சேரனின் வீட்டிலும் யாருக்கும் சரியான உறக்கம் இல்லை. சிதம்பரத்தின் ஆட்கள் சேரனை பிடித்து விட்டால் என்னாகுமோ என்ற பயத்திலேயே வீட்டு ஆண்கள் அவர்களது ஆதரவாளர்கள்களுடன் ஆளுக்கொரு பக்கமாக இருந்தனர்.
கிராமம்தானே, அடிக்கடி வயிறை வாடாமல் பார்த்துக் கொண்டால் போதும், வேறு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இப்படியான சந்தர்ப்பங்களில் உடன் நிற்பார்கள். தேநீர் கடை வைத்திருக்கும் காளியப்பன் இரவிலும் கடையடைக்கவில்லை, அவனுக்கு எக்கசக்க வருமானம் அன்று.
கனகாம்புசம் அழுது கொண்டே இருந்ததால் அவரது முகம் வீங்கி கண்கள் சிவந்து குரல் கூட கமறிப் போயிருந்தது. பூங்கொடியும் தன் பிள்ளைகளை புகுந்த வீட்டில் மாமியார் வசம் விட்டு விட்டு இரவு அம்மா வீட்டில்தான் இருந்தாள்.
விடியவும் எழுந்து கொண்ட பூங்கொடி சாணம் தெளித்து கோலமிட்டுக் கொண்டிருக்க மதுராவோடு வந்து நின்றான் சேரன்.
திகைத்த பூங்கொடி உள்ளே சென்று அம்மாவிடம் விஷயத்தை சொல்லி கணவன், அப்பா, தம்பி என தனித்தனியாக கைப்பேசியில் அழைத்து தகவல் தந்தாள்.
மதனும் செழியனும் கூட அப்போதுதான் எங்களுக்கும் தெரியும் என்பது போல வந்து நின்றனர்.
பயமும் பதட்டமுமாக இருந்த மதுராவின் கையை பற்றி வீட்டுக்குள் செல்ல அடி எடுத்து வைத்தான் சேரன்.
“அங்குட்டே நில்லுடா, எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தா நம்ம குடும்பத்தை அவமானம் பண்ணினவள திரும்ப இழுத்துகிட்டு வருவ?” என கமறிய குரலில் கத்தி, முடியாமல் இருமினார் கனகா.
சேரனின் கையை விட்ட மதுரா ஓரமாக நின்று கைகளுக்குள் முகம் மூடி அழ ஆரம்பித்து விட்டாள்.
“என்னம்மா பேச்சு இது? இவ உன் மருமவ அத நினைப்புல வச்சு பேசு. வாசல்ல வச்சு கத்திக்கிட்டு… முதல்ல வழிய விடு” என்றான் சேரன்.
“நீ மட்டும் வா, அவள அவ வூட்டுக்கே போவ சொல்லு” என உறுதியாக சொன்ன கனகா வழியிலிருந்து நகராமல் நின்றார்.
அம்மாவுக்கு பின்னால் நின்றிருந்த அக்காவை பார்த்தான் சேரன். அவளும் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருக்க, “அவ இங்குட்டு இருக்க கூடாதுன்னு நீ நினைச்சா நானும் அவளோட போயிடுறேன். அவளை எங்கேயும் விட முடியாது” என்றான்.
மூன்று வருடங்களுக்கு முன் அவன் வெட்டு பட்டு கிடந்தது, மதுரா தாலியை கழட்டியது என அனைத்தையும் திரும்ப பேசி எப்படி நீ அவளுக்காக வீட்டை விட்டு செல்வேன் என சொல்வாய் என ஆங்காரமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் கனகாம்புசம். ஊர் சனம் எல்லாம் சேரனின் வீட்டின் முன் கூடி விட்டனர்.
“ஏண்டா பங்காளி, பொறியில சிக்கின எலி மாதிரி இருக்கு அத்தையோட குரலு சத்தம், அப்பவே இந்த அலம்பல் பண்ணுதே… நல்லா இருந்தா இன்னும் என்னென்ன செய்யாது இந்த அத்தை?” மதனின் காதில் ரகசியமாக கேட்டான் செழியன்.
“குரலே போனாலும் பீப்பி ஊதியாவது சத்தம் போட்ரனும்டா என் பெரியம்மாவுக்கு, அது ஜனிச்ச நேரம் அப்படியாம்” என மதனும் ரகசியமாக பதில் தர இருவரும் சத்தமில்லாமல் சிரித்தனர்.
