“பொண்ணை பெத்தவருக்கு நீங்க புத்தி சொல்லணும்ன்னு இல்லை மாமா. தாரணி விஷயத்திலே நீங்க பண்ணது போதும். இதை அஜய் பார்த்துப்பான்”

“உங்களுக்கு எல்லாம் இவரை பத்தி தெரியலை. என் சம்மந்தியை சமாளிக்க எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று மீசையை முறுக்கி விட்டு கொள்வார்.

“எனக்கு என்னமோ அப்பா சொல்றது சரி மாதிரி தான் இருக்கும்மா. அங்கிள் ஓகே சொல்வார்ன்னு நாம காத்திருந்தா இந்நேரம் நீங்க பேத்தியை  பார்த்திருக்க முடியுமா?” என்று விடுமுறைக்கு வந்த ஆனந்தன் கேட்டான்.

“அப்படி சொல்லுடா மகனே. உனக்கும் கையோட பொண்ணை பிடிச்சு போட்டுடுவோமா?” என்று சேனாதிபதி மகன் தோள் தட்டி கேட்டார்.

மகனோ அவரை பாவமாக பார்த்தவன், “ஏன்ப்பா இந்த பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறது எல்லாம் நமக்கு வராதா, பிடிச்சு தான் போடுவீங்களா?” என்று கேட்டான்.

“அவர் பழக்கம் அப்படி ஆனந்தன்” என்று காமாட்சி கணவர் காலை வாரிவிட்டார்.

சேனாதிபதி அப்படியும் இவர்களுக்கு ‘டேக்கா’ கொடுத்து பலராமை பார்க்க சென்றுவிட்டார். அஜய்க்கு என்ன குறை என்று ஆரம்பித்து, இவரிடம் என்ன குறை என்பதில் வந்து நிறுத்தினார்.

“உங்களுக்கு சுதாரிப்பு இல்லை சம்மந்தி” என்றார்.

“கல்யாண், அஜய்க்கு எல்லாம் என்ன குறைன்னு நீங்க வேணாம்ன்னு சொல்றீங்க”

“அப்போ என் பொண்ணுங்களை நான் குறையா வளர்த்து வைச்சிருக்கேன்னு சொல்றீங்களா?” பலராம் கடுப்பாக கேட்டார்.

“அவங்க எல்லாம் தங்கம் தான்” என்றவர் பார்வை பலராம் மேல் வித்தியாசமாக படிந்தது.

‘என்ன இப்படி பார்க்கிறார். ஒருவேளை இந்த மனுஷன் என்னை தகரம்ன்னு சொல்றாரா’ பலராம் சந்தேகமாக பார்த்தார்.

சேனாதிபதி, “நம்பிக்கை தான் சம்மந்தி எல்லாம். நீங்க அதை யார் மேலேயும் வைக்கவே மாட்டேங்கிறீங்க?” என்றார்.

“எதை வைச்சு அப்படி சொல்றீங்க. அஜய், சங்கர் சார் மேல நான் வைச்ச நம்பிக்கை எல்லாம் உங்களுக்கு தெரியாது”

“அதை எல்லாம் நம்பிக்கை சொல்லாதீங்க சம்மந்தி. என்னை சந்திக்க நீங்க அவங்களை பயன்படுத்திக்க நினைச்சீங்க”

பலராம் திகைத்தார். “எனக்கு மனுஷங்களை படிக்க தெரியும் சம்மந்தி. கல்யாண் கல்யாணத்துல நீங்க அஜய் குடும்பத்தை பண்ணதை நானும் கவனிச்சுட்டு தான் இருந்தேன். பார்க்க ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அதெப்படி ஒரேடியா மனுஷனை தூக்கி போட்டுடுறீங்க?”

“இப்போவும் அஜய்க்கு கொடுக்க கூடாது. அவ்வளவு தான். காரணம் எல்லாம் ஒன்னுமே இல்லை. உங்க ஈகோ திருப்தி படுத்த பொண்ணு வாழ்க்கையை கையில் எடுக்கிறதா?”

