ஆள வந்தாள் -13

அத்தியாயம் -13

சரவணன் அவனது பெற்றோர், பூங்கொடியின் பிள்ளைகள் அவளது மாமனார் மாமியாரும் கூட அந்த காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை தொடர்ந்து சேரன், மதுரா ஜோடியும் மோகன், பூங்கொடி ஜோடியும் தனித் தனி பைக்கிலும் சரவணனின் நண்பர்கள் இரண்டு பேர் இன்னொரு பைக்கிலுமாக சென்றனர். 

சரவணனுக்கு பெண் பார்ப்பதற்கான பயணம் அது. சேரனுக்காக முன்னர் பார்த்திருந்த பெண்தான். மோகன் மூலமாக வந்த சம்பந்தம் இது. பெண் வீட்டில் பெண்ணின் தந்தைக்கு மட்டும்தான் இந்த பேச்சு வார்த்தை தெரியும். 

 அவருக்கு கந்தசாமி குடும்பத்தை பற்றி நன்றாக தெரியும். சேரனை பற்றிய விவரங்கள் கூட தெரிந்தாலும் பஞ்சாயத்திலேயே கல்யாணம் செல்லாது என சொல்லி விட்டார்கள், அது முடிந்தும் மூன்று வருடங்கள் ஆகி விட்டது என்ற நினைவில் பெண்ணின் புகைப்படத்தை மோகனுக்கு அனுப்பி வைத்தார். திருவிழா முடிந்ததும் தன் வீட்டில் பேசிக் கொள்ளலாம் என இருந்தார் அவர்.  

அதற்குள் சேரன் மதுராவை அழைத்து வந்து விட அதற்கு பின் அவரை பார்த்து பேசும் வாய்ப்பு மோகனுக்கு ஏற்படவில்லை. இரு தினங்களுக்கு முன் அவரை எதேச்சையாக பார்க்க நேர்ந்த போது சரவணனுக்கு தன் பெண்ணை தர பிரியப் படுவதாக அவரே கூறினார். 

மோகனுக்கும் அப்படி செய்யலாமே என தோன்ற மாமனாரிடம் பேசினான். மகளின் கைப்பேசி வாயிலாக பெண்ணின் புகைப்படத்தை பார்த்திருந்த கனகாவுக்கு ஏற்கனவே அந்த பெண்ணை பிடித்துதான் இருந்தது. சேரனுக்கு பார்த்த கதையெல்லாம் இழுக்காமல் சின்ன மகனிடமும் புகைப்படத்தை காண்பிக்க அவனுக்கும் பிடித்திருந்தது. 

நல்ல வசதி வாய்ப்பான குடும்பம் என்பதால் அந்த சம்பந்தத்தை விட கனகாவுக்கு விருப்பம் இல்லை. பேச்சுவார்த்தையை முடுக்கி ஓரளவு இந்த இடம்தான் என கணவர் மற்றும் சின்ன மகனை முடிவு செய்ய வைத்து விட்டார். உறுதி செய்து கொள்ளும் எண்ணத்தோடு இன்று நேரிலேயே செல்கின்றனர். 

சேரனுக்கு மனம் நெருடலாக இருந்தது. அம்மா, அக்கா, அக்காவின் மாமியார் என மூன்று பெண்களும் பட்டுப் புடவையும், நகையும்  அணிந்திருக்க மதுராவோ சாதாரண காட்டன் புடவை கட்டி கழுத்தில் மஞ்சள் கயிறோடு கணவன் வாங்கிக் கொடுத்த சின்ன நெக்லஸ் மட்டுமே அணிந்திருந்தாள். 

அவள் எது அணிந்தாலும் அழகாக தெரிவாள் என்றாலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் உடையும் நகையும் வைத்து அவர்களை எடை போடுவது வழக்கம்தானே? கிராமத்தில் வளர்ந்தவனுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். 

