சிறு விஷயத்திற்கு இத்தனை களேபரமா? என அயர்ந்து வந்தாலும் இந்த விஷயத்தை அக்கா மாமாவிடம் எப்படி திரித்து சொல்வாளோ, மாமா என்ன நினைப்பாரோ, அதற்குள் அக்காவை சமாதானம் செய்து விடுவோம் என நினைத்து சேரனும் வெளியே வந்தான். 

மதுரா தூக்கி வைத்திருந்த அனுவை வெடுக் என பிடுங்கி தன் இடுப்பில் வைத்துக்கொண்ட பூங்கொடி, தன்னோடு வர மாட்டேன் என்ற அமுதனின் முதுகில் சுள் என ஒரு அடி வைத்து இழுத்துக் கொண்டு அவளது வீடு நோக்கி நடந்தாள். வழியில் மோகன் வர அவன் பைக்கில் ஏறி அமர்ந்து அங்கிருந்து சென்றே விட்டாள். 

நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டே சலிப்பாக அக்கா சென்ற திசையை பார்த்திருந்தவனிடம், “உங்கம்மா செய்றதுக்கெல்லாம் நீங்க கேள்வி கேட்கணும்னா தினம் சண்டைதான் வரும். உங்கள யாரு கேட்க சொன்னது இப்போ?” எனக் கேட்டாள் மதுரா. 

“பொம்பளைங்களாடி நீங்கல்லாம்? பூ இருக்குமாம், கைல தராதாம் என் அம்மா, அதான் அப்படின்னா போற வழில வாங்கிக்கலாம்னு பொறுமையா இல்லாம வேணும்னே வீட்டடியிலேயே ஒரு பந்து பூ வாங்கி வச்சுகிட்டு என்னை சூடு ஏத்தி வுடுற நீ, சொல்றத புரிஞ்சுக்காம அத பேசிப்புட்டேன்னு வீம்பு பண்ணிக்கிட்டு போவுது அக்கா” எரிச்சலாக சொன்னான் சேரன். 

மாமியாரும் நாத்தனாரும் நடந்து கொண்ட விதம் கூட மதுராவை அத்தனை பாதிக்கவில்லை, தன்னிடம் என்ன ஏதென்று கேளாமல் தன்னையே குற்றம் சொல்லி விட்ட கணவனின் வார்த்தைகள் கலங்க வைத்து விட்டன. 

 

மனைவியின் முகம் வெளுத்துப் போனதை கண்டவன், “என்ன சொல்லிட்டேன்னு இப்ப உன் முகம் செத்து போவுது?” எனக் கேட்டுக் கொண்டே அவளது கையை பிடித்தான். 

நாசூக்காக அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டவள் நலிந்த குரலில், “கோயிலுக்கு போக நேரமாச்சு” என்றாள். 

சேரனும் மேலும் பேச்சை வளர்க்காமல் பைக்கை எடுத்து வர அமைதியாக ஏறிக் கொண்டாள். 

வழியில் தன்னிடம் ஏதாவது பேசுவான் என அவள் எதிர்பார்த்திருக்க, ஏதாவது பேசப் போய் இன்னும் அவளை காயப்படுத்தி விடுவேனோ என பயந்து மௌனமாகவே இருந்தான் சேரன். 

கோயில் வந்ததும் அரச்சனை சாமான் விற்கும் கடை முன் நின்று விட்டவள் கணவனின் முகத்தை பார்த்து விட்டு பின் வேறெங்கோ திரும்பிக் கொண்டாள். 

“வாய தொறந்து சொல்றதுக்கு என்னடி?” சத்தமில்லாமல் கடிந்தவன் அரச்சனை தட்டு வாங்கி மனைவியிடம் ஒப்படைத்தான். 

அடுத்து பூமாலை கடையில் நின்றவள் முன்னர் போலவே பார்த்து பின் திரும்ப, அவளை செல்லமாக முறைத்து விட்டு மாலையையும் வாங்கிக் கொடுத்தான்.

 கோயில் படி ஏறும் முன் அவளது கைப்பிடித்து நிறுத்தியவன், “கல்யாணம் பண்ணி மொத மொத வர்றோம்” என குறிப்பாக சொன்னான். 

இவனிடம் இப்போதைக்கு பேசக்கூடாது என்ற எண்ணத்தை கைவிட்டவள், “நடங்க போகலாம்” என சொல்லி இறங்கி வந்து விட, சரியாகி விட்டாள் என்ற நினைப்போடு அவளுடன் கோயிலுக்குள் சென்றான். 

அம்மனுக்கு அரச்சனை செய்த பின்னர் இருவருக்கும் மனம் சமன் பட்டு போயிருந்தது. 

திருவிழாவுக்கென  போடப்பட்டிருந்த கடைகள் இருந்த பகுதிக்கு மனைவியை அழைத்து வந்தான். வேடிக்கை பார்த்தாளே ஒழிய எதுவும் வாங்க முனையவில்லை மதுரா. 

