லதா ஆவலுடன் கண்ணனை அழைத்து கொண்டு மருத்துவமனை வர, சத்யா கைகளால் கண்களை மூடியவாறு படுத்திருந்தான்.அவன் அருகிலேயே ஜெகன் இடிந்து போய் அமர்ந்திருந்தார்.
“ஏங்க…. ஏங்க…இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு. என் அண்ணங்க. கண்ணன்” என்று சொல்ல,
ஜெகனோ கண்ணனை கண்டு முதலில் புரியாது விழித்தவர் பின் தெரிந்து கொண்டேன் என்ற பாவனையை வெளிப்படுத்தி, கண்களை எட்டாத சிரிப்பை உதிர்த்து வந்தவர் நலம் விசாரித்து, மனைவி இறப்பிற்கு வருந்தி, மருமகனின் வேலையில் பெருமைபட்டு என, அங்கு நலன் விசாரிப்பே அரங்கேறியது.
சற்று நேரம் கடந்து லதா மெதுவாக கண்ணன் கூறிய தகவலை கூற, ஜெகன் முதலில் திகைத்தாலும் பின் “இல்லப்பா….. வேண்டாம். நாங்க ஹாஸ்பிடல சொல்லியிருக்கோம். கூடிய சீக்கிரம் டோனர் கிடைச்சுடுவாங்க. உனக்கெதுக்கு சிரமம்”
கண்ணன், “இருக்கட்டும் மாமா. என் மருமகனுக்கு நான் செய்யாம வேற யார் செய்யப் போறா? தாய்மாமனா இந்த ஒன்னையாவது நான் செய்யறேனே. சின்ன வயசுல என் மருமகன் கை பிடிச்சு ஊரே சுத்தி வரணும்னு நினைச்சேன். முடியல. அவனோட வளர்ச்சியில மாமனா தோள் கொடுக்கணும்னு நினைச்சேன். அதுவும் முடியல. இப்போ என்னால முடிஞ்சது இதுதான். இதையாவது செய்யவிடுங்க மாமா” என்று கண்ணீரோடு கேட்க, அவரோ அப்போதும் எதுவும் பேசாமல் அமைதியாக யோசனையில் இருந்தார்.
யோசனையில் இருந்தவரை கண்ணனும், அசோக்கும் பேசி பேசியே சம்மதிக்க வைத்தனர்.
ஜெகன் சம்மதம் கிடைத்தபின் சிறிதும் காத்திராமல் நேராக மருத்துவரை பார்க்க சென்றனர்.
டாக்டர் கண்ணனுக்கு அனைத்து செக்கப்பும் செய்ய, அவர் கிட்னி, இரத்த மாதிரி அனைத்தும் சத்யாவுக்கு ஒத்து போனது. அதனால் உடனே இருவருக்கும் அறுவைசிகிச்சை செய்து கிட்னியை மாற்றிவிடலாம் என்றவர் சொல்லிவிட, அனைவரும் மகிழ்ந்து போயினர்.
ஆப்ரேஷன் செய்வதற்கான வேலைகள் அனைத்தும் வேகமாக நடந்தது. சத்யா யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். மகனின் அமைதி லதாவிற்கு மனதை உறுத்த,கணவனை தனியாக அழைத்து சென்று என்னவென்று விசாரித்தார்.
ஜெகனும் மீனாட்சி வந்த விஷயம் சைன் பண்ணி கொடுத்தது என அனைத்தையும் கூற, லதாவிற்கு நெஞ்சு வலியே வருவது போல் இருந்தது.
“என்னங்க இந்த பொண்ணு இப்படி பண்ணிட்டா? நம்ம பையன விட நல்ல பையன் அவளுக்கு மறுபடியும் கிடைப்பானா? இப்போதான் எல்லாமே சரியாயிடுச்சுல்ல நாம வேணா மறுபடியும் நேர்ல போய் பேசலாமா”,
“இல்ல லதா அதுக்கு இனிமே எந்த அவசியமும் இல்லை. அவன் சைன் பண்ணி கொடுத்துட்டான். அதனாலதான் ஒரு மாதிரி இருக்கான். இது அவன் வாழ்க்கை. இனி என்ன முடிவா இருந்தாலும் அவன்தான் எடுக்கணும்.
