நிச்சயம் தனியாக வேண்டாம், நேரடியாக திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என கந்தசாமி பேசியதற்கு சுகந்தியின் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை.

 

சுகந்தியின் தம்பி இபோதுதான் கல்லூரி முதல் வருடம் படிக்கிறான். அவனுக்கு திருமணம் செய்யவெல்லாம் சில வருடங்கள் ஆகும் என்பதாலும் திருமணம் பையன் வீட்டில் என்பதாலும் அவரது பக்கத்திலிருந்து நிச்சயத்தை விமரிசையாக செய்ய பிரியப் பட்டார். 

செலவு அவர்களுடையது எனும் போது கந்தசாமியால் மறுத்து எதுவும் கூற முடியவில்லை. 

அடுத்த வாரத்தில் நிச்சயதார்த்தமும் அடுத்த மாதத்தில் திருமணமும் என தேதிகள் முடிவு செய்தனர். தட்டு மாற்றிக் கொள்ளவும் மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமென கூறி விட்டார் சுகந்தியின் அப்பா. 

மதியத்திற்குள் ஊர் திரும்பி விடலாம் என நினைத்து அங்கு முடிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றை விட்டு வந்திருந்தார் கந்தசாமி. எனவே கிளம்புவதிலேயே குறியாக இருக்க, மோகனும் அவனது தந்தையும் இருக்கிறோம் என பெண் வீட்டினரிடம் சொல்லி விட்டனர். 

மதிய விருந்து தயாராக ஆண்கள் வீட்டுக்கு வெளியில் இருந்த இடத்தில் சௌகரியமாக அமர்ந்திருந்தனர். சரவணன் அவனது நண்பர்களோடு நின்றிருந்தான். 

கந்தசாமி வாட்டமாக இருக்க என்னவென விசாரித்தான் மோகன். 

“இறக்கின தேங்கா உரிச்சிட்டு இருக்காவோ, களத்து மேட்டுல நெல்லு காயுது, நாம யாராவது இருக்கணும்ன்ன? நீங்க என்னடான்னா பட்டுன்னு சாப்பிடுறோம்னு ஒத்துக்கிட்டீய, அதான்” என்றார். 

“என்ன மாமா நீங்க! உறுதியான பொறவுதானே சாப்பிட சொல்றாவோ? வேலை கெடக்குன்னா சேரன் போவட்டும், இவ்ளோ மல்லுக்கட்டியும் கை நனைக்காம போனா நல்லாருக்காதுன்ன?” என்றான் மோகன். 

அருகில் இருந்த சேரனும், “நான் கிளம்புறேன் ப்பா” என சொல்லி எழுந்து நின்றான். 

‘என்ன! பெரிய மகன் இல்லாமல் விருந்து சாப்பிடுவதா?’ என அதிர்ந்து போய் கந்தசாமி பார்க்க, அக்காவின் மகனிடம், “அத்தை காதுல போய் மாமா நிக்குறேன்னு சொல்லி வெளில வர சொல்லு, ஓடு” என்றான். 

இப்போது அதிர்ச்சியடைந்த மோகனும், “என்னடா விளையாட்டா? அவன் உன் தம்பி, என்னமோ வேத்து ஆளு கணக்கா தங்கச்சியையும் கூட்டிட்டு போவணும்ங்கிற, ஏன் நாங்க பார்த்து அழைச்சிட்டு வர மாட்டோமா?” எனக் கோவமாக கேட்டான்.

“இருக்கட்டும் அத்தான், சோலி இருக்குன்னு அப்பா சொன்னதாலதான் கிளம்புறேன், நான்தானே அவள பைக்ல கூட்டிட்டு வந்தேன், திரும்ப வாறப்ப கார்ல இடம் போதாதுன்ன? இப்படி வெளில நான் இல்லாம தனியா இருக்க அளவுக்கு அவளும் இன்னும் பழகல” என்றவன் மனைவியையும் உடன் அழைத்துக் கொண்டு செல்வதில் தீர்மானமாக  இருந்தான். 

அவன் சொன்ன தொனியே சொன்னது, யாரை நம்பியும் அவளை விட்டு செல்ல அவன் தயார் இல்லையென. 

“நாங்க இத்தன பேர் இருக்கையில தங்கச்சி தனியா இருக்குன்னு சொல்வியா? என்னடா சங்கதி?” என மோகன் கேட்க, அதற்கு அமைதி காத்தான் சேரன். 

