நதியின் ஜதி ஒன்றே! 21 2 13517 பெண் புரியாமல் பார்க்க, “என்ன முழிக்கிற? நான் மேரேஜ்க்கு முன்னாடி ஒரு நாள் பேசினோமே. உன் வேலை பத்தி” என்றான். “ஆஹ்ன். அது அப்புறம் பேசுவோம் அஜு. எனக்கு பலாப்பழம் வேணும்” என்றாள். “ம்ஹூம், முடியவே முடியாது. நேத்தே அவ்வளவு சாப்பிட்ட” என்று மறுக்க, இவள் அடம் பிடிக்க ஆரம்பித்தாள். அஜய் அவன் பிடியில் நிற்க, “சரி முந்திரி காட்டுக்காவது அழைச்சிட்டு போங்க” என்றாள். “மழை வர மாதிரி இருக்கு. சரி வா. உடனே மூக்கை விடைக்காத” என்றழைத்து போனான். காவலுக்கு இருந்தவர்கள் மட்டும் இருக்க, அவர்களுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு நடக்க ஆரம்பித்தனர். சகஜமான பேச்சுக்கள், சரளமான வார்த்தையாடல்கள் என்று இருட்டி கொண்டு வரும் வரை அங்கேயே இருக்க, சகுந்தலா அழைத்துவிட்டார். வீடு திரும்பும் நேரம் மழை பிடித்து கொண்டது. ஜீவிதா தன் முந்தானையை எடுத்து வண்டி ஓட்டி கொண்டிருந்த அஜய் தலைக்கு மேல் போர்த்திவிட்டாள். “எனக்கு வேணாம்” என்று அவன் விலக்க, “நல்ல மழை அஜு” என்று மனைவி மீண்டும் போட, “நீ எடு” என்று குரல் உயர்த்திவிட்டான். ஜீவிதா ரோஷத்துடன் தள்ளி அமர்ந்து கொண்டதுடன், அவன் பக்கமே திரும்பவில்லை. “என்ன சண்டைக்கோழி சிலிர்த்துக்கிச்சா?”சகுந்தலா இரவு உணவு நேரம் கிண்டலாக கேட்டார். ஜீவிதா அம்மா, மகனை பார்த்து நொடித்து சென்றாள். வெளியே இன்னும் மழை வலுவாக பிடித்திருக்க, அஜய் அறையின் ஜன்னல்களை எல்லாம் அடைத்தான். இவள் கணவனை முறைத்தே இருக்க, அவளின் மூக்கை கிள்ளினான் அஜய். “ஏன் வேண்டாம்ன்னு சொன்னீங்க அஜு” “அவ்வளவு ஒன்னும் மழை இல்லையே“ “இது தான் காரணமா?” “கண்ணு எல்லாம் மறைக்குது. கூட.. ம்ஹ்ம்.. உன்னோட ஸ்மெல் அதுல, கொஞ்சம் வித்தியாசமாய்“ “பிடிக்கலையா அஜு” மனைவிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. “என் வைஃப் ஆச்சே மேடம். பிடிக்காம போக என்ன இருக்கு?” “அப்புறம் ஏன் எடுத்தீங்க“ “சரி விடு இனி போர்த்திக்கிறேன்“ “இப்போவே செய்ங்க” என்று நின்றாள் மனைவி. அஜய் அதிர்ந்து போனான். “ஹேய் இது ஓவர்” என்றான். “முடியாது. பனிஷ்மென்ட் வேணும்ல்ல” என்றவள், தன் முந்தானையை எடுத்து அவன் முகம் மேல் மூடி, கணவன் தோளோடு ஒட்டி படுத்து கொண்டாள். “மூச்சு முட்டுற மாதிரி இருக்கு ஜீவிதா” அஜய் முனக, “இருக்கட்டும்” என்றாள் இவள். மெலிதான சேலை தான் அணிந்திருந்தாள். அஜய்க்கு தான் புதுவிதமான அனுபவங்கள் திணறடித்தது. உடல் இறுக்கத்தில் இருக்க, “போதுமே” என்றான். “இருக்கட்டுமே” இவள் சிரித்தபடி சொன்னாள். அடுத்து அஜயிடம் பேச்சில்லை. பேசினால் உதடுகள் அவளின் சேலையை உரச, அஜய் நெஞ்சம் ஏறி இறங்கியது. நிமிடங்கள் நீள, அஜய் அவளின் வாசத்திற்கு பழகினான். சாதாரணமாக படுத்தான். ஜீவிதா போதும் என்று முந்தானை எடுத்துவிட, “ஏன்” என்று கேட்டான் அஜய். இன்னும் அவளின் வாசம் வேண்டும் என்று அந்த நொடி தோன்றியது. இவளின் பக்கம் திரும்பி படுத்தவன், ஜீவிதா நெற்றியில் முத்தமிட்டான். உச்சி முத்தம், இப்போதெல்லாம் நெற்றிக்கு