நதியின் ஜதி ஒன்றே! 17 2 13377 ஒரே பெண். சென்னையில் வேலை பார்க்கிறாள். பெரிய குடும்பத்தில் கொடுக்க ஆசைப்பட்டு அஜய்க்கு கேட்டது. “இல்லைம்மா” என்று அவளின் அப்பா பேச வர, “இது எதிர்பாராம நடந்த மாதிரி தான் இருக்கு. பெருசு பண்ண வேண்டாம்ப்பா” என்றாள் அவள் தெளிவாக. “MP மாமா கொண்டு வந்த சம்மந்தம். தெரிஞ்சே அவரும் பண்ண மாட்டார். விடுங்க” என்றார் அவரின் மனைவியும். பெண்ணை பெற்றவருக்கு விட்டாக தான் வேண்டும். இல்லை என்றால் சேனாதிபதி தயாராக நிற்கிறாரே. அவரின் முரட்டு உருவத்தில் அவருக்கு கிலி தான். “சரி சரி” என்று தலையசைக்க, “தப்பிச்சேன்டா சாமி” என்ற ஆனந்தன் அப்பாவை கடுப்பாக பார்த்தான். பெண் வீட்டினர் உடனே கிளம்ப பார்க்க, “கட்டிட திறப்பு விழாக்கு வந்ததா நினைச்சுகோங்க. உட்காருங்க. காபி, டீ குடிங்க” என்று பெரியப்பா, சகுந்தலா அவர்களை கவனித்து கொண்டனர். காமாட்சி அமைதியாக இருந்த கல்பனா பக்கம் அமர்ந்தார். தாரணிக்கு திகில். கல்யாண் பார்த்துக்கலாம் விடு என்று மனைவி தைரியம் அளித்து கொண்டிருந்தான். “முதல்ல உங்களை குனிய வைச்சு கும்முறேன் இருங்க, இதுக்கு நீங்களும் உடந்தை தானே” தாரணி கணவனை கடித்து சென்றாள். “ண்ணா, இன்னைக்கு உனக்கு வீட்ல ஸ்பெஷல் தீபாவளி போல” ஆனந்தன் கேலியாக கேட்டு அண்ணனிடம் அடி வாங்கினான். பெண் வீட்டினர் ஓரளவு நல்ல முறையிலே கிளம்ப, சங்கர் இறுதியாக பெண்ணை பெற்றவரின் கை பிடித்து மன்னிப்பை வேண்டினார். அதில் அவர்கள் சுமூகமாக விடைபெற, அஜய் வீட்டினருக்கு தான் அஜய் மேல் ஆதங்கம், கோவம். “சகுந்தலா என்னமா இது?” என்று ஒரு பெண்மணி ஆரம்பித்தார். “அஜய் எல்லாம் பொறுப்பா பண்ணிட்டு இருக்கான், எங்க தம்பிக்கு துணை நிக்கிறான்னு நாங்க சந்தோஷப்பட்டா, இப்படி சபையில வைச்சு அவனை மன்னிப்பு கேட்க வைச்சுட்டானே” என்று கேள்வி கேட்டனர். சகுந்தலா பதில் சொல்ல முடியாமல் இருக்க, “விடுங்க. இப்போ என்ன? அஜய்க்கு பிடிச்சதை பண்ணுவோம்” என்று பெரியப்பா பங்காளிகளை சமாதானம் செய்தார். அவர்கள் தங்களுக்குள் பேசி கொள்ள, “கல்பனா” என்று சகுந்தலா அவரிடம் சென்றார். “எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் சகு. ஆனா அவரை நினைச்சா தான் பயமா இருக்கு” என்று தன் மனதினை சொல்லிவிட்டார். அவர் அப்படி தான் சொல்வர் என்று சகுந்தலாவிற்கு தெரியுமே. “பார்த்துக்கலாம் விடு” என்றவருக்கும் தன் கணவனை சமாளிக்கும் பொறுப்பு உள்ளதே. சங்கர் தன் அறைக்குள் அடங்கி கொள்ள, பங்காளிகள் முணுமுணுப்புடன் கிளம்பினர். இரு அப்பாக்கள். பொதுவாக பார்த்தால் இருவரும் மிக நல்லவர்கள். ஆனால் மற்றவர் விஷயத்தில் மிகவும் கடினமே! வீட்டினர் மட்டும் மிச்சம் இருக்க, ஜீவிதா, அஜய் சம்மந்தத்தில் அனைவருக்கும் கொண்டாட்ட மனநிலை தான். சங்கருக்காக கட்டுப்படுத்தி கொண்டனர். சம்மந்தபட்ட அஜய், ஜீவிதாவோ முந்திரி காட்டில் நின்றிருந்தனர். அஜய்யின் கோவம் அப்பட்டமாக தெரிந்தது. ஜீவிதாவின் கை பிடித்து முந்திரி காட்டுக்கு அழைத்து வந்திருந்தவன், “அப்படி என்ன ஆகி போச்சுன்னு தெரியாத ஊர்ல தனியா கிளம்பி வந்த நீ?” என்று அவளிடம் கத்தியே விட்டான். ஜீவிதா