“ஏங்க அவன் சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும். நாமதான்…..”.
“என்ன பேசற லதா. ஒன்னு இல்ல ரெண்டு இல்ல கிட்ட தட்ட பத்து கம்பெனிய தன் பொறுப்புல பார்த்துட்டு இருக்கவன் அவன். அது மட்டும் இல்லாம வேண்டாம்னு விட்டுட்டு போனது அவங்கதான். நாம இல்ல”.
“வேண்டான்னு விட்டுட்டு போறதுக்கு இது என்ன சாதாரண பந்தமாங்க. ஆயிரம் காலத்து பயிருங்க. சின்ன பிள்ளைங்க தான் ஏதோ விளையாட்டுதனமா பண்றாங்கன்னா, பெரியவங்க நாமளும் அப்படியே விட முடியுமா புரியாம பேசாதீங்க. நாம ஏதாவது ஸ்டெப் எடுத்தே ஆகணும்”.என்று சொல்ல,
ஜெகனோ பெருமூச்சுடன் “அன்னைக்கு மருமககிட்ட நிறைய டைம் பேசிட்டேன் லதா. எந்த பிரயோஜனமும் இல்ல. அந்த பொண்ணு பிடிவாதமா இருக்கு. அது மட்டும் இல்லாம கையெழுத்து போடும்போது கடைசியா சத்யா கையெழுத்து போடட்டுமாம்மானு கேட்டான். மருமக பொண்ணு சம்மதமா தலையாட்டுன அப்பறம்தான் அவன் கையெழுத்து போட்டான். இதுக்கு மேல நாம பேசுறதுக்கு எதுவும் இல்லை” என்க,
லதாவிற்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது மகனின் வாழ்வை நினைத்து,
“அப்போ என் பையனோட வாழ்க்கை….” என்ற லதாவின் கேள்விக்கு ஜெகனிடமிருந்து “காலம்தான் பதில் சொல்லணும்” என்ற வார்த்தையே பதிலாக வந்தது.
சத்யா முதலில் இருந்த துறுதுறுப்பு அனைத்தும் இழந்து தனக்குள்ளேயே இறுகிப்போனான். எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். கேட்கும் கேள்விகளுக்கு ஆமாம்,இல்லை என்ற பதிலோடு முடித்து கொண்டான்.
நாட்கள் இப்படியே இறுக்கமாக செல்ல ஆபரேஷன் நாளும் அழகாக விடிந்தது. சத்யாவிற்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
ஒரு வாரம் கடந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்தவனுக்கு நோய்த்தொற்று எளிதில் பரவும் என்பதால் டாக்டர் பல ஆலோசனைகளை வழங்கினார். இரண்டு வருடம் வெளியில் எங்கும் செல்லக்கூடாது. வீட்டிலிருந்தே பணிகளை செய்து கொள்ள வேண்டும். வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். டஸ்ட் அலர்ஜி வர கூடும் என்பதால் இது போன்று இன்னும் பல விஷயங்களை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
கண்ணனும் உடல் நலம் தேறியிருந்தார். தங்கை குடும்பத்துடன் சற்று நாட்கள் இருந்துவிட்டு மகனின் வேலை காரணமாக திருச்சி கிளம்பிவிட்டனர்.
முதலில் போல் இல்லாமல், தங்கை குடும்பத்துடன் மிகவும் அன்பாக இருந்தார். அடிக்கடி அவர்களை வந்து பார்த்து சென்று கொண்டிருந்தார்.
சத்யா வீடு மிகவும் அமைதியாக இருந்தது. அசோக் வரும் நாட்கள் மட்டுமே வீடு கலகலப்பாக இருக்கும்.