வந்திருந்தது. ஜீவிதா அசையாமல் வாங்க, இன்னொமொரு முத்தம் வைத்தான். இந்த நாட்களில் தோள் அணைப்பு, நெற்றி முத்தம் சகஜமாகி இருந்தது. ஒட்டல்கள், உரசல்கள் பழகி போயிருந்தது. இவர்களின் திருமணம் முடிந்து இரண்டு வாரமும் முடிந்து விட்டிருந்தது. ஜீவிதா அலுவலகம் செல்லும் நாளும் நெருங்கி வர, ஒருவித பதட்டம் அவளிடம். “ஏன் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க?” அஜய் கேட்டபடி வந்தான். ஜீவிதா மொட்டை மாடியில் இருக்க, இருவருக்கமான பால் அவன் கையில். இரவு நேரத்தின் குளிர்ச்சியில், பெண்ணுக்கு வேர்த்தது. “என்ன ஜீவிதா?” கவனித்து கேட்டான். “பால் சூடா இருக்கு அஜு” மனைவி சொல்ல, அஜய்க்கு நம்ப தான் முடியவில்லை. இவளுக்கு எப்போதெல்லாம் வேர்க்கும் என்று அவனுக்கு அனுமானம் உள்ளதே. பால் குடித்து முடிக்க இருவரின் கப்பை கீழே வைத்தவன், “என்ன கேடித்தனம் பண்ற?” என்று கேட்டான். “அஜு. என்ன அஜு?” “நீயே சொல்லிடு. கண்டுபிடிச்சேன் பார்த்துக்கோ” என்றான். “மிரட்டாதீங்க அஜு. அது. அது என் வேலை. இரண்டொரு நாள்ல ஜாயின் பண்ற மாதிரி இருக்கும்” என்றாள். “கிளம்பணும்ன்னு பீல் பண்றியா?” என்று கேட்டவன், முதல் முறையாக அவளை தன் நெஞ்சோடு அணைத்தான். இருவரின் உடலும் முழுதும் நேருக்கு நேராக உரச ஓர் அணைப்பு. ஜீவிதா இதய துடிப்பு அதிகமாக, அஜய்க்கோ அந்த அணைப்பு பிடித்திருந்தது. என் மனைவி என்ற உரிமையில் லேசான அணைப்பு, இன்னும் கொஞ்சம் அழுத்தம் கண்டது. “வெ. வெளியே. அஜு” பெண் அவன் நெஞ்சில் திக்கி திணற, “யாருக்கும் தெரியாது” என்றான். உச்சி முத்தம், நெற்றி முத்தத்துடன், அவளின் இரு கன்னங்களையும் பற்றி அங்கேயும் முத்தம் வைத்தான். ஜீவிதா கணவன் இடையோடு கட்டி கொண்டவள், அவனின் முத்தங்களை கண்கள் மூடி ரசிக்க, அஜய் அவளின் ரசிக்கும் பாவனையில் இன்னும் முத்தங்களின் எண்ணிக்கையை கூட்டினான். “பீலிங் போச்சா?” அஜய் கேட்க, “இன்னும் கொஞ்சம் இருக்கு” என்றாள் மனைவி. அஜய் சிரித்தவன், “இன்னும் எவ்வளவு கொடுத்தா போகும்?” என்று கேட்டான். “தெரியலையே. நீங்க கொடுத்துட்டே இருங்க அஜு. நான் சொல்றேன்” என்றாள். “கேடி” என்று நன்றாக அணைத்து கொண்டவன், “கொஞ்ச நாள் தானே? எப்போ ரிலீவ் டேட் கொடுத்திருக்காங்க” என்று கேட்டான். ஜீவிதாவிற்கு திரும்ப வேர்க்க ஆரம்பித்துவிட்டது. “என்ன ஜீவிதா?” அஜய் கேட்க, “அஜு. அது. நான்” என்று திணறியவள், அவனை விட்டு விலகி நின்றாள். “ஜீவிதா“ “அஜு நான் ரிசைன் பண்ணலை” என்றாள். “ஏன்? ஏன் பண்ணல. அன்னைக்கு நான் சொன்னேனே” அஜய் புரியாமல் கேட்டான். “அங்கேயே வேலை பார்க்கலாம்ன்னு“ “நான் இங்க இருக்க, நீ அங்க இருப்பியா?” “இருந்தா என்ன அஜு?” அஜய் பதிலின்றி அவளை பார்த்தான். “அஜு“ “நீ உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு“ “என்ன? என்ன இருக்கு, ஒன்னுமில்லை“ “உனக்கு அங்க வேலை பார்க்க பிடிச்சிருக்குன்னா நீ முதல்லே சொல்லியிருப்ப. என்கிட்ட அடமும் பண்ணியிருப்ப, இது வேற ஏதோ, என்ன சொல்லு?” என்று சரியாக கேட்டான். “ஏன் என்கிட்ட