4

தள்ளுவண்டி கடை வியாபாரத்தை முடித்து கடைக்கட்டிக்கொண்டிருந்தான் பரத்.  உடன் அவனுக்கு உதவியபடி நின்றிருந்த அண்ணாமலையிடம், “இன்னைக்கு இத்தினி மீந்துடுச்சேடா! என்ன பண்ணலாம்? வழக்கம் போல பண்ணிடலாமா?” என்று கேட்டான் பரத்.

திரும்பி அவன் கையில் இருந்த பாத்திரத்தை பார்த்தான் அண்ணாமலை. கணிசமான அளவு சிக்கன் பக்கோடா மீந்திருந்தது. அன்று ஏனோ இரவு வியாபாரம் சற்று டல் தான். அதனால் ‘சரி’ என்பது போல அவன் தலையாட்ட, “சரி, அப்ப நீயே கொண்டுப்போய் கடைல குடுத்துடு! நான் எல்லாம் எடுத்து வச்சுட்டு போறேன்!” என்றான் பரத்.

மறுத்து சொல்ல நிமிர்ந்தவன், பரத்தின் சோர்வாக முகம் பார்த்து, “சரி” என்று மீதமானதை கட்டிக்கொண்டு சைக்கிளில் கிளம்பினான். அங்கிருந்து சரியாக ஐநூறு மீட்டர் தொலைவில் சற்று ஒதுக்குபிரமான இடத்தில் அந்த இருட்டிய பொழுதிலும் படு சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது அந்த மதுபானக்கடை.

வண்டியை கடையின் பக்கத்தில் நிறுத்திவிட்டு, பொட்டலத்தோடு அந்த கூரைக்கடைக்குள் நுழைந்தான் அண்ணாமலை. அவனைக்கண்டதும் கடையின் முதலாளி சிரித்தமுகமாய் வரவேற்றார்.  கையில் இருந்ததை கொடுத்தவன், “செஞ்சதும் இருக்கு, கொஞ்சம் பொரிக்காம மசாலாவோடவும் இருக்கு” என்றிட, சரியென பெற்றுக்கொண்டவர், “நல்ல நேரம் வந்த அண்ணா… இந்த குடிகார பயலுங்க வேணுன்னே ஓரண்டை இழுத்துக்கிட்டு இருக்கானுங்க கறி தான் வேணுன்னு! மீனு குடுத்தா தொண்டைல இறங்க நோக்காடாம்” என்றவர், சர்வரிடம் கொடுத்து, யாருக்கு என்ன வேண்டும் என கேட்டு கொடுக்க சொன்னார்.

அதோடு கிளம்ப நின்ற அண்ணாவை விடாப்பிடியாக, ‘ரெண்டு பரோட்டாவாது தின்னுட்டு போ அண்ணா!’ என வம்படியாக இழுத்து உள்ளே அமர்த்தி வைத்தார்.   அவர் சொல்லுக்காக வந்து அமர்ந்த பின்னர் தான் அங்கே கூட்டமாக அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த வீரப்பன் அவன் கண்ணில் பட, சட்டென ஒரு வித எரிச்சல்.

ஏழெட்டு பேருக்கு மேல் கன்னாபின்னாவென அமர்ந்து அந்த இடத்தையே ஆக்கிரமித்திருந்தனர். போதாததற்கு சர்வர்களை வேறு ஏக பேச்சுகளில் விரட்டிக்கொண்டிருக்க, அங்கிருந்த மற்ற குடிகாரர்களுக்கே கோபம் வரும் அளவுக்கு இருந்தது அவர்கள் நடத்தை!

அங்கேயே சுட சுட பரோட்டா போடுவதால், அண்ணாமலையின் முன்னே எண்ணெய்யில் குளித்த பொரித்த பரோட்டாக்கள் சுட சுட பரிமாறப்பட்டு அதன் மேலே கறிக்குழம்பு ஊற்றப்பட்டது. அதைக்கண்டு தூரத்தில் இருந்த முதலாளி, “நல்லா வயிறு நிரம்ப திங்கணும் அண்ணா, சொல்லிட்டேன்!” என்று உரிமையாய் சொல்ல, அந்த குரலில் திரும்பினான் வீரப்பன்.

