சேரனின் கூற்றை மறுத்து பேசவில்லை வனராஜன். ஆனால் சேரனையும் அவனை சார்ந்தவர்களையும் முறைத்த வண்ணம் நின்றிருந்தான். 

“பாத்தீயளா ஸார், உங்க முன்னாடியே எப்படி நிக்குறாப்ல? இந்தாள் க்ரூப்பால எங்க எல்லார் உசுருக்கும் ஆபத்து இருக்குதுங்க ஸார்,எங்களுக்கு பாதுகாப்பு வேணும் ஸார்” என்ற செழியன் எஸ் பி பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டான். 

முகத்திலும் உடம்பிலும் ஆங்காங்கே ஊமைக் காயங்கள் இருக்க, அது கொடுத்த வலியில் முகத்தை சுருக்கிய மதன், செழியனிடம் சின்ன குரலில், “எஸ் பி பார்வைக்கு அர்த்தம் தெரியுதா? ‘தனியா மாட்டுடா மவனே, உன் உசுருக்கு உத்தரவாதம் இல்லாம பண்றேன்’ அதான். பாதி எரிஞ்ச பொணம் திடீர்னு எழுந்து உட்காருற மாதிரி சம்பந்தமே இல்லாம உளறாம வாய பொத்திக்கிட்டு நில்லுடா கருவாயா” என வசை பாடினான். 

சேரன், வனராஜன் இருவர் சார்ந்தந்திருக்கும் காட்சிகளின் மாவட்ட தலைமையிலிருந்து எஸ் பி க்கு அழைப்பு வந்தது. அவர் எதிர் பார்த்ததுதானே? 

இனி இது போல பிரச்சனைகள் வரக்கூடாது என கண்டித்து, அப்படி ஏதாவது நடந்தால் அரசியல் பின்புலம் எல்லாம் பார்க்க மாட்டேன், உள்ளே தள்ளி விடுவேன் என எச்சரித்து அனுப்பி வைத்தார். 

அனைவரும் திரும்பிக் கொண்டிருக்கிறோம், யாரும் சாப்பிடவில்லை, உணவு தயார் செய்யுங்கள் என அக்காவுக்கு தகவல் தந்தான் சரவணன். பூங்கொடி தன் அம்மாவிடம் சொல்லும் போது மதுராவின் காதிலும் செய்தி விழ அப்போதுதான் அவளுக்கு ஆசுவாசமானது. 

அயர்ந்து போயிருந்த கனகா இனி தன்னால் சமைக்க முடியாது என சொல்ல, பூங்கொடியும் இத்தனை விரைவில் என்ன சமைப்பது என மலைத்து போனாள். மாமியார் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும் என துணிந்த மதுரா சமையலறை செல்ல, இந்த முறை கனகா கண்டுகொள்ளவில்லை.

பூங்கொடிக்கு அவள் மீது அத்தனை ஆத்திரம் இருந்த போதும் அவளை மட்டும் தனியே விட்டு சரியாக சமைக்கா விட்டால் வந்தவர்களின் வயிறு வாடுமே என கவலையானது. வீம்பு பாராட்டாமல் அவளும் சமையலறை சென்றாள். 

இருவருமே பேசிக் கொள்ளவில்லை. மதுரா காய்களை எடுத்து வைக்க, நறுக்க ஆரம்பித்தாள் பூங்கொடி.  

மாலை நான்கு மணிக்குதான் அனைவரும் ஊர் வந்து சேர்ந்தனர். காவல் நிலையத்திலும் வரும் வழியிலும் அமைதியாக இருந்த கந்தசாமி வீடு வந்த பின்னர் பெரிய மகனை திட்ட ஆரம்பித்து விட்டார். 