“இவங்களை விட்டா என் மகள்களுக்கு வேற நல்ல வாழ்க்கையே அமையாதுங்கிற மாதிரி தான் நீங்க ஒவ்வொரு முறையும் பேசுறீங்க சம்மந்தி” பலராம் கேட்டார்.

“நல்ல வாழ்க்கை வேற, பிடிச்ச வாழ்க்கை வேற”

“எல்லாரும் தான் வாழுறாங்க. வாழாம மனுஷ ஜென்மம் போகாது. என்ன பெத்தவங்களா நாம நினைக்க வேண்டியது எல்லாம் நம்ம பிள்ளைங்க கொஞ்சம் பிடிச்சும் வாழ்ந்துட்டு போகட்டுமேன்னு தான்” என்றார் சேனாதிபதி.

பலராம் பதில் இல்லாமல் இருக்க, “யோசிங்க. கொஞ்சம் உங்களை தள்ளி வைச்சுட்டு யோசிங்க. உங்க பொண்ணு யாரை கட்டினா சந்தோஷமா இருப்பான்னு பாருங்க” என்று கிளம்பிவிட்டார்.

பலராம் மௌனமாக இருந்தார்.  கல்பனாவிற்கு அந்த நொடி அவ்வளவு ஒரு நிம்மதி. கணவரிடம் இப்படி பேச முடியாமல் தான் தவித்திருந்தார்.

மகள் ஊருக்கு வந்தே சில வாரங்கள் ஆகிவிட்டது. பலராம் கேட்டு கொள்ளாமலே இருக்க, அம்மாவிற்கு தானே தேடல் எல்லாம்.

எப்போதும் போல சகுந்தலாவிற்கு அழைத்து வீட்டில் நடந்ததை எல்லாம் பகிர்ந்து கொண்டார். “தாரணி மாமனார் பேசின பின்னாடி கொஞ்சம் அமைதியா தான் இருக்கார் சகு. யோசிக்கிறார் போல” என்றார் எதிர்பார்ப்புடன்.

“ஏன் உன் பொண்ணு என்ன பண்றா, அப்பாகிட்ட பேசலையா?” என்று கேட்டார் சகுந்தலா.

“அவ பேசினா. அதுக்கு இவர் இப்படி கேட்டுட்டார். அதுல இருந்து அவ ஊருக்கே வரலை” என்று நடந்ததை சொன்னார்.

சகுந்தலா கேட்டு கொண்டவர், நீண்ட நாட்களுக்கு பின் ஜீவிதாவிற்கு அழைத்தார். பார்த்தே இருந்த பெண் மூன்றாம் முறை தான் எடுத்தாள். “போன் எடுக்க இவ்வளவு நேரமா?” சகுந்தலா அதட்டி கேட்க,

“உங்ககிட்ட நான் பேச மாட்டேன்” என்று விசும்பினாள் பெண்.

“பேசாத. நான் போன் பண்ணது என் மகன் வாழ்க்கைக்கு என்ன பதில்ன்னு கேட்க தான்” என்றார் சகுந்தலா.

“என்ன பதில்ன்னா”

“அவனுக்கும் வயசு ஏறுது  இல்லை. ஒத்தை மகனுக்கு நாங்க ஒரு நல்லது பண்ண வேண்டாமா?”

“அதுக்கு”

“நீ இரண்டுல ஒன்னு சொல்லு. நாங்க வேற பொண்ணு பார்த்துகிறோம்”

“நீங்க பார்த்தாலும் அஜு கட்ட மாட்டார். அவர் என்னை மட்டும் தான் கட்டுவார்”

“ஆஹ்ன் கட்டுவார் கட்டுவார். அப்படியே என் மகன் கட்ட கழுத்தை நீட்டிகிட்டு இருக்கியா நீ”

“என் அப்பா தான் விட மாட்டேங்குறார்”

“அப்போ நான் வேற பார்க்கிறேன்”

“அத்தை”

“என்ன நொத்தை? ஒழுங்கா சீக்கிரம் பேசி எனக்கு ஒரு முடிவு சொல்லு” என்று வைத்துவிட்டார் அவர்.

