காவியத் தலைவன் – 7

ஆதீஸ்வரன் இந்துஜாவின் விஷயத்தில் தலையிடவில்லை என்று தெரிந்ததிலிருந்து அவன் வரவை தாரகேஸ்வரி ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய ஆதி, தன்னை மின்னும் விழிகளோடு வரவேற்ற தன் கரகாட்டக்காரியை அதிசயமாகப் பார்த்தான்.

தாராவிற்கு அவனிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் இருக்க, அவன் பின்னேயே சுற்றி திரிந்தாள். தேநீர் குடிக்கச் சென்றால் உடன் வந்து நின்றாள். மாடிக்கு சென்றால் பின்தொடர்ந்தாள்.

‘இவளுக்கு என்ன ஆச்சு?’ என ஆதியே குழம்பும் படி இருந்தது அவளது செய்கை.

என்னவோ அவளின் செய்கைகள் வேடிக்கையாக இருக்க, வேண்டுமென்றே அவளைக் கண்டுகொள்ளாமல் தங்கள் அறைக்குள் நுழைந்தவன், அவன் மட்டும் உபயோகிக்கும் பிரத்தியேக அறைக்குள்ளும் நுழைந்து கொண்டான்.

‘என்ன இவரு ஒன்னுமே பேசாம உள்ளே போயிட்டாரு…’ என முகம் வாடிப்போனது பதுமைக்கு.

மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருக்கக் கெளரவம் தடுக்க, அறையிலேயே எதையோ தேடுபவள் போல இதையும் அதையும் உருட்டிக் கொண்டிருந்தாள்.

இவள் காத்திருப்பாள் என அனுமானித்துக் குளித்துவிட்டு வெளியே வந்த ஆதிக்கு பயங்கர சிரிப்பு. வெளியில் காட்டிக்கொள்ளாமல், “அப்பறம் எப்படி போச்சு?” என்றான் பொதுவாக.

திரும்பி நின்றிருந்தவள், அவன் வருகையைக் கதவு திறக்கும் சத்தத்தில் உணர்ந்தாலும், கெத்தை விட்டு விடாமல் அந்த புத்தக அலமாரியைக் குடையும் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.

இப்பொழுது திடீரென்று அவன் பேசவும், வேகமாகத் திரும்ப, கையிலிருந்த புத்தகம் நழுவியது.

“கவனம்…” என்றுவிட்டு ஆதி முன்னோக்கி நகராமல் அங்கேயே நின்றுகொள்ள, தாரா புத்தகத்தை எடுத்து மீண்டும் அலமாரியில் வைத்தவள், அவன் தன்னருகில் வந்து கூட பேசாததை சுணக்கத்துடன் பார்த்தபடியே, “இங்கே என்ன ஆகும்? ஒன்னும் ஆகலை… சீதாம்மா, அப்பறம் உங்களோட பி. ஏ., தென்னரசு சார்… ரெண்டு பேரும் மாத்தி மாத்தி விளக்குல இருந்து வெளிய வந்த பூதம் மாதிரி என்ன வேணும் என்ன வேணும்ன்னு கேட்கிறாங்க அதுதான் இங்கே தினமும் நடக்குது…” என்று ஏதோ வேகத்தில் படபடப்பில் சொல்லிவிட்டாள்.

ஆதியோ, ‘பூதமா… அது சரி…’ என இவளின் பேச்சில் மனதிற்குள் விழித்தவன், வெளியே எந்த பாவனையையும் வெளிக்காட்டாமல் இறுக்கமாகவே நின்றான்.

தாராவின் விழிகள் தான் சொல்லிவிட்ட வார்த்தைகளில் விரிந்து விட, ‘ஐயோ என்ன இப்படி பேசிட்டோம்’ என்ற பரிதவிப்பில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு, “ஐ மீன்… அவங்க… அவங்க…” என முடிக்க முடியாமல் தடுமாறினாள்.

ஆதி வழக்கமாக இவளைப் பார்த்தால் சின்ன புன்னகை, ஓரிரு வார்த்தை பேசுவது என்று கடந்து போகிறவன், இன்று இவளிடம் இயல்பாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியதே சில விவரங்களைக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான்.

இப்பொழுது தாராவிடம் பேசத் தொடங்கிய பிறகோ, இயல்பாகக் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்பதையே மறந்து அவளிடம் வார்த்தையாட தொடங்கி விட்டிருந்தான்.

ஆதி அழுத்தமான குரலில், “பட் நீ அவங்ககிட்ட எதுவும் கேட்கலை ரைட்…” என்றான் அவளைக் கூர்ந்தபடி. என்ன மனநிலையில் கேட்கிறான் என்றே அவளால் கணிக்க முடியவில்லை.

“அது என்ன கேட்கன்னு…” என்று தாரா மீண்டும் தடுமாறினாள். சட்டென்று அவளால் இங்கு அப்படி உரிமையை எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதை இவனிடம் எப்படி சொல்வது?

