“எல்லாம் நல்லா ஓடுதாடா!?” என்று அண்ணா கேட்க, அவர்கள் ‘ஆம்’ என உறுதிப்படுத்தினர். அவர்கள் பேசிக்கொண்டிருக்க, அங்கே வந்த அந்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி, “ஏற்கனவே எங்களுக்கு நிறைய செய்ற அண்ணா! இப்போ ஐஞ்சு ஃபேன் வேற! உனக்கு எதுக்கு இத்தனை செலவு?” என்றார் சிறு தயக்கமாய்.
“என்ன சித்தப்பா பேசுற? உங்களை வுட்டா வேற யாருக்கு நான் செய்யப்போறேன் சொல்லு?” அவன் கேட்க, “உனக்குன்னு வச்சுக்கோடா! இப்போ தேவப்படலன்னாலும் உனக்குன்னு குடும்பம் பெருகுறப்போ தேவைப்படும்!” என்றார் அவன் மீதுள்ள அக்கறையில்.
“குடும்பம் வரப்போ எல்லாம் பார்த்துக்கலாம்! உங்களுக்கு குடுக்க எனக்கு பிடிச்சுருக்கு! சந்தோசமா இருக்கு! உனக்கு இஷ்டம் இல்லனா சொல்லிடு, நான் ஒதுங்கிக்குறேன்!” என்றான் பட்டென!
“ப்ச், டேய்… என்னடா பேசுற?” என்று அதட்டியவர், “நீ குடுக்குறங்கறதுக்காக நாங்க கை நீட்டிட்டே இருக்கக்கூடாது பாரு! உன்னை பெத்தவங்க இருந்தா எடுத்து சொல்வாங்க! அவங்க இடத்துல இருந்து தான் இப்போ நான் சொன்னேன்!” என்றார் அவர்.
அவன் உம்மென நிற்க, “அட சித்தப்பு, கவலைய விடு! அண்ணாக்கு வர பொண்ணு எல்லாமே அதுவே பார்த்துக்கும்! தொழிலதிபரு! அதனால அண்ணா எப்பவும் கர்ணா தான்!” என்று நக்கலாய் சிரித்தபடி சொல்லிக்கொண்டு வந்தான் நந்தா.
அண்ணா சட்டென அவனை திரும்பி முறைக்க, சிரித்த அந்த நிர்வாகி, “அதுவும் சரி தான்! சீக்கிரம் கல்யாண விருந்து போடு அண்ணா… காத்திருக்கோம்!” என்றார். அதையே இன்னும் சில பெரியவர்களும் சொல்ல, ஒன்றும் பேசாமல் அங்கிருந்து வெளியே வந்துவிட்டான்.
பிறகு வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு மற்றவர்களும் வெளியே வர, அதற்குள்ளாக தங்கள் வீட்டுக்கே சென்றிருந்தான் அண்ணாமலை. இவர்களும் இரண்டே நிமிட நடையில் தங்கள் வீட்டை அடைய, பெரிய வெங்காயத்தை ‘சரக், சரக்’கென சிறு மரக்கட்டை மீது வைத்து வெட்டிக்கொண்டிருந்தான் அண்ணாமலை.
சேகரும் நந்தாவும் அவனோடு இணைந்துக்கொள்ள, பரத்தும் ஐயப்பனும், பொட்டலம் கட்ட இலையருக்க ஆரம்பித்தனர். வேலை அதன்போக்கில் நடந்தாலும், நால்வரின் பார்வையும் அவ்வப்போது அண்ணாவிடம் சென்றுவிட்டு மீள, காணாதது போல கண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் கடுப்பாகி, “என் மூஞ்சில எவளாது அரையும் குறையுமா போட்டுக்கிட்டு ஆடுறாளா?” என்று கத்தியவன், “வேலையை பாருங்கடா!” என்றான்.
அதில் பரபரவென வேலை நடக்க, “வெங்காயம் வெட்ட என்னத்துக்கு மூணு பேரு? டேய் நந்தா, போய் பொட்டலத்துக்கு பேப்பர் கிழிச்சு வையு!” என்றான் அதட்டலாய்.