ஜீவிதா நகத்தை கடித்து துப்பியவள், அஜய்க்கு அழைத்தாள். “என்ன ஆட்டக்காரி திடீர் போன்” அஜய் கேட்க,

“நான் ஒன்னும் ஆடிக்கிட்டு இல்லை. உங்க அம்மா தான் உங்களுக்கு வேற பொண்ணு பார்க்கிறேன்னு சலங்கை கட்டுறாங்க” என்றாள்.

அஜய் மௌனமாக சிரித்தவன், “பின்ன எத்தனை மாசம் தான் உனக்கு காத்திட்டிருப்பாங்க. இப்போவரை உன் அப்பாகிட்ட ‘எஸ்’ வாங்குனியா நீ?” என்று கேட்டான்.

“நீங்க வேணும்ன்னே என்னை அவர்கிட்ட மாட்ட வைச்சிட்டடு, அக்காக்கு மட்டும் உடனே கல்யாணம் பண்ணி வைச்சுட்டீங்க”

“அதுதான் இப்போ பஞ்சாயத்தே. அதை ஏன் திரும்ப இழுக்கிற நீ? நம்ம விஷயத்தை சொல்லு. என்ன சொல்றார் அங்கிள்?” என்று கேட்டான்.

ஜீவிதா அமைதியாகி விட்டாள். “என்ன ஜீவிதா?” அவன் கேட்க,

“எனக்கு அவர் கேட்கிறதுக்கு பதில் சொல்ல முடியலை அஜு” என்றாள் சோர்வாக.

“ஏன். அப்படியென்ன கேட்கிறார்?”

“ஒன்னும் இல்லை போங்க. நான் வைக்கிறேன்” என்று உடனே வைத்தும்விட்டாள்.

அஜய் புருவம் சுருக்கியவன், அம்மாவிடம் சென்றான். அவரிடம் பலராம் பேச்சை  கேட்டு தெரிந்து கொண்டான்.

ஒரு வாரம் பொறுத்தவன், அவரை பார்க்க கிளம்பிவிட்டான். தனியே.

பலராம் அவனை எதிர்பார்க்கவில்லை. கல்பனா மகிழ்ச்சியுடன் வரவேற்று அமர வைத்தார்.

நிதானமாக அவர் கொடுத்த காபியை குடித்தான். மதிய உணவுக்கு அவர் கேட்க  சரி என்றான். கல்பனா சமைக்க ஓடினார்.

“உங்ககிட்ட பேசணும் மாமா” என்றான் உரிமையான அழைப்பில்.

“ஜீவிதாகிட்ட நீங்க கேட்டதுக்கு பதில் நான் தான் சொல்லணும். அவ இல்லை” என்றான்.

“என் வாழ்க்கை நிச்சயம் என் இஷ்டம் தான்.  அதுல அவ விருப்பத்தை அவ நுழைக்கலை. எனக்கும் முழு சம்மதத்தோட தான் அவ உள்ளே வரா. அதோட இது அவளோட வாழ்க்கையும் கூட தான். அவளுக்கு விருப்பமானதை செய்ய, எப்போவும் கூட நான் இருக்கேன்.  அது போதுமே அவளுக்கு”

“நீங்க உங்க சம்மதம் சொன்னா போதும். அது எப்போ இருந்தாலும் எனக்கு ஓகே தான்.  என் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு மட்டும் தானே தெரியும். என்னை வைச்சு அவளை கஷ்டப்படுத்தாதீங்க ப்ளீஸ்” என்று முடித்து கொண்டான்.

பலராம்க்கு பேச அவன் ஒன்றுமே வைக்கவில்லை. கல்பனா வைத்த விருந்தையும் திருப்தியாக உண்டு கிளம்பிவிட்டான்.

ஜீவிதா அந்த வாரம் ஊருக்கு வந்தாள். உடன் கல்யாண் குடும்பமும். அஜய் வந்து பேசியதை அவளிடம் சொல்ல வேண்டாம் என்றிருந்தான் அவன்.

தாரணி இரவு உணவு முடித்து அப்பா அறைக்கு சென்றாள். “என் விஷயத்துல நடந்ததுக்கு முழு காரணமும் நான் தான்ப்பா.  அஜய், அவன் அப்பா, பெரியப்பா இல்லை” என்றாள்.