“ஓ… தென் ஹையர் ஸ்டடீஸ் பண்ண எண்ட்ரன்ஸ்க்கு பிரிப்பேர் ஆக நோட்ஸ் எல்லாம் வந்துடுச்சா…” என்றான் ஆதி அவளின் தடுமாற்றத்தைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்.

‘உனக்கு தேவைகள் இருந்தும் நீ கேட்கவில்லை’ என்ற அர்த்தத்தில் அவன் கேட்க, அது அவளுக்கு விளங்க வேண்டுமே…

“ஹான்… ஆமா… ரொம்ப தேங்க்ஸ்…” என்றாள் முகம் மலர. தன் விருப்பம் இவனுக்கு எப்படித் தெரிந்தது என்கிற குழப்பம் வேறு அவளிடம். அவளின் குழப்பம் உணர்ந்தாலும் இவன் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

நாம் வாய் வார்த்தையாகச் சொல்லாமல் நம் தேவையை யாரும் நிறைவேற்றினால் உள்ளுக்குள் பொங்கும் உவகைக்கு அளவேது? தாராவின் நிலையும் அதுவே தான்!

அவளின் புன்னகையும் பூரிப்பும் ஆதியை கொஞ்சம் இலகுவாக்கியது. அதில், “சீதாம்மா ஏதோ சொன்னாங்க போல…” என்று அவளை சீண்டினான். அவன் சிரிக்கிறானோ என்று தாராவிற்கு சந்தேகம் வந்தது.

அதை புரிந்துகொள்ள முடியாமல், “ஹ்ம்ம் உங்களை பத்தி அவங்களே தான் விவரம் சொன்னாங்க… நான் அதையொட்டி மேல கேட்டா… நீ தானே சொல்லணும். உன் புருஷன் தானேன்னு சொல்லறாங்க…” என சிறு அவஸ்தையுடன் பதில் சொல்ல,

“எனக்கென்னமோ அவங்க சரியா சொன்ன மாதிரி தான் தோணுது…” என்று அவனும் நல்ல மனநிலைக்கு மாறியிருந்ததால் மேலும் சீண்டினான்.

“ஆஹான்… நீங்க தான் எனக்கு நிறைய கால்ஸ் செய்யறீங்களே… இனிமே நானும் அப்படியே… உங்களை மாதிரியே… செஞ்சுடறேன்” என்று தாரா ‘உங்களை மாதிரியே..’ என்பதை வெகு அழுத்தமாகச் சொல்லி நக்கல் செய்ய, அவளின் அந்த த்வனியில் இதழ்களில் புன்னகையைத் தவழ விடாமல் செய்வது அவனுக்கு பெரும் சிரமமாக இருந்தது.

மொத்தத்தில் அவன் புரிந்து கொண்டது இனி தன் வீராப்பு எல்லாம் இவளிடம் செல்லுபடியாகாது. அது வீட்டிற்கு வெளியில் தான் என்று!

ஏதோ தனித்தீவில் தப்பிக்க வழியின்றி வசித்து வந்தவனுக்கு… சிறகைப் பரிசளித்த தேவதை போலத் தான் தாரா அவனுக்கு. அவள் அவன் வாழ்வில் வரும் முன்பு இருந்த வெறுமை இப்பொழுது இல்லாமல் மனம் நிர்மலமாக இருந்தது. ஏதோ ஒருவித அமைதி, சாந்தம் அவனுள்.

இத்தனை நாட்கள் இருந்த அலைப்புறுதல்கள் எல்லாம் அவளின் வரவால் தான் காணாமல் போனது. தன் மனம் அவளை இத்தனை தூரம் தேடி இருக்கிறது என்று அவனுக்கே இப்பொழுது தான் புரிந்தது.

இப்பொழுது இந்த திருமணத்தை அவள் அளவிலும் அங்கீகரிக்க முயல்வதை போலான அவளின் செய்கை மனதிற்குள் குதூகலத்தை குமிழியிட செய்தபோதிலும், இது நிரந்தரமில்லை என்று அவனுக்குப் புரிந்தே இருந்தது.

அவள் என்று தான் தான் அவளின் ‘ஈஸ்வர் மாமா’ என்று புரிந்து கொண்டு… அதன்பிறகு இந்த திருமணத்தையும் தன்னையும் ஏற்றுக்கொள்கிறாளோ அது தான் தங்கள் வாழ்வில் நிரந்தரம் என்று ஆதி புரிந்து வைத்திருந்தான். அதனால் தான் அவளை நெருங்கும் எந்த முயற்சியையும் இதுவரை அவனாக எடுத்துக்கொள்ளாமல் கண்ணுக்குத் தெரியாத ஒரு இடைவெளியை கடைப்பிடித்து வருகிறான்.

