில் குளித்து நீரோடையாக ஓடியது.
“அக்கா” என மகிழன் பேச முடியாமல் ஓரமாக அமர்ந்து அழுதான்.
விக்ரம் உள்ளே வந்து அனைவரையும் பார்க்க, சிம்மா அதிர்ச்சியுடன் கண்ணீர் வடிய ரித்திகாவை பார்த்தான். நட்சத்திரா அவளை அணைத்து அழ, விக்ரமை பார்த்த பாலா..சார் அவனை நீங்க சும்மா விட்ருக்கக் கூடாது. “சாவடிச்சிருக்கணும்” என்று கத்தினான்.
“ஓ..அதிலிருந்து தான் நீ அந்த மாத்திரை சாப்பிட ஆரம்பித்தாயா?” என்ற நிஷா, உன்னோட அண்ணாகிட்ட சொல்ல முடியலைன்னா எங்களிடமாவது சொல்லி இருக்கலாம்ல்ல. அவனை உன் பக்கம் வர விடாம ஏதாவது செய்து வீடியோவையும் அழித்திருக்கலாம். “எப்படி இத்தனையையும் தாங்கிக்கிட்ட?”
நானும் உதியும் எங்க கூடத்தில் லிப்டில் வைத்தே உன்னை பார்த்துட்டோம். அப்பொழுதே உன்னிடம் உதி அவன் காதலை சொல்லணும்ன்னு சொன்னான். “ஆனால் நீ அவனை யாரோ போல பார்த்த?” முதலில் கோபம் என்று தான் நாங்க இருவருமே விட்டிருந்தோம்.
“சொல்லி இருக்கலாம்ல்ல?” நிஷா கேட்க, அழுகையை நிறுத்திய ரித்திகா..”திடீர்ன்னு உங்க ப்ரெண்டுக்கு என்ன காதலாம்?” அவர் விட்டு போனதிலிருந்து தான் எல்லாமே மாறிடுச்சு. “ஒரே ஒரு வார்த்தை சொல்லிட்டு போனால் தான் என்னவாம்?” என்று கத்தினாள்.
இவருக்கு தேவையானது கிடைத்ததும் விட்டு போயிட்டார். “இவரை நம்பி அந்த கேடுகெட்டவனை பற்றி என்ன சொல்ல சொல்றீங்க? அவனை வெளியூரில் பார்த்த போது அவன் என்னை வீடியோ எடுத்ததை சொல்லணுமா? அதையும் அம்மா, அப்பாவையும் வைத்து மிரட்டி அவனுடன் படுக்க வைத்ததையா? நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்? அதனால் விளைந்த கருவையும் கலைத்து வந்த போது தான் உங்களை பார்த்தேன். என்ன சொல்லணும்?” என்று முகத்தை மூடி அழுதாள் ரித்திகா.
உதிரன் மெதுவாக நகர்ந்து அவளிடம் வந்து அவள் கரங்களை எடுத்து விட்டு, சாரி சொல்ல, உதிரனை கீழே தள்ளி விட்டாள் ரித்திகா.
ப்ளீஸ் ரித்தி, கோபப்படாத..”இந்த முறை மட்டும் என்னை மன்னிச்சிரு” என்று உதிரன் அழுதான். உதிரனை பார்த்து விட்டு மீண்டும் அனைவரையும் பார்த்தாள்.
கண்ணை துடைத்து விட்டு, அண்ணா..பெரியம்மா, பெரியப்பா, அப்பா எங்க? அவள் கேட்க, அனைவரும் மௌனமாகி போனார்கள்.
“சொல்லுங்க?” சிம்மாவிடம் அவள் வர, அனைவர் கண்களும் கலங்கியது. மகிழ், ”அப்பா எங்க?” என்று ரித்திகா அவனிடம் வந்தாள். விரைந்து ரித்திகாவை இழுத்து அணைத்த மகிழன், நம்மை விட்டு அம்மா, அப்பா போயிட்டாங்க என்றாள்.
ஏய், ”எதுல விளையாடுறடா?” அவள் கேட்க, உதிரன் எழுந்து அவள் தோளில் கை வைக்க, அவள் தட்டி விட்டாள். உதிரன் கண்ணீர் ரித்திகாவின் கழுத்தோரம் விழ, நிமிர்ந்து அவனை பார்க்க அவன் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிக் கொண்டிருந்தது.