வீட்டிற்கு வந்த சிறிது நாட்களிலேயே, தன் பணியை துவங்கினான் சத்யா. ஓய்வு எடுக்க சொல்லி சொன்ன பெற்றோர்களிடம் “நான் என்ன மண் வெட்டவா போறேன். சும்மா சிஸ்டத்த பார்த்துட்டு இருக்க போறேன் அவ்வளவுதான். இது ஒன்னும் அவ்வளவு பெரிய வேலை இல்லை” என்றுவிட, அதற்கு மேல் அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.
லதா வீட்டு வேலைகள் அனைத்திலும் பொறுப்பாக இருந்தார். மகனின் உடல் நலத்திற்காக பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தார். சத்தான உணவுகளாக டாக்டர் சொன்ன உணவுகளை சமைத்துக் கொடுத்தார்.
சத்யா உடல் தேறினான். ஆனால் மனம் தேறவில்லை. தனக்குள்ளேயே இறுகி போனான். முன்பிருந்த துறு துறுப்பு, சிரிப்பு அனைத்தையும் இழந்து அமைதியாக இருந்தான். அனைவரிடமும் எளிதில் பழகும் குணம் உடையவன் இப்போது எளிதில் விளக்கி நிறுத்தும் தன்மை உடையவனாக மாறினான். முதலில் எல்லாம் அவனால் சிரிக்காமல் பேச முடியாது ஆனால் இப்பொழுது சிரிப்பு என்றாலே என்ன என்பது போல் அவன் இதழ்கள் எப்பொழுதும் இறுக்கமாகவே இருந்தது.
ஊரில் மீனா உடல் உருகி கொண்டே போனது. அவள் நலனை அறிவதற்கும் அவளை சோதிப்பதற்கும் யாரும் அங்கு அவளை ஊன்றி கவனிக்கவில்லை. தங்கை கண்ணம்மா தான் அக்காவை பொறுப்பாக கவனித்துக் கொண்டாள். அவள் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு தாயிடம் சொல்ல தாயோ ஏதோ யோசனை வந்தவராக சென்று மீனாவின் கையை பிடித்துப் பார்த்தார். அவர் என் சந்தேகம் உறுதியானதும் முகம் பேயறைந்தது போல் ஆனது. ஆம் மீனா கருவுற்று மூன்று மாதங்கள் கடந்து இருந்தது.
என்ன முயன்றும் அவரது கோபத்தை அவரால் அடக்க முடியவில்லை அதனால் மகள் தலையில் ஓங்கி கொட்டியவர் “ஏன்டி வீட்டுக்கு விலக்கு ஆகி எத்தனை மாசம் ஆச்சு?” என்க,
கணவனின் நினைப்பிலேயே மூழ்கி போய் இருந்தவளுக்கு அதெல்லாம் எங்கு நினைவு இருந்தது. திரு திருவென அவள் விழிக்க, அது அவருள் மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. “இதைக்கூட கவனிக்காமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்க. பொம்பள புள்ளைக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா”என்று திட்ட, அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“எல்லாம் என் தலையெழுத்து ஒண்ணுத்துக்கும் உதவாம இப்புடி ஒரு புள்ள எனக்கு” என்று தலையில் அடித்து கொண்டவர் யோசனையோடு வெளியே சென்றுவிட, கண்ணம்மாவிற்கு ஓரளவு விஷயம் புரிந்தது.
உடனே வேகமாக அக்கா அருகில் சென்றவள் அவளை அணைத்து கொண்டு “ஹே…..அக்கா நான் சித்தி ஆக போறேன். நம்ம வீட்டுக்கு வர போற அடுத்த தலைமுறையோட முதல் வாரிசு. ஹே…. ஜாலி…ஜாலி…. நான் போய் மலைகிட்ட சொல்லிட்டு வரேன்” என்றவள் ஓட, செல்லும் தங்கையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் மீனா.