நந்தா வேகமாய் அதை செய்ய, வேலை பார்க்கும் நால்வரையும் கண்டதும், முகத்தை அழுத்தமாய் துடைத்துக்கொண்டு கண்ணை மூடி அமர்ந்துவிட்டான்.
கண்ணுக்குள் அவள் தான் வந்தாள்!
அவள் மதி!
நிம்மதி!
அவன் நிம்மதி குலைக்க வந்தவள் அவள். அப்படி தான் அவனுக்கு! அவன் கண் பார்க்க பிறந்து வளர்ந்தவள். அவன் பாட்டிக்கு சூட்டிகையான மதியை மிகவும் பிடிக்கும்! அவரை காண அடிக்கடி இங்கே வந்து, அதில் பழகியவன் தான் அண்ணா!
பழக்கம் என்றால், அவளை கண்டதுமே, ‘ஒய், ஓடு உன் வூட்டுக்கு!’ என்று கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு விரட்டும் அளவு அற்புதமான பழக்கம்! அவனுக்கு அவளை கண்டாலே ஏனோ விரட்டத்தான் தோன்றும்! சில நேரம் அடித்தும் கூட வைத்திருக்கிறான்!
ஆனால், அது எதையும் அவள் இருவீட்டிலும் சொன்னது இல்லை. அவளது பத்து வயதில் அவள் அன்னை தவறியபோது, அவன் பாட்டி அவளை அதிகம் தன்னோடு வைத்துக்கொண்டார்.
பதினைந்து வயதில் இருந்தவனுக்கு அவள் நிலை புரிந்து மனதை வருத்த, அவள் வந்துபோவதை தடுக்கவில்லை. அது புரிந்து, ஒருநாள் அவனிடமே, ‘இப்போலாம் என்னை போ சொல்ல மாட்டுற!? சாமி உனக்கு புத்தி குடுத்துடுச்சா!?’ என்று அவள் கேட்டு கொட்டு வாங்கிக்கொண்டாள்.
ஆனாலும், அதன்பின் அவளை கண்டால், அவன் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அதுதான் வினையாகி போனது போல.
அவன் விரட்டியவரை அவனை கவனிக்காதவள், அவன் அமைதியில் கவனிக்க ஆரம்பித்தாள். அவள் வளர வளர, அவள் கண்முன்னே ஆண்மகனாய் அவனும் வளர, எப்போது எங்கிருந்து அவளுக்கு அந்த ஆசை வந்ததோ தெரியவில்லை. பத்தாவது லீவில் ஒருநாள், அவனிடம் வந்து ‘என்னை கட்டிக்குரியா?’ என்று கேட்டுவிட்டாள்.
அப்போது தான் தொழிலில் கால் ஊன்ற ஆரம்பித்திருந்தவன், அவள் பேச்சில் முதலில் திகைத்து, பின் கோவத்தில் வலுவாக திட்டிவிட்டான். அழுதுக்கொண்டே போனவள், அதோடு அதை விட்டுவிடுவாள் என்று அவன் நினைக்க, நாளுக்கு நாள் அவள் உறுதி அதிகம் தான் ஆனது. அது பிடித்தமா? பிடிவாதமா? என்று தான் அவனுக்கு புரியவில்லை.
அவனுக்கு அவளை பிடிக்கிறதா? என்றால்… ‘இப்போ அதை என்னத்துக்கு பேசுற? என்னைப்பத்தி, என் நினைப்பை பத்தி எதாவது பேசுன…!?’ விரலை நீட்டி கத்துவான், அந்த கறிக்கடைக்காரன்!
வருடம் பத்து ஓடிவிட்டது. அரசால் புரசலாய் தெரிந்து, இப்போது மொத்த ஊருக்குமே தெரிந்துப்போனது அவள் காதல்! அவள் எத்தனைப்பேர் இருந்தாலும், நெஞ்சை நிமிர்த்தி பார்க்கிறாள், இவன் தான் தேளை கண்ட கள்ளன் போல ஓட வேண்டியதாகி இருக்கிறது!
