காவியத் தலைவன் – 4

ஆதீஸ்வரன் மேலே அழைத்திருக்க, அவன் குரலிலிருந்தே எதுவோ சரியில்லை என்று புரிந்து கொண்ட தென்னரசு அடித்துப் பிடித்துக்கொண்டு மேலே ஓடி வந்தான்.

மேலே ஏறி வந்தவனிடம் எதுவும் பேசாமல் ஆதி அழுத்தமாகப் பார்த்திருக்க, “சார்… என்னாச்சு?” என்று கேட்பதற்குள் அவன் வெகுவாக திணறிப் போனான்.

ஆதி தன் பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை. அதற்குள் என்னவாகி இருக்கும் என்று புரியாமல் தென்னரசு தவிப்பாக யோசிக்க, அப்பொழுதே அவ்விடத்தில் இருந்த மூன்றாம் நபரை அவன் கவனித்திருந்தான்.

“சார் இந்த பொண்ணு எப்படி இங்கே?” என்று வேகமாகத் தொடங்கியவன், ஆதியின் முகம் கோபத்தில் சிவப்பதைக் கண்டு, “சார்! சத்தியமா இந்த பொண்ணு மேலே வந்தது எனக்கு தெரியாது…” என்று வேகமாகச் சொல்ல,

‘அதை சொல்வதற்கு நீ எதற்கு?’ என்ற ஆதியின் பார்வையில் சர்வமும் அடங்க நின்றிருந்தான்.

ஏற்கனவே தன்மேல், வீட்டிற்கு காவலைச் சரியாக வைக்கவில்லை என்ற கோபத்தில் ஆதீஸ்வரன் இருக்க, அதன்மூலம் எழுந்த பிரச்சினையைச் சரி கட்டவே இத்தனை நேரம் ஆகியிருக்கிறது. இதில் இது வேறா என்று பதறிய தென்னரசு,

“சார் போலீஸ்காரங்க கிளம்பினாங்க. அவங்களை வழியனுப்ப போன இடைவெளியில இப்படி நடக்கும்ன்னு தெரியலை…” என்றான் தடுமாறியபடி. ஆதி ஏதாவது பேசிவிட்டால் கூட பரவாயில்லை இப்படி மௌனமாகப் பார்வையாலேயே வதைப்பது இன்னும் கொடுமையாக இருந்தது.

“நான் விசாரிக்கச் சொன்னதை சரியா விசாரிச்சியா?” கையிலிருந்த மோதிரத்தைச் சரி செய்தபடி ஆதி கேட்க, அவனது அந்த பாவனையிலேயே அவன் கோபத்தின் அளவு புரிந்துவிட உள்ளுக்குள் நடுங்கிப் போனான்.

வேகமாக, “சார்…பக்காவா விசாரிச்சுட்டேன் சார்…” என்று தென்னரசு சொன்னது தான் தாமதம்,

“அப்பறம் இது என்ன?” என தன் கைப்பேசியை அவன் முகத்தின் முன்பு காட்டியபடி கோபமாகக் கேட்டிருந்தான் ஆதி.

தன் கண்களை நம்ப முடியாமல் விழிகள் தெறித்து விழுவது போல விரித்த தென்னரசு, அவசரமாக ஆதியின் கைப்பேசியை வாங்கி பார்வையிட அதில் ஆதியின் தோளில் சாய்ந்தபடி தாரா இரண்டு புகைப்படங்களில் நின்று கொண்டிருக்க, மற்றொன்றில் ஆதி அவளின் தோளணைத்து அமர்ந்திருந்தான், அந்த புகைப்படத்திலும் வாகாக ஆதியின் தோளில் அடைக்கலமாகி இருந்தாள் தாரா.

எடிட் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று அந்த புகைப்படங்களைப் பார்த்தலே புரிந்தது. ஆனால், ஆதி எப்படி இந்த பெண்ணை இப்படி பிடித்தபடி என்றும் புரிய மறுத்தது.

“சொல்லு இதுக்கு என்ன பதில் சொல்லப்போற?” என்று ஆதி சீற,

“சார் இப்பவே இந்த போட்டோவை எடுத்தது யாருன்னு பார்க்கிறேன். சிசிடிவி ரெக்கார்டிங் பார்க்கலாம்” என்றான் தென்னரசு பரபரப்புடன்.

“அதுக்கு முதல்ல இதை கிளியர் பண்ணு…” என்று தாராவை சுட்டிக்காட்டி கோபமாகச் சொன்னான் ஆதி.

