3

“அண்ணே, நெஞ்சு பீசு ஒன்னு, காலு ஒன்னு!” இரு பயல்கள் வந்து நிற்க, “சாப்பிடவா? பார்சலா?” என்று கேட்ட பரத்தின் கரங்கள் ஏற்கனவே கேட்டவர்களுக்கு தட்டில் சில்லி சிக்கனை அளவாய் எடுத்து வைத்துக்கொண்டிருந்தது.

ஒரு பெரிய மரத்தின் நிழலில் தள்ளுவண்டி நிறுத்தி, அதில் மஞ்சள் நிற குண்டு பல்பு வெளிச்சம் கொடுக்க, எண்ணெய் சட்டியில் சுட சுட சிக்கனை பொரித்துக்கொண்டிருந்தான் அண்ணாமலை.

தட்டுகளில் சிக்கனை வைத்துவிட்டு அரிந்து வைத்த வெங்காயமும், நான்காய் கீறிய எலுமிட்சையில் ஒரு துண்டும் வைத்து கொடுக்க, அதை நந்தா அங்கே காத்திருப்பவர்களுக்கு கொண்டு சென்று கொடுத்தான். மரத்தை சுற்றி இருந்த இடத்திலேயே சில பிளாஸ்டிக் நாற்காலிகள் வாடிக்கையாளர்களுக்காக இருந்தது.

ஐயப்பனும் சேகரும் காலையில் நேரமே எழுந்து பால் கறக்கும் ஆட்கள் என்பதால் இரவு கடைக்கு நிற்காமல், நேரமே உறங்கிவிடுவர்.

“அஞ்சு காலு, மூணு நெஞ்சு!” என்று பரத் சொல்ல, சில்லியை அரிக்கரண்டியில் எடுத்து சல்லடை தட்டில் கொட்டியவன், அவன் சொன்ன அளவில் துண்டுகளை எடுத்து போட்டு பொரிக்க ஆரம்பித்தான்.

“ம்கும்…!!!” மெதுவாய் சிறு கனைப்பு காதை அடைய, அதுவரை இலகுவாய் நின்றுக்கொண்டிருந்த அண்ணாவின் உடல் இறுகிக்கொண்டது.

‘வந்துட்டா!’ அவன் மனம் சொல்ல, கையில் இருந்த கரண்டி வழுக்குவதை போன்றொரு பிரம்மை!

கெட்டியாய் பிடித்துக்கொண்டு, கண்ணை அடுப்பை விட்டு அகற்றாமல் சற்று அசௌகர்யமாய் அவன் நிற்க, “கஷ்டமர இப்படி தான் காக்க வைப்பீங்களா?” என்றாள் அதட்டலாய்.

அவள் குரலில் பரத் திரும்ப, “ஐம்பது ரூவாக்கு சில்லி!” என்றாள்.

பாத்திரத்தை சாய்த்துப்பார்த்தான். முப்பது ரூபாய்க்கு தான் இருந்தது. அடுப்பில் இருப்பதை எடுத்துவிட்டு, அடுத்த ரவுன்ட் போட்டு பொரித்து தான் அவளுக்கு கொடுக்க வேண்டும். எப்படியும் இருபது நிமிடங்கள் எடுக்கும்!

பரத், “முப்பதுக்கு போடவா!?” என்று வினவ, “என்ன வியாபாரம் பாக்குற நீ!? முப்பதுக்கு வரவனுவள, ஐம்பதுக்கு வாங்க வைக்கணும்… நீ என்னான்னா, ஐம்பது கேட்குறவள, முப்பதுக்கு இறக்குற!” என்று அதட்ட,

“ஏ, அவ்ளோதான் இருக்குந்த! அடுத்து போட்டு எடுத்து தான் தரனும்!” பரத் சொல்ல, “ஒரு சேர் எடுத்து கொடு, இங்கேயே இருந்து வாங்கிட்டு போறேன்!” என்றதும், பரத் ஒரு சேரை எடுத்து நீட்ட, அவள் அண்ணாவின் பக்கமாய் அதைப்போட்டு அமர்ந்துவிட்டாள்.

இத்தனை நேரம் இல்லாமல் வியர்த்து கொட்டியது அண்ணாவுக்கு. திரும்பி பரத்தை முறைத்தான். அவனை பார்க்கும் அளவுக்கு நேரமில்லாமல் வந்தவர்களை கவனித்துக்கொண்டிருந்தான் பரத்.