அதே கணம் அண்ணாவும் வீரப்பனை முறைத்துப்பார்க்க,  வீரப்பனுக்கு தன் கூட்டாளிகளுடன் இருப்பதில் தைரியம் கூடிப்போனது. தெனாவட்டாக சட்டை காலரை பின்னுக்கு தூக்கி விட்டவன், கால்கள் இரண்டையும் மேஜை மீது தூக்கி போட்டு திமிராய் அமர்ந்தான்.

பரோட்டாவை பிய்த்துப்போட்டு சால்னாவை கொட்டி பிசைந்து, ஒரு வாய் அள்ளி வைத்த அண்ணாவுக்கோ, ‘எவ்ளோ அடிச்சாலும் இந்த நாய் அடங்க மாட்டேங்குதே!’ என்று தான் தோன்றியது.

சர்வர் சுட சுட பொறித்த லெக் பீஸ் சிலதை வெங்காயம் எலுமிச்சையுடன் கொண்டு வந்து வீரப்பனின் டேபிளில் வைக்க, முகர்த்து பார்த்து முகத்தை சுளித்த வீரப்பன், “ஹும்! என்ன கருமம் டா இது? பொண நாத்தம் அடிக்குது? எவனாது கெட்டுப்போனதும் அழுகிப்போனதுமா பாதி விலைக்கு கொண்டு வந்து கொடுத்தா இளிச்சுக்கிட்டு வாங்கிட்டு வந்துடுவீங்களோ?” என்றான் எகத்தாளமாய், ஓரக்கண்ணில் உண்டுக்கொண்டிருந்த அண்ணாமலையை பார்த்தபடி.

இவன் பேச்சில் அவன் கை பிசைவதை ஒரு நொடி நிறுத்த அது வீரப்பனுக்கு இன்னும் தெம்பு சேர்த்தது.

“கண்ட கருமாந்திர கடைல இருந்தும் வாங்கிட்டு வராம, வாங்குற காசுக்கு உண்மையா உழைங்கடா *** பசங்களா…” அண்ணாவை பார்த்துக்கொண்டே சொன்னான் வீரப்பன்.

அவன் நோக்கம் புரிய, அவனது கூட்டாளிகளும் சேர்ந்து இப்போது கறியை மட்டம் தட்ட ஆரம்பிக்க, தனது காலியான இலைக்கு மூன்றாவது பரோட்டாவை எடுத்துக்கொண்டு வந்த பையனிடம் ‘போதும்’ என சைகை காட்டிய அண்ணா, ஒரு டம்ளர் நீரை முழுக்க குடித்துவிட்டு திருப்தியான ஏப்பத்துடன் அங்கிருந்து தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

வீரப்பனுக்கு ஏறியிருந்த போதை கூட இறங்கிப்போனது. அவனை சீண்டி விட்டு சண்டைக்கு வருபவனை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அடித்து நொறுக்கலாம் என அவன் மணல் கோட்டை கட்டியிருக்க, இவன் அமைதியாக போனதில் அத்தனை கடுப்பானது.  இவன் கூட்டாளிகள் நிதானத்தில் இருந்தால், அண்ணாவை பார்த்த கணமே குறுக்கு சந்தில் புகுந்து ஓடிவிடுவார்களே! இப்போது கிடைத்தது போன்ற அருமையான சந்தர்ப்பம் இனி எப்போது வாய்க்குமோ என்ற ஏமாற்றமும் எதிர்ப்பார்ப்பும் சேர, அவன் போன திக்கை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் வீரப்பன்.

***

“ஏய்யா.. தடுக்கி விழுந்தா கடலை வச்சுக்கிட்டு இந்த விலை விக்கிற?” அன்று காலையிலேயே தன் வீட்டின் முன்னே வீதியில் நின்று, சைக்கிளில் மீன் விற்றுக்கொண்டு செல்பவனிடம் சண்டைக்கு நின்றாள் நிம்மதி.

“ஹான்? அப்போ நீங்களே தடுக்கி விழுந்து மீனை புடிச்சுக்க வேண்டியதுதானே?” அவனும் சளைக்காமல் பேசினான்.