ஏற்கனவே அவள் மேல் தண்ணீர் தெளித்த அடையாளங்கள் இருக்க, மயங்கியவளைத் தாங்கி பிடித்திருப்பாரோ என சரியாகக் காட்சிகளை விளக்கிக் கொண்டவன், ஆனால் ஆதி எப்படி இதைச் செய்தான் என நம்பமுடியாமல் இருந்தான்.

ஆதி பெண்களின் வாடையே அறியாத ரிஷ்ய சிருங்கரின் அம்சமோ என்று எண்ணுமளவு இத்தனை ஆண்டுகளும் எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பாராதவன், அவன் ஒரு பெண்ணை மயக்கத்தில் என்றாலும் சட்டென்று உதறாமல் தாங்கி பிடித்தது தென்னரசுவுக்கு அதிசயமாகத் தான் இருந்தது.

அதை அவனிடம் கேட்டு விட முடியுமா என்ன?

தயங்கி தயங்கி மீண்டும் தண்ணீர் குடுவையை தாராவின் முகத்தில் தெளிப்பதற்காக எடுக்க, ஆதி என்ன நினைத்தானோ, “வெயிட்… இவகிட்ட நான் கொஞ்சம் விசாரிக்க வேண்டி இருக்கு… நீ போய் இந்த போட்டோஸ் யாரு எடுத்தாங்கன்னு சீக்கிரம் கவனி…” என்று சொன்னதும், இதென்னடா என்றுதான் மற்றவனுக்கு இருந்தது.

ஆனால், மறுத்துப் பேசும் வழக்கம் இல்லாதவன், வேகமாக மண்டையை உருட்டி விட்டு, அங்கிருந்து நகர எத்தனிக்க, அவனை சொடக்கிட்டு நிறுத்தியவன், “அப்பறம் இந்த பொண்ணை என்கொயரி பண்ணின மொத்த டீடைல்ஸ்ஸும் உடனே எனக்கு வந்தாகணும்…” என்றதும், “இப்ப அனுப்ப சொல்லிடறேன் சார்…” என்றவன் அடுத்த வேலையைக் கவனிக்க ஓடியிருந்தான்.

ஆதிக்கு இருந்த கோபத்தில் தண்ணீர் குடுவையிலிருந்த தண்ணீர் மொத்தத்தையும் தாராவின் தலை மேல் கவிழ்த்து இருந்தான்.

பொதுவாக இந்தளவுக்கு நிதானம் இழந்ததெல்லாம் ஆதி எதையும் செய்ததில்லை. ஆனால், அவனது மனநிலை இப்பொழுது மொத்தமாக மாறிப் போயிருந்தது.

எதிர்பாராமல் தன்மேல் கொட்டிய தண்ணீரில் மூச்சு திணறப் பதறி அடித்துக் கொண்டு கனவிழித்த தாரா, எதிரில் ஆஜானுபாவனாக நின்றிருந்தவனின் தோற்றத்தில் மிரண்டு போனாள்.

அவனது விடைத்த மார்பும்… முறுக்கேறிய தோள்களும்… கோபத்தில் மூச்சு வாங்க நின்றிருந்த தோரணையும் அவளின் அடி வயிற்றில் பிரளயத்தை ஏற்படுத்த, தாராவிற்கு நொடியில் முகமெல்லாம் சூடாகி, நா வறண்டு, முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது.

இதயம் வேகமாக துடிக்க, உள்ளுக்குள் நடுங்கியபடி பயத்துடன் ஆதியை ஏறிட்டுப் பார்த்தவளின் தோற்றம் அவனைச் சிறிதும் அசைக்கவில்லை.

அவனது பார்வையில் எழ முயன்றவள் முடியாமல் மீண்டும் சோபாவிலேயே தொய்ந்து விழ, அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது, “யாருடி நீ?” என்று சீறியிருந்தான் ஆதீஸ்வரன்.

என்னவோ எவ்வளவு தண்ணீர் பட்டும் தாராவிற்கு மயக்கம் தெளிவதாக இல்லை. மீண்டும் மயங்கத் துடித்த விழிகளை வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்தவளுக்கு ஒரு வார்த்தை பேசவும் தெம்பு இல்லை.

அவனது கைவிரல் மோதிரத்தை உருட்டியபடி நின்றிருந்த அவனின் சீற்றமான தோற்றத்தில் மிரண்டவளை நோக்கி, “உன்னை…” என பல்லைக் கடித்தபடி முன்னோக்கி வர,

அவனை எதிர்கொள்ளும் வலு இல்லாதவள் தன்னை குறுக்கி, விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.

