நதியின் ஜதி ஒன்றே! 23 1 13591 நதியின் ஜதி ஒன்றே! 23 தன் மனைவி திடீரென வந்து நின்றதில் அஜய்க்கு பெரிய அதிர்ச்சி, ஆச்சரியம் எல்லாம் ஒன்றும் இல்லை. ஜீவிதாவாகிற்றே அவள்! இப்படி தான் இருப்பாள்! விரிந்த புன்னகையுடன் மனைவிக்கு நன்றாக கதவை திறந்துவிட்டான். அவள் கைகொள்ளா பெட்டிகளுடன் உள்ளே வர, அஜய் இதென்ன என்று பார்த்தான். ‘மொத்தமா வந்துட்டாளா?’ “ஆள் வந்தாச்சு போல” சகுந்தலா கேட்டபடி வந்தார். “வந்துட்டேன். என் வீட்டுக்கு நான் வர, என்னை யார் கூப்பிடணும்ன்னு கேட்டிங்க இல்லை” என்றாள் மருமகள். “இப்போ தான் இது உன் வீடுன்னே உனக்கு தெரியுதாக்கும்” மாமியார் கேட்டபடி மருமகளுக்கு குடிக்க கொடுத்தார். அஜய் மனைவியின் பெட்டிகளை தங்கள் அறையில் வைத்து வந்தவன், “எப்படி வந்த?” என்று கேட்டான். “என்கூட தான்” என்று கல்யாண் போன் பேசி வந்தான். “அவர் உன்னோட வந்ததை எங்ககிட்ட சொல்லியிருக்கணும் இல்லை, என்ன பண்ற நீ” அஜய் மனைவியை கண்டிப்புடன் பார்த்தவன், கல்யாணை வரவேற்று அமர வைத்தான். சகுந்தலா அவனிடம் நலம் விசாரித்து மருமகளுடன் கிட்சன் செல்ல, “வந்ததும் உங்க பிள்ளை அவர் வேலையை ஆரம்பிச்சுட்டார்” என்று மாமியாரிடம் குறை படித்தாள் ஜீவிதா. சகுந்தலா காபி கலந்தபடி, “நீ கல்யாணை இன்னும் சீனியராவே பார்க்கிற? அதான் இப்படி, அதுக்கு தான் அஜய் கோவப்படுறான்” என்றார். “சீனியர் இந்த பார்மாலிட்டி எல்லாம் எதிர்பார்க்க மாட்டார்” ஜீவிதா சொன்னாள். “விருந்தோம்பல்ன்னா என்னன்னு தெரியுமா ஜீவிதா?” மாமியார் கேட்க, “நீங்களும் என் அம்மா மாதிரி ஆரம்பிச்சுடாதீங்க. சீனியர்ங்கிறதால மட்டும் தான் நான் இப்படி சொன்னேன்” என்று மருமகள் பதறி அடித்து கொண்டு ஹாலுக்கு ஓடிவிட்டாள். அங்கு கணவன் குடிக்க எதுவும் எதுவும் வராதவளை முறைக்க, மனைவிக்கு அது புரிய வேண்டுமே? “என்ன அஜு?” என்று அவனிடமே கேட்டாள். கல்யாண் சிரிக்க, சகுந்தலாவும் புன்னகையுடனே எல்லோருக்கும் காபி கொடுத்தார். “ரிப்ரெஷ் கூட பண்ணல நீ?” அஜய் மனைவியிடம் சொல்ல, “நான் குடிக்க ஆரம்பிச்சுட்டேன்” என்று வேகமாக குடிக்கவும் செய்தாள் மனைவி. அஜய் ஆயாசம் கொள்ள, “ஜீவிகிட்ட நீ எப்படி இதை எல்லாம் எதிர்பார்க்கிறேன்னு எனக்கு தெரியலை” என்றான் கல்யாண். “சீனியர் நீங்க சொல்றதுல நான் ஏதோ ரொம்ப பேட் பொண்ணு பீல் வருது” ஜீவிதா புருவம் சுருக்கி கேட்க, “பின்ன நீ ரொம்ப நல்ல பொண்ணு தான்” என்றார் சகுந்தலா. “ஆமா. அப்படி தான். அஜு நீங்க சொல்லுங்க” என்று கணவனிடம் கேட்க, அவனின் பார்வையோ இவளிடம் வேறு மாதிரி இருந்தது. கீழ் உதட்டை மடக்கி வைத்து, ஒற்றை கண் அடித்துவிட்டவனை பெண் அதிர்ந்து போய் பார்த்தாள். கண்கள் விரிந்து, இமை கூட சிமிட்டாமல் அவனை பார்த்திருக்க, “என்ன ஜீவிம்மா?” என்று கேட்டான் கல்யாண். “ஆஹ்ன்.. சீனியர்” பெண் விலக்க முடியாமல் தன் பார்வையை விலக்கினாள். “லன்ச் என்ன செய்யலாம்?” சகுந்தலா கேட்க, “நான் கிளம்பணும் சித்தி” என்றான் கல்யாண். “தனியா வரேன்னு கிளம்பினவளை இழுத்து பிடிச்சு கார்ல போட்டுட்டு வந்தேன். ஆபிஸ் ஒர்க் நிறைய இருக்கு. டெட் லைன் கிட்ட வந்திடுச்சு” என்றான். “நீ இன்னைக்கு கிளம்புறேன்னு முன்னாடியே தெரியும் இல்லை. என்கிட்ட சொல்லியிருந்தா கார் அனுப்பியிருப்பேன். இவரை ஏன் அலைய வைக்கிற?” என்று கேட்டான் அஜய். “நான் சர்ப்ரைஸா வர நினைச்சேன்” மனைவி முகம் சுருங்கி போனது. “சாரி சீனியர்” என்று பெண் கல்யாணிடம் கேட்க, “ஏன் அஜய்? நான் தான் அவளை கம்பெல் பண்ணி கூட்டிட்டு வந்தேன்” என்றான் கல்யாண். “உங்க வேலை கெடுது இல்லை“ “இருக்கட்டும். ஒரு நாள்ல ஒன்னும் ஆகிடாது” என்ற கல்யாண், “நீ இன்னமும் என்னை அக்சப்ட் பண்ணலை. அதான் இப்படி பேசுற?” என்றான் மனத்தாங்கலாக. “அப்படி இல்லை. இவ இன்னமும் இப்படியே இருந்தா எப்படின்னு தான். மத்தபடி நீங்க உங்க ஜுனியர்க்கு செய்றதுல எல்லாம் நான் தலையிடலை” என்றான் அஜய். ஜீவிதா கணவனை அப்படியா என்று பார்த்து வைத்தாள். சகுந்தலா இடையிட்டு, “லன்ச் சாப்பிட்டு கிளம்பலாம். ட்ரைவர் உன்னோட வருவார்” என்று முடித்துவிட்டார். கல்யாண் ஏற்று கொள்ள, ஜீவிதா அவளின் அறைக்கு சென்று வந்தாள். சகுந்தலா மதிய உணவை சிறு விருந்தாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். “மாமா எப்போ வருவார் அத்தை?” என்று கேட்டபடி அவருக்கு உதவினாள் மருமகள். “லஞ்சுக்கு தான். இப்போ எல்லாம் அவர் ரொம்ப பிசியாகிட்டார். MP மாமா போற பஞ்சாயத்துக்கு எல்லாம் அவரை கூட்டிட்டு போயிடறது. இவரும் சும்மா இருக்கிறதுக்கு கிளம்பிடுறார்” என்றார். இங்கு கல்யாணை அழைத்து கொண்டு அலுவலக கட்டிடம் சென்றான் அஜய். இருவரும் எல்லாம் பார்த்தபடி பொதுவாக பேசினர். “எனக்கும் ஏதாவது பிஸ்னஸ் பார்த்துகிட்டு ஊர் பக்கம் வந்திடலாம்ன்னு இருக்கு அஜய்” என்றான் கல்யாண். வருடம் ஏற ஏற பதவி உயர்வு கிடைத்ததோ இல்லையோ வேலை அழுத்தம் அதிகமே. சில நேரங்களில் சமாளிக்க முடிவதில்லை. தாரணியும் வேலை பார்க்க, ஜியாவிற்கான நேரம் சிரமமாக இருந்தது. அதற்காக மனைவியை வேலை விட சொல்ல மனமில்லை. அது அவள் உரிமை. இதுவே ஊர்ப்பக்கம் வந்துவிட்டால், இருவரும் இணைந்து தொழில் செய்யலாம், காமட்சி வசம் ஜியா இருப்பாள். அப்பா, அம்மாவுடனும் இருக்கலாம் என்று பல எண்ணங்கள். அதை அஜயிடம் வெளிப்படையாக சொல்ல, “நல்ல விஷயம் தான்” என்றான் அவன். “நமக்கு வேலை பார்த்தே ஆகணும்ன்னே ஓகே, அப்படி இல்லன்னா தாராளமா ஆல்டர்நேட் போலாம். எனக்கு தொழில் தவிர வேற ஆப்ஷன் இல்லை. இங்க எல்லாம் நான் தான் பார்க்கணும். அப்பாவை சிரமப்படுத்த கூடாது. பங்காளிகள் பஞ்சாயத்து, பங்க்ஷன்ன்னு பல காரணம். கூட எனக்கும் ஊர்ல இருக்க பிடிச்சிருக்கு. ஜீவிதாவும் வந்துட்டா. இனி அவளை தொழிலுக்குள்ள கொண்டு வரணும்” “மத்தது எல்லாம் ஓகே. ஜீவியை தொழிலுக்குள்ள கொண்டு வரது தான் லைட்டா இடிக்குது” என்றான் கல்யாண் சிரிப்புடன். “மேடம் கண்டிப்பா டிமிக்கி கொடுப்பா. அவ சென்னையில வேலை பார்த்ததே பெரிய விஷயம் தான்” என்றான் அஜய் அவளை முழுதும் தெரிந்தவனாக. “ஆனா அஜய் நீ அவளை ஈஸியா ஹாண்டில் பண்ணிடுவ” “பண்ணனும். இப்போ மேடம் மிஸஸ் அஜய் வேற ஆகிட்டாங்க. என்கிட்டே கெத்து காட்டுவா” என்றான் ரசனையான புன்னகையுடன். அதிலே கல்யாண்க்கு அவன் மாற்றம் தெரிய, மகிழ்ச்சி கொண்டான். “அவளோட மனசு தெரிஞ்சா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு ஜீவியை விட நான் ரொம்ப யோசிச்சேன். இப்போ சந்தோசம்” என்றான் வெளிப்படையாக. அஜய் அளவாக புன்னகைத்தவன், “என்ன பிஸ்னஸ் பண்ணலாம்ன்னு யோசிச்சிருக்கீங்க?” என்று கேட்டான். கல்யாண் தன் எண்ணத்தை சொல்ல, அவர்கள் பேச்சு அதை தொடர்ந்து சென்றது. “சேனா பெரியப்பா ஓகே சொல்வாரா?” என்று கேட்டான் அஜய். “அம்மா பார்த்துக்குவாங்க. அவரோட கண்ணு சொன்னா அவருக்கு போதும்” என்றான். “ஹாஹா.. பெரியம்மா தான் அவருக்கு சரி” “ஒரேடியா அப்படியும் சொல்லிட முடியாது அஜய். அம்மாகிட்ட எப்படி பேசணும், செய்யணும்ன்னு அப்பாக்கு நல்லாவே தெரியும். அதுக்கு அவங்க கல்யாணமே நடந்த விதமே சாட்சி” என்றான் மகன். “அதென்னமோ உண்மை தான். சேனா பெரியப்பா குணத்துக்கு அது செட் ஆகலை தான்” என்றான் அஜய். “கரெக்ட். அவரோட குணத்துக்கு வீடு புகுந்து பொண்ணு தூக்கிறது தான் சரி. ஆனா அம்மா குணம் அவருக்கு முழு அத்துப்படியாச்சே. அப்படி ஏதும் பண்ணிட்டா இவர் தலை கீழா நின்னிருந்தாலும் அம்மாவோட கடைசிவரை இவர் வாழ்ந்திருக்கவே முடியாது. தாலியாவது ஒன்னாவதுன்னு எத்தனை கட்டினாலும் பறந்திருக்கும்” அம்மாவை நினைத்து பெருமையுடன் சொன்னான் மகன். “ம்ம்ம். பெரியப்பாக்கு ஏத்த ஜோடி தான் அவங்க” என்ற அஜய், “நீங்க சொன்ன ஐடியா நல்லா இருக்கு. பெரியப்பாகிட்ட பேசி பாருங்க” என்றான். மதிய உணவுக்கு இருவரும் வீட்டிற்கு வர, விருந்தும் தயாராக இருந்தது. சங்கரும் வந்துவிட்டவர், கல்யாணிடம் பேசியபடி உணவை முடித்தார். ட்ரைவர் தயாராக இருக்க, கல்யாண் விடைபெற்றான். ஜீவிதா “தேங்ஸ் சீனியர்” என்க, இதென்ன புதுசா என்று கேட்டபடி கிளம்பினான். அஜய் அப்பாவுடன் பேசி கொண்டிருக்க, ஜீவிதா நல்ல தூக்கம். மாலை போல் தான் எழுந்து வர, அஜய் வெளியில் சென்றிருந்தான். சகுந்தலா, சங்கருடன் டீ நேரம் சென்றது. அஜய் வர, அவனுக்கு டீ கொடுத்தனர். “நோட்டீஸ் பீரியட் இல்லாம எப்படி வேலையை விட்ட? எவ்வளவு பணம் கட்டின?” என்று கேட்டான். ஜீவிதா விழித்தாள். ஏற்கனவே அப்பா, அம்மாவிடம் அவ்வளவு திட்டு வாங்கிவிட்டாள். இப்போது இவர்கள் என்ன சொல்வார்களோ, முக்கியமாக அஜய். கொஞ்சம் அச்சம் தான். மாமனார், மாமியாரை பார்க்க, “என்னத்துக்கு இவ்வளவு பாவமா பார்க்கிற கேடி. சொல்லு” என்றார் சகுந்தலா. “மூணு மாச சம்பளம்” என்றவள், தொகையை சொன்னாள். சங்கருக்கு கொஞ்சம் வருத்தம் தான். “இப்படி உடனே வேலையை விட வேண்டுமா?” தோன்றாமல் இல்லை. முதிர்ச்சி வந்தால் சரியாகி விடுவாள் என்று மௌனம் காத்தார். அஜய் அமைதியாக இருக்க, “அது முன்னாடியே பண்ணியிருக்கணும். ஏதோ நினைச்சு. சாரி” என்றாள். “அது உன்னோட வருமானம். உன்னோட உழைப்பு, நீயே அதை பிரயோஜனம் இல்லாம பண்ண கூடாது ஜீவிம்மா” என்றார் சகுந்தலா.