ள வந்தாள் -8
அத்தியாயம் -8(1)
வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு மாமியார் சாப்பிட வருவாரா என மதுரா பார்த்துக் கொண்டிருக்க கனகாவோ வெளியில் வருவதாக தெரியவில்லை. அவளுக்கு நன்றாக பசிக்க மாமியாருக்கு தனியே உணவு எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு விட்டாள்.
சற்று நேரத்தில் ஒரு வயர் கூடையோடு வீடு வந்தாள் பூங்கொடி.
“வாங்க” என மதுரா அழைக்க கண்டுகொள்ளாமல் அம்மாவின் அறைக்கு சென்றவள் கனகாவை அழைத்துக் கொண்டு கூடம் வந்தாள்.
இங்கு தான் இருக்க வேண்டாம் என கருதிய மதுரா சமையலறை சென்று நின்று கொண்டாள்.
தன் வீட்டிலிருந்து எடுத்து வந்த உணவை அம்மாவுக்கு பரிமாறினாள் பூங்கொடி. தான் சமைத்ததை உண்ணக் கூடாதென இந்த ஏற்பாடு என்பது மதுராவுக்கு புரிய வருத்தமாக இருந்தது.
காலை உணவை செய்து முடித்த போதே மதியத்திற்கும் சிறப்பாக ஏதாவது சமைக்க வேண்டும் என்ற அவளின் எண்ணம் எல்லாம் காற்றில் பறந்து விட்டது. இவள் சமைத்தால் மதியமும் மாமியார் உணவருந்த மாட்டாரே.
“இது உன் வீடும்மா, உன் அடுப்படில அவளுக்கென்ன சோலிங்கிறேன்?” என ஆரம்பித்த பூங்கொடி இன்னும் ஏற்றி விடுவது போல பேச அறைக்கு சென்று விட்டாள் மதுரா.
கையில் கைப்பேசி கூட இல்லை. தொலைக்காட்சியும் கூடத்தில் இருக்க வெறுமனே ஜன்னலை திறந்து வைத்து விட்டு அமர்ந்து விட்டாள்.
மூன்று வருடங்களுக்கு முன் சேரனுக்கு நடந்ததை பூங்கொடியாலும் கனகாவாலும் அத்தனை எளிதாக மறந்து கடந்து வர முடியவில்லை. மதுரா தாலியை கழட்டி தந்திருக்க, சேரனுக்கும் அதீத காய்ச்சல் விடாமல் போட்டு படுத்த, இங்கே பார்க்க முடியாது என திருவாரூர் மருத்துவமனையிலும் சொல்லி விட அவனுக்கு ஏதும் ஆகி விடப் போகிறது என பயந்து விட்டார்கள்.
பூங்கொடி தொலை தூரக் கல்வி முறையில் இளங்கலை படித்திருக்கிறாள். ஆனாலும் தாலியை கழட்டினால் கணவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மூட நம்பிக்கை அவளுக்கு உண்டு.
தாயும் மகளுமாக சேரனுக்கு சரியாக வேண்டும் என அத்தனை விரதம் இருந்து, பரிகாரங்களும் செய்தனர். அதன் விளைவாகத்தான் சேரன் மீண்டும் நன்றாக ஆனான் எனவும் நம்புகின்றனர். அப்படியிருக்க இப்போது மதுரா மீண்டும் சேரனின் மனைவியாக வந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அறைக்குள் வந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மதுராவுக்கு அலுப்பு தட்ட ஆரம்பித்து விட்டது.
கூடத்திலிருந்த பூங்கொடி அறை வாயிலுக்கு அருகில் வந்து நின்று, “மேவேலையெல்லாம் யாரு செய்வான்னு உன் வீட்டுக்கு வந்த மகராசி ரூமுக்குள்ள ஓடி ஒளிஞ்சிட்டா. அவ்ளோ பாத்திரம் கிடக்கு, நான் எம்மூட்டு வேலைய பார்ப்பேனா இல்ல இங்குட்டே கெடப்பேனா? இந்நேரத்துக்கு போனவள காணோமேன்னு என் மாமியா உண்டு இல்லைனு பண்ணிகிட்டு இருக்கும்” என சத்தமிட்டு விட்டு வெளியேறினாள்.
சமைக்கும் அதிகாரம் மட்டும் இல்லை, மற்ற எடுபிடி வேலைகள் மட்டும் செய்ய வேண்டுமோ என மதுராவுக்கு கோவமாக வந்தாலும் சும்மா இருப்பதற்கு அதையாவது செய்வோம் என நினைத்து எழுந்து சென்றாள்.
