அத்தியாயம் 9
நித்யா கேரளா சென்ற ஒரு வருடத்தில், தன் தோழி கீதாவின் கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் சென்னை வந்திருந்தாள். மினிஸ்டர் சக்ரபாணியின் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாகை சூடி, அவர் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது ஒரு முறை நேரில் சென்று வாழ்த்தச் சென்றாள். அன்னை ரோகிணியும் அதன் பிறகு கட்சியில் பிஸியாகிவிட அவளது அண்ணியும், தங்கையுமாய் சில நாள் அன்னையுமாய் நித்யாவின் துணைக்குக் கேரளா செல்ல, அவளை மட்டும் அங்கிருந்து நகரவே அனுமதிக்கவில்லை ரோகிணி.
நித்யாவும் ஏற்றுக் கொண்ட படங்களை முடித்துக் கொடுக்க அடுத்தடுத்து படங்கள் புக்காகிக் கொண்டிருந்தன. சில முடிக்கப் படாத தமிழ் படங்களின் ஷூட்டிங்கும், சென்னை தவிர வேறு இடங்களிலேயே நடைபெற்றது. அதனால், நித்யாவுக்குத் தமிழ் சினிமாவில் சிறிது இடைவெளி விழுந்தது.
ஒரு வருடம் முடிந்திருக்க அடுத்துச் சில தமிழ் படங்களும் நித்யாவுக்கு புக்காகி இருந்தது. ரோகிணியும் மகளின் அமைதியைக் கண்டும், அவள் ராமிடம் தொடர்பு கொள்ள எந்த முயற்சியும் எடுக்காததாலும் அவளால் இனி எந்தப் பிரச்சனையும் வராதென்று நினைத்துச் சென்னைக்கு வர அனுமதித்தார்.
அந்த நேரத்தில் நேஷனல் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்காய் நித்யாவின் பெயரும், சிறந்த புதுமுக இயக்குநராய் ராமின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
ஒரு வருடத்திற்குப் பிறகு ராமை நேரில் சந்திக்கப் போவதை நினைத்துச் சின்னதாய் மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும், ‘இத்தனை நாட்கள் பிரிவும், புதிய சாதனையும், வாழ்க்கை முறையும் ராமின் மனதில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமோ? ஒருவேளை, அவன் என்னை மறந்து கூடப் போயிருக்கலாம்’ என்றுதான் நித்யாவின் எண்ணம் ஓடியது. இப்போதும் அவன் தன்னையே நினைத்திருப்பான் என்றெல்லாம் அவளுக்குப் பெரிதாய் எதிர்பார்ப்பில்லை.
அதுவும் அவளது வீட்டினர் ‘அவனை அத்தனை தூரம் துன்புறுத்திக் கஷ்டப்படுத்திய பிறகு, அதிலிருந்து மீண்டு வந்து ராம் தன்னை நிலை நிறுத்தியதே பெரிய விஷயம். இதில் இன்னும் என்னைப் பைத்தியக்காரத்தனமாய் நேசித்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை’ என்று அவள் மனம் அடித்துக் கூறியது. இப்போதைய சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் நித்யாவும் இருந்தாள்.
‘எப்படியோ என்னை நேசித்த ஒருவன், வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் முன்னேறி நன்றாய் இருந்தால் போதும்’ என்றுதான் இத்தனை நாளில் அவள் நினைத்திருந்தாள். எத்தனை தான் யோசித்து மனதைப் பக்குவப்படுத்தி இருந்தாலும் நெஞ்சோரத்தில் சின்னதாய் ஒரு எதிர்பார்ப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
“நித்தி, அவார்டு பங்ஷன்க்குப் போகும்போது போட வேண்டிய டிரஸ்ஸைக் கட்டில் மேல எடுத்து வச்சிருக்கேன். போட்டுட்டு வா, கிளம்பலாம்” ரோகிணி சொல்லவும் ஹாலில் அண்ணன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு அமர்ந்திருந்த நித்யா எழுந்து கிளம்பச் சென்றாள். மனம் மட்டும் இனம் புரியாத ஒரு தவிப்பிலும், எதிர்பார்ப்பிலும் துடித்துக் கொண்டே இருந்தது.