‘அண்ணாமலை…அண்ணாமலை…

ஆசை வச்சேன், எண்ணாமலே!’ மெதுவாய் மிக மெதுவாய் அவள் முனுமுனுக்க, ‘ஆரம்பிச்சுட்டா!’ என்று நினைத்தான் அவன். கரண்டி பிடித்த கரங்கள் லேசாக நடுங்கியது.

‘ஆசையில, சொக்குதைய்யா என் வயசு!

உன் மீசையில சிக்குதையா என் மனசு!’ நெற்றியில் இருந்து வியர்வை அருவியே கொட்ட, தன் அருகாமையில் படபடக்கும் அவனைக்காணக்காண தெவிட்டவில்லை மதிக்கு!

அவனை இன்னும் சீண்டும் பொருட்டு, எழுந்தவள், இருவருக்கும் இடையே இருந்த இரண்டடியை மெல்ல குறைத்துக்கொண்டே,

‘உன் காதுக்குள்ள காதல் சொல்லும், கண்ணா…என் கொலுசு!’ என்று முணுமுணுத்து முடிக்க முதல் கரண்டியை தூக்கி பக்கத்தில் போட்டவன்,

“டேய், நான் போறேன்… நீங்க பார்த்துக்கோங்க!” என்றுவிட்டு நொடிக்கூட நிற்காது, லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு விறுவிறுவென போக, செல்பவனை திகைத்துப்பார்த்த பரத், “செருப்பாது போட்டுட்டு போடா!” என்று கத்தினான். காதில் வாங்க அவன் இருந்தால் தானே!? நாலு கால் பாய்ச்சலில் தெருவையே தாண்டிவிட்டான்.

நிம்மதி அவனைக்கண்டு சிரித்துக்கொண்டு நிற்க, “வியாபார நேரத்துல ஏந்த வந்து இம்சை பண்ற நீ!?” என்றான், கரண்டியை எடுத்துக்கொண்டு.

சிரித்தவளோ, “சரி வேலையை பாரு, நான் வரேன்!” என்று போக, “ஒய் ஐம்பதுக்கு சில்லி கேட்டியே! அஞ்சே நிமிஷம் பொறு!” என்றுவிட்டு வேகமாய் வேலைப்பார்க்க, “ம்கும், அதை நீயே தின்னு!” என்றவள் போய்விட, ‘இதுங்களோட….!’ என்ற கடுப்போடு அரக்க பறக்க அவனும் நந்தாவும் சேர்ந்து வேலையை பார்த்தனர்.

***

ஞாயிறு என்றாலே அவனுக்கு நிற்க உட்கார நேரம் கிடைக்காது. அந்த அளவு அவனுக்கு வேலை இருந்துக்கொண்டே இருக்கும். கடை முடிக்கவே மதியம் ஆகிவிடும்!

அன்றும் கூட ஞாயிறு என்பதால் அவன் சிட்டாய் வேலை செய்ய, அவன் ஓய்ந்து அமர்ந்துபோது மதியம் ஒன்றை தொட்டிருந்தது. வடித்த கஞ்சியை ஒரு சொம்பு நிறைய குடித்து முடித்து ‘ஹாப்பா’ என்று சாய்ந்து அமர்ந்தான். இதற்குமேல் யாராது ஒருவர் இருவர் தான் வருவர்.

உடன் இருந்த சேகரை வீட்டுக்கு போக சொல்லிவிட்டு, அவன் மட்டும் கடையில் இருந்தான். எப்போதும் போல அவனுக்கு பிடித்த ரேடியோ அவனுடன் துணைக்கிறுக்க, அவ்வப்போது எட்டி எட்டி வீதியை பார்த்துக்கொண்டிருந்தான். இன்னும் சிறுது நேரத்தில் கடையடைத்துவிட்டு கிளம்பிவிடுவான்.  ஆனாலும், கண்கள் வீதியில் யாரையோ தேடியது.

‘அண்ணாமலை…அண்ணாமலை…!’ அழகான குரலில் பாடல் கேட்க, ‘அவளோ?’ என விருட்டென நிமிர்ந்தவனுக்கு அதன்பிறகு தான் பாடல் ரேடியோவில் ஒலிக்கிறது என்று புரிய, ஏதோ மாதிரி இருந்தது. தலையை அழுந்த கோதிக்கொண்டான்.

எஸ்.பி.பி, ‘அன்னக்கிளி அன்னக்கிளி!’ என்று உருக, “அன்னகிளியா அது? சரியான பெருச்சாளி!” அவன் மனம் சொல்ல, அவனுக்கே சிரிப்பாக வந்தது.  அவன் முகம் கூட அவன் சிரிப்பை பளிச்சென காட்ட, “உலக அதிசயமா இருக்கே!” என்ற குரலில் பட்டென எழுந்தவன், அதைவிட வேகமாய் ரேடியோவை நிறுத்த,

“இப்போ எதுக்குய்யா அதை அமத்துன?” என்றாள் மதி கேள்வியாய்.  தெருவே வெறிச்சோடி கிடந்தது. அவனுக்கு உடன் வேறு ஒருவரும் இல்லை. அவளும் அவனும் மட்டுமே! பேசியே ஆக வேண்டிய சூழல்!