“மாமா” என்று ரித்திகா எழுந்து எல்லாரையும் பார்த்தாள். அனைவரும் கலங்க, நட்சத்திராவால் இதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் துவண்டு, “நிஜமாக அத்தை, மாமா உயிரோட இல்லை ரித்து” என்று பெருங்குரலெடுத்து அழுதாள்.
சிம்மா பல்லை கடித்து அழுகையை கட்டுப்படுத்த விக்ரம் ஓடி வந்து சிம்மாவை அணைத்தான். வெடித்து அழுதான் சிம்மா.
இல்ல..அம்மா, அப்பாவுக்கு ஒன்றுமில்லை. இந்த ஒரு வாரமாக உடல்நிலை தேறி இருப்பதாக தான் மருத்துவர் கூறினார்கள் ரித்திகா சொல்ல, மாறன் ரித்திகா கரங்களை பிடித்து மார்ச்சுரிக்கு இழுத்து சென்றான்.
அன்னமும், பரிதியும் அழுது ஓய்ந்து களைத்திருந்தனர். அவர்கள் அருகே இரண்டு ஸ்ரெட்ச்சர் இருந்தது.
பெரியம்மா, பெரியப்பா..”அப்பா” என்று ரித்திகா கேட்க, பரிதி கண்ணீர் பொங்க ஸ்ட்ரெச்சரை பார்த்தார். அன்னம் ரித்திகாவை அணைத்து அழுதார். அவரை விலக்கி விட்டு மூடி இருந்த விரிப்பை விலக்கினாள். அவளது பெற்றோர் சடலமாக இருந்தனர். ஒரு நிமிடம் கண்ணிமைக்காது இருவரையும் பார்த்த ரித்திகாவிற்கு அவர்கள் இறந்து விட்டார்கள் என்று புத்தி உரைக்க..”அம்மா, அப்பா..எழுந்திருங்க” என்று கதறி அழுதாள். அவளது உடல் சோர்வு, மனவலிமை குன்றியதால் மயங்கி சரிந்தாள்.
“அக்கா” என்று மகிழ் அழ, தண்ணீர் கொண்டு வாங்க அன்னம் சத்தமிட்டார். ரகசியன் அங்கே வர, அவனை நிறுத்திய பாலா..உங்க அண்ணா மேரேஜ் வச்சிட்டு இங்க நீ வராத. கிளம்புங்க. நாங்க பார்த்துக்கிறோம் என்றான்.
ஆனால் பாலா..அவன் பேச..கிளம்புங்க.
“ரொம்ப தேங்க்ஸ்” என்று சிம்மா ரகசியன் கரங்களை இறுக பற்றினான். அவன் விக்ரமை பார்க்க, அவன் கண்ணை மூடி திறந்து கிளம்ப சொல்லி கண்ணை காட்டினான். தமிழினியனின் சொந்தங்கள் கிளம்பினார்கள். திலீப் மட்டும் ரித்திகாவை பார்த்துக் கொண்டே சென்றான்.
விழித்து எழுந்த ரித்திகா தன் அம்மா, அப்பாவை பார்த்து கதறி அழுதாள். நட்சத்திராவும் சித்ராவும் அவளருகே இருந்தனர்.
அண்ணி, இவங்களுக்காக தான் எல்லாமே செஞ்சேன். எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன். இப்படி இவங்க எங்கள அநாதையா விட்டு போகவா என்னையே நான் விட்டேன் என்று கதறி அழுதாள். தூரத்தில் இருந்து புகழேந்தியும், அம்சவள்ளியும் இவர்களை பார்த்தனர்.
அன்னம் எழுந்து வந்து, “நாங்க உயிரோட தானடி இருக்கோம். அநாதைன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுற?” என்று அவளை அணைத்துக் கொள்ள, பெரியம்மா…”எல்லாமே போச்சு..எல்லாமே போச்சு..” என்று தலையில் அடித்து கதறி அழுதாள் ரித்திகா. மகிழன் அழுது கொண்டே இருவரையும் அணைக்க, அன்னம் இருவரையும் தாங்கிய படி கண்ணீருடன் கணவனை பார்த்தார்.
ஏம்மா, “இந்த பொண்ணுக்காக தான் இவ்வளவு நேரம் வச்சிருந்தீங்களா?” என்ன செய்யணுன்னு ஆகுற வேலைய பாருங்க என்றான் வார்டு பாய்.
“நாம ஊருக்கு போகலாமா?” அன்னம் பரிதியை பார்த்து கேட்க, வேண்டாம் பெரியம்மா. “அவங்கள இங்கேயே” என்று ரித்திகா அழுது கொண்டே அங்கிருந்து நகர்ந்து மருத்துவமனைக்கு வெளியே வந்தாள். விக்ரம் யாருடனே பேசிக் கொண்டிருந்தான்.
