நதியின் ஜதி ஒன்றே 18

அஜய்எனக்கு டைம் கொடுஎன்று ஜீவிதாவிடம் கேட்டான். அவளும்  ஏற்று கொண்டாள்.

ஆனால் இருவரின் வீட்டினரும் அதற்கு தயாராக இல்லை போல.

சூட்டோடு சூட்டாக பானையை அடுப்பில் ஏற்றி வைத்திருந்தனர்.

முதலில் நான்  தயாராக வேண்டும். அதன் பின் தந்தையை சமாளிக்க வேண்டும். இறுதியாக தான் பலராமிடம் பேச வேண்டும்  என்ற அஜயின் கணக்கை அப்படியே  தலைகீழாக  மாற்றி வைத்திருந்தார் சேனாதிபதி.

சம்மந்திக்கு முதலிலே போன் செய்து சொல்லிவிட்டார். அதுவும்அஜய், ஜீவிதா தான் அடுத்த காதல் திருமண ஜோடிஎன்பதாய்.  

பலராம்க்கு தன் காதுகள் சரியாக தான் கேட்டதா என்று மகா சந்தேகம்

மனிதர், “என்ன சம்மந்தி சொல்றீங்க. எனக்கு என்னமோ கேட்குதுஎன்று கேட்டார்.

சேனாதிபதி நல்ல சத்தமாக, “நம்ம வீட்ல அடுத்த காதல் ஜோடி ரெடியா இருக்காங்க சம்மந்தி. கல்யாண நேரம் கூடி வந்திடுச்சுஎன்றார்.

என்ன? என்ன ஜோடி, யாரை சொல்றீங்க நீங்க?” பலராம் உயிரை கையில் பிடித்து கொண்டு கேட்டார்.

வேற யாரு நம்ம அஜய், ஜீவி பொண்ணு தான்என்று சேனாதிபதி அவரின் காதிலே உரக்க சொன்னார்.

பலராம்க்கு பேச்சு வர வேண்டுமே. காற்று கூட வருகிறதா என்பது சந்தேகமே

“சம்மந்தி. நாங்க காலையில கிளம்பி வந்துடுறோம். நேர்ல வந்து மத்தது பேசிக்கலாம். அப்பறம் இந்த மாசம் விட்டா அடுத்தடுத்த மாசம் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. சட்டு புட்டுன்னு இந்த மாசமே முகூர்த்தம் வைச்சிடலாம் என்ன சொல்றீங்க?”

அந்த பக்கம் சத்தமே இல்லை. மனிதர் நெஞ்சை பிடித்து கொண்டு சீட்டில் சாய்ந்திருந்தார்.

அலுவலகத்தில் இருந்தவர்கள் பார்த்து பதறி ஓடி வந்தனர்

ஹலோ.. ஹலோ சம்மந்திஎன்ற சேனாதிபதியின் கத்தலில் மேனேஜர் போன் எடுத்து பலராம் நிலைய சொல்ல, மற்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினர்.

சேனாதிபதி போன் வைத்து நெற்றியை கீறி கொண்டார். ‘என்ன  இந்த மனுஷன் இம்புட்டு வீக்கா இருக்கார்?’

வீட்டினரிடம் சொல்ல வேண்டுமே. கல்யாண் மூலம் சொல்ல, “என்ன ஆச்சு? எப்போ, எப்படி?” என்று ஆயிரத்தெட்டு கேள்விகள்.

கல்பனா, தாரணி பயத்தில் அழுகை. சேனாதிபதி அவரின் ஆளை உடனே மருத்துவமனை சென்று பார்த்து சொல்ல சொல்லியிருக்க, சில நிமிடங்களில் அவர் அழைத்துவிட்டார்.

அதிர்ச்சி மயக்கம் தானாம் தலைவரே. நெஞ்சு வலி அவர் ஏதோ கேட்க கூடாததை கேட்டதுனால மைல்டா வந்திருக்கு. பயப்படும் படி ஒன்னும் இல்லைஎன்றார்.

சேனாதிபதி அதை அப்படியே சொல்ல, பதட்டம், அழுகை எல்லாம் கொஞ்சம் தணிந்தது. இவர்கள் உடனே சென்னை கிளம்ப ஏற்பாடு செய்ய, அஜய், ஜீவிதா வந்துவிட்டனர்.

இவர்கள் பரபரப்பில் என்னவென்று கேட்க, விஷயம் சொல்லப்பட்டது.

அஜய் திரும்பி ஜீவிதாவை தான் அப்படி பார்த்தான். அவளுக்கு அப்பா பற்றிய கவலையுடன், அஜய்க்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை.

சங்கர் சத்தம் கேட்டு வந்துவிட்டார். அவருக்கும் சொல்லபட, அஜய், ஜீவிதாவை தான் கண்டனமாக பார்த்தார்.

சீக்கிரம் கிளம்புங்கஎன்றார் சங்கர்.

கட்டிடம் அன்று தான் திறந்திருக்க, பெரியப்பா தான் பார்த்து கொள்வதாக சொல்லிவிட்டார்.