குளியலை முடித்து வந்தவளுக்குக் கட்டில் மேலிருந்த லெஹங்காவைப் போட விருப்பமில்லை. அவளாகவே ராமுக்குப் பிடித்த கருநீல நிற டிஸைனர் சேலை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு கீழே வர ரோகிணியின் முகம் மாறியது.
“உனக்கு நான் வேற டிரஸ் தான எடுத்து வச்சென்?” அன்னையின் குரல் சற்றுக் கோபமாய் ஒலிக்க வாடிப் போன முகத்துடன் அவரைப் பார்த்தாள்.
“அது எனக்கு கம்ஃபர்டபிளா இல்ல மா. சேலை கட்டணும் போலத் தோணுச்சு, அதான் கட்டினேன்…” எனக் கூற,
“விடுங்கமா, சேலை தான? அவ விருப்பத்துக்குக் கட்டட்டும்” என மூத்த அண்ணன் தங்கைக்கு சப்போர்ட் செய்தான்.
“ம்ம்… அங்க போயி எல்லார் கிட்டயும் இளிச்சுப் பேசாம அளவாப் பேசு. வா கிளம்பலாம்” என்றவர் முன்னில் நடக்கக் கடுப்புடன் அன்னையைத் தொடர்ந்தாள் நித்யா.
மனத்தில் ‘எப்போதுதான் இந்தச் சிறைப் பறவை வாழ்க்கைல இருந்து எனக்கு விடுதலை கிடைக்குமோ?’ எனப் புலம்பிக் கொண்டே. தங்கக் கூண்டில் அடைத்தாலும் சிறை சிறைதானே?
அந்த அரங்கம் கலா ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
நித்யா காரிலிருந்து இறங்கியதும் வாசலில் இருந்த ரசிகர்கள், அவளைக் கண்டு சந்தோஷக் கூச்சலிடப் புன்னகையுடன் கையசைத்து, அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு நடக்க, பத்திரிகையாளர் ஒருவர் மைக்குடன் அவள் முன்னில் வந்தார்.
“வணக்கம் மேடம், ரொம்ப நாளா தமிழ் சினிமால உங்களைக் காணமே. தமிழ்ல நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?”
“ச்சே ச்சே, அப்படில்லாம் இல்ல. தமிழ்தான் என் தாய்வீடு. அதை எப்படி மறப்பேன். கொஞ்சம் மலையாளத்துல பிஸியாகிட்டேன்”
“சூப்பர், இனி தமிழ்ல எதிர்பார்க்கலாமா?”
“நிச்சயமா…” என்றாள் புன்னகையுடன்.
“ரொம்ப சந்தோஷம்”
என்றவர் அடுத்த கேள்வியைக் கேட்கும் முன் அன்னையுடன் அரங்கத்துக்குள் நுழைந்தாள்.
பல பாஷைகளில் நடிக்கும் நடிகர்களாய் இருந்தாலும், பலரையும் நித்யாவுக்குப் பரிச்சயமிருந்தது. அவளைக் கண்ட தமிழ் ஹீரோக்கள் பலர் கையசைத்துப் புன்னகைக்க அனைவரையும் அங்கே மீண்டும் கண்டதில் நித்யாவின் மனமும், முகமும் மலர்ந்தது.
அவளுக்கான இருக்கைக்குச் சென்றாள். அருகே சுரேஷ், விஜயகாந்த், சத்தியராஜ், ரவி என அவளுக்குப் பிடித்த ஹீரோ அண்ணாக்கள் வரிசையில் அமர்ந்திருக்க, அவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசிக் கொண்டே நகர்ந்தாள். தயாரிப்பாளர்கள், இயக்குநர் மணிபாரதி என நலம் விசாரித்தவளின் விழிகள், அவர் பின்னில் அமர்ந்திருந்த குங்குமப் பொட்டுக்காரனைக் கண்டதும் ஒரு நொடி அவனில் தங்கிச் சின்னப் புன்னகையைப் பரிசளித்துப் பட்டென்று மீண்டது.