ரித்து, “எங்க போற?” சிம்மா, உதிரன், நிஷா, பாலா, மகிழ் ஓடி வர, அதற்குள் ரோட்டை பார்த்து நடுரோட்டில் வந்து நின்றாள். டேங்கர் லாரி ஒன்று அவளை மோதும் சமயத்தில் அவளை தள்ளி விட்டு காப்பாற்றினான் விக்ரம்.
விழுந்து எழாமல் அப்படியே ரித்திகா அழுது கொண்டிருக்க, அவளை இழுத்து நிற்க வைத்து ஓங்கி அறைந்தான் விக்ரம்.
விக்ரம்..சிம்மாவும், ஏய்..என்று உதிரனும் சத்தம் கொடுக்க, விக்ரம் அவளை திட்டிக் கொண்டிருந்தான். எல்லாரும் அவர்களிடம் வந்தனர்.
உன்னை காப்பாற்ற எத்தனை பேர் வந்தாங்க பார்த்தேல்ல. இப்ப கூட உன் பக்கம் இத்தனை பேர் இருக்காங்க. நிறைய இழந்திருக்கன்னு புரியுது. “ஆனால் உனக்காக உயிரோட இருக்கிறவங்கல்ல துடிக்க வைக்கிற?”
“உன்னோட தம்பி என்ன செய்வான்? யோசித்தாயா?” உன்னோட அண்ணா, அவனோட அம்மா, அப்பா, உனக்காக துடித்து ஓடி வந்து தலையில் அடிபட்டு காயத்துடன் நிற்கும் உன் மாமா, உன் கஷ்டத்தை அவங்க கஷ்டமாக எண்ணும் உன்னோட அண்ணி, உன்னோட ப்ரெண்ட்ஸ். யாரும் உன் கண்ணுக்கு தெரியல. செத்து போனவங்க மட்டும் தான தெரியுறாங்க.
ஆமா, உன்னை மாதிரி எல்லாம் இருப்பவர்களுக்கு எப்படி உறவின் அருமை தெரியப் போகுது. என்னை போல் வாழ்ந்தால் தான தெரியும் விக்ரம் கத்தினான். விக்ரமை நினைத்து அன்னம் பரிதி மனக்கலக்கத்துடன் அவனை பார்த்தனர்.
விக்ரம் பேசும் வரை அவனது கண்களையே பார்த்துக் கொண்டிருந்த ரித்திகா, பரிதியை பார்த்தாள். என்ன நினைத்தாலோ விக்ரமை கட்டிக் கொண்டு, “சாரி அண்ணா, இனி இது போல் செய்ய மாட்டேன்” என்று அழுதாள்.
அக்கா, அவரில்லை..சிம்மா அண்ணா இங்க இருக்காங்க என்று மகிழன் ரித்திகாவை இழுத்து சென்றான். உதிரன் விக்ரமை பார்த்து விட்டு ரித்திகாவையும் சிம்மாவையும் பார்த்தான். எல்லாரும் பார்த்துக் கொண்டனர்.
ரித்திகாவின் அம்மாவிற்கு செய்ய வேண்டியதே அங்கிருந்த இடுகாட்டில் செய்து காரியம் முடித்து வந்தனர். ரித்திகா, அன்னம், நட்சத்திரா, சித்ரா, நிஷா எல்லாரும் ஹாஸ்பிட்டலிலே இருக்க, வந்தவர்கள் அனைவரும் நட்சத்திரா வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தனர்.
ரித்து, “வீட்டுக்கு போகணும். நாளை வந்து உன்னை பார்க்கவா?” பாலா கேட்க, அவள் மெதுவாக தலையசைத்தாள். நிஷா பாலாவை ஏக்கமாக பார்த்துக் கொண்டே உதிரன் அருகே செல்ல, “நிஷா உன்னை யார் அங்கே போன சொன்னது?” வா..என்று பாலா கையை நீட்டினான்.
நிஷா கண்ணை கசக்கி பார்க்க, “உங்கள தான் கூப்பிடுறான்” நட்சத்திரா சொல்ல, பாலா..”என்னையா கூப்பிட்ட? உனக்கு தான் என்னை பிடிக்காதுல்ல?”