எதேச்சையாக தன் நண்பர்களை பார்த்த சேரன் சைகையாகவே ‘என்னங்கடா சிரிப்பு? உங்களை அப்புறம் கவனிச்சுக்கிறேன்’ என்க, கனகாவிடம் வந்து நின்றான் செழியன்.
“அத்த… போதும் அத்த, ஊரே வேடிக்கை பார்க்குது பாரு, உள்ள போய் வை உன் கச்சேரிய, வா” என கனகாவை உள்ளே இழுத்தான் செழியன்.
அவனது கையை உதறிய கனகா அவனையும் மதனையும் பிடித்துக்கொண்டார்.
“நீங்கதாண்டா இத்தனைக்கும் காரணகர்த்தா. ஒண்ணும் தெரியாத எம்மூட்டு மவனை கெடுத்ததே நீங்கதான்” என்றார்.
“ஆமாமாம் உன் மவன் ஸ்கூல் பேக் மாட்டிக்கிட்டு நாலாவது படிக்க போனான், அவனை கையை புடிச்சு இழுத்து நாங்க கெடுத்துப்புட்டோம்” கிண்டலாக சொன்னான் மதன்.
“அதில்லடா, பால் புட்டில பால் குடிச்சிக்கிட்டு கெடந்தான், அவனை நாம்தான் தூக்கிட்டு போய் லவ் பண்ண சொன்னோம்” என்றான் செழியன்.
“டேய் என்னடா செய்றீங்க?” சேரன் கடுப்படிக்க, அவர்கள் நகர, கனகா மீண்டும் ஆரம்பித்து விட்டார்.
வேறு யாராக இருந்தாலும் சேரன் கையாளும் விதம் வேறாக இருந்திருக்கும். அம்மாவிடம் அதுவும் இரவிலிருந்து அழுது அழுது ஓய்ந்து தெரிந்தவரை எப்படி சமாளிக்க என அவனுக்கு தெரியவில்லை.
நல்ல வேளையாக கந்தசாமி அவரது சின்ன மகன் மற்றும் மாப்பிள்ளையுடன் வந்து சேர்ந்தார். கணவரின் முறைப்பில் தற்காலிகமாக வாயை மூடினார் கனகா.
மகனை பார்த்த கந்தசாமி, “என்கிட்ட சொல்லியிருந்தா ஊரறிய நல்லபடியா நடத்தி வச்சிருப்பேனா இல்லயாடா? மொத தடவ பண்ணின தப்பையே இப்பவும் செஞ்சிருக்க, தாலி கட்டி நேர இங்குட்டு வராம… சேச்ச… உன்கிட்டருந்து இத எதிர்பார்க்கலடா” கவலையும் ஆதங்கமுமாக சொன்னார். ஆனால் கோவம் இல்லை.
சேரனுள் மூன்று வருடங்களாக இருந்த ஆத்திரம். எப்படி என் கல்யாணத்தை செல்லாது என்பீர்கள்? என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து என் மனைவியை அழைத்து செல்ல வந்த என் அப்பாவுக்கும் அவமானம் ஆகி விட்டதே! என கனன்று கொண்டே இருந்த கோவத்தின் விளைவாக இப்படி திட்டமிட்டு விட்டான்.
அப்பாவை தவிப்பாக ஒரு பார்வை பார்த்தவன் விழிகளை தாழ்த்திக் கொண்டான்.
அதையே கந்தசாமியால் தாள முடியவில்லை, மகனின் தோளில் தட்டியவர், “சரி விடு, மருமவள உள்ள அழைச்சிட்டு போவாம வாசல்ல நிக்க வச்சிருக்கியே” எனக் கேட்டவர் மருமகளையும் பார்த்து, “நம்ம வீட்டுக்குள்ள போ ஆயி” என்றார்.
லேசாக தலையாட்டிய மதுரா கலக்கமாக கனகாவை பார்க்க, அவர் இன்னும் வழியை மறித்துக் கொண்டுதான் நின்றிருந்தார்.
மனைவியிடம் கந்தசாமி ஏதோ சொல்லப் போக, அதற்குள் சிதம்பரமும் வனராஜனும் அவர்கள் ஆட்களோடு வந்தடைந்து விட்டனர்.