மெதுவாக தன் கரத்தை வயிற்றில் வைத்தவள் ‘ஏங்க….. நமக்கு பாப்பா வர போகுதுங்க…பாப்பாங்க…. நம்ம பாப்பா….. ஆனா…. இந்த சந்தோசமான விஷயத்தை என்னால உங்ககிட்ட சொல்ல முடியல.
இந்த விஷயம் தெரிஞ்சா நீங்க எவ்ளோ சந்தோஷப்படுவீங்க. அப்போ உங்க முகம் எப்படி மாறும்ங்கறத பார்க்க எனக்கு ஆசையா இருக்குங்க. நான் உங்களையே நினைச்சுட்டு இருக்கேன். நீங்க என்னை நினைப்பீங்களா?’ என்று தனக்குள் கேட்டு கொண்டவள் பின் கசந்த சிரிப்பை வெளிப்படுத்தி “ம்கூம்….. நான் அன்னைக்கு பேசுன பேச்சுக்கு. நீங்க எப்படி என்னபத்தி யோசிப்பீங்க’ என்று சொல்லி கொண்டவள் மனம் பாரமாகி போனது.
சத்யாவை மீனா கடைசியாக கையெழுத்து வாங்க சென்ற அன்று பார்த்தது. அதன் பின் அவனுக்கு என்ன ஆனது. எப்படி இருக்கிறான். ஆப்ரேசன் செய்தார்களா’என்று ஒரு தகவலும் அவளுக்கு தெரியவில்லை.
கணவனை எண்ணி கண்ணை மூடியவள் விழிகளின் முன் வந்து நின்றான் அவளவன். முகம் நிறைந்த எதிர்பார்ப்புடன் “கையெழுத்து போடட்டுமா” என்று கேட்டான். அந்த கேள்வி அவளை நெருப்பாக சுட்டெரித்தது.
கேள்வியின் அனல் தாங்க முடியாதவள் பட்டென்று கண்களை திறந்து ‘நீங்க அன்னைக்கு கேட்ட போதே வேண்டாம். கையெழுத்து போடாதீங்க. எனக்கு நீங்க வேணும். நீங்க மட்டும்தான் வேணும். உங்களோடயே என்னை வைத்துக்கொள்ளுங்களேன். இவங்க யாரும் நமக்கு வேண்டாம். நாம மட்டும் தனியா எங்கயாவது போயிடலாம்’ என்று அலறிய மனதிற்கு அவள் சொன்ன ஒரே சமாதான மந்திரம் என்னவர் உயிரோடு இருக்க வேண்டும் என்பதே.
ஆம், சென்னப்பன் மீனாவை மிரட்டிதான் கையெழுத்து வாங்க அனுப்பி வைத்தார் “நீ நேரா போய் அவன் கிட்ட சைன் வாங்கிட்டு வர்ற. என்ன பேசுவியோ ஏது பேசுவியோ எனக்கு தெரியாது. வரும்போது இந்த பத்திரத்துல அவன் கையெழுத்து இருக்கணும்.
ஒரு சின்ன பையன்ட்ட தோத்துப்போக, நான் ஆள் இல்ல. கையெழுத்த அந்த பேப்பர்ல நீ வாங்கிட்டு வரல…. அப்புறம் அவன் உயிரோட இருக்க மாட்டான்.
அவனை போடறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். அவன் உயிரோட இருக்குறதும் இல்லாம போறதும் உன் கையில தான் இருக்கு என்று சொல்லிதான் மீனாவை மருத்துவமனைக்குள் அனுப்பி வைத்தார்.
அதையெல்லாம் நினைத்துப் பார்த்து கொண்டிருந்த மீனாவை ஏழுமலை வந்து அணைத்து கொண்டான்.
உடன்பிறப்புகள் மூவரும் மன சஞ்சலம் இன்றி சந்தோஷமாக சிரிக்க,
இந்த சந்தோஷம் சற்று நேரம் கூட நிலைக்காது என்ற விதியின் சிரிப்பை அவர்கள் அறியாமல் போனதை என்னவென்று சொல்வது.