வீட்டில் சிரமம் என்றால் பரவாயில்லை. பூங்கொடியை திருமணம் செய்து கொடுத்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. அதற்கு பின் கல்லூரி படிப்பை முடித்த கையோடு அப்பாவுக்கு உதவ வந்து விட்டான் சேரன். அடுத்த இரண்டு வருடங்களில் சரவணனும் உழைப்பில் இணைந்து கொண்டான். 

மழை,  புயல் என அவ்வப்போது இயற்கை நட்டத்தை உண்டு செய்தாலும் எழ முடியாத அளவுக்கு பலத்த அடி என என்றும் ஏற்பட்டதில்லை. நெல் விவசாயம் சோர்ந்தால் தென்னை விவசாயம் காப்பாற்றி விடும். பல வருடங்களாக அரசியலில் இருக்கும் கந்தசாமி குளத்தை குத்தகை எடுப்பது சாலை அமைக்க ஒப்பந்தம் எடுப்பது என அந்த வகையிலும் லாபம் பார்ப்பார். 

என்ன ஊரார் கண் வந்துவிடும் என செல்வ நிலையை வெளியில் காண்பித்துக் கொள்ள மாட்டார். கனகாவும் கணவரை போலவே மிகுந்த சிக்கனவாதி. அதனால்தான் வசதிகள் இருந்தும் சொந்தமாக காரெல்லாம் வாங்கிக் கொள்ளவில்லை. 

கந்தசாமி நல்ல திட காத்திரமாக இருக்க வரவு செலவும் அவரிடம்தான் இருந்தது. பிள்ளைகளிடம் கொடுக்க வேண்டும் என சிந்தித்தது கிடையாது, மகன்களும் கேட்டுக் கொண்டதில்லை. 

இன்று பெண் பார்க்க கிளம்ப இருக்க காலையிலேயே தயாராகியிருந்த அம்மாவின் தோரணையை கண்டவனுக்கு தன் மனைவியின் எண்ணம்தான். வசதியில்லாத வீட்டுப் பெண் இல்லை, ஆனாலும் இப்போது அவளுக்கென இருப்பது அவன் மட்டும்தானே. 

சரவணனின் மனைவி வந்து விட்டால் அவளின் பார்வையில் தன் மனைவி எந்த குறையும் இன்றி இருக்க வேண்டும், மதுராவுக்குமே தாழ்வாக எந்த எண்ணங்களும் உதித்து விடக்கூடாது என நினைத்தான். 

இன்று மாலையே குறைந்த பட்சம் பட்டுப் புடவைகளாவது  வாங்கித் தந்து விட முடிவெடுத்தவன் வெளியில் நின்று கொண்டிருந்த அப்பாவிடம் சென்று, “எனக்கு கொஞ்சம் பணம் வேணும் ப்பா” எனக் கேட்டான். 

அவர் எதற்கு என விசாரிக்க இவன் விஷயத்தை சொன்னான். இரண்டு தினங்களுக்கு முன் தன்னிடம் சொல்லாமல் மகன் நகை வாங்கியதில் அதிருப்தியில் இருந்தவருக்கு மகனது இந்த பேச்சு பிடிக்கவில்லை. 

“கூடுமான வரை சரவணனுக்கு இந்த இடம் முடிஞ்ச மாதிரிதான். வீட்ல பெருசா விஷேஷம் பண்ணி வருஷங்கள் ஆச்சு. கல்யாணம் நாமதான் செய்யணும், கல்யாணத்துக்குன்னு துணி மணி எடுப்போம்ன்ன? அப்ப ஆயிக்கு நல்ல விலையில புடவை எடுத்துக் கொடுக்க சொல்றேன். கட்டுசெட்டா இருக்கணும்டா” என சொன்னார். 

“அப்படி பாத்தா உங்களுக்கு செலவே வைக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டேன் நான். நீங்க நடத்தி வச்சிருந்தா கூரை பட்டு எடுக்காமலா இருப்பீய? நாலு பொம்பளைங்க போற இடத்துல இவ மட்டும் தனியா தெரிவாளா மாட்டாளா?”  எனக் கேட்டான் சேரன். 