எதிர்த்து நிற்பவர்களிடம் பலத்தைக் காட்டலாம். இப்படி வலுவே இல்லாதவளிடம் காட்டி என்ன பிரயோஜனம் என்று தோன்றவே கையை மடக்கி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான்.

தன்னை அடிக்கத்தான் போகிறான் போல என மிரண்டு ஒடுங்கியவள், அவன் தன்னை இன்னமும் நெருங்காது இருப்பது புரிந்து, பயத்தில் வெடவெடத்த இதழ்களோடு மெல்ல விழி திறந்து பார்க்க, அவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி நின்றிருப்பது புரிந்தது.

இங்கு என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை. இவனின் கோபத்திற்கான காரணமும் புரியவில்லை.

தன்னை விளக்கிவிடும் வேகத்துடன், “சாரின்ட சம்மதம் இல்லாதே இவ்விட தாமசிச்சது தீட்டான்னு… அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க சார்…” என்றாள் வறண்ட குரலில்.

ஆதிக்கு தன் மனநிலை என்னவென்றே புரியவில்லை. அவள் மீது நிறைய கோபம் இருந்த போதும், அவளின் இயலாத நிலையைப் பார்த்த பிறகு அது செல்லுபடியாக மறுத்தது. அவளின் பயந்த தோற்றமும், விழிகளின் யாசிப்பும் அவனை தடுத்து நிறுத்துகிறது. அதில் தன்மீதே அவனுக்கு ஆத்திரம்.

அப்பொழுது தான் அதை அவன் கவனித்தான், தண்ணீரைக் கவிழ்த்ததில் மொத்தமாக முகத்தில் படர்ந்திருந்த கூந்தல் கற்றைகளைத் தாரா தன்னியல்பாகக் காதோரம் ஒதுக்கி விட்டிருக்க, அவளின் இடது காதின் அருகில், கன்னத்துத் தாடையில் கடுகளவில் சிவப்பாய் ஒரு மச்சம். அதிர்ந்து நின்று விட்டான் ஆதீஸ்வரன். அவனைச் சுற்றிய உலகமே சில நொடிகள் சுழல மறுத்தது.

நிலைகொள்ள முடியாமல் தவிப்புடன், வேக மூச்சுக்களை உள்ளிழுத்து வெளியேற்ற அவன் கண்கள் தன்னையும் மீறி அவளின் கழுத்துக்குப் பயணித்தது.

தன் விளக்கத்திற்குப் பதிலேதும் சொல்லாமல் நின்றிருந்தவனையே தாரா அச்சத்தோடு பார்த்தபடி அமர்ந்திருக்க, அவளின் கழுத்தை அவன் எண்ணிய விதத்தில் அவனால் பார்க்க முடியவில்லை.

சற்றும் யோசிக்காமல், அவளின் தாடையைப்பற்றி மேலேற்ற, அந்த வெண்சங்கு கழுத்தின் அழகான ஒரு சரிவில் அம்சமாய் அமர்ந்திருந்தது இன்னொரு மச்சம். அடர் கருப்பில்… அழகான ஒரு புள்ளி போல…

தாடையைப் பற்றியிருந்த கரங்கள் அந்த மச்சம் நோக்கிப் பயணிக்கத் துடியாய் துடித்தது. உஷ்ண மூச்சுக்கள் இதழ்களும் பயணிக்க வேண்டும் என அடம் செய்து கொண்டிருந்தது.

‘தன் முகத்தில் என்ன ஆராய்கிறான்? நான் உண்மையைப் பேசுகிறேனா பொய் சொல்கிறேனா என கண்டுபிடிக்க பார்ப்பானோ? கோபமாக இருக்கிறானே அடித்து எதுவும் விடுவானோ?’ என தன் சிற்றறிவுக்கு எண்ணியவரை யோசித்துக் கலங்கிக் கொண்டிருந்தாள் தாரகேஸ்வரி.

ஆதீஸ்வரனுக்கு இந்த உணர்வு போராட்டத்தைக் கையாள தெரியாமல் வேகமாக தன்னறைக்குள் புகுந்து, கதவை அறைந்து சாற்றிக் கொண்டான். தன் முகத்திலேயே அடித்தது போன்று முகம் கன்றிப்போய் அமர்ந்திருந்தாள் தாராகேஸ்வரி.