இரவு உணவின் போது யாரும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டனர். தனத்தின் முகம் கூட ஒரு மாதிரியாகவே இருந்தது. உணவை முடித்து அனைவரும் சென்று படுத்துவிட மீனா மட்டும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தாள்.
மீனா, ‘என்னடா இது தூக்கம் வர மாட்டிக்குது. தாகமா வேற இருக்கு போய் தண்ணி குடிச்சுட்டு வரலாம்’ என்று எண்ணியவள் சமையல் அறை நோக்கி செல்ல,
சென்னப்பனும் தனமும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் என்ன பேசி கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் உரையாடலை கவனித்த மீனாவிற்கு ஈர குலையே நடுங்கி போய்விட்டது.
“என்னங்க இது அவன் உறவே வேணாம்னு விட்டுட்டு வந்தாச்சு. அப்புறம் எதுக்கு அவனோட ரத்தம். பேசாம அந்த கருமத்தை அழிச்சிடலாம்.
எனக்கு விஷயம் தெரிஞ்ச உடனே அடுத்த தெருவுல இருக்க மருத்துவச்சிகிட்ட மருந்து ரெடி பண்ண சொல்லிட்டேன். மருந்து செஞ்சு நேரம் கடந்துதான் கொண்டு வந்து குடுத்தா. இல்லைனா ராவு சாப்பாட்டுலயே கலந்து குடுத்துருப்பேன். காலைல உள்ள இருக்க எல்லாம் அலசிட்டு வெளிய வந்துருக்கும்.
இப்போவும் ஒன்னும் கெட்டு போகல, காலைல காபில அவளுக்கு கலந்து கொடுத்துடறேன். எல்லாம் வெளிய வந்துடும். அப்புறம் வேற ஒரு மாப்பிள்ளைய பார்த்து புள்ளைக்கு கட்டி வச்சுட்டோம்னா, அவ புது வாழ்க்கைய பார்க்க ஆரம்பிச்சுடுவா” என்று சொல்ல,
சென்னப்பனோ “மருத்துவச்சிகிட்ட ஏன் சொன்ன? முருகேச இங்கிலீஷ் மருந்து வாங்கிட்டு வர சொல்றேன். அதை குடு.
“இல்லங்க என்னதான் இங்கிலீஷ் மருந்து குடுத்தாலும் நாட்டு மருந்து அளவுக்கு இருக்காது” என்று தந்தைக்கு இணையான கர்வத்தோடு தாய் பேசுவதை கேட்ட மீனாவிற்கு தலையில் இடி விழுந்தது போல் ஆனது.
அப்படியே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்தவள் “அம்மா நீங்களுமா என்று மனதில் புலம்ப, மேலும் தனம் பேசுவது அவள் காதில் விழுந்தது “ஆமா ஒரு சீக்கு புடிச்சவனே பார்த்து கட்டி வச்சு, நாமே நம்ம புள்ள வாழ்க்கையை அழிக்க பார்த்துட்டோம். நல்லவேளை இப்போவே தெரிஞ்சுது. இனி நல்ல பணக்காரனா ஆரோக்கியமானவனா பார்த்து கட்டி வைக்கலாம்னுதான் அறுத்து கட்டலாம்னு சொன்னேன். நீங்கதான் கையெழுத்து அது இதுனு ஏதோ சொன்னீங்க.
நாம இருக்க இருப்பென்ன, நமக்கு கூல கும்பிடு போடறவன் எல்லாம் கை நீட்டி பேசற அளவுக்கு ஆகி போச்சு வந்தவனால, அவனுக்கு என்ன நல்லா ஆண்டு அனுபவிச்சுட்டு நிம்மதியா போய் சேர்ந்துடுவான். அப்புறம் கஷ்டப்பட போறது நம்ம பொண்ணுதானே. ஒரு மாசம் வாழ்ந்த வாழ்க்கைக்கு என் புள்ள வாழ்க்கை முழுக்க பொட்டு இல்லாம பூவு இல்லாம வாழ முடியுமா. மத்தவங்க நம்ம புரிஞ்சுக்கலைனா பரவால்ல நாம பெத்து வச்சதே சரியில்லையே. ஊம கோட்டான் மாதிரி இருந்துக்கிட்டு புருஷன் புருஷன்னு உருக்கறா.
