மௌனங்கள் இசைக்கட்டுமே 07 6625 மௌனங்கள் இசைக்கட்டுமே 07 தங்கையின் குற்றச்சாட்டுக்கு பதில்கூற முடியாமல் சத்யதேவ் திகைத்து நிற்க, அவன் திகைப்பை பொருட்படுத்தாமல், “என்ன தைரியத்துல இதெல்லாம் செய்த தேவ்?” என்று மீண்டும் அவனை காய்ச்சத் தொடங்கிவிட்டாள் அவன் தங்கை. “நான் எதுவுமே செய்யல தேவா. அவன் முன்னாடி இருந்தே உன்னை காதலிச்சிருக்கான். நடுவுல வந்து உன் வாழ்க்கையை கெடுத்தது சேஷா தான்.” “வாயை மூடுடா… அவன் என்னை விரும்பினதா கூட இருக்கட்டும். அதுக்காக… என் வாழ்க்கையில் நடந்த அத்தனையும் நீ அவனுக்கு அப்டேட் பண்ணுவியா? சேஷனுக்கும் எனக்கும் இடையில இருக்கறது எங்களோட விஷயம். உன்னையே நான் தலையிட விடல. இவன் யாரு?” என்று கத்தியவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நின்றான் தேவ். ஆனாலும் விட்டு விடாமல், “அதனாலதான் தாலியை கழட்டி கொடுத்தபிறகும் அமெரிக்கா வரை வந்து பார்த்துட்டு போறானா அவன். என்னதான் நினைக்கிற நீ. வாயைத் திறந்து சொல்லிடேன்.” “நான் ஏற்கனவே சொல்லிட்டேன் தேவ். இது எங்களோட தனிப்பட்ட விஷயம். இதுல எந்த முடிவா இருந்தாலும், அது நான் எடுத்ததா இருக்கட்டும். நீங்க யாரும் எனக்கு பாடம் நடத்த வேண்டாம். முக்கியமா உன்னோட அந்த சோ கால்ட் பிரெண்ட் என்னோட விஷயங்கள்ல தலையிடக்கூடாது.” என்ற சேனாவின் எச்சரிக்கையை காற்றில் விட்டு, “என்ன முடிவெடுக்க போற நீ. திரும்ப அவனோட சேர்ந்து வாழற ஐடியா எதுவும் இருக்கா. உன்னை கேட்க யாருமே இல்லன்னு நினைச்சுட்டு இருக்கியா தேவா. ஏற்கனவே நீ அனுபவிச்சதெல்லாம் மறந்துடுச்சா?” “அவனோட சேர்ந்து வாழறேனோ, இல்லையோ… அதை நான் முடிவெடுக்கிறேன். நீங்க உங்க பங்குக்கு எதையும் செய்யாதீங்கன்னு சொல்றேன். புரியுதா?” “ஏன் செய்யக்கூடாது? என்னோட தங்கை நீ. உன் வாழ்க்கை மேல எனக்கு அக்கறை இருக்கக்கூடாதா? தேனமுதன் எல்லா விதத்துலேயும் பெஸ்ட் சாய்ஸ். சேஷனோட நினைவுகள் கூட வேண்டாம் தேவா உனக்கு. ஒரு புது லைப் ஸ்டார்ட் பண்ணலாமே?” என்றவனை பார்வையால் தகித்தவள், “முடிச்சுட்டியா?” என்றாள் ஏளனமாக. “தேவா நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன். தேனமுதனை எனக்கு நல்லா தெரியும் . நீ அவனை யோசிக்கலாம் தேவா.” “எனக்கு உன்கிட்ட பேச ஒன்னுமில்ல. வெளியே போ.” “நான் ஏன் வெளியே போகணும்? எனக்கு பதில் தெரியாம நான் எங்கேயும் போறதா இல்ல. என்ன மொத்தமா எங்களை ஒதுக்கிடலாம்ன்னு நினைக்கறியா. அப்பாவோட பிசினெஸ்ல நீ இன்வால்வ் ஆகமாட்ட. உன் விஷயத்துல நாங்க யாரும் தலையிடக்கூடாது. என்னதான் நினைக்கிற நீ?” என்று உணர்ச்சிவசப்பட்டவனாக சத்யதேவ் கத்திவிட, “நீ எங்கேயும் போடவேண்டாம். எனக்கு தூக்கம் வருது. என்னால உனக்கு எந்த பதிலும் கொடுக்கமுடியாது.” என்றவள் அவன் ஒருவன் அங்கு இருப்பதை பொருட்படுத்தாதவளாக கண்களை மூடிப் படுத்துவிட்டாள். “தேவா” என்று தேவ் அதட்டியது எல்லாம் அவள் காதில் ஏறவே இல்லை. ‘நீ என்ன கேட்டாலும், நான் கொடுப்பதுதான் பதில்” என்பது போல் இருந்தது அவளது செயல். ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்த அறையை அளந்தாலும், “தூக்கம் வருது” என்றவளை மீண்டும் எழுப்பி அமர்த்தவில்லை சத்யதேவ். சேனாவும் அவன் இருப்பை உணர்ந்தவளாக கண்களை திறக்கவே இல்லை. ஒருகட்டத்தில் அவள் அப்படியே உறங்கிப்போக, நடந்து களைத்தவனாக தங்கையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான் சத்யதேவ். சற்று நேரத்திற்கெல்லாம் பிரபாகரனும், தேனமுதனும் அந்த அறைக்கு வந்து சேர, அவர்களைப் பார்த்ததும் மீண்டும் தொடங்கிவிட்டான் சத்யதேவ். “என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்? அவனை பார்க்கவே வேண்டாம்னு நினைச்சு தான் அவளை இங்கே அனுப்ப ஒத்துக்கிட்டேன் நான். ஆனா, அவனை ஹாஸ்பிடல் வரைக்கும் வரவைச்சு வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்களா நீங்க?” “அவளை கூட இருந்து பார்த்துக்க முடியாத அளவுக்கு என்ன வேலை உங்களுக்கு?” என்று தேவ் காய்ச்சியெடுக்க, பிரபாகரன் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். மகன் கூற வருவது இன்னுமே அவருக்கு தெளிவாக புரியவில்லை. “சேஷா இங்கே வந்திருந்தானா?” என்று சந்தேகத்துடன் அவர் மகனிடம் கேட்டு வைக்க, அவரை தீயாய் முறைத்தான் மகன். அவன் பார்வையில், “தேவ் நாந்தான் அவரை வீட்டுக்கு அனுப்பினேன். அவரை எதுவும் சொல்லாத” என்று தேனமுதன் இடையிட, “அவரை அனுப்பிட்டு நீ இங்கே இருந்திருக்கணும் இல்ல. நீ எங்கேடா போய் தொலைஞ்ச” என்று அவனிடமும் தேவ் காய, “இங்கேதான் இருந்தேன்டா… உன் சிஸ்டர் பேசின பேச்சுல தான் கிளம்பிட்டேன். இங்கேயே இருந்தாலும், உன் தங்கச்சியை மீறி அவன்கிட்ட என்ன பேசிட முடியும்?” என்று தேனமுதனும் கேட்டுவிட்டான். அவன் கேள்வியில் தேவ் திகைத்து நிற்க, “சேஷன் வந்ததை நான் பார்த்தேன்.” என்றான் தேனமுதன். இதற்குள் சேனாவும் கண்விழித்துவிட, முதலில் மகளை கவனித்தவர் பிரபாகரன் தான். மகனது பேச்சுக்களை காதில் வாங்காமல் அவர் மகளை நெருங்கி, “இப்போ எப்படி இருக்கு தேவா. ஓகேவா.” என்று அவள் தலையைத் தடவி விசாரிக்க, “எனக்கு வீட்டுக்கு போகணும்ப்பா. டிஸ்சார்ஜ் பண்ணிட சொல்லுங்க” என்றாள் தேவா. “டிஸ்சார்ஜ் எல்லாம் டாக்டர்ஸ் சொல்லட்டும். நீங்க எதுவும் கேட்காதீங்க” என்று தேனமுதன் வாயைத் திறக்க, “எனக்கு போகணும்ப்பா” என்று மீண்டும் தந்தையிடமே பேசினாள் தேவா. “சரிடா. நான் டாக்டர்ஸ்கிட்ட பேசறேன்” என்று பிரபாகரன் எழ, “அவ சொல்ற எல்லாத்துக்கும் சரி சொல்லுவீங்களா. இதனாலதான் யார் பேச்சும் அவ காதுல கேட்கல. டாக்டர்ஸ் சொல்றப்போ வீட்டுக்கு போகலாம். அமைதியா உட்காருங்க அங்கிள்.” என்று தேனமுதனும் பிரபாகரனை மிரட்ட, அவன் தொனியில் எல்லையில்லாத கோபம் தேவாவுக்கு. கட்டிலில் இருந்து வேகமாக அவள் இறங்க முற்பட, “நாங்க சொல்றத தான் கேட்க முடியாது. டாக்டர் சொல்றதையும் கேட்க மாட்டியா தேவா.”என்று தேனமுதன் மீண்டும் அதட்ட, அவனை கண்டுகொள்ளாமல் வாசலை நோக்கி தேவா அடியெடுத்து வைக்க, “உனக்கு இருக்க திமிருக்கு…” என்று தேனமுதன் மீண்டும் ஏதோ பேச முற்பட, தன் வழியில் நின்றிருந்த சத்யதேவ்வை பளாரென்று அறைந்தாள் தேவசேனா. தேவ் அடியை வாங்கிக்கொண்டு அமைதியாக நிற்க, “ரெடிகுலஸ் தேவா.” என்றபடி அவளை நோக்கி முன்னேறினான் தேனமுதன். அவன் என்ன நினைத்து முன்னே வந்தானோ, ஆனால், தேவா தான் நினைத்ததை நடத்திக் கொண்டாள். நெருங்கியவன் தேவாவின் கையைப் பற்றும்முன்பே அவனையும் அறைந்து இருந்தாள் அவள். “கொன்னுடுவேன். யாருன்னு நினைச்ச. உன் இஷ்டத்துக்கு பேசுவியா?” என்றவளின் ஆத்திரம் குறையவே இல்லை. “தேவாம்மா ” என்று பிரபாகரன் முன்னே வர, “வாயை மூடுங்கப்பா” என்று அவரையும் அடக்கியவள், “என்ன நினைக்கறீங்க எல்லாரும். குழந்தையா நான்? எனக்கு தெரியாதா நான் என்ன செஞ்சுட்டு இருக்கேன்னு. உங்ககிட்ட நான் அறிவுரையோ, ஆறுதலோ கேட்டா கொடுங்க. போதும்.” “சேஷனோட நான் பேசறதும் பேசாததும் முழுக்க முழுக்க என்னோட விருப்பம். அதை கேள்வி கேட்கிற உரிமையை நான் யாருக்கும் கொடுக்கல. முக்கியமா நீ… இனி எங்க விஷயமா நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது.” என்று தேனமுதனை மிரட்டி, “முதல் கல்யாணம் பண்ணவே நான் யாரோட அனுமதியும் கேட்கல. இதுல நீ எனக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணப் போறியா… எந்த தைரியத்துல இவன்கிட்ட பேசின நீ. சேஷனை விட்டுட்டு வந்துட்டா, எவனை வேணா கட்டிப்பேனா… உன்கிட்ட சொன்னேனாடா நான்.” “எனக்கு மாப்பிள்ளை பாருன்னு உன்கிட்ட கேட்டேனா நான்” என்று தேவ்வை உலுக்கி எடுத்து விட்டாள் தேவா. தேவ் அசையாமல் நிற்க, “நாங்க வாழறோமோ, இல்ல, கடைசி வரைக்கும் இப்படியே இருந்து சாகிறோமோ… இது என் பாட்டி நடத்தி வச்ச கல்யாணம். இது எப்பவுமே பொய்யாகாது தேவ். என் வாழ்க்கையில கல்யாணம் முடிஞ்சு போன விஷயம்.” “காலத்துக்கும் இப்படியே தனியா இருந்தாலும் சரி. என் வாழ்க்கை இது மட்டும்தான். என்னால சேஷனைத் தாண்டி எப்போதுமே யோசிக்க முடியாது. யோசிக்கவும் மாட்டேன். எனக்கு நல்லது பண்றேன்னு முட்டாள்தனமா எதையும் செஞ்சு வைக்காத.” என்று கடுமையாக எச்சரித்து அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள் அவள். பிரபாகரன் மகளின் பேச்சை அதிர்ந்து பார்த்திருந்தவர் அவள் வேகமாக வெளியேறவும், தானும் மகளின் பின்னால் ஓடினார். அவருக்கு அப்போதைக்கு அவர் மகளை சரிசெய்வது தான் முதன்மையாக பட்டது. அவர் மகளை நெருங்குவதற்குள் அந்த தளத்தில் இருந்த லிப்டில் நுழைந்திருந்தாள் மகள். லிப்ட் கீழே இறங்குவதை இயலாமையுடன் பார்த்தபடி நின்றவருக்கு, தான் சரியாக இருந்திருந்தால் மகள் நன்றாக வாழ்ந்திருப்பாளோ என்ற எண்ணம் தான். அவர் வயதிற்கு படியில் இறங்கி ஓடுவதும் முடியாத காரியமாகிப் போக, லிப்ட் வரும்வரை காத்திருந்து, வந்தபின் தானும் கீழிறங்கி வந்தார் அவர். அந்த மருத்துவமனையின் தரைத்தளத்தை பார்வையால் அலசியபடியே அவர் வெளியே வர, அந்த மருத்துவமனைக்கு வெளியே இருந்த சிறிய அளவிலான தோட்டத்தில் வந்து அமர்ந்து இருந்தாள் தேவசேனா. பிரபாகரன் வேகமாக மகளை நெருங்கி அவள் அருகில் அமர்ந்து கொள்ள, அதுவரை தூரத்தில் தானியம் கொத்திக் கொண்டிருந்த புறாக்களை வெறித்தபடி இருந்தவள் என்ன நினைத்தாளோ சட்டென தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள். பிரபாகரன் மகளின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாரே தவிர, அப்போதும் வார்த்தைகள் வரவில்லை அவருக்கு. மகளின் மௌனக்கண்ணீர் தன் தோள்பட்டை வழியே நெஞ்சை தொட, “தேவாம்மா” என்று பதட்டத்துடன் அவர் மகளை எழுப்ப, “ப்ளீஸ்ப்பா” என்று மீண்டும் அவர் தோளில் அழுந்திக் கொண்டாள் மகள். அவள் பாட்டி இறந்த தினம் தவிர்த்து மகள் அழுது பார்த்ததே இல்லை பிரபாகரன். அப்படிப்பட்ட தன் மகள் இப்படி கலங்கும் அளவுக்கு என்ன நடந்தது என்று புரியாமல் தவித்துப் போனார் அவர். சில நிமிடங்கள் தேவாவின் அழுகை தொடர, அதற்குமேல் முடியாமல் மகளை எழுப்பி அமர்த்தி அவள் கண்களைத் துடைத்துவிட்டார். “என்னடா கண்ணா… ஏன் இப்படி கலங்கி தவிக்கணும். உனக்கு என்னடா வேணும்? அப்பாகிட்ட சொல்லு தேவா. அப்பா இருக்கேன் உனக்கு” என்று பெற்றவர் பதறிப் போனார். அவர் பதட்டத்தில் தன்னை தேற்றிக் கொண்டவளாக, “எனக்கு எதுவும் வேண்டாம்ப்பா. தேவ் இந்த விஷயத்துல எதுவும் செய்யக்கூடாது. அதை மட்டும் சொல்லிடுங்க” என்றாள் தெளிவாக. “என்ன யோசிக்கிற தேவாம்மா.” என்று தந்தை மீண்டும் கேட்க, “எனக்கே தெரியலப்பா… பார்க்கலாம்” “நான் சேஷாகிட்ட பேசிப் பார்க்கவா தேவாம்மா“ “என்ன பேசுவீங்க.” “…” “என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுன்னு கேட்க போறீங்களா.. இல்ல, உங்க பையனை போல அவன் சட்டையைப் பிடிக்க போறீங்களா… காமெடி பண்ணாதீங்கப்பா…” என்று சிரித்தவள், “எதுவரைக்கும் போகுதோ போகட்டும்ப்பா… இனி நான் எதுவும் செய்யுறதா இல்ல. பார்க்கலாம்” என்று முடித்துவிட்டாள் மகள். “சாரிடா..” என்று பிரபாகரன் குற்றவுணர்வில் மருக, “விடுங்கப்பா…” என்று மகள் மீண்டும் அவர் தோளில் சாய்ந்து கொண்டாள். “நான் கொஞ்சம் நல்ல அப்பாவா இருந்து இருக்கலாம் தேவா. உன்னை தனியா விட்டுட்டேனே” என்று அப்போதும் பிரபாகரன் புலம்ப, “என்னால உங்களை புரிஞ்சிக்க முடியும்ப்பா… இவ்ளோ பீல் பண்ணாதீங்க… அம்மாவும், நீங்களும் வாழ்ந்த வாழ்க்கையை என் பாட்டி எனக்கு சொல்லி இருக்காங்க… என் அப்பாவை பத்தியும் நிறைய சொல்லி இருக்காங்க… நீங்க தனியா எதுவும் எனக்கு விளக்கம் கொடுக்க வேண்டாம். நான் பேசுறது கோபத்துல… அந்த நேரம் மத்தவங்க வாயை அடைக்க எதையோ பேசி வைக்கிறேன்…” “நீங்க இதுக்காக எல்லாம் கஷ்டப்படாதீங்கப்பா…” என்று தந்தையை மகள் அணைத்து விடுவிக்க, உண்மையில் அப்போதுதான் கண்கள் கலங்கிப் போனது பிரபாகரனுக்கு. “அப்பா..” என்று அதட்டி மகள் அவர் கண்களை துடைத்துவிட, தன் மகளை உச்சி முகர்ந்தார் பிரபாகரன். “நீ நல்லா இருக்கனும்டா… நல்லா வாழனும்” என்று அவர் வேண்டுதலாக கூறி வைக்க, மௌனப்புன்னகை தான் பதிலாக கிடைத்தது அவருக்கு. அவளின் சிரித்த முகம் அங்கே சற்று தள்ளி இருந்தவனை அப்போதே மோட்சம் அடைய செய்ய, அதுவரை மனைவியின் முகபாவங்களை விடாமல் கண்களால் காட்சிப்பதிவு செய்து கொண்டிருந்தவன் அவளது சிரித்த முகத்தை காணவும் தான் அங்கிருந்து விலகிச் சென்றான்.