“ஆமாம் நீ மட்டும் என்கிட்ட சொல்லிட்டுதான் என் மாமன் மவள லவ்ஸ் பண்ணினியா? என் உசுர கொடுத்து உங்கள சேர்த்து வைக்கல நான்?”
“உசுர கொடுத்தியா? ஏதாவது அசிங்கமா சொல்லிடுவேன்டா” என்றவன் மதன் பேசிய பேச்சில் இன்னும் திட்டி இறுதியாக, “அது படிக்கிற புள்ளை, படிப்பு முடியற வரை வாய தொறக்கப்படாது நீங்க. அப்புறம் இன்னிக்கு மாதிரி தனியா எல்லாம் மீட் பண்ண கூடாது. போன்ல பேசுறதோட நிறுத்திக்க” என எச்சரித்தான்.
வனராஜனுக்கு விஷயம் தெரிந்து விட்டது என மதன் கவலை கொள்ள, அர்ச்சனாவை விட்டு இந்த பழக்கத்தை மேலும் வளர்க்காமல் நிறுத்தி விடுவதாக பொய் கூற சொல்லி யோசனை தந்தான்.
“உன் மாமா பொண்ணுடா, படிப்பு முடியட்டும், என்னை மாதிரி இல்லாம ஊரை கூட்டி மேடை போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்டா” என உறுதி கொடுத்தான் சேரன்.
பின்னர்தான் சமாதானம் அடைந்து கைப்பேசியை வைத்தான் மதன்.
சரவணனும் வீடு வந்த பின்னர் ஆண்கள் மூவருமாக சாப்பிட அமர்ந்தனர். சேரனே மதுராவை பரிமாற அழைக்க அவள்தான் பரிமாறினாள். அன்றைய தினம் வெளி வேலைகள் எதுவும் நடக்காததால் அது பற்றியே ஆண்களின் பேச்சு இருக்க, யார் சமைத்தது என்ற பேச்சே எழவில்லை.
சென்னையில் மதுராவின் சித்தி சில சமயங்களில் மதியம் கூட சப்பாத்தி செய்வார். அவருக்கு சிறு வயதில் மூன்று வேளையும் சாதம்தான் சாப்பாடு என்பதால் புகுந்த வீட்டில் வித விதமான டிபன் வகைகள்தான் பெரும்பாலும் செய்வார். அவரது கணவருக்கு வாய்க்கு சுவையாக இருந்தால் போதும், மற்றபடி இதுதான் வேண்டும் என எதையும் கேட்க மாட்டார்.
ஆகவே அந்த சூழலில் வளர்ந்த மதுராவும் அவளது சித்தியை போலவே பழகி விட்டாள். புகுந்த வீட்டுக்கு புதிதாக வரும் மருமகளுக்கு அந்த வீட்டின் கைப்பக்குவ சாப்பாடு ஒத்து வரவே காலமெடுக்கும், இங்கு சாப்பாட்டு முறையையே மாற்றிக் கொள் என்றால் என்ன செய்வாள்?
குறைந்த பட்சம் பழக கால அவகாசமாவது தர வேண்டும். அப்படி உணவு பழக்கத்தை ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்?
காலம் முழுக்க இவரது மகனின் சுக துக்கங்களை பங்கு போட்டுக் கொள்ள வந்த எனக்கு விரும்பியதை உண்ணும் உரிமை கூட இல்லையா? யோசனைகளால் ஆக்ரமிக்க பட்டிருந்த மதுராவுக்கு உணவை சாப்பிடவே முடியவில்லை.
தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்க மற்றவர்கள் அதில் லயித்திருக்க சேரன் மனைவியைதான் பார்த்திருந்தான். மதுரா எதுவும் சொல்லாமலே என்ன நடந்திருக்க கூடும் என அனுமானம் செய்து கொண்டவன் அடுக்களை சென்றான்.
மாவு இருப்பதை உறுதி செய்து கொண்டு தோசைக் கல்லை அடுப்பில் வைத்தான். ஆனால் தோசை வார்க்க தெரிந்தால்தானே? தம்பியை அழைக்க, என்னவோ என சென்றான் சரவணன்.
மற்றவர்களும் என்ன என எட்டிப் பார்க்க, தொலைக்காட்சி சத்தத்தை குறைத்து விட்டு “என்னடா செய்றீய அங்குட்டு?” எனக் கேட்டார் கந்தசாமி.
தோசை திருப்பியோடு எட்டிப் பார்த்த சரவணன், “அண்ணி நைட்ல டிபன்தான் சாப்பிடுவாவோளாம். உங்க மகனுக்கு கை நீட்டி யாரையும் அடிக்கத்தான் வருமாம், இந்த தோசையெல்லாம் ஊத்த வராதாம், அதான் சொல்லி கொடுத்திட்டு இருக்கேன் ப்பா” என்றான்.
அதற்குள், “எலேய் சரவணா! தோசை தீயுது, பொறவு பேசலாம், வந்து திருப்பி போடுடா” என கத்தினான் சேரன்.
மாமனார் மாமியாரை சங்கடமாக பார்த்த மதுரா தட்டோடு வேகமாக சமையலறை சென்றாள்.
கை கழுவிக் கொண்ட மதுரா, “தள்ளுங்க, நானே தோசை ஊத்திக்கிறேன்” என சரவணனிடம் பதற்றமாக சொன்னாள்.