இப்போதெல்லாம் அவள் இருக்கும் இடத்தில் கூட அவன் நிற்ப்பதில்லை. அவள் தந்தையிடம் சொல்லி கண்டிக்க சொன்னால், ‘ஏன் மாப்பிள்ளை வேண்டாங்குற?’ என்று மகளை விட மோசமாய் சாவடிக்கிறார் அவனை!
‘வேண்டாம்’ என்று சொல்லி விரட்டிவிட்டவளை, எப்படி ‘வேண்டும்’ என்று கட்டிக்கொள்ள முடியும்!? அப்படியென்ன அவள் பிடிவாதத்துக்கும் விருப்பத்துக்கும் நாம் இறங்கிப்போவது!? என் பேச்சை அவள் கேட்க மாட்டாளா? அப்போது அவள் பேச்சை நான் ஏன் கேட்க வேண்டும்!? அவளுக்கு ‘வேண்டும்’ என்றால், எனக்கு ‘வேண்டவே வேண்டாம், போடா!’
இதுதான் அண்ணாமலை! வீண்பிடிவாதம்! ஆனால், அவளிடம் மட்டுமே!!!
“அண்ணா!?” மெதுவாக அழைத்தான் பரத். கண்ணை திறந்தவன் என்னவென்று பார்க்க, “எவ்ளோ நாளுக்கு இப்படி? வயசு பொண்ணு… இதுக்குமேல தப்பா பேசுவாங்க! உனக்கும் அவளை பிடிக்கும், பேசாம கட்டிக்கோ!” என்று மிக மெதுவாய் தயங்கியே சொல்ல, அவன் எதிர்ப்பார்த்ததை போலவே, விருட்டென அங்கிருந்து எழுந்தவன், மிக கேவலமான சொற்களால் பரத்தை அலங்கரித்துவிட்டு விறுவிறுவென வெளியேறினான்.
“டேய், போன வாரம் என்னைக்கூட இப்டி திட்டலடா அவன்!” சொன்ன ஐயப்பனுக்கு அப்படி ஒரு சிரிப்பு என்றால், “மூடு!” என்று கடுப்பாய் சொல்லிவிட்டு போன பரத்தை கண்டு மூவருமே சத்தம் அடக்கி சிரித்தனர்.
வெளியே வந்த அண்ணாவோ லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு கடுப்பாக நடந்தான்.
‘பாக்குறவன் எல்லாம் சும்மா என்னவோ என்னை கொடுமைக்காரன் கணக்கா பேசிக்கிட்டு! இஷ்டம் இல்லன்னா வுட்டுதொலைக்க வேண்டியது தானே!? அவளுக்கு சொல்லணும், வேண்டாம்ன்னா விடும்மான்னு! அதைவுட்டுட்டு எங்கிட்டயே வந்து தாலி அறுத்துக்கிட்டு!
இதே நான் ஒரு பொண்ணை கல்யாணம் கட்டு, கல்யாணம் கட்டுன்னு டார்ச்சர் பண்ணுனா, சும்மா வுடுவானுவளா? கம்பி எண்ண வுட்டுருப்பானுவ! வர வர நாட்டுல ஆம்பளைங்களுக்கு பாதுகாப்பே இல்லாம போயிட்டு!
அதுலயும் என்னை மாறி தழுக்கா இருந்தா, அவ்ளோதான்… அலையுதுங்க… ச்சை!” தன்னை போக்கில் சத்தமாகவே பேசிக்கொண்டே போக,
எதிரே வந்த பெருசு ஒன்றோ, “காலா காலத்துல எங்க மதி பாப்பாவை கட்டிருந்தா இப்போ இப்படி நிம்மதியில்லாம பேசிகிட்டு திரிவியா நீ!?” என்று கேட்க,
‘யோவ், என் நிம்மதியாய் கெடுக்கிறதே உங்க நிம்மதி பீப்பா தானய்யா!’ என்று வெளிவர துடித்த வார்த்தைகளை பல்லை கடித்து கொட்டாமல் அடக்கினான் அண்ணாமலை. அங்கொரு திண்ணையில் இருந்த வேறொரு வெள்ளைத்தலையோ, ‘அட, யாருய்யா நீ!? இதெல்லாம் காதோலு! அது வந்துச்சுன்னா, இப்படி தான் தன்னைப்போல பேசிக்கிட்டு கனவுல மிதப்பாணுவ!” என்று சொல்ல, மெதுவாக திரும்பிய அவன் தலை, அவரை கொடூரமாய் முறைக்க, நைசாக நழுவிப்போனது அந்த பெருசு!