“என்ன நக்கலா? இத்துனூண்டு பாறைக்கு இரநூறு எல்லாம் ஜாஸ்தி… நூத்தம்பது போட்டுக்கோ!” என்றவள், அவளுக்கு தேவையான அளவில் இருக்கும் மீனை கூடையில் இருந்து பொறுக்க ஆரம்பித்தாள்.

“யம்மா ஜிலேபியே நூத்தெழுவதுங்குறேன்… நீ பாறையை இரநூருக்கு கேக்குறியே!? வேணுனா மத்தி இருக்கு, நூத்தி முப்பது, உனக்காண்டி நூறுக்கு தரேன், வாங்கிக்க!” என்றான் அவன் இறங்கி வந்து.

“அய்ய யப்பா! தருமரு தான் நீ! உன் கொடை ஒன்னும் எனக்கு வேண்டாம்!” என்று சிலுப்பியவள், “ம்கும், மத்தியை தரானாமாம்! எதுக்கு காணும் அது!” என்று கேட்கும்படியே முனகியவள், “உன் மீனை நீயே வச்சுக்க, நான் கடல்ல நீச்சலடியே மீன் புடிச்சுக்குறேன்!” என்று வீட்டுக்குள் செல்லப்போக,

“என்னம்மா நீ? மொதோ வியாபாரம், இப்படி கழுத்தறுப்பு பண்றியே!” என்றவனும், “வா வா, கூட கொறைச்சு போட்டு தாரேன்” என்றான்.

“ஒன்னும் வேணாம் போ! என் ஆளு கடையை விட்டுட்டு, மீனு திங்க ஆசைப்புடிச்சு வெளில வாங்க நினைச்சேன் பாரு! என்ன சொல்லணும்!” என்றாள் வீட்டிற்குள் நடந்தபடி.

“அட வாம்மா! ஜிலேபி விலைக்கே பாறை தரேன், வாங்கிக்க!” என்று கத்தினான் முதல் வியாபாரத்தை விடக்கூடாது என்று.

அவன் கத்தலில் உள்ளே இருந்த ‘தாஸ்’ தான் வெளியே வந்தார்.

“ண்ணே… உன் பொண்ணுட்ட சொல்லுண்ணே! குறைச்சு தரேன்னு சொல்ல சொல்ல கேட்காம உள்ள போயிட்டு!” என்று அவன் சொல்ல, “அவ வேண்டானுட்டா அதோட அவ்ளோதான் தம்பி, நீ போய் வியாபாரத்தை பாரு!” என்றார் அவர். அவனோ வாய்க்குள்ளேயே வசைப்பாடிக்கொண்டு, “மீனு மீனே…” என சத்தம் கொடுத்துக்கொண்டு சென்றான்.

அவன் போனதும் உள்ளே சென்றவர், மகள் அடுப்படியில் எதையோ உருட்டுவதை பார்த்து, “ஆசைப்பட்டு தானே வாங்க போன? பத்து இருவது கூடக்குறைய போனாத்தான் என்னவாம்?” என்றார் மகளிடம்.

“ப்ச் ப்பா! அவன் வேணுன்னே விலை சேத்தி சொல்றான்ப்பா! ஆழியூர் கடைல பாறை நூத்தியம்பது தான்! நாவப்பட்னம் போனா இன்னும் மலிவா கிடைக்கும்!” என்று சொல்ல,

“ஆழியூர்க்கு போக வர வண்டிக்கு பெட்ரோல், நாவபட்னம் போய் வர பஸ் காசு, நேரம் எல்லாம் கூட்டி கழிச்சு பாரு இவன் சொல்ற விலையே தேவலாம்ன்னு தோணும்!” என்றார் அவர்.

“அதுக்கூட தெரியாதாப்பா எனக்கு?” என்றவள், “அவன் வச்சுருக்க மீனெல்லாம் ரொம்ப பொடுசுப்பா! காசுக்கேத்த தோசை இருந்தா யாரு மாட்டேங்க போறாங்க?” என்றாள். மகள் சொல்வதும் நியாயம் தான் என்பதால், அதற்குமேல் வாயாடாமல் அங்கிருந்து மெல்ல நழுவி அந்த தெரு டீக்கடையை வந்து சேர்ந்தார் தாஸ்.