நித்யா அரங்கத்துக்குள் நுழைந்தது முதல் அவளையே தான் தொடர்ந்து கொண்டிருந்தது இயக்குநர் ராம்சரணின் பார்வை. அவளது பார்வை தன்மீது படாதா எனக் காத்திருந்தவன் விழிகளில் வெகு நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் காதலும், ஏக்கமும் நிறைந்து வழிய அவளையே பார்த்திருந்தான்.
நித்யாவின் அன்னை ரோகிணி சற்றுப் பின்னிலிருந்த இருக்கையில் அமர்ந்திருக்க, முன்னிலுள்ள வரிசையில் விருது வாங்குபவர்களுக்கும், கொடுப்பவர்களுக்குமாய் ஒதுக்கி இருந்தனர். ராமின் மீது தங்கி நின்ற தன் விழிகளைப் பிரித்துக் கொண்டு தனக்கான இருக்கையில் அமர்ந்தாள் நித்யா.
அருகே இருந்தவர்களிடம் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாலும் நித்யாவின் விழிகள் அடிக்கடி ராமிடம் செல்லுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவனது பார்வையும் அவள் எப்போது பார்த்தாலும் அவளிலேயே நிலைத்து இருந்தது.
அவன் முகத்தில் இப்போது முன்னைவிட ஒரு நிதானமும் பக்குவமும் தெரிய, சாதனையின் வளர்ச்சி அவன் முகத்திலும், உடையிலும் கூடத் தெரிந்தது. ஆனாலும் பார்வை மட்டும் அதே போல அவளைச் செல்லமாய் வருடிக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சி தொடங்க மேடையில் யாரெல்லாமோ ஏறினார்கள். பரிசு கொடுத்தார்கள். வாங்கினார்கள். டான்ஸ் ஆடினார்கள். பாட்டுப் பாடி உற்சாகப் படுத்தினார்கள். ஆனால், அவர்கள் இருவரின் மனமும் யாருமில்லாத் தனியரங்கம் ஒன்றில் தனியே டூயட் பாடிக் கொண்டு இருக்க நித்யாவின் மனதில் ஒருவிதப் பரவசம்.
“நித்தி, அடுத்து உன்னைத்தான் விருது கொடுக்க ஸ்டேஜ்க்கு கூப்பிடறாங்க, போ…” என அடுத்திருந்த சக நடிகை நித்யாவின் காதில் கிசுகிசுக்க, சட்டென்று தனது இனிய நினைவிலிருந்து கலைந்தவள் எழுந்து மேடைக்குச் சென்றாள்.
“அடுத்து சிறந்த புதுமுக இயக்குநர் விருதை வாங்குவதற்கு மிஸ்டர். ராம்சரணை அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம்” என மேடையிலிருந்த அறிவிப்பாளர் பெண்மணி அறிவிக்கவும் நித்யாவின் விழிகள் ஆச்சரியத்தில் மின்னின.
ராமுக்கு அவள் கையாலேயே விருது வழங்குவதை அவள் கற்பனை கூடச் செய்யவில்லை. ஆனால், இதற்குக் காரணமான ராம் சந்தோஷப் புன்னகையுடன், பெருமை முகத்தில் வழிய தனது குரு மணிபாரதியின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு மேடைக்கு வந்தான். அவனது ஆசைப்படி மணிபாரதி தான் முன்பே இப்படி நித்யாவின் கையால் விருது வழங்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்.