“ஐயோ ரோட்ல நடக்கக்கூட விடமாட்றானுவளே!” எரிச்சலாய் அவன் தலையை பிடித்துக்கொண்டு நிற்க, “எக்ஸ்க்யூஸ் மீ, சார்!” என்ற ஒரு பெண்ணின் குரல்.
‘நீ யாருமா?’ என்ற ரீதியில் அவன் திரும்பிப்பார்க்க, ஸ்கூட்டியில் இருந்த பெண்ணோ, “இங்க நிம்மதி வீடு எங்கிருக்கு?” என்றாள்.
அவனுக்கு சுர்ரென்று ஏறியது.
“என்ன கேட்ட?”
“நிம்மதி’ண்ணா! நிம்மதி பிஸ்கட்ஸ்! அவ வீடு எங்கிருக்கு?” அந்த பெண் திரும்ப கேட்க, புசுபுசுவென கிளம்பிய வேக மூச்சுகளை சிரமப்பட்டு அடக்கியவன்,
“அப்டியே நேரா போ! ‘இங்கே அண்ணாமலையின் உசுறெடுக்கப்படும்’ன்னு போர்டு மாட்டிருக்கும்! அந்த வூடு தான்” என்றவன், அடுத்து எங்கே தான் போவது என்றே புரியாமல் இன்னும் கடுப்பானான்!
சில நிமிடங்கள் முன்னே நழுவிய பெருசோ இப்போது அவன் சென்றிருப்பான் என்றெண்ணி கையில் ரேடியோவுடன் மீண்டும் திண்ணைக்கு செட்டில் ஆக வர, அதிலோ,
‘எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!’ என பாடல் ஓட, பல்லிடுக்கில் அந்த வார்த்தையை உதிர்த்தவன்,
“நாளைக்கு என் கடைல வியாவாரமே நீதான்யா!” என்றவன், பரபரவென சுற்றும் முற்றும் பார்த்து, ஒரு பெரிய கல்லை எடுக்கப்பாய, ஒரே நேரத்தில் அந்த ஸ்கூட்டியும் பயந்து பறந்தது, அந்த பெருசும் ரேடியோவை அம்போவென விட்டுவிட்டு வீட்டுக்குள் தெறித்து ஓடியது.
அந்த ஸ்கூட்டி பெண் ஒருவழியாய் மதியின் வீட்டை கண்டுப்பிடித்து அதன் வெளியே வண்டியை நிறுத்தினாள். பெரிய இரும்பு கேட், அதன் மீது, ‘நிம்மதி பிஸ்கட்ஸ்’ என்ற பலகை. தாழிடாத கதவை மெல்ல திறந்து அவள் போக, வீட்டை சுற்றி இருந்த வட்ட வடிவ தோட்டம் அவளை வசீகரித்தது. பைக்குள் இருந்த கேமராவை எடுத்து ‘ஆங்கிள்’ பார்த்தாள். இங்கே வைத்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அவள் மனம் குறித்துக்கொண்டது.
“அக்கா, யார் நீங்க!?” என்று வந்தாள் ஒரு குட்டிப்பெண்! அவளிடம் மதியை பார்க்க வேண்டும் என்று சொல்ல, கண் முன்னே இருந்த அந்தகாலத்து பெரிய வீட்டை சுற்றிக்கொண்டு பின்பக்கமாய் அழைத்து சென்றாள் அவள்.
அங்கே சின்னதாய் ஒரு கூடம், சமையலறையுடன் கூடிய ஒரு ஓட்டு வீடு இருக்க, வெளியில் இருந்தே அப்பெண் கத்தினாள்.
“மதிக்கா, உன்னை பாக்க ஒரு அக்கா வந்துருக்காங்க!”
அவள் போட்ட சத்தத்தில் வீட்டுக்குள் இருந்த வெளியே வந்த மதியின் முகம், புதியவளை கண்டு மலர்ந்தது.