அறைக்குள் நுழைந்த ஆதீஸ்வரன், அந்த அறையில் துளி வித்தியாசத்தையும் உணரவில்லை. சத்தியமாக அந்த அறையை ஒரு பெண் உபயோகம் செய்தால் என்று யாரும் சொல்ல முடியாது. சிறு மாறுதல் கூட அவனது அறையில் இல்லை.

சீதாம்மாவிடம் அறையைச் சுத்தம் செய்யச் சொன்னபோதும் அதையே தான் தென்னரசுவிடம் சொல்லியிருந்தார், “ரூம் ரொம்ப சுத்தமா தான் இருக்கு தம்பி. கூட்டி, தொடைச்சு மட்டும் விட்டிருக்கேன்” என்று அவர் சொன்னதாக தென்னரசு சொல்லியிருக்க, அதன் அர்த்தம் இப்பொழுது விளங்கியது.

என்னவோ தாராவின் மீது நேரடியாகக் குற்றம் சொல்லும்படியாக சிறு விஷயமும் அவனுக்கு கிடைக்க மறுத்தது. அதில் மனம் கொஞ்சம் இதமானது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அவனது இதழ்கள் அர்த்தமாய் புன்னகைத்துக் கொண்டது.

“தாரா… ஹ்ம்ம் சத்யா அப்படித்தான் சொன்னான்… அப்ப எனக்கு யோசிக்க தோணலை… தாரான்னா தாரகேஸ்வரின்னு… வெல்கம் பேக்…” என்றான் அழகான சிரிப்புடன்.

அதற்குள் அவன் கரங்கள் கப்போர்ட்டில் எங்கோ ஓர் மூலையில் பதுக்கி வைத்திருந்த அவளின் எட்டு வயது புகைப்படத்தை எடுத்து வருடித்தரத் தொடங்கியிருந்தது.

“பிரதாபா… நான் கூட நீ அப்பப்ப வெத்துவேட்டு மாதிரி எதையோ செய்யறயேன்னு… உன்னை டம்மியா நினைச்சிட்டு இருந்தேன். பரவாயில்லை வாழ்க்கையிலேயே உருப்படியா ஒரு விஷயம் பண்ணியிருக்க… இந்த கரகாட்டாக்காரி என் கண்ணுல படாம இருக்க இத்தனை வருஷமும்… கேரளா, பீகார்ன்னு சுத்திட்டு இருந்திருக்காளா? இத்தனை நாளும் அவளை தேடி எனக்கு போக முடியாம இல்லை… எங்கே தேடி போனா என்னை தொலைச்சிடுவேனோன்னு பயம்… இப்ப மாதிரி…” என்றவன் அவஸ்தையாய் தலை கோதிக் கொண்டான்.

“பரவாயில்லை… இது உன் கேம் போலவே நடக்கட்டும்… நீ யாரை வெச்சு எப்படிக் காய் நகர்த்தி இருக்கன்னு எனக்குத் தெரியாது… ஆனா இப்ப ஆட்டம் என் கையில… தேங்க்ஸ் பார் பிரிங்கிங் ஹெர் பார் மீ…” என்றான் உல்லாச குரலில்.

அவனுக்கு சர்வ நிச்சயம்… இன்னும் தாரா தங்களை அறியவில்லை என்று… அவள் அறியும் முன்பு தான் நினைத்ததை நடத்திக்கொள்ள நினைத்தான்.

பிரதாபனின் திட்டப்படியே பயணிக்கட்டும் என்று, ஆதீஸ்வரன் அமைதியாக தென்னரசுவிற்காக காத்திருக்க, சிறிது நேரத்தில் சத்யேந்திரன், கனிகா, அவளின் தோழி பிரவீணாவுடன் முதல் தளத்தில் தென்னரசு ஆஜர்.

கனிகாவின் தோழி பிரவீணா தான் இந்த வேலையைச் செய்தாளாம். அவளைத் தனியே வைத்துத் தான் ஆதியும் தென்னரசுவும் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

“இல்லை சார் கனிகா, சத்யாவோட காதலுக்கும் கல்யாணத்துக்கும் உங்க கல்யாணம் தான் தடையா இருந்தது… இந்த தாரா சீனியரும் என்னவோ இந்த ஊருல பாதுகாப்பு இல்லைன்னு பயந்து இங்கே இருந்து ஓடவே பார்த்துட்டு இருந்தாங்க… ரெண்டு பிரச்சினைக்கும் இது ஒரு தீர்வா இருக்கும்ன்னு நினைச்சு தான் இப்படி லிங்க் பண்ணி விட்டேன்” என அசாராமல் அந்த பெண் சொல்லிக்கொண்டே போக,

‘லூசா நீ…’ என்று தான் தென்னரசு பார்த்து வைத்தான். ஆதிக்கோ உன் கதையை முழுதாக அவிழ்த்து விடு என்ற எண்ணம் தான். ஆனால், அமைதியாக இருக்க முடியாதே!