கோயில் திருவிழா சமயம் என்பதால் இரு ஊர்ப் பெரியவர்களும் கலவரம் வராமல் முன்னெச்சரிக்கையாக இருந்தனர். அப்படியும் துள்ளிக் கொண்டிருந்தான் வனராஜன்.
“கல்யாணம் முடிச்சு வாழவே செஞ்சிட்டாங்க, இதுக்கு மேலயும் புள்ளைய உன் கூட அனுப்பி வைக்க சொல்றது நியாயமே இல்லை சொல்லிப்புட்டேன்” என்றார் ஊர் பிரஸிடெண்ட் சின்னய்யன்.
“அதானே… இதுக்கு மேல அழைச்சிட்டு போயி என்ன செய்ய போறீய? இது ஒண்ணும் கட்டாய கல்யாணம் மாதிரியும் தெரியலையே” என்ற இன்னொருவர், “நீ சொல்லு ஆயி, சேரன் உன் சம்மதம் இல்லாமலா தாலி காட்டினாப்ள?” எனக் கேட்டார்.
இல்லை என்ற மதுரா முன்னர் நடந்த திருமணம் கூட கட்டாயம் இல்லை, சேரனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்பதால்தான் அப்படி சொல்லி தாலியை கழட்டினேன் என சொன்னாள்.
அனைவரும் மதுராவின் அண்ணன் மற்றும் பெரியப்பாவை கண்டனமாக பார்த்தனர்.
“கடத்திட்டு போய் சோலியவும் முடிச்சிப்புட்டான் சேரன் பய, அப்புறம் அப்படித்தான் சொல்லும் இந்த புள்ள” என்ற சிதம்பர பக்க ஆள் ஒருவன், “நீ உண்மைய சொல்லு ஆயி” என்றான்.
“யோவ் என்னத்த சோலிய முடிச்சேன், எம்பொண்டாட்டி அவ, ஒன் வயசுக்கு மரியாதை கொடுத்து நிக்கிறேன், இல்லன்னா…” எச்சரிக்கை போல சொன்னான் சேரன்.
இந்த பேச்சையெல்லாம் கேட்க கேட்க மதுராவுக்கு அழுகைதான் வந்தது.
மதுராவை நோக்கிய கனகாம்புசம், “தாலிய கழட்டி கொடுத்திட்டு போனவ இப்ப எதுக்குடி வந்த? ஒரு ராப்பொழுதுக்குள்ள தனியா போற அளவுக்கு அவனை பேச வைக்கிற. ஏன் மெட்ராஸ்ல படிச்சியே… அங்க எவனும் கெடைக்கலியா உனக்கு? எம்மூட்டு மவன்தான் கெடைச்சானா? அவன் கூப்பிட்டா உடனே ஓடி வந்திடுவியா? எப்ப எப்பன்னு அலைஞ்சிக்கிட்டு கெடந்தியோ?” என வரம்பு மீறி பேசினார்.
மதுரா கேவ ஆரம்பிக்க, சேரனின் பொறுமை காற்றில் பறந்து விட்டது. அம்மாவை கோவமாக ஏதோ பேசப் போக மனைவியை பிடித்து இழுத்துக் கொண்டு போய் வீட்டுக்குள் விட்டு வந்தார் கந்தசாமி.
“இந்த பேச்சு வாங்கதான் ஓடியாந்தியாடி? குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சுப்புட்டன்ன?” எனக் கேட்டுக் கொண்டே மதுராவை அடிக்க பாய்ந்து வந்தான் வனராஜன். அவனை தடுத்து மனைவியை தன்னருகில் பாதுகாப்பாக நிறுத்திக் கொண்டான் சேரன். வனராஜனை இருவர் வந்து பிடித்துக்கொண்டனர்.
திமிறி விடுபட்டுக் கொண்ட வனராஜன் ஆக்ரோஷமாக வந்து சேரனின் கன்னத்தில் அறைந்து விட்டான். ஆத்திரமான சேரன் திரும்ப அடிக்க போக அவனது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள் மதுரா. அவளை முறைத்தாலும் அவளை மீறிக் கொண்டு செல்லவில்லை அவன்.
சேரனின் நண்பர்கள், தம்பி, அக்காவின் கணவன் மோகன் என நால்வரும் சேரனுக்கு அரணாக வந்து நின்றனர்.