“அதானே, முழுசா கேட்டுட்டா தான் மனசு தெளிஞ்சுடுமே உனக்கு!” என்று அவள் நொடிக்க, “எதுக்கு வந்த!? அதை மட்டும் சொல்லு!” என்றான் எங்கோப்பார்த்து.

“ம்ம்ம்? கறிக்கடைக்கு கடலைமிட்டாய் வாங்கவா வருவாங்க!?” அவள் எடக்காய் கேட்க, “வாங்குற நேரத்தை பாரு!” என்றான் முனுமுனுப்பாய்.

அவள் காதில் அது விழ, “நேரமே வந்துருப்பேன்! உனக்கு தான் என்னைப்பார்த்தாலே கை கால் உதறும், வேர்த்து வேர்த்து கொட்டும்! சரியா வியாபாரம் பாக்காம ஓடிடுவ! சரி, நம்மால ஒருத்தன் தொழில் ஏன் பாதிக்கப்படனும்ன்னு தான் ஊரே ஓஞ்சதும் வந்தேன்!” பெருந்தன்மையாய் அவள் சொல்ல, அவன் பதிலே சொல்லாமல், கொக்கியில் தொங்கிக்கொண்டிருந்த கறியை எடுத்து மரக்கட்டையில் போட்டு, கத்தியை கொண்டு வெட்ட ஆரம்பித்தான்.

அவள் பேச்சிற்கு அவனிடம் எதாவது பதில்வினை இருக்குமா என்று எதிர்ப்பார்ப்பாய் அவன் முகம் பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்ச, “ச்சை, இத்தனை வருஷத்துக்கு கல்லு கூட கரைஞ்சுருக்கும்! ஆனா, இது இருக்கே!” என்றாள் வேண்டுமென்றே சத்தமாய்.

உள்ளுக்குள் இருந்து வெளிவர பார்த்த சிரிப்பை பல்லைக்கடித்து அடக்கியவன், “எவ்ளோ வேணும்!?” என்றான் அவளிடம்.

அவளோ கடுப்பாக, “ஏன் உனக்கு தெரியாதா?” என்று கேட்க, அவன் அரைகிலோ அளவு அளந்து கருப்பு பாலிதீன் பையில் போட்டு கட்ட, அவனிடம் காசை நீட்டியவள், வெடுக்கென பையை பறித்துக்கொண்டாள்.

அவள் கோபம் பார்க்க எப்போதும் போல இப்போதும் அவனுக்கு பிடித்தது. கழுத்தை நோடித்துக்கொண்டு திரும்பியவளிடம், “கொழுப்பு நிறைய கடக்கு, கொண்டு போறியா?” என்றான். அவள் திரும்ப, முகத்தை எங்கோ வைத்துக்கொண்டான்.

அவள் கோபம் எல்லாம் கொதிக்கும் குழம்பில் போட்ட கொழுப்பை போல கரைந்தே போனது. அவளுக்கு ஆட்டுகொழுப்பு என்றால், அப்படி இஷ்டம்! தெரிந்துக்கொண்டே தான் கேட்கிறான் என்றதில் அவளுக்கு சுணக்கம் போக, ஒன்றும் சொல்லாமல் பையை நீட்டினாள். வாங்கியவன் கை நிறைய கொழுப்பை அள்ளி அதில் போட்டுக்கொடுக்க, வேண்டிமேன்றே அவன் விரலோடு பிடித்து பையை உருவிக்கொண்டவள், ஒருவித நமட்டு சிரிப்போடு அங்கிருந்துப்போக, நெற்றியில் அடித்துக்கொண்டவன், கடையை எடுத்து வைத்தான்.

கையில் இருக்கும் பையை பார்த்து பார்த்து சிரித்தபடி உல்லாசமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள் நிம்மதி. உச்சிவெயில் நேரம் என்பதால், வீடுகளுக்கு நடுவே இருக்கும் சந்திபொந்தில் புகுந்து நிழல் வழியில் அவள் நடக்க, ஒரு திருப்பத்தில் சரட்டென முன்னே வந்து நின்றான் வீரப்பன்.

அண்ணாமலை அடித்ததில் ஒரு பக்கம் முழுதாக வீங்கிப்போயிருந்தது.