‘அந்த புள்ள மேல உசுரா இருக்கான், பாத்து நடந்துக்க’ என மனைவியிடம் புத்திமதி சொன்னவர் அதை தானே மறந்து போனோமே என நொந்து கொண்டார். 

அமுதன் தன் அத்தையை அழைக்க செல்ல, பேரனை போக விடாமல் பிடித்துக்கொண்ட கந்தசாமி, “சோலிய பாக்க வேற யார்கிட்டயாவது சொல்லிடுறேன், நீயும் இரு, ஆயும் இருக்கட்டும்” என்றார். 

தன் அத்தான் முன் அப்பாவை விட்டுத் தராமல் அவர் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து அமைதியாக அமர்ந்து கொண்டான் சேரன். 

மாமனாரையும் மச்சினனையும் குழப்பமாக பார்த்த மோகன்,  பின்னர் என்னவென விசாரிக்க வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டான். 

சேரன் சற்று தள்ளி நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க, மன வருத்தத்தில் இருந்த கந்தசாமி சுற்றிலும் வேறு யாரும் இல்லை என உறுதி செய்து கொண்டு மாப்பிள்ளையிடம் மனம் திறந்தார்.

“ஏதோ இருக்குன்னு அப்பவே நினைச்சேன் மாமா. அத்தைய பத்தி நல்லா தெரிஞ்சும் அவ்வோ வச்ச பொறியில இப்படி சிக்கிப்புட்டீயளே!” என்றான் மோகன். 

கந்தசாமி பாவமாக பார்க்க, “இனி என்ன சமாதானம் செஞ்சாலும் ரோஷக்காரன் முறுக்குவான் மாமா, பொறுமையா பேசி பாருங்க. என்ன இல்ல உங்ககிட்டன்னு உப்பு பொறாத விஷயத்துக்கெல்லாம் கணக்கு பார்க்குறீய, இவ்வோளுக்கு செய்யாம யாருக்காக சேர்த்து வைக்குறீங்கங்கிறேன்?” எனக் கேட்டான். 

“தப்புதான் மாப்ள, இருபத்தோரு வயசிலேருந்து என் கூட நிக்கிறான் மாப்ள, அதுக்கு முன்ன கூட லீவ் நாளெல்லாம் எனக்கு ஒத்தாசை பண்றதிலேயே அவன் பொழுது ஓடும். நானா கொடுக்கிறத வாங்குவானே தவிர பணம் வேணும்னு பெரிய தொகை கேட்டது இல்ல. புத்தி பெசகி போச்சு மாப்ள” என வருந்தினார்.

“இன்னொரு பொண்ணு வீட்டுக்கு வர போவுது, அது வர்றதுக்கு முன்னாடி மதுராவுக்கு செய்ய நினைக்கிறத செஞ்சிடுங்க. சேரன் ரூம்ல கெடக்குற கட்டிலு ரொம்ப பழசு மாமா, மொத கட்டிலு ஒன்னு புதுசா வாங்கி போடுங்க” என்றான் மோகன். 

மகனை எப்படியாவது சமாதானம் செய்து விட வேண்டும் என தீர்மானம் செய்து கொண்ட கந்தசாமி அவர்களுக்கு தேவையானவை அனைத்தையும் செய்து விட்டுத்தான் மகனிடம் சொல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டார். 

இது தெரியாத சேரன் பக்கத்து ஊரில் குத்தகைக்கு விட போவதாக இருந்த தென்னந்தோப்பை தான் எடுக்க போகிறேன் எனவும் வட்டிக்கு கடன் ஏற்பாடு செய்து கொடுங்கள் எனவும் அவனது நண்பர்களிடம் கான்ஃப்ரன்ஸ் அழைப்பு வழியாக சொல்லிக் கொண்டிருந்தான். 

விருந்து முடிந்து ஊர் வந்த பிறகு வீட்டில் தங்காமல் உடனேயே வெளியில் கிளம்பி விட்டான் சேரன். முதல் வேலையாக தேக்கு மரத்தில் கட்டில் செய்ய ஆர்டர் கொடுத்து விட்டு வந்தார் கந்தசாமி. 

அடுப்படிக்கு தண்ணீர் பருக வந்த கந்தசாமியிடம், நிச்சயத்துக்கு சுகந்திக்கு நகை போட வேண்டும் என்றார் கனகா.

ஒரே மாதிரியான அட்டிகைகள் இரண்டாக செய்து பெரிய மருமகளுக்கும் கொடுக்க வேண்டும் என்றார் கந்தசாமி. 