அமைதியாக இருக்க, “வாயை திறக்கலைன்னா சாவடிச்சிடுவேன்” என்றான். “திடீர்ன்னு வந்த, என்னமோ சொன்ன, நான் கேள்வி கேட்டதும் தனியா நடக்க ஆரம்பிச்சுட்ட. என்ன நினைச்சு இப்படி பண்ணிட்டிருக்க நீ? என்னை கொல்லவே கிளம்பி வந்தியா?” “பொண்ணு வீட்ல வரவும் அங்கிருக்க முடியாம” என்று ஜீவிதா சொல்ல வர, “அவங்க வந்துட்டா நீ கிளம்பிடுவியா? ஏன் கொஞ்ச நேரம் அங்கிருக்க மாட்டியா?” என்று கேட்டான் இவன். “இருந்து நீங்க பொண்ணு பார்க்கிறதை நான் பார்க்கணுமா?” ஜீவிதா குரலும் உயர்ந்தது. “சத்தம் வந்தது தொலைஞ்ச. இப்போ, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்கிட்ட வந்து ஏதோ உளறின. உடனே கிளம்பிட்ட, எனக்கு யோசிக்க கூட டைம் கொடுக்க மாட்டியா?“ “உளறினேன்னு சொல்லாதீங்க. என்னை புரிஞ்சுக்க முடியலன்னா விட்டுடுங்க” பெண் ரோஷத்துடன் சொன்னாள். “விட்டுடணுமா? நீ மட்டும் என்னோட அத்தனை வருஷம் வளரலைன்னா விட்டு தான் இருப்பேன். இந்த ஜீவிதாக்குள்ள அந்த ஜீவிதா இருக்காளே என்ன பண்ண சொல்ற என்னை” இயலாமையுடன் கேட்டான். “இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க என்னோட இருக்க வேணாம், போய் பொண்ணு பாருங்க போங்க” என்றாள் பெண் கலங்கிவிட்ட குரலில். “உன் பின்னாடி ஓடி வந்த எனக்கு யார் பொண்ணு கொடுப்பான்னு பேசிட்டிருக்க நீ?” என்று கேட்டான். ஜீவிதா அமைதியாக, அஜய்க்கு வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கும் என்பதை விட, அப்பாவை நினைத்து கவலையாக இருந்தது. பங்காளிகள், பெண் வீட்டினரை பெரியப்பா சமாளித்து கொள்வார். ஆனால் அவனின் அப்பா! அவரை எப்படி எதிர்கொள்ள நான்? ஜீவிதா, “ஸாரி” என்றாள். அவளுக்கு அஜய் கடைசியாக கேட்ட கேள்விகளில் கோவம் இல்லை. மாறாக அவளை வலிக்க குத்திவிட்டது. அஜய் கேட்டதில் என்ன தவறு? எனக்கு வரும் விருப்பம் அவருக்கும் வர வேண்டுமே? கட்டாயப்படுத்த முடியுமா? ‘கடைசி நேரத்தில் அவரிடம் என் உணர்வுகளை சொல்லி நான் அவரை கார்ணர் செய்வது போல தானே நடந்து கொண்டேன்‘ பெண்ணின் மனசாட்சி அவளை கேள்வி கேட்டது. தனக்கு சொல்லவே அவளிடம் சரியான பதில் இல்லை. முன்பே சொல்லியிருக்க வேண்டும். இப்போது இருவர் வீட்டிலும் வரன் பார்க்க ஆரம்பித்த பிறகு சொல்வதில் என்ன நியாயம் இருந்துவிட போகிறது? “நான் கேட்டதுல மேடம்க்கு கோவம் பொங்கிடுச்சு. தனியாவும் கிளம்பியாச்சு” அஜய் சொல்ல, “இல்லை அஜு” என்றாள் பெண். அஜய் புருவம் சுருக்க, “நீங்க கேட்டது சரி தான், நான் தான் தப்பு” என்றாள் அவனிடம் ஒப்புதலாக. “எது தப்புன்னு சொல்ற? ‘என் அஜு‘வையா” அவன் கூர்மையாக கேட்டான். “அது எப்போவும் தப்பில்லை. உங்ககிட்ட சொன்னது தான் தப்பு” என்றாள் பெண். “என்கிட்ட சொல்லாம வேறென்ன பண்ண நினைச்ச?” “தெரியல“ “ஜீவிதா” என்று அவளை பொறுமையாக அழைத்தான். “சீனியர் நிறைய முறை சொன்னார். நான் தான் கேட்கலை” என்றாள். “ஏன் கேட்கலை. என்கிட்ட சொல்லணும் தானே?” அஜய் கேட்டான். “எனக்கு பயம், உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது, என்னை கொட்டுவீங்க, என்கிட்ட பேச மாட்டீங்கன்னு நினைச்சேன்“ “இப்போ உன்னை கொட்டினேனா?” “ஏன் கொட்ட