மனிதர் நல்ல மனநிலையில் இருந்தால் மகன் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டிருப்பார். அவரது மனைவிதான் இரண்டு நாட்களாக இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மூளை சலவை செய்து வைத்திருந்தாரே. 

மகனாக பேசாமல் மருமகள்தான் இப்படி பேச சொல்லி ஏவி விட்டிருக்கிறாள் என நினைத்தவருக்கு கோவமாக வந்தது. 

“ரெண்டு நா முன்னதான் லட்ச ரூபாய்க்கு நகை எடுத்திருக்க. கூட்டு குடும்பத்துல இப்படி ஒரு ஆளுக்கே செலவு செய்ய முடியாது. மூத்த மருமவதான் எடுத்துக்காட்டா இருக்கணும். நாளைக்கு சரவணனுக்கு வரப் போற புள்ளையும் உன் சம்சாரம் மாதிரி இது வேணும் அது வேணும்னா குடும்பம் ஆட்டம் கண்டுடும்டா சேரா” என்றார் கந்தசாமி. 

அம்மா இப்படி பேசியிருந்தால் அலட்டிக் கொண்டிருக்க மாட்டான் சேரன். எப்போதும் நியாயஸ்தனாக நடக்கும் அப்பாவிடமிருந்து இப்படியான பேச்சை எதிர் பார்க்காமல் போனதால் அதிர்ச்சி அடைந்து விட்டான். 

“நீ என்கிட்ட கேட்ருக்கவேபடாது. அந்த புள்ள உனக்கு சொல்லிக் கொடுக்கறப்ப நீயே கண்டிச்சு பேசியிருக்கணும்” என்றார் கந்தசாமி. 

“நீங்களுமா ப்பா? அவ அப்பிராணி ப்பா. நான் ரோசிக்கிற அளவுக்கு கூட அவளுக்கு தெரியாது. தயவுசெஞ்சு நீங்களும் அவள குறை சொல்லாதீய, ரொம்ப வேணாம் பாத்தாயிரம் கொடுங்க, அடுத்த மாசம் எனக்கு சம்பள பணம் வந்ததும் தந்திடுறேன்” வருத்தமாக சொன்னான். 

“உன் சம்சாரத்த நீ வுட்டு கொடுக்காம பேசுறது சந்தோஷம் தான்டா. உனக்குத்தான் சம்பளம் வருதே, நீயே பார்த்துக்கடா, என்கிட்ட இப்ப பணம் இல்ல” என உறுதியாக சொல்லி விட்டார். 

“ஊதாரியா திரிஞ்சுக்கிட்டா உங்ககிட்ட பணம் கேக்குறேன், இத்தனை வருஷம் நான் உழைக்கவே இல்லையாப்பா? நீங்கதான் கணக்கு வழக்கு பார்க்குறதா இருந்தாலும் வருவாய் என்ன ஏதுன்னு ஒன்னும் தெரியாம இல்ல நான்” என சேரனும் கொஞ்சம் கோவமாக சொல்லி விட்டான். 

சேரன் எதுவும் சொல்லாமல் போயிருந்தாலே கந்தசாமி எப்படியும் மகன் கேட்டதை கொடுத்துதான் இருப்பார். என்ன அவனாக கேட்கவும் முதலில் கொஞ்சம் முறுக்கிக் கொண்டு பேசி விட்டார். இப்போது சேரன் நான் உழைத்த பணம் என சொன்னது அவருக்கு ரசிக்கவில்லை. 

கோவமாக வீட்டுக்கு சென்றவர் வங்கி கணக்கு புத்தகத்தையும் கையெழுத்து போட்ட வெற்று செக் லீஃபையும் நீட்டினார். என்றுமில்லாத அளவுக்கு அவரின் முகம் கடினமாக இருந்தது. 

அப்பாவை அழுத்தமாக பார்த்த சேரன், “என்ன நடந்தாலும் என் அப்பா இருக்காருன்னு நம்பியிருந்தேன், அப்படிலாம் நம்பிடாதன்னு சொல்லி சின்ன விஷயத்துல காட்டி கொடுத்திட்டீயப்பா” என சொல்லி எதையும் வாங்காமல் சென்று விட்டான். 