“மொதல்லேருந்தே சரியா பண்ணி தர்றேன்னு சொல்லிக்கிட்டு கெடக்க என்னைய மதிக்காம உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணி பெருசா பெருசா இழுத்து வுடுற. கோயிலுக்குதான போன? சாமிய பாத்தோமா வந்தோமான்னு இல்லாம கை நீட்டுற பழக்கம் என்னங்கிறேன்? வனராஜன் மதனை அடிச்சா அடிக்காம பார்த்துக்கணும், பெரியவங்க பேசிக்க மாட்டோமா? மருமவ அது அம்மா கூட பேச ஆச பட்டா அவன் இல்லாத இடத்துலன்ன பேச வைக்கணும் நீ? வயசு கூட கூட அறிவு மழுங்கி போவுதாடா உனக்கு? போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்தவன்னு உன்னை நல்லா மெச்சுக்குவாங்க ஊர்க்காரய்ங்க. நீ போனது பத்தாதுன்னு மாப்ளய வேற உள்ள இழுத்து வுட்ருக்க. சம்பந்தி மூஞ்ச நிமிந்து பார்த்து பேச முடியலை என்னால. இன்னும் என்னென்ன சொல்வாவளோன்னு இருக்கு…” ஆதங்கமும் கவலையுமாக பேசினார் கந்தசாமி. 

“போதும் மாமா, விடுங்க, பசி உயிர் போவுது, மிச்சத்த பொறவு பேசிக்கலாம்” என மோகன் சொன்ன பிறகுதான் கந்தசாமி தன் பேச்சை நிறுத்தினார். 

ஓரமாக நின்றிருந்த மதுரா கவலையோடு சேரனையே பார்த்திருக்க அவனது பார்வையும் அவ்வப்போது அவளைத்தான் தொட்டு சென்றது. 

செழியன், மதன் இருவரது தந்தைகளும் சேரனுடன் சேர்ந்து சேர்ந்து எப்போது பார்த்தாலும் பிரச்சனை, இவனது சகவாசத்தை விட்டொழியுங்கள் என திட்டியிருக்க அவர்களின் வீடுகளுக்கு செல்லாமல் அங்குதான் இருந்தனர். 

கூடத்தில் அனைவருக்கும் இலை போட்டாள் பூங்கொடி. மதுரா பரிமாற, “உங்க ஸ்பெஷலா அண்ணி?” எனக் கேட்டான் சரவணன். 

“ஆமாம், பிஸிபெலா பாத்” என்றாள் மதுரா. 

உருளைக்கிழங்கு வறுவல் பரிமாறிக் கொண்டிருந்த பூங்கொடி திகைத்து போய் சரவணனை பார்க்க, “ஷாக்க குறைச்சுக்க க்கா. அண்ணி லாங்வேஜ்ல சாம்பார் சாதத்துக்கு அதான் பேரு” என்றான். 

“ஊருக்கே குழம்பு, கறி வைக்க சொல்லி தருவியே அக்கா, இப்படி உனக்கே தெரியாத ஒன்ன எந்தங்கச்சி சமைச்சு உனக்கு பவர் இல்லாம பண்ணிடுச்சே!” என கிண்டல் செய்தான் செழியன். 

“இவன் கெடக்கிறான் பித்துக்குலி பய, அந்த பொல பொல பொல்லாத வாத்’ த என் இலையிலும் வையி மது” என்றான் மதன். 

“உன் அண்ணன் வுட்ட குத்துல இவன் காதுல சவ்வு கிழிஞ்சு போயிட்டுது, அதான் பாத், வாத் ஆகிடுச்சு” என்றான் செழியன்.

இப்படி இளையவர்கள் கல கலப்பாக பேசிக் கொண்டிருந்தாலும் சேரன் மட்டும் இறுக்கமாக இருந்தான். 

காவல் நிலையம் வரை சென்றதை அவமானமாக கருதினான். அனைத்துக்கும் காரணம் வனராஜன்தான் என அவன் மீது கோவம், மதுரா கூட இன்று அவளது அம்மாவிடம் பேசுவதை தவிர்த்திருக்கலாம் என அவள் மீதும் மனத்தாங்கல். 

நண்பர்களின் பெற்றோர் தன்னையே குற்றம் சொன்னது வேறு கவலையாக இருந்தது. உண்மையில் தன்னால்தான் தன் நண்பர்களுக்கு பிரச்சனை ஆகிறதோ என உறுத்தியது. அதிகம் கண்டிக்காத அப்பா அனைவரின் முன்பும் பேசி விட்டது வேறு மனதை வலிக்க செய்தது. 

எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான். மற்றவர்களுக்கு கவனத்தில் பதியவில்லை. ஆனால் கணவன் சரியில்லை என மதுராவால் உணர முடிந்தது. கூட்டத்தில் வைத்து என்ன விசாரிப்பது என கண்டும் காணாதது போல இருந்து கொண்டாள். 

“அண்ணி இது உருளைக்கிழங்கு வறுவல்தானே? இதுக்கும் வேற பேர் இருக்கா?” எனக் கேட்டான் சரவணன். 

“அது அண்ணிதான் செஞ்சாங்க” என மதுரா சொல்ல, “ஏது ரெண்டு பேரும் கூட்டணி போட்டு சமைச்சியளா? சொல்லவே இல்ல, இந்த சங்கதி அம்மாக்கு தெரியுமா?” என வம்பாக கேட்டான் சரவணன்.

“தொண தொணன்னு என்னடா பேச்சு! என்ன நடந்து முடிஞ்சிருக்கு, நெஞ்சுல கொஞ்சமாவது வருத்தம் இருக்கா?” என கந்தசாமி அதட்ட, மோகனும் கண்டிக்க, விளையாட்டு பேச்சை நிறுத்தி விட்டு சாப்பிட மட்டும் செய்தனர். 

அம்மாவையும் சாப்பிட வைத்த பூங்கொடி இன்னும் ஒருவர் மட்டுமே சாப்பிடக் கூடிய அளவில் உணவு மீதமிருப்பதை கவனித்து விட்டு, தான் தன் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு கொள்வதாக சொன்னாள். 

“வரிஞ்சு கட்டிகிட்டு சமைக்க போனா… ஏன் அளவு தெரியாதா அவளுக்கு?” என கோவப்பட்டார் கனகா. 

“இத்தனை பேருக்கு சமைக்கிறப்போ இப்படி ஆவுறதுதானேம்மா? வுடு” என்றாள் பூங்கொடி. 

“என்னடி அவ மேல புதுசா கரிசனை வடியுது?”

“ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, இவதான் எல்லாத்துக்கும் காரணம். இங்குட்டு இவ காலடி வச்சதிலேருந்து இப்படித்தான் எடக்கு மடக்கா எல்லாம் நடக்குது. அதுக்காக அவ சாப்பாட்டுல எனக்கு பங்கு வேணாம். அவளுக்கு சாப்பாடு இல்லைனு உன் மவனுக்கு தெரிஞ்சா அதுக்கும் என்னை பேசுவான்” என்றவள் கணவனோடு அவளது வீட்டுக்கு சென்று விட்டாள். 

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மதுரா இவள் நல்லவளா கெட்டவளா என குழம்பிப் போனாள். 

நண்பர்களிடம் அர்ச்சனா பற்றி இனியும் சொல்லாமல் இருக்க கூடாது என நினைத்த மதன், இன்று வேண்டாம் நாளை கண்டிப்பாக சொல்லி விடலாம் என முடிவு செய்து செழியனோடு புறப்பட்டு சென்றான். 

“இந்தூட்டுக்கு வந்திட்டால்ல? இனி அவ பொறந்த வூட்டுல போக்குவரத்து வச்சுக்க கூடாதுன்னு கண்டிஷனா சொல்லிப்புடுங்க அவகிட்ட” கணவரிடம் அதிகாரமாக சொன்னார் கனகா. 

கந்தசாமி யோசனையாக நிற்க, “இனிமே அவங்க யாரோடவும் பேச மாட்டா என் பொண்டாட்டி” என மனைவிக்கும் சேர்த்து அறிவித்தான் சேரன். 

மதுரா அதிர்ந்து போய் பார்க்க, “அவ கேக்க மாட்டாடா, பாரு பேய் முழி முழிக்கிறத. ரூமுக்குள்ள போனதும் அவ பேச்சுக்கு உன்னைய தலையாட்ட வைக்கிறாளா இல்லையான்னு மட்டும் பாரு” என்றார் கனகா. 

“ம்ம்ம்… அங்குட்டு போவா, பேசுவா, உறவ வளத்துக்குவா, எல்லாம் நான் செத்து சுடுகாட்டுக்கு போனதும் செய்வா, இப்ப இல்ல, போதுமா?” அம்மாவிடம் கத்தியவன் மதுராவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக்குள் சென்றான். 

விக்கித்து போய் நின்றாள் மதுரா.