சந்தோஷமாய் அவளிடம் புன்னகைத்து விருதை வாங்கிக் கொண்டவன், அனைவருக்கும் நன்றி கூறி ஸ்பெஷலாய் மணி பாரதிக்கு நன்றி சொல்ல, அவனுக்கு வாழ்த்துக் கூறிய நித்யாவின் கையை எதார்த்தமாய் குலுக்கிவிட்டுக் கீழே இறங்கினான். நித்யாவும் கீழே வர ரோகிணியின் முகத்திலோ ஈயாடவில்லை.
பலத்த கரகோஷத்துடன் முன்னிலிருந்தவர்களின் வாழ்த்தையும், கை குலுக்கலையும் பெற்றுக் கொண்டு தனது இருக்கையில் அமர்ந்தவனின் பார்வை நித்யாவில் இருந்தது. அவனைத் திரும்பிப் பார்த்தவள் ஒரு புன்னகையைப் பரிசளித்து கண்களைச் சிமிட்டி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்த அவன் முகம் மலர்ந்தது.
அடுத்து மற்றவர்களுக்கும் விருது வழங்கி முடிக்க நித்யாவுக்கும் சிறந்த கதாநாயகி விருது மலையாளம், மற்றும் தமிழ் இரண்டுக்குமே வழங்கப்பட அவளது சந்தோஷம் இரட்டிப்பானது.
இத்தனை நாள் விலகிப் போயிருந்த காதலும், நேசமும் மீண்டும் இருவருக்குள்ளும் சுகந்தமாய் மணம் வீச வீடு திரும்பினர். காரில் வீட்டுக்கு வரும் வழியில் ரோகிணியின் முகம் கடுகடுவென்று இருக்க, அதைக் கண்டு நித்யாவுக்குக் குதூகலமாய் இருந்தது.
“ஆளைப் பார்த்து யாரையும் எடை போடக் கூடாது இல்லமா?”
நித்யாவின் கேள்வி புரிந்தாலும் புரியாதது போல், “நீ யாரைச் சொல்லற?” என்றார் ரோகிணி.
“இல்ல, நான் பொதுவா சொன்னேன்.” என்றவள் அதற்கு மேல் பேசாமல் பார்வையைத் திருப்பிக் கொள்ள ரோகிணியின் கண்ணில் கோபம் வழிந்தது.
‘ச்சே, அந்தப் பரதேசிப் பய இயக்குநர் ஆனது மட்டுமில்லாம அவார்டு வேற வாங்கிட்டானே’ என மனதில் பொருமினாள்.
அடுத்து வந்த நாள்கள் அழகாய் நகர நித்யா, எப்போதும் போல் ஒவ்வொரு ஊருக்கும் பறந்து சென்று நடித்துக் கொடுத்தாள். சத்தியராஜுக்கு ஜோடியாக நடித்த படமும் வெற்றிப் படமாய் அமைய, சத்தியராஜ் அவளுக்கு நன்றி தெரிவித்து ஃபைவ் ஸ்டார் மாலை ஒன்றையே அவள் கழுத்தில் போட்டுச் சந்தோஷப்பட நித்யாவுக்கும் சந்தோஷமாய் இருந்தது.
அன்று மணிபாரதியின் புதுப்பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டவளுக்கு அங்கே ராம் இல்லாமல் ஒரு குறைவாகவே இருந்தது. அப்போது அவளது அசிஸ்டன்ட் செல்வி ரகசியமாய் நித்யாவின் காதில் கிசுகிசுத்தாள்.
“மேடம், ராம் சார் வந்திருக்கார். உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்” எனக் காதில் ரகசியமாய் சொன்னாள்.
“அம்மா இருக்காங்களே…” என்றாள் நித்யா.
“அவங்க உங்க ரூம்ல ரெஸ்ட் எடுக்கப் போயிட்டாங்க. நீங்க சுரேஷ் சார் ரூமுக்குப் போங்க. அங்க தான் வெயிட் பண்ணறார்” என்றாள்.
நித்யாவும் ஹீரோ சுரேஷின் அறைக்குச் செல்வது போல் செல்ல, அங்கே ராம் காத்திருந்தான்.