சேரனும் கந்தசாமியும் இந்த நிகழ்வை அவர்களின் மனைவிகளிடம் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இருவருக்குமே மனம் பாரமாகிக் கிடந்தது. 

போகிற வழியில், “என்னாச்சுங்க, என்னவோ போல இருக்கீங்களே? எதுவும் பிரச்சனையா?” என விசாரித்தாள் மதுரா. 

“ஒன்னுமில்லடி, அன்னைக்கு அத்தனை ட்ரெஸ் எடுத்தியே, சிம்பிலா ஒரு பட்டு புடவை எடுத்துக்க என்ன?” என்றான். 

“திடிர்னு இப்படி விஷேஷம் வரும்னு எனக்கென்ன தெரியும்? அதுக்கா இப்படி வர்றீங்க?” என மதுரா கேட்டதற்கு அவன் பதில் சொல்லவில்லை. 

“வேணும்னா சாயந்தரம் அழைச்சிட்டு போய் வாங்கி கொடுங்க, இன்னிக்கு சரி, நிச்சயம் கல்யாணம் அப்பல்லாம் கட்டிக்க வேணும்தானே?” என அவளே பேசினாள். 

அப்போதும் சேரன் அமைதியாக வர, என்னிடம் சொல்லாமல் ஏதோ மனதில் வைத்திருக்கிறான் என எண்ணி மதுராவும் மருகிப் போனாள். 

அந்தப் பெண் சுகந்தியை சரவணனுக்கு மிகவும் பிடித்து விட்டது. சுகந்திக்கும் பையனை பிடித்துப் போக மேற்கொண்டு பேசினார்கள். 

கந்தசாமி கவனித்துக் கொண்டுதான் இருந்தார். மதுரா அனுவை மடியில் வைத்துக்கொண்டு சிரித்த முகமாக இயல்பாகத்தான் இருந்தாள். சேரன்தான் என்னவோ போல இருந்தான். 

சுகந்தி வீட்டிலும் சில உறவுகள் அக்கம் பக்கத்தினர் என வந்திருந்தனர். அனைவரும் பகட்டாக தெரிய, தன் மனைவி மகள் கூட நகைகளை அள்ளிப் பூட்டிக் கொண்டு வந்திருக்க எளிமையாக இருந்த தன் மருமகளை அடிக்கடி பார்த்தார். 

இப்போதே மதுராவை குறித்து அங்குள்ளவர்கள் கண்களால் அளவிடுவதும் ரகசியமாக பேசிக் கொள்வதுமாக இருக்க அதையெல்லாம் அவள் உணர்ந்தது போல கூட தெரியவில்லை. ஆனால் சேரனின் முகம் இறுகிக் கொண்டே போனது. தந்தையின் பக்கம் திரும்பக் கூட இல்லை. 

கந்தசாமிக்கு மிகுந்த குற்ற உணர்வாகிப் போனது. 

இப்படி தன் மனைவியை பற்றி நன்கறிந்தும் அவளது பேச்சை தீவிரமாக எடுத்துக் கொண்டோமே, இந்த புள்ளையா கணவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என பிடுங்கி திங்க போகிறது என நினைத்தேன், பிறந்ததிலிருந்து சீராட்டி வளர்த்த என் மூத்த மகனின் வாழ்க்கைத்துணைக்கு செய்யவா கணக்கு பார்த்து யோசித்தேன், அடடா மகனின் மனதையும் உடைத்து விட்டேனே,  நியாயவாதி என என்னை நானே நினைத்துக்கொண் டிருந்தது எல்லாம் தவறு, நானும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல குணம் மாறி விடும் சராசரி மனிதன்தான் போல…

“நிச்சயத்துக்கு நாள் கேக்குறாவோளே, பாத்து சொல்லுவீயளா அத வுட்டுப்புட்டு என்ன ரோசனைங்கிறேன்?” மோகனின் அப்பா கேட்கவும்தான் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் கவனத்தை பதித்தார்.