“பெரியவுக பேசும் போது கை நீட்டக் கூடாதுன்னு ஊர் மரியாதைக்கு கட்டுப்பட்டு நிக்கிறோம்” என்றான் மோகன்.
“அதானே… எங்களுக்கு அடிதடிலாம் இறங்க தெரியாமயா ஓரமா நின்னோம்? ஒரு எட்டு எம்மாப்ள பக்கம் எடுத்து வச்சு பாருடா” என உறுமலாக சொன்னான் செழியன்.
“செத்த செவனேன்னு இருங்கப்பா, நாங்கதான் பேசுறோம்ன்ன?” என அதட்டி அவர்களை பேச விடாமல் அமைதியாக இருக்க செய்தார் கந்தசாமி.
அதற்குள் சிலர் வனராஜனை அங்கிருந்து அப்புற படுத்தி அழைத்து செல்ல பார்த்தனர்.
“பகுமானமா கட்டிகிட்டு வந்திட்டான், ஆத்தாக்காரிய பேச வுட்டு வேடிக்கை பார்க்கிறான். இவன நம்பி எந்தங்கச்சிய விடவா நான்? மரியாதையா அவள என்னோட அனுப்பி வச்சிடுங்க, இல்லனா நாலு தலை உருளும் இங்குட்டு சொல்லிப்புட்டேன்” வாய் ஓயாமல் பேசிக் கொண்டே தன்னை இழுத்தவர்களின் இழுப்புக்கு உடன் பட்டு சென்றான் வனராஜன்.
அஞ்சலையும் சரஸ்வதியும் யாரின் பைக்கிலோ அமர்ந்து இங்கு வந்தடைந்தனர். கந்தசாமி மகனுக்காக பேசுவது போல் அல்லாமல் நியாயத்தை எடுத்து சொன்னார். அவர் சொல்வது இரண்டு ஊர் மக்களுமே ஏற்றுக்கொள்ளும் படி இருந்தது.
மதுரா சேரனின் மனைவி, வனராஜனும் சிதம்பரமும் இவர்களுக்கு தொந்தரவு தரக் கூடாது என இரு ஊர்களின் தலைவர்களும் முடிவாக சொல்லி விட்டனர்.
கூட்டத்திலிருந்து தள்ளி நின்றிருந்த வனராஜனிடம் இந்த முடிவு பற்றி சொல்லப் பட, காலை தரையில் உதைத்து தன் கோவத்தை வெளிப் படுத்தினான்.
அஞ்சலை மகளிடம் செல்ல முயல அதற்கு வனராஜன் அனுமதிக்கவில்லை.
“நம்ம வூட்டு பொண்ணு செத்து போயிட்டா” என அம்மாவிடம் சத்தம் போட்டவன் யாரையோ அழைத்து அவரையும் மனைவியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
அரசியலில் இருப்பவர்கள் ஊரார் பார்த்துக் கொண்டிருக்க ஓரளவுக்கு மேல் தன் கெட்டத் தனங்களை காட்ட முடியாதே, ஆகவே வனராஜனை சமாதானம் செய்து அவரது ஆட்களோடு அங்கிருந்து புறப்பட்டார் சிதம்பரம்.
பூங்கொடியை அழைத்த கந்தசாமி மதுராவை வீட்டுக்குள் அழைத்து செல்லுமாறு கூறினார். அப்பாவின் வார்த்தையை மீற முடியாமல் விருப்பம் இல்லா விட்டாலும் நாத்தனாரின் கையை பிடித்தழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் பூங்கொடி.
சேரனால் உடனே வீட்டுக்குள் செல்ல முடியவில்லை. அங்கிருந்த பெரியவர்களிடம் கந்தசாமி மரியாதை நிமித்தமாக பேசிக் கொண்டிருக்க அவனும் அங்குதான் இருந்தான்.
கூடம் வந்த பூங்கொடி மதுராவின் கையை உதறி விட்டு அவளை திரும்பியும் பாராமல் அறை ஒன்றுக்குள் சென்று அடைந்து கொண்டாள். பின் பக்க வாசலில் அமர்ந்திருந்த கனகா தனியாக புலம்பிக் கொண்டிருந்தார்.
அந்நியமாக பட்ட அந்த வீடும் வீட்டு பெண்களும் மதுராவை இன்னும் கலவரமடைய செய்தனர்.