அவளைக் கண்டதும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கும் எதுவும் பேச வராமல் அவனையே பார்த்து நின்றாள்.
“எப்படி இருக்கீங்க?”
“நல்லாருக்கேன், நீங்க?” எனக் கண்ணைச் சுருக்கிச் சிரிக்க அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்தவன்,
“நல்லாருக்கேன். ஆனா உங்களோட புன்னகையைப் பார்க்காம மனசுல சந்தோஷமா இல்லங்க.” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளும் காதலில் நிறைந்திருக்கச் சட்டென்று அவள் கையைப் பிடித்தான் ராம்.
சட்டென்று, “நா..நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனக் கேட்க அவள் விழிகள் ஏனோ கலங்கிப் போனது.
தன் கண்ணீரை அவனிடம் காட்டாமல், “எப்பப் பண்ணிக்கலாம்னு சொல்லுங்க” என்றாள் மூக்கை உறிஞ்சிக் கொண்டே.
அவளது சட்டென்ற பதிலில் திகைத்துப் போனான் ராம்.
“உங்களுக்கு ஓகேவா?” மீண்டும் கேட்டதை உறுதி செய்து கொள்ளக் கேட்க அவனை முறைத்தவள்,
“எப்பப் பண்ணிக்கலாம்னு கேட்டேன்” என அழுத்திச் சொல்லி முறைக்க சட்டென்று அவள் கையில் முத்தமிட்டவன், “ஏற்பாடு பண்ணிட்டுச் சொல்லறேங்க…” என்றான்.
“ப்ச்… இப்பவும் வாங்க, போங்க தானா?”
“அது உங்க மேல எனக்கிருக்கற மரியாதை. எப்பவும் மாறாது. உ..உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கு தானே?” என்றான் மீண்டும் சந்தேகத்துடன்.
“ரொம்ப லேட்டா கேக்கறீங்க.” என்றவளைப் புரியாமல் பார்க்க,
“பிடிச்சிருக்கான்னு லேட்டாக் கேக்கறீங்கன்னு சொன்னேன்” என்றவளைச் சந்தோஷமாய் பார்த்தவன்,
“சீக்கிரமே நாள் பார்த்துச் சொல்லறேன், நீங்க இப்ப சந்தோஷமாப் போங்க” எனச் சொன்னவன் அவளிடம் ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்கலேட்டை நீட்ட வாங்கினாள்.
“ஸ்வீட் நியூஸ்” என்றவளைக் கண்ணிமைக்காமல் மீண்டும் பார்த்தவன், “இதெல்லாம் கனவு இல்லியே” என்றான் சந்தேகத்துடன்.
“நிச்சயமா கனவு இல்ல” என்றவள் அவன் கன்னத்தில் மெல்லக் கிள்ளிவிட்டுச் செல்ல ஒருவிதப் பரவசத்துடன் கன்னத்தில் கை வைத்தவனின் இதழ்கள் புன்னகைப்பதை நிறுத்தவே இல்லை.
அன்று வாங்கிய விருதை விட, இன்றுதான் உண்மையிலேயே தான் சாதித்தது போல் உணர்ந்தான் ராம்.
அடுத்து வந்த நாள்களில் ராம் நேரில் வராவிட்டாலும், படப்பிடிப்பில் உள்ள யாரிடமாவது கடிதத்தைக் கொடுத்து நித்யாவிடம் சேர்ப்பித்து அவளுடன் தொடர்பில் இருந்தான் ராம். ரோகிணிக்கும் அதனால் எந்தச் சந்தேகமும் வரவில்லை.
அன்று ரோகிணி சற்று உடம்புக்கு முடியவில்லையென்று ஷூட்டிங் வந்திருக்கவில்லை. வேறு யாரும் துணைக்கும் வரவில்லை. சுரேஷுடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடிவிட்டு வந்த நித்யா, செல்வி கொடுத்த ராமின் கடிதத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தாள்.