அவர் கூட்டாளிகள் ஓரிருவர் ஏற்கனவே அங்கே நின்று ஊர்நடப்பு பேசிக்கொண்டிருக்க, ஒரு டீயை சொல்லிவிட்டு தானும் அந்த ஜோதியில் ஐக்கியமானார் தாஸ்.

அவரை கண்டதும், “என்ன தாஸு, காலிலேயே மதி பாப்பா ஓரண்டை இழுத்துச்சு போல?” என்று கேட்டார் ஒருவர்.

“ஆமா, என் பொண்ணு காரணமில்லாமதான் சண்டைக்கு நிப்பா பாரு!?” மகளை குறித்த பெருமையுடன் சடைத்தார் தாஸ்.

“காரணமிருக்கோ  இல்லயோ? என்ன நடந்துச்சுன்னு நீ முதல்ல விளாவாரியா சொல்லு கேட்போம்!” காலையிலேயே வடைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியாய் கதை கேட்க காதை தீட்டினார் தாஸின் நண்பர்.  தாஸும் நடந்த சம்பாஷணையை எடுத்து சொல்ல, கேட்டவர்களோ, “எட்டிப்புடிச்ச மாறி தொறமுகம் (துறைமுகம்) இருந்தாலும் நம்ம ஊருக்கு மட்டும் நல்ல மீனு திங்க வாய்க்கவே செய்யாதே! இங்கிருந்து மெனக்கெட்டு பயணம் பண்ணா வேணா நல்லதா சிக்கும்” என்றார் ஒருவர்.

அதையே ஒத்து ஊதியவரோ, “நம்ம ஊரு குளத்துல மீனை புடிச்சு அதை வெளியூருக்கு அனுப்புறானுவளே ஒழிய, நம்மாளுவளுக்கு தரணும்ன்னு தோணுதா அவனுங்களுக்கு? பத்து ரூவா கூட கிடைச்சா, பன்னி மேய்க்க கூட போவானுங்க!” என்று நடப்பதை பகடி போல பேசினார் ஒருவர்.

“அதை சொல்லு ஈஸ்வரா… நம்ம குளத்துல புடிக்குற மீனே நம்ம ஊருக்கு காணும்! ஆனா, காசாசப்புடிச்சு வெளியூருக்கு லோடு அனுப்புறான் அந்த பாண்டியன்” அந்த ஊர் குளத்தை குத்தகைக்கு எடுத்திருப்பவனை பற்றி தான் பேசிக்கொண்டிருந்தனர்.

“சேர்க்கை அப்படி… அந்த வீரப்பன் வெட்டிமுண்டத்தோட சேர்ந்தா புத்தி எப்படி போகும் அந்த பாண்டியனுக்கு!” தாஸ் கரித்துக்கொட்டினார்.

“இந்த முறை ஏலம் அவனுக்கு போகக்கூடாது… வேற எவனாது எடுத்தா தேவலாம்!” என்று ஒருவர் சொல்ல, “நம்ம பேசி மட்டும் என்ன ஆகப்போது சொல்லு!” என்று சலித்தார் மற்றொருவர்.

இப்படியே இவர்கள் பேச்சு நீள, அங்கே தாஸ் வருவதை பார்த்து ‘தன்னை கண்டால் பேச்சில் பிடித்துவிடுவாரே’ என்ற பயத்தில் அப்படியே கடைக்கு பின்னே ஒதுங்கி நின்று டீயை ருசித்துக்கொண்டிருந்த அண்ணாமலையின் காதில் அவர்கள் பேச்சு அத்தனையும் விழுந்தது.

முதலில் நிம்மதி எதற்காக சண்டையிட்டாள் என்று அறிந்துக்கொள்ள ஆர்வமே இன்றி ஆர்வத்துடன் காதை தீட்டிக்கொண்டு நின்றிருந்தவனுக்கு, அவர்களின் அடுத்த பேச்சு அப்படியே அவனை உள்ளிழுத்து எதற்கோ வித்திட ஆரம்பித்தது.