இப்போவரை அதுபத்தி பேசலை?” “நான் இடையில பேசினாப்போவும் நீ எதுவும் சொல்லலையே?” “ஜீவிதா நான் உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்“ “ஏன் அஜு. நான் இப்போ அங்க வேலை பார்த்தா என்ன?” “நாம ஒரே இடத்துல இருக்கணும்ன்னு“ “அஜு அப்படி இருந்தா தான் பிடிக்குமா?” “என்ன பேசுற நீ?” “எனக்கு தெரியும் நீங்க உங்க எக்ஸை இந்த காரணத்துக்காக தானே வேண்டாம்ன்னு சொன்னீங்க” என்று கேட்க, அஜய்க்கு அதிர்ச்சி, உடன் கோவமும். “அதனால” என்று நிதானமாக கேட்டான். “அதனால” ஜீவிதா வார்த்தைகள் இன்றி நின்றாள். அவளுக்கு அவளின் மனதின் எதிர்பார்ப்பை சொல்ல தெரியவில்லை. “என்ன சொல்லு?” என்று கேட்டான் கணவன். “நீங்க அவங்களை இதுக்காக தானே வேண்டாம்ன்னு சொன்னீங்க. அப்போ உங்களுக்கு அவங்களை அந்தளவு பிடிக்கலை தானே. இப்போ நான் அப்படி சொன்னா என்னையும் உங்களுக்கு. நான் வேண்டாங்கிற மாதிரி“ “சோ என்னை டெஸ்ட் பண்ண பார்க்கிற?” “இல்லை அஜு“ “இதை நீ நம்ம மேரேஜ்க்கு முன்னாடி இல்லை பண்ணியிருக்கணும்?” என்று கேட்டான் அஜய். ஜீவிதா அவனை கண்கள் விரித்து பார்த்தாள். “மேரேஜ்க்கு முன்னாடின்னா. என்னை வேண்டாம்ன்னு சொல்லியிருப்பீங்களா?” என்று தேங்கிவிட்ட கண்ணீருடன் கேட்டாள். “இப்போ அதுக்கான பதில் என்னவா இருந்தாலும் வேஸ்ட் தான் ஜீவிதா” என்றான் அவன். “அஜு“ “பேசாத. உன் வேலைக்கு கிளம்பிக்கோ நீ” என்று முடித்துகொண்டான். ஜீவிதாவிற்கு அவன் வார்த்தைகள் மிகவும் வலித்தது. என்னவென்று அர்த்தம் எடுப்பது? அடுத்த இரண்டு நாட்கள் இருவருக்குள்ளும் கனமாக தான் சென்றது. பேச்சுக்கள் மிகவும் குறைந்து போயிருந்தது. ஜீவிதா அத்தை, மாமாவிடம் சொன்னாள். அவர்கள் கேட்டு கொண்டனர். ஏதும் சொல்லவில்லை. சென்னை கிளம்ப, பேக் செய்து வைத்தாள். அஜய் பார்த்திருந்தான். மறுநாள் காலை கிளம்ப, அஜய் தானே அழைத்து சென்று அலுவலகத்தில் விட்டவன், “உன் திங்ஸ் எல்லாம் PGல வைச்சிடுறேன்” என்று கிளம்பிவிட்டான். ஜீவிதாவிற்கு கண்ணீர் பெருகியதுடன், கோவமும். என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஏமாற்றம் மட்டும் அதிகம். மாலை சோர்ந்து போய் வர, அஜயின் அழைப்பு. காரில் அவளுக்காக காத்திருந்தான். மனைவியின் முகம் மலர்ந்து போனது. அஜு என்று பேச வர, அவன் தாரணிக்கு அழைத்து பேசியவன், அவர்கள் வீட்டிற்கு காரை விட்டான். கல்யாண் தான் இருவரையும் வரவேற்றான். ஜியா இருவரோடு ஆட்டம். தாரணி வர லேட் ஆகும் என்பதால், இரவு உணவு வெளியே ஆர்டர் செய்து கொண்டனர். தாரணி வந்த பின் உணவு முடித்து, அவர்களுக்கான அறைக்கு வந்தனர். அஜய் படுக்க, “அஜு” என்று நின்றாள் மனைவி. அவன் பார்க்க மட்டும் செய்ய, “நான் தப்பா யோசிக்கிறேனா?” என்று கேட்டாள். கணவன் என்பதை தாண்டி அவளின் அஜய் அவன். எதுவும் என்றால் அவனிடம் கேட்டால் ஒரு திருப்தி. அஜய்க்கும் அவளை புரிய மிக பொறுமையாகவே, “இப்போ நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாது. கூடிய சீக்கிரம் நீயே புரிஞ்சுப்ப. வா” என்று அவளை தன் தோளோடு அணைத்து தூங்க வைத்தான்.