அஜய் குடும்பமும் அரியலூர் கிளம்பியது. பலராம்க்கு மயக்கம் தெளியவும் எல்லாம் நினைவிற்கு வந்து, திரும்ப ஒரு  மயக்கம்.

“இவர் என்ன பொசுக்கு பொசுக்குன்னு மயக்கம் போடுறார் தலைவரே. யாரோ எதையோ சொல்லி செமயா திகிலை கிளப்பி இருக்காங்க போலஎன்றார் சேனாதிபதியின் ஆள்.

காரில் கேட்டு கொண்டிருந்த அத்தனை பேரும் சேனாதிபதியை தான் பாசமாக பார்த்து வைத்தனர்.

இவர்கள்  மருத்துவமனை சென்று சேர்ந்த நேரம், பலராம் கொஞ்சம் தெளிந்திருந்தார்

தாரணியிடமாவது என்னால் ஏதோ பேச முடிந்தது. அவரின் சின்ன மகள், ஜீவிதா. அவளிடம் பேச கூட முடியுமா என்பது தான் மாபெரும் கேள்வியே.

சிறு சிறு விஷயங்களிலே அவ்வளவு பிடிவாதம் பிடிப்பவள். சாதித்தும் கொள்பவள். இதில் விடுவாளா? தந்தைக்கே நம்பிக்கை இல்லை.

அதற்காக அஜய் என் மருமகனா என்பதும் அவருக்கு ஏற்க முடியாததாக இருந்தது.

அவர் இருக்கும் அறை கதவு திறக்க, மொத்த பேரும் உள்ளே நுழைந்தனர். சேனாதிபதி தவிர. காமாட்சி அவரை பிடித்து வைத்து கொண்டார்.

ஏன் கண்ணு. நான் என் சம்மந்தியை பார்க்க வேணாமா?” என்று கோவப்பட

அவர் சரியாகி வரணும்ன்னா நீங்க அவரை பார்க்காம இருக்கிறது தான் நல்லது மாமாஎன்றுவிட்டார் காமாட்சி.

அவர் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து கொள்ள, பலராம் அறைக்குள் தன் சின்ன மகளையும், சங்கர் குடும்பத்தை தான் பார்த்திருந்தார்.

தாரணி திருமணத்தில் பார்த்தது சங்கரை. இப்போது தான் பார்க்கிறார். வீட்டினர் விசாரிக்க, சகுந்தலா முன் வந்து, “எப்படி இருக்கீங்கண்ணாஎன்று கேட்டார்.

பலராம் தலையசைக்க, “உடம்பை பார்த்துக்கோங்க. மத்தது அப்பறம் பார்த்துக்கலாம்என்றார் சங்கர்.

அஜய் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தவன், மருத்துவர் வரவும் அவரிடம் பேச சென்றுவிட்டான். கல்யாண் தம்பியுடன் சேர்ந்து அவரோடு மற்றவர்களுக்கும் குடிக்க ஏற்பாடு செய்தான்

தாரணி அப்பாவிற்கு ஜுஸ் கொடுக்க, கல்பனா கணவரின் கை பிடித்து அமர்ந்திருந்தார். மற்றவர் வெளியே வந்துவிட, அவர்கள் வீட்டினர் மட்டும் உள்ளே.

பலராம் சின்ன மகளையே பார்த்தவர், “எப்போ உன் பிடிவாதத்தை ஆரம்பிக்க போற?” என்று கேட்டார்.

ஜீவிதாவிற்கு குத்தியது. மன்னிப்பு கேட்கவும் அவளால் முடியவில்லை. தரையை பார்த்திருந்தவள், நிமிர்ந்து அப்பாவை பார்த்தாள்.

ஊருக்கு போயிட்டு வந்து பொண்ணு பார்க்க ஒத்துப்பேன்னு சொன்னது?” கேள்வியாக கேட்டு நிறுத்தினார்.

ஜீவிதா பார்வை தடுமாறியது. அதிலே தந்தை அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டார். “சோ என்னை ஏமாத்தியிருக்க?” என்று கோவமாக கேட்டார்.

ஏங்க. பொறுமையா பேசுங்ககல்பனா பதட்டம் கொண்டார்.

நீ அமைதியா இரு. எனக்கு அவ பதில் சொல்லட்டும்என்று மனைவியிடம் குரல் உயர்த்தினார்.

அஜய் அப்போது தான் வந்தவன், உள்ளிருந்த சத்தத்தில் அறைக்குள் வந்துவிட்டான். உடன் மற்றவர்களும்.

ஜீவிதா பாவமாக அஜயை பார்க்க, கேள்வியாக புருவம் உயரத்தினான். பலராம்க்கு அஜயை பார்க்கவும் இன்னமும் பற்றி கொண்டது.

அங்க என்ன பார்வை? என் கேள்விக்கு  பதில் சொல்லு?” 

ப்பா. ப்ளீஸ். பொறுமையா இருங்கதாரணி தந்தை கை பிடித்து கேட்டாள்.