“ஷட் அஃப்” என வேண்டுமென்றே கத்தியிருந்தான்.

பிரவீணா விழிக்க, “உண்மையை மட்டும் சொல்லு…” என்றான் ஆதி அழுத்தமாக.

“என்ன நீங்க? எவ்வளவு கஷ்டப்பட்டு யாராலேயும் செய்ய முடியாத விஷயத்தை சாதிச்சிருக்கேன்…” என்று கொஞ்சம் கூட பயமில்லாமல் பேசினாள் அந்த பெண். ஒரு மாதிரி அசட்டுத் துணிச்சல் அவளிடம். இந்த ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தைப்பற்றி ஆராயாமல் இறங்குவார்களே அதுபோன்றதொரு அசட்டுத் துணிச்சல்.

தென்னரசு தலையிலேயே அடித்துக் கொண்டான். ஆதியோ புருவம் சுருங்க எதையோ யோசித்துவிட்டு, “திட்டம் போடாம இவ்வளவு வேகமா செயல்பட முடியாது… அப்படி குறிப்பா இந்த பொண்ணை என்னோட சேர்த்துக் கதை கட்டணும்ன்னு உனக்கு என்ன அவசியம்?” என்றான் நிதானமாக.

“ஆவங்களுக்குத் தான் உங்க தேவை இருந்தது. அதை நான் எனக்குச் சாதகமா உபயோகப்படுத்திட்டேன்” என்று பிரவீணா இலகுவாகச் சொல்ல,

கோபமாக எதையோ பேச வந்த தென்னரசுவை கை நீட்டித் தடுத்த ஆதி, “புரியலை…” என்றான் நிதானமாக.

“சார்… நீங்க யாரையும் கல்யாணம் செஞ்சுக்கலையாம். பெரிய சவால் மாதிரி பேசுனாங்க… அதுதான் நான் அழகா பிளான் பண்ணி சாதிச்சுட்டேன்…” என்று பெருமையாக அந்த பெண் பேச, இது முழு பைத்தியமே தான் என தென்னரசு முடிவு செய்து கொண்டான்.

இந்த பெண்ணை கொஞ்சம் தூண்டி விட்டாலும்… முடியாது, நடக்காது என்கின்ற விஷயங்களை அதன் பின்விளைவுகளைப் பற்றி ஆராயாமல் முயற்சி செய்து பார்க்கும் ரகம் என ஆதிக்கு அவளின் பேச்சிலிருந்தே புரிந்து விட்டது. அவளின் இந்த குணத்தைத் தான் பிரதாபன் உபயோகித்திருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டான்.

அவளிடம் மொத்த விவரங்களையும் வாங்கிவிட்டு அவளை வெளியே அனுப்பச் சொன்ன ஆதி, பாட்டியிடமிருந்து வந்த அழைப்பை மீண்டுமொருமுறை துண்டித்தான்.

“அந்த சிசிடிவி வீடியோஸை காட்டு…” ஆதி சொல்லுக்குப் பணிந்து, லேப்டாப்பை இயக்கி தென்னரசு காட்டினான்.

கனிகாவும் சத்யேந்திரனும் அருகருகே அமர்ந்து எதையோ பேசிக்கொண்டிருக்க, அந்த நேரத்தை பயன்படுத்தி சத்யாவின் கைப்பேசியிலிருந்து பிரவீணா எதையோ குறித்துக் கொள்வது புரிந்தது. பாட்டி நம்பராக இருக்கும் என ஆதி யோசிக்க,

அதற்குள் அனைவருக்கும் கொடுத்த பழச்சாற்றில் தாராவிடம் பேச்சுக் கொடுத்தபடியே அவளுடையதில் மட்டும் எதையோ கலந்தது தெரிந்தது. அவள் கலந்த மயக்க மருந்தின் வீரியத்தில் தான் இன்னும் எழக்கூடத் தெம்பு இல்லாமல் தாரா இருக்கிறாள் பாவம்.