“ஏய் திவ்யா! வாடி வாடி!”
“ப்ச்! தொழிலதிபர் நிம்மதி! எப்படி இருக்கீங்க!?” அவள் கிண்டலாய் கேட்டாலும், அவள் குரலில் நண்பியின் மீதான பெருமை தெரிந்தது.
“சும்மா போடி!” என்ற மதி, அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“நிஜமா டி! எங்க பத்திரிக்கை ஆபிஸ்’ல இருந்தே ‘சாதிக்கும் பெண்கள்’ காலம்’க்கு உன்னை இன்டர்வியு பண்ணிட்டு வர சொல்லிருக்காங்கன்னா நிஜமா எனக்கு பெருமையா இருக்கு!” என்றாள் உளமார!
சிறு சங்கோஜத்துடன் அதை ஏற்றுக்கொண்டவள், அந்த பெரிய வீட்டுக்கு பின்வாசல் வழியே அவளை அழைத்து சென்றாள்.
எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய பாத்திரங்கள், மாவு, ட்ரேக்கள், வேக வைக்கும் இயந்திரம் கூடவே இருபதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள்! அத்தனை சுறுசுறுப்பாய் வேலை செய்துக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொன்றாய் தன் கேமராவில் பதிவுசெய்தாள் திவ்யா.
“ஆரம்பத்துல சும்மா பொழுது போகாம செஞ்சேன்! அப்புறம் தெருல புள்ளைங்களுக்கு குடுத்தேன்! அவங்க திரும்ப திரும்ப கேட்டாங்க! அப்புறம் தான் இதை ஏன் தொழிலா செய்ய கூடாதுன்னு தோணிச்சு! ராகி, கோதுமை, மைதா, வெண்ணெய், முந்திரின்னு செஞ்சேன்! மளிகை கடைக்கு கொடுத்தேன், டிமான்ட் இருந்துச்சு! அப்புறம் இப்போ சிறு தானியத்துல கூட செஞ்சுட்டு இருக்கேன்! திருவாரூர் வரைக்கும் இப்போ விநியோகிக்குறோம்! இங்கிருக்க பெரிய ஸ்கூல்ஸ்’ல கேண்டீனுக்கு சப்ளை பண்றோம்! ஆரோக்கியமானதுங்குறதால நல்லாவே வியாபாரம் நடக்குது!” என்றாள் நிம்மதி.
“சூப்பர் டி! வேலை பாக்குறவங்களுக்கு நீயே ட்ரைனிங் குடுத்தியா?”
“ஆமா, எல்லாரும் சும்மா வீட்ல இருந்தாவ! இப்போ நான் சொல்லி குடுக்கவும், ரொம்ப ஜாலியா இங்க வேலை பாக்குறாங்க!” என்று மதி சொல்ல, அதையே அங்கிருந்த பெண்களும் சொல்லினர்.
“சீரியல் பார்த்துட்டு சும்மா கடந்தோம்! இப்போ பாருங்க, வேலைக்கு வேலையும் ஆச்சு, சீரியல் பாக்குறதும் தடை இல்லாம போயிட்டு!” என்று ஒருவர் சொல்ல தான், அங்கிருந்த பெரிய டிவி ஒன்றையே பார்த்தாள் திவ்யா.
“என்னடி இது சீரியல் ஓடுது?” சிரித்துக்கொண்டே திவ்யா கேட்க, “இது இல்லன்னாலும், புரளி பேசிக்கிட்டு, சண்டப்போட்டுக்கிட்டு தான் இருக்காங்க, அதுக்கு இதே பெட்டர்’ல?” என்றாள் சிரித்துக்கொண்டே!
“முதல்ல இதான் எங்க வீடு! வியாபாரம் பெருசாக ஆக, வீடு பத்தல… அதான் இதை கம்பெனி ஆக்கிட்டு, பின்னாடி நாங்க தங்கிக்குறோம்!” என்றாள் மதி.
“அப்பா எங்க காணோம்!?”
“பொருள் வாங்க அனுப்பிருக்கேன்!” என்றவள், “வீடு தேட கஷ்டப்பட்டியோ? என் ஃபோன்’ல இன்னைக்குன்னு பார்த்து சார்ஜ் இல்லாம போயிட்டு!” என்றாள் வருத்தமாய்.