ஒத்துக் கொள்ளாத கனகா, “இங்குட்டு இருக்கவளும் வரப் போறவளும் சமதை கிடையாது. ஏற்கனவே உங்க மகன் நகை வாங்கி போட்டுட்டான், நாம இப்போதைக்கு எதுவும் செய்யக் கூடாது, சொல்லிப்புட்டேன்” என நின்றார். 

பெற்றோரின் பேச்சை காதில் வாங்கிக் கொண்டே உள்ளே வந்த சேரன், தண்ணீர் பருகி விட்டு அமைதியாகவே அங்கிருந்து சென்று விட்டான். கனகா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் கந்தசாமிக்குத்தான் மகனின் இந்த அமைதி நெருடலாக இருந்தது. 

இரவில் தன்னை தீண்டாமல் தள்ளி படுத்திருந்த கணவனை கலக்கமாக பார்த்திருந்தாள் மதுரா. 

பல பிரச்சனைகளை கடந்து காதலியை திருமணம் செய்து கொள்வதை காட்டிலும் சிரமமான சொல்லப் போனால் சவாலான காரியம், பிறந்த வீட்டு சீர் இல்லாமல் தன்னை மட்டுமே நம்பி வந்தவளுக்கு தன் வீட்டில் மரியாதையான இடத்தை பெற்று தருவது என புரிந்து கொண்டதில் அதை எப்படி நிறைவேற்றுவது என யோசனையில் இருந்தான் சேரன். 

அவனாக அவளை அணுகாமல் போக வெட்கத்தை விட்டு அவளாகவே அவனது மார்பில்  தலை வைத்து படுத்துக் கொண்டாள். அப்போதும் அவன் அவளை கண்டுகொள்ளவில்லை. 

“எம்மேல எதுவும் கோவமா?” என சின்ன குரலில் கேட்டாள். 

சேரன் அவளது கன்னத்தில் செல்லமாக தட்டி அணைவாக பிடித்துக்கொண்டானே ஒழிய பேசவில்லை. 

“என்னன்னு சொன்னா உங்க மனசு பாரம் குறையும்தானே? என்கிட்ட சொல்லக்கூடாதா?” எனக் கேட்டாள். 

இவளிடம் பகிர்ந்தால் அவனது பாரம் குறையும், இவளுக்கு மன வருத்தம் ஆகிப் போகாதா?

“நீதான்டி என்னமோ போல பேசுற” என்றான். 

“ப்ச்… டாக்டர் பாத்திட்டு வந்த அன்னிலலேருந்து தள்ளித்தான் இருக்கீங்க, நேத்தெல்லாம் கூட என்னை டைட்டா கட்டி புடிச்சுகிட்டே தூங்குனீங்க, இன்னிக்கு அது கூட இல்ல. என் அம்மாட்ட பேசலாம்னு நீங்க சொல்லியும் கூட நான் பேசலங்க” என்றாள். 

“ப்ச், ஒரு கோவமும் இல்லடி உம்மேல, உன்னைத்தான் உன் அம்மா கூட பேசிக்கன்னு அப்பவே சொல்லிட்டேனே. எனக்கு உடம்பு அசதி, வேற ஒன்னுமில்ல” என்றவன் அவளை இறுக அணைத்து முத்தமிட்டான். 

சில நொடிகளில் அவனிடமிருந்து விலகியவள், “இது என்னங்க நான் கேட்டேன்னு… ப்ச் போங்க. இதுக்காக பேசல நான், உங்க மனசுல என்னமோ இருக்கு. நான்தான் காரணமோன்னு பயந்திட்டேன். நீங்க தூங்குங்க” என்றாள். 

அவளுக்காக நெருங்கியவனுக்கு இப்போது அவளிடமிருந்து விலக முடியாத நிலை. 

“நீயா ஏதாவது பேசாத, மனுஷனை புரிஞ்சுக்கடி” தாபமாக அவன் சொல்ல அவளும் மறுக்கவில்லை. 

தன் மார்பில் தலை வைத்து உறங்குபவனின் தலை கோதி கொடுத்துக் கொண்டிருந்தவளின் சிந்தனை எல்லாம் சற்று முன்னரான அந்தரங்க தருணத்தில் அவனை மறந்து “எதுக்கும் கலங்காத, நான் இருக்கேன்” என அவன் சொன்னதிலேயே இருந்தது. 

உறக்கம் வராமல் கணவனையே கவலையாக பார்த்திருந்தாள் மதுரா.