“லவ் பண்ணின காலத்துல நீ திருவிழாக்கு வரும் போது யாருக்கும் தெரியாம உனக்கு ஏதாவது வாங்கி தர எத்தனை மெனக்கெட்டிருக்கேன்? இப்ப என்னடி சும்மா பராக்கு மட்டும் பார்த்திட்டு வர்ற? என்ன சங்கதிங்கிறேன், ஏதாவது வாங்கிக்கிறதுக்கென்னடி?” என்றான். 

“எனக்கு எதுவும் வேணாம்” என்றாள். 

“ப்ச்… எதுவும் திட்டம் போட்டு பூ வாங்கியிருக்க மாட்ட நீ. நான்தான் கோவத்துல அவசர பட்டு வார்த்தைய வுட்டுட்டேன், அதுக்குன்னு எதுவும் வாங்க மாட்டியா?” என பரிவாக கேட்டான். 

 ஊடலை நிறைவு செய்ய நினைத்தவள் பூக்கார தாத்தா பேசியதையும் ஏன் பூ வாங்கினாள் என்பதையும் சொன்னாள். 

“எம்மனசறிஞ்சு நான் உன்னை குத்தம் சொல்லலை மதுரா, இன்னிக்கு உன் சேரனுக்கு வாய் வசத்துல இல்லன்னு வச்சுக்க” 

“யாரும் ஏதும் சொன்னா பரவாயில்லை, நீங்க சொன்னா அத என்னால ஈஸியா எடுத்துக்க முடியாது. என்ன நடந்துச்சுன்னு ஒரு வார்த்தை கேட்காம என்னையும் சேர்த்து குத்தம் சொல்லிடீங்க”

“நான்தான் அனு சொன்னது உண்மையான்னு உன்னைய பார்த்தேனே. நீ அப்பவே நடந்ததை சொல்லி ஏன் பூ வாங்கினேன்னு சொல்லியிருக்கலாம்ன்ன?” 

“ம்ம்… இப்பவும் என்னையவே சொல்லுங்க. உங்கம்மா பூ தராததை எல்லாம் உங்ககிட்ட சொல்ற ஐடியாவே எனக்கு இல்ல. பாப்பா ஏதோ சொல்லிட்டா, போற வழில ஏதாவது சொல்லி உங்களை சமாளிச்சுக்கலாம்னு இருந்தேன், நீங்க சண்டைக்கு அவுத்து வுட்ட காளை மாடு கணக்கா முந்திக்கிட்டு போய் முட்டிக்கிட்டு நிப்பீங்கன்னு தெரியாம போச்சு” என அவள் சொல்லவும் சிரித்து விட்டான். 

“சிரிச்சு மழுப்பினா மட்டும் விட்ருவேன்னு நினைக்காதீங்க, இன்னும் நம்ம பஞ்சாயத்து முடியலை. பைக்ல வர்றப்ப கூட ஒரு வார்த்தை பேசாம வந்தீங்க. இப்ப வந்து ஏதாவது வாங்கிக்கன்னா உடனே வாங்கணுமா நான்?” 

“போதும்டி ராங்கி, போ ஏதாவது வாங்கிக்க” என்றவன் இருநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். அவள் முறைக்க பர்சையே அவள் கையில் கொடுத்து விட்டான். 

என்ன வாங்குவதென மதுரா சுற்றிலும் பார்க்க பூங்கொடி அவளது குடும்பத்தோடு சற்று முன்னால் சென்று கொண்டிருந்தாள். கணவனின் தோளை இடித்து அவர்களை காண்பித்தாள். விரைந்து சென்று பிள்ளைகளை தன் வசமாக்கிக் கொண்டான் சேரன். 

கணவன் அருகில் இருப்பதால் தம்பியை எதுவும் சொல்ல முடியாமல் முன்னால் சென்றாள் பூங்கொடி. மோகனிடம் சம்பிரதாயமாக பேசிய மதுரா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடை ஒன்றுக்குள் சென்று விட்டாள். 

சங்கடமாக மாமனை பார்த்தான் சேரன். 

“அட விடு மாப்ள. உன் அக்கா புளி குத்துறதையே புலிய அடிச்சு கொன்னோம்ங்கிற ரேஞ்சுக்கு கதை வைப்பா. அவ சேதி இன்னிக்கு நேத்திதான் எனக்கு தெரியுமா? நீ விளக்கம் சொல்லித்தான் உன்னைய பத்தி எனக்கு தெரிய வருமான்ன? அவள கண்டுக்காம விட்டா தானா சரியாவா” என்றான் மோகன். 

“அதில்ல மாமா, நான் என்ன சொன்னாலும் புது பொண்டாட்டி மயக்கம்னா எதுவுமே பேசக்கூடாது கேக்க கூடாதுங்குறாவளா?” 