அதை படிப்படியாக தகர்த்து தன்னருகே நெருங்க முயற்சி எடுப்பவளை எவ்விதம் தடுக்க என தெரியாதது மட்டுமல்லாமல்… ஏன் தடுக்கிறாய்? என தன் மனமே அவனை கேள்வி கேட்பதில் கொஞ்சம் தடுமாறித்தான் போனான்.

“சொல்லுங்க… நீங்க எனக்கு போன் பண்ணிட்டே இருக்கீங்களே… அதே மாதிரி நானும் செய்யலாம் அப்படித்தானே?” என தாரா மீண்டும் கேட்க, தடுமாறிய மனதை வெகுவாக சிரமப்பட்டு இழுத்து பிடித்தபடி,

“ஹ்ம்ம்… உன்னை போன் பண்ண வேண்டாம்ன்னு நான் சொன்னதா எனக்கு ஞாபகமே இல்லை…” என்று லேசாகத் தோள் குலுக்கி ஆதி பதில் சொல்ல, அவள் முறைத்தாள்.

“உங்களை மாதிரி பெரிய தலைவர் எல்லாம் அவரா தன்னோட வேலையை முடிச்சிட்டு கூப்பிட்டா தான் சரியா இருக்கும்…” என்று அவள் சரியாகத்தான் சொன்னாள்.

ஆதியோ, “அது… எதுவும் சொல்லணும்ன்னா கூப்பிட தானே போறேன்…” என்று சொல்லி விட்டிருந்தான். உன்னிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பது போலான பேச்சு கொஞ்சம் எரிச்சலைப் பரிசளித்தது மங்கைக்கு.

“ஆக நீங்க எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்கன்னு எல்லா தகவலையும் வேற யாராவது மூலமா தான் நான் தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கறீங்களா?” என்றாள் நிதானமாக.

அவளை குறுகுறுவென சில நொடிகள் பார்க்க, “என்ன?” என்றாள் திணறியபடி. அவன் பார்வையையும் எதிர்கொள்ள முடியவில்லை அவளால்.

“சரி இனிமேல் இந்த விவரம் எல்லாம் உனக்கு சொல்லிடுவேன்…” என இலகுவாகச் சொன்னவன், “ஆனா…” என்று இடைவெளி விட, “எ… என்ன… ஆனா?” என மேலும் திணறினாள். அவன் பார்வை அவளின் விழிகளினுள் ஆழ புதைந்து என்னவோ தேட, அவளுக்குப் படபடத்தது.

இத்தனை நேரமும் தள்ளி நின்றிருந்தவன் மெல்ல எட்டெடுத்து அவள் அருகில் செல்ல, அவளின் மென் பாதங்களும் தன்போல பின்னோக்கி நகர எத்தனித்தது. அந்தோ பரிதாபம் பின்னால் வீற்றிருந்த புத்தக அலமாரி அவளைத் தடை செய்ய, அதற்குள் அவன் அருகில் வந்திருந்தான்.

மனம் இப்படி மத்தளம் கொட்டும் என்று அவளுக்கு என்ன தெரியும்?

பேச மறந்தவள் போல பெரும் தவிப்புடன் தலை குனிந்து நின்றிருக்க, அவளின் தாடையில் விரல் கொடுத்து அவளை நிமிர்த்தினான். அவளின் இமைகள் பட்டாம்பூச்சியின் படபடப்போடு இருக்க,

“என்கிட்ட எதுவும் கேட்கத் தயங்கக் கூடாது உன் ஹையர் ஸ்டடீஸ்க்கு தேவையானது கேட்காம இருந்த மாதிரி…” என்று அவளின் கண்களைப் பார்த்தபடி சொல்ல, உடனே தலையைச் சம்மதமாக ஆட்டினாள்.

“அப்பறம் ரொம்ப முக்கியமா நான் கிட்ட வரும்போது பயப்படாம இருக்கணும்…” என அவளின் பதற்றத்தை நக்கல் செய்ய,

“அதுக்கு நீங்க பக்கத்துல வரணும்…” என அவளும் லேசாக முனகி விட, அருகில் நின்றிருந்தவனின் கேட்கும் திறன் அதிகம் என்பதால் அவனுக்குக் கேட்டு விட்டது.

இதழ்கள் மெலிதாய் விரிய, “ஹ்ம்ம்… பக்கத்துல வந்து…” என்றவனின் விரல்கள் தாராவின் இடது காதின் அருகிலிருந்த சிவப்பு மச்சத்தை வருடத் தொடங்கியிருந்தது.

‘என்ன செய்கிறான் இவன்’ என்று எண்ணியவள், உள்ளே இழுத்துப் பிடித்த மூச்சை வெளியேற்ற மறந்திருந்தாள்.

ஆதியின் நிலையோ இன்னும் மோசம் அந்த மச்சத்தை நோக்கி லேசாக அவன் முகம் சாயவே தொடங்கியிருந்தது.