இப்படியே இவ இருந்தா கையெழுத்து வாங்க முடியாதுனுதான் மிரட்டி கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன். இல்லன்னா இவ போய் அவன் கால்ல விழுந்துருப்பா. உங்களுக்கு அசிங்கமா போய் இருக்கும். அவகிட்ட எப்படி பேசினாமடங்குவான்னு எனக்கு தான் தெரியும்”என்க,
சென்னப்பனோ “பரவால்ல என் கூட சேர்ந்து நீயும் நல்லா விவரமா தான் மாறிட்டே. நான்கூட பெரியவ அப்பாவினு பார்த்தேன். என்கிட்டயே சொல்றா என் புருஷன்பானு எனக்கு வந்த கோவத்துக்கு பல்ல தட்டி கைல குடுத்துருப்பேன். நீ சாடையா அமைதியா இருங்க, நான் பார்த்துக்கறேன்னு சொல்லவும் சும்மா மிரட்டிட்டு வந்துட்டேன்” என்று சொல்ல,
தனமோ “நம்ம பிள்ளைக்கு சீக்கிரம் வேற கல்யாணம் பண்ணி வைக்கனுங்க அப்போதான் நிம்மதியா இருக்கும். இல்ல… நம்ம கூடவே வச்சுக்கலாம்” என்று சொல்ல மீனாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
மேலும் அவர்கள் பேசிக் கொண்டிருக்க அதையெல்லாம் அவள் எங்கு கவனித்தாள். அவள் எண்ணம் முழுவதும் குழந்தையை காப்பாற்றுவதிலேயே இருந்தது.
முகத்தில் தீவிரத்துடன் வயிற்றை இறுக்கிப்பிடித்தவள் ‘உங்க அப்பாவை தான் அவர் உயிரை காப்பத்த விட்டுக் கொடுத்துட்டேன். ஆனா உன்னவிட்டுக் கொடுக்க மாட்டேன். இனி மீதமிருக்க என்னோட வாழ்க்கை வாழ்வதற்கான பிடிப்பு நீதான். நீ மட்டும்தான்.
இது என்னோட வாழ்க்கை. சொந்த அம்மா, அப்பாவாவே இருந்தாலும் அவங்க இனி என் வாழ்க்கைய பந்தாட நான் விடமாட்டேன்.
நான் வேணா அவங்க குழந்தையா இருக்கலாம், எனக்கானமுடிவை அவங்க எடுக்கலாம். ஆனா என்னோட குழந்தை. எனக்குள்ள உருவான உன்னை அழிக்க அவங்களுக்கு என்ன உரிமை இருக்கு.
உன்னை நான் காப்பாத்தியே தீருவேன். என்னைப்பற்றி எனக்குள் உருவான உன்னைப்பற்றி யோசிக்காத இவங்க எனக்கு வேண்டாம். இவங்க யாரும் எனக்கு….. இல்ல…. நமக்கு வேண்டாம். நாம எங்கயாவது இவங்க மூச்சு காத்துக்கூட படாத ஊருக்கு போயிடலாம்’என்று தனக்குள் இருந்த குழந்தையிடம் பேசி முடிவெடுத்தவள் விறு விறுவென அவள் அறைக்கு சென்று துணிகளை எடுத்து பையில் திணித்துக் கொண்டு அறையைவிட்டு வெளியில் வர, அவள் பாதையை மறைத்து கொண்டு நின்றது இரண்டு உருவம்.
தாங்கள் பேசியதை மீனா கேட்டுவிட்டாலென்று பெற்றோர் இருவரும் வந்துவிட்டார்களோ…. அடுத்த எபியில் பார்க்கலாம்.