பலராம் அவள் கையை உதறியவர், “நீ தான் இது எல்லாத்துக்கும் காரணம், உன்னால தான் இவளும் இப்படி வந்து நிக்கிறா, நீ தான். அக்கா சரியா இருந்தா தங்கச்சி ஏன் தறிகெட்டு அலைய போறா?” என்று கேட்டுவிட

ஜீவிதாவிடம் கோவமும், கண்ணீரும் சரிக்கு சரி நின்றது. தாரணி யாரின் முகத்தையும் பார்க்க முடியாமல் தேம்பினாள்.

கல்யாண்க்கு இப்போதும் இந்த பேச்சா? மனைவி கண்ணீரில் பேச போக, காமாட்சி மகன் கை பிடித்து தடுத்துவிட்டார்.

சேனாதிபதியை யார் தடுப்பது? “என் மருமகளை என்ன பேசுறீங்க?” என்று கேட்டார்.

அங்கிள் ப்ளீஸ்அஜய் அவரை மறுப்பாக பார்த்து தலையசைத்தான்.

அவர் என் சம்மந்தி, என்கிட்ட பேசுறார். நீ என்ன அவரை பேச வேண்டாம்ன்னு சொல்ற?” என்று அஜயிடம் நேரே சண்டைக்கு சென்றார் மனிதர்.

சங்கருக்கு இதெல்லாம் தேவையா என்றிருந்தது. இந்த மனிதரிடம் எத்தனை முறை தான் நாங்கள் பேச்சு வாங்குவது? அதுவும் இவர் மகள்கள் செய்வதற்கு

மருத்துவமனையில் இருக்கிறார். மனதில் நினைத்தை கேட்கவும் முடியவில்லை. மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

சேனாதிபதிக்கோ அவர் சம்மந்தியை நினைத்து எக்கச்சக்க கடுப்பு. “நீங்க ஏங்க இப்படி இருக்கீங்க? அப்படியும் போறீங்க, இப்படியும் வரீங்க. எதாவது ஒரு நிலையில நில்லுங்கஎன்று சொல்லியேவிட்டார்.

பலராம் அதற்கும் சேர்த்து, “உன்னால தான் இந்த பேச்சு வாங்குறேன்என்று அஜயிடம் கேட்டார்.

சம்மந்தி. நானாவது ரவுடின்ற கட்டத்துக்குள்ள வந்திடுவேன். நீங்க எந்த வட்டத்துக்குள்ளும் வராம ஆட்டம் காட்டுறீங்கஎன்றார் சேனாதிபதி.

ஆட்டக்காரியோட அப்பா எப்படி இருப்பார்? அஜய் மனதுக்குள் நினைத்ததும் மெல்லிய புன்னகை உதடுகளில்.

அதை கண்டுகொண்ட அப்பா, மகள் இருவரும்  அவனை முறைத்து வைத்தனர். அஜய் இருவரின் ஒரே மாதிரியான முறைப்பில் அவர்களை நன்றாகவே இனம் கண்டு கொண்டான்.

காலத்துக்கும் சமாளிக்கணுமா கஷ்டம்டா சாமிஇதுதான் தோன்றியது

ப்பா. விடுங்கப்பாகல்யாண் அப்பாவை சமாளித்தான்.

நானும் ஹாஸ்பிடல்ல வைச்சு பேச கூடாதுன்னு தான் பார்த்தேன் தம்பி. இவர் என்னடான்னா என் முன்னாடியே என் மருமகளை அந்த பேச்சு பேசுறார்என்றார் அதிருப்தியாய்.

தாரணி அவர் பொண்ணும் தான் அங்கிள்என்றான் அஜய்

வார்த்தைக்கு வார்த்தை அவர் மருமகள் என்றால் மகள் இல்லை என்றாகிடுமா? என்ன இருந்தாலும் பலராம் குடும்பத்துடனான அவனின் பழக்கம் முன்னால் நின்றது.

அவர் பொண்ணா இருந்தாலும் இப்படி பேசலாமா அஜய்சேனாதிபதி கேட்க,

இப்போ அதை பத்தி எல்லாம் பேச வேண்டாம் அங்கிள்இன்னும் சொல்ல போனால் அது அவங்க அப்பா, பொண்ணு பேசிக்க வேண்டிய விஷயம். நாம இல்லைஎன்றுவிட்டவன், “அப்படி தானே தாரணிஎன்று அவளிடமும் கேட்டான்.

.. ஆமா ஆமாஎன்றாள் தாரணி கண்ணீர் துடைத்து.

ஜீவிதா இங்க வாஎன்று அவளை தன்னருகில் அழைத்தான் அஜய்

அவள் ஒரு நொடி அப்பாவை பார்த்து தயங்கி அஜயிடம் செல்ல, அவள் கை பிடித்து பலராம் பக்கம் நிறுத்தினான்

இவ உங்க பொண்ணு தான். உங்க முடிவு தான்என்றான்.