மறைவான இடத்திற்குச் சென்று அதைப் படித்தவளின் முகம் மலர, கடிதத்தை மடக்கி உடைக்குள் பத்திரப்படுத்தி விட்டுப் புன்னகையுடன் சுரேஷ் அருகே வந்து அமர்ந்தாள்.
“என்ன நித்தி? மூஞ்சி டாலடிக்குது. ராம் கிட்டருந்து லெட்டரா?” சுரேஷ் அவளிடம் கிசுகிசுப்பாய் கேட்கப் புன்னகைத்தாள்.
“ஆமா சுருண்ணா, நாங்க ஓடிப் போகப் போறோம்.” என்றதும் அதிர்ந்து விழித்தான் சுரேஷ்.
“என்னது? ஓடிப் போகப் போறீங்களா? என்னவோ சினிமாவுக்குப் போறேன்னு சொல்லுற போல அசால்ட்டாச் சொல்லற. உன்னைத் தனியா ஷூட்டிங் அனுப்பறதுக்கு முன்னவே உன் அம்மா என்னைக் கூப்பிட்டுப் பார்த்துக்கச் சொல்லி சொன்னாங்க. இப்ப நீ என் பொறுப்புல தான் ஷூட்டிங் வந்து இருக்க. நீ ஏதாச்சும் பண்ணி என்னை வம்புல மாட்டி விட்டுடாதமா.” எனக் கை கூப்பினான்.
“அச்சோ அண்ணா, நீங்க ஹீரோ. இப்படில்லாம் டயலாக் பேசக் கூடாது. எப்பவும் லவ்வர்ஸை சேர்த்து வைக்க தான் முயற்சி பண்ணனும்.” என அவள் சிரிக்க அவன் முறைத்தான்.
“சரி, சரி, பயப்படாதீங்க. நான் நாளைக்கு தான் ராமோட ஓடிப் போகப் போறேன். இது உங்க கணக்குல வராது” எனக் குழந்தை போல் சிரித்தவளை நெகிழ்வுடன் பார்த்தான் சுரேஷ்.
“ராமைக் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டியா?”
“ஆமாண்ணா. எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு. வீட்டுல எப்படியும் சம்மதிக்க மாட்டாங்க, சோ நாங்களே பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்” தெளிவாகச் சொன்னவள்,
“ராம் நல்லவர். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர். அன்பா, அக்கறையாப் பழகறவர். தொழில்லயும் நல்ல பயபக்தி உள்ளவர். இதை விட ஒரு பெண்ணுக்குக் கணவரா இருக்க என்ன தகுதி வேணும்.” என்றவளைப் புன்னகையுடன் பார்த்த சுரேஷ்,
“ம்ம்… சரிதான், என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனச் சிரித்தான்.
“தேங்க்ஸ் அண்ணா” என்றவள் ஷாட் ரெடியானதும் செல்ல அன்று மதியத்துக்கு மேல் ஒரு கோவிலில் வேறு ஒரு ஷூட்டிங் இருந்தது நித்யாவுக்கு. எனவே அங்கு கிளம்பினாள்.
கோவிலில் ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, வெளியே மரத்தடி ஒன்றில் ஒரு சாமியார் அமர்ந்திருந்தார். அவர் முன்பு நிறையப் பேர் அமர்ந்திருக்க, ஒவ்வொருவருக்காய் குறி சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கண்டதும் நித்யாவுக்கும் அதைக் கேட்க வேண்டுமென்று ஆசை தோன்றியது.
ஆனால், இத்தனைக் கூட்டத்தில் அவரைக் காண அருகே செல்வதும் சரியாய் இருக்காது. எனவே, தயங்கியவள் தலையில் முக்காடு போட்டபடி ஓரமாய் நின்று கவனித்தாள். நாளை புதிதாய் ஒரு வாழ்க்கை தொடங்கப் போகும் நேரத்தில் நல்லதாய் நாலு வார்த்தை அந்தப் பெரியவரிடமிருந்து கேட்க மாட்டோமா? என அவள் மனம் ஆசைப்பட்டது.