பிரவீணா தாராவிடம், “நீங்க இன்னும் ஒரு நாள் இதே வீட்டுல சேப்பா இருக்கணும்ன்னா ஒரே ஒருத்தர் மனசு வெச்சா தான் முடியும்” என சொல்லி, ஆதியிடம் பேச வற்புறுத்தி அனுப்பி வைத்தாளாம். அதையும் பிரவீணா தான் சொல்லிவிட்டு போனாள்.

“பிரதாபன் பிளான்ல தப்பிச்சு இந்த பிரவீணா பிளான்ல விழுந்துட்டமே சார்… சரியான முழு லூசா இருக்கும் போல… இவங்க அப்பா தான் அந்த டைரக்டர் வெங்கடேஷ்… பேசாம இந்த பொண்ணை அவருக்கு அசிஸ்டண்ட்டா அனுப்பிடலாம். சாதாரண பைத்தியம் கூட இல்லை… முழு பைத்தியம்…” என தென்னரசு பாவமாகப் புலம்ப,

பிரதாபன் தன் பெயரே வெளியில் வராமல் விளையாடி இருக்கிறானா? இல்லை இது எல்லாம் எதேச்சையாக நடந்ததா என ஆதியே சற்று குழம்பித் தான் போனான்.

எல்லா புள்ளிகளையும் இணைத்து பார்த்தான். பிரதாபனின் கைப்பேசி அழைப்பு மட்டும் இடறியது. அது மட்டும் இல்லையென்றால், இப்பொழுது சந்தேகம் அவன் புறம் திரும்பியிருக்காது என்று புரிந்தது. எல்லாவற்றையும் தீர விசாரிக்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டவன், தென்னரசு தன்னையே பார்த்திருப்பது கண்டு,

“ம்பச்… பாட்டி கிட்ட இதை எப்படி எக்ஸ்பிளைன் பண்ணறது…” என புலம்பல் போலச் சொன்னான் ஆதீஸ்வரன்.

“சார் அவங்களுக்கு வேணுங்கிறது உங்க கல்யாணம் மட்டும் தான்… இப்ப இந்த பொண்ணு செஞ்ச வேலையால அவங்களுக்கு துருப்பு சீட்டு வேற கிடைச்சிருச்சு…” இதை சமாளிக்கிறதுக்கு ரொம்ப மெனக்கெடணும் என்ற அர்த்தத்தில் தென்னரசு பேச,

“இப்ப பாட்டி ரெண்டே சாய்ஸ் தான் தருவாங்க… ஒன்னு இந்துஜா… இல்லைன்னா இந்த தாரா ரைட்…” என்று ஆதி கேட்க, தென்னரசுவிற்குத் தலை சுற்றியது.

‘பாட்டியைச் சமாளிக்கிறது பத்தி யோசிப்பார்ன்னு பார்த்தா, சாய்ஸ் பத்தி பேசறாரு…’ என புரியாமல் ஆதியை ஏறிட,

“ஹ்ம்ம்… இந்துஜா இப்ப தான் யூபிஎஸ்ஸி கிளியர் பண்ணி ப்ரொபெஷனரி ஆபிஸரா ஜாயின் பண்ணி இருக்கா… ஆனா அவளுக்கு அந்த சிவில் சர்வீஸோட மதிப்பே தெரியலை… இன்னும் எவ்வளவு நாள் சர்வைவ் ஆவான்னு தெரியலை… கண்டிப்பா ஒரு பெரிய இஸ்ஸு பண்ணுவா பாரு… பாட்டி கிட்ட அவ பிம்பம் வேற… அவளோட உண்மையான பிம்பம் வேற…” என ஆதி அடுக்கித்தள்ள, ‘என்னதான் சொல்ல வரார் இவரு?’ என பே என்று பார்த்திருந்தான் அவன்.

கடைசியாக தென்னரசுவை ஒட்டுமொத்தமாக வாயைப் பிளக்க வைக்கும் வரியை ஆதீஸ்வரன் சொல்லியே விட்டான்.

“தாரா ஈஸ் பெஸ்ட் சாய்ஸ்… நீ பாட்டியை இங்க வர வை… மத்த விஷயங்களைச் சீக்கிரமா முடிக்கலாம்…” என்று ஆதீஸ்வரன் முடிக்க, அவன் தந்த அதிர்ச்சியில் வார்த்தைகள் வற்றிப்போகப் பேச மறந்து நின்றிருந்தான் தென்னரசு.