போறீங்க? இப்போ உங்களுக்கு நான் யாரோ தானே?” பெண் குமுறலாக கேட்டாள். அஜய்யின் கடினப்பட்ட உதடுகள் விரிந்தது. இளகியது. “கொட்டணுமா?” என்று கேட்டான். “தொட கூடாது” என்றாள் விரல் நீட்டி மிரட்டலாக. அஜய் அவளை விசித்திரமாக பார்த்தவன், “நான் தொட கூடாது. இது” என்று கேட்டபடி, எட்டி அவளின் இடையில் இன்னமும் இடம் பிடித்திருந்த விசிட்டிங் கார்டை எடுத்தான். அதில் அவனின் விரல் அவளின் இடையை மிக லேசாக உரசிவிட, “அஜு என்ன பண்றீங்க?” என்றாள் அதட்டலாக. அஜய் அவளை மிகவும் ஆழ்ந்து பார்த்தான். அப்படி ஒரு பார்வை. எதுக்கு இப்படி பார்க்கிறாங்க? பெண்ணுக்கு புரியவில்லை. “நான் லேசா தொட்டா அதட்டுற. அப்புறம் என்ன ‘என் அஜு?” என்று கேட்டான். ஜீவிதா அவனை பார்க்க முடியாமல் முகம் திருப்பி கொண்டாள். “நீ என்கிட்ட பேசுறது வேற, நடந்துகிறது வேற. உண்மையை சொல்லு, நீ சொல்ற ‘என் அஜு‘ உண்மையா?” என்று கேட்டான். “என்ன உண்மையா? என்ன பேசுறீங்க நீங்க?” “பின்ன எதுக்கு அந்த அதட்டல்? நீ கேட்டதுக்கு நான் ஓகே சொன்னா அப்புறம் என்ன நடக்கும்ன்னு தெரியாதவளா நீ?” என்று கேட்டு வைத்தான். ஜீவிதா கண்கள் விரிந்து போனது. வாய் லேசாக பிளந்தும் கொள்ள, “உனக்கு தெரியாதுன்னு சொல்லிடாத. நான் நம்ப மாட்டேன்” என்றான். “எனக்கு தெரியும் தான்” என்றாள் பெண். “அப்புறம் என்ன?” “அதுக்காக என் இடுப்பை உங்ககிட்ட காட்டிக்கிட்டா நிக்க முடியும், தொட்டுக்கோங்க, பிடிச்சுக்கோங்கன்னு” வேகமாக கேட்டுவிட்டவள், அஜய் பார்வையில் வாயை கை வைத்து மூடி கொண்டாள். ‘அச்சோ என்ன பேசிட்டேன் நான்?’ மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள். இவ தெளிவா தான் இருக்கா? அஜய்க்கு இந்த புதிதான பேச்சுக்கள், அதுவும் ஜீவிதாவிடம் என்பதெல்லாம் மாயை போல தான் இருந்தது. காற்றின் மித வேகம் மட்டுமே அங்கு. இருள் சூழ ஆரம்பித்தது. கிளம்ப வேண்டும். “இப்போ என்ன பண்ணனும் நான்?” நிதானமாக அவளிடம் கேட்டான். ஜீவிதா அமைதியாக இருந்தாள். “பதில் சொல்லு ஆட்டக்காரி. இவ்வளவு நேரம் அவ்வளவு ஆடின?” “நான் உங்ககிட்ட சொல்ல நினைச்சதை சொல்லிட்டேன். நீங்க என்ன பண்ணனும்ன்னு எல்லாம் எனக்கு தெரியாது” என்றாள் ஜீவிதா. அஜய் அவளை நன்றாகவே முறைத்தான். “அட்லீஸ்ட் எனக்கு கொஞ்சம் டைமாவது கொடுப்பியா? இன்னமும் இது எல்லாம் எனக்கு ஏதோ கனவு போல தான் இருக்கு. நம்ப முடியலை. மைண்ட் அக்சப்ட் பண்ணிக்கணும். அப்புறம் தான் மேற்கொண்டு என்ன பண்ணன்னு பார்க்க முடியும்” என்றான். “நான் ஒன்னும் உங்களை ரஷ் அப் பண்ணலை அஜு“ அஜய் அவளை மேலெறிந்து கீழ் பார்த்தவன், “கிளம்பு போலாம்” என்றான். ஜீவிதா தயங்கி நின்றாள். “என்ன?” என்று கேட்க, “வீட்ல எல்லாம் என்ன சொல்வாங்கன்னு“ “நடிக்காத கேடி. அதுக்கெல்லாம் அசர ஆளா நீ?” என்றான் அஜய். ஜீவிதா அவனை உர்ரென்று பார்த்து நடக்க, அஜய் உடன் இணைந்து கொண்டான். இவர்கள் வீடு சென்று சேர்வதற்குள், விஷயம் தெரிந்து பலராம் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். “கேட்டதும் மனுஷனுக்கு நெஞ்சு வலி வந்துடுச்சு நான் என்ன பண்ண?” என்று சதாராணமாக கேட்டு கொண்டிருந்தார் சேனாதிபதி.