“இந்த வார்த்தையெல்லாம் கடந்து வராத புது மாப்ள எவனும் இல்லடா இங்குட்டு. கழுத சொன்னா சொல்லிட்டு போவட்டும், ஏன் எந்தங்கச்சி மேல மயக்கம் இல்லயா என்ன உனக்கு?” சேரனின் மீசையை முறுக்கி விட்டபடி குறும்பு சிரிப்போடு கேட்டான் மோகன். 

சேரன் வெட்கமும் அசடும் வழிய சிரிக்க, “கண்ணு ஓரம் செவந்து கெடக்கு, என்னடா லேட்டா தூங்குனியா? திருவிழா முடிஞ்சதும் நல்லா கறி கோழின்னு அத்தைய ஆக்கி போட சொல்லி தின்னுடா, நீ உழைக்கிற உழைப்புல அடுத்த வருஷம் உன் அக்கா மடிய உன் புள்ள நனைக்கிற படி செஞ்சிடணும், அத்தை ஆன பவர்ல அவளுக்கு வேறெதுவும் கண்ணுக்கு தெரியாது” என கிண்டல் செய்தான் மோகன்.

“மாமா… நாம இருக்கிறது கோயில் மாமா” கடிந்தான் சேரன். 

“அதுக்கென்னடா இப்போ, உன் வம்சம்  தழைச்சு நிக்ககணும்னு நல்ல சேதிதானடா பேசுறேன்?” இவர்கள் பேசிக் கொண்டிருக்க, விளையாட்டு சாமான்கள், பலூன் என கை நிறைய பொருட்களோடு குழந்தைகள் வர, அவர்களுக்கும் பின்னால் மதுரா. 

மோகன் ஐநூறு ரூபாய் எடுத்து, “ஏதாவது வாங்கிக்க தங்கச்சி” என சொல்லி மதுராவிடம் வற்புறுத்தி கொடுத்தான். 

“கனத்த பர்சை காலியாக்கி விட்ருக்காங்க உங்க பசங்க. வெறும் ஒத்த நோட்ட நீட்டுறியளே மாமா?” என்றான் சேரன். 

“நீ நல்லா உழைச்சு நான் சொன்னதை செய், மாமன் வெயிட்டா செய்றேன்” என சொல்லி பிள்ளைகளோடு மோகன் புறப்பட எத்தனிக்க  அஞ்சலையும் சரஸ்வதியும் வந்தனர். வனராஜனும் அவர்களுடன் வந்திருந்தாலும் கடைகளுக்கு சென்று வாருங்கள் என அவர்களிடம் சொல்லி விட்டு கோயில் தர்மகர்த்தாவிடம் ஏதோ முக்கியமாக பேசிக் கொண்டிருந்தான். 

மகன் உடனில்லாத தைரியத்தில் மகளை நோக்கி ஆர்வமாக அஞ்சலை வர, கணவனின் முகம் பார்த்தாள் மதுரா. அவனால் மறுக்க முடியவில்லை. 

மாலையில்தான் இராட்டினம் எல்லாம் அதிக அளவில் சுற்றுவார்கள். இப்போது ஆள் இல்லாமல் இருந்த இராட்டினம் மக்கள் கூட்டத்திலிருந்து சற்று மறைவாக இருந்தது. அங்கு நின்றுதான் பெண்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க, கிளம்ப இருந்த மோகனும் அங்கேயே சேரனுடன் நின்று விட்டான். 

“வீட்டுக்கு தெரிய வேணாம் மாமா” என்றான் சேரன். 

“எனக்கு தெரியாதா மாப்ள?” எனக் கேட்ட மோகன் தன் பிள்ளைகளை பார்த்தான். 

“புள்ளைங்ககிட்டலாம் பொய் சொல்ல சொல்லாதீய மாமா, நாமளா சொல்லிக்க வேணாம், தானா தெரிய வந்தா பார்த்துக்கலாம்” என சொல்லி விட்டான் சேரன். 

சிதம்பரத்தின் மகள் அர்ச்சனாவும் மதனும் கடந்த ஆறு மாத காலமாக காதலிக்கிறார்கள். மதுராவை போல அர்ச்சனாவும் அவனுக்கு மாமன் மகள், திருமணம் செய்து கொள்ள முறை உள்ள பெண். 

ஆனால் சேரன் விவகாரத்தால் மதனைதான் யாருக்கும் பிடித்தம் இல்லையே. ஆதலால் தன் காதல் விவரத்தை யாரிடமும் சொல்லியிருக்கவில்லை மதன். ஏன் சேரனுக்கு கூட தெரியாது. மாமன் மகள் என்ற வகையில் எப்போதாவது அர்ச்சனாவிடம் பேசுகிறான் என்ற நினைவில்தான் மதனின் நண்பர்கள் இருந்தனர். 

அந்த இராட்டினம் அருகில் இருந்த மதில் சுவர் ஓரமாகத்தான் மதனும் அர்ச்சனாவும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். 

கணவனை தேடிக் கொண்டு பூங்கொடி வர, அம்மா மற்றும் மனைவியை தேடிக் கொண்டு வனராஜனும் எதிர்ப்புறத்தில் இருந்து வந்து கொண்டிருந்தான்.