அவனை கண்டதும், முறைத்தவள், தாண்டிக்கொண்டு போகப்பார்க்க, மீண்டும் மறித்தான் அவளை.

எரிச்சலாய் பார்த்தவள், “என்ன?” என்று கேட்க, “அவன் தான் உன்னை மதிக்கவே மாட்டேங்குறானே!? அப்பறம் எதுக்கு அந்த நாத்தம் புடிச்சவன் தான் வேணுன்னு அலையுற?” என்றான்.

அவன் பேச்சில் இன்னமும் எரிச்சலாய் பார்த்தவள், “உனக்கு தேவையில்லாதது அது!” என்றாள் விரல் நீட்டி!

“அவனை வுட்டுட்டுந்த… நான் இருக்கேன் உனக்கு! உன்னை திருப்ப்ப்ப்தியா பார்த்துப்பேன்!” அவன் கண்ணடித்து ஒருமாதிரி சொல்ல, அவளுக்கு கைகள் பரபரவென்று இருந்தது.

“முதல்ல உன் கன்னத்தை சரி பண்ணிட்டு வா, என்கிட்ட வாங்க வேண்டியது பாக்கி இருக்கு!” அவள் சொல்ல, “இன்னொரு கன்னம் சும்மா இருக்கு பாரு!” என்றான் அவளிடம் குனிந்து கன்னத்தை காட்டியபடி.

தன் கையை அடக்க முடியாதவள், இடக்கையால் ஓங்கி ஒரு அறைவிட, “ஏய்…ஈஈஈ” என்று கர்ஜித்தவன் பார்வை, அவள் முதுகுக்கு பின்னால் தெரிந்த உருவத்தை கண்டதும் அடங்கிவிட, அதை கவனியாதவள், “எனக்கு இப்போ உன்னை அடிக்குற மூடே இல்லை… ஜாலியா டூயட் ஆடிட்டு இருந்தேன், கெடுத்துவிட்டுட்ட! ஒழுங்கா போய்டு! இல்லனா வேற மாறி ஆகிடும்!” என்றவள், அவனை தாண்டி சென்றுவிட்டாள்.

அவள் போனதும் வீரப்பனை நெருங்கி வந்தான் அண்ணாமலை. வீரப்பனுக்கு தன்னால் கரங்கள் கன்னத்தை பொத்திக்கொண்டது.

வந்து நின்றவன் ஒன்றுமே சொல்லாமல் அவனை வெறித்துப்பார்க்க, “உன…உனக்கு தான் அவளை ப்..பிடிக்கலல!? அதான்” என்றான் அவன் திணறித்திணறி.

அண்ணாவின் பார்வை இன்னும் கூர்மையாய் அவன் மீது படிய, ஓரடி பின்னால் நகர்ந்தவன், “அவளை எனக்கு பிடிக்கும்” என்றான் தைரியத்தை வரவழைத்து.

அண்ணாவின் இதழ்கள் அசையக்கூட இல்லை. பின்னால் கைகளை கட்டிக்கொடு நிமிர்ந்து நின்றவனின் பார்வை இமைக்காது தீர்க்கமாய் எதிரில் இருந்தவனை வெறித்தது.

அவன் பார்வையில் வீரப்பனுக்கு வயிறு தடதடத்தது. வறண்ட தொண்டைக்கு எச்சில் கூட்டி விழுங்கினான். கால்கள் தன்னால் பின்னால் நகர, அண்ணாமலை அதே பார்வையோடு ஓரடி முன்னே எடுத்து வைக்க, நடுங்கிப்போனவன், “என்னைவிட்டுட்டு, இனி அப்படி பேச மாட்டேன் அவக்கிட்ட!” என்றான் வேகவேகமாய்.

அதே பார்வையோடு வீரப்பனை அவன் நெருங்க, சுவரோடு ஒட்டிக்கொண்டவன், பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அடி வாங்க தயாராக, சில நொடிகளுக்கு பின்னும் அடி விழவில்லை என்றதும் மெல்ல கண்ணை பிரித்துப்பார்த்தான்.

இன்னமும் விலகாத பார்வையோடு, கட்டிய கைகளோடு நின்றவன், முகத்தை மட்டும் அவன் முன்னே சாய்த்து, “அவளை நினைச்சாக்கூட…” என்று நிறுத்தியவன், “வெட்டி போட்டுடுவேன்!” என்றான் அழுத்தமாய், மிக அழுத்தமாய். அவன் சொன்ன தோரணையில் எதிராளியின் நெஞ்சுக்கூடே உறைந்தது.