ஏற்கனவே வார்த்திருந்த தோசையை ஒரு தட்டில் வைத்த சரவணன் அடுப்பின் தீயை குறைத்து விட்டு, “நீங்க ஏன் ஊத்துறீங்க? அண்ணனுக்கு சொல்லிக் கொடுங்க, என்ன?” என சொல்லி அவர்களுக்கு தனிமை கொடுத்து அங்கிருந்து வெளியேறினான்.
தான் சொல்லாமலே தனக்காக யோசித்த கணவனின் செயலில் மதுராவுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. அவளை ஒரு கையால் அணைவாக பிடித்துக்கொண்ட சேரன் இன்னொரு கையால் தோசை வார்க்க முயல மாவு கல்லில் திரட்டிக் கொண்டு வந்தது.
கண்களை துடைத்து விட்டு சிரித்தவள் கரண்டியை வாங்கி தோசையை சீர் படுத்தினாள். தோசை இருந்த தட்டை கையில் எடுத்துக் கொண்டவன் குழம்பு வைத்து அவளுக்கு ஊட்டி விட, அவனது இந்த கரிசனத்தில் மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
அவள் மூக்குறிந்து அழுகையை கட்டுப் படுத்த பார்க்க தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
அவள் கேவி அழ, “என்னத்துக்குடி இப்படி அழுவுற? அம்மா எதுவும் சொல்லுச்சா? உன்னைய சமைக்க விடலையா?” என விசாரித்தான்.
அடுத்த தோசை ஊற்றியவள் அவன் ஊட்டி விட, ஊட்டி விட சாப்பிட்டுக் கொண்டே, “இங்க இருக்கிறது கஷ்டமாதான் இருக்க போவுது எனக்கு. நீங்க கோவத்துல ஏதாவது என்னைய பேசிடாம, இதோ இப்ப என் முகம் பார்த்து அனுசரனையா இருக்கீங்களே… இப்படியே இருந்தா போதும், எதுவும் எனக்கு பெருசா தெரியாது. சமாளிச்சுக்குவேன்” என்றாள்.
“கோவத்துல யாருடி பேசுறது, நாந்தானே? என் கோவமெல்லாம் எத்தனை நேரத்துக்கு? திரும்ப நீயும் கோவப்பட்டுட்டு போ, வருஷக் கணக்கா காத்திருந்து என் கூட சேர்த்திருக்கேன் உன்னை, அப்படிலாம் காலம் முழுக்க கஷ்டத்துல விட்டுட மாட்டேன்” என சேரன் சொல்லவும் அழுத்திக் கொண்டிருந்த அவளது மன பாரங்கள் எல்லாம் குறைந்து போய் விட்டன.
உணவு முடித்துக் கொண்டு இவர்கள் வரும் போது அனைவருமே உறங்க சென்றிருந்தனர்.
அறைக்கு வந்ததும் முதல் வேலையாக பாயை எடுத்து மதுராவுக்கு எட்டாத உயரத்தில் பீரோவின் மேலே வைத்தான்.
“நாற்காலில ஏறி நின்னு எடுக்க எவ்ளோ நேரம் ஆகுமாம்? இல்லைன்னா கூட ஏதாவது துணி விரிச்சுப்பேன், அட சும்மா வெறும் தரையில கூட படுத்துப்பேன்” என்றாள்.
“முடிஞ்சா என்கிட்டேருந்து தள்ளி படுத்து பாருடி” ஒரு பக்க மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே சவாலாக சொன்னான்.
புடவையின் முந்தானையை உதறி அதை இடுப்பில் சொருகியவள் போர்வை ஒன்றை கையில் எடுக்க, சில நொடிகளில் அவள் அணிந்திருந்த புடவை அவனது கையில் இருந்தது.
போர்வை கொண்டு அவள் அவளை மறைத்துக் கொள்ள வெடுக் என அதையும் பறித்துக் கொண்டான்.
அவள் பொய்யாக முறைக்க, “பகல்ல என்ன வேணா போர் நடக்கட்டும், நைட் என்னையதான் ஒட்டிக்கணும் கட்டிக்கணும் நீ” என்றான்.
“ஆசைதான், பேச வேண்டியது எல்லாம் பேசிட்டு…”
“மொதலலேருந்தாடி? என்னை மூனு வருஷம் தவிக்க விட்டது பத்தலையா உனக்கு? இதோ இந்த விட்டத்த பார்த்துகிட்டுதான் செம கடுப்போட படுத்திருப்பேன். நான் உனக்காக எவ்வளவோ ஏங்கி போயிருந்தேன்னு நேத்து தெரிஞ்சுகிட்டதான? எங்க… நீயும் எனக்காக எவ்ளோ ஏங்கி போயிருந்தேன்னு காட்டு, வா” கிண்டல், கேலி என இல்லாமல் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் படி பேசி அவளை அழைத்தான்.
அதற்கு மேலும் அவனிடம் விளையாட்டாக கூட தள்ளி நிற்க அவளுக்கு மனம் வரவில்லை. அவளாகவே சென்று அவனை அணைத்துக் கொண்டாள். தாமதம் செய்யாமல் அவளோடு சேர்ந்து படுக்கையை ஆக்கிரமித்தான் சேரன்.
அவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் சத்தமிட்டுக் கொண்டிருந்தது அந்த பழைய கட்டில்.