“மதின்னு கேட்டதுமே தான் ஊரே கை காட்டுதே!” என்ற திவ்யா, “ஆனா… ஒருத்தன் தான்…” என்று இழுக்க, “என்னாச்சு?” என்றாள் மதி.
“பாவம், பைத்தியம் போலடி! உன் பேரை சொன்னதுக்கு கல்லெடுத்து அடிக்க வரான்!” என்றதுமே அந்த பைத்தியம் யாரென்று அவளுக்கு புரிந்துப்போக,
“பேரு எதாவது சொல்லுச்சா!?” அவள் கேட்க, “பேரு… ஏதோ சொல்லுச்சு… என்னவோ…” அவள் புருவம் கசக்கி யோசிக்க, “அண்ணாமலை’ன்னு!” மதி ஆரம்பித்தபோது, “ஹான், அதே தான், அதே தான்!” என்று குதித்தாள் திவ்யா.
“ம்ம்… அந்த பைத்தியத்தை தான் பத்து வருஷமா கட்டிக்குரியா’ன்னு கேட்டுட்டு இருக்கேன்!” என்றாள் மதி. திவ்யாவுக்கு இந்த கதை தெரியும்! அவளுக்கு மட்டுமா? அவர்கள் படித்த மொத்த காலேஜுக்குமே தெரியுமே! ஊருக்கே தெரிகையில் காலேஜுக்கு தெரியாமலா!?
“ஏன்டி… இன்னுமாடி அவன் பின்னாடி சுத்துற?!” என்றாள் மிக வியப்பாய்.
“இதென்னடி கூத்தா இருக்கு, வருஷம் ஒரு ஆளுன்னா மாத்த முடியும்!?” என்றாள் சிறு கோபமாய்.
“வருஷம் ஒரு ஆளுன்னு மாத்த வேண்டாம்டி… இத்தனை வருஷம் ஆகியும் ஒரு ஆளை உன்னால மாத்த முடியலையே… அதை தான் சொல்றேன்!” என்றாள் திவ்யா.
“மாத்திடுவேன்! கூடிய சீக்கிரமே!” என்றவளிடம் தீவிரம் தெரிந்தது.
“அக்கா, நாலு பாட்டில் போட்டுட்டோம்… ஐ நாங்கு இருபது! இருவது ரூவா குடுங்க!” என்று கைநீட்டினாள் சிறுபெண் ஒருத்தி! அவளை போலவே இன்னும் சிலர். அவர்கள் சொன்ன கணக்குக்கு மதி காசை கொடுக்க,
“பசங்க வேலை பாக்குறாங்களா?” என்றாள் திவ்யா கேள்வியாய்.
“வேலை இல்லடி! லீவ் நாளுன்னா இதுகளை மேய்க்க முடியலன்னு வேலை செய்ற அக்கா எல்லாம் அடிக்கடி லீவ் போட்டாங்க, அதான் பிஸ்கட்டை டப்பால அடைச்சு குடுத்தா, காசு தருவேன்னு சொல்லி ஒரு இடமா உட்கார வச்சேன்!” என்றாள் இலகுவாய்.
“வாவ்… நல்ல ஐடியா’ல!!!”
அதன்பின் முறையான இன்டர்வியு முடித்து,அவள் நினைத்தது போல தோட்டத்தில் வைத்து மதியை புகைப்படம் எடுத்துக்கொண்டு, இன்னும் இரண்டு வாரங்களில் இது பிரசூரமாகும் என்று சொல்லிவிட்டு கிளம்பிய தோழிக்கு விதவிதமான பிஸ்கட்களை கொடுத்து வழியனுப்பினாள் நிம்மதி!
போகும்போது, “சீக்கிரமே, கல்யாண பிஸ்கட் போடுடி!” என்று திவ்யா சொல்ல, சிரித்துக்கொண்டே அவளுக்கு கையசைத்தாலும், மனதுக்குள் அண்ணாமலையை நினைத்து ஒரு ஆயாசம் தோன்ற தான் செய்தது.