அவள் அந்தச் சாமியாரையே பார்த்திருக்க, வேறு ஒருவருக்குக் குறி சொல்லி முடித்தவர், அவளைக் கைநீட்டி அருகே வருமாறு அழைக்கத் திகைத்தாள் நித்யா.
“போங்க மேடம்…” எனச் செல்வியும் அவள் ஆசை தெரிந்து சொல்ல, தயக்கத்துடன் முன்னே சென்று நின்றாள். அவளைத் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்தார் அந்தப் பெரியவர். ஜொலிக்கும் அந்தக் கண்களில் அப்படியொரு வீரியம். தன்னையறியாமல் கை கூப்பி நின்றவளின் தலையில் ஆசிர்வதித்தார்.
“புது வழியில் செல்ல ஆசைப்படுகிறாய் குழந்தாய். இன்பமும், துன்பமும் சேர்ந்தே பயணப்படுவாய். எது நடந்தாலும் அதை உன் அன்னையின் ஆணையாய் நினைத்து ஏற்றுக்கொள். உன் அன்னை ஆதிபராசக்தி எப்போதும் துணையிருப்பாள்.” என வாழ்த்தியவர் அவள் கையில் ஆதிபராசக்தியின் புகைப்படம் ஒன்றைக் கொடுத்தார்.
அதை வாங்கி இரு கண்ணிலும் ஒற்றிக் கொண்டவள் அந்தப் பெரியவரை வணங்கி விட்டுச் சென்றாள். மனதில் ‘எது நடந்தாலும் அது என் அன்னையின் செயலே’ என்ற எண்ணம் நிறைந்தது.
அன்று வீட்டுக்கு வந்தவளுக்கு மனது ஒரு நிலையிலில்லை.
மறுநாள், தான் ராமுடன் ஓடிப் போனது தெரிந்தால் இங்கே ஒரு பிரளயமே நடக்குமே எனப் பயந்தாள்.
இன்னும் நிறையப் படங்கள் முடித்துக் கொடுக்க வேண்டி இருந்தது. பாவம், அந்தப் படத் தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள் என ஒரு பக்கம் கவலையாய் இருந்தது.
‘நம் வீட்டில் தான் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ராம் வீட்டில் ஒத்துக் கொள்வார்களா? நாங்கள் இப்படிச் செய்ததற்கு அவன் வீட்டுக்குப் போய் என் வீட்டினர் பிரச்சனை செய்வார்களா?’ என ஏதேதோ யோசித்தாள்.
‘எது நடந்தாலும் எல்லாம் என் அன்னையின் செயல். நடப்பது நடக்கட்டும். நான் ராமுடன் செல்வது உறுதி’ எனத் தன் முடிவில் உறுதியாய் நின்றவள் மறுநாள் காலையில் வழக்கம் போல் ஷூட்டிங் என்று கிளம்பினாள். கையில் எப்போதும் போல ஒரு பேக் மட்டும். அதில் மாற்று உடை இரண்டும் சிறிது பணமும் மட்டுமே.
அன்று அன்னை தன்னுடன் ஷூட்டிங் வர மாட்டார் என நினைத்திருந்தவளுக்கு, அவளுக்கு முன்னே கிளம்பி ஹாலில் தயாராய் அமர்ந்திருந்த ரோகிணியைக் கண்டதும் மனதுக்குள் கிலி பிடிக்கத் திகைத்து நின்றாள்.
“என்ன? என்னைப் பார்த்துத் திகைச்சு நின்னுட்ட? ஷூட்டிங் கிளம்பலாம் தான? உடம்புக்கு எதுவும் முடியலியா?” என அன்னை கேட்கச் சட்டென்று அவள் முகம் வாடியது.
“இ..இல்லம்மா, போகலாம். உங்களுக்கு உடம்பு முடியலைன்னு சொன்னிங்களே, அதான் பார்த்தேன்.”
“ம்ம்… அதெல்லாம் சரியாகிருச்சு” என்றவர் எழுந்து வாசலுக்கு நடக்க, பூஜை அறை முன் நின்றவள் அவளது ஆதிபராசக்தியை மனமுருக வேண்டினாள். குட்டியாய் கைக்கு அடக்கமாய் இருந்த அன்னையின் சிலையை எடுத்துத் தன் பேகில் வைத்துக் கொண்டாள். அவளது பிறந்த வீட்டிலிருந்து அவள் கொண்டு சென்ற ஒரே பொருள் அந்தச் சிலை மட்டும் தான்.
மனதில் ஒரு பதட்டமும், தன் குடும்பத்தை ஏமாற்றி விட்டுச் செல்லப் போகிறோமே என்ற தவிப்பும் நிறைந்திருந்தது. என்னதான் சிறையாக இருந்தாலும் அங்கே தானே அவளது இரத்த உறவுகள் எல்லாரும் இருக்கின்றனர்.
சின்ன அண்ணி தனது கைக்குழந்தையுடன் ஹாலுக்கு வர அக்குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டுக் கொஞ்சி நின்றவளை வாசலில் இருந்த அன்னையின் அழைப்பு நகர வைத்தது.
“இன்னும் உள்ள என்ன பண்ணிட்டு இருக்க? டைம் ஆச்சு, வா”
“இதோ வந்துட்டேன் மா” என்றவள் மீண்டும் குழந்தையின் கையில் முத்தமிட்டு, “வரேன் அண்ணி” எனச் சொல்லிவிட்டுக் கிளம்ப, அண்ணிக்கும் ஆச்சரியமாய்தான் இருந்தது.
ஷூட்டிங் கிளம்புகையில் கடமையே என்று கிளம்பும் நித்யா, இன்று நின்று குழந்தையைக் கொஞ்சியதோடு அல்லாமல் தன்னிடமும் சொல்லிச் சென்றது.
காரில் அமைதியாய் ஏறி அமர, “கிளம்பலாம்” என்றார் டிரைவரிடம்.
‘தாயே, இதென்ன சோதனை? அம்மா இன்னைக்கு என்னோட ஷூட்டிங் வர மாட்டாங்கன்னு நினைச்சனே. இப்ப இவங்க அங்க இருக்கும்போது நான் ராமோட கிளம்ப முடியுமா?’ என மனதில் நித்யா புலம்பிக் கொண்டிருக்க, கார் கேட்டிலிருந்து வெளியே வரவும் சட்டென்று தலையைப் பிடித்துக் கொண்டார் ரோகிணி.
“என்னமா, என்னாச்சு?”
“திடீர்னு தலை சுத்தற போல இருக்கு”
“பிரஷர் மாத்திரை போட்டிங்களா?” என்றாள் மகள் சற்றே பதறி.
“போட மறந்துட்டேன். அதான் சுத்துதுன்னு நினைக்கறேன்” என்று தலையைத் தாங்கிக் கொண்டவர்,
“நித்தி, நீ ஒண்ணு பண்ணு. இன்னைக்கும் நீ தனியாவே ஷூட்டிங் போயிட்டு வந்திடு. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன். பத்திரமாப் போயிட்டு வரணும். என்ன?” எனச் சொன்னவர் காரை நிறுத்தி இறங்கிக் கொள்ள நித்யாவின் மனதில் ஒரு சந்தோஷ அலை அடித்தது.
‘தாயே ஆதிபராசக்தி… உன் கருணையே கருணை’ என நினைத்துக் கொண்டவள் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அவர்கள் திட்டப்படி, யாருக்கும் தெரியாமல் ராமுடன் காரில் எஸ்கேப் ஆகியிருந்தாள்.
ஒரு காதல் இடைவேளை…
-லதா பைஜூ