“யார் சொன்னா பிடிக்காதுன்னு? நம்ம வீட்டுக்கு போகலாமா?” பாலா இரு கரங்களையும் அணைப்பது போல் நீட்ட, ஓடிச் சென்று அவனை அணைத்து அழுதாள் நிஷா. ரித்திகா அவர்களை பார்த்து விட்டு சிம்மாவுடன் காரில் ஏறினாள்.
நேரமாகிடுச்சு. “பார்த்து போங்க” என்று உதிரன் கூற, “ஓ.கே சார்” என்று பாலா சொல்ல, அனைவரும் காரில் சென்றனர்.
பாலா, நான் உன்னை விட ஒரு வயது பெரியவள். என்னோட அப்பா இந்த ஆராய்ச்சி கூடத்தை ஆரம்பிக்க உன் அப்பா உதவியதாக கேள்விப்பட்டேன். அதனால உன் அப்பாவுக்கு என்னை பிடிக்காமல் போயிடுமா? நிஷா கண்ணீருடன் கேட்க, அதெல்லாம் இல்லை. அவருக்கு கண்டிப்பாக உன்னை பிடிக்கும்.
“உன்னோட குடும்பத்தில் எல்லாருக்கும் என்னை பிடிக்குமா?” நிஷா கேட்க, ம்ம்.என்றான். “உனக்கு என் மீது காதல் இருக்கா? உனக்கு ரித்துவை தானே பிடிக்கும்?”
அவளை பிடித்தது. ஆனால் இப்ப உன்னை பிடிச்சிருக்கு. “அப்ப நாளைக்கு என்னை பிடிக்காமல் போயிருமா?”
“என்ன இது? பைத்தியம் மாதிரி மேம் பேசுறீங்க?” என்று அவன் கை வளைவுக்குள் அவளை இழுத்தான். அவள் கண்கள் நேராக அவனை பார்க்க, “ஆமா எப்படி என்னை வளைச்சீங்க?” பாலா கேட்க, “என்ன?” நிஷா கோபமானாள்.
“நான் உன்னை என்ன செய்தேனாம்?” என்று கோபமாக நகர்ந்தாள் நிஷா.
“கோபமா?” என்று நிஷாவை பாலா தூக்க, “விடுடா இடியட்” நான் உன்னை மயக்கி தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு இல்லை. எனக்கு உன்னை பிடித்திருந்தது. ஆனால் எல்லாரிடமும் போல எல்லைக்குள் தான பழகினேன்.
ஆமா, “ஆனால் இனி அப்படி இருக்க முடியாதே!”
“ஏன்?” நிஷா கண்கள் கலங்க, நடுவீதியில் வைத்து நிஷாவின் இதழ்களை சிறைபிடித்தான் பாலா.
கார் வெளிச்சம் ஒன்று அடித்து வீச, இருவரும் அவர்களின் முத்த உலகிலிருந்து வெளி வந்து காரை பார்த்தனர். வா நிஷா பேபி என்று பாலா நிஷாவை காரில் ஏற்றினான்.
“என்னடா பாலா?” பொண்ணு ஓ.கே தான். எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. “நீ நம்ம கம்பெனிய பார்த்துக்கப் போறீயா? இல்லையா?” அவனது இரண்டாவது அண்ணன் காரை செலுத்திக் கொண்டே கேட்க, அது என் மாமனார் பதிலில் தான் உள்ளது.
“என்னை எப்படி எல்லாரும் பார்த்தீங்க? அதுவா?” இன்று காலை தான் பார்த்தோம். புகைப்படங்கள் அனுப்பி இருந்தான். அதிலே உன்னை எல்லாருக்கும் பிடிச்சு போச்சு.
“பார்த்தவுடன் எப்படி பிடிக்கும்?” நிஷா பாலாவை பார்க்க, அவன் இதழ் குவித்தான். “ராஸ்கல்” என்று அவனை செல்லமாக நிஷா அடித்தாள்.
அவன் நடப்பதை ஏற்கனவே வீடியோவாக காட்டிக் கொண்டிருந்தான். “எங்க குடும்பம் எல்லார் போகஸூம் உன் மீது தான்” என்று சொல்லிக் கொண்டே பாலாவை பார்த்து சிரித்தான்.
அண்ணா, அவ அடிக்கிறா. “நீ சிரிக்கிற? உன் தம்பி மேல உனக்கு பாசம் இவ்வளவு தானா?” என நெஞ்சை பிடித்துக் கொண்டு சிவாஜியின் நடிப்பை கையில் எடுத்தான் பாலா. இருவரும் சிரித்தனர்.