மிச்சமிருந்த ரவா பாத்தை வழித்து தெரு நாய்க்கு போட்டுக் கொண்டிருந்தார் கனகா. குப்பையில் போட வில்லையே என மனதை சமாதானம் செய்து கொண்டவள் பாத்திரங்களை ஒழித்து அன்னக் கூடையில் போட்டு எடுத்துக் கொண்டு கொல்லைப் புறம் சென்றாள்.
பாத்திர வேலையை முடித்துக் கொண்டு வீட்டைப் பெருக்கியவள் குளித்து துணிகளையும் துவைத்து உலர்த்தி விட்டு வர மதிய சமையலை முடித்துக் கொண்டு டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார் கனகா.
நேரம் பனிரெண்டே ஆகியிருக்க இவளுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை. தேநீர் பருகினால் நன்றாக இருக்கும் என தோன்றியது. சமையலறைக்கு செல்லவே தயக்கமாக இருக்க அறைக்கே வந்து விட்டாள்.
நேரத்தை ஓட்ட அவர்கள் அறையிலிருந்த மர பீரோவை திறந்து சேரனின் உடுப்புகளை எல்லாம் களைத்து போட்டு மீண்டும் மடித்து வைக்க தொடங்கினாள்.
பீரோவில் எல்லா துணிகளையும் அடுக்கி முடித்திருக்க கந்தசாமியும் சரவணனும் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். பேச்சுக் குரல்கள் கேட்டு சேரனும் வந்திருப்பான் என நினைத்து ஆவலாக வெளியே வந்தாள் மதுரா.
மருமகளை பார்த்து புன்னகை மட்டும் செய்த கந்தசாமி கை கால் சுத்தம் செய்ய பின் கட்டு சென்று விட்டார். அண்ணியிடம் தன் கைப்பேசி கொடுத்த சரவணன், “வேலையா இருப்பான் அண்ணன், நீங்க பேசுங்க” என சொல்லி சென்றான்.
அறைக்கு வந்தவள் வேகமாக சேரனுக்கு அழைக்க, “என்னடா?” என்றான் சேரன்.
“நான் மதுரா” என்றாள்.
“அவன் வந்திட்டானா? பத்து நிமிஷத்துல வந்திடுவேன் மதுரா” என்றான்.
“சரி, அப்ப வைக்கட்டுமா?” எனக் கேட்டாள்.
“நீ கிளம்பி இரு, சாப்பிட்டதும் வெளில போலாம்” என சொல்லி வைத்து விட்டான்.
கணவருக்கும் சின்ன மகனுக்கும் கனகாதான் பரிமாறினார்.
“என்ன அண்ணி உங்கள ஆள காணோம்?” என சரவணன் சத்தம் கொடுக்க வெளியே வந்து நின்றாள் மதுரா.
“உங்க கை வண்ணத்துல உப்புமா என்கிற பாத் மாதிரி சாம்பார் என்கிற சோம்பார், ரசம் என்கிற விஷம்… ச்சே… சாரி… ரசம் என்கிற மோசம் அப்படி ஏதாவது சாப்பிடலாம்னு வந்தேனே… இப்படி ஏமாத்திப்புட்டியளே அண்ணி” என்றான்.
“அது… வேறொரு நாள் சமைக்கிறேன்” என வருத்தம் எதையும் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.
“நீயும் சாப்பிடு ஆயி” என்றார் கந்தசாமி.
அவளுக்கு முன் முந்திக் கொண்டு, “ஆம்பளைங்க சாப்பிட முன்ன என்ன அவளுக்கு அவசரம்? இல்லாத பழக்கத்த எல்லாம் பழக்கி வுடாதீய” என கம்மிய குரலில் சொன்னார் கனகா.
“ஏட்டி என்னடி இல்லாத பழக்கம்? எனக்கு முன்ன சாப்பிடாதன்னு உன்னை நானா சொன்னேன்? நீ அப்படி இருக்கன்னா உன் விருப்பம், ஆயிக்கு பசிச்சா சாப்பிட்டு போவுது” என்றார் கந்தசாமி.
“அதானேம்மா, அக்கா கூட மாமாவுக்காக வெயிட் பண்ணிட்டா இருக்கு? இந்த காலத்துல போய்…” என அம்மாவை கடிந்த சரவணன், “சாப்பிடுங்க அண்ணி” என்றான்.
“இல்லை நிஜமா பசிக்கல, அவர் வரட்டும்” என்றவள் சரவணனின் கைப்பேசியை அங்கே மேசையில் வைப்பதாக சொல்லி அறைக்கு சென்று விட்டாள்.
ஒரு மணி நேரம் சென்று சேரன் வரும் போது கந்தசாமி உறங்க சென்று விட்டார். சரவணன் மீண்டும் வெளியில் புறப்பட தயாராக இருந்தான்.
தம்பியிடம் தானும் மதுராவும் வெளியில் கிளம்ப போவதாக சொன்ன சேரன், “திரும்ப வர்றதுக்குள்ள இருட்டிடும், களத்து மேட்டுல வேலை நடக்குது, மூக்கையன்கிட்ட சொல்லியிருக்கேன், அவன் பார்த்துக்குவான், எதுக்கும் நீயும் இடையில ஒரு எட்டு போய் பார்த்துக்க” என்றான்.
சரி என சொல்லி சரவணன் கிளம்பவும் தன்னை சுத்தம் செய்து கொள்ள சென்றான் சேரன். அவன் திரும்பி வரும் போது மதுரா பரிமாற நிற்க, சாப்பிட வந்த கனகா திரும்ப செல்ல பார்த்தார்.
“ம்மா… இன்னும் சாப்பிடலதானே நீ? வா என்கூட வந்து உட்காரு” என்றான்.
“ஏயப்பா அந்த மட்டும் அக்கறை இருக்கே உனக்கு?” உர் என முகத்தை வைத்துக்கொண்டு அங்கலாய்ப்பு செய்து கொண்டே மகனின் அருகில் அமர்ந்தார் கனகா.
கணவனுக்கு பரிமாறி விட்டு மாமியாருக்கும் பரிமாற போன மதுரா அவரின் முகத்தில் தெரிந்த கடுமையில் அன்னவட்டியை மீண்டும் சோற்றுப் பானையிலேயே வைத்து விட்டாள்.
தனக்கு தானே பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார் கனகா. இதை கவனித்தாலும் அம்மாவிடம் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் மனைவியை பார்வையால் சமாதானம் செய்தான்.
அவளுக்கு அங்கிருக்க பிடிக்காமல் போக எழப் போனாள். கைப் பிடித்து அமர வைத்தவன் தனது தட்டை அவளிடம் தள்ளி வைத்து, “நீ சாப்பிடு” என சொல்லி எழுந்து சென்று இன்னொரு தட்டோடு வந்தான்.
“நான் அப்புறம் சாப்பிட்டுக்குவேன்” என அவள் சொல்ல, “டைம் ஆச்சே, இன்னுமா பசி எடுக்கல உனக்கு? இல்லைனாலும் சாப்பிடு, வெளில போகணும்னு சொன்னேன்ன?” என்றான்.
எங்கே என கனகா விசாரிக்க, “இவகிட்ட போன் இல்லன்ன ம்மா? ட்ரெஸும் மூணுதான் இருக்கு. தூங்குறப்ப கூட சுடிதாரே போட்ருக்கா, மாத்துக்கு துணி எடுத்துக்கிட்டு இன்னும் வேணுங்கிறதையும் இன்னிக்கே வாங்கிடலாம்னு போறோம்” என்றான்.
“ஒண்ணும்தான் கொண்டு வரலைன்னு பார்த்தா நீதான் எல்லா செலவும் செய்யணுமா? உன் கொடுப்பின அப்படி, இன்னும் உற முறைல என்னென்ன சொல்ல போறாவளோ” தொண்டை வலித்ததால் அத்தோடு நிறுத்திக் கொண்டார்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த மதுராவுக்கு அடுத்த வாய் சாப்பாடு உள்ளே போவேனா என்றது.
“என்னத்த கொண்டு வரணும் இவ? எனக்காக எல்லாத்தையும் வுட்டுட்டு வந்திருக்காளே அது தெரியலையா உன் கண்ணுக்கு? எவனும் என்னவும் சொல்லிக்கட்டும். பொண்டாட்டி கொண்டு வர்றது வச்சுத்தான் குடும்பம் பண்ணனும்ங்கிற நிலைமை எனக்கில்ல” என்றான்.
அதற்கு கனகா என்ன பதில் கொடுக்க நினைத்தாரோ, “சாப்புடற நேரம் என்னம்மா பேச்சு இது?” என அதட்டலாக சேரன் சொல்ல வாயை மூடிக் கொண்டார்.
சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்த பின் தான் வெளியில் வரவில்லை, தனக்கு எதுவும் வேண்டாம் என்றாள் மதுரா.
“அம்மா பேசுறத எல்லாம் கணக்குல எடுக்காத. அத்தனை வேலையையும் கெடப்புல போட்டுட்டு கிளம்பியாந்திருக்கேன். போட்டு படுத்தாம கிளம்புடி” என்றான்.
“கிளம்பு கிளம்புன்னா கிளம்பித்தான் நிக்கிறேன்” என அவளும் சத்தமிட, “அப்ப வா” என்றவன